ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் எழுத்து

கருப்பின மக்களை ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து அடிமைகளாக அழைத்துச் சென்று தமது தோட்டங்களில், மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலைகளில் வாழ வைத்தனர் வெள்ளை முதலாளிகள். ஆண்கள் அடிமை வாழ்க்கை வாழ்ந்தனர். பெண்கள், கருப்பாகவும் பெண்ணாகவும் இருந்ததால் இரட்டிப்பு அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். வெள்ளைப் பிரபுக்களின் குழந்தைகளுக்கு செவிலித் தாய்மார்களாக இருந்ததோடு அவர்களின் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் அவல நிலைக்கும் தள்ளப்பட்டனர். அவ்வாறு உருவாகிய ஆப்பிரிக்க அமெரிக்க இனம், முலாட்டோ என்று அழைக்கப்பட்டது.

நேனி, மேமி, ஜேப்போ, நிக்கர், பிக்க நின்னி என கருப்பினப் பெண்கள் இழிவாக அடையாளப் படுத்தப்பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பேசும் மொழியின்றி, குரலின்றி, இவர்களுக்காகக் குரலெழுப்ப ஆளின்றி இருட்டு நிலவறைகளில் ஊமைகளாக வாழ்ந்து வந்தனர்.

இவ்வினத்தின் பெண்களும் ஆண்களும் அடிமைகளாகப் பிறந்து, அடிமைகளாகவே மடிந்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹேரியட் ஜேகப் எனப்படும் ஒரு பெண் தான் அடிமையாக இருந்த வீட்டின் நிலவறையில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்தார். அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஹேரியட் வெளிவந்து தன் குழந்தைகளைக் கண்டார். ஹார்லம் மறுமலர்ச்சி + கருப்பர்கள் தங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தை துவக்க அடி கோலியது. ஒரு அடிமைப் பெண்ணின் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் என்ற சுயவரலாற்றுக் கதையை ஹேரியட் எழுதினார். இதுவே ஆப்பிரிக்க அமெரிக்க பெண் இலக்கியத்தில் முதல் நூலாகும்.

இது ஒரு அடிமை இலக்கியமாகும். இந்த நடையை அதாவது ஒரு அடிமை கதை சொல்லும் நடையை பிறகு டோனி மாரிஸன் 'பிலவட்' என்னும் நோபல் பரிசு பெற்ற நாவலிலும் உபயோகித்துள்ளார். லிங்கனின் முயற்சியாலும் ஈவா பார்க்ஸ் போன்ற சமூக உரிமை இயக்கத்தின் மூலமாகவும் கருப்பினத்தவர் ஆர்வத்துடன் கல்வி கற்கலாயினர். சமூகத்தில் அவர்களுக்கென்று ஒரு தனி இடத்தை வென்றனர். இவ்வேளையில்தான் ஹார்லம் மறுமலர்ச்சி என்று கூறப்படும் ஒரு மக்கள் எழுச்சி 'ஹார்லம்' எனப்படுகின்ற கருப்பினர் வாழும் பகுதியிலிருந்து உருவாகியது. இதன் விளைவாக கருப்பர்கள் கல்வி அறிவு பெற்று கவிதை, கட்டுரைகள், கதை, நாவல்களை எழுதத்தொடங்கினர்.

இந்த மிகப்பெரும் இயக்கத்திற்குப்பின் 'கருப்பின கலை இயக்கம்' என்ற இயக்கமும் தோன்றியது. இதில் பெண்களும் எழுதினர். இதனை வழிமொழிந்து வந்த இயக்கமே 'கருப்பின பெண்ணிய இலக்கிய இயக்கம்'. கருப்பின பெண்ணிய இயக்கத்தின் முன்னோடியான அன்னா ஜூலியா கூப்பரின் 1892ம் ஆண்டு வெளிவந்த ஒரு கட்டுரை தொகுப்பு 'தெற்கிலிருந்து ஒரு குரல்' கருப்பினப் பெண்ணிய இயக்கத்தின் தோற்றுவாயாகக் கருதப்படுகிறது. இக்கட்டுரைகளில் மறுக்க முடியாத பல உண்மைகளை அவர் விரிவாக விவரித்துள்ளார்.

. . . . . .தெற்கிலிருந்து ஒரு சிறு முனகல், அர்த்தம் செய்து கொள்ள இயலாத, தெளிவற்ற பேச்சே 'நீக்ரோ' என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. அந்த முனகலில்கூட மொழி இல்லாத, ஊமை மொழி பெண்களின் மொழியாக இருந்தது. அமெரிக்க வரலாற்றின் மறுக்க முடியாத மறுபக்கமான கருப்பின வரலாறு ஏனோ கருப்பின மக்களால் எழுதப்படவில்லை. அவ்வாறு இருப்பின் பெண்கள்? மொழியின்றி, குரலின்றி, நூற்றாண்டுகளாக ஆண்களின் வலியையும் தனது மறக்க, மறைக்க முடியாத 'வலியை' உடன் சுமந்து வாழ்ந்து வந்தனர். இவற்றை ஒரு பெண்ணாலன்றி ஆணால் என்றும் உணர்வது சாத்தியமில்லை எனும் போது அதை எழுத்து வடிவில் சித்தரிக்கும் சாத்தியக் கூறுகள் அறவே இல்லை. ஆதலால் பெண்களே இவ்வித்தையைக் கையாண்டனர். அவர்களது படைப்புகளும் மிகப் பெரிய வெற்றியடைந்தன.

இவ்வாறு உருவாகிய கருப்பினப் பெண்ணிய இலக்கிய இயக்கத்தின் எழுத்தாளர்களின் நடையில் 'ரியலிஸம்' எனப்படுகின்ற கதையை உள்ளவாறே சித்தரித்தல் எனும் நடையும் கதையை கதையாகவே சொல்கின்ற அதாவது ஒரு கதாபாத்திரம் விவரிக்கின்றவாறு சித்தரித்தனர். ஒருமையில் கதை கூறும் போது அந்தக் கதாபாத்திரம் உயிர்பெற்று விடுகிறது. நூற்றாண்டுகளின் துயரச் சம்பவத்தையும் அதன் விளைவான வலியையும் அவ்வாறே அதை வாசிக்கின்ற மக்களும் உணரும் விதத்தில் எழுதினர். ஆதலால் கருப்பினப் பெண்களின் குரலே பெண்ணிய இயக்கத்தின் மொழியாகக் கொள்ளப்பட்டது.

1970லிருந்து வெளியாகிய இந்த இலக்கிய மரபின் நினைவுச் சின்னங்களான டோனி மாரிஸனின் 'நீலக் கண்கள்' அலிஸ் வாக்கரின் 'கிரேன்ஸ் கோப்லாண்டின் மூன்றாவது வாழ்வு', மாயா ஏஞ்சலோவின் 'எனக்குத் தெரியும் ஏன் இந்தக் கூண்டுப் பறவை பாடுகிறது' மற்றும் டோனி கேட் பேம்பராவின் கவிதைத் தொகுப்பு 'கருப்பினப் பெண்' என்பவற்றோடு கருப்பினப் பெண் எழுத்தாளர்கள் ஆப்பிரிக்க - அமெரிக்க இலக்கிய உலகில் முன்னணிக்கு வந்தனர்.

கருப்பினப் பெண்ணுக்கும் ஆணுக்குமான உறவைப் பற்றியும் ஆண்களின் பாலுணர்வைக் குறித்து பெண்கள் எழுதுவது பற்றியும் வெகுவாக விவாதிக்கப்பட்டுள்ளது. கருப்பினப் பெண்களின் மொழி மேற்கூறியவாறு ஆண்களின் மொழியை சார்ந்தில்லாமல் வேறாக, மரபுக்குள் மரபாக இருந்ததால் அது விமர்சனங்களுக்கும் ஆளாகியது. இதற்கு முன் பெண்ணியம் - என்ற வார்த்தையின் அர்த்தம் வேறாக இருந்தது - பெண்களின் வாழ்வை, அவர்களது நடைமுறையைக் கூறுவதாக அது இருந்தது. தற்பொழுது அவர்கள் தம் பாலுணர்வை பற்றி மட்டுமல்லாமல் ஒரு ஆணின் பாலுணர்வையும் எவ்வாறு சித்தரிக்க முற்பட்டனர் என்று வெகுவாக விமர்சனங்கள் வெளியாயின. இது வரம்பு மீறிய செயலாகக் கருதப்பட்டது.

கருப்பினப் பெண்ணியம், பெண்களை மையமாகக் கொண்டு அவர்கள் வாழ்வை விவரிக்க ஒரு ஆணின் பாலுணர்வைக் குறித்தும் விவரித்தனர். எவ்வாறு ஒரு ஆணுக்கு எழுத்துச் சுதந்திரம் வழங்கப்பட்டதோ அதே சுதந்திரத்தை இப்போது பெண்கள் கையாண்டனர். ஆண் தனது பாலுணர்வைப் பற்றி எழுதுவதை சரி என்று ஏற்றுக்கொண்ட சமூகம், பிறகு பெண்கள் பாலுணர்வைப் பற்றி எழுதுவதையும் ஏற்றுக் கொண்டது. எதிர்ப்புகளுக்கும் விமர்சனங்களுக்கும் இடையிலும் இது நடந்தது அமெரிக்காவில்.

அலிஸ் வாக்கரின் நாவலில் இரு பெண்களுக்கு இடையிலான காதலை கூறியிருக்கிறார். 'லெஸ்பியன் பெமினிசம்' என்று கூறப்படுகின்ற பெண்ணியமும் மிகுந்த விமர்சனங்களுக்கு இடையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உலகின் தலைசிறந்த மேடை தொகுப்பாளர் என்று பெயர் பெற்ற ஓப்ரா வின்பரை இதை திரைப்படமாகவும் இயக்கியுள்ளார். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிகழ்வதுதான் காதல் என்பதை மறுத்து, இதுவரை சமூகத்தில் நிலவிவந்த ஆனால் பேசப்படாதவை வாக்கரால் இலக்கியமாகப் பதிவு செய்யட்டது.

அலிஸ் வாக்கர் மற்றும் ஜோரா நீல் ஹர்ஸ்டன், இவ்விருவருமே தலைசிறந்த படைப்பாளிகள். பெண்ணியத்திற்கு புதுமுகம் தந்தவர்கள். இவ்விருவருமே வழக்கில் இருக்கும் வட்டார மொழியிலேயே எழுதினர். இதனால் அந்த நூலின் பின்புலம், மக்கள், சமூகம், சடங்குகள் மற்றும் இதனூடாக கதைநாயகியின் பாடுகள், துயரம் மற்றும் மகிழ்ச்சி மிக அனுபவபூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சித்தரிக்கப்பட்டது.

ஜோரா நீல் ஹர்ஸ்டனின் நாவலில் ஜேனீயின் தேடலை, அவளுக்குள் அவளின் தேடலை கதையாக்கியுள்ளார். ஜேனீ என்பவள் யார்? ஒருவனின் மனைவியா? மகளா? அல்லது ஒரு கருப்பினப் பெண்ணா? அவளுக்குள்ளே அவளின் தேடல் அவளை கணவனிடமிருந்து ஓடச்செய்தது. அவளின் கணவனோ ஒரு முதியவன். அவளை அவனுடைய ஆநிறைகளில் ஒன்றாகக் கருதினானே தவிர ஒரு பெண்ணாகப் பார்க்க வில்லை. பின் ஜேனீ லோகனை விட்டுப் பிரிந்து ஜோ ஸ்டார்க்ஸ் என்பவனை மணக்கிறாள்.

அவனும் அவளின் தேவையை ஒரு பெண்ணாய் அவளின் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. அவனுக்கோ அவள் ஒரு விலைமதிப்பற்ற பொருள். தனது கடையில் விற்கப்படாமல் இருக்கும் சிலவற்றில் ஒன்று. ஜேனீயின் கனவான வசந்தகாலம் அவன் இறந்த பின்னரே வந்தது அஜேக்ஸ் என்பவனுடைய வடிவில். அவன் அவளுடைய தேடலின் பொருளாய் விளங்கினான். ஜேனியை பெண்ணாய் மதித்தான். அவளை அவனுக்குச் சமமாக நடத்தினான். அவளை விட இளைவனான அவனை பெரு வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த போது நாய் ஒன்று கடித்துவிட ரேபீஸ் நோயுறுகிறான். நோயுற்றவர்கள் தன்நிலையில் இல்லாமல் பிதற்றுவது போல் பிதற்றி ஜேனீயைக் கொல்ல முற்படுகிறான். ஜேனீயோ அங்கு இருந்த அவனது துப்பாக்கியால் அவனைச் சுட்டுக் கொன்றுவிடுகிறாள். இக்கதையில் ஜேனீயை ஒரு போராளியாக முன்னிறுத்துகிறார் ஜோரா. எந்நிலையிலும் வாழ்ந்தே தீருவது என்ற அவளது அந்த உயிர்வாழத் துடிக்கும் ஆன்மா, கட்டுக்கடங்காத அந்த ஆன்மா, எந்நிலையிலும் எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் பெண்களுகóகு உண்டு என்று எடுத்துக் காட்டுவதாகும். பெண்ணின் கருத்தை, பெண்ணை மையமாகக் கொண்டு வந்த நாவல்களில் இது மிகச் சிறந்த நாவலாகும். 1937ஆம் ஆண்டு இந்நாவல் வெளிவந்தது.

டோனி மாரிஸன் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். "பெண் இயந்திரம்" என்று கூறும் வகையில் பெண்ணின் பல முகங்களை தனது கதைகளின் வழியாகக் கூறியவர். பெண் என்பவள் யார்? அவளது பணி, சமூக அந்தஸ்து என பலதரப்பட்ட கோணங்களில் பெண்களை பற்றி எழுதியுள்ளார். அவளை ஒரு தாயாக, மனைவியாக, குழந்தையாக என்று பலதரப்பட்ட பாத்திரங்களை ஏற்று நிற்கும் ஒரு ஆணி வேராகச் சித்தரித்தார். நமது சமுதாயத்தில் பல இழிவுகளை நாம் மூடி மறைத்து இவ்வாறு நிகழவில்லை என்று ஒரு போலி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது நாட்டின் நிலைமை இதுவே. சமுதாயத்தில் நடப்பதை உணர்ந்தும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத மனப்போக்கே வெகுஜன மனப்போக்காக உள்ளது. மாரிஸனின் நீலக் கண்கள் என்ற நாவலில், பெகோலா என்ற சிறுமி நீலக் கண்களுக்கு ஆசைப்படுகிறாள். ஏனெனில் அவளை வேறுயாரும் நீ கருப்பு, உனது தோற்றம் வெறுக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று கூறக்கூடாது என்பதற்காக. அச்சிறுமியின் அடையாளம் அங்கே கேள்விக்குறியாகிறது. அவள் தனது தந்தையாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டு கர்ப்பமடைகிறாள். இதனால் மனச்சிதைவுக்குள்ளாகி முடிவில் தனக்கு நீலக் கண்கள் கிடைத்ததாக எண்ணி மகிழ்கிறாள். இது சமுதாயத்தின் அவலத்தையும், உறவின் சீர்க்குலைவையும், அந்தச் சிறுமியின் தேடல் முடிவற்று, எங்கோ ஒரு முடிவற்ற வெளியில் செல்வது குறித்தும் கேள்வி எழுப்புகிறார். அவளது இன்றைய நிலை என்ன? எந்நிலையிலும் பெண்களே பாதிப்பிற்குள்ளாகின்றனர் என்பதை துயரம் ததும்ப விவரிக்கிறார்.

சமூகத்தை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் தனக்காக வாழும் சூலா என்றொரு கதாபாத்திரத்தின் மூலம் கூறுகிறார். சமூகமே அவளை ஒதுக்கினாலும், அவளை ஒரு தனியாளாக நிறுத்தினாலும் தான் நம்பியதை செய்வாள்.

ஒரு சமூகம் வாழ, நடைமுறையில் இருக்க இப்படிப்பட்ட மாதிரிகள் மிகத் தேவையாக உள்ளனர். நல்லவர்கள் என்றொரு எதிரிடை இவர்களைக் காட்டியே உருவாகிறது. இக்கதையில் மாரிஸன் கூறுகிறார் - ஒரு சமூக உறுப்பினர் ஒரு சாவு வீட்டிற்குச் சென்றாலும் அங்கு தன்னுடைய துயரங்களை எண்ணியே அழுகின்றார், இறந்தவருக்காக அல்ல. இது மறுக்க முடியாத உண்மையாகும். ஆதலால் 'சூலா' அத்தகைய சமூகத்தைச் சார்ந்து வாழாமல், பிரிந்தே வாழ்கிறாள். தனியாக இறக்கிறாள். அவளுடைய அந்தக் கட்டுக்கடங்காத, தீ போன்ற ஆன்மா கட்டுக்குள் அடங்காமல் என்றும் வாழ்ந்தது என்று கூறியுள்ளார். பெண்ணிய வரலாற்றின் 'மைல் கல்' என்று கூறும் வகையில் அமைந்துள்ளது 'சூலா'.

மாரிஸன் மேஜிகல் ரியலிஸம் பாணியில் எழுதிய 'ஸாங் ஆஃப் ஸாலமன்' என்ற நாவலில் கட்டுடைத்தல் என்ற ழாக் தெரிதாவின் கருத்தைக் கொண்டும் இன்டர் டெக்சுவாலிட்டி நடையில் பிரதிக்குள் பிரதியென கதை விரியும் யுத்தியையும் கையாள்கிறார். 'ஜாஸ்' என்ற நூலை பாடல் போலவே எழுதியுள்ளார். மாரிஸன் மற்ற அனைவரையும்விட அதிக வரிகள் எழுதக் காரணம் அவர் ஒரு பன்முகம் கொண்ட படைப்பாளி. ரேண்டம் கௌஸ் பதிப்பகத்தின் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அவரின் பணிக் காலத்தில்தான் டோனி, கேட், பேம்பரா போன்றோரின் நாவல்கள் வெளிவந்தன.

ஆண் - பெண் இருப்பு சமூகத்தில் எப்படி கட்டமைக்கப்படுகிறது. இதுவே பெண்ணியத்தின் மையக் கருத்தாக அமைந்தது. இந்தச் சமுதாயம் ஆணை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறது. பெண் எங்கு தடை செய்யப்படுகிறாள், எங்கு அவள் உரிமை மறுக்கப்படுகிறது? அவளுடைய சுதந்திரம் பறிபோகிறது? இவை அனைத்தையும் ஒரு ஆணை மையமாகக் கொண்டே கூற முடியும். ஏனென்றால் பெண் என்பவள் பல நூற்றாண்டுகளாக ஆணின் பார்வையிலேயே சித்தரிக்கப்பட்டவள். இன்று பெண்கள் நான் அவளல்ல என்று மறுக்கின்றனர்.

அனைத்து ஆப்பிரிக்க - அமெரிக்க நாவல்களிலும் ஆண் - பெண் உறவு வெகுவாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் ஆணின் தேவை அறவே இல்லை என்று வெகு சில நூல்களே எழுதிய வாக்கர் போன்ற சிலரே கூறுகின்றனர். மற்ற அனைவரும் ஆண்கள் தனது அங்கமாக இருக்க வேண்டும் என்றே கருதுகின்றனர்.
டோனி, கேட், பேம்பரா, மாயா ஏஞ்சலோ அனைவரும் ஆண் - பெண் உறவை மையப்படுத்தியே தமது கதைகளை அமைத்தனர். தற்பொழுது உள்ள பெண்ணிய விமர்சகர்கள் எலெய்ன் ஷோவால்ட்டர், ஜுலியா கிரிஸ்டோவா போன்றோரும் இதைத்தான் கூறுகின்றனர். டோரில் மோய் தனது நூலில் ஆண் - பெண் உறவையும் அதன் விளைவுகளையும் மிக நுணுக்கமாகக் கூறியுள்ளார்.

மற்றொரு பின் நவீனத்துவக் கருத்தான 'பெண்ணியமும் உளவியல் ஆய்வும்' என்ற கருத்தின்படி பெண் ஏன் இப்படிப்பட்ட வரம்பு மீறும் செயல்களில் ஈடுபடுகிறாள்? வரம்பு என்பது என்ன? அது எதுவரை? ஆண்களுக்கு வரைமுறை, வரம்பு உண்டா? போன்ற கேள்விகளுக்கு 'மேட் வுமன் இன் தி ஆட்டிக்' போன்ற கட்டுரைகளில் விடை காணலாம்.

பெண்களுக்கு வரம்புகள் உருவாக்கிய சமூகம் ஏன் ஆண்களுக்கு உருவாக்கவில்லை. எதனால் பெண் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகிறாள்? ஏன் பெகோலா மனச்சிதைவு நோயுறுகிறாள்? ஏன் சூலா சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டாள்? பெண்ணின் உயிர்வாழும் துடிப்பு, ஆர்வம் மறுக்கப்பட்டு அவள் மனச்சிதைக்காளாகிறாள். வாழ்வின் ஆதாரம் பறிபோக அவள் மனச்சிதைவுக்குள்ளாகிறாள். பெகோலா போன்று சிறு வயதில் சமூகம் அங்கீகரிக்காத ஒருவருடன், அந்த ஒருவரும் தந்தையாக இருக்க, பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்ட பெண்ணுக்கு மனச் சிதைவு நோய் வாழ்நாள் தண்டனையாகிறது. இவ்வாறு வெளிவந்த நிகழ்ச்சிகள் சில. பல்லாயிரம் பெண்கள் எங்கோ ஒரு மூலையில் தமது மனதின் ஓரத்தில் மனச்சிதை வடைந்த பெண்களாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இன்று 'சூழலியல் பெண்ணியம்' என்ற கருத்தாக்கமும் வலுப்பெற்று வருகிறது. பெண்ணியவாதிகள் சுற்றுப்புறச்சூழல் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் கொண்டுள்ளனர். இயற்கைசார் மீட்பை தமது போராட்டத்தின் ஒரு அங்கமாகக் கருதுகின்றனர். இன்று பெண்ணியத்தின் பல போக்குகளை உலகநாடுகள் பல அங்கீகரித்துள்ளன.

ஏ.பி. ஆர்த்தி
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்.

Pin It