visuஅதுவரை பார்த்த ஹீரோ மாதிரி இல்லை. ம்ஹும்.. அவர் ஹீரோவே இல்லை.

1987 ல் ஒரு படம் ஊர்கோயிலில் - அந்த வார சனிக்கிழமையில் - டிவி டெக் வாடகைக்கு எடுத்து போட்டார்கள். கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருந்து இடம் பிடித்து படம் பார்க்க ஆரம்பித்தால்... வழக்கமான சண்டைகள் இல்லை. ஸ்டைல் இல்லை. ஆனால்.. கூட பார்த்துக் கொண்டிருப்போர்கள்.. மெல்ல பேசிக் கொள்கிறார்கள். உச் கொட்டுகிறார்கள். ரசிக்கிறார்கள். சிரிக்கிறார்கள். அழுகிறார்கள்.

கொஞ்ச நேரத்தில் எனக்கும் அந்த படம் பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. அந்த சினிமா வீட்டில் நடப்பது போலவே இருக்கிறது என்றளவுக்கு புரிகிறது.

என்ன இது... சம்சாரம் அது மின்சாரம்.... தலைப்பே புரியவில்லை... என்று யோசித்த அந்த படம்.. "சம்சாரம் அது மின்சாரம்"... என்ன இது கதாநாயகன் மாதிரியே இல்லையே என்று யோசித்த அந்த கதை நாயகன்... "விசு".

நாடகத்தை அப்படியே திரையில் நிகழ்த்திக் காட்டிய எழுத்தாளர்... இயக்குனர்... ஹீரோவும் கூட.

எந்த வயதிலும்.. எந்த தோற்றத்திலும் ஒரு ஹீரோ இருக்கலாம் என்ற உலக நடிகர்களின் வடிவமைப்பை தமிழில் செய்து அதில் வெற்றியும் பெற்றவர்.

" ஜானகி தேவி ராமனைத் தேடி...
இரு விழி வாசல் திறந்து வைத்தாள்.
ரா... மன் வந்தான்...மயங்கி விட்டாள்.
தன் பே...ரைக் கூட மறந்து விட்டாள்.."

ஒரே பாட்டில்... மகளின் பெண் பார்க்கும் படலம்.. அது பிடிக்காத அவளின் காதல் பற்றிய தெரிவிப்பு... அவர்களின் காதல் கதையின் லவ் எபிசோட்.... மகனின் பெண் பார்க்கும் படலம்... ஏன்... தன்னுடைய பெண் பார்க்கும் படலம் என்றுகூட... அந்த குடும்பத்தின் சகல.... கதாபாத்திரங்களின் ஆரம்ப நிலை விவரிப்பையும்... காட்சிப் படுத்திய விதத்தில்... ஒரு அற்புதமான இயக்குனராக விசு என்ற கலைஞனை காண முடியும்.

'ரகுவரன்' என்ற மஹா நடிகனை ஒரு மூத்த பையன் மிடில் கிளாஸ் பாத்திரத்தில் புகுத்தி அட்டகாசப் படுத்தியிருக்கும் விசுவை விட்டு விட்டு தமிழ் சினிமாவை முழுமையாக்க முடியாது.

அதே பாட்டில் ரகுவரன் லட்சுமி போர்சன் முடியும் தருவாயில்... இளவரசி பாடுவதாக ஆரம்பித்த காட்சிக்கே காட்சி கோர்வை திரும்பி விட.... ஆனாலும் மெய்ம்மறந்து... அதாவது பழைய தங்கள் பெண் பார்க்கும் படலத்தை நினைத்துப் பார்த்த லட்சுமி... ரகுவரன் நெஞ்சில் சாய்ந்து நிற்கும் அந்த போஸ்... உலகத்தரம்.

சட்டென நினைவு வந்து எல்லாரும் இருக்கிறார்கள் என்று விலகும் அந்த பொழுது... காதலில் அள்ளும் ஃபிரேம்.

"உன்ன காலேஜ்க்கு அனுப்பினேன். அவனை கேரேஜ்க்கு அனுப்பினேன். சிவா தங்கண்டா.. அவனை புரிஞ்சுக்காதவங்க யாரும் உருப்படவே மாட்டாங்க.." என்று ரகுவரனிடம் பேசிக்கொண்டே சிவாவின் மனைவிக்கு கேட்கும்படிச் சொல்லும் விசுவின் காட்சி கோர்வை புத்திசாலித்தனமானது.

"உனக்கு ரத்தம் குடுத்து காப்பாத்தின என்ன தெரியல... உன்ன படிக்க வெச்சு வேலை வாங்கிக் குடுத்த என்ன தெரியல... என்று தொடர்ந்து மகனிடம் "தெரியலையா தெரியலையா" என்று கேட்டுக் கொண்டே வந்து.... மகன் 'தெரியல தெரியல' என்று பதில் சொல்ல... ஒரு கட்டத்தில் கடுப்பில் உச்சத்துக்கு சென்று... "அப்ப வீட்டை விட்டு வெளிய போடா நாயே" என்று இயலாமையின் பிடியில் வேறு வழியே இல்லாமல் உணர்ச்சி மிகுந்து பேசும் மிடில்கிளாஸ் அப்பாவாக விசுவின் பாத்திரப் படைப்பும் வசனமும்... இன்றும் மிடில் கிளாஸ் வீடுகளில் மந்திரங்கள் தான்.

கதை தான் நாயகன். அதைச் சுற்றி தான் எல்லா பாத்திரங்களும் நிகழும் அவர் படங்களில். அதுவே திரைப்படத்தை வேறு கோணத்தில் அணுகுவது தான். 'திலீப்' எல்லாம் அவ்ளோ அழகாக இருப்பார். விசுவின் படங்களில்... திலீப் கதாபாத்திரம் ரசிக்கும்படியான முரணான பாத்திரமாக இருப்பதை ரசித்திருக்கிறேன். திலீப் பேசும் தமிழுக்கு அழகு கூடும்.

"வீடு மனைவி மக்கள்..." படத்தில்... ஒரு வீட்டை கட்டுவதற்குள்... அவர் படும் பாடு... அப்பாக்களுக்கானது. திசை மாறிய பிள்ளைகளை வைத்துக் கொண்டு படும் அல்லலும்... மனைவி இறந்த பிறகான மனநிலையும் விசு என்ற நடிகனில் பல தகப்பன்களை பார்க்க முடியும்.

விசுவின் பாத்திரப் படைப்புகள்.. கதை அமைப்புகள்... விளிம்புநிலை மனதிற்கு சற்று மேலே இருக்கும் கோட்டில் இருப்பவர்கள் பற்றியது தான். ஒரே திரைக்கதைக்குள் நாலைந்து கதைகள் வைத்து மிகச் சாதுர்யமாக கிளைமேக்ஸை நோக்கி நகரும் இயக்கம் பிரமிக்க வைக்கும்.

சராசரி குடும்பங்களின் கதை தான் அவரின் கதைகள். அது கதை மட்டுமல்ல. வாழ்வியலின் தீரா விசனங்கள். சூசகமான முறையில்... போட்டு வாங்கும் வசனங்கள் அவருக்கு கை வந்த கலை. தீர்க்க முடியாத சிக்கல் நிறைந்த குடும்ப பிரச்சனைகளுக்கு மிக புத்திசாலித்தனமாக முடிவு தரும் விசுவை தேர்ந்த கதையாசிரியர் என்றால் எழுந்து நின்று கை தட்ட தான் வேண்டும்.

பெண்மணி அவள் கண்மணி... வேடிக்கை என் வாடிக்கை... திருமதி ஒரு வெகுமதி... காவலன் அவன் கோவலன்... குடும்பம் ஒரு கதம்பம்.. வரவு நல்ல உறவு... என்று ஒருவகை ரைமிங்கில் இருக்கும் தலைப்பே குடும்பங்களை ஈர்த்து விடும்.

'தில்லு முல்லு' படத்துக்கு திரைக்கதை விசு என்பது தில்லு முல்லுவை இன்னொரு முறை பார்க்க வைக்கும் ஆச்சரியம். நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்து சினிமாவிலும் நாடகம் நிகழ்த்திய இக் கலைஞனை பிற்காலத்தில்... டிவி மன்றங்கள் எடுத்துக் கொண்டது.

அதிலும் தனித்த முத்திரை பதித்தார் என்றே நம்புகிறேன். சுவாரஷ்யமான பேச்சுக்கு சொந்தக்காரரான விசுவின் கனம்... சினிமா இருக்கும் வரை இருக்கும்.

"மூங்கில் இலை காடுகளே... முத்துமலை மேகங்களே... பூங்குருவி கூட்டங்களே... கேளுங்கள்... மாலையிட்ட மங்கையர்க்கு தற்கொலை தான் சொந்தமென்றால் மேளம் என்ன... தாலி என்ன கூறுங்கள்..." - பெண்மணி அவள் கண்மணி படத்தில்... மாமியார் மருமகள்... பிரச்சனையை கையாண்ட விதம்... இன்னமும் தேவையாய் இருக்கிறது.

விசுவின் கதாபாத்திரங்கள்... நமக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். நம் வீட்டில் நடப்பது போன்றே காட்சிகள் இருக்கும். அது படத்தோடு ஒன்ற வைத்து விடும். விசுவின் படங்களுக்கென்றே ஆடியன்ஸ் இருந்தார்கள். அவர்கள் இன்னமும் டிவிகளில் அவர் படம் போட்டால்.. சத்தமாக சிரித்துக் கொண்டும்... அமைதியாக கண்ணீர் அடக்கிக் கொண்டும் பார்க்கிறார்கள்.

விசு என்ற குடும்ப கலைஞனுக்கு மரணம் இல்லை.

- கவிஜி

Pin It