நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் – அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும். இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த சில இதழ்களின் தொடர்ச்சியாக, இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.

அ.சா.24 : கே. சுப்பிரமணியன் (தலைமை எழுத்தர், குற்றவியல் நடுவர் நீதிமன்றம்) சான்று ஆவணங்களை குறித்து கூறும் சாட்சிமுதல் விசாரணை :

நான், 1997 மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராகப் பணியிலிருந்தேன். 19.9.07 அன்று காவல் துறை கண்காணிப்பாளர், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துகளை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பக் கோரி விண்ணப்பம் கொடுத்தார். அந்த விண்ணப்பம் அ.சா.ஆ.49. சென்னையில் உள்ள ரசாயன பரிசோதகருக்கு 23.9.97 அன்று இவ்வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துகள் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அலுவலகக் கடித நகல் அ.சா.ஆ.50 ரசாயன பரிசோதகரின் அறிக்கை 8.11.97 நீதிமன்றத்திற்கு வரப்பெற்றது.

அதன் அறிக்கை அ.சா.ஆ.51 குருதிநீர் ஆய்வு அறிக்கை அ.சõ.ஆ.52 குறுக்கு விசாரணை : மேலூரில் தாலுக்கா அலுவலகம், குற்றவியல் நீதிமன்றம் காவல் நிலையம் ஒருங்கிணைந்த கட்டடத்தில் உள்ளன. குற்றவியல் நடுவர் குடியிருப்பு வீடு, நீதிமன்றத்திற்கு பின்னாடி சுமார் 40 அடி தூரத்தில் உள்ளது. குற்றவியல் நடுவர் ஆவணங்களைப் பார்க்கும்போது, நேரமும் தேதியும் சுருக்கு ஒப்பமும் அதில் போட்டுள்ளார். அதன் பிறகு தலைமை எழுத்தருக்கு அது வந்து 55 ரிஜிஸ்ட்டரில் குறிப்பு எழுதப்படும்.

17.5.2001; 2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

நான் 31 வருடங்களாக நீதித்துறையில் பணியாற்றி வருகிறேன். நீதிமன்றத்திற்கு வரக்கூடிய தபால்களை நடுவர் அவர்கள் பெற்றதற்கு சீல் வைத்து, அதை ரிஜிஸ்ட்டர் நெம்பர் 55 இல் பதிவு செய்த பிறகு என்னிடம் அந்த தபால் வரும். என்னிடம் காட்டப்படுகிறது. 55 ரிஜிஸ்டர் மேலூரில் குற்றவியல் நீதிமன்றத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாகும். 1.7.97 இல் உள்ள ஆர். நெம்பர் 1939 முதல் அன்றைய தேதியிட்ட மற்றைய குறிப்புகளும் 2.7.97 ஆம் தேதியும் உள்ள குறிப்புகள் அந்த நீதிமன்ற நகல் எழுத்தரால் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆவணங்களுக்கும் ஒவ்வொரு ஆர். நெம்பர் கொடுக்கப்பட வேண்டும். ஆர். நெம்பர் 1937இல் காணப்படும் இடைச் செருகல் அதே (காப்பிஸ்ட்) நகல் எழுத்தரால் எழுதப்பட்டுள்ளது. மேற்படி இடைச்செருகலுக்கு, என்னுடைய சுருக்கு ஒப்பம் போடவில்லை. அந்த இடைச்செருகலை நகல் எழுத்தர் கைப்பட எழுதினார் என்று நான் தற்போது பொய் சொல்கிறேன் என்றால் சரியல்ல.

அ.சா.ஆ.53 மற்றும் அதைச் சார்ந்த ஆ.சா.ஆ.1ம் அவைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியிலும், நேரத்திலும் பெறப்படவில்லையென்றாலும், பிற்பாடு அவை பொய்யாக தயாரிக்கப்பட்டவை என்றால் சரியல்ல. நீதிமன்றத்தில் பெறப்படும் குற்றப்பத்திரிகைக்கு தனியாக ஆர். நெம்பர் கொடுக்கப்படும். ஓர் ஆவணம் பல பக்கங்கள் கொண்டு இருந்தால், ஒவ்வொரு பக்கத்திலும் நீதிமன்ற தேதி முத்திரை போடப்படும். மேற்படி மையினால் எழுதப்பட்டுள்ள அயிட்டம் 7 முதல் 15 வரை வரையிலான ஆவணங்கள், எந்த தேதியில் பெறப்பட்டுள்ளன என்பதை தற்போது என்னால் சொல்ல முடியாது.

இவ்வழக்கு சம்பந்தமாக குற்றவியல் நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ள ஆவணங்கள் அவைகளில் குறிப்பிட்டுள்ள தேதியில் உண்மையில் பெறப்பட்டவை அல்ல என்று சொன்னால் சரியல்ல. இந்த வழக்கு சம்பந்தமாக என்னை யாரும் விசாரிக்கவில்லை. மேற்படி இடைச்செருகல், போலிசார் வேண்டுகோள்படி பிற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றால் தவறு. இந்த வழக்கு சம்பந்தமாக குற்றவியல் நடுவரின் உடந்தையுடன் பல தவறுகள் நடத்துள்ளது என்றால் சரியல்ல.

அ.சா.25 : ஜ. பாண்டி கணேசன் (காவலர், மேலூர் காவல் நிலையம்) துரித முதல் தகவல் அறிக்கையை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்த சாட்சி முதல் விசாரணை :

30.6.97ஆம் தேதியன்று நான் மேலூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராகப் பணியிலிருந்தேன். அன்று இரவு 9.00 மணிக்கு மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த துரித முதல் தகவல் அறிக்கையைப் பெற்று, மேலூர் குற்றவியல் நடுவரிடம் இரவு 9.50 மணிக்கு கொண்டு போய் சேர்த்தேன். அந்த முதல் தகவல் அறிக்கை அ.சா.ஆ.53

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

இது சம்பந்தமாக டி.சி.பி.யைச் சேர்ந்த டி.எஸ்.பி. திரு. சுப்பிரமணியன் என்னை விசாரித்தார். என்னிடம் மேற்படி முதல் தகவல் அறிக்கையை ஆய்வாளர் என்னிடம் கொடுத்தபோது, டி.எஸ்.பி. இருந்தாரா என்பது எனக்கு நினைவு இல்லை.

அ.சா.26 : ஆர். ரவி (முதல் நிலைக் காவலர், மேலூர் காவல் நிலையம்) பூபதியின் உடலை கூராய்வு செய்ய அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தது பற்றி கூறும் சாட்சி முதல் விசாரணை :

30.6.97 அன்று மேலூர் போக்குவரத்து பிரிவில் முதல் நிலைக் காவலராக பணியிலிருந்தேன். ‘டூயிங் டூட்டி'யாக சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியிலிருந்தேன். இவ்வழக்கு சம்பந்தப்பட்ட பூபதி என்பவரின் பிரேதத்தை சடலக் கூராய்வு செய்வதற்காக வேண்டுகோளுடன் என்னிடம் ஒப்படைத்ததை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொண்டுபோய் ஒப்படைத்தேன். சடலக் கூராய்வு முடிந்த பிறகு சடலத்தை உறவினர் வசம் ஒப்புவித்தேன். பிரேதத்திலிருந்து ரத்தக்கரை பட்ட வெள்ளை நிற முழுக்கை சர்ட், காப்பி கலர் கட்டம் போட்ட அண்டர்வேர் ஒன்று ஆகியவற்றை கைப்பற்றி, மேலூர் குற்றப் பிரிவு டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். (சா.பொ.16 வெள்ளை நிற முழுக்கை சர்ட், காப்பிக் கலர் அண்டர்வேர் சா.பொ.17).

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

சம்பவ இடத்திற்கு நான் சென்ற நேரம் பற்றி ஞாபகமில்லை. என்னிடம் ஒப்படைத்தது போல் இன்னும் 5 காவலர்களிடம் 5 பிணங்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒப்படைத்தார்கள். எல்லா பிரேதங்களையும் ஒரே வாகனத்தில் மதுரைக்கு எடுத்துச் சென்றோம்.

17.5.2001; 2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

நான் சம்பவ இடத்திற்கு அன்று இரவு 8.30 மணி அளவில் சென்றேன். பிணங்களை ஏற்றிச் சென்ற வாகனத்தில் நானும் சென்றேன். அந்த வாகனம் காவல் துறை வாகனம். அதே வாகனத்தில் என்னுடன் இன்னும் 5 காவலர்களும் வந்தனர். குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் நாராயணசாமி என்பவர் பிரேத விசாரணை அறிக்கையை கைப்பட எழுதினார். அந்த பிரேத விசாரணை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தார்களை அந்த பிரேத விசாரணை செய்த அதிகாரிகள் விசாரித்தார்கள். அதேபோல் அந்த பிரேத விசாரணை செய்த அதிகாரிகள், பிரேத விசாரணை அறிக்கையை எழுதினார்கள். அந்த பிரேத விசாரணை அறிக்கைகளை சம்பந்தப்பட்ட காவலரிடம் அப்போதைக்கு அப்போது கொடுத்தார்கள்.

அந்த இடத்திலேயே குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் என்னை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தாரா என்பது எனக்கு ஞாபகமில்லை. நான் சொல்கின்ற முறையிலும், நேரத்திலும், இடத்திலும் பிரேத விசாரணை எதுவும் செய்யப்படவில்லையென்றாலும் என்னிடம் பிரேதம் ஒப்படைக்கப்படவில்லையென்றாலும் சரியல்ல. என்னிடம் சடலக் கூராய்வுக்கான வேண்டுகோளும், அந்த இடத்தில் கொடுக்கப்படவில்லையென்றாலும் சரியல்ல. பிரேதத்திலிருந்து பொருட்கள் கைப்பற்றியதற்கு மகசர் தயார் செய்தேனா என்பது எனக்கு ஞாபகமில்லை. பொருட்கள் கைப்பற்றப்பட்டால், மகசர் தயாரிக்க வேண்டும் என்பது தெரியும். நான் பிரேதத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை அதிகாரியிடம் ஒப்படைக்கவில்லையென்றால் சரியல்ல.

அ.சா.27 : எம். முனியசாமி (தலைமைக் காவலர், மேலூர் காவல் நிலையம்) சேவகமூர்த்தியின் உடலை கூராய்வு செய்ய, அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தது பற்றி கூறும் சாட்சி முதல் விசாரணை :

30.6.97 ஆம் தேதியன்றும் நான் அதே காவல் நிலையத்தில் பணியிலிருந்தேன். அன்று நான் சம்பவ இடம் சென்றிருந்தேன். சம்பவத்தின் போது இறந்த சேவகமூர்த்தி என்பவரின் பிரேதத்தை வேண்டுகோளுடன் என்னிடம் ஒப்படைத்ததை, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் ஒப்படைத்தேன். பிரேத மருத்துவ பரிசோதனை முடியும் வரை உடன் இருந்து பிரேதத்திலிருந்து வெள்ளை சர்ட் ஒன்றையும் அண்டர்வேரையும் கைப்பற்றி டி.எஸ்.பி இடம் ஒப்படைத்தேன். வெள்ளை சர்ட் ச.போ.18 அண்டர்வேர் ச.போ.19. பிரேதத்தை உறவினரினரிடம் ஒப்படைத்தேன்.

17.5.2001; 2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

பிரேதங்கள் கிடந்த இடத்திற்கு நான் இரவில் சென்றேன். நேரம் சரியாக ஞாபகமில்லை. நான் மட்டும்தான் டி.வி.எஸ்.50 மோட்டார் சைக்கிளில் போனேன். மேலூரில் என் உறவினர் வீட்டிலிருந்து டி.வி.எஸ்.50அய் எடுத்த போது இரவு 11.00 மணி. சேவகமூர்த்தி என்பவருடைய பிரேத விசாரணை அறிக்கை நடந்தது பற்றி எனக்கு தெரியும். வேறு எத்தனை பிரேத விசாரணை நடந்தது என்பது எனக்கு ஞாபகமில்லை. அந்த இடத்தில் நான் சுமார் அரை மணி நேரம் இருந்தேன். மேற்படி சேவகமூர்த்தி பிரேதத்தின் மீது பிரேத விசாரணை செய்து அதிகாரி டி.சி.பி. துணைக் கண்காணிப்பாளர் எழுதினார். அந்த அறிக்கையை ஒரு கவரில் போட்டு என்னிடம் கொடுத்தது டி.சி.பி துணைக் கண்காணிப்பாளர் ஆகும். பிரேத விசாரணக்குப் பிறகு சுமார் அரை மணி நேரம் கழித்து அவர் என்னிடம் அந்தக் கவரை கொடுத்தார். பிரேதங்களை காவல் துறை வேனில் சடலக் கூராய்விற்காக கொண்டு சென்றோம். அந்த வேனிலேயே மேற்படி டி.சி.பி துணைக் கண்காளிப்பாளர் வந்தார். நேராக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சென்றோம். பிரேதத்தை மருத்துவப் பேராசிரியரிடம் ஒப்படைத்தோம். துணைக் கண்காணிப்பாளர் பிரேத விசாரணை செய்த இடத்தில் என்னை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தார். அந்த வாக்குமூலத்தை கூடாண்டி என்ற ஆய்வாளர் கைப்பட எழுதினார். சேவகமூர்த்தியின் பிரேதத்திலிருந்து கைப்பற்றியும் பொருட்களை ஏ.இ.ஏஸ்.பி. இடம் ஒப்படைத்தேன். துணிமணிகளை ஒரு கயிற்றால் சேர்த்து கட்டி டி.எஸ்.பி.இடம் கொடுத்தேன். நான் சொல்கின்ற முறையிலும், நேரத்திலும், விதத்திலும் பிரேத விசாரணை நடக்கவில்லையென்றாலும், பிரேத விசாரணை அறிக்கை தயாரிக்கப்படவில்லையென்றாலும் பிற்பாடு தயாரிக்கப்பட்டது என்றாலும் சரியல்ல.

அ.சா.28 : தி. வாசு (முதல் நிலைக் காவலர், பேரையூர் காவல் நிலையம்) மூக்கன் உடலை கூராய்வு செய்ய அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தது பற்றி கூறும் சாட்சி

நான் தற்போது பேரையூர் காவல்நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணியிலிருந்தேன். இந்த வழக்கு சம்பவ காலத்தில் மேலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தேன். சம்பவ இடத்திலிருந்து இவ்வழக்கு சம்பந்தப்பட்ட மூக்கன் என்பவரின் பிரேதத்தை நான் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் ஒப்படைத்தேன். பிரேத மருத்துவ பரிசோதனை முடியும் வரை உடன் இருந்தேன். பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தேன். பிரேதத்திலிருந்து ஒரு வேட்டி, ஒரு சர்ட் ஆகியவற்றைக் கைப்பற்றி டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். வேட்டி சா.பொ.20, சர்ட் சா.பொ.21 ஆகும்.

(தலித் முரசு டிசம்பர் 2010 இதழில் வெளியானது)

Pin It