இந்த நீதிமன்றம் பெரும் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக ஆகிவிட்டது.

-          உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, நீதிபதி பி.எஸ்.சவுகான், மற்றும் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே.1

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், பிற விடயங்களிடையே, சாமானிய மக்களுக்கு மிகவும் முக்கியமான வாக்குறுதி - “சமூக, பொருளாதார, அரசியல் நீதி” - இடம் பெற்றுள்ளது. முரண்கருத்தாக “வளர்ச்சி” வெளியில் பயணிக்கும் போது, நாம் அதைவிட்டு முடுக்கிவிட்ட வேகத்தில் எதிர்த்திசையில் விலகிச் சென்றுகொண்டிருக்கிறோம். அரசியல் அமைப்புச் சட்டத்தின் இந்த முதல பக்கம், இந்திய மக்கள் மீதான ஒரு தீவிரமான எள்ளலாக ஆகிவிட்டது. மேலும், ஆட்சியாளர்கள் இந்த நாட்டை எப்படி ஆளவேண்டும் என்று “அரசுக் கொள்கையின் வழிகாட்டு நெறிகளான” அதன் பகுதி நான்கு வலியுறுத்துகிறது. “புனிதப் பசு”வுக்கான விதிமுறை தவிர, அது ஓர் உயிரற்ற ஆவணமாகும். அரசியல் அமைப்புச் சட்டப்படி, பெரும்பான்மை ஏழை மக்களே இந்த நாட்டின் உரிமையாளர்கள் ஆவர். குற்றம் புரியும் பணக்காரர்கள் மிக மிக முக்கியமான நபர்களாகத் திரிந்துகொண்டிருக்கும் வேலையில், அந்த ஏழை மக்கள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். நீதியின் செயல்முறை முழுவதும் பணப் பைகளில் கடத்திச் செல்லப்பட்டுள்ளது என்பதை இந்த நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமே ஒப்புக்கொண்டுள்ளது:

supreme court 600“நீதிமன்றத்தின் நேரம் மூத்த வழக்கறிஞர்களாலும் பெரும் குற்றவாளிகளாலும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சொல்வதற்கு எங்களுக்கு வருத்தமாக் இருக்கிறது.... சாமானிய மக்களுக்கு 5% நேரம் தான் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது, அவர்களுடைய மேல்முறையீடுகள் 20 அல்லது 30 ஆண்டுகளாகக் காத்துக் கிடக்கின்றன.”2

துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கடத்தல், நேரத்தோடு மட்டும் நிற்கவில்லை; அது நீதி மிகவும் தேவைப்படும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும் மிகவும் ஆழமாகச் செல்கிறது. அரசின் இந்தத் தூண் (நீதித்துறை) சட்டமியற்றும் துறை மற்றும் நிர்வாகத் துறை ஆகிய இரண்டையும் விட சிறப்பாகச் செயல்படுவதாக கூறிக் கொள்ளலாம், அல்லது மக்கள் வேறுவழியின்றி அதைச் சார்ந்திருப்பதால் அப்படித் தோன்றுகிறது என்று கூறலாம். ஆனால் பலியாவது நீதி தான். தலித்துக்கள், பழங்குடிகள், மற்றும் மதச் சிறுபான்மையினர் ஆகியோர் விடயத்தில் இது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது, அவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது, அரசியல் வாதிகளின் விடயத்தில், பெரும் குற்றவாளிகளின் விடயத்தில், பெருங்குழும (கார்பரெட்) மோசடியாளர்கள் விடயத்தில், அது அவர்களுடைய கண்ணோட்டத்தில் நியாயமாக நடந்துகொள்ள இட்டுச் செல்கிறது.

சல்மான் கானின் “மோதிவிட்டு ஓடிய” வழக்கில் நீதியின் மீதான பணக்காரர்களின் செல்வாக்கையும், ஜெயலலிதாவின் “வருவாய்க்கு மீறி சொத்துச் சேர்த்த” வழக்கில் நீதியின் மீதான அரசியல் செல்வாக்கையும் எடுத்துக்காட்டிய இரண்டு தீர்ப்புகள் ஒன்றும் வழக்கத்துக்கு மாறானவை அல்ல. அவை இரண்டு வேறுபட்ட மாநிலங்களில் இரண்டு உயர்நீதி மன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள். இரண்டும் உறுதியாக இந்தக் கூற்றை மெய்ப்பிக்கின்றன.

நடிகர் சல்மானும் பேராசிரியர் சாய்பாவும்

“பிணை என்பது ஒரு சட்டவிதி, அது விதிவிலக்கல்ல.” இது விசாரணைக் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கும் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல் ஆகும். ஆனால் இந்த விதி எவ்விதம் வேறு வேறு விதமாக பயன்படுத்தப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்ததே. பெரும் பணக்கார சட்டவிரோதிகள் பெரும் செல்வாக்குள்ள வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்கிறார்கள், அவர்கள் கைது செய்வதற்கு முன்பே கூட, அல்லது கைது செய்யப்பட்ட உடனேயே எப்படியோ பிணையைப் பெற்று விடுகிறார்கள். அதன் பிறகு அந்தப் பிணையை சல்மான்கான் வழக்கில் போல நீட்டித்துக் கொண்டே சென்றும் விடுகிறார்கள். நீதி வழங்கப்படும் நேரத்தில், சாட்சிகளில் பலர் செத்துப்போய் விடுகிறார்கள், அல்லது சாகடிக்கப்பட்டுவிடுகிறார்கள். எஞ்சியிருக்கும் சாட்சியங்கள் நீர்த்துப் போய்விடுகின்றன, அல்லது மீட்க முடியாதவாறு அழிக்கப்பட்டு விடுகின்றன. இந்த வழக்கில் காவல்துறையைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

2002 செப்டம்பர் 28 அன்று அதிகாலையில், பாலிவுட்டின் பிரபல நடிகரான சல்மான்கான், உரிமம் கூட இல்லாமல், தனது டொயோடா லேண்ட் குரூயிசர் வண்டியைக் குடிபோதையில் ஒட்டிக்கொண்டுவந்து நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது ஏற்றிவிட்டார். ஒருவர் கொல்லப்பட்டார், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். அவர் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார். பின்னர் ஒரு வழக்கறிஞரின் வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார். “கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்திற்காக” கைது செய்யப்பட்ட போதும், அவர் பிணை பெற்று, பதிமூன்று ஆண்டுகள் ஒரு நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டார். இறுதியாக அவர் தண்டிக்கபட்டு. ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். அடுத்த சில மணிநேரத்திலேயே, சாதாரண மனிதர்கள் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டிய, மும்பை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்களின் வாதம் கேட்கப்பட்டு, அதிவிரைவாக அவருக்கு பிணை வழங்கப்பட்டது. பிணை குறித்த விடயமல்ல, அது வழங்கப்பட்ட விதம் தான், நீதித்துறை பணக்காரர்களிடம் நடந்துகொள்ளும் முறையையும், அதற்கு மாறாக ஏழைகளிடம் நடந்துகொள்ளும் முறையையும் வெளிப்படுத்துகிறது.

இந்த வழக்கை டெல்லி கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றும் சக்கர நாற்காலியில் பிணைக்கப்பட்ட 90% உடல்ஊனமுற்ற ஜி.என்.சாய்பாபா வழக்குடன் வேறுபடுத்திப் பார்க்கவேண்டியுள்ளது. அவர் சில ஆண்டுகளுக்கு முன்புவரை கைகளைத் தரையில் ஊன்றி, தவழ்ந்துதான் நகர்ந்து கொண்டிருந்தார், உதவி இல்லாமல் அவரால் உயிர்வாழவே முடியாது, அவரது உடல்நிலை குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்த போதும், அவருக்குத் திரும்பத் திரும்ப பிணை மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகால உடல்நிலைப் பாதிப்புக் காரணமாக அவரது இதயம் பலவீனம் அடைந்துள்ளது, நுரையீரல்கள் பழுதுபட்டுள்ளன, முதுகுத்தண்டு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக, சிறையில் ஒழுங்கான மருத்துவமும், முறையான மருந்துகளும் வழங்கப்படாததால் அவரது சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அவருடைய வழக்கறிஞர்கள் அவருக்கு முறையான மருத்துவப் பராமரிப்பு வேண்டி, தொடர்ந்து போராடி வருகின்றனர். பேராசிரியர் சாய்பாபா அவரது அரசியல் கருத்துகளை ஒருபோதும் இரகசியமாக வைத்துக்கொண்டதில்லை. காவல்துறை கூறுவது போல மாவோவியர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் அவர் ஏதாவது குற்றத்தையும் செய்தார் என்று கற்பனையாகக் கூடக் கூற முடியாது.

அரசியல் சட்டம், கருத்துச் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் உத்தரவாதப் படுத்துகிறது, தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பைச் சார்ந்த நபர்களுடன் தொடர்பு வைத்துள்ளார், அல்லது அவர்களுடைய இலட்சியத்தின் மீது அனுதாபம் கொண்டுள்ளார் என்பதற்காகவே ஒருவர் மீது குற்றம் சுமதத முடியாது என்று உச்சநீதிமன்றம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் ஓர் உறுப்பினராக இருந்தார் என்பதே குற்றம் ஆகிவிடாது, அந்த அமைப்பின் சட்டவிரோத நடவடிக்கைகளில் பங்கேற்காதவரை அவர் குற்றம் செய்தவர் அல்ல. பேராசிரியர் சாய்பாபா மாவோவியர்களின் எந்தச் சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக ஒரு சிறு குற்றச்சாட்டைக் கூட காவல்துறை முன்வைக்கவில்லை. அத்தகைய ஒரு நபர் கொடூரமான சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, மிக மோசமான நாக்பூர் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றால் அதன் பொருள் என்ன? சல்மான்கான் மற்றும் அவரைப் போன்றவர்களுக்கு வழக்கமாகப் பிணை வழங்கிக் கொண்டிருக்கும் நீதித்துறை, பேராசிரியர் சாய்பாபா ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார் என்பதற்காக விடாப்பிடியாகப் பிணையை மறுக்கிறது என்றால், அதன் பொருள்தான் என்ன? அவருக்குப் பிணை வழங்கினால் வழக்கு விசாரணையிலிருந்து அவர் தப்பித்து ஓடிவிடுவார் என்று நீதிமன்றம் நினைக்கிறதா?

அம்மா விடுவிக்கப்படுதல்

1996 ஜூனில், சுப்ரமணியம் சுவாமி ஜெ.ஜெயலலிதா மீது தொடர்ந்த அவப்பெயர் பெற்ற “வருவாய்க்கு மிகுதியாகச் சொத்துச் சேர்த்த” வழக்கில், மே 11 அன்று, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்து விடுதலை செய்தது. அந்த வழக்கு விசாரணை சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டு, பதினெட்டு ஆண்டுகள் நீடித்தது. சிறப்பு நீதிமன்றம் 2014 செப்டம்பர் 27 அன்று தீர்ப்பை அறிவித்தது, அது அவருக்கும், சசிகலா நடராஜன், இளவரசி மற்றும் வி.என்.சுதாகரன் ஆகிய அவரது கூட்டாளிகளுக்கும் நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி, மற்ற மூவருக்கும் முறையே ஒவ்வொருவருக்கும் ரூ.10 கோடி தண்டத் தொகையையும் செலுத்தக் கூறியது. இது ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் மூன்றாவது தண்டனை, மேலும் முதலவர் பதவியிலிருந்து இறங்க நேரிட்ட இரண்டாவது நிகழ்வு. தண்டிக்கபட்ட நால்வரும் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரகார மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். கர்நாடக உயர்நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தது, அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அவர்களுக்குப் பிணை வழங்கியது. அவர்களுடைய மேல்முறையீட்டை விசாரித்த கர்நாடக் உயர்நீதிமன்றம் அவர்களை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்துவிட்டது. இப்போது ஜெயலலிதா மீண்டும் மாநில முதலவராக முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டு விட்டார்.

சொத்துக்கள் மற்றும் கடன்கள் தவறாகக் கணக்கிடப்பட்டு விட்டதாகக் கூறி, அந்த அடிப்படையில் நீதிபதி அவர்களை விடுவித்ததாக கூறப்படுகிறது. ஒருவர் சொத்துகளின் (சென்னையில் பண்ணை வீடுகள், மாளிகைகள், தமிழ்நாட்டில் விவசாய நிலங்கள், ஹைதராபாத்தில் பண்ணை வீடு, நீலகிரியில் தேயிலைத் தோட்டம், மதிப்புமிக்க நகைகள், தொழிற்சாலை கட்டிடங்கள், ரொக்க வைப்பு நிதிகள், வங்கி முதலீடுகள், ஆடம்பர வாகனங்கள், 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 ஜோடி காலணிகள், 10,500 சேலைகள், 91 கைக்கடியாரங்கள், சென்னையில் இந்திய ரிசர்வ் வங்கியின் பெட்டகத்தில் பிற மதிப்புமிக்க பொருட்கள்) பட்டியலை வாசித்தாலே, இது ஊழல வழக்குத்தான் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால் அப்படித்தான் என்று சொல்வதற்கு 18 ஆண்டுகள் ஆயிற்று, ஆனால் அப்படி இல்லை என்று சொல்வதற்கு ஒரு ஆண்டு கூட ஆகவில்லை.

தீர்ப்பின் தர்க்கம் பாரதிய ஜனதாக் கட்சியின் அரசியல் தேவையுடன் இணைக்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் மக்களவையில் 37 இடங்களையும் மேலவையில் 11 இடங்களையும் வைத்துள்ள ஜெயலலிதா பா.ஜ.க.வுக்குத் ஒரு மதிப்புமிக்க கூட்டாளியாக இருக்கிறார். அதற்காக அவரை ஊழல் வழக்கிலிருந்து முதலில் விடுவிக்க வேண்டியுள்ளது. அப்படி நடந்த பின்பு, அவரை முதலாவதாக வாழ்த்தியது, நரேந்திர மோடியே தவிர வேறு யாரும் அல்ல. பா.ஜ.க.வுக்கு மேலவையில் அதன் பலவீனத்தைக் களைவது மிகவும் அவசர அவசியமானதாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்கையும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியையும் நண்பர்களாக்கிக்கொள்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளில் இது நன்றாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட மாட்டாது என்று கருதி, நீதிபதி ஜெயலலிதாவை விடுவிப்பதற்கு சில குளறுபடியான கணக்கீடுகளை செய்துவிட்டார். சுப்ரமணிய சாமி மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று தெளிவுபடுத்திவிட்டார். அந்த மாநிலக் காங்கிரசு அரசு அதைச் செய்தாலும் அந்த வழக்கு முடிவதற்கு நீண்டகாலம் பிடிக்கும்.

இந்திய ஜனநாயகம் மூன்று சமமான சுதந்திரமான தூண்களின் மீது நிற்பதாக -– சட்டமியற்றும் துறை (பாராளுமன்ற, சட்ட மன்றங்கள்), நிர்வாகத் துறை (மத்திய மாநில அரசுகள்), நீதித்துறை – அவை ஒன்றுக்கொன்று சமநிலையை பராமரிப்பதற்கான அரசியல் சட்ட அமைப்புக்கள் - நமக்குக் கூறப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் இந்தக் கோட்பாட்டு அறிவிப்பு கோட்பாட்டிலேயே பிரக்ச்சனைக்குரியதாக் இருக்கிறது, ஏனென்றால் அரசாங்கத்தை அமைக்கும் பாராளுமன்ற, சட்டமன்றத்தில் பெரும்பான்மை கட்சி, சட்டமியற்றுவதையும் நிர்வாகத்தையும் பிரநிதித்துவப்படுத்துகிறது; அது நிர்வாக அதிகாரத்தை நேரடியாக ஏற்று, அதிகார வர்க்கத்தைக் கட்டுப்படுத்துகிறது, அதேவேளையில் சட்டமியற்றும் செயல்பாடுகளையும் தொடர்ந்து மேற்கொள்கிறது. நமது தேர்தல் முறையில் பெரும்பான்மை இடங்களைப் பெறும் கட்சி ஆட்சி அமைக்கிறது, பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டியதில்லை இந்த அரசியல் முறையில் கட்சிகளிடையே பெரிய வேறுபாடுகள் எதுவும் இருப்பதில்லை. அதிகார வர்க்கம் சட்டமியற்றும் அமைப்பின் (அரசியல்வாதிகளின்) ஆணையைப் பெற்று செயல்படுகிறது. அசோக் கெம்கே போன்ற துணிச்சல் மிக்க அதிகாரியை அரிதாகவே பார்க்க முடிகிறது. அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் இறுதியான பாதுகாவலரான நீதித்துறையில் சுதந்திரம் நிலவினாலும், அது நிர்வாக அல்லது சட்டமியற்றும் அமைப்பின் அரசியல் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைக்குத் தடை விதிக்க முடியும். என்னதான் தாமதங்கள், மற்றும் அவ்வப்போதைய முரண்பாடான நடவடிக்கைகள் இருந்தாலும், மொத்தத்தில் மக்கள் நீதிக்கு நீதித்துறையைத் தான் நம்பியிருந்தார்கள்.

தற்போதைய பாராளுமனறம், 2014 ஆம் ஆண்டு, 99 வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உருவாக்கியுள்ளது. அது 2015 ஏப்ரல் 13 அன்று நடைமுறைக்கு வந்தது. முந்தைய நீதிபதிகள் நியமனம் மற்றும் மாறுதலை நிர்வகித்துவந்த நீதிபதிகள் குழு முறையை, இந்த ஆணையம் மாற்றியுள்ளது. கொள்கை அடிப்படையில், இந்த ஆணையம் சரியாக இருப்பதாகத் தோன்றியது, உண்மையில் அது அரசியல் தலையீட்டுக்கு வாய்ப்பளித்துள்ளது, மேலும் நீதித்துறையின் சுதந்திரமும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த ஆணையம் இன்னும் தோற்றம் பெறவில்லை, ஆனால் அதன் செல்வாக்கு ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிக்கு பயனளிப்பதாகத் தோன்றும் தீர்ப்புக்கள் மூலமாக உணரப்படுகிறது.

குறிப்புகள்:

  1. Daily mail home//indiannews//article 2449211/Top-judgesadmit-indias-justice-tragedy-common-citizens-ignored-favour-high-profile-cases.htm/#ixzzSajoMZPpZ,accessed on 20 May 2015.
  2. மேற்குறிப்பிட்ட அதே மேற்கோள்.

EPW Vol - L No. 23, June 06, 2015 

ஆனந்த் டெல்டும்ப்டே
தமிழில்: நிழல்வண்ணன்

Pin It