குற்றவியல் வழக்குகளில் வழக்கு விசாரணை நடத்தும் விசாரணை அதிகாரியாகிய காவல்துறையினர் தாங்கள் சட்டப்படி கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளைக் கடைபிடிக்காமல் மெத்தனத்துடன் நடந்து வருகின்றனர். இதன் விளைவாக பல முக்கிய வழக்குகளில் கூட குற்றவாளிகள் எளிதில் தப்பிவிட முடிகிறது. அல்லது யாராவது அப்பாவிகள் மீது வழக்கு சோடிக்கப்படுகிறது.

 

இதற்கு எத்தனையோ உதாரண வழக்குகளை மேற்கோள் காட்டமுடியும். மிகவும் பிரபலமான மதுரை பாண்டியம்மாள் எரித்துக் கொல்லப்பட்டதாகச் சொல்லி தொடுக்கப்பட்ட வழக்கில் பாண்டியம்மாள் “தான் சாகவில்லை உயிருடன்தான் இருக்கிறேன்” என்று நீதிமன்றத்திலேயே தோன்றி சாட்சிமளித்ததை பார்த்திருக்கிறோம். மேலும், மதுரை செசன்ஸ் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற திருவாடனையைச் சார்ந்த சுஜாதா என்ற 8ஆம் வகுப்பு மாணவி 3 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. தொடுத்த வழக்கில் சுஜாதா தனது குழந்தையுடன் நீதிமன்றத்தில் தோன்றி நீதித்துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வையும் யாரும் மறந்திருக்க முடியாது. இரண்டு வழக்குகளிலும் எப்படி காவல்துறையின் உயரதிகாரிகள் வழக்கை சோடித்தார்கள் என்பது அப்பட்டமாக புலப்பட்டது. இது போன்ற எத்தனையோ வழக்குகளில் இந்திய காவல்துறையின் சுயரூபம் அம்பலமானது.

இப்படி காவல்துறையினர் அடிப்படை பொதுப்புத்தியை கூட பயன்படுத்தாமல் செய்கின்ற விசாரணைகளில் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர் அல்லது அப்பாவிகள் தண்டனை அனுபவிக்கின்றனர். சிறைச்சாலைகளுக்கு சென்று அங்கிருக்கும் கைதிகளுடன் உரையாடும்போது இதுபோன்ற எத்தனையோ வழக்குகளை அறியமுடிகிறது.

இப்படி பல வழக்குகளில் மிகுந்த மெத்தனப்போக்குடன் விசாரணை நடத்தி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தையும் நீதி வழங்கும் அமைப்பையும் கொச்சைப்படுத்தும் காவல்துறை விசாரணை அதிகாரிகளுக்கு சட்ட நடைமுறையைப் பின்பற்றாததற்கும், பொதுப்புத்தியை பயன்படுத்தாதற்காகவும் எந்தவித தண்டனையும் வழங்கப்படுவதில்லை. எந்த வகையிலும் அவர்கள் பொறுப்புக்கு உட்படுத்தப்படுவதில்லை. அதற்கான வழிமுறைகளும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் வகுக்கப்படவில்லை. எனவே, குற்றவியல் வழக்குகளில் காவல்துறையினர் வைத்ததுதான் சட்டம் என்றாகி விடுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் வழக்கிலிருந்து காப்பாற்ற முடியும்; யாரை வேண்டுமானாலும், வழக்கில் சிக்க வைக்க முடியும் என்ற நிலை. மிகவும் முக்கியமான வழக்குகளில் கூட காவல்துறையினர் இப்படி நடந்து கொள்கின்றனர்.

அதனால்தான் பல வழக்குகளை சாதாரண காவல்துறையிடமிருந்து மாநில காவல் உளவுப்பிரிவு அல்லது சி.பி.ஐ. எனப்படும் மத்திய உளவுப்பிரிவு போன்ற அமைப்புகளிடம் விசாரணை செய்ய நீதிமன்றங்கள் ஒப்படைக்கின்றன. அந்த அமைப்புகளும் ஏறக்குறைய சாதாரண காவல்துறையினர் செய்வதுபோலத்தான் விசாரணை செய்கின்றன.

இப்போது அகமதாபாத்தில் 6 வயது சிறுமி கொடூரமாக பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு, கால்கள் வெட்டப்பட்டு கொலுசு திருடப்பட்ட கொடிய வழக்கில் காவல்துறையினர் மிகவும் மெத்தனமாக விசாரணை செய்ததால், அக்கொடூரமான குற்றமிழைத்த குற்றவாளி தப்பிவிட ஒரு அப்பாவி மீது வழக்கு புனையப்பட்டது. அதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவ்வழக்கின் விசாரணை அதிகாரியையும், வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் நடத்திய அரசு தரப்பு வழக்கறிஞரையும் வன்மையாகக் கண்டித்துள்ளது.

மேலும். இந்த வழக்கின் பின்னணியில் எல்லா மாநில உள்துறை அமைச்சகங்களுக்கும் ஒரு கட்டளையைப் பிறப்பித்துள்ளது. புலன் விசாரணை செய்யும் அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களை கண்காணிக்கவும், தவறான, மெத்தனமான விசாரணை காரணமாக குற்றவாளிகள் தப்புவிக்கப்படும் நிலை ஏற்பட்டால் விசாரணை அதிகாரி மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மீது உடனடியாக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்குவிதிகளை 6 மாதத்திற்குள் உருவாக்கவும் சொல்லி உத்தரவிட்டுள்ளது.

எந்தவொரு குற்றச் செயலிலும் சட்டத்தின் பலனை ஒருவர் அடைய வேண்டுமென்றால் அவர் காவல்துறையின் துணையை நாட வேண்டிய தேவை உள்ளது. குற்ற வழக்குகளில் நீதிவழி பரிகாரம் பெறுவதற்கான செயல்பாடுகள் காவல்நிலையங்களில்தான் ஆரம்பமாகின்றன. காவல்துறையினர் ஒரு குற்ற வழக்கில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்றும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் தெள்ளத்தெளிவாக வரையறுத்துள்ளது. அவற்றைத் துல்லியமாகக் கடைபிடித்தாலே வழக்குகளின் விசாரணை மிக நேர்த்தியாக அமைந்துவிடும். ஆனால், பல நேரங்களில் காவல்துறையினர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் புலன் விசாரணை தொடர்பாக சொல்லப்பட்டுள்ளவற்றை முற்றிலும் அறியாமலிருக்கிறார்கள். அவர்கள் பல நேரங்களில் தங்கள் விருப்பத்திற்கேற்றபடி விசாரணையின் போக்கை மாற்றியமைத்துக் கொள்கின்றனர். அதனால்தான் விசாரணையில் பெரும் குளறுபடிகள் ஏற்படுகின்றன.

மேலும் சாதிய உணர்வு புரையோடிப் போயிருக்கும் நம் நாட்டில் பல வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் சாதி, சமயம், மொழி, இன அடிப்படையிலான பிளவுபட்ட மனநிலையுடனும், பாகுபாட்டுடனும்தான் வழக்குகளை அணுகுகிறார்கள். அல்லது அரசியல் நெருக்கடிகள் மற்றும் லஞசம் பெற்றுக் கொண்டு ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்படுதல் போன்றவை சாதாரணமாக நடைபெறுகிறது. அப்படி இருக்கும் போது தவறான விசாரணை செய்து குழப்பத்தை உண்டுபண்ணும் விசாரணை அதிகாரிகளைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஏதும் இதுவரை வகுக்கப்படவில்லை.

அதனால்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாத் மற்றும் கேஹர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 7.1.14 அன்று அகமதாபாத் சிறுமி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணையின் போது முதல்முறையாக இப்படிப்பட்ட தவறுகளைக் களைவதற்கு தேவையான ஒழுங்குவிதிகளை 6 மாத காலத்திற்குள் வகுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. இது ஒரு காலம் கடந்த முடிவுதான். நாடெங்கிலும் புலன் விசாரணை அமைப்புக்கள் இப்படித்தான் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கின்றன. எண்ணற்ற வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் மேற்சொன்ன பின்னணியில்தான் புலன் விசாரணை செய்து வழக்குகளை நடத்தியுள்ளனர். அதனால்தான், இலட்சக்கணக்கான வழக்குகளில் நீதிமன்றங்கள் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு இயலாமல் போகிறது. இன்னும் இலட்சக்கணக்கான வழக்குகளில் அரசியல் நெருக்கடிகள் காரணமாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டும் அப்பாவிகள் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். உண்மைகள் வெளிச்சத்திற்கு வராத வழக்குகள் ஏராளமாக உள்ளன.

ஒரு குற்றவியல் வழக்கில், குறைந்தபட்சம் 90 நாட்களுக்குள் புலன் விசாரணை செய்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் அறிவுறுத்துகிறது. ஆனால், கணக்கிலடங்காத வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரணை முடிவுறாமலேயே நிலுவையில் உள்ளன. இதனால், பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் விசாரணைக் கைதிகளாக வாழ்வு மறுக்கப்பட்டு இந்திய சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஒருவேளை தாங்கள் செய்ததாக சொல்லப்படும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கியிருந்தால் கூட அந்த தண்டனையை முடித்துவிட்டு வெளியில் வந்திருப்பார்கள். அந்த காலத்திற்கும் மேலாக எண்ணற்ற கைதிகள் சிறைச்சாலைகளில் விரக்தியுடன் காலத்தை கழித்து வருகின்றனர்.

இச்சூழலில், விசாரணை அதிகாரிகளையும், அரசு தரப்பு வழக்கறிஞர்களையும் கண்காணிப்பதற்கும் அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பை உச்ச நீதிமன்றம் 6 மாதத்திற்குள் ஏற்படுத்தச் சொல்லி உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், எத்தனை மாநிலங்கள் உண்மையிலேயே அக்கறையுடன் அதைச் செய்யப்போகின்றன என்பது கேள்விக்குறியே!

- அ.சகாய பிலோமின் ராஜ், வழக்கறிஞர்

Pin It