John_Shepherd_Barronவங்கியில் இருக்கும் சொந்த பணத்தை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எடுத்துக்கொள்ளும் வசதியை அளித்துள்ள ஏடிஎம் இயந்திரங்கள் இன்று மூலை முடுக்கெல்லாம் முளைத்து நவீன வாழ்க்கையின் அடையாளமாக திகழ்கின்றன.

இந்த ஏடிஎம் இயந்திரத்தை முதன் முதலில் உருவாக்கியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் ஆவார்.

ஒருமுறை வங்கியில் இருந்த தனது பணத்தை எடுக்க முடியாமல் தடுமாறியபோது ஷெப்பர்டுக்கு மிகவும் வேதனை உண்டானது. வங்கியின் வேலை நேரம் முடிந்து விட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. தன்னுடைய பணத்தை தான் விரும்பிய நேரத்தில் எல்லாம் எடுப்பதற்கு ஒரு வழி இருந்தால் என்ன என்று அவர் அப்போது யோசித்தார். அந்த யோசனையின் பயனாக சாக்லேட் கட்டிகளை வழங்கும் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அதேபோல பணத்தை வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தின் மாதிரியை உருவாக்கினார்.கடந்த 1967ம் ஆண்டு இவர் உருவாக்கிய ஏடிஎம் இயந்திரம் வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. 

இந்த ஏடிஎம் இயந்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது உள்ளதுபோல ஏடிஎம் கார்டுகள் உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக விசேஷ காசோலைகள் பயன்படுத்தப்பட்டன. காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். முதலில் ஷெப்பர்டு 10 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை உருவாக்கினார். ஆனால் அவற்றை நினைவில் கொள்ள முடியவில்லை என்று மனைவி புகார் கூறியதையடுத்து 4 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றினார்.

இன்றுவரை அதுவே தொடர்கிறது. காலப்போக்கில் ஏடிஎம் இயந்திரங்கள் மிகவும் பிரபலமாகி உலக அளவில் 17 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. இந்த கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரரான ஷெப்பர்டு தனது 84ம் வயதில் (19.05.2010) காலமானார்.

-     மா.கெம்புகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It