eelamஈழ நாட்டில் தமிழர்கள் குறுநில அரசர்களாகவும் காணப்பட்டுள்ளனர் என்பதற்கு வன்னிமைகளின் ஆட்சி சான்றாகவுள்ளது. வன்னியர் என்ற பிரிவினர் தமிழகத்தில் இருந்து சோழர்களுடன் இங்கு வந்தவர்களாவர். பொலன்னறுவைக்கு பிற்பட்ட காலத்திலேயே இவர்கள் எழுச்சி பெற்றனர்.

13 ஆம் நூற்றாண்டின் பின் இலங்கையில் சிறப்புப்பெற்ற வன்னிமைகள் 6 காணப்பட்டன. அடங்காப்பற்று, திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, நுகரகலாவிய, ஊவாவெல்லஸ்ஸ போன்ற பாகங்களில் வன்னிமைகளின் ஆட்சி காணப்பட்டுள்ளது.

வன்னியரசுகளுக்கு முன்பாக ஈழத்தில் தமிழ் குறுநில அரசுகள் காணப்பட்டதை பிராமிய சாசனங்களில் காணப்படும் வேள், ஆய், உதி, சிவ, அபய, கமனி ஆகிய தமிழ் சிற்றரசர்களை குறிக்கும் பெயர் மூலம் அறியலாம். இக்காலக்கட்டத்தில் திருகோணமலை சேருவில, சோம இடங்களில் சிவ, அபய மற்றும் குச்சவெளி நாச்சியார்மலையில் உதி ஆகிய சிற்றரசர்களாலும் நிர்வகிக்கப்பட்டது.

சிங்கள வன்னிமைகளான ஊவாவெல்லஸ்ஸ, நுவரகலாவிய மாகாவன்னி, ஸ்ரீவன்னி என சிங்கள இலக்கியங்கள் கூறுகின்றன. சிங்கள மன்னர்களின் ஆட்சிக்காலத்திலும் இவ்வன்னிமைகளின் ஆட்சிமுறை காணப்பட்டது.

மானியமுறை நிலவிய காலத்தில் இலங்கை அரசியலிலும் பொருளாதாரத்திலும் வன்னிமைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். பொதுவாக இலங்கையில் இராச்சிய எல்லைகள், கரையோரம் மற்றும் அடர்த்தியான காடுகளுக்கு அண்மையில் இவை அமைந்திருந்தன. தலைநகருக்கு அப்பால் இவை அமைந்திருத்தமை பாதுகாப்பாக அமைந்தது. திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகியவை தமிழ் வன்னியர்களாலே ஆளப்பட்டு வந்தன.

தமிழ் வன்னிபங்கள் சுயாட்சியுடன் நிர்வாகம், நீதிபரிபாலனம், வேளாண்மை, ஆலயத்தொழும்பு போன்றவற்றை கண்காணித்தனர். இவை சிலக்காலங்களில் யாழ்ப்பாணம், கண்டி அரசின் மேலாதிக்கத்தின்கீழ் காணப்பட்டன.

திருகோணமலையிலிருந்த வன்னிமைகள் பற்றி சிறப்பாக அறியகிடைக்கும் மூலாதாரங்களாக கோணேசர் கல்வெட்டு, வையாபாடல், யாழ்பாண வைபவமாலை, சித்திரவேலாயுத காதல், கங்குவேலிக் கல்வெட்டு, வெருகல் சித்தர வேலாயுத கல்வெட்டு, கோட்டை வாசல் கல்வெட்டு மற்றும் ஆங்கிலேயரின் சாசனங்கள் என்பன காணப்படுகின்றன.

பெரியவளமை பத்ததி செப்பேட்டை மையமாக வைத்து 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கவிராசர் பாடிய கோணேசர் கல்வெட்டு குளக்கோட்டனைப்பற்றியும் ஆலயத்திருப்பணிகளை பற்றியும் கூறுகிறது. திருகோணமலையை பொறுத்தமட்டில் குளக்கோட்டன் மன்னன் காலத்தில் வன்னிமைகள் வரையறுக்கப்பட்டிருந்தன.

நான்கு வன்னிபிரிவுகள் நிர்வாக ரீதியல் இயங்கிவந்தன என ஐரோப்பிய ஆவணம் உறுதிசெய்கின்றன. இவை பற்று அல்லது தேசம் என அழைக்கப்பட்டது. திருகோணமலைபற்று, கட்டுக்குளப்பற்று, கொட்டியாரப்பற்று, தம்பலகாமப்பற்று என்பனவாகும். 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஐரோப்பிய ஆவணங்களில் அரசுகள் என கூறப்பட்டுள்ளது. வன்னிப கூட்டங்கள் மாகாநாடு என கூறப்பட்டுள்ளது. இதன் அதிகார மையமாக திருக்கோணேச்சரம் காணப்பட்டது.

அதேவேளை வன்னிபங்களின் குலங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. திருகோணமலைபற்று வன்னிபங்கள் “பூபாலகட்டு” என்னும் இடத்தில் உள்ள மாளிகையில் வாழ்ந்தனர். “தனியுண்ணாப்பூபாலன்” என்பது அவர்களின் சிறப்பு பெயராகும். அவர்கள் 32 பேரின் பெயர்பட்டியல்; கோணேசர் கல்வெட்டில் உள்ளன. ஏனைய மூன்று வன்னிக்குலங்கள் பற்றியும் கூறுகிறது. மருங்கூர் வன்னிபம் 32 பேரும் சோழநாட்டு வன்னிபம் 37 பேரும் காரைநகர் வன்னிபம் 42 பேரும் கட்டுக்குளப்பற்று, கொட்டியாரப்பற்று, தம்பலகாமப்பற்றை ஆட்சி செய்துள்ளனர். 

குளக்கோட்டன் மருங்கூரிலிருந்து அழைத்துவந்த ஆறு சோழக்குடிகளை திருமலையிலிருத்தி அவர்களுக்கு நிலங்களைப் பகிர்ந்தளித்தான். அத்துடன் ஆலயத்திருப்பணிக்கு தேவையான பொருட்களையும் கொடுத்து நாள் தோறும் ஏற்படும் வரவுசெலவுகளின் கணக்குகளைப் பதிவு செய்யுமாறு தானத்தாரைப் பணித்தான். தானத்தாருக்கும், வரிப்பத்தருக்கும் இச்சேவைகளுக்கு ஊதியமாக பள்ளவெளியில் வயல் நிலங்களைக் குளக்கோட்டன் கொடுத்திருந்தான்.

மதுரைநகரால் வந்த தனியுண்ணாப் பூபாலனுக்குத் திருமலை நகரின் ஆட்சியதிகாரத்தைக் கொடுத்து வன்னிபம் என்ற பட்டத்தையும் வழங்கினான். மேலும் திருநெல்வேலியிலிருந்து வந்த காராளனொருவனைக் கட்டுக்குளம் பற்றுக்கு அதிபதியாக்கி நிலாவெளியில் நிலம்கொடுத்து வன்னிபமென்ற பட்டத்தையும் குளக்கோட்டன் சூட்டினான்.

கோணேசர் கோயிலின் வரவு செலவுகளைப் பற்றிய குருகுலக் கணக்கிற்குக் கட்டுக்குளப்பற்று வன்னியனாரும் அவனது சந்ததியினரும் பொறுப்பாக இருக்க வேண்டுமென்று பணித்து அடை, ஆயம், தீர்வை முதலிய வரிகளும் கோயிலுக்கே செல்ல வேண்டுமென்று அவன் ஆணையிட்டான்.

ஆரியச்சக்கரவர்;த்தி, செகராசசேகரன், பரராசசேகரன் என்ற யாழ்ப்பாணத்து மன்னர்கள், கோணேசர் கோவிலுக்குச் சென்று அங்கு வழங்கிய தானங்களைப் பற்றிக் கோணேசர் கல்வெட்டுச் கூறுகின்றது. சில யாழ்ப்பாண மன்னர்கள் திருகோணமலை வன்னிமை மீது ஆதிக்கம் பெற்றிருந்தனரென்று கொள்ளலாம்.

14 ஆம் நூற்றாண்டில் ஆரியச்சக்கரவர்த்திகள் திருமலை வன்னிமைமேல் ஆதிக்கம் பெற்றிருந்தனரென்று கொள்வதற்கு சான்றுகளாக அந்நூற்றாண்டைச் சேர்ந்ததென்று கருதப்படும் நம்பொத்த என்ற சிங்கள நூல் திருகோணமலை ‘தெமள பட்டணத்தில்’ அடங்கிருந்ததெனக் கூறுகின்றது. தடிpண கைலாச புராணம் சொல்வனவற்றிலிருந்தும் திருமலையிலே செகராசசேகரனின் ஆதிக்;கம் நிலவியதென்பதை உணர முடிகின்றது.

திருமலை, கட்டுக்குளம் ஆகிய இடங்களில் குளக்கோட்டன் வன்னிமைகளை நியமித்தானென்று கோணேசர் கல்வெட்டுக் கூறுகின்றது. குளக்கோட்டனின் காலத்திற்கு முன்பே திருமலை வன்னிமை ஏற்பாடாகியிருந்த தென்று கொள்வதற்கு ஆதாரமாயுள்ளன. பாசுபதமறையவர் இறந்ததன் விளைவாக ஆலயத்திற்பூசை முதலியன தடையுற்றபோது கஜபாகுமகாராசன் அங்கு சென்று வன்னிபம், தானம், வரிப்பத்து, நாட்டவர் என்போரை அழைத்து விசாரணை நடத்தி, வெளிநாட்டிலிருந்து பிராமணர்களைக் கொணர்வித்து மீண்டும் ஆராதனைகள் வழமைபோல நடைபெற ஏற்பாடு செய்தான். அத்துடன் 1,100 பொன் கொடுத்து குருகுலக் கணக்கிற் பதிப்பித்து ஆயம், தானியவரி ஆகியவற்றிலும் வாணிபத்திற்கிடைக்கும் வருவாயிலும் பத்திலொரு பங்கை ஆலயத் திருப்பணிக்குக் கொடுக்க வேண்டுமென்று அரசன் ஆணையிட்டான்.

திருகோணமலை கோட்டை வாசலில் தமிழ்க் கல்வெட்டு புதிதாக ஆராயப்பட்டது. குளக்கோட்டன் கல்வெட்டு என அறியப்படும் இது கற்றூணில் காணப்படும் ‘முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பிணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே’ என்ற தொடர் மூலம் குளக்கோட்டன் கோணேசர் கோவிலின் திருப்பணிகளைச் செய்வித்திருந்தான் என்பதையும் பின் போர்த்துக்கேயரால் அது அழிக்கப்பட்டதையும் எடுத்துக்காட்டுகின்றது. 16 ஆம் நூற்றாண்டில் கிழக்கிலங்கை வன்னியர்களால் கண்டி அரசன் சார்பில் ஒரு வெற்றித்தூணாக நிலைநாட்டப்பட்டதென்பதற்கு ஆதாரமாக இது காணப்படுகின்றது.

இதனை அடுத்து திருகோணமலை வன்னிமை பற்றி 16 ஆம் நூற்றாண்டில்  செகராசசேகரன் அவை புலவனான வையாபுரி ஐயர் பாடிய வையாபாடல் கூறுகிறது. பல வன்னி பெயர்கள், அவர்கள் சென்றிருந்த இடங்கள், கைப்பற்றிய இடங்கள் கூறப்பட்டுள்ளன. சுபதிட்டா என்னும் அந்தணனும் படையும் திரியாய் என்னுமிடத்திற்கு சென்று நீலப்பணிகனை கொன்று ஆட்சியை கைப்பற்றினர் எனவும் அங்கசன் கட்டுக்குளத்திற்கும் சிங்கவாகு திருகோணமலைக்கும் மாமுகன் என்பவன் வெருகல், தம்பலகாமம் கைப்பற்றினர் என குறிப்பிடுகின்றது.

18 ஆம் நூற்றாண்டில் மயில்வாகன புலவரால் இயற்றப்பட்ட யாழ்பாண வைபவமாலையில் யாழ்பாண அரசுடன் திருகோணமலை வன்னிமைகள் தொடர்புகளையும் சிலகாலம் அவர்களின் ஆட்சிமேலாதிக்கத்தை ஏற்றதையும் விபரிக்கின்றது. 15 ஆம் 16 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த யாழ்ப்பாண மன்னர்கள் திருகோணமலை வன்னியரோடு மணத்தொடர்பு கொண்டிருந்தனர். கனக சூரியசிங்கையாரியனும் புதல்வரும் வடதேசத்திலிருந்து ஈழத்திற்குத் திரும்பியபோது திருகோணமலையிலே தங்கிய பின்னரே தமது நாட்டை மீட்டனரென்று யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.

செண்பகப்பெரமாள் என வழங்கிய சபுமல்குமாரன் யாழ்ப்பாணத்தை விட்டுக்கோட்டைக்குச் சென்ற காலத்திற் கனகசூரிய சிங்;கையாரியன் யாழ்ப்பாணத்திலே தன்னாட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்குத் தன்னுறவினனாகிய திருமலை வன்னியனாரிடமிருந்து படைத்துணை பெற்றார் என கூறப்படுகிறது.

சங்கலியின் ஆட்சிக் காலத்திலே யாழ்ப்பாணத்திரசனும் திருமலை வன்னியனாரும் ஒருவருக்கொருவர் துணையாகவிருந்து போத்துக்கேயரை எதிர்த்து வந்தனர். திருமலை வன்னியனார் இறந்தபின் அவனது மகன் இளைஞனாக இருந்ததினாற் சங்கிலி வன்னியை ஆளுவதற்குத் தானே உரிமையுடையவனென்று சொல்லி அதனொரு பிரிவைக் கைப்பற்றிக் கொண்டான். சங்கிலி இறந்தபின் கண்டியரசர் திருமலை வன்னியிலே தங்களாதிக்கத்தை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து கொட்டியாபுரப்பற்றில் இளஞ்சிங்க வன்னிபத்தின் தலைமையில் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத கோயில் மண்டபத்தில், தேசத்தவர் கூடியிருந்த மகாநாட்டிலே தம்பலகாமத்து வீரக்கோன் முதலியார் பாடிய சித்திரவேலாயுத காதல் என்ற நூல் வன்னிமைகள் பற்றி கூறுகிறது.   17 ஆம்  நூற்றாண்டை சேர்ந்த இந்நூலில் கொட்டியாபுரப்பற்றை நிர்வாகஞ்செய்வதற்கு நியமிக்கப்பட்ட வன்னிமையும், வெருகலம் பதியை பரிபாலனஞ் செய்யும் கங்காணம், அடப்பனார் முதலிய தலைமைக்காரரும்  தேசமக்களும் பண்டிதர்களும் ஆலயமண்டபத்தில் மாகாநாடு கூடினர்  என சமகால விபரங்களை கூறுகின்றது. கண்டி அரசன் இராஜசிங்கன் வழங்கிய கொடைப்பற்றியும் கூறுகிறது.    

திருகோணமலை கொட்டியாரப்பற்றில் உள்ள கங்குவேலிகல்வெட்டு 14 ஆம் நூற்றாண்டில் திருமலை வன்னியனார் திருமலை பிராந்தியத்தில் சுதந்திரமாக ஆட்சி புரிந்தமையை ஆதாரப்படுத்தும் ஆவணமாக விளங்குகின்றது. ஒல்லாந்து அதிகாரியான ஃபான் சென்டென் தனது தினக்குறிப்பில் இத்தமிழ் கல்வெட்டு பற்றி கூறியுள்ளார்.

வன்னிமைகள் திருகோணமலைப் பிரதேசத்தி;ல் ஆண்டதற்கும் தானத்தாரும் வரிப்பத்தரும் அங்கிருந்தமைக்கும் கல்வெட்டுச்சான்றுகள் காணப்படுகின்றன. கங்குவேலி சிவன்கோயிலில் உள்ள மூன்றடி தூணில் “மலையில் வன்னியனாரும் ஏழுர் அடப்பர்களும் கூடி தம்பிரானார் கோணைநாதனுக்கு” என பொறிக்கப்பட்டுள்ளது.

வன்னயனாரும் ஏழு ஊர்களைச் சேர்ந்த அடப்பர்களும் கூடித்தம்பிரானார் கோணநாதனுக்கு கங்குவேலியில் நிலங்களையும் புற்றரைகளிலுள்ள வருமானத்தையும் கொடுத்ததாக கூறுகின்றது. மேலும் தானம், வரிப்பத்து என்பவற்றையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. பேச்சுவழக்கு சொற்கள் கொண்டு காணப்படுகிறுது. அத்துடன் கோணேசர் கல்வெட்டிலுள்ள சில முக்கியமான அம்சங்களையும் இச்சாசனம் உறுதிசெய்கின்றது.

திருப்படைகோயிலாக காணப்பட்டு பின் மட்டக்களப்பு தேசத்து கோயிலான 7 கோயில்களில் வெருகல் சித்திர வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலின் திருப்பணிகள் இடம்பெற்றபோது தெற்கு மதில் சுவரை கைலாய வன்னியனார் கட்டினாரென்று கூறுகின்றது. ஆராய்ச்சியாளர் இக்கல்வெட்டு 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததென்று கூறுகின்றனர்.

இக்கருத்துப் பொருத்தமானதெனின் கைலாய வன்னியனார் 14 ஆம் நூற்றாண்டில் கோட்டியாரம்பத்தை ஆண்டிருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. வெருகல் கல்வெட்டில் “ஸ்ரீ சுப்ரமணிய நம தெற்கு மதில் கயில வன்னி” என காணப்படுகின்றது. வெருகல் ஊரவர்களால் மேற்கொள்ளப்படும் தேசத்துக்கோயின் ஆலய வழமைகளையும் திருவிழாக்களையும் கொண்டது. கிரந்தமும் தமிழும் காணப்படுகிறது. ஹியூ நெவில், கா.இந்திராபலா, ஆ.வேலுபிள்ளை போன்றோர் வாசித்த இக்கவ்வெட்டில் கயில வன்னியரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஆவணங்கள் மூலம் வன்னிமை பற்றி அறியமுடிகின்றது. ரொபட் நொக்ஸ் குறிப்புப்படி அனுராதபுரத்தில் சிங்களமொழி தெரியாதவர்கள் இருந்ததாகவும் மன்னனுக்கு சிங்களமொழி தெரியாததால் தமிழ்மொழிபெயர்ப்பாளர் மூலம் மன்னிடம் தான் பேசியதாகவும் குறிப்பு ஒருபுறம் இருக்க தன்னுடைய நூலில் சேர்த்திருந்த இலங்கை வரைப்படத்தில் கயிலாய வன்னியனின் ஆட்சிப்பகுதியை அதில் குறிப்பிட்டுள்ளார்.

அருவியாற்றின் கீழிருந்து தொடங்கும் எல்லைவடக்கில் வன்னி பகுதி, கிழக்கில் கொட்டியாறு, பழுகாமம், பாணமை வன்னிமைகள் அடங்கியுள்ளது. மேலும் பிரித்தானியர் நிர்வாக அறிக்கைகள், குடித்தொகை விபரங்கள் என்பன மூலவும் அறிய முடிகின்றது.

மற்றொருபுறமாக ஐரோப்பிய நிர்வாகிகளின் ஆவணங்கள் மூலம் வன்னிபங்கள் பற்றியும் அறிய முடிகின்றது. கி.பி 1551 இல் திருகோணமலையில் ஆட்சி செய்த வன்னிபம் இறந்ததை தொடர்ந்து ஏற்பட்ட வாரிசு உரிமை தொடர்பான தகவல் உண்டு. திருகோணமலை வன்னிபத்தின் வாரிசு வயதில் இளையவனாக இருந்ததினால் திருகோணமலை வன்னிபத்தின் உறவினர்களில் ஒருவன் வன்னிபமாக பதவியேற்க முயற்சி செய்தான் என்றும் இதனை சங்கிலி மன்னன் தலையிட்டு நிறுத்த முயன்றபோது அவன் போர்த்துக்கேய படையின் உதவியை எதிர்பார்த்து கத்தோலிக்க மதத்திற்கு மாறினான் என்பதை ஆதாரப்படுத்துகின்றது. வன்னிமைகளிடம் காணப்பட்ட பரம்பரை ரீதியாக ஆட்சியாண்ட முறை திருகோணமலையிலும் காணப்பட்டதை உறுதி செய்கிறது. ஒல்லாந்து அதிகாரி ஃபான் சென்டனின் தினக்குறிப்பில் வன்னியனார் பற்றி குறிப்புண்டு.

தெடர்ந்து ஐரோப்பிய ஆவணத்தில் அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் ஆவணச் சுவடிகள் முக்கியத்துவம் வாய்ந்தது. 1815 இல் பிரதமநீதியரசர் அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் ஒல்லாந்து அரசாங்கம் தமிழர் வாழும் பகுதிகளுக்கென தொகுத்து சட்டமாக்கிய தேசவழமைகளின் பிரதிகளே இவையாகும். இதில் திருகோணமலைபற்று வன்னிமைகள் பற்றியும் அங்கிருந்த தேசவழமைகள் பற்றியும் அறிய முடிகின்றது. இமமாவட்டத்தை சேர்ந்த நான்கு வன்னிமைகளும் இவ்வாவண உருவாக்கத்தில் பங்குகொண்டு நடைமுறையில் இருந்த தேசவழமை பற்றி கூறியுள்ளனர். சுருக்கமானவை என்றாலும் இங்கு காணப்பட்ட தேசவழமை பற்றி சில முக்கிய அம்சங்களை அறிய முடிகின்றது.

இதில் சொத்துரிமை விதிகள், பரம்பரை சொத்துகள் மருமக்களை சேரும் என்ற திருகோணமலை வன்னிபங்களின் வழமைகள் பற்றி கூறுகின்றது. கட்டுக்குளபற்று, கொட்டியாரப்பற்று, தடபலகாமப்பற்று என்பன முக்குவர் வழமையும் திருகோணமலைப்பற்று யாழ்பாணத்தை ஒத்த தேசவழமையும் கொண்டிருந்தன.

குடிமக்கள் வன்னிபத்திற்கு அறிவித்தபின் காடுகளை அழித்து குடியேறவும் தோட்டமாக்கவும் அனுமதி பெற்றனர். இதனை விற்கவும் அடமானம் வைக்கவும் சீதனமாக கொடுக்கவும் நிலங்கள் மீது உரிமை கொண்டனர் என்ற கோட்பாடு திருகோணமலை வன்னிமைகளில் நிலவியதை இதன் மூலம் அறிய முடிகின்றது.

திருமணம் பெற்றோர்களால் பேசி தீரமானிக்கப்படும் வழக்கம் காணப்பட்டபோதிலும் வன்னிபத்திற்கு இது தொடர்பில் முன்கூட்டியே அறிவித்து அவர் முன்னிலையில் திருமண ஒப்பந்தம்  எழுதிக்கொள்ளவேண்டும். மனமக்கள் தங்கள் வாக்குறதியை மீறினால் குற்றப்பணம் கொடுக்கவும் தண்டனை பெறவும் உத்தரவாதம் செய்யும் வழக்கம் காணப்பட்டது.

தாலி அணியும் வழக்கமும் சீதனம் கொடுக்கும் முறையும் காணப்பட்டுள்ளது. கத்தோலிக்க, இஸ்லாமிய திருமணங்களும் வன்னியனார் முன்னிலையிலே இடம்பெற்றது. இவற்றுடன் இவ்வாவணங்களில் அடிமைமுறை பற்றிய பதிவுகள் உண்டு. எசமானின் நிலங்களில் வேலை செய்யும் இவர்களுக்கு உணவு, கூலி கொடுக்கவேண்டும். மெய்ப்பாதுகாவலர்களாவும் இருந்ததற்கான ஆதாரம் இவ்வாணங்களில் உண்டு. 

இவ்வாணத்தில் வயல் நிலங்கள், தோட்டங்கள் என்பனவற்றில் இருந்து பெறப்படும் வருமானத்தில் 10 வீதம்  கோணேசர் கோயிலுக்கு கொடுக்கப்பட வேண்டும் என கூறுகிறது. ஒல்லாந்தர் ஆட்சியில் வன்னிபங்களே தங்கள் பிரதேசத்தின் நிர்வாகங்களுக்கு பொறுப்பாகயிருந்தனர். வன்னிபங்களுக்கும் ஒல்லாந்தர்களுக்கும் இடையே வரி தொடர்பான உடன்பாடும் ஏற்பட்டிருந்தது. 1815.04.10 அறிக்கையில் இடம்பெறும் தேசவழமைகளை வரலாற்றாதாரமாக கொள்ளமுடியும்.   

120 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட உறுதி அண்மையில் கிடைக்கப்பெற்றன. 1893.06.05 எழுதப்பட்ட உயிலில் திருகோணமலையின் கொட்டியாரப்பற்றில் மேன்காமத்தில் வசித்த இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தினால் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தொழும்புகள் பற்றி ஒரு நியமன உறுதி முடித்துகொடுக்கப்பட்டதை சொல்கிறது. திருகோணமலை பிராந்திய தமிழ்ர்களின் வரலாற்றாதாரங்களில் இது முக்கிய ஆவணமாகும்.

போத்துகேயரால் திருகோணேச்சரம் அழிக்கப்பட்ட பின் அங்கிருந்த விக்கிரகங்கள் தம்பலகாமத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு ஆதிகோணநாயகர் ஆலயம் உருவானது. தம்பசிட்டி, வியாபாரிமூலையில் கிடைக்கப்பட்ட ஒல்லாந்த அரச முத்திரையுடன் கூடிய தோம்புகளின் அடிப்படையில் இவ்வாலயம் ஏனைய வன்னிப்பிரிவுடன் சேர்ந்த 33 ஊரவர் கொண்டாடும் கோயிலாக மாறியது.   

குறுநில மன்னர்களின் பதவியை குறிக்கும் வன்னிமை, வன்னியம், வன்னியன், வன்னிராசன் என்னும் சொற்கள் சோழராட்சியின் விளைவால் பரவின. தலைவர்களை வன்னி, வன்னிராஜா எனக்கூறும் மரபு காணப்பட்டது. சூளவம்சம் மற்றும் சில சிங்கள நூல்களிலும் வன்னியர் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. முடிமன்னருக்கும் வன்னியர்களுக்கும் மரபு மற்றும் சம்பிரதாய ரீயிலான தொடர்கள் காணப்பட்டுள்ளன.

மன்னரை போன்ற சகல அதிகாரங்களும் காணப்பட்டபோதிலும் இவர்கள் அபிஷேகம் செய்து முடிகொள்ளவில்லை. வன்னிபங்கள் முடிசூடாத மன்னர்கள் ஆவார். தம்மீது மேலாதிக்கம் கொண்ட மன்னனுக்கு திறை செலுத்துதல், அரசியல் விழாக்களில் கலந்துக்கொள்ளல், தேவைப்படும்போது படையினரை வழங்குதல் போன்ற கடமைகளை இவர்கள் செய்தனர்.

2 ஆம் பராக்கிரமபாகு வடமத்திய, உறுகுணையில் இருந்த வன்னியரிடம் திறை பெற்றாக அறிய முடிகின்றது. 1672 இல் செனரத் மன்னன் நடாத்திய குமாரசிங்கனின் அஸ்தானத்திற்கு கொட்டியாரபற்று வன்னிமை தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 1762 கண்டி மன்னனை காணவந்த பைபஸ் என்னும் தூதுவனை கொட்டியாரத்தில் இறக்கி கண்டிக்கு அழைத்துவந்தனர்.

பைபஸின் நாட்குறிப்பின் மூலம் மூதூர் மாவட்டத்தில் 64 கிராமங்கள் காணப்பட்டதாகவும் இவை 3 கிராம தலைவர்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டதாவும் அவை கண்டி திசாவையின் கீழ் இயங்குவதாக குறிப்பிட்டுள்ளார். கண்டியை கைப்பற்றிய ஆங்கிலேயர் கண்டிமக்களின் தேசியவுணர்வை பிரிக்க தீகவாவி உள்ளடக்கிய புதிய மாவட்ட அலகுகள் உருவாக்கப்பட்டன. போர்த்துக்கேயர்கள் படைப்பு மூலம் இவர்கள் இடம்பெயர்ந்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இவர்களின் நிலங்கள் கைப்பற்றப்பட்டன.

உசாத்துணை

  1. பத்மநாதன்.சி., 2002, இலங்கை தமிழர் தேசவழமைகளும் சமூக வழமைகளும், குமாரன் புத்தக இல்லம்.
  2. பத்மநாதன்.சி.,2013, இலங்கை தமிழ் சாசனங்கள் - ii, இந்து சமய கலாசார திணைக்களம். (பக் 343 – 412)
  3. http://noolaham.net/project/02/196/196.htm

- சர்மிளாதேவி