இந்தியக் கலைகள் குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. இந்திய சிற்பக் கலை ஆரிய மக்களால் வளர்க்கப்பட்டுள்ளது எனத் தவறான வரலாறு ஆங்கில நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்திய சிற்பக்கலை திராவிட மக்களின் திறமையால் வளர்க்கப்பட்டது என்னும் உண்மை மறைக்கப்படுகிறது. எனவே, இந்தியக் கலைகள் குறித்த உண்மை வரலாறுகளை வெளிக்கொணர பழைய தமிழ் நூல்களை ஆய்வு செய்து, தமிழிலேயே வெளியிட வேண்டும். தமிழ் மக்கள் தமது பண்டைய வரலாற்றுச் சிறப்புக்களை கற்றறிய வேண்டும் என்பதை வலியுறுத்தினார் ‘கலைப்புலவர்’ எனப் போற்றப்படும் க. ரத்தினம்.

Kalaipulavar Navarathinamயாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த த. கந்தையாப்பிள்ளை- பொன்னம்மாள் வாழ்விணையருக்கு மகனாக 15.09.1898 அன்று பிறந்தார். வெஸ்லியன் மிஷனால் நடத்தப்பட்ட தமிழ்ப்பாட சாலையில் தமது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்தார். கொழும்பிலுள்ள வர்த்தகக் கல்லூரியில் பயின்று வர்த்தகக் கல்வியில் பட்டம் பெற்றார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 1920 ஆம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்து 1958 வரை பணியாற்றினார்.

யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் வர்த்தகக் கற்கை நெறியை ஆரம்பித்தார். கல்லூரியின் நூலக வளர்ச்சிக்கும், சித்திர கைவேலை முதலியவற்றின் வளர்ச்சிக்கும் பாடுபட்டார்.

மகேஸ்வரிதேவி என்பவரை 1934 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவரது மனைவி மகேஸ்வரிதேவி மருதனார்மடம் இராமநாதன் உயர் கல்லூரியில் கல்வி பயின்றவர். தமது உயர் கல்வியை கொல்கத்தாவில் உள்ள சாந்தி நிகேதனில் மகாகவி இரவீந்திரநாத் தாகூரிடமும், தமிழ்நாட்டுத் தாகூர் எனப் போற்றப்பட்ட ஸ்ரீலெட்சுமணப்பிள்ளையிடமும் பயின்றார். மகேஸ்வரிதேவி வங்களாத்திற்குச் சென்று கல்வி பயின்ற தமிழ் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர், இந்திய இசையின் முதல் நூல், வீணை கற்றல் ஆகிய இசை நூல்களை எழுதி அளித்துள்ளார்.

க. நவரத்தினம், தமிழ்க் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்துதல், தமிழ் மக்கள் அனைவரும் அவற்றை அறிந்திடச் செய்தல், திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை தமிழ் நூல்களின் வாயிலாக ஆய்வு செய்து உண்மை வரலாற்றைக் கூறுதல் ஆகிய நோக்கங்களை தமது கலை வரலாற்று எழுத்தியலுடனும், தமிழ் மொழியினூடும் கட்டமைத்தார்.

பண்டைக் காலம் முதல் இந்திய நாட்டிற்கும் இலங்கைக்கும் சமயம், சமூகம். கலாச்சாரம் ஆகிய துறைகளில் மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தமையினால் இலங்கையின் கலைகளில் இந்தியக் கலைகளின் அம்சங்கள் பல காண முடியும்.

நெசவுத் தொழில், ஆபரணத் தொழில், உலோக வேலைகள் போன்றவற்றை மீண்டும் மறுமலர்;ச்சி பெறச் செய்திட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘யாழ்ப்பாணக் கலைகளும் கைப்பணிகளும்’ எனும் கட்டுரையை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார்.

ஓவியம், சிற்பம், இசை போன்றவற்றிற்கு அளித்த முக்கியத்துவம் கட்டிடக் கலைக்கோ, நடனக் கலைக்கோ வழங்கப்படவில்லை. மேலும், கிராமியக் கலை வடிவங்கள் பற்றியோ, நாடகங்கள், கூத்துக்கள் பற்றியோ ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இருபதாம் நூற்றாண்டில் கலை வளர்த்த நிறுவனங்களாக நாடக சபாக்கள், குழுக்கள் விளங்கின. இசை நாடக மரபினைப் பேணிய நிலையங்களுள் ஒன்றாக ‘சரஸ்வதி விலாசகான சபா’ விளங்கியது. இந்நிலையம் 05.12.1930 அன்று துவக்கப்பட்டது.

இலக்கியம், தத்துவம், ஓவியம், நாகரிகம், வரலாறு இவற்றில் இந்தியாவும் இலங்கையும் அடைந்த முன்னேற்றங்களை, வளர்ச்சிகளை ஆராய்ந்தறிதல், இவற்றை இக்கால ஆராய்ச்சி முறையில் விளக்குதல். கலைகளின் புத்துயிர்ப்புக்கும், நாட்டின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் முயற்சி மேற்கொள்ளுதல் முதலியவற்றை முக்கிய நோக்கங்களாக ‘சரஸ்வதி விலாசகான சபை’ கொண்டிருந்தது. இந்த நிலையத்தின் செயலாளராக க. நவரத்தினம் செயற்பட்டார்.

இந்த நிலையத்தில் இலக்கியம், தத்துவம், சமயம், பொருளாதாரம் போன்றவற்றில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்த நிலையத்தின் மூலம், ‘ஞாயிறு’ எனும் தமிழ் இதழ் இரு திங்களுக்கொரு முறை வெளியிடப்பட்டது.

இந்நிலையத்தில் சு. நடேசுப்பிள்ளை, வி. இராமசாமி சர்மா, சி. கணேசையர், சுவாமி ஞானப்பிரகாசர், த. குமாரசாமிப்பிள்ளை, சி.முருகையர், சி.எஸ். கணபதி அய்யர், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், பண்டிதர் சி. கணபதிபிள்ளை, சுவாமி விபுலானந்தர் முதலிய தமிழறிஞர்கள் விரிவுரை நிகழ்த்தினார்கள்.

“இந்திய சிற்பக் கலையினது வனப்பைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல்கள் பல ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கின்றன. அவ்ஆங்கில நூல்களின் ஆராய்ச்சி முறைகளைப் பின்பற்றத் தமிழில் சிற்பக் கலையினை குறித்து ஒரு நூல் எழுதப்படின் அது தமிழ்மொழி அறிவு ஒன்றே உடையவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்” என ‘தென்னிந்திய சிற்ப வடிவங்கள்’ என்னும் நூலின் உருவாக்கம் பற்றி க. நவரத்தினம் குறிப்பிட்டுள்ளார்.

க. நவரத்தினம் எழுதிய, ‘இலங்கையிற் கலை வளர்ச்சி’ என்னும் நூல் 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்நூல் வெளியீட்டு விழாவில் க. நவரத்தினத்திற்கு ‘கலைப்புலவர்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

இலங்கையில் உள்ள கண்டியில் 1943 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வமத கோட்பாடுகளின் மாநாட்டில் ‘சைவ சித்தாந்தம்’ பற்றி விரிவுரை நிகழ்த்தினார்.

புதுடெல்லியில் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய எழுத்தாளர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு, “சமயம் நிலைத்து நிற்க வேண்டுமானால் நவீன பண்பாட்டிற்குத் தக்கபடி அதில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். மனித குல சகோதரத்துவத்தை ஏற்படுத்தவும், மனிதர்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் இணக்கத்தையும் உண்டாக்கவும் சமயம் உதவுதல் வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.

கலைப்புலவர் க. நவரத்தினம் சமூகத்தில் அக்காலத்தில் நிலவிய சீர்;கோடுகளை துணிவுடன் சுட்டிக்காட்டியதுடன், அவற்றைக் களைந்திடும் செயலிலும் ஈடுபட்டார். தீண்டாமையைக் கண்டித்தும், மது ஒழிப்பினை வலியுறுத்தியும் ஈழகேசரி, வீரகேசரி, இந்து சாதனம் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

ஆனைப்பகுதியில் 1920 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒரு பள்ளியை ஆரம்பித்து, சம வாய்ப்பு அளித்த விபுலானந்த அடிகளாருடன் இணைந்து பாடுபட்டார்.

தமிழ்நாட்டில் கலை வளர்ச்சி, இலங்கையில் கலை வளர்ச்சி, இந்திய ஓவியங்கள், நாவலர் கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை, சி. கணேசையர், நடராஜ் வடிவம் முதலிய தலைப்புகளில் க. நவரத்தினம் வானொலியில் உரை நிகழ்த்தியுள்ளார்.

இலங்கையில் வடமாகாண மதுவிலக்குச் சபை, கைத்தொழில் கண்காட்சி திட்டக்குழு, யாழ்ப்பாண கலை கைப்பணிகள் கழகம், யாழ்ப்பாண நூதன கலை ஆலோசனைக்குழு, இலங்கை அரசின் கலைக் கழக சிற்ப ஓவியப் பிரிவு முதலிய அமைப்புகளில் அங்கம் வகித்து செயற்பட்டார்.

கலைப்புலவர் க. நவரத்தினம், இந்திய ஓவியங்கள், இலங்கையில் கலை வளர்ச்சி, யாழ்ப்பாணக் கலையும் கைப்பணியும்; முதலிய கலை குறித்த நூல்களையும், கணக்குப் பதிவு நூல், உயர்தர கணக்குப் பதிவு நூல், இக்கால வாணிப முறை முதலிய பாட நூல்களையும் எழுதி அளித்துள்ளார். மேலும் மதம், கலாசாரம், கலை குறித்து ஒன்பது ஆங்கில நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

கலைப்புலவர் க. நவரத்தினம் தமது அறுபத்து நான்காவது வயதில் 1962 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். 

- பி.தயாளன்

Pin It