வீதி நாடகக் கலைஞன் சப்தர் ஹஷ்மி டெல்லியில் காங்கிரஸ் ரௌடிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதி ஊர்வலக் காட்சிகளும், அவர் படுகொலை செய்யப்பட்டபோது எழுந்த கண்டன முழக்கங்களும் அடங்கிய ஆவணப் படம் வெளிவந்தது. அதில் ஒரு மனிதர் இந்தக் கொடூரக் கொலைக்கு எதிராகத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அந்த இறுதி ஊர்வலக் காட்சியிலும் அவர் முதல் வரிசையில் இருந்தார். அவர்தான் ஹபீப் தன்வீர். அப்போதுதான் எனக்கு தன்வீரின் தரிசனம் முதன்முதலில் கிட்டியது. இது நடந்து 16 ஆண்டுகளைக் கடந்தாயிற்று. ஹபீப் தன்வீர் மரணம் எனும் செய்தியை அறிந்த மாத்திரத்தில் சப்தர் ஹஷ்மி கொலைக்கு எதிரான அவரது கோபமும், தளுதளுப்பும் கலந்த அந்தக் கண்டனக் குரல் இத்தனை வருடங்களுக்குப் பின்னரும்கூட நம் செவிகளில், நினைவில் மீண்டுமொருமுறை ஒலிப்பதை உணர முடிந்தது.

Habib Tanvirபோர்க்குணம் நிறைந்த ஹபீப் 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல்நாள், இன்றைய சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் பிறந்தார். அவரது இயற்பெயர் ஹபீப் அகமது கான். ஹபீபின் தந்தை ஹஃபீஸ் அகமது கான் பாகிஸ்தானின் பெஷாவரிலிருந்து வந்து குடியேறியவராவார்.

மிக இளம் வயதிலேயே கவிதைகள் எழுதும் ஆர்வம் அவருக்கு மிகுந்திருந்தது. அவர் அப்போது தனக்குத்தானே சூட்டிக்கொண்ட புனைபெயர் தான் தன்வீர். விரைவிலேயே அவர் ஹபீப் தன்வீர் என்றே அறியப்பட்டார். கவிஞர் தன்வீருக்கு 1945ல் மும்பை நகரில் அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தயாரிப்பாளர் வேலை கிடைத்தது. மும்பையிலிருந்தபோது இந்தித் திரைப்படங்களில் பாடல்கள் எழுதும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. சில படங்களில் அவர் முகம் காட்டவும் செய்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும், இந்திய மக்கள் நாடகக் கழகத்திலும் தன்னை மனமுவந்து இணைத்துக் கொண்டார் ஹபீப். பின்னாளில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிரான நடவடிக்கைகளால் ‘இப்டா’வின் முன்னணித் தலைவர்கள் சிறை செல்ல நேர்ந்தபோது ஹபீப் தன்வீர் அந்த இயக்கத்தைத் தலைமையேற்று வழி நடத்தும் அரிய பணியினைச் செய்தார்.

ஹபீப் நாடகத் துறையில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொள்ளும் திருப்பம் அவரது வாழ்வில் 1954ல் ஏற்பட்டது. அந்த ஆண்டில் டில்லிக்கு இடம் பெயர்ந்தார் ஹபீப். அங்கு அவர் குத்சியா ஜாய்தியின் ஹிந்துஸ்தானி தியேட்டரிலும், குழந்தைகள் நாடக அரங்கிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஏராளமான நாடகங்களை எழுதினார். இந்தச் சமயத்தில்தான் இயக்குநரும், நடிகையுமான மோனிகா மிஸ்ராவை ஹபீப் சந்திக்க நேர்ந்தது. காதலாக அது கனிந்து, பின்னர் திருமணத்தில் நிறைவுற்றது. அதே வருடம்தான் தன்வீரின் முதல் குறிப்பிடத்தக்க பிரபல நாடகம் ‘ஆக்ரா பஜார்’ உருவானது. 18ம் நூற்றாண்டின் மிர்ஜா காலீப் தலைமுறையைச் சேர்ந்த மூத்த உருதுக் கவிஞரான நசீர் அக்பரா பாதியின் காலத்தையும் அவரது பங்களிப்பினையும் பற்றிய இந்த நாடகத்தில் தான் தன்வீர் இந்திய நாடக மேடை சந்தித்திராத ஒரு புதுமையைத் துணிந்து முயன்று பார்த்தார்.

கலை உலகம் காலத்திற்கும் தம்மை நினைவு கொண்டு போற்றும் என்று இதனைச் செய்கிறபோது அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். இந்த நாடகத்தில்தான் அவர் முதன் முதலில் நாடகக் கலைஞர்கள் அல்லாத உள்ளூர் குடியிருப்புவாசிகளை நடிக்கவைத்து ஒரு சோதனை முயற்சி செய்தார். அதோடு, டில்லிக்கு அருகிலிருக்கும் ஓக்லா கிராமத்தின் கிராமியக் கலைஞர்களை இந்த நாடகத்தில் இணைத்துக் கொண்டார். மேலும், ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்களையும் இந்த நாடகத்தில் ஈடுபடுத்தினார். இப்படியொரு புதிய பலவண்ணக் கலவையை இந்த நாடகத்தில் அவர் முயன்று பார்த்தது, பின்னாளில் இது தனது ஜன்மபூமியான சத்தீஸ்கரின் நாட்டார் கலைஞர்களை நாடகத்திற்கு அழைத்துவர அவருக்கு ஊக்கமளித்தது.

ஹபீப் தனது 30 ஆம் வயதில், 1955ல் இங்கிலாந்து சென்றார். அங்கு ராயல் அகாடமி ஆஃப் டிரமாட்டிக் ஆர்ட்ஸ்-ல் நடிப்புப் பயிற்சி பெற்றார். பிரிஸ்டல் ஓல்டு விக் தியேட்டரில் இயக்குநர் பயிற்சி பெற்றார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து பல்வேறு நாடக அரங்கங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும் நேரில் கண்டார். இந்தப் பயணத்தின் சிகரம் என்று அவர் பெர்லின் நகரில் 8 மாதங்கள் தங்கியிருந்தைச் சொல்லலாம். 1956ல் அங்கு அவர் உலக நாடக மேதை பெர்ட்டோல்ட் பிரக்ட் அவர்களின் பல நாடகங்களை நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பைப் பெற்றார். இந்திய நாடக உலகின் மிக முக்கிய ஆளுமையாக தன்வீர் உயர்வதற்கு இந்த நிகழ்வுகள் அவருக்குப் பேருதவி செய்தன.

தன்வீர் தனது நாடகங்களில் எளிய மக்களின் சொலவடைகள்’ அவர்களின் பண்பாட்டைப் பறையறிவிக்கும் நாட்டார் கதைகள் போன்றவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தினார். 1958 முதல் அவர் முழு நேர நாடக இயக்குநராகத் தீவிரமாக இயங்கினார். புதிய பார்வை கொண்ட நாடகங்களை வழங்குவதைக் குறிக்கும் ‘நயா தியேட்டர்’ அவரால் துவங்கப் பட்டது. அவரது காதல் மனைவி மோனிகா மிஸ்ராவுடன் இணைந்து 1959ல் மத்தியப் பிரதேசம் போபாலில் இதனைத் தொடங்கினார். 1970-73 காலகட்டத்தில் ஹிந்தி மொழியிலிருந்து மாறி, பிரதேச மொழியான சத்தீஸ்காரி மொழியில் தனது நாடகங்களை உருவாக்கத் துவங்கினார் தன்வீர்.

இந்திய நாடகத்துறையில் புதிய தடத்தை ஏற்படுத்திய அவரின் ‘சரண்தாஸ் சோர்’ 1975ல் அரங்கேறியது. இதனை பிரபல புதுமை இயக்குநர் ஷியாம் பெனகல் திரைப்படமாக்கினார். சப்தர் ஹஷ்மியின் வேண்டுகோளுக்கிணங்க ஹஷ்மியின் ஜனநாட்டிய மஞ்ச்க்காக ‘மோத்தி ராம் கா சத்யாகிரஹா’வை 1980ல் ஹபீப் இயக்கினார். ரிச்சர்ட் அட்டன் பரோவின் ‘காந்தி’ திரைப்படம் உள்ளிட்ட 9 திரைப்படங்களில் ஹபீப் நடித்துள்ளார். போபால் விஷவாயுத் துயரம் குறித்த படத்திலும் அவர் தோன்றியுள்ளார்.

Habib Tanvirமத மூட நம்பிக்கைகளைச் சாடிய அவரது ‘போங்கா பண்டிட்’ மதவெறியர்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. 1960களிலிருந்து இந்த நாடகம் நடத்தப்பட்டுவந்தாலும் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் இந்த நாடகம் மதவெறியர்களின் கடும் தொந்தரவுகளைச் சந்தித்தது. அரங்கங்களின் பார்வையாளர்கள் அடித்து விரட்டப்பட்டனர். ஹபீப் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களால் மிரட்டப்பட்டார். பேச்சுரிமை-கருத்துரிமை மீது நம்பிக்கை கொண்ட ஜனநாயகக் கலைஞர் தன்வீர் மனம் தளராமல் தனது நாடகத்தை தொடர்ந்து நடத்தினார்.

1992ல் அவரது ‘ஜிஸ்ரே லாகூர் நஹின் தேக்கியா’ மிகச் சிறந்த படைப்பாகப் பேசப்பட்டது. இது ‘லாகூரைக் காணாதவன் பிறந்தென்ன பயன்?’ எனும் வட மேற்கு நாட்டார் சொலவடையைத் தலைப்பாகக் கொண்ட அரிய படைப்பாகும்.

‘நாடகம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய தன்வீர் இறுதி வரையில் தன்னை ஒரு போர்க்குணம் மிக்க இடதுசாரி சிந்தனையாளராகவே அடையாளப்படுத்திக் கொண்டவராவார். தனது தாய் மண் சத்தீஸ்கரில் கால் பதித்து, உலகப் பரப்பெங்கும் உள்ள எளிய, உழைப்பாளி மக்களை நேசித்த மா கலைஞன் அவர்.

ஒரிசாவில் கிறிஸ்தவ மக்கள் தாக்குதலுக்குள்ளானபோது, அதனைக் கண்டித்து ஜனாதிபதி மாளிகை முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கம்பீரமாகப் பங்கேற்றார். தானொரு மக்கள் போராளி என்பதை ஹபீப் இறுதி வரையில் உலகுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தார். இந்திய நாடக அரங்கை உலகின் கவனத்தைப்பெறும் அளவு புரட்டிப்போட்ட அந்தப் புதுமைமிகு முற்போக்குக் கலைஞனை தமிழக முற்போக்கு முகாம் எந்தளவு போற்றி, பயன்படுத்திக்கொண்டது என்ற கேள்வி நெஞ்சில் எழுந்து, கனத்த மௌனத்தையே பதிலாகப்பெறுகிற சோகம், சோம்பல் மண்டிய நம் கடந்த காலத்திற்கு சாட்சியமளிக்கிறதா இல்லையா? 

- சோழ.நாகராஜன்

Pin It