இந்திய வரலாற்று வரைவியலில் பணம் / காசு பற்றிய ஆய்வு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடந்துகொண்டுள்ளது. ஜேம்ஸ் ப்ரின்செப்பின் காசு பற்றிய பார்வைதான் இந்திய வரலாற்றினைப் புதிய ஆய்வுமுறையில் எழுத வழிவிட்டது. இந்தி யாவில் இருவகைகளில் பழங்காசுகள் கிடைத் துள்ளன: புதையல்காசுகள்; தனித்தனியே கண்டெடுக்கப்படும் காசுகள். புதையல்காசுகள் கண் டெடுக்கப்பட்ட இடங்களைக் கருத்தில்கொண்டு வணிகப்பாதைகளை ஓரளவிற்கு அனுமானிக்கலாம். தென்னகத்தில் காசுபுதையல்கள் (Hoard coins) அரண் மனை வளாகங்களிலோ, கோட்டை கொத்தளங் களிலோ, கோயில் வளாகங்களிலோ கிடைக்க வில்லை. வணிகநகரங்களிலோ, துறைமுகநகரங் களிலோ கிடைக்கவில்லை. தமிழகத்திலும் இதே நிலைதான். சிதறலாகக் கிடைத்த காசுகளைவிட புதையல்களில் கிடைத்த காசுகளே மொத்தமாக ஒரே இடத்தில் அதிகமாகக் கிடைத்திருப்பதால் இடைக்காலத்து வரலாற்றில் காசுகள் பெரும் பாலும் தனியாரிடமே புழக்கத்தில் இருந்துள்ளன என்று கருதலாம்.

சில இடங்களில் மட்டும் குவியல் களாகக் கிடைத்திருப்பதால் இவை பரவலாகப் புழக்கத்தில் இல்லை என்றும் கொள்ளலாம். தமிழகத்தில் சோழமண்டலத்தில் காவிரிச் சம வெளியில் காசுகுவியல்கள் கிடைக்கவில்லை. இடைக் காலத்தில் மக்கள்நெருக்கம் இல்லாத நிலப்பரப்பு களான கொங்கு, பட்டுக்கோட்டை போன்ற பகுதி களிலேயே கிடைத்துள்ளன. இவை வணிகவழி களைக் கொண்டிருப்பன. காவிரிச்சமவெளியில் காசுகள் அதிகமாகக் கிடைக்காமைக்குக் காரணம் அங்கு உலோகங்கள் பெரும்பாலும் படிமக்கலைக்குப் பயன்படுத்தப்பட்டதால் இருக்கலாம். வறண்ட புதுக்கோட்டைப் பகுதியில் முப்பது வகையான காசுகள் புழக்கத்தில் இருந்துள்ளன என்பதனைக் கல்வெட்டுகள் பதித்துள்ளன. ஆனால், புதுக் கோட்டை தொண்டைமான்அரசு வெளியிட்ட அம்மன்காசினைத்தவிர முக்கிய வரலாற்றுச் சம்பவத் தினைக் கோடுகாட்டும்படியான வரலாற்றுக் காலத்திய காசுகள் எதுவும் இதுவரை இவ்வட்டா ரத்தில் கிடைக்கவில்லை.

ஒரு வறண்டபகுதியில் இத்தனை வகையான காசுகள் ஏன் புழக்கத்தில் இருந்தன என்ற கேள்வி எழ வேண்டும். ஆனால், ஆய்நூற்றுவர், வளஞ்சியர் போன்ற வணிகக் குழுக்கள் இவ்வட்டாரத்தில் இயங்கியுள்ளன. இவர்களைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் பரவலாகக் கிடைத்துள்ளன. காலனியகாலத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் பணத்தில் பலம்கொண்ட வணிகர்களாகத் தொழில் செய்த நாட்டுக்கோட்டை செட்டியார்களின் பூர்வீகம் புதுக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இக்கட்டுரையில் காசுகளைக் குறிக்கப் பணம் என்ற பொதுச்சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பணத்தினை மக்கள் மதித்தனர் என்றும் சொல்லலாம்; மதிக்கவில்லை என்றும் சொல்லலாம். இன்றும்கூட உழைப்போர் காசுகளைக் கோயில் போன்ற இடங்களில் புனித நீர்நிலைகளில் வீசி எறிவர்; செல்வர் கல்லாப்பெட்டியில் சேமிப்பர். இப்படித் தான் பணம் புதையல்களாக்கப்பட்டிருக்கும்.

பணம் : பெயர்கள்

பொன், துளைப்பொன், கலிபொன், காசு, நல்காசு, நற்காசு, அன்றாடு நற்காசு, அன்றாடு நற்புதுக்காசு, பழங்காசு, அன்றாடு நற்பழங்காசு, பணம், அன்றாடு வராகன்பணம், பஞ்சசலாகை, பஞ்சசலாகை அச்சு, இராசிபணம், இராசபணம், செண்பககுளிகை பணம், வாளால்வழிதிறந்தான் குளிகைபணம், அன்றாடு வழங்கும்பணம், அன்றாடு வழங்கிய வராகன்பணம், ஆடூரபணம், ஆடுர வெட்டு, வாளால் வழிதிறந்தான்பணம், வாளால் வழிதிறந்தான் குளிகை பொன், சக்கரம்பணம், அன்றாடு வழங்கும் சக்கரம்பணம், அச்சுவரிக்காசு, புள்ளிக்குளிகை வராகன், சிற்றிராசிபணம், திருக் கோகர்ணம் மின்னல்பணம் போன்ற சொற்களால் பணம் இவ்வட்டாரக் கல்வெட்டுகளில் பதிக்கப் பட்டுள்ளது.

பணம் : வகை

இவ்வட்டாரத்தில் இருமுறைகளில் காசுகள் உருவாக்கப்பட்டுள்ளன : அச்சுக்காசு; வெட்டுக் காசு. முதலாவது cost coins என்றும் - அதாவது, வார்க்கப்பட்ட காசுகள் என்றும் வெட்டுக்காசு என்பது Punched coins என்றும் கருதலாம். காட்டு: பஞ்சசலாகை அச்சு; ஆடூர வெட்டு.

பணம் புழங்கும்வட்டம் (Area of Money circulation)

தொடக்கத்தில் உள்ளூர்க்காரர்களே உள்ளூரில் ஒருவரைச்சாத்தி பணத்தினை இட்டுக் கோயில் விழாவினையும் பிற கொண்டாட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஆனால், காலம் செல்லச் செல்ல ஒரு கூற்றத்திலிருக்கும் தனியார் பிறிதொரு கூற்றத்தி லிருந்த இன்னொரு தனியார்வசம் பணத்தினைக் கோயிலுக்காகக் கொடுத்துள்ளனர். ஒல்லையூர் கூற்றத்திலிருந்து முற்றூற்றுக் கூற்றத்திற்கு இப்படிப் பணப்புழக்கம் விரிந்துள்ளது. உறையூர்க் கூற்றத்துப் புலிவலத்துஅரங்கன் இவ்வட்டாரத்தில் உள்ள ஒரு கோயிலில் பணம் வைத்துள்ளான். கி.பி.1206-இல் ராஜேந்திர வளநாட்டுத் திருவால நாட்டின் தனியார் ஒருவர் திருவிளாங்குடி கோயிலில் நொந்தா விளக்கிற்குப் பண்டாரத்தே காசு இருபத்துநாலு வைத்துள்ளார். பணம் இப்படி ஒருவருக்கு, நாடு விட்டு நாடு தாண்டி உறவினை ஏற்படுத்தியுள்ளது. திருநலக்குன்றத்தின் கைக்கோலர் ஒருவன் திருச்சிராப் பள்ளியின் உடையானாக இருப்பவனுடன் பணப் புழக்கம் கொண்டிருக்கிறான். படைத்தலைவன் நிலையிலிருந்த மலைமண்டலத்தினை (present Kerala state) ஊராகக் கொண்ட நாட்டு அரையன் ஒருவன் இவ்வட்டாரத்துக் கோயில் ஒன்றில் அமுது படிக்குப் பழங்காசு இருபது வைத்துள்ளான்.

பணம் புழங்கியவர்கள்

மதிப்புறு பட்டப் பெயர்களான எட்டி, கிழவன், உடையான், கண்டன், நாடாழ்வான், அரையன், குடையான், கடம்பரையன், பல்ல வரையன், மூவேந்தவேளான், விழுப்பரையன், தென்னவதரையன், முனையதரையன் வாணவ தரையன், காங்கேயராயர் போன்றவர்களே பணப் புழக்கத்தில் பெரிதும் ஈடுபட்டிருந்தனர் என்று அறியமுடிகிறது. மாவலி வாணாதிராயர், காங்கேய ராயர், நிஷதராஜன் போன்ற வட்டாரத் தலைவர் களும் புழங்கியுள்ளனர். அரசுமக்கள், மறமுதலிகள் போன்று இனக்குழுக்களைத் தலைமையேற்று நடத்தியவர்களும், கைக்கோலர், இரதகாரர் போன்று தொழில்சார் குழுமத்தினரும் பணப்புழக்கத்தில் ஈடுபட்டிருந்தனர் என்று அறியமுடிகிறது.

கோயில் அலுவலர்களான கோயில் மெழுகு கின்ற தவசி,கணக்கு எழுதுபவர், கோயில்தானத்தார், கோயில்கணக்கு, ஸ்ரீ மாகேஸ்வர கண்காணி செய் வார், ஆதி சண்டேஸ்வரர், ஸ்ரீகார்யம் செய்பவர், தேவகன்மி போன்றவர்களும் இப்புழக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு சமூகத்தின் பலநிலை களில் இயங்கிவந்த மக்கள் பணப்புழக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சில குழல்களில் சில குழுக்களில் மட்டும் பணம் புழங்கியுள்ளது. இது கோயிலையும் கடவுளையும் முன்னிறுத்தி நிகழ்ந்துள்ளது. விருதுராஜ பயங்கர புரத்துநகரத்தார் தம்மைப் பெருங்குடி என்று விளித்துக் கொள்கின்றனர். ஆனால், கடவுளுக்குத் தம்மைக் குடிமக்கள் என்று அறிவிக்கின்றனர். பொருளியல் நிலையில் தம்மை நெடுக்காகவும், சமயநிலையில் தம்மைக் கிடையாகவும் கணித்துக் கொண்டனர் என்று அறியமுடிகிறது. தம்மைக் காக்கும் நாட்டு அரையர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் காசு இறுத்துள்ளனர். இங்கு, பணம் வணிகர்குழுமம், காவலர்குழுமங்களிடையே நிகழ்ந்துள்ளது. இங்குக் கடவுள் சாட்சியாக்கப் பட்டுள்ளார். கிபி 1117-இல் ஒரு ஊரிலுள்ள வெள்ளாளர் அதே ஊரிலுள்ள காணிஉரிமை யுடைய சிவபிராமணரிடம்தான் நாயனார் சந்தி விளக்கிற்குக் காசு இருபது இட்டுள்ளார். அதே யாண்டு இன்னொரு வெள்ளாளர், உடையான் பட்டம் கொண்டவர், கோயில்காணி உடைய சிவபிராமணரிடம் காசு இருபத்துஇரண்டு சந்தி விளக்கிற்கு அளித்துள்ளார். இப்படி இப்பணப் புழக்கம் நிலவுடைமையாளர்களுக்கும் சமயம் சார்ந்த குழுமத்திற்கும் இடையே நிகழ்ந்துள்ளது.

அலுவலகம்

ஒருவரிடமிருக்கும் பணத்தினைப் பிறிதொரு வருக்கு மாற்றித்தருவதற்கான ஒரு முகாண்மையாக ஆவணக்களரியும், பண்டாரமும் இயங்கியுள்ளன. இவை பெரும்பாலும் கோயில் நிறுவனங்களில் இயங்கியதாகக் கல்வெட்டுகளில் அறியலாம். பண்டாரத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டதனைப் பண்டாரத்தில் ஒடுக்குகொண்ட என்ற கல்வெட்டுத் தொடரால் அறியலாம். ஆவணக்களத்தே காட்டி என்ற தொடர் இதனை மேலும் விளக்கும். பண்டா ரத்தில் பணம் பெறப்பட்டது என்பதனைப் பண்டா ரத்தில் வாங்கின சக்கரம்பணம், ஸ்ரீ பண்டாரத்திலே கைக்கொண்ட போன்ற கல்வெட்டுத்தொடர்கள் விளக்கும்.

காலம் செல்லச் செல்ல இவற்றின் இயக்கம் அருகி வந்துள்ளதைப் போன்று தெரிகிறது. ஆவணக் களரியும், பண்டாரமும் வேறுவேறான அலுவலகம் போன்றும் கருதத் தோன்றுகிறது. இவை பணப் புழக்கத்தில் இயங்கியதனைப் பின்வரும் கல்வெட்டுத் தொடர்களால் அறியலாம் : பண்டாரத்து இட்ட, பண்டாரத்து ஒடுக்கின, ஸ்ரீ பண்டாரத்தே இட்ட காசு, ஆவணக்களத்தே காட்டேற்றி, ஸ்ரீ பண்டாரத்திலே ஊரார் தருவிக்க, ஸ்ரீ பண்டா ரத்தில் நாங்கள் வாங்கி, ஸ்ரீ பண்டாரத்து ஒடுக்க, ஸ்ரீ பண்டாரத்திலே கைக்கொண்டு, ஸ்ரீ பண்டா ரத்திலே ஒடுக்கு கொண்டு, ஸ்ரீ பண்டாரத்து இவனை மூன்று அச்சு ஒடுக்குவித்துக் கொண்டு, ஸ்ரீ பண்டாரங்களில் கொண்டகாசு, ஸ்ரீ பண்டா ரத்திலே ஒடுக்கின பணம், ஸ்ரீ பண்டாரத்திலே வாங்கின சக்கர பணம்.

நொந்தாவிளக்கு

தொடக்கத்தில் கோயிலில் நொந்தாவிளக்கு எரிப்பதற்காகத் தனியார் சிலரால் துளைப்பொன் என்ற பெயரில் காசு / பணம் இருப்பாக வைக்கப் பட்டன. இருப்பாக வைக்கப்பட்ட இக்காசுகள் வைத்த என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளன. கோயில்கள் நன்கு வளர்ந்த பொருளியல் நிறுவன மாக உருப்பெற்ற பிறகே ஸ்ரீபண்டாரத்திலே ஒடுக்கினகாசு, ஸ்ரீபண்டாரத்திலே இட்டகாசு, ஸ்ரீ பண்டாரத்திலே குடுத்துக்கொண்டகாசு போன்ற தொடர்கள் பதிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் கோயிலில் நொந்தாவிளக்கு எரிப்பதற்காகத் தனி யாரால் வைக்கப்பட்ட துளைப்பொன் பிறிதொரு தனியாரைச் சார்த்தி வைக்கப்பட்டுள்ளது. காசினைப் பெற்றுக்கொண்டவர்கள் அவ்விளக்கினை எரிப் பதற்கு ஒப்புக்கொண்டனர். காசினைத் தொடக்கத்தில் வழங்கியவர்கள் முத்தரையர், இருக்குவேள் போன்ற குரிசில் குடும்பத்தின் நபர்களாக இருந் துள்ளனர்.

காட்டாக, முத்தரையர் நம்பியான தொங்கலார் மகளார் நொந்தாவிளக்கு ஒன்றிற்குப் பொன் இரு கழஞ்சரை துளைப்பொன் இரண்டு வைத்துள்ளனர். இருக்குவேள் குரிசில் குடும்பத்தின் செம்பியன் இருக்குவேளின் மனைவியார் தேவியார் நங்கை நொந்தாவிளக்கு ஒன்றுக்குத் துளைப்பொன் ஒரு கழஞ்சரை வைத்துள்ளார். நக்கன் என்ற முன் னொட்டினைக் கொண்ட நபர்களும் பணப் புழக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வணிகத் தோடு தொடர்புடையவர்கள். இதனை உறுதி செய்வது போல் கல்குறிச்சி வரகுணவதி அரையன் ஆன நக்கன்செட்டி கோகர்ணத்து மாதேவர்க்கு நொந்தாவிளக்கிற்குப் பொன் பதின்கழஞ்சு வைத் துள்ளார். இவர் அரையன் என்ற பட்டம் கொண்ட தால் நிலவுடைமையாளராகவும், நக்கன்செட்டி என்ற பட்டம் கொண்டதால் வணிகராகவும் இயங்கி யுள்ளார் என்று அறியலாம். சார் என்ற ஊரினுடைய அரையன் ஆட்சியாளர்களுக்கு அணுக்கமாக இருந்ததனை சார் அரையன் தன்னன் எதிரிலி பெருமாளான குலோத்துங்க கடம்பரான அணுக்கி என்ற பெயரால் அறியலாம். சோழஅரசன் முதலாம் பராந்தகனின் மகன் கோதண்டராமன் ஆதிக்க விக்ரமகேசரி என்ற மதுராந்தகன் இருக்குவேள் என்பவனும்கூட காசுகளை நொந்தாவிளக்கு இட்டு வைத்ததன்மூலம் இவ்வட்டாரத்தில் ஆட்சியதி காரத்தில் இருப்பவர்கள் பெரிதும் பணப்புழக்கத்தில் ஈடுபட்டுள்ளனர் எனலாம்.

தொடக்கத்தில் கோயிலில் நொந்தாவிளக்கு எரிப்பதற்கான செலவினை ஏற்றுக்கொள்ளவும் மாசிமகம் போன்ற விழாக்களின் கொண்டாட்டச் செலவினை ஏற்கவும், பிராமணர்களுக்கு உண வளிக்கவும் காசுகள் சிலரை சாட்சியாகக் கொண்டு கோயில்களில் வைக்கப்பட்டன. காலம் தொடர இப்பணப்புழக்கம் கோயிலை மையமிட்டு இயங்கி யதாக அறியமுடிகிறது. நிலப்பரிமாற்றத்திலும் காசு முதன்மையுறுகிறது. காசினைப் பெருமளவு இருத்திவைக்கும் அளவிற்குக் கோயில் நிறுவனம் வளர்ந்தது. இச்சூழலில்தான் முன்பு குறிப்பிட்டது போல் பண்டாரம் என்ற அலுவலகம் எழுகிறது. தொடர்ந்து, கோயில் அலுவலர்களும், தேவரடி யார்களும் பணப்புழக்கத்தில் முதன்மையுறுகின்றனர். முதலிகள், கோமற்றவர், அச்சுபெற்ற பேறாளர் போன்ற அலுவலர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

மெள்ள மெள்ள பணப்புழக்கம் கோயிலிற்கும், கோயில்தொடர்பானவர்களுக்கும், சிவ பிராமணர் களுக்கும், வணிகர்களுக்கும், நிலவுடைமையாளர் களுக்கும் இடையில் அதிகரிக்கிறது. புழக்கம் அதிகமானதால் புதிய கோயில்கள் கட்டுவதும், புதிய கடவுள்உருவங்களைப் பிரதிட்டை செய்வதும் வழக்கமானது.

திருப்பணி

இடைக்காலத்திய இந்திய வரலாற்றில் கோயில்கள் சமூகத்தினைத் தம் கட்டுக்குள் வைத் திருக்கும் அதிகார நிறுவனங்களாக இருந்தமை யால் அவற்றைக் கட்டவும், புனரமைக்கவும், அந் நிறுவனங்களில் கடவுள் உருவங்களைப் பிரதிட்டை செய்யவுமான பணிகளைப் பணத்தினைக் கொண்டு இவ்வட்டார மக்கள் செயல்பட்டுள்ளனர். கோயிலை ஆளும் உரிமையினை - அதாவது, கோயில் என்ற செல்வ நிறுவனத்தினை ஆளும் உரிமையினை ஆள்வோர் கோயில் சுவந்திரம் என்ற பெயரில் பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். பணம் கொண்டிருந்த இவ்வாளும் குழுமத்தினருக்கே இவ்வுரிமை கிட்டியுள்ளது.

கிபி 1259-இல் புதிதாக நிறுவப்பட்ட அக்கசாலை (Minting office) கூத்தர் என்ற கடவுளின் திருநாள்படிக்கு ஊனையூரின் குடிகள் ஆண்டுதோறும் ஒரு பணம் கொடுத் துள்ளார். இக்கடவுளை நிறுவியவர் காசு அச்சடிக்கும் ஊர்த்தட்டார். அழிநிலையிலிருந்த கோயில்களைத் திருப்பணி செய்து அவற்றை நிலைநிறுத்துவதற்கு சமூகத்தின் பல நிலைகளிலும் இயங்கிவந்த மக்கள் தங்கள் பணியினைச் செய்து உள்ளனர். கி.பி.1268இல் நாடுபிடித்த வைப் பூருடையார் என்பவரும் இரண்டுகரை நாட்ட வரும் திருக்கற்றளி செய்வதற்காக நாயனார் ஸ்ரீ பண்டாரத்தில் ஊர்முதலிகளின் பொறுப்பில் அறுபத்துநாலாயிரம் காசு ஒப்படைத்துள்ளனர். இவ்வூர் முதலிகள் ஊர்க்காவலர்களாகவும் இயங்கி யுள்ளனர். அதற்காக ஸ்ரீபண்டாரத்திலிருந்து அய்ம்பதினாயிரம் பணம் பெற்றனர். இவ்வாறு பணப்புழக்கத்தில் நாட்டுத்தலைவர்களும், நாட்ட வரும், ஊர்முதலிகளும் பண்டாரத்தின் வழியே ஈடுபட்டுள்ளனர்.

கி.பி.1300இல் திருநலக்குன்றத்தி லுள்ள கோயிலின் கோபுரத்திருப்பணிக்கு அவ் வூரிலுள்ள கைக்கோலர் ஒருவர் மூன்றுஅச்சு பணம் வழங்கியுள்ளார். பிறிதொரு கோயிலின் கடவுள்திருமேனிகள் செய்துவைப்பதற்குப் பணம் ஆயிரத்துநூறு ஒருவரால் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலிற்குப் பிற ஊர்களும் தங்கள் பங்கிற்குப் பணம் வழங்கியுள்ளன. இதனை ஒரு கோயிலும் அதன் கடவுளும் பல ஊர்களில் பிரசித்தி பெற்றுள்ளதாகக் கருதலாம். பல ஊராரும் ஒரு குறிப்பிட்ட கோயிலுக்கு வழங்கிய பணம் விவரம் வருமாறு:

பெருஞ்சாவூர் விழுக்காடு பணம் - 300

வீரைக்குடி................................................... 240

சுனையக்குடி................................................. 210

வீரராசெந்திரன் கள்ளிக்குடி........ 140

இதே போன்று மற்றொரு ஊரிலிருந்த கோயிலின் திருப்பணிக்கு அவ்வூரிலுள்ள ஒவ் வொருவரும் பணம் தந்துள்ளனர். அவர்கள் வழங்கிய பணத்தினுடைய தொகையின் அடிப் படையில் அவ்வூரிலுள்ள சமூகத்தின் பொருளியல் படிநிலையினை அறியலாம். அம்மக்கள் பின்வரு மாறு தம் தம் விழுக்காடு பணத்தினை வழங்கி யுள்ளனர்.

பேர் ஒன்றுக்கு பணம் அரை

இளமையாளர் பேர் ஒன்றுக்கு பணம் கால்

படைப்பற்று பேர் ஒன்றுக்கு பணம் அரைக்கால்

குடிமக்கள் பேர் ஒன்றுக்கு பணம் அரைக்கால்

தண்டிகள் பேர்ஒன்றுக்கு பணம் அரைக்கால்

பள்ளர் / பறையர் பேர் ஒன்றுக்கு பணம் அரைக்கால்

கோயிலை மையமாகக்கொண்டு இயங்கிய இப்பணப்புழக்கம் பொருளியல் அடிப்படையில் சமூகப் படிநிலையினை அமைத்துள்ளது. சமூகப் படிநிலையும், பொருளியலும் ஒன்றுக்குள் ஒன்று இயைந்துள்ளதனை இதனால் அறியலாம். கோயிலைத் தங்கள் கட்டுக்குள் இருத்திக்கொண்டால் அதன் வழியே மக்களையும் தம் கட்டுக்குள் இருத்திக் கொள்ளலாம் என்று எண்ணியே ஆட்சியாளர் களும் கோயில் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெண் தெய்வமான தம்பிராட்டியாரின் வழி பாட்டுச்செலவினை ஏற்க மூன்றுபடை பொற் கோயில் கைக்கோலர் ஒருவர் இருபத்தஞ்சுகாசு கொடுத்துள்ளார். இதனை அவர்களுள் கணக்கு எழுதும் ஒருவரிடமே 1228இல் ஒப்படைத்துள்ளார். பிறிதொருமுறை ஒருகோயிலின் திருப்பணிக்காகக் கோயில் பண்டாரத்தில் முப்பதுபணம் ஒடுக்கப் பட்டுள்ளது. 1303இல் ஒரு கோயிலின் அலுவலர்கள் கோயிலின் திருப்பணிக்காகக் கிணறு உட்பட நீர்ப்பாசனவசதி கொண்ட சேரவேளார்குடிக் காட்டினை ஏலத்தில் விற்றுள்ளனர். இதன்வழி இருபதுபணம் பெற்றுள்ளனர். பணத்தேவை யினைக் கோயில் அலுவலர்கள் இப்படி நிறை வேற்றிக் கொண்டனர். மற்றுமொரு சந்தர்ப் பத்தில் ஒரு கோயிலின் திருப்பணிக்கு வேரொரு முதல் இல்லாமையால் நிலத்தினை ஒற்றியாக வைத்துப் பணம் அறுபது வாங்கப்பட்டது. இப்படிக் கோயில்திருப்பணியை மையமிட்டு ஒருவகையான பணப்புழக்கம் நிகழ்ந்துள்ளது. திருப்பணி செய்யப் படவேண்டிய கோயில் நாயனார் கோயில் இறந்து பட்டுக் கிடக்கையில் என்ற கல்வெட்டுத்தொடரில் பதியப்பட்டுள்ளது. 1400-இல் ஒரு முருகன் கோயிலில் உள்ள மண்டபத்தின் திருப்பணிக்காகப் பணம் திரட்டப்பட்டுள்ளது. அம்மண்டபத்திலுள்ள கபோதபடையினைச் செய்வதற்குக் கூலியாக உடையான் வெளிநின்றான் என்ற சிறுத்தொண்டன் என்ற தனியார் பண்டாரத்தில் அய்நூறு காசுகள் ஒடுக்கியுள்ளார்.

தண்டனையும் பணமும்

தண்டனையைப் பணமாக வசூலிக்கும் முறை இருந்துள்ளதைக் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. போர்க்குணமிக்க இவ்வட்டாரத்தின் அரையர்கள் கோயில்களை மையமிட்டு அரசாள்வதற்கு எழுகையில் தம்முள் பூசலைத் தவிர்த்து சமரசப்பேச்சினைக் கடைபிடித்துள்ளனர். இப்படி இரண்டுமலை நாட்டு அரையர்கள் தாம் காக்க வேண்டிய மக்களேயே வெட்டியும், குத்தியும் அழித்துள்ளதனை ஒரு கல்வெட்டில் பதிவுசெய்துள்ளனர். அவர்களுக் குள்ளே சண்டையிட்டும் செத்துள்ளனர். இதனைத் தவிர்க்கும்பொருட்டு கோயில்தானத்து முதலிகள் என்ற அலுவலர்களிடம் உடன்படிக்கை செய்துள்ளனர். அதன்படி அவர்கள் எதிர்காலத்தில் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை என்றும் ஒத்துக்கொண்டு உள்ளனர். அவர்களில், ஒருவர் அழிவில் ஈடுபட்டால் அவர் தாமாகவே நூறுபணம் தெண்டம் இட வேண்டும் என்றும், ஒரு ஊரே சேர்ந்து அழிவில் ஈடுபட்டால் அய்நூறுபணம் தெண்டம் இடவேண்டும் என்றும் ஒப்புக்கொண்டுள்ளனர். போர்க்குலத்த வரிடம் வீரம் பதிந்திருந்தது; பணமும் குவிந்திருந்தது.

ஊர்பாடிகாவல் புரிவோர் களவு செய்துள்ளனர் என்றும் அவ்வாறு களவு செய்கையில் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு களவிரப்பு என்ற பொருளில் தண்டம் கட்டவும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று அறியமுடிகிறது. இவர்களின் இரவுநேரக்களவு இராக்களவு காணுதல் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இவர் களுடைய இரவுக்களவினால் பாதிக்கப்பட்டவர் களுக்கு இராத்தெண்டமாக அய்நூறு பணம் தர வேண்டும் என்று பாடிகாவல் புரிவோர் தம்முள் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் களவாடியுள்ளனர் என்பதனை நம்மிலொருவர் களவு காணக்கடவ தல்ல என்ற தொடரினால் விளக்கியுள்ளனர். களவாணிகளிடம் பணம் குவிந்துள்ளது என்ப தனையும் அதனைக் களவாடியே சேமித்துள்ளனர் என்பதனையும் கல்வெட்டு உறுதி செய்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் முதலி அலுவலர்கள் ஒரு கைக்கோலரைத் தண்டிக்க அவர்தம் நிலத்தினை விற்று தண்டப்பணம் ஆறாயிரத்தினை ஸ்ரீபண்டா ரத்தில் செலுத்தியுள்ளார். அச்சுபெற்றபேறாளர் என்ற அலுவலர்கள் ஒல்லையூரான மதுரை மறவர் களைப் பலவேதனைகள் செய்யுமிடத்து தங்கள் நிலத்தினை விற்று எண்ணாயிரம் நற்காசுகளைத் தண்டமாகச் செலுத்தியுள்ளனர்.

பாடிகாவலும் பணப்புழக்கமும்

பாடிகாவல்சுவந்திரம், அரசுசுவந்திரம் போன்ற ஆட்சி உரிமைகள் பணத்திற்காக விற்கப் பட்டுள்ளன. இவ்விற்பனையின் புழக்கத்தில் நாட்டவர், ஊரவர், தனியார் மற்றும் குடிமக்கள் பங்கு பற்றியுள்ளனர். ஊராரும், நாட்டாரும் தங்கள் உரிமைகளைப் பாடிகாவலர்களுக்கு மாற்றித்தந்து தங்கள் இயக்கத்தினை / பொறுப்புகளை விலக்கிக் கொண்டது ஒருவகையான அதிகார மாற்றமாகும்; இதனைச் சமூகமாற்றமாகவும் கருதலாம். 1340இல் திருமெய்யத்து சபையார் வலையர் சமூகத்தின் மூவன் காடப்பிள்ளை என்பாருக்கு பாடிகாவல் உரிமையினை இருநூறு வாளால்வழிதிறந்தான் பணத்திற்கு விற்றுள்ளனர். இப்பணம் விலை ஆவணக்களத்தில் கட்டப்பட்டுள்ளது. வேட்டைச் சமூகத்தின் ஓர் இனக்குழுத்தலைவர் பணத்தினால் இப்படி அதிகாரச்சமூகமாக மாற்றப்பட்டுள்ளார். பணப்புழக்கம் இப்படியொரு மாற்றத்தினை நிகழ்த்தி யுள்ளது.

1342இல் மேலூர் ஊரவர் வட்டாரத் தலைவரான சூரைக்குடி பொன்னன் அழகப் பெருமாள் என்பவருக்கு வாளால்வழிதிறந்தான் குளிகைபணம் அய்நூற்று ஐம்பதுக்கு பாடிகாவல் உரிமையினை விற்றுள்ளனர். 1380இல் துலுக்கர் கலகத்தால் அழிந்த ஆதனூர், அதனால் உண்டான விளைவுகளால் விளைச்சல் இல்லாத நிலையில் அவ்வூரார் தங்களை அரசிடமிருந்து காத்துக் கொள்ளும் பொருட்டு வாளால்திறந்தான் குளிகை முந்நூறுக்கு பாடிகாவல் உரிமையினைச் சூரைக்குடி அரசுக்கு விற்றுள்ளனர். இங்கு பாடிகாவல் உரிமை பாடிகாவற்கட்டு என்று சுட்டப்பட்டுள்ளது. இப்படிப் பணத்தினைக் கொடுத்துப் பாதுகாவல் தேடியுள்ளனர்.

1391இல் வடகோநாட்டு நாட்டவர் பேராம்பூர் அரசு என்ற ஆட்சி அலகின் தலைவரான நரசிங்கதேவர்க்கு அரசு சுவந்திரம் என்ற ஆளும் உரிமையினை வழங்கி யுள்ளனர். இதனால் இவ்வாட்சியர் தம் ஆளுகைக்கு உட்பட்ட புறகுடி மக்களிடமிருந்து வரியினைப் பணமாக வசூலிக்கும் அதிகாரத்தினைப் பெற்று உள்ளார். விளிம்புநிலையிலிருந்த புறகுடிமக்கள் வரிசெலுத்த வேண்டியிருக்க உள்குடிமக்கள் பற்றிய குறிப்பு இல்லை. 1431இல் வெவ்வேறு ஊர்களிலுள்ள மக்கள் தங்கள் ஊர்களைப் பாது காக்கும் பொருட்டுப் பாடிகாவல் உரிமையினை அன்றாடுவழங்கும் சக்கரம்பணம் முந்நூறுக்கு விற்றுள்ளனர். அன்றாடுவழங்கும் சக்கரம்பணம் என்பது currency in current circulation என்ற நடை முறையினை வலியுறுத்துவதாயுள்ளது. இக்கருத்தில் இவ்வட்டாரத்து மக்கள் கவனமாக இருந்துள்ளனர் என்று அறியமுடிகிறது. இதற்கான பணத்தினை பாடிகாவலர்கள் ஒரே தவணையில் வசூலிக்கவில்லை.

ஆடிமாதத்து அறுவடையின்போது ஒருபணமும், கார்த்திகை மாதத்து அறுவடையின்போது ஒரு பணமும் என்று வசூலித்துள்ளனர். இப்படி குடி மக்கள் ஆள்வோருக்கு உழைப்பினையும் கொடுத்து பணத்தினையும் கொட்டவேண்டியிருந்தது. இங்குப் பணப்புழக்கம் சமூகத்தினைப் பாதுகாவலர் என்றும், ஊரார் என்றும், குடிமக்கள் என்றும் மூன்றாகப் பகுத்துள்ளது. கிபி 1465இல் ஒரு ஊராரின் ஊரார் பிறிதொரு ஊராருக்குப் பாடிகாவலர் களாக இயங்கியுள்ளனர். இதன்படி, மேலூர் ஊரவர் இராசிங்கமங்கலத்து ஊரவற்கு சக்கரம் பணம் அய்நூறுக்குப் பாதுகாவல் உரிமையினை விற்றுள்ளனர். இங்கு சமநிலையில் இரு ஊராருக்கு இடையில் பணப்புழக்கம் நிகழ்ந்துள்ளது.

1483இல் நெல்வாயில் ஊரார் சக்கரம்பணம் இருபதுக்கு பாதுகாவல் உரிமையினை ஒருவருக்கு விற்றுள்ளனர். இப்பாடிகாவல் உரிமை என்பது பாதுகாவல் சுவந்திரம் என்பதோடு அதனை வாங்கியவருக்கு மதிப்புறு பட்டப்பெயரினையும் வழங்கியுள்ளது. இப்படி காரையூர் ஊரவர் தங்கள் ஊரின் பாது காவல்சுவந்திரம் என்ற உரிமையினை வாங்கிய வருக்குக் காரையூர்ப்பரையன் என்ற பட்டத்தினையும் 1518 இல் வழங்கியுள்ளனர். இதனை வாங்கியவர் ஊராளி என்ற சமூகத்தினைச் சேர்ந்தவராவார்.

இப்படி, பணப்புழக்கம் நாட்டாரையும், ஊராரையும் புறக்கணித்து கோயில்சுவந்திரம், அரசுசுவந்திரம், பாடிகாவல்சுவந்திரம் போன்ற புதுவகை உரிமைகள் விற்கப்படுவதற்கும் வாங்கப் படுவதற்கும் வழிவிட்டது. இதனால் புதிதாக ஓர் ஆளும் குழுமம் எழுந்துள்ளது.

கோயிலை மையப்படுத்திப் பணப்புழக்கம் நிகழ்த்தப்படுகையில் பல உரிமைகள் விற்கப்பட்டன; வாங்கப்பட்டன. கோயில்சுவந்திரம் என்ற உரிமை கூட கோயில் சிவபிராமணர்களுக்குக் கோயில் அலுவலர்களே ஊராரின் ஒப்புதலுடனும், முதலி அலுவலர்களுடனும் இணைந்து விற்கப்பட்டுள்ளது. கோயில் இயக்கத்தோடு தம்மை இணைத்துக் கொள்வதனை மக்கள் பெருமையாகவே கருதி யுள்ளனர். கோயிலின் மரியாதை மக்களுக்குப் பெரும் கவ்ரவத்தினைத் தருவதாகக் கருதப்பட்டது. 1515இல் பேரையூரில் ஊர்க்காராண்மை நிலவுரிமை கொண்ட ஒருவர் பணம் முப்பது செலுத்திப் பரிவட்டம் ஒன்றினைக் கோயிலில் வாங்கிக் கொண்டனர்.

பணமும் தேவரடியாரும்

கோயில் தேவரடியாரும், கோயில் அலுவலர் களும் நெருக்கமான பணப்புழக்கத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்று கல்வெட்டுச் சான்றுகள் தெரிவிக் கின்றன. 1198இல் கோயில் தேவரடியார் ஒருவர் கோயில் திருப்பணிக்குக் கோயில் அலுவலரிடம் அய்நூறுகாசு ஒப்படைத்துள்ளார். 1228இல் பிறி தொரு தேவரடியார் சித்திரைத்திருநாள் விழாவின் செலவிற்கு காசுஆயிரம், பண்டாரத்தே ஒடுக்கி யுள்ளார். கி.பி. 1313-இல் கோயில் அலுவலர்களும் மடாதிபதிகளும் ஊராரும் கோயில் தேவரடியார் ஒருவருக்கு அன்றாடு வராகன்பணம் நூறுக்கு நிலம் விற்றுள்ளனர். 1238இல் ஊராரிடமும், கோயில் தானத்தாரிடமும் இருபது பழங்காசு கொடுத்து ஒருதேவரடியார் நிலத்தினை வாங்கி யுள்ளார். 1263இல் நாட்டாரும், கோயில் அலுவலரும் சேர்ந்து கோயில்தேவரடியார் ஒருவருக்கு அன்றாடு நற்பழங்காசு எழுபத்து மூவாயிரத்து முந்நூறுக்கு நிலம் விற்றுள்ளனர். தொடக்கத்தில் கோயிலுக்கு வெளியில் இருந்து தனியார் காசினை வைக்க வேண்டியிருந்தது. அங்குப் பணப்புழக்கம் வெவ்வேறு நபர்களிடையே நிகழ்ந்தது. ஆனால், மேற்சொன்ன உதாரணங்களில் கோயிலின்பணம் கோயிற்குள்ளேயே புழங்கி வந்துள்ளது.

பணமும் பாசனமும்

முதன் முதலில் அய்நூற்றுவர் பேரேரியினைப் பராமரிக்க காசுஇரண்டு இருப்பாக வைக்கப்பட்டு அதனால் வரும் வட்டியினைக் கொண்டு ஆண்டு தோறும் அவ்வேரியினைப் பராமரிக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று முனியந்தை குளத்திற்குத் தனியார் ஒருவர் காசுஇரண்டு வைத் துள்ளார். அதனைக் கொண்டு அக்குளத்தினை ஆழப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விரண்டு நிகழ்விலும் பணப்புழக்கம் நேரிடை யாகப் பாசனக்குளத்தோடு தொடர்புபடுத்தப் பட்டுள்ளது. 1221இல் பாசனத்திற்காக நீரினை ஊரார் கோயிலிற்காக விற்றுள்ளனர். 1615இல் பணத்திற்காக நிலத்தோடு சேர்ந்து நீரும் விற்கப் பட்டுள்ளது.

இப்படி இவ்வட்டாரத்தில் பணப்புழக்கம் கோயில் நிறுவனத்தினை மையப்படுத்தியே இயங்கி யுள்ளது. இப்புழக்கத்தில் பணத்தினை ஆளுவோர் இக்கட்டுரையின் அய்ந்தாம் பத்தியில் சொன்ன படி மதிப்புறு பட்டப்பெயர்களைக் கொண்டவர் களாகவும், வணிகர்களாகவும், பாடிகாவல் சுவந்திரம், அரசுசுவந்திரம், கோயில்சுவந்திரம் போன்றவற்றைக் கொண்டவர்களாகவும் அரசு அலுவலர்களான அச்சு பெற்ற பேறாளர் போன்றோ ராகவும் இருந்துள்ளனர். இவர்கள் அனைவருமே பணப்புழக்கத்தில் பெரும்பங்கு வகித்துள்ளனர்; குடிமக்கள் பணத்தினை வழங்கியோராக இருக்க மேற்சொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பணத்தினை ஆள்வோராக இருந்துள்ளனர்.

கருத்துரு

தொடக்கத்தில் மாசிமகம் திருவிழாவிற்குத் துளைப்பொன் அய்ந்து மட்டுமே ஒரு தனியாரால் ஒடுக்கப்பட்டது. ஆனால், காலம் செல்லச் செல்ல திருவிழா கொண்டாட்டங்களுக்குப் பணம் பெரு மளவில் செலவழிக்கப்பட்டுள்ளதனைக் கல்வெட்டுகள் பதித்துள்ளன. கிபி1300இல் வல்லநாட்டு அரையர்கள் பங்குனித்திருநாளுக்கு முந்நூறுகாசு தந்துள்ளனர். ஆயிரத்து முந்நூறுகாசுக்கு நாள் ஒன்றுக்குப் பதினேழரைகாசு வட்டியாகக் கணிக்கப் பட்டுள்ளது. இப்படி அதிகாரத்தில் இருப்பவர் களே பணத்தோடு பெரிதும் புழங்கியவர்களாக இருந்துள்ளனர். சமயத்தோடு தொடர்புடைய கோயில் அலுவலர்கள், சமயமாக வாழும் பிராமணர்கள், இவ்விரு குழுமத்தினையும் வாழவைக்கும் கோயில் நிறுவனத்தைப் போற்றும் கைகோளர், படையினர், அரையர்கள், நாட்டவர்கள் இவர் களே இப்புழக்கத்தில் பிணைந்துள்ளனர்.

குறிப்பு

இக்கட்டுரைக்காகப் பயன்படுத்தப்பட்ட புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுகளின் வரிசை எண்கள் 29;31; 32; 34; 36; 44; 47; 48; 49; 50; 51; 52; 53; 55; 57; 58; 59; 60; 61; 62; 63; 64; 66; 67; 69; 70; 71; 73; 74; 76; 77; 78; 80; 83; 86; 87; 88; 89; 90; 95; 98; 100; 118; 125; 130; 134; 135; 136; 152; 158; 165; 170; 184; 185; 188; 190; 192; 202; 204; 206; 208; 209; 210; 211; 214; 215; 216; 221; 229; 230; 241; 248; 249; 266; 268; 285; 286; 298; 301; 302; 306; 307; 308; 309; 318; 319; 335; 349; 350; 362; 366; 375; 376; 377; 379; 384; 386; 399; 401; 406; 408; 415; 416; 423; 427; 429; 430; 439; 440; 441; 442; 445; 447; 448; 452; 454; 460; 462; 467; 479; 484; 486; 489; 491; 494; 499; 500; 521; 523; 531; 539; 541; 544; 546; 553; 559; 561; 566; 568; 583; 589; 590; 596; 607; 611; 613; 618; 622; 624; 625; 635; 638; 644; 687; 688; 689; 699; 700; 703; 706; 723; 751; 769; 770; 800; 803; 821; 834; 835; 843; 859; 864; 866; 867; 873; 903; 907; 941.

(உங்கள் நூலகம் ஆகஸ்ட் 2012 இதழில் வெளியான கட்டுரை)

Pin It