இன்னும் இரண்டு மில்லியன் பூஞ்சை உயிரினங்கள் பூமியில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது என்று லண்டன் க்யூ (Kew) தாவரவியல் பூங்கா ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட 2023ம் ஆண்டிற்கான உலக தாவர மற்றும் விலங்குகள் (State of Flora & fauna) நிலை பற்றிய ஆய்வறிக்கை கூறுகிறது.

மனிதனின் கண்டுபிடிப்பு தேடலில் பூஞ்சையினங்கள் காத்திருக்கின்றன. ஆனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தாவரங்களும் அழியும் ஆபத்தில் உள்ளவை என்பதால் அவை நிரந்தரமாக அழிந்துவிடும் நிலையில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் வலியுறுத்துகின்றனர்.

கண்டுபிடிக்கப்படும் புதிய உயிரினங்களில் மூன்றில் ஒரு பகுதி உயிரினங்களும் மறையும் ஆபத்தில் உள்ளன. மனித உடலில் வயிற்றுப்பகுதி செரிமான மண்டலத்தில் உள்ள மைக்ரோபியோமில் (gut microbiome) உணவு செரித்தல், ஆற்றல் பெறுதல், நோய் எதிர்ப்பு சக்தி பெற உதவும் பூஞ்சைகள் வாழ்கின்றன.reishi mushroomsஇந்தப் பூஞ்சைகள் முதல் பூமியில் உள்ள மிகப் பெரிய தரைவாழ் பூஞ்சையினம் வரை காணப்படும் உயிரினங்கள் அவற்றின் உயிர்ப்பன்முகத் தன்மையில் முதுகெலும்பற்ற உயிரினங்களுக்கு அடுத்தபடி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளன.

இவை காற்று, தாவர விலங்குகளுக்குள், மண் மற்றும் கடலில் பல அளவுகளில் பல வடிவங்களில் வாழ்கின்றன. இவற்றில் 90% இன்னமும் அறிவியலால் அறியப்படாதவை என்று க்யூ ராயல் பூங்கா ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூமியில் இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய 2.5 மில்லியன் பூஞ்சைகள் உள்ளன. 155,000 பூஞ்சை உயிரினங்கள் மட்டுமே இதுவரை கண்டறியப் பட்டுள்ளன. “இது மனிதன் இன்னமும் கால் பதிக்காத எல்லை ப்பகுதி (uncharted territory). கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கும் நம் வாழ்வின் நிலைத்தன்மை, விவசாயம் போன்றவற்றில் இந்த உயிரினங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டு வருகிறது. இவை ஒவ்வொன்றிற்கும் மிக உயிர் வாழ்வில் மிக முக்கிய இடம் உள்ளது.

அண்டவெளியில் கரும்பொருட்கள் பூமியில் பூஞ்சைகள்

இப்போது உயர் தர டி என் ஏ பகுப்பாய்வு வசதிகள் உள்ளன. அறியப்படாத பூஞ்சைகள் பற்றிய ஆய்வுகள் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் அண்டவெளியை ஆராய்வது போல. விண்வெளி ஆய்வில் கரும்பொருட்கள் போல பூஞ்சைகள் என்று ராயல் பூங்காவின் அறிவியல் பிரிவு இயக்குனர் பேராசிரியர் அலெக்சாண்டர் ஆண்டனெல்லி (Prof Alexandre Antonelli) கூறுகிறார்.

கண்டறியப்படாத புதிய பூஞ்சை உலகம் பற்றிய இச்செய்தி ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது என்றாலும் அவற்றில் பல இனங்கள் அழியும் ஆபத்தில் இருப்பவை என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2020ல் அடையாளம் காணப்பட்ட சிறப்பு கடத்து திசுக்களைக் கொண்டுள்ள வாஸ்குலர் தாவரங்களில் 70% ஏற்கனவே விரைவில் அழியும் ஆபத்தான நிலையில் (threatened) உள்ளன.

இந்த வகை உயிரினங்களில் 59% இனங்கள் அழியும் ஆபத்தை (Endangered (EN)) நிலையிலும் 24% இனங்கள் இந்த நிலையை விரைவில் அடையும் ஆபத்திலும் வாழ்கின்றன. பூமியில் இதுவரை 350,000 வாஸ்குலர் வகை தாவரங்கள் உள்ளன என்று அறியப்பட்டுள்ளது. 100,000 இனங்கள் இன்னும் கண்டறியப்பட வேண்டியுள்ளது. இவற்றில் மூன்றில் ஒன்று அழியும் நிலையில் உள்ளது.

புதிய உயிரினங்கள் வேறெந்த நிலையிலும் வாழவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அவை அணைத்தும் அழிவை நெருங்கி விட்டவையாக வகைப்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பொது மக்கள் புதியவற்றை கண்டுபிடிப்பதை உலகம் முழுவதும் ஆய்வாளர்கள் ஊக்குவிக்கின்றனர். புதிய டி என் ஏ மரபணு வரிசைப்படுத்தும் தொழில்நுட்பத்தின் (DNA sequencing technique) புரட்சியால் ஒரு ஸ்பூன் மண்ணில் நூற்றுக்கணக்கான புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் மண் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பும் மண் மாதிரியின் ஒரு ஸ்பூன் மண்ணில் கண்டுபிடிக்கும் புதிய பூஞ்சை ஒன்றிற்கு பெயர் சூட்டும் வாய்ப்பு அதை அனுப்பும் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. 2020 முதல் இத்திட்டத்தின்படி 10,200 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன. ஆண்டிற்கு 50,000 புதிய இனங்களை அடையாளம் காண முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

2023ல் க்யூ பூங்கா விஞ்ஞானிகள் பிரேசில் அட்லாண்டிக் பகுதி மழைக்காடுகளில் ஜாம்பி-எறும்புத் தின்னி (zombie-ant fungi) போல trapdoor வகையைச் சேர்ந்த சிலந்தியை உண்ணும் புதிய ஒட்டுண்ணி பூஞ்சையினத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 

புதிய இனங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே நாம் அவற்றை இழக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. ”புதியவை கூடுதலாக கண்டுபிடிக்கப்படுவது மருத்துவம், வேளாண்மை, பொறியியல் மற்றும் மனித நோய்களை இன்னும் மேம்பட்ட முறையில் புரிந்துகொள்ள உதவும். தாவர விலங்குகளை விட டி.என்.ஏ. தொழில்நுட்பம் பூஞ்சைகளை அடையாளம் காண பெரிதும் உதவுகிறது.

பூஞ்சைகள் என்றால் ஆரம்பத்தில் நாய்க்குடைகள் மற்றும் லைக்கன்கள் (lichens) எனப்படும் பூக்களற்ற, மஞ்சள் அல்லது சாம்பல் நிறமுடைய, பாறைகள், சுவர்கள், மரங்கள் மீது படர்ந்து வாழும் சிறிய தாவரங்கள் மட்டுமே ஆராயப்பட்டு வந்தன. நம் மைக்ரோபையோமில் ஏராளமான பூஞ்சைகள் உள்ளன என்று இன்று அறியப்பட்டுள்ளது. நமக்கு ஏற்படும் பல நோய்கள் பூஞ்சைகளால் ஏற்படுகின்றன அல்லது சமநிலையற்ற நிலையில் அவை நம் உடலிற்குள் இருப்பதால் தோன்றுகின்றன.

"மண்ணிற்கடியில் வாழும் பூஞ்சைகள் மரங்களை மண்ணோடு பிணைக்கின்றன. மரங்களின் வேர்களுடன் கூட்டுயிரி வாழ்க்கை வாழ்வதற்கான உறவை (symbiotic relationship) இவை ஏற்படுத்திக் கொண்டு பரஸ்பரம் உதவி செய்து வாழ்கின்றன. நீரையும் சத்துப் பொருட்களையும் பகிர்ந்து கொள்கின்றன. இந்த உயிரினங்களின் ஸ்போர்களை இப்போதும் நாம் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்றுராயல் பூங்காவின் மூத்த ஆய்வாளர் எஸ்ட்டர் கயா (Ester Gaya) கூறுகிறார்.

புதிய தாவரங்கள் மற்றும் பூஞ்சையினங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பற்றி விவரிப்பது உயிர்ப்பன்மயத் தன்மை அறிவியலில் ஒரு முக்கிய சவால். மோசமான அறிவு மற்றும் போதிய விழிப்புணர்வு இடைவெளியுள்ள கொலம்பியா, நியூ கினி போன்ற 32 தாவர உயிர்ப்பன்மயத் தன்மை இருண்ட இடங்கள் (Plant biodiversity dark spots)அடையாளம் காணப்பட்டுள்ளன.

உலகின் பல இடங்களில் போதுமான அளவில் ஏராளமான தாவரங்கள் இது வரை சேகரிக்கப்படவில்லை. ஆராயப்படவில்லை அல்லது அந்த இடங்களின் உயிர்ப்பன்மயத் தன்மையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் இருந்து புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புகள் ஏராளம் என்பதால் இவை இருண்ட இடங்கள் என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.

இன்று நாம் அறியாமல் நம்முடன் வாழும் உயிரினங்கள் அழியும் ஆபத்தில் இருக்கும்போது கண்டுபிடிக்கப் படாதவையும் அவற்றை நாம் அறியும் முன்பே அழிந்துவிடும் என்பது மனிதன் உடனடியாக சூழலைக் காக்க உருப்படியாக அவனால் ஆனதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது!

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/oct/10/uncharted-territory-kew-scientists-say-more-than-2m-fungi-species-waiting-to-be-identified-aoe?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It