கீற்றில் தேட...

உலகம் முழுவதும் காணப்படும் நீர்நாய்கள் இன்று இன அழிவின் விளிம்பில் உள்ளன. உலகில் மொத்தம் உள்ள 13 இனங்களில் இந்தியாவில் யுரேசியன் நீர்நாய் (Eurasian otter-lutra lutra), மென்தோல் நீர்நாய் (smooth coated otter-lutra perspicillata) மற்றும் சிறிய நகமுள்ள நீர்நாய் (small clawed otter-aonyx cinereus) என்ற மூன்று இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மென்தோல் மற்றும் சிறிய நகமுள்ள இனங்கள் எதிர்காலத்தில் அழியும் ஆபத்தில் உள்ளன.

பல நூற்றாண்டுகளாக உரோமத்திற்காக இவை வேட்டையாடப்படுகின்றன. இந்தியாவில் கில்ஹாரா, பதியா போன்ற சில நாடோடி இன மக்கள் இவற்றை இறைச்சிக்காக வேட்டையாடுகின்றனர். கள்ளச்சந்தைகளில் நீர்நாய்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. குறிப்பாக தெற்காசியாவில் இவை பெருமளவில் திருட்டுத்தனமாக கடத்தப்படுகின்றன. இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து இவை தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நிலத்திலும் நீரிலும் வாழும் நீர்நாய்கள்

உலகில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மடகாஸ்கர் போன்ற இடங்கள் தவிர மற்ற பகுதிகளில் இவை காணப்படுகின்றன. பாதி நேரம் கரையிலும், பாதி நேரம் நீரிலும் வாழ்வதால் இவை பாதிநீர்வாழ் பாலூட்டிகள் (semi aquatic mammals) என்று அழைக்கப்படுகின்றன. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை இவற்றின் இனப்பெருக்க காலம். கரைப்பகுதியில் இணைசேர்கின்றன. உலகில் உள்ள 13 இனங்களில் இரண்டு இனங்கள் மட்டும் கடலில் வாழ்கின்றன.otters 720சுற்றுப்புறச் சூழலுடன் இவை ஒத்து வாழ்கின்றன. சிறிய கால்கள், வலிமையான கழுத்து போன்றவை இவற்றின் சிறப்புப் பண்புகள். நீரில் திசையை மாற்றிப் பயணிக்க வால்கள் உதவுகின்றன.

இவற்றின் பொதுவான சராசரி உடல் எடை 3 கிலோகிராம். மிகப் பெரிய நீர்நாய்களின் சராசரி எடை 26 கிலோகிராம். ஆனால், கடல் நீர்நாய்களின் சராசரி எடை 45 கிலோகிராம்.

நன்னீரில் வாழும் இனங்கள் வட மற்றும் தென்னமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியாவில் காணப்படுகின்றன. நண்டு, தவளை, மீன் போன்றவை இவற்றின் முக்கிய உணவு. இத்தகைய உணவுகள் சுலபமாகக் கிடைக்கும் இடங்களில் நீர்நாய்கள் தங்கள் வாழிடத்தை அமைத்துக் கொள்கின்றன. சுலபமாகக் கிடைப்பதை நன்னீர் நாய்கள் உணவாக உட்கொள்கின்றன. இரை பிடித்தபிறகு நீர் அல்லது நிலத்திற்கு எடுத்துச் சென்று உண்கின்றன. நீர்நிலைகளில் ஆழம் குறைவாக உள்ள பகுதிகளில் இவை சுலபமாக இரை தேடுகின்றன.

பொதுவாக கூச்ச சுபாவமுடைய இவை மிகக் குறைந்த தூரமுடைய, மிக விரைவாக சென்று சேரக்கூடிய அருகில் இருக்கும் பகுதிகளையே பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கின்றன. பாறை இடுக்குகள், நிலத்தில் காணப்படும் குழிகள், தாவரங்கள் அடர்த்தியாக இருக்கும் இடங்களில் ஓய்வெடுக்கின்றன. குட்டிகள் மற்ற விலங்குகளுக்கு சுலபமாக இரையாகின்றன. வளர்ந்த நீர்நாய்கள் ஊண் உண்ணிகளுக்கு இரையாகின்றன. வெப்பம் அதிகமுள்ள பிரதேசங்களில் முதலை போன்றவை இவற்றின் முக்கிய எதிரிகள்.

மனிதக் குறுக்கீடுகள்

என்றாலும் வாகனங்கள் இடிப்பது, மீன் வலைகளில் சிக்கிக் கொள்வது, உரோமத்திற்காகக் கொல்லப்படுவது போன்ற மனிதச் செயல்பாடுகளாலேயே இவை அதிகமாக உயிரிழக்கின்றன. கடற்சூழலுடன் பொருந்தி வாழும் இயல்புடைய கடல் நீர்நாய் (Sea otter) மற்றும் மெரைன் நீர்நாய் (marine otter) ஆகிய இனங்கள் கடலில் வாழ்கின்றன. வட அமெரிக்காவின் பசுபிக் கடற்பகுதியை ஒட்டி காணப்படும் கடல் நீர்நாய்கள் அளவில் பெரியவை. இவற்றை விட அளவில் சிறிய மெரைன் நீர்நாய்கள் பெரு, சிலி பகுதிகளில் காணப்படுகின்றன.

இரை தேட இந்த இரு இனங்களும் முழுமையாக கடலையே சார்ந்துள்ளன. கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் இடங்களில் மட்டுமே இவை வாழ்கின்றன. கடல் நீர்நாய்கள் கடற்சூழலுடன் முழுமையாக இணைந்து வாழுபவை. இதற்கேற்றவாறு இவற்றின் உடல் அமைந்துள்ளது. கனடா, அமெரிக்காவில் வாழும் வட அமெரிக்க நதி நீர்நாய்கள் (North American river otter) எட்டு நிமிடங்களுக்கு மேல் நீருக்கடியில் மூச்சு விடாமல் இருக்க முடியும். உப்பு நீரை அருந்தி இவை கடலில் அதிக நேரம் செலவழிக்கின்றன.

இவை தனியாகவும் கூட்டமாகவும் காணப்படுகின்றன. அலாஸ்காவின் கடற்கரைப் பகுதியில் 2000 நீர்நாய்கள் அடங்கிய கூட்டங்கள் வாழ்கின்றன. இவற்றின் முக்கிய உணவு நண்டுகள் மற்றும் ஜெல் மீன்கள். பிடித்த இரையை கடலில் வைத்தே உண்கின்றன. கடலில் மல்லாந்து இரையை உண்ணும் இயல்புடையவை. ஜெல் மீன்களின் எண்ணிக்கை குறைய இவையும் ஒரு காரணம். பெண் கடல் நீர்நாய்கள் ஒரு பிரசவத்தில் ஒரு குட்டியை ஈணுகின்றன. குட்டிகள் 6 முதல் 8 மாத வயதை அடையும்வரை தாயைச் சார்ந்தே வாழ்கின்றன.

மெரைன் நீர்நாய்கள்

சுறாக்கள், கொலையாளித் திமிங்கலங்கள் இவற்றை வேட்டையாடுகின்றன. மெரைன் நீர்நாய்கள் நந்நீர்ச் சூழலுடன் வாழும் திறன் பெற்றவை என்றாலும் கடற்சூழலுடன் பொருந்தி வாழ்கின்றன. இவற்றின் சராசரி எடை 3 முதல் 6 கிலோ மட்டுமே. பெரு முதல் சிலி வரையுள்ள கடற்கரைப் பகுதிகள் மற்றும் அர்ஜெண்டினாவின் டியரா டெல் குவேகுவோ போன்ற பகுதிகளில் இவை காணப்படுகின்றன. கடலில் 100 முதல் 150 மீட்டர் வரையுள்ள ஆழமுள்ள பகுதிகளில் இவற்றைக் காணலாம்.

அழியும் உயிரினங்களின் பட்டியலில் நீர்நாய்கள்

நீர்நாய்களின் பொதுவான ஆயுட்காலம் 4 முதல் 10 ஆண்டுகள். பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) புள்ளிவிவரங்கள்படி பாதிக்கும் மேற்பட்ட இனங்கள் இன அழிவைச் சந்திக்கின்றன. மிகப்பெரிய நீர்நாய், மெரைன் நீர்நாய், தெற்கு நதி நீர்நாய் (Southern river otter), சிறிய நகமுள்ள நீர்நாய் போன்ற இனங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன.

அழிந்து வரும் இந்த அரிய உயிரினங்களை இயற்கையுடன் இணைந்து வாழ விரும்பும் மனிதனால் மட்டுமே காப்பாற்ற முடியும்.

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/features/importance-of-world-otter-day-and-why-is-it-celebrated-1.8602824

சிதம்பரம் இரவிச்சந்திரன்