காலநிலை மாற்றம் கூடுதல் வானவில்களை உருவாக்கும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. பூமியின் மேற்பரப்பில் இருந்து முதன்மை வானவில்லை பகலில் மட்டுமே பார்க்க முடியும். அதற்கு சூரியனின் கோணம் 42 டிகிரிக்கும் குறைவாக இருக்க வேண்டும். நேராக விழும் சூரிய ஒளி மேகக்கூட்டங்களால் மறைக்கப்படக் கூடாது. அப்போது மழைநீர்த்துளி சூரிய ஒளியால் பிரதிபலிக்கப்பட்டு வானவில் தோன்றும்.

சூரியனின் கோணம் வானில் வானவில்லின் உயரத்தை தீர்மானிக்கிறது. 42 டிகிரிக்கும் கூடுதலாக இருந்தால், ஒளி பிரதிபலிப்பு அடிவானத்திற்குக் கீழிருந்தால், தரைமட்டத்தில் இருந்து வானவில்லைப் பார்க்க முடியாது. பார்ப்பவரின் பின்பக்கமாக 4 டிகிரி கோணத்தில் சூரியன் இருந்தால் வானவில்லைப் பார்க்கலாம். ஆனால் பார்ப்பவரின் தலை உச்சியில் சூரியன் 90 டிகிரியில் இருந்தால் வானவில் தெரியாது.

சூரியனின் உதயத்திற்கு முன் இந்த கோணம் சுழிக்கும் குறைவாக இருந்தால், பார்ப்பவருக்கு நேராக சூரியன் இருந்தால் வானவில் தெரியாது. இவை வானவில்லைப் பார்க்கத் தேவையான நிபந்தனைகள். மழை மற்றும் மேகங்களின் நிலை வானவில்லைக் காண உதவுகின்றன. மேகங்களின் நிலை, தூசுகளின் அளவு போன்ற மனிதக் குறுக்கீடுகளால் வானவில் தோன்றுவது பாதிக்கப்படுகிறது.rainbowசூழல் மாசினால் பாதிக்கப்படும் வானவில்

மனிதச் செயல்களால் வளி மண்டலத்தில் அதிகரிக்கும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு வானவில் தோன்றுவதைப் பாதிக்கிறது. மனோவா (Manoa) ஹவாயி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வுகளில் இருந்து 21ம் நூற்றாண்டில் இருந்ததை விட 2100ல் வானவில்கள் தரையில் தோன்றுவது 5% அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

எங்கு தோன்றும் புதிய வானவில்கள்?

வட அட்சரேகைப் பகுதிகள் மற்றும் உயரமான இடங்களில் புவி வெப்ப உயர்வினால் அதிக உறைபனி மற்றும் அதிக மழை ஏற்படும் என்பதால் அங்கு கூடுதல் வானவில்கள் தோன்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய தரைக்கடல் போன்ற, காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டு மழைக்குறைவு ஏற்படும் இடங்களில் இவை தோன்றும் எண்ணிக்கை குறையும்.

பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு

சூரிய ஒளியை மழைத்துளிகள் பிரதிபலிக்கும்போதே இவை தோன்றுகின்றன. அதனால் சூரிய ஒளியும், மழைப்பொழிவும் இவை ஏற்பட அவசியம். பசுமைக்குடில் வாயுக்கள் வளி மண்டலத்தில் அதிகமாக உமிழப்படும்போது அது மேகங்கள் தோன்றுவதையும், மழைப்பொழிவையும் பாதிக்கிறது.

வருங்காலத்தில் வானவில்கள் வாழ்நாளின் அன்றாட சிறப்பாக மாறப்போகும் இயற்கையின் நன்மையை நினைத்து நான் மகிழ்கிறேன் என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியரும், இப்போது நியூயார்க் பல்கலைக்கழக சூழலியல் துறை ஆய்வாளருமான கிம்பர்லி கார்ல்சன் (Kimberly Carlson) கூறுகிறார்.

சூழலின் அழகு சம்பவம் வானவில்லின் தோற்றம்

இவற்றிற்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை ஆராயும் முதல் உலகளாவிய ஆய்வு இது. வெப்ப அதிர்ச்சி, வெப்ப அலைத்தாக்குதல்கள் போன்றவை மூலம் காலநிலை மாற்றம் மக்கள் வாழ்வு, உடல் நலத்தை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கிறது என்பது பற்றியே அதிகம் ஆராயப்படுகிறது. ஆனால் வெகு சில ஆய்வுகளே சூழலின் அழகு நிகழ்வான வானவில் போன்ற இயற்கையின் அற்புதங்களுக்கும் மனிதன் ஏற்படுத்தும் சூழல் சீரழிவுகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை ஆராயப்படுகிறது என்று மனோவா சூழலியல் துறை ஆய்வு மாணவர் கமிலோ மோரா (Camilo Mora) கூறுகிறார்.

வானவில் வரைபடங்கள்

காலநிலை மாற்றம் நிகழும் இவ்வேளையில் வானவில் வரைபடங்கள் உருவாக்கப்படவேண்டும் என்கிறார் மோரா. ப்ளிக்கர் (Flickr) என்ற சமூக ஊடகத்தில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அனுப்பிய வானவில் படங்கள் மனோவா ஹவாயி பல்கலைக்கழக மாணவர்களால் பதிவேற்றப்பட்டு ஆராயப்பட்டது. ரைன்போ என்று லேபிளிடப்பட்டு அனுப்பப்பட்ட இந்த படங்கள் மூலம் அவை உருவான விதம், உருவான இடம் போன்ற விவரங்கள் தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

வானவில்களின் மாயாஜால உலகம்

கலைவடிவம், கொடி, யூகலிப்டஸ் மரம், விதவிதமான உணவு வகைகளாக வெவ்வேறு வடிவங்களில் படமெடுக்கப்பட்டிருந்த வானவில் படங்கள் ஆய்வு செய்யப்பட்டன என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியர்களில் ஒருவரும், மனோவா ஹவாயி பல்கலைக்கழக கடல், புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியின் (SOEST) முன்னாள் ஆய்வுமாணவருமான அமாண்டா வொங் (Amanda Wong) கூறுகிறார்.

வானவில் மாதிரி

மேக அடர்வு, படமெடுக்கப்பட்ட இடம், மேகங்களின் தோற்றம் மற்றும் நிலை, சூரிய கோணம் போன்றவற்றைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் வருங்காலத்தில் வானவில் உருவாகக் கூடிய மாதிரியை (rainbow prediction model) உருவாக்கினர். உலக நிலப்பரப்பில் இன்றுள்ள நிலையுடன் ஒப்பிடப்பட்டு வருங்காலத்தில் வானவில்கள் எங்கு எந்த எண்ணிக்கையில் தோன்றும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

தீவு நாடுகள்

தீவு நாடுகளில் வானவில்கள் வருங்காலத்தில் அதிகம் தோன்றும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. வானவில்லைப் பார்க்க தீவு நாடுகளே சிறந்த இடங்கள் என்று மனோவ பள்ளி (SOEST) பேராசிரியர் ஸ்டீவன் ப்யூசிங்கர் (Steven Businger) கூறுகிறார். தீவுநாடுகளில் கடற்காற்று வீசும்போது மழைத்துளிகள் உயரமான இடத்தில் உருவாகி அந்தந்தப் பகுதியில் சாரலை ஏற்படுத்துகிறது. இதனால் தெளிந்த வானில் சூரியன் மகத்தான வானவில்லை உருவாக்குகிறது.

வானவில்லின் உலகத் தலைநகரம்

ஹவாய் தீவுகள் வானவில்கள் அதிகம் தோன்றும் இடம் என்பதால் சமீபத்தில் அது வானவில்லின் உலகத் தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டது. இங்கு வருங்காலத்தில் மேலும் சில நாட்கள் கூடுதலாக வானவில் தோன்றும். வானவில் ஏற்படுவதால் மனித உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி ஆய்வில் எதுவும் கூறப்படவில்லை.

ஒலியும் ஒளியும் வானவில்லும்

என்றாலும் வானவில் மனித வரலாறு, கலாச்சாரம், அழகியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால் காலநிலை மாற்றம் பூமியில் மனிதன் பெறும் இயற்கையின் அனுபவங்களில் சூழல் சீரழிவுகள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. ஒலி, ஒளி போன்றவை சூழல் சீர்கேட்டினால் மாற்றமடைகிறது. இவை போன்றவற்றை பற்றி மேலும் அதிக ஆய்வுகள் தீவிரமாக நடத்தப்பட வேண்டும் என்று கார்ல்சன் கூறுகிறார்.

இந்த ஆய்வுக்கட்டுரை உலகளாவிய சூழல் மாற்றம் (Global Environmental Change) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.

** ** **

மேற்கோள்கள்:

https://www.mathrubhumi.com/environment/news/climate-change-may-increase-rainbows-1.8008937

&

https://thedailyguardian.com/more-rainbows-will-be-seen-due-to-climate-change-suggests-study/

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It