internet_cable.இந்தியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இணையத்தை பயன்படுத்துவோர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. மத்திய தரைக்கடலில் துண்டிக்கப்பட்டிருந்த கேபிள் இணைப்புகள் கடந்த வாரம் சரிசெய்யப்பட்டுவிட்டன. உலகம் முழுவதும் கடலுக்கடியில் கேபிள்கள் பதிக்கப்பட்டிருந்தாலும், மத்திய தரைக்கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்கள் முக்கியமானவை. ஏனெனில் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் கேபிள்கள் இந்த நெருக்கடி நிறைந்த பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன.

2008 ஜனவரி 30 ஆம் தேதியன்று கிழக்கு மத்திய தரைக்கடலில் அலெக்ஸாண்டிரியா மற்றும் எகிப்துக்கு அருகில் மூன்று கேபிள்களில் இரண்டு துண்டிக்கப்பட்டன. இதனால் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் 75 சதவீதம் பாதிக்கப்பட்டது. சில வாரங்களுக்குள் பழுது சரி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் டிசம்பர் 19 ஆம் தேதியன்று மூன்று கேபிள்களில் இரண்டு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சிசிலிக்கும் டுனீஷியாவுக்கும் இடையில் அந்த மூன்றாவது கேபிளும் சேதமடைந்திருந்தது.

எகிப்து முழுவதும் இதனால் இணையதள சேவை பாதிக்கப்பட்டது. குரல்சேவை 50 சதவீதம் குறைந்துபோனது. மேலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இந்தியாவிலும் அலைக்கற்றையின் அளவில் குறைவு ஏற்பட்டது. சேதத்தின் காரணம் முழுமையாக அறியப்படவில்லை. சூயஸ் கால்வாய் வழியாகச்சென்ற கப்பலின் நங்கூரம் ஒன்று கேபிளை துண்டித்திருக்கலாம் என்ற கருத்து வெளியானபோது எகிப்திய அதிகாரிகள் அதை மறுத்தனர். இதற்கு முன்பாக நீருக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் விளைவாக கேபிள்கள் சேதமடைந்தது உண்டு. இப்போதும்கூட அதுவே காரணமாக இருந்திருக்கலாம். மத்திய தரைக்கடல் பகுதி நகரும் தட்டுகளுக்கு இடையே இருப்பதால் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் நிலவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்தப்பிரதேசத்தில் நில நடுக்கத்தின் அளவு இதற்கு முன்பாக ரிக்டர் அளவுகோளில் 8.0 ஆக உணரப்பட்டுள்ளது. இந்த அளவு நிலநடுக்கம் கேபிள்களில் சேதத்தை ஏற்படுத்த போதுமானது. தரைவழியாக கேபிள் அமைத்தால் நிரந்தரத்தீர்வு கிடைக்கும் ஆனால் அதில் அரசியல் சிக்கல் இருக்கிறது. ஐரோப்பாவில் இருந்து துருக்கி, ஈரான், ஈராக், செளதி அரேபியா வழியாக கேபிள்களைப் போடலாம். இதற்கு ஈராக், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தடையில்லாத கேபிள் இணைப்பு தேவை என்றால் நாம் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.

- மு.குருமூர்த்தி

Pin It