சிறிதினும் சிறிது என்று பொருள்படும் வகையில் டாடா நிறுவனம் 'நானோ' என்ற பெயரில் புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சிங்கூர் ஆலை பிரச்சினை, டைட்டானியம் ஆலை பிரச்சினை என மக்களுக்கு எதிரான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் டாடா நிறுவனம், இந்த ஆண்டின் தொடக்கம் முதல் பலராலும் போற்றி புகழப்பட்டு வருகிறது. நடுத்தர வர்க்க மக்களை காந்தம் போல் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி கொண்ட நானோ கார், நாட்டின் சமீபத்திய சாதனைகளில் ஒன்றாக முன்னிறுத்தப்படுகிறது.

நடுத்தர குடும்பத்தினர் இனி தனித்தனி வாகனங்களில் செல்ல வேண்டியதில்லை. கார் வாங்க அதிக செலவு செய்ய வேண்டியதில்லை. நடுத்தர வர்க்க மக்களின் கனவு நனவாகிவிட்டது. டாடா நிறுவனம் மக்களுக்கு பெரும் வரத்தை தந்துள்ளது என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறது. டாடா நானோ கார் உண்மையில் வரமா, சாபமா?

நானோ கார் பெரும் சாபமாக மாறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நானோ காருடன் சிறு கார்களின் வருகை நிற்கப் போவதில்லை. நானோ காரின் வருகை சந்தையில் பெரும் போட்டியை ஏற்படுத்தும். தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் இந்திய நடுத்தர வர்க்கத்தினருக்கு கிடைக்கும் பெருமளவு பணத்தை, பிடுங்கிக் கொள்ள சந்தைகள் குறி வைத்து செயல்படுகின்றன. அதன் ஒரு பகுதிதான் இந்த நானோ கார். டாடாவைத் தொடர்ந்து இதர கார் தயாரிப்பு நிறுவனங்களும் குறைந்த விலை காரை அறிமுகப்படுத்தும் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

பெரும்பாலான நகரங்களில் இந்த கார்களுக்கு பெரும் சந்தை உள்ளது. அப்படி குறைந்த விலை கார்கள் சந்தையில் அதிகரிக்கும்போது பிரச்சினைகளும் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரித்துவிடும். ''இந்தக் கார்களின் மாசு வெளியீட்டளவு, பாதுகாப்புத் தரம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ, அரசோ கவலைப்படவில்லை'' என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் தூய காற்று உரிமைக்கான பிரசார ஒருங்கிணைப்பாளர் அனுமிதா ராய்சௌத்ரி எச்சகரிக்கிறார்.

அதிகரிக்கும் நெருக்கடிகள்

குறைந்த விலை கார்களின் வருகை, எல்லோரது பயணத்தையும் (!) சௌகரியமாக்கிவிடும். எல்லோரும் வசதியாகவும், வேகமாகவும் கார்களில் செல்லலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. இது எல்லாமே மாயை என்று கணக்கெடுப்புகள் அடித்துக் கூறுகின்றன. குறைந்த விலை கார்கள் ஏற்படுத்தும் முதல் ஆபத்து போக்குவரத்து நெருக்கடி, இரண்டாவது ஆபத்து எரிபொருள் நுகர்வு அதிகரிப்பு, மூன்றாவது ஆபத்து காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, நான்காவது மற்றும் முக்கிய ஆபத்து விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள்.

கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்கெனவே அதிகரித்து விட்டது. இந்திய சிறு, பெரு நகரங்களில் போக்குவரத்து நான்கு கால்களில் ஊர்ந்து செல்வது அன்றாட நிகழ்வாகிவிட்டது. தில்லியில் பயண வேகம் 1997ல் மணிக்கு 20-27 கி.மீ. இருந்தது, 2002ல் மணிக்கு 15 கி.மீ. ஆக குறைந்துவிட்டது. கோல்கத்தாவில் சராசரி பயண வேகம் மணிக்கு 15-20 கி.மீ.ல் இருந்து, 7 கி.மீ ஆக குறைந்துவிட்டது. சென்னை சாலைகளின் பயண வேகம் மணிக்கு 13 கி.மீ. ஆகக் குறைந்துள்ளது.

இதற்குத் தீர்வாக அதிக சாலைகளை அமைக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் இது நெருக்கடியை அதிகரிக்கவே செய்யும். 10 சதவிகித சாலைகள் அதிகரித்தால் 9 சதவிகித போக்கவரத்து நெருக்கடி அதிகரிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த விலை கார்களின் எரிபொருள் செலவு திறன், தற்போது சந்தையில் உள்ள பெரிய கார்களைவிட சிறப்பாக இருக்கிறது என்றபோதும், குறைந்த விலை கார்களின் எண்ணிக்கை கட்டுமீறி அதிகரிக்கும் என்பதால், எரிபொருள் அதிகம் நுகரப்படும். அதற்கேற்ப மாசுபாடும் அதிகரிக்கும். பொதுப்போக்குவரத்து மூலம் கிடைத்து வரும் சுற்றுச்சூழல் லாபங்களை இந்தக் கார்கள் பறித்துவிடும்.

எரிபொருள் செலவுடன் ஒப்பிடும்போது, குறைந்த விலை கார்களின் திறன் இருசக்கர வாகனங்களைவிட சிறந்ததல்ல. எப்படிப் பார்த்தாலும் ஒரு காரில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிகபட்சம் 20 கி.மீ.தான் செல்ல முடியும். ஆனால் சிறந்த இருசக்கர வாகனத்தில் 60 கி.மீ. செல்லலாம். இந்தக் கார்கள் யுரோ 4 (பாரத் 4) என்ற வாயு வெளியீட்டு கட்டுப்பாடு அளவுகள் வருவதற்கு முன்னால் சந்தைக்கு வந்துள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் வகுக்கப்பட்ட பாரத் 2 கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் யுரோ 3 (பாரத் 3) கட்டுப்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுவே ஐந்து ஆண்டு பழையது. சமீபகாலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின்படி இந்தக் கார்கள் தயாரிக்கப்படவில்லை என்பதால் காற்று மாசுபாடு அதிகரிக்கும். இந்தியாவில் உள்ள 57 சதவிகித நகரங்களில் காற்று மாசுபாடு மிக மோசமாக இருக்கிறது. குறிப்பாக, தூசுப் புகை (பார்டிகுலேட்) அளவு மிக அதிகம். கொல்கத்தா, ஹெளராவில் நைட்ரஜன் டைஆக்சைடு, தூசுப் புகை (பார்டிகுலேட்) அளவு மிக அதிகம்.

இந்தக் கார்கள் டீசலில் இயக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களில் இதுவும் ஒன்று. தற்போதுள்ள கட்டுப்பாடுகளின்படி பெட்ரோல் கார்களைவிட, மூன்று மடங்கு நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் தூசு புகையை (பார்டிகுலேட்) டீசல் வெளியிடும். இந்த மாசு மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. டீசல் பயன்பாட்டுக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றம் பல கேள்வி எழுப்பியுள்ளது. தில்லி பேருந்துகளில் இயற்கை எரிவாயுவுக்கு மாற்றியதால் கிடைத்த லாபம், டீசல் கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் பறிபோகும் என்று அஞ்சப்படுகிறது.

வேளாண் பயன்பாடு, சரக்குப் போக்குவரத்தை கருத்தில் கொண்டே டீசலுக்கு குறைவாக வரி விதிக்கிறது. ஆனால் இந்த வசதி தவறாக பயன்படுத்தப்படுகிறது. கந்தக அளவு 10 பிபிஎம் (கனஅளவில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு) கொண்ட தூய்மையான டீசலை பயன்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். டீசல்-பெட்ரோல் இடையே நிலவும் சமனற்ற விலை இடைவெளியை குறைக்க வேண்டும். டீசல் கார்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், சுற்றுச்சூழல் சீர்கேடு பயங்கர நிலையை எட்டும்.

கார்கள் அடிப்படை பாதுகாப்புத் தரத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தும் சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்படவில்லை. 'முழு சேத பரிசோதனை' மூலம் விபத்தில் ஒரு கார் மோதும்போது, நசுங்கும் தன்மையைப் பொறுத்து பயணிகள் மீது எந்த வகையில், எவ்வளவு காயம் ஏற்படும் என்று கண்டறியப்படுகிறது. இந்தச் சோதனை குறைந்த விலை காரில் நடத்தப்படவில்லை. விபத்தில் பயணிகள் பாதிக்கப்படுவதை குறைக்கும் காற்றுப் பைகள், எதிர்முனை பிரேக் அமைப்பு போன்றவை இந்தக் கார்களில் இல்லை. ஐரோப்பாவைப் போல கார்களின் பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி வாடிக்கையாளர்களுக்கு உண்மைகளைக் கூறாமல் இந்திய கார் உற்பத்தியாளர்கள் மறைக்கிறார்கள். பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்யததால்தான் இந்தக் கார்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. பாதுகாப்பு தரத்தை உறுதி செய்தால் குறைந்த விலைக்குத் தர முடியாது.

எல்லை மீறும் கார்கள்

நகர்ப்புறங்களின் பொது இடங்களை பயன்படுத்த கார்கள் எந்தவிதமான கட்டணத்தையும் செலவு செய்வதில்லை. பொதுப்பணத்தில் கட்டப்பட்ட சிறந்த பாலங்கள், சாலைகளை பெருமளவு ஆக்கிரமித்து கார்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. நகர்ப்புறத்தில் நிலவும் கடும் இடநெருக்கடிக்கு இடையே கார்களை சாலைகளில் நிறுத்தி இடம் ஆக்கிரமிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள உள்சாலைகளை ஆக்கிரமித்து வீட்டுக்கு வெளியே கார்கள் நிறுத்தப்படுகின்றன.

இந்தியாவில் கார்களைவிட பொதுப்போக்குவரத்தான பேருந்துகளுக்கு 2.3 மடங்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இருந்தபோதும், கார்களுக்கு இன்னும் வரிக்குறைப்பு செய்ய வேண்டும் என்று கார் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது பின்னோக்கி இழுக்கும் மாற்றமாகும். குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற டீசலால் ஓடும் குறைந்தவிலை கார்கள், 'தேனீக்களை ஈர்க்கும் தேனடையைப் போன்று' நடுத்தர வர்க்கத்தினரை கவர்ந்து இழுக்கும். எனவே, இந்தக் கார்களை பெருமளவு விற்பனை செய்யப்படுவதற்கு முன் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்.

அப்படி மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் பெரிய அளவில் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. குறைந்த விலை கார்களின் வரவு பொருளாதார, சுற்றுச்சூழல், சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும். சிறு கார்களின் வரவு பொதுப் போக்குவரத்து, இருசக்கர வாகனப் போக்குவரத்தை காவு வாங்கும். நகர்ப்புற போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் சீர்கேடுதான் அவை நமக்குத் தரும் பலன்கள் என்கிறது தில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம். சின்னஞ்சிறு கார்களுக்குள் இப்படி பயங்கரங்கள் புதைந்துள்ளன. நாம் எதை வாங்கப் போகிறோம்? வரத்தையா, சாபத்தையா?

வீதிகள் மக்களுக்கே : ஐரோப்பாவின் வழிகாட்டுதல் முயற்சி

காலை 9 மணி. பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்லும் இளவயதினர், வேலைக்குச் செல்லும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கால்களில் சக்கரம் கட்டிக் கொள்ளாத குறையாக இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், மின்ரயில்கள் என்று கிடைத்த வாகனங்களில் பறக்கின்றனர்.

அதோ அந்தச் சாலை போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொண்டுவிட்டது. அனைவரும் பெருமூச்சு விடுகின்றனர். சிலர் சலித்துக் கொள்கின்றனர். சிலர் வெறுப்படைகின்றனர். என்ன செய்வது, இன்றும் போக்குவரத்து நெருக்கடியில் எங்கள் வாகனம் சிக்கிக் கொண்டுவிட்டதே. சிக்கிக் கொண்ட நூல் கண்டுபோல் எல்லாம் குழம்பிக் கிடக்கின்றன.

நம் ஊரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுதான் நிலைமை. சமீபத்தில் நாளிதழ்களில் ஒரு படம் வெளியானது. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகர முக்கிய வீதியில் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து இடையர்கள் எதிர்ப்பு தெரிவித்ததே அந்தப் படம். ஸ்பெயின் நாட்டின் வடக்கு, தெற்குப் பகுதிகளை இணைத்த இந்தப் பாதை 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அந்தச் சாலையை மாட்ரிட் நகரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி ஆக்கிரமித்துக் கொண்டதால் மேய்ச்சல் நிலமும், கால்நடைகளை ஓட்டிச் செல்வதற்கான பாதைகளும் பறிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வழக்கமாக கார்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பாதையில் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து இடையர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இடையர்கள்.

ஐரோப்பா முழுவதும் இதுபோன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பெருகி வருகின்றன. நகரமயமாதலால் கிராமப்புறங்கள், கிராம மக்களின் வாழ்வு ஆதாரங்கள் பறிக்கப்படுகின்றன. நகரச் சாலைகளை மேட்டுக்குடியினரின் கார்கள் அடைத்துக் கொள்கின்றன. இதற்கு எதிர்ப்பு வலுத்து கார்களை குறைக்க வலியுறுத்தும் மக்கள் இயக்கங்கள் பெருகி வருகின்றன. ஐரோப்பாவில் கடந்த ஆண்டு செப். 16 முதல் செப். 22 வரை கார் பயண குறைப்பு வாரமாக அனுசரிக்கப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் மையக்கரு 'வீதிகள் மக்களுக்கே' என்பதுதான்.

போக்குவரத்து பிரச்சினைகளைத் தீர்க்க கார்கள் உதவாது. அவை போக்குவரத்து நெருக்கடியை அதிகரிக்கவே செய்யும். கார்களை அதிகம் பயன்படுத்துவதால் காற்று, ஒலி மாசுபாடு, எரிபொருள்-பராமரிப்புச் செலவு, நிறுத்துமிட பிரச்சினைகள் போன்றவை பெருமளவு அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான விழிப்புணர்வு பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, கார் ஓட்டாத நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன.

கார்களக்குப் பதிலாக நிலைத்த, திறன்மிக்க பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவது சுகாதாரமான வாழ்க்கையை தரும். அதை வலியுறுத்தும் வகையில் அந்த வாரம் முழுவதும் கச்சா எண்ணெய் எரிபொருள்கள் பயன்படுத்தாத நடை, சைக்கிள் போன்ற பயண முறைகள், பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டது.

- ஆதி

Pin It