பூமியில் வாழும் மனிதர்களுக்கு உண்ண உணவு, இருக்க இடம் போல உடுக்க உடை அத்தியாவசியம். விண்வெளிக்கு செல்பவர்களுக்கும் அவர்கள் உடுத்திக் கொள்ளும் ஆடை விண்வெளி வாழ்வு மற்றும் ஆய்வுப் பணிகளில் முக்கிய இடம் பெறுகிறது. இந்த வரிசையில் நாசா ஆர்டிமிஸ் திட்டத்தின் கீழ் நிலவிற்கு விரைவில் பயணிக்கும் வீரர்களுக்கான புதிய வடிவமைப்புடன் கூடிய ஆடை மாதிரிகளை சமீபத்தில் ப்ளோரிடா ஹூஸ்ட்டன் ஜான்சன் விண்வெளி ஆய்வுமையத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

காலத்திற்கு ஒவ்வாமல் போன ஆம்ஸ்ட்ராங்கின் ஆடைகள்

அப்போலோ வீரர்கள் அணிந்து கொண்டு சென்றதை விட கூடுதல் வசதியுடனும், பெண்களுக்கு ஏற்ற வகையிலும் இந்த ஆடைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவருக்குப் பின் நிலவிற்கு சென்றவர்கள் அணிந்திருந்த ஆடைகள் இப்போது காலத்திற்கு ஒவ்வாதவையாக மாறி விட்டன. இதனால் புதிய ஆடைகள் பல நவீன தொழில்நுட்பங்களுடனும் விண்வெளிச் சூழலுக்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.spacesuit2024ல் நிலவுப் பயணம்

டெக்சாஸைத் தலைமையகமாகக் கொண்ட ஆக்சியம் (Axiom) என்ற நிறுவனமே இவற்றை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. 2022 டிசம்பரில் ஆர்டிமிஸ்1 திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய தலைமுறை சக்தி வாய்ந்த ஏவுவாகனம் மற்றும் ஓரியன் (Orion) கலனை பயணிகள் இன்றி நிலவிற்கு வெற்றிகரமாக அனுப்பி நாசா பூமிக்குத் திரும்பிக் கொண்டு வந்தது. ஆர்டிமிஸ்2 திட்டத்தின் கீழ் நாசா மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் இணைந்து 2024ல் நிலவிற்கு சென்று திரும்பும் நான்கு வீரர்களின் பெயர்களை அறிவிக்கவுள்ளது.

தென்துருவம் செல்லும் மனிதன்

இந்தப் பயணம் வெற்றி பெறும்போது 2030களின் முடிவிற்குள் வரலாற்றிள் முதல்முறையாக நிலவின் தென் துருவத்திற்கு வீரர்கள் செல்வர். இப்பயணத்தில் வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் வீரரும் நிலவுப்பயணம் மேற்கொள்வார்.

அடுத்த பயணத்தில் வெள்ளையர் அல்லாத பயணிகளை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. கிரேக்க புராணக் கடவுள் அப்போலோவின் சகோதரியான ஆர்டிமிஸின் பெயரே இத்திட்டங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. மனிதனின் வருங்கால செவ்வாய் ஆய்வுகளுக்கு நிலவை ஒரு இடைத்தங்கல் இடமாக பயன்படுத்துவதே இதன் நோக்கம். புதிய ஆடைகள் பல விஞ்ஞானிகள் வருங்காலப் பயணங்களின்போது நிலவை நன்கு ஆராய உதவியாக இருக்கும் என்று நாசா தலைவர் பில் நெல்சன் (Bill Nelson) கூறியுள்ளார்.

புதிய ஆடைகள் எப்படி இருக்கும்?

1969 முதல் 1972 வரை நாசா மேற்கொண்ட ஆறு நிலவுப் பயணங்களிலும் சென்ற 12 பேரும் ஆண்களே. கடந்தகால விண்வெளி ஆடைகளில் இருந்து புதிய ஆடைகள் முற்றிலும் வேறுபட்டவை. ஆக்சியம் நிறுவனம் இந்த ஆடைகளுக்கு ஆக்சியம் கூடுதல் வாகன ஆடை (Axiom Extravehicular Mobility Unit AxEMU) என்று பெயரிட்டுள்ளது. இவை எல்லா வயதினரும் அணிய ஏதுவாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

முன்பை விட கூடுதல் உயிர் காக்கும் வசதிகள், அழுத்த மேலாண்மை மற்றும் விண்வெளியில் உடுத்துவதற்கேற்றவாறு இவை உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் உண்மையான தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மாதிரி ஆடைகள் கரியின் சாம்பல் நிறத்தில் ஆரஞ்சு மற்றும் நீல நிறக் கோடுகளுடன் மார்புப் பகுதியில் ஆக்சியம் நிறுவனத்தின் அடையாளச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

அதிக சூரிய ஒளி மற்றும் வெப்பம் காணப்படும் நிலவின் தென்துருவத்தில் அதை சமாளிக்க அந்தப் பயணத்திற்கான ஆடைகள் வெள்ளை நிறத்திலேயே தயாரிக்கப்படும் என்று ஆக்சியம் நிறுவனம் கூறியுள்ளது. புத்தாடை அணிந்து பூமியில் இருந்து நிலவுக்குச் செல்லும் வீரர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள் நாளை மனித குலம் அங்கு குடியேற உதவும் என்பது உறுதி.

மேற்கோள்:https://www.theguardian.com/science/2023/mar/16/nasa-reveals-new-spacesuit-for-artemis-moon-landing

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It