உணவுக்குழலில் ஏற்படும் புற்றுநோய் இந்தியர்களை அதிகம் தாக்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை எப்படிக் கண்டறிவது? என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?

உணவுக்குழாய் என்பது வாயையும் இரைப்பையும் இணைக்கும் ஒரு குழாய். இது 25 செ.மீ. நீளம் உள்ளது. கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து மார்பு வழியாக வயிற்றில் உள்ள இரைப்பையை அடையும். இந்தக் குழாயின் முக்கிய வேலை நாம் உண்ணும் உணவை வாயிலிருந்து வயிற்றுக்கு எடுத்துச்செல்வது தான். இந்தக் குழாயில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டாலும் நாம் உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படலாம். தொண்டை அடைத்துக்கொள்வது போன்ற உணர்வு ஏற்படும்.

இந்த நோய் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கும். புகை பிடிப்பவர்கள், புகையிலை பயன்படுத்துபவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், அதிகமான சூட்டில் காபி மற்றும் டீ அருந்துபவர்களுக்கு இந்நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். உடம்பில் உள்ள தாதுப்பொருட்கள் குறைந்தாலும் இந்நோய் வரலாம். நோய் முற்றும் நிலையில் பக்கத்திலுள்ள முக்கியமான உறுப்புகளுக்கும் உடலின் மற்ற பகுதிக்கும் பரவ வாய்ப்புள்ளது. இதனால் குரல் மாறும். முதுகுவலியும் ஏற்படலாம்.

புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அறுவை சிகிச்சை செய்து கட்டி உள்ள உணவுக்குழாயை அகற்றி விட்டு அதன் இடத்தில் இரைப்பையை உணவுக்குழாய் போல் மாற்றியமைக்கலாம். இந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நோயாளியால் முன்பு போல் உணவு உண்ண முடியும். அறுவை சிகிச்சை நிலையை தாண்டி விட்டால் கீமோதெரபி மூலம் சிகிச்சை மேற்கொள்ளலாம். உணவுக்குழாய் முழுவதுமாக அடைத்து விட்டால் லேசர் கதிர்வீச்சால் துளைபோட்டு உணவு உட்கொள்ளலாம்.

ஸ்டெண்ட் எனப்படும் செயற்கைக் குழாய்களையும் உணவுக்குழாயில் பொருத்தலாம்.

Pin It