பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறிப்பாக இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் (Artificial sweeteners) மன அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவில் நடந்த இந்த ஆய்வே, அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் கலக்கப்பட்ட பானங்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் மன அழுத்தத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி நடத்தப்பட்ட விரிவான மிகப் பெரிய ஆய்வு.processed beverages

இத்தகைய உணவுகள் பக்கவாதம், மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மாசசுசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் ஹார்வோர்டு மருத்துவப் பள்ளி ஆய்வாளர்கள் இதற்காக பெண்களின் உணவு முறை மற்றும் மன நலம் பற்றிய நீண்ட கால தரவுகளை ஆராய்ந்தனர்.

இந்த ஆய்வுகள் 2003-2017 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்தன. ஆய்விற்கு முன்னால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படாத நடுத்தர வயதைச் சேர்ந்த முப்பதாயிரத்திற்கும் கூடுதலான, பெரும்பாலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண்கள் இதில் பங்கேற்றனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மொத்த அளவு மற்றும் பதப்படுத்தப்பட்ட தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், இனிப்பு திண்பண்டங்கள், உடனடியாக சாப்பிடக்கூடிய சாப்பாடு, கொழுப்புள்ள பொருட்கள், சாஸ் வகைகள் (sauces), பதப்படுத்தப்பட்ட பால் பொருட்கள், சுவையான தின்பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பானங்கள் மற்றும் செயற்கை இனிப்புகள் போன்ற பல வகை உணவுகள் ஆராயப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்கள் இவ்வகை உணவுகளை எடுத்துக் கொண்ட பிறகு பொதுவாக மன அழுத்தம் ஏற்பட காரணங்களாகக் கூறப்படும் மற்ற ஆரோக்கியப் பிரச்சனைகள், வாழ்க்கை முறை, சமூகப் பொருளாதார நிலை போன்றவற்றின் தாக்கம் இல்லாத நிலையில் அவர்களில் எத்தனை பேருக்கு செயற்கை உணவுகளால் மன அழுத்தம் ஏற்பட்டது என்று ஆராயப்பட்டது. இந்த ஆய்வுக் கட்டுரை ஜாமா நெட் வொர்க் ஓப்பன் (journal JAMA Network Open) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

உண்ணும் உணவில் ஒரு நாளைக்கு நான்கு மடங்கிற்கும் குறைவாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களைக் காட்டிலும் ஒன்பது அல்லது அதற்கும் அதிகமாக இத்தகைய உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட 49% அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஒரு நாளைக்கு மூன்று முறைக்கும் குறைவாக இந்த வகை உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு அவற்றை நிரந்தரமாக சாப்பிடுபவர்களைக் காட்டிலும் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது.

மனநிலைக்கு காரணமாகும் உணவுகள்

ஒருவரின் மனநிலைக்கு (mood), மூளையில் இருக்கும் குறிப்பிட்ட சில சமிஞ்சை மூலக்கூறுகளைத் தூண்டும் பரிமாற்ற நிகழ்வுகள் பொறுப்பாக உள்ளன. பதப்படுத்தப்பட்ட உணவுகள் இவற்றைப் பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பரிசோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

“மன அழுத்தத்திற்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை இந்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. செயற்கை இனிப்பூட்டிகளால் இதயத்தின் வளர்சிதை செயல்பாடுகள் பாதிக்கப்படுவது பற்றிய புதிய கவலை இதனால் விஞ்ஞானிகளிடையில் ஏற்பட்டுள்ளது. இத்தகையவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் வழிமுறைகளைத் தீவிரமாக ஆராய வேண்டும்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மனித வளர்சிதை மாற்றம் பற்றிய பிரிவில் ஆய்வுகளைத் தொடரும் ஓய்வு பெற்ற பேராசிரியர் கீத் ப்ரெயின் (Keith Frayn) கூறுகிறார்.

“பிற வகை பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் ஆராயப்பட வேண்டும்” என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மரபணுவியல் கழக கௌரவப் பேராசிரியர் டேவிட் கர்ட்டஸ் (Prof David Curtis) கூறுகிறார்.

“ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆய்வுகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதனால் ஆய்வு முடிவுகள் நம்பகமானது. பதப்படுத்தப்பட்ட உணவுகளால் அவர்களிடம் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உருவாயின என்று இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று மாசிசூசெட்ஸ் மருத்துவமனை க்ளினிக்கல் மற்றும் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் மற்றும் ஆய்வுக்குழுவின் இணை ஆசிரியர் பேராசிரியர் ஆண்ட்ரூ டீச் சேன் ( Prof Andrew T Chan) கூறுகிறார்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உடல் நலம் மட்டுமே பாதிக்கப்படுகிறது என்று கருதப்பட்ட நிலையில் இப்போது அவை மனநலத்தையும் பாதிக்கின்றன என்று கூறும் இந்த ஆய்வு முடிவுகள் மனிதன் இயற்கை வழிக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/food/2023/sep/20/ultra-processed-food-linked-higher-risk-depression-research-finds?

சிதம்பரம் இரவிச்சந்திரன்