மலேசியாவுக்கு அடைக்கலம் தேடி வந்துள்ள ஈழத் தமிழர்களை திருப்பி அனுப்பாமல், அவர்களைத் தங்க அனுமதிக்குமாறு சென்னையிலுள்ள மலேசிய தூதரக அதிகாரி யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் திராவிடர் கழகம் தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் தோழர்கள் மணியரசன், மற்றும் அவரது அமைப்பைச் சார்ந்த தோழர்கள், கழக சார்பில் ச. குமரன், சேத்துப்பட்டு ராசன் உள்ளிட்ட25 தோழர்கள், தமிழ்ச் தேசிய விடுதலை இயக்கத் தோழர்கள் நேரில் சென்று தூதரக அதிகாரி யிடம் ஏப். 25 ஆம் தேதி மதியம் மனுவை அளித்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் வன்னி முகாம்களில் வதைபட்டு பின்னர், இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் சொந்த வீடுகளும் கிராமங்களும் தகர்க்கப்பட்டும், சிங்களர்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் இருப் பதால் வாழ வழியின்றி மலேசியாவுக்கு அடைக்கலம் தேடி வந்துள்ளார்கள். அவ்வாறு படகில் வந்த ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட 75 பேரை மலேசிய அரசின் கப்பல் படை தடுத்து, பினாங்குத் துறைமுகம் அருகில் நிறுத்தியுள்ளது.

அவர்களுக்கு அடைக்கலம் தர மறுப் பதுடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் போவதாக மலேசிய அரசு கூறுகிறது. திருப்பி அனுப்பினால் இலங்கை அரசு எங்களைக் கொன்று விடும். அடைக்கலம் கொடுங்கள்; திருப்பி அனுப்பினால் குழந்தைகளுடன் நாங்கள் அனைவரும் கடலில் குதித்து இங்கேயே செத்துப்போவோம்” என்று தமிழ் மக்கள் கூறுகிறார்கள்.

மலேசிய அரசு, மனித நேய அடிப்படை யிலும், ஐ.நா. மனித உரிமை அட்டவணைப் படியும் போரினால் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி வந்துள்ள ஈழத் தமிழர்கள் மலேசியாவில் தங்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் அவ்வாறு திருப்பி அனுப்பினால் 75 உயிர்களை மலேசிய அரசு ஒரு கொலைக் களத்திற்கு அனுப்பி வைத்ததாகும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

.
-பெரியார் முழக்கம் செய்தியாளர்

 

Pin It