பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர்ச்சத்துக்களும் தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது இலை, பட்டை என அனைத்துமே மருத்துவக்குணம் கொண்டுள்ளன.

koyyaவைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. கொய்யா மரத்தின் இலைகள் திசுக்களைச் சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை. மலச்சிக்கல் போக்கும். கஷாயம் வாந்தியைத் தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையைக் காய்ச்சிக் கொப்பளிக்கலாம்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றது. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம், புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலைத் தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கைக் குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அரிந்து சாப்பிடுவதைவிடப் பழத்தை நன்றாகக் கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும் ஈறுகளும் பலப்படும்.

வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்குக் கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யாவின் தோலில்தான் அதிகச் சத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக்கூடாது. முகத்திற்குப் பொலிவையும் அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமைத் தோற்றத்தைக் குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

மது போதைக்கு அடிமையான மதுப்பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும். ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகிவிடும். மிக எளிதில் மதுவின் பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

எவ்வாறு சாப்பிட வேண்டும்?

சாப்பிடுவதற்குமுன் இப்பழத்தைச் சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிடுவது நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தைச் சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தைச் சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உணடு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா, போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தைச் சாப்பிடக்கூடாது. கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிற்று வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிட வேண்டும். அளவிற்கதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

நன்றி : இனிய திசைகள், அக்டோபர் 2014

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.