போலியோ பரபரப்பு விசயமாக இருக்கிறதே ஒழிய, உண்மை விசயங்கள் பொதுமக்கள் பார்வைக்கு சரியாக சென்றடைய முடியாத சூழல் இருப்பதே நிதர்சனமான உண்மை. பத்திரிக்கைகளில் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், சில முக்கிய விசயங்கள் சொல்லப் படாமலே போய்விட்டது வேதனையானது. அவை

1. எந்த மருந்தும் (போலியோ சொட்டு மருந்து உட்பட) ஒவ்வாமை காரணமாக இறப்பை / பிற பின் விளைவுகளை ஏற்படுத்த முடியும். போலியோ சொட்டு மருந்து காரணமாக இறப்பு ஏற்படுவது அரிது என்பது உண்மையே. இருப்பினும் அதில் கலப்படம் ஏற்பட்டால், சொட்டுமருந்தின் பாதுகாக்கும் திறனை காக்கும் வகையில் சேர்க்கப்படும் (Preservatives) வேதிப் பொருட்கள் வினை புரிந்தால் இறப்பு நிகழக்கூடும் என இருந்தும் கலப்படம் (Contamination) குறித்து பத்திரிக்கைகளில் எதுவும் எழுதப்படவில்லை என்பது வேதனையே. அமெரிக்காவில் Thirmersal Preservation கலந்த தடுப்பூசிகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் தொடர்ந்து அது புழக்கத்தில் இருப்பது குறித்து மருத்துவர்கள், அரசு எதுவும் பேசுவதில்லை)

2. நடுநிலையாளர்களைக் கொண்டு போலியோ மருந்தால் பாதிப்பு / உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பதை அறிய உண்மை அறியும் குழுவை அரசு ஏற்படுத்தி இருந்தால், அதன் முடிவை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டிருந்தால் அது பொதுமக்கள் மனத்தில் எழுந்த அச்சத்தை போக்கியிருக்கக் கூடும். அப்படி ஏன் செய்யவில்லை?

“1961 க்கு பின் அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவிற்கும் காரணம் - போலியோ சொட்டு மருந்துதான்” - போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்த ஜோனல்சால்க் என்பவரின் வாக்குமூலம் இது. “போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர சொட்டு மருந்து முயற்சிகளுக்குப் பின்னரும், அரசு ஆவணங்களை உற்று நோக்குகையில் இச்சொட்டு மருந்தால் பெருமளவு பலன் ஏதும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.”- சொன்னவர் திரு. சாபின். போலியோ சொட்டு மருந்தை உருவாக்கியவர்.

போலியோ மருந்து கண்டுபிடித்தவர்களே இப்படி கூறுவது அவர்களது மனசாட்சிக்கு / மக்கள் நலனுக்கு சான்றாக உள்ளது. திருவள்ளூரில் நடந்த அம்மை தடுப்பூசி இறப்பிற்கான முழு காரணங்களையும் இன்று வரை அரசு வெளியிடவில்லை. ஏன்? அம்மை தடுப்பு மருந்தின் மூடிகளில் குறைபாடு இருப்பதை (இதனால் கலப்படம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்) சுட்டிக்காட்டிய பத்திரிக்கைகள் தற்போது போலியோ மருந்தில் கலப்படம் ஏற்பட்டிருக் கலாம் எனும் செய்தியை எழுதாமல் விட்டது எதனால்?

சில வருடங்களுக்கு முன்னர் அஸ்ஸாமில் போலியோ சொட்டு மருந்து கொடுத்தபின் 10 குழந்தைகள் இறந்ததும், 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டதும் செய்தியாக இருந்தும் அதை எழுதாமல்விட்டது எதனால்? 2002ல் ஆண்டில் உத்திரபிரதேசத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுத்தும் 26 குழந்தைகளை போலியோ பாதித்ததன் விளைவாக இந்திய அரசே, உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம் எழுதி, அதன் தரம் குறித்து கேள்வி எழுப்பியதன் விளைவாக, அப்போலியோ சொட்டு மருந்தை பரிசோதித்ததின் விளைவாக இதில் 17 வகை கலப்படங்கள் (உம். Estraliol) இருப்பது தெரியவந்தது அரசிற்கு தெரியாதா?

Tehelha, July 28, 2007ல் 6ம் பக்கத்தில் உத்திர பிரதேசத்தில் “புழக்கத்தில் உள்ளதை விட 5 மடங்கு அதிக வீரியம் கொண்ட போலியோ சொட்டு மருந்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, அவர்களது சம்மதத்தை பெறாமலே அவர்கள் மீது பரிசோதிக்கப் பட்டதும், அச்சொட்டு மருந்தை ஆய்வுக்காக சோதிக்கப்படும் சொட்டு மருந்து என்பதை பொதுமக்களுக்கு தெரியப் படுத்தாமல் இருந்ததையும்” (இவை சட்டப்படி குற்றமாகும்) Dr. ஜேக்கப் புலியேல் தெளிவாக எழுதியிருந்ததையும், அதன் காரணமாக உ.பி.யில் பல குழந்தைகள் போலியோ பாதிப்பிற்கு உள்ளாகி யிருக்கக் கூடும் என்பதையும் எழுதியிருந்ததை (தமிழக) பத்திரிக்கைகள் மறந்து போனது எதனால்?

Dr.ஜேக்கப் புலியேல் Indian Medical Association ன் தடுப்பூசி/ மருந்து உப பிரிவின் துணைத்தலைவர் என்பது இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அவரும் குழுவினரது நல்ல உள்ளத்தை பாராட்டியாக வேண்டும். Hindu நாளிதழில் Dr.ஜேக்கப் புலியேல் போலியோ சொட்டுமருந்தின் பிரச்சனைகள் குறித்தும், அது சரியாக வேலை செய்யவில்லை என்றும் 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்ததின் விளைவாக இந்தியாவில் 1600 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டனர் என்றும் 27,000 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டிருக் கலாம் என இருந்தும், அதை உறுதிபடுத்த அரசு முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளாததை வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் இரட்டை நிலைப்பாட்டையும் அவர் தெளிவாக எழுதியுள்ளார். எந்த உலக சுகாதார நிறுவனம் இந்திய சூழலுக்கு போலியோ சொட்டு மருந்து சரிபட்டு வராது என்று சொல்லி போலியோ தடுப்பூசியை பயன்படுத்த இந்திய அரசை வலியுறுத்தியதோ, அதே உலக சுகாதார நிறுவனம்தான் அரசியல் காரணங்களுக்காக? (படிக்க Politics of Polio -July 11 Hindu, 2008 by Dr.Bhargawa) இந்திய அரசை மீண்டும் தீவிர சொட்டுமருந்து திட்டத்திற்கு வற்புறுத்தியதை தெளிவாக கூறுகிறார். இதிலிருந்து உலக சுகாதார நிறுவனம் என்பது நடுநிலையானது அல்ல என்பது தெளிவாக புரியும். மேலும் எந்த பத்திரிக்கைகள் இதைப்பற்றி வரிந்துகட்டி எழுதியதோ, அவைகள் தற்சமயம் முழுமையான விசயங்களை எழுதாமல், ஒரு பத்தி மட்டும் எழுதி வருவது வேதனையானது.

சொட்டு மருந்தின் இறப்புக்கான காரணத்தை அறிய நடுநிலையாளர்கள் குழுவை ஏற்படுத்தாத வரை உண்மைக் காரணங்கள் வெளிவராமல் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். தடுப்பூசி / மருந்து மரணங்களில் அரசு சுகாதாரத்துறை அதிகாரி களின் முக்கிய கூற்றாக இருப்பது. “அதே மருந்து வேறு பல குழந்தை களுக்கு கொடுக்கப் பட்டதும், அவர்களுக்கு இறப்பு / பாதிப்பு நிகழவில்லை என்பதும்”ன். இந்த கூற்று முற்றிலும் தவறானது என்பது அரசு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் நன்றாகவே தெரியும்.

ஒவ்வொரு குழந்தையின் நோய் எதிர்க்கும் திறன் வித்தியாசமாக இருப்பதால் 10 பேருக்கு பாதிப்பை / இறப்பை ஏற்படுத்தாத தடுப்பு மருந்துகள் 11வது குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு / இறப்பை ஏற்படுத்த முடியும் எனும் அறிவியல் உண்மை தொடர்ந்து பத்திரிக்கைகளால் புறக்கணிக்கப்படுவது வேதனையிலும் வேதனை. பல மேலைநாடுகளில் போலியோ பாதிப்பு, இறப்பு விகிதம் சொட்டுமருந்து அறிமுகப் படுத்துவதற்கு முன்னரே, பாதுகாப்பானகுடிநீர் வழங்கியதன் மூலம் சுற்றுப்புற தூய்மையை மேம்படுத்தியதன் மூலம், சத்தான உணவு அனைவருக்கும் கிடைக்கச்செய்ததன் மூலமும் உறுதி செய்யப்பட நிலையில் 2012ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கச் செய்யும் ஆவணத்தில் இந்தியா கையெழுத் திட்டதிலிருந்தும், சொட்டு மருந்திற்கு செலவிடும் தொகையை, மேற்கூறிய நோய் எதிர்ப்பு திறனை வளர்க்க பயன்படுத்தினால் நீடித்த / நிலைத்த பயன் கிட்டும் என்பது உறுதி.

பிற்சேர்க்கை -

1. திருவள்ளூரில் 4 குழந்தைகள் அம்மை தடுப்பூசி போட்டு இறந்ததற்கு, நாடு முழுவதும் அம்மை தடுப்பூசித் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அடுத்த குஜராத்தில் 4 குழந்தைகள் அதே அம்மை தடுப்பூசி போட்டு இறந்ததற்கு ஒரே நாள் செய்தியை விட்டால், பத்தி ரிக்கைகளும், அரசும் கண்டு கொள்ளவில்லை? காரணம் அறிய கூட அரசு முற்படவில்லை? ஏன்?

2. நோய்தடுப்பிற்கு ஆங்கில மருந்தை தவிர மாற்று மருத்துவத்துறையில் இருக்கும்மருந்து களை (இந்திய அனுபவம் / ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்ட மருந்துகளை) ஊக்குவிக்க அரசு முன் வரவேண்டும்.

3. Dr.C. சத்யமாலா M.B.B.S.(Medico Friends Circle அவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ‘இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுவதை தடைசெய்ய வேண்டும்’ எனக்கோரி தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.

(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)

Pin It