மராட்டியர் ஆட்சியில் பார்ப்பனர்களைத் தவிர வேறு எவர் ஒருவர் வேத மந்திரத்தை உச்சரித்தாலும் அவருடைய நாக்கு அறுக்கப்படும். உண்மையாகவே பல பொற்கொல்லர்களின் நாக்கு அவர்கள் வேதத்தை உச்சரித்தார்கள் என்பதற்காகவே அறுக்கப்பட்டது.

மும்பை மாகாணத்தில் மிகவும் உயர்வான குலத்தினரான சோனார்கள் (பொற்கொல்லர்கள்) பஞ்ச கச்சம் வேட்டி (ஐந்து மடிப்பு) கட்டக் கூடாது என்று தடுக்கப்பட்டார்கள். வணக்கம் தெரிவிக்கும்போது நமஸ்காரம் எனும் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் தடுக்கப்பட்டார்கள். இதன் பொருட்டு அரசு செயலாளர் பொற்கொல்லர்கள் குலத் தலைவருக்கு எழுதிய மடலின் வாசகம் வருமாறு:

“மாண்புமிகு ஆட்சி மன்றக் குழுவின் தலைவர், பொற்கொல்லர்கள் வணக்கம் தெரிவிக்கும் வேளையில் நமஸ்கார் என்னும் சொல்லை பயன்படுத்துவதைத் தடுப்பது முறை என்று கருதி இந்த ஆணையையும் அரசின் தீர்மானத்தை உங்களுடைய மொத்த சமூகமும் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு முன்னதாக தெரிவிக்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இதைப் பின்பற்றுவதில் கவனம் எடுத்துக் கொள்ளவும். 

ஆணைப்படி

அரசு செயலாளர் (ஒப்பம்)

டபிள்யூ பேஜ்

***

மும்பை, 1779, ஆகஸ்ட் 9

அரசின் தீர்மானம்

1779, ஜூலை 28

“சில காலமாக பார்ப்பனர்களுக்கும் பொற்கொல்லர்களுக்கும் வணக்கம் தெரிவிக்கும் பொருட்டு நமஸ்கார் என்னும் சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வருகின்றன. பொற்கொல்லர்களுக்கு அந்த உரிமை இல்லையென்றும், அவர்களுடைய இந்தச் செயல் மாபெரும் உரிமை மீறல் என்றும் இந்து மதப் புனிதக் கேடு என்றும் பார்ப்பனர்கள் வாதம் செய்கிறார்கள்; எங்களிடம் மீண்டும் மீண்டும் முறையிடுகிறார்கள். பீஷ்வாவும் (மன்னர்-பார்ப்பனர்) பொற்கொல்லர்கள் நமஸ்கார் என்னும் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தடுக்கப்பட வேண்டுமென்றும் தலைவரை வேண்டிக் கொண்டு பலமுறை மடல்கள் எழுதியுள்ளார். இது தேவையென்று தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தகராறை நாங்கள் முடித்து வைக்க வேண்டும். இதற்கு நாங்கள் முடிவு செய்ய வேண்டியுள்ளது. பொற்கொல்லர்கள் நமஸ்கார் என்னும் சொல்லைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டுமென்று பார்ப்பனர்கள் முறையிடுவதில் காரணம் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்தச் செய்தி கிழக்கிந்திய கம்பெனியின் நலன்களுக்குத் தொடர்பு இல்லாதது. எனினும் தலைவர் தம்முடைய நல்லெண்ணத்தின் செயலாக பீஷ்வாவுக்கு இந்தத் தீர்மானத்தைக் கொடுத்து அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறார்.

(ஆதாரம்: டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 21 பக்கங்கள் அடங்கிய கைச்சுவடியிலிருந்து)

Pin It