மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.

Karunanidhiஈழத்தமிழர் நலனுக்காக, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் கடந்தமாதம் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபொழுது .."பொது வேலைநிறுத்தம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது" என்று நீங்கள் சொன்னது உங்களுக்கே மறந்து அறிவித்திருக்கிறீர்கள் முதல்வர் அவர்களே!

உங்களிடம் தொலைபேசி வசதியோ..அலைபேசி வசதியோ, தொலைநகல் வசதியோ.. மின்னஞ்சல் வசதியோ.. அட ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூட ஒரு கைத்தொலைபேசி வசதிகூட இல்லாத நிலையில்... இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லி இதுவரை மூன்று தந்திகளை அன்னை சோனியாவிற்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அனுப்பியுள்ளீர்கள்.!

தொலைக்காட்சி நேர்காணலில் தெளிவாக என் நண்பர் பிரபாகரன், அவன் தீவிரவாதியல்ல என்று உங்கள் உதடு உச்சரித்த ஈரம் காயும் முன் நீங்களே மழுப்ப வேண்டிய துயரச் சூழலில் நீங்கள்!

அதற்கடுத்ததாக, நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளீர்கள்.

நல்லது.

பாழாய்ப்போன தேர்தல் தான் இத்தனைக்கும் காரணம்!

ஆனால், நம் தமிழ் மக்களுக்கு கொஞ்சம் மறதி அதிகம் என்பது நீங்கள் அறியாததா?..ஏனென்றால் மக்களின் இந்த மறதிதானே தமிழக அரசியலின் வெற்றியே அடங்கி இருக்கிறது என்ற சூட்சுமம் அறியாதவனா என்ன?

இனியென்ன அடுத்ததாக இதேபோல அ(இ)ராசபக்சேவுக்கே நீங்கள் தந்தி அடித்து வாக்காளர்களைக் கவரும் திட்டம், அ(இ)ராசபக்சேவை எதிர்த்து திமுகவினர் சாகும்வரை உண்ணாவிரதம் போன்ற அதிரடித் திட்டங்களை அறிவித்தாலும் அறிவிக்கக்கூடும்!

ஆனாலும், நீங்கள் தந்தி அடிக்கும்போது இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

"இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போர் மிகவும் உச்ச நிலையை எட்டியுள்ளது. இதனால் அங்கு அபாயகரமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு வாழும் தமிழர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது." என்று சொல்லியிருப்பது இதுவரை அங்கு உயிரிழப்பே ஏற்படாதது போல இருக்கிறது. "ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளும் அங்கு போர் நிறுத்தத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்துகின்றன. இதேபோல இந்தியாவும் இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்."

"ஏனுங்க, அப்ப உண்மையிலேயே மற்ற நாடுகள் எல்லாம் சொல்வதெல்லாம் நம்ம பிரதமருக்கு தெரியவே தெரியாதா? அப்புறம் நம்ம வெளியுறவு அமைச்சருக்கு என்னாங்க வேலை?"

சரி, இதுதான் போகட்டும், "அங்கு உடனடியாக போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிடச் செய்ய வேண்டும். இதற்கு பிரதமரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்." என்று சொல்லியிருக்கிறது உங்கள் தந்திவாசகம். இதைத்தானேங்க இந்த அஞ்சாறு மாசமா நீங்க நேரிலயும்,குழுக்கள் மூலமாகவும் சொன்னீங்க.

"தற்போதைய சூழலில் அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படுவதோடு அது நிரந்தரமானதாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம்தான் இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்,"ன்னு சொல்லியிருக்கீங்க.

"ஏனுங்க, இந்த டயலாக்கு உங்களுக்கு அலுக்கவே செய்யாதுங்களா? அவங்களுக்கும் கேட்டுக் கேட்டு காதே புளிச்சுப்போயிருக்குமே!

ஓட்டுப்போடுறவங்களுக்காகத்தான் நீங்க இதெல்லாம் சொல்றீங்க என்ற விசயம் இங்கிருக்கிற சில புத்திசாலித் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களும்... ஏன், அ(இ)ராசபக்சே அன் கோவ்களுக்கே தெரியும்ங்கிறது உங்களுக்கும் தெரியும்.

"இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், இறந்து கொண்டிருக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதற்காக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து......" அடேங்கப்பா.....என்ன தெறமையா கதை வசனம் எல்லாம் எழுதுறீங்க!

ஈழத் தமிழர் உயிரைக் கையில் பிடித்துக் கதறுகிற நேரத்திலும் கூட உங்களிடம் காமெடிக்கு பஞ்சமே இல்லை. இதைவிட வங்கொடுமை என்னான்ன முதல்வர் அவர்களே, காங்கிரசுக்காரனையும் நடுவணரசை போரை நிறுத்தும்படி துணைப்பொணமாச் சேத்துக்கிட்டீங்க பாருங்க...அங்கதான் ஒங்க அரசியல் சாணக்கியத்தனம் தெரியறதா அ(இ)ராசபக்சே அன் கோவில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் மற்றும் கெக்கே பிக்கே எல்லாம் சொல்லீருக்காங்க!

1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை "....ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், மதவேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனக்கொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்", என்று திட்டவட்டமாச் சொல்லீருக்குங்க, முதல்வர் அவர்களே!

அந்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கே "பெப்பே" காட்டிக்கொண்டு தமிழின அழித்தலுக்கு நடுவணரசு எல்லாம் கொடுப்பதாக இலங்கை அ(இ)ராசபக்சேயிலிருந்து இராணுவ அமைச்சர் வரை நாள் தவறினாலும் தவறாமல் நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்! எதற்கு?

இராணுவ உதவி, தளவாட உதவிகள், வட்டியில்லாக் கடன், மருத்துவ உதவிகள் இப்படி எல்லாம் கொடுத்து போதும் போதாதற்கு வெளியுறவுப்பட்டாளங்களை அனுப்பி இலங்கையரசின் தேவைகளை அறிந்து உதவிக்கொண்டே இருக்கிறதே நடுவணரசு! அந்த நடுவணரசின் செயற்பாட்டை அடுத்து ஆட்சியில் அமரப்போகிறவர்கள் தோண்டித் துருவும்போது எப்படி தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொள்வார்களோ, அப்போது நீங்களும் ஒரு குற்றவாளியாக உலகத்தின் முன் காட்சியளிக்கும் கட்டாயத்திலிருந்து தப்பவே முடியாது,முதல்வர் அவர்களே!

ஆர்மினியா, போஸ்னியா, ஹாலாஹோஸ்ட், கம்போடியா, ருவாண்டா இனப்படுகொலைகள் வரிசையில் ஈழமும் சேர துணை நிற்கும் முதல்வரவர்களே, நொடிக்கு நொடி சிறிசும் பெரிசுமாய் கோரமாய் செத்துப்போன ஆவிகளும் தமிழினமும் ஒருபோதும் மன்னிக்கவே மன்னிக்காது என்பது மட்டும் திண்ணம்!

தேர்தல் நெருங்க நெருங்க இப்படியான கதை வசனங்களை எழுதி இந்த வயதிலும் ஏமாற்றவேண்டுமா என்பதை மட்டும் அருள்கூர்ந்து சிந்தியுங்கள்? என்ன இல்லை, உங்களிடம்? ஏனிப்படி, வேடம் தரித்து உலகையும் உங்களையும் நம்பிய மக்களை கைவிட்டீர்கள்? 

அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!

அசாதாரணத் தமிழன், 

- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It