தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர் அழகிய பெரியவன். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என இவரது படைப்புலகின் எல்லை பரந்துபட்டது. தெளிந்த அரசியலோடு, தலித் மக்களின் பிரச்சினைகளை நுட்பமாக எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானவராக விளங்கும் அழகிய பெரியவன் சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட. ‘தகப்பன் கொடி’ நாவலுக்காக 2003ம் ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றவர். அரசுப் பள்ளி ஒன்றில் தற்காலிக பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்துவந்த இவர் தற்போது முழுநேர எழுத்தாளராக இயங்கி வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்த அவரை, தலித் முரசு அலுவலகத்தில் கீற்று நேர்காணல் பகுதிக்காக சந்தித்தோம். பேட்டியிலிருந்து...

.
Azhakiya Periyavan
படைப்புகளின் வாயிலாக ஆதிக்க சாதிகளை தொடர்ந்து எதிர்த்து வருகிறீர்கள். ஆனால் எதார்த்தத்தில் அவர்களோடு இணைந்து வாழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எதார்த்தத்திலும் ஆதிக்கத்தை எதிர்க்க முடிகிறதா, அவர்களை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

நுட்பமான கேள்வி இது. படைப்பு நிலையிலேயே ஒரு படைப்பாளி இயங்கக்கூடிய சூழல் நம் சமூகத்தில் இல்லை. ஒரு படைப்பில் தலித் அல்லாத ஒருவரை அதாவது எதிர்மறையை கேள்வி கேட்கும்போது எழுப்புகிற கோபமான வார்த்தைகளை நிஜத்தில் வெளிக்காட்ட முடியாத நிலைதான் இருக்கிறது. பணியிடங்களில், அன்றாட வாழ்க்கையில் சாதிய ரீதியான ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும்போது கோபத்தை உடனடியாக வெளிப்படுத்த முடியவில்லை. பலதரப்பட்ட மக்களோடு பழக வேண்டிய சமூகச் சூழலில் தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.
இங்கே சாதி ரீதியாக நுட்பமான பிரச்சனைகள் இருந்தாலும் நீ வேறு நான் வேறு என்கிற மனநிலையில் நாம் இல்லை. வேலை, கொடுக்கல் வாங்கல், நட்பு போன்றவற்றில் ஒருவருக்கொருவர் உறவுமுறையோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேலதிகாரியிடம், சக ஊழியர்களிடம், நண்பர்களிடம் இந்த நுட்பமான சாதிய ஒடுக்குதலை பார்க்கும்போது உடனடியாக அவர்களுடன் முரண்பட முடிவதில்லை. மனதிற்குள் ஆத்திரம் வரத்தான் செய்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்த முடிவதில்லை.
காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களாகவே தலித் மக்கள் வாழ்ந்து வருவதால் ஆதிக்கத்திற்கு பணிந்துபோதல், நெகிழ்ந்து கொடுத்தல் போன்றவை தலித் மக்களின் இயல்பாகி விட்டதையும் மறுக்க முடியவில்லை. அதைத்தாண்டி சிந்திக்கும் படைப்பாளிகளிடம் ஆதிக்கத்தை எதிர்க்கும் கலகமனம் இருக்கத்தான் செய்கிறது. எதையும் கேள்வி கேட்கிற படைப்பு மனம் காரணமாக பெரும்பாலான இடங்களில் நேரடியாகவும் என்னுடைய எதிர்ப்பை நான் தெரிவித்திருக்கிறேன்.
எழுத்தாளர்கள் சமூகக் கொடுமைகளுக்கு எதிராக இறுக்கமான மனநிலையை கடைப்பிடிப்பதாக சமீபத்தில் உங்களுடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தீர்கள். எந்த மாதிரியாக இருக்கிறது அந்த மௌனம்?
 
சர்வதேச அளவிலோ, இந்திய அளவிலோ நடக்கும் பிரச்சனைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டாம். அதற்காக அதைப் புறந்தள்ளவும் நான் சொல்லவில்லை. தமிழகத்தில், நாம் வாழும் பகுதியில் நம்மைச் சுற்றி தினமும் எண்ணற்ற சமூக ஒடுக்குமுறைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. தினசரி செய்தித்தாளில் வரும் பாலியல் வல்லுறவு, சிறுவர்களுக்கு எதிரான கொடுமை, தலித்களுக்கு எதிரான கொடுமை போன்ற செய்திகளை படிக்காமல் செய்தித்தாளை மடித்து வைக்க முடியாது. இதை எதிர்த்து எந்தப் படைப்பாளியாவது குரல் எழுப்புகிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. காரணமாக ஒரு சாக்கு சொல்லிக் கொள்ளாலாம், ‘அவன் எழுதுவதே ஒரு கலகச் செயல்பாடு தான்’ என்று. அன்றாட வாழ்க்கையில் சமூகப்பிரச்சனையில் அவனை ஈடுபடுத்தும்போது அவனது படைப்பு மனோபாவம் சிதைக்கப்படுகிறது, திசைமாறிவிடுகிறது போன்ற சாக்குகளும் சொல்லப்படுகிறது. அல்லது கருத்தியல் ரீதியாக பிரச்சனைகளை விமர்சனங்களுக்கு உட்படுத்தி இந்தப் பிரச்சனையை அமைப்புகள் பார்த்துக்கொள்ளும், நாம் படைப்பில் மட்டும் சுட்டிக் காட்டினால் போதும் என்ற மனநிலையில் படைப்பாளிகள் இருக்கிறார்கள். இந்த இறுக்கமான மௌனத்தைத் தான் ஓவியர் சந்திரமோகன் பற்றிய அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
இதைப் படித்து விட்டு ஒரு படைப்பாளி என்னைத் தொடர்பு கொண்டு, இப்படி ஒன்று நடந்திருப்பதே தனக்குத் தெரியாது என்றும், தமிழ்ப் பத்திரிகைகளில் இந்தச் செய்தி வரவில்லையென்றும் குறிப்பிட்டார். எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து அந்தச் செய்தி அவரது ஓவியங்களுடன் ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்தது. சில தமிழ்ப் பத்திரிகைகளும் அதை வெளியிட்டன. தமிழ்ப்பத்திரிகைகளில் வந்தால் தான் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு அதுப் பிரச்சனையா என்ற கேள்வி தான் இந்த இடத்தில் எனக்கு எழுகிறது. எவ்வளவு innocent ஆக இருக்கிறார்கள்? அறிவு சாராத, எண்ணம் சார்ந்த இந்த innocent அலட்சியமாகத் தான் எனக்குத் தெரிகிறது. இப்படித் தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.
கவிதையோ கதையோ எழுதி விட்டு காசு வாங்கிக் கொள்வது, காசுக்காக சினிமாவில் எழுதுவது போன்ற மனநிலைதான் பலபேரிடம் இருக்கிறது. இந்த commercialized mentality நிறைய பேரிடம் இருக்கிறது. மேலவளவு படுகொலை, தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தாக்கப்படுவது, நிலமில்லாத தலித்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றிய புள்ளி விவரங்கள் இப்படி நம்மைச் சுற்றி பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் யாரும் அதுகுறித்து வலுவாக குரல் எழுப்புவதில்லை.
பல எழுத்தாளர்கள் சமூக கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்காமல் இருப்பது போலவே, சில எழுத்தாளர்கள் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு எதிராக மட்டுமே குரல் எழுப்புகின்றனர். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
 
இந்த சுயநலப்போக்கு இருக்கத்தான் செய்கிறது. இப்படி சிந்திப்பவர்களுக்கு என்று ஒரு கருத்தியல் இருக்கிறது. இந்தக் கருத்தைத் தாண்டி அவர்கள் சிந்திப்பதோ, பிரச்சனைகளை பார்ப்பதோ இல்லை. அதன் அடிப்படையில் தான் இத்தனைக் குளறுபடிகள் வருவதாக நான் நினைக்கிறேன். ஒரு படைப்பாளியை படைப்பின் மேன்மைக்காக தூக்கிப் பிடிக்கலாம், ஆராதிக்கலாம். அதே நேரத்தில் அந்தப் படைப்பாளியின் குறைகளையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதுதான் ஒரு விமர்சகருடைய, ஒரு வாசகனுடைய அடிப்படை செயல்பாடாக இருக்க முடியும். திரைப்பட ரசிகர்களுக்கு எப்படி ஒரு ரசிக மனோபாவம் இருக்கிறதோ அதே தான் எழுத்தாளர்கள் மேல் இவர்களுக்கும் இருக்கிறது. அதனால் தான் அவர்களின் எழுத்துக்களை குற்றம் காணமுடியாத ஒரு நிலைக்கு கொண்டு சென்று விடுகிறார்கள். அதை நியாயப்படுத்த படைப்பாளியே சொல்லாத காரணங்களை வேறு சொல்கிறார்கள்.
தவிரவும் தமிழில் குழுவாதம் அதிகமாக காணப்படுகிறது. ஒரு எழுத்தாளர் இலக்கிய இதழ் ஆரம்பிக்கிறார் என்றால் அவரைச் சுற்றி ஒரு வட்டம். அந்த வட்டத்திற்கு அவர்களைத் தாண்டி மற்றவர்களை எழுத்தாளர்களாகவோ, விமர்சகர்களாகவோ அங்கீகரிக்கக் கூடிய மனோபாவம் கிடையாது. மற்ற படைப்புகள் மீது குறைந்தபட்ச நியாயமான மதிப்பீட்டு எண்ணமும் கிடையாது. இந்தக் குழு மனோபாவம் தான் ஒருவரை அப்பழுக்கற்றவராக சித்தரிக்க முயல்கிறது.
அப்பழுக்கற்றவராக யாரும் இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய குறை நிறைகளோடு கசடுகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். படைப்பாளியும் இதில் சேர்த்திதான். இந்தக் குறைகளையும் சேர்த்துத்தான் ஒருவரை விமர்சிக்க வேண்டும். குறைகளை விமர்சித்தால் படைப்பாளிக்கு அது அவமரியாதை என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கலாம். பாரதியின் படைப்புகளை விமர்சித்தால் அது பாரதிக்கு செய்யும் அவமரியாதை என்ற எண்ணம் கூட அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். பாரதியின் குறைபாடுகளோடு பாரதியின் நிறைகளையும் சேர்த்து விமர்சிப்பதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
எல்லாவற்றையும் தாண்டி தமிழில் சரியான விமர்சகர்களே கிடையாது என்பது முக்கியமான விஷயம். தமிழில் விமர்சகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எல்லாருமே பம்மாத்து வேலை செய்பவர்கள். அவர்கள் தங்களுக்கு என்று ஒரு அளவுகோலை வைத்துள்ளார்கள். அந்த அளவுகோலுக்கு உட்படாதவர்களை அவர்கள் படைப்பாளிகளாக அங்கீகரிப்பதில்லை. விமர்சகர்கள் என்பவர்கள் ஆழமான புரிதலோடு, பரவலான வாசிப்போடு இருக்க வேண்டியது அவசியம். அப்படி தமிழில் யாரும் இல்லாதது பெரிய குறைதான்.
வெகுஜன பத்திரிகைகளிலும் சரி, பொது இடங்களிலும் சரி தலித் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவது போன்ற தோன்றம் அண்மைக்காலமாகத் தென்படுகிறது. தலித் எழுத்துக்கு தரப்படும் இந்த முக்கியத்துவம் தலித் பிரச்சனைகளுக்கு தரப்படுவதில்லை. இதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
 
வெகுஜனப் பத்திரிகைகள் தமிழில் அதிகரித்து விட்டன. பத்திரிகைகள் அதிகரித்த அளவுக்கு தலித் எழுத்தாளர்களின் கவிதைகள், அனுபவம் சார்ந்த படைப்புகள் இடம்பெறவில்லை என்பதுதான் உண்மை. தலித் எழுத்தாளர்களின் அதிகம் அறியப்பட்ட, மிகவும் பிரபலமான படைப்பாளிக்குத் தான் அந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. படைப்புகளுக்கு இருக்கும் இந்த குறைந்த முக்கியத்துவம் கூட தலித் பிரச்சனைகளுக்கு இல்லை என்பதும் உண்மைதான்.
வெகுஜன பத்திரிகைகள் சினிமா, பரபரப்பு போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதால் சமூக மாற்றம் தொடர்பான விஷயங்களுக்கு அதிக கவனம் தருவதில்லை. ஒரு சில நேரங்களில் தலித் பிரச்சனைகளுக்கு எதிராகவே வெகுஜனப் பத்திரிகைகள் செயல்படுகின்றன. உதாரணமாக மதுரை நல்லக்காமன் பிரச்சனையை எடுத்துக் கொள்ளலாம். மதுரையைச் சேர்ந்த நல்லக்காமன் என்பவர் மீது காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மனித உரிமை மீறல் செய்ததாக சில ஆண்டுகளுக்கு முன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கின் பெயரால் மனித உரிமைகளை மீறுவதைத் தான் அவர் தொடர்ந்து செய்து வந்தார். பல பதவி உயர்வுகள் பெற்று பல முக்கியமான வழக்குகளையும் விசாரித்து வந்தார்.
இந்நிலையில் தொடர் புகார்களுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அடுத்த வாரமே ஆனந்த விகடனில் அவரைக் கதாநாயகன் போல் சித்தரித்து கட்டுரை வெளியானது. அவரது சொந்த ஊருக்கே போய் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டிருந்தார்கள். இது எவ்வளவு அநியாயமான ஒரு விஷயம். அடிவாங்கியவனை கண்டுகொள்ளாமல் விடுவதும், அடித்தவனை தூக்கிப் பிடிப்பதும் போன்ற இயல்பு வெகுஜனப் பத்திரிகைகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பத்துக் கொலை செய்தவனின் வாழ்க்கையை தொடராக வெளியிடுவதில் தான் பத்திரிகைகள் ஆர்வம் காட்டுகின்றன. வெட்டுப்பட்டவனின் வாழ்க்கை, அவனது குடும்பம் பற்றி யோசிக்க இங்கு யாரும் தயாராக இல்லை. வெகுஜனப் பத்திரிகைகள் தலித் பிரச்சனைக்கு தரும் முக்கியத்துவம் இவ்வளவு தான்.
தீவிர இலக்கியப் பத்திரிகைகளில் தலித் பிரச்சனைகளை சொல்வதற்கு இடம் இருக்கிறது. அதிலும் சில பத்திரிகைகள் தலித் பிரச்சனைகளை பிரச்சாரம் சார்ந்த இலக்கியம் என்று சொல்லி நிராகரித்து விடுகின்றன. இடம் தரும் பத்திரிகைகளும் சில படைப்பாளிகளுக்கே இடம் தருகின்றன. அதனால் புதிய சிந்தனைகள், புது எழுத்துக்கள், புது படைப்பாளிகளுக்கு இங்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
பத்திரிகைகள் தவிர இதர ஊடகங்களான திரைப்படம், தொலைக்காட்சி போன்றவைகளில் தலித் மக்கள் பிரச்சினைகளுக்கு எந்தளவுக்கு இடமளிப்பதாகக் கருதுகிறீர்கள்?
 
திரைப்படம், தொலைக்காட்சி போன்றவற்றுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இல்லை. அதில் நண்பர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் மூலமும், பார்வையாளர் என்ற முறையிலும் பார்க்கும்போது தொலைக்காட்சிகளில் தலித் பிரச்சனைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இங்கு ஊடகங்கள் கட்சி அரசியல் சார்ந்து இயங்குகின்றன. அரசியலைத் தாண்டி நிஜமான சமூக அக்கறையோடு இயங்கும் ஊடகங்கள் மக்களால் கண்டுகொள்ளப்படுவதில்லை.
ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் பார்ப்பனர்களாகவும், ஆதிக்க இடைநிலைச் சாதியினராகவும் தான் இருக்கின்றனர். பரம்பரை பரம்பரையாக இவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். திரைப்படத்தில் வாய்ப்பு இழந்தவர்கள் தொலைக்காட்சிகளுக்கு வர ஆரம்பித்து விட்டனர். இதனால் கீழ்த்தரமான மனித உணர்வுகளுக்கு தீனி போடும் வகையில் தான் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் இடைத்தட்டுச் சாதியினரின் முகமாக இன்று சினிமா மாறிவிட்டது. அதாவது குறிப்பிட்ட சாதியினரின் பெருமையைப் பேசுவதாகத் தான் அது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சமீப காலமாக வந்த திரைப்படங்களில் தேவர் சமூகத்தின் பெருமையை பேசுவதாக வந்த படங்கள் அதிகம். அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முரட்டுக் குணம் உடையவர்களாக, எந்த சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படாதவர்களாக, யாரையும் கொலை செய்பவர்களாக இருப்பது பெருமையாக கொண்டாடப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் ஒரு தலித் சினிமாவுக்கான வாய்ப்பு என்பது தமிழில் இதுவரை இல்லை. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் தலித் பிரச்சனைகளை முன்னிறுத்தி பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. தலித் இயக்குனர்களால் மட்டுமே இது சாத்தியப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழில் நல்ல இயக்குனர்கள் என்று பெயர் பெற்றவர்களால் கூட இதுபோன்ற திரைப்படங்களை தர முடிந்ததில்லை. தயாரிப்பாளர்கள் இதுபோன்ற படங்களை விரும்புவதில்லை என்பதுதான் இதற்கு இவர்கள் கூறும் காரணம்.
என்னுடைய கேள்வி இவர்கள் சொந்தமாக தயாரிக்கும் படங்களையாவது சமூக நோக்கோடு எடுக்கலாமே என்பது தான். அது ஏன் சராசரிக்கும் கீழாக இருக்கிறது? அப்படியானால் இவர்களுக்கு கொள்கைப்பிடிப்பு இல்லை என்பதுதானே சரி. இந்தச் சூழ்நிலையில் ஊடகங்களில் தலித் பிரச்சனைகளுக்கு இடம் இன்னும் ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
பெண் எழுத்தாளர்கள் உடல் எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக, ஆசிரியர் குழுவில் ஒருவராக இருக்கும் தலித் முரசுவில் ஒரு விமர்சனம் வெளிவந்தது. கவிஞராக, சக படைப்பாளியாக நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?
 
இந்தப் பிரச்சனையில் பெண் எழுத்தாளர்களுக்கு ஆதரவானது தான் என்னுடைய குரல். பெண் எழுத்தாளர்கள் வெளிப்படையாக எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. வெளிப்படையாக எழுதுவது அவ்வளவு தவறா, ஆண் எழுத்தாளர்கள் வெளிப்படையாக பேசுவதில்லையா? போன்ற கேள்விகள் இந்த இடத்தில் எனக்குத் தோன்றுகிறது.
Azhakiya Periyavan
காலங்காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகத் தான் நான் இதை பார்க்கிறேன். பெண்கள் உரத்துப் பேசக்கூடாது, வீட்டை விட்டு வெளியே வந்து பேசக்கூடாது, பஞ்சாயத்திலோ, பொதுவிடங்களிலோ பேசக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருந்த சமுதாயம் தானே இது. அதன் எச்சங்கள் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் தான் பெண்கவிஞர்கள் மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டு.
இந்த ஆணாதிக்க மனநிலை தான் பெண் கவிஞர்களின் வெளிப்படையான எழுத்தை கொச்சையானதாக, அருவருப்பாக பார்க்கிறது. பெண் எழுத்தாளர்கள் எந்த மாதிரியான விஷயங்களை பார்க்கிறார்கள், எதன் அடிப்படையில் எழுதுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் தலித் எழுத்துக்கு இருந்த எதிர்ப்பை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்வது சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
தலித் எழுத்துக்கள் வெளிப்படையாக இருக்கிறது, அதிகம் வசவுச்சொற்களை பயன்படுத்துகிறார்கள் போன்று மிகக்கடுமையாக விமர்சித்தார்கள். தலித்களின் மொழியை அப்படியே பயன்படுத்திய காரணத்திற்காக என்னுடைய சில கதைகள் கூட தொகுப்புகளில் இடம்பெறாமல் போயிருக்கிறது. இந்த வார்த்தைகளை வேண்டுமென்றோ, சுவாரஸ்யத்திற்காகவோ பயன்படுத்துவதில்லை. கதையில் வரும் தலித் கதாபாத்திரங்களின் கோபம், ஆத்திரம் வெளிப்பட வேண்டுமானால் உக்கிரமான வார்த்தைகளைத் தான் பயன்படுத்தியாக வேண்டும். இதேபோன்று தான் பெண் படைப்பாளிகளும் உடல்சார்ந்த மொழியை பயன்படுத்துகிறார்கள்.
அந்த வார்த்தைகள் வைத்திருக்கக் கூடிய அரசியல் என்ன, அந்தக் கவிதை என்ன மாதிரியான அரசியலில் இயங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இப்படியான கேள்விகள் எழாது என்று நினைக்கிறேன்.
ஆதிக்க சாதிகளுக்கு எதிரான தலித் தலைவர்கள் என்றால் அது அயோத்திதாசரில் இருந்துதான் நமக்குத் தெரிய வருகிறது. அவருக்கு முன்னால் தலித் தலைவர்கள், தலித் இயக்கங்கள் இருந்தனவா? இல்லாமல் இருந்திருந்தால் அதற்கு என்ன காரணம்?
 
தலித் இயக்கங்கள் இருந்தனவா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதற்கான தரவுகள் எதுவும் இல்லை. ஆனால் சாதியக் கொடுமைகள், ஒடுக்குமுறைகள் பலகாலமாகவே இருந்து வருகின்றன. எட்டாம் நூற்றாண்டு அல்லது ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இருந்த பிற்கால சோழர்கள் ஆட்சிக் காலத்தில் சாதியக் கொடுமைகள் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதற்கு பிறகு பல நூற்றாண்டுகள் முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் ஆட்சி செய்தனர். இதில் சமூக மாற்றங்கள் அதிகம் ஏற்பட்டது. இஸ்லாமிய மதமும், கிறித்தவ மதமும் சமத்துவத்தை வலியுறுத்தின. இந்த மதத்தை பின்பற்றிய ஆட்சியாளர்கள், மக்கள் அந்த மதங்களின் சமத்துவத்தை இந்தியாவில் கொண்டுவந்தார்களா என்று கேட்டால் இல்லை.
இங்கு சீர்திருத்தத்தை மேற்கொண்டார்களே ஒழிய, அடிப்படை சமூக கட்டமைப்பை மாற்ற முயற்சி செய்யவில்லை. ஆனால் வெள்ளையர்கள் வந்தபிறகு தலித்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. படிப்பது, மனித நேய அடிப்படையிலான உரிமைகள் போன்றவை தலித்களுக்கு கிடைத்தன. அதைப் பயன்படுத்தி சமூக மாற்றத்திற்கான இயக்கமாக அவர்கள் தங்களை அணி திரட்டவில்லை. தலித்கள் மதத்தை மாற்றிக் கொண்டார்கள். அதன்மூலம் பல பயன்களை அடைந்தனர். அதைத் தவிர சமூக இயக்கமாக தலித் இயக்கங்கள் இயங்கியதாகத் தெரியவில்லை.
அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் இணைந்து நீலகிரியில் ஒரு மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள். பொதுவிடங்களில் நடப்பதற்கு தலித்களுக்கு இருக்கும் தடையை நீக்க வேண்டும், அவர்களுக்கு தனிப்பள்ளிகள் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். 1800களில் தலித்களின் பிரச்சனைகளை வெள்ளையர்களிடம் மனுவாக தரும் முறை இருந்ததாக இரட்டைமலை சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். தலித் இனத்திற்கும், வெள்ளையர்களுக்கும் நேரடியான கடிதத் தொடர்பு இருந்ததாக அதில் அவர் குறிப்பிடுகிறார். அதைத்தவிர வேறு இயக்கங்கள் எதுவும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
தமிழ்நாடு தவிர இந்திய அளவில் இருக்கிற வரலாற்று ஆய்வுகளை எடுத்துக் கொண்டால் தலித் அமைப்புகள் இயங்கியிருப்பதாகவே தெரிகிறது. குறிப்பாக ஜோதிபாபு புலேவை குறிப்பிடலாம். 1830களில் தொடங்கி தலித்களுக்காக பல்வேறு விதங்களில் போராடியிருக்கிறார். 1848ல் தலித்களுக்காகவும், பெண்களுக்காகவும் பள்ளி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அவருடைய பாதிப்பில் தலித் தலைவர்கள் நிறைய உருவாகியிருக்கிறார்கள். அம்பேத்கரும் தன்னுடைய வழிகாட்டியாக புலேவைத் தான் குறிப்பிடுகிறார்.
1800களுக்குப் பிறகு தான் இந்த மாற்றங்கள் ஆரம்பமாயிருக்கிறது. தலித் பிரச்சனைகளைத் தாண்டி பெண்ணிய உரிமைகள், மே தினக் கொண்டாட்டங்கள் போன்ற உலகளாவிய மாற்றங்களும் இந்தக் காலக்கட்டங்களில் தான் நடைபெற்றிருக்கிறது.
அம்பேத்கர் காலத்தில், தலித் இயக்கங்களின் செயல்பாடுகளில் இருந்த தீவிரம் இப்போது இருப்பதாகக் கருதுகிறீர்களா?

இன்றைக்கு இயங்கக்கூடிய தலித் அமைப்புகள் ஒரு சில விஷயங்களில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறார்கள். மற்றொரு விஷயங்களில் பாராமுகமாக இருக்கிறார்கள். நம் சமூகத்தில் ஒரு அதிகார அரசியல் இருக்கிறது. இந்த அதிகார அரசியலை நோக்கித் தான் தலித் அமைப்புகளின் செயல்பாடுகளும் இருந்து கொண்டிருக்கிறது. அதற்காக அவர்கள் எந்தவிதமான சமரசங்களுக்கும் தயாராகவே இருக்கிறார்கள்.

தேர்தல் சமயத்தில் ‘சீட்’களுக்காக சமரசம் செய்வது, முக்கியக் கட்சிகளால் புறக்கணிக்கப்படும்போது முந்தைய நிலையில் இருந்து முற்றிலும் மாறுபடுவது போன்ற நிலையில் தான் தலித் அமைப்புகள் இயங்கி வருகின்றன. தலித்களுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்களோடு கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். இது எல்லாமே கேலிக்கூத்தான விஷயங்கள் தான்.
அடிப்படையில் சமூக மாற்றத்திற்கான பண்பாட்டுத் தளத்தில் இருக்கிற அரசியலில் இவர்கள் கவனம் செலுத்தாத வரையில் இந்தப் போக்குதான் இருக்கும். விடுதலைச் சிறுத்தைகள் சமீபத்தில் திருநெல்வேலியில் நடத்திய மண்ணுரிமை மாநாட்டில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தலித்துக்கள் நுழைவதற்காக போராட்டம் நடத்திய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
மற்றொரு தீர்மானமாக இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். தேவர்களையும் திருப்திப்படுத்தியாக வேண்டும், தலித்களையும் திருப்திப்படுத்தியாக வேண்டிய நிலையில் வெகுஜன அரசியலுக்காக எடுத்த முடிவு இது. இன்னும் மேலே போய் மாயாவதியின் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் என்றும் தங்களுடைய கனவுகளை தலித் அமைப்புகள் கூறி வருகின்றன. இது எப்படி சாத்தியம் என்றும் தெரியவில்லை.
இது முழுக்க முழுக்க அதிகார அரசியல் சார்ந்த செயல்பாடாகத் தான் இருந்து கொண்டிருக்கிறது. பண்பாட்டு அடிப்படையில் தலித்களுக்கான கருத்தியலை உருவாக்குவதில், அரசுத் திட்டங்களை உருவாக்குவதில், அதைக் கேட்டுப் பெறுவதில், முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் தலித் அமைப்புகள் கவனம் செலுத்துவதில்லை. எந்த தலித் இயக்கங்களும் கருத்தியல் ரீதியான தெளிவோடு போராடக் கூடிய தொண்டர்களை உருவாக்கவில்லை என்பது என்னுடைய வெளிப்படையான குற்றச்சாட்டு. இருக்கிற தொண்டர்கள் அம்பேத்கர், தலித் உணர்வு போன்றவற்றால் வந்து சேர்ந்தவர்கள் தான். இவர்களிடம் கருத்தியல் ரீதியான தெளிவு இல்லை.
இந்த அமைப்புகள் அரசியல் வகுப்புகளோ, பயிற்சிப் பட்டறைகளோ நடத்துவது கிடையாது. கிராமங்களில் இவர்களுக்கு கிளைகளும் கிடையாது. இங்கும் ரசிக மனோபாவத்தோடும், தலைமை மனோபாவத்தோடும் இயங்கும் போக்கும் தான் காணப்படுகிறது.
தலித் சிந்தனையாளர்கள் சிலர் பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதியை ஒழித்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதி ஒழிப்பு என்பது சாத்தியமா?
நான் திராவிடக் குடும்பத்தில் இருந்து வந்தவன். திராவிடச் சிந்தனைகள் எனக்குள் ஊறிப்போன விஷயம். பெரியாரின் பங்களிப்பை நாம் சரியாக மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த சமூக மாற்றத்திற்கு பெரியாரின் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவை தான் காரணம். பெரியாரை முன்னிறுத்துவதால் தனக்கான இடம் இல்லாமல் போய்விடுமோ என்று இவர்கள் நினைக்கிறார்கள். தலித் தலைவர்களைத் தான் அந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
பெரியாரின் பங்களிப்பை மறுத்து விட்டு சாதி ஒழிப்பு பேசுவது என்பது ஒருவகையான துரோகம் தான். பெரியாரின் பங்களிப்பு தான் நம் சமூகத்தில் பரவலான, வலுவான அடித்தளத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. சாதிய ஒழிப்பை நீங்கள் கடுமையாக இன்று பேச முடியும் என்றால் அதற்கு பெரியார் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளம் தான் காரணம். தலித் அறிவுஜீவிகளைத் தான் பெரியார் இடத்தில் நிறுவ வேண்டும், பெரியாருக்கு பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகம் ஒன்று திரண்டிருக்கிறது அதனால் தலித்களுக்கான இடம் பறிபோய்விட்டது போன்ற விமர்சனங்களை, தவறான அனுமானங்களால் எழக்கூடிய விமர்சனங்களாகத் தான் நான் பார்க்கிறேன்.
இந்திய அளவிலேயே தலித்துகளுக்கான போராட்டத்தில் தலித்கள் அல்லாத இடைச்சாதியினரும் தீவிரமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் பகுஜன் போன்ற கருத்தோட்டங்கள் வடமாநிலங்களில் உருவானது. அந்தச் சிந்தனை ஏன் தமிழ்நாட்டில் வரவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. பெரியாரை நிராகரித்து விட்டு தலித்துகளின் முன்னேற்றம் சாத்தியமே இல்லை. அவரை வைத்துக்கொண்டே நாம் அந்தப் பாதையில் பயணிப்பதுதான் நம்முடைய பலம்.
பெரியார், அம்பேத்கரின் போராட்டங்களுக்கு பிறகு இன்றைக்கு தலித் மக்களின் வாழ்க்கையில் எந்த மாதிரியான மாற்றம் ஏற்பட்டுள்ளது?
நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் முழுமையான சமூக மாற்றம் ஏற்படவில்லை. சாதி ஒடுக்குமுறைகளும் தீண்டாமைக் கொடுமைகளும் பகுதி வாரியாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் தென்பகுதிகளில் சாதியக் கொடுமைகள் அதிகமாக இருக்கிறது. வடபகுதிகளில் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளது. இந்தியாவே சாதியின் பெயரால் தான் கூறுபோடப்பட்டிருக்கிறது. பண்பாடு, கலாச்சாரம், கல்வி, வியாபாரம், திருமணம், வேளாண்மை போன்ற அனைத்தும் இங்கு சாதியின் பெயரால் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும், சரியான தலைவர்களாலும் ஓரளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு அலுவலகத்தில் தீண்டாமைக் கொடுமை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இன்று இல்லை. பொதுவிடங்களில் நுழைய தடை செய்ய முடியாது. இவை நல்ல மாற்றங்கள் தான். ஆனால் சில இடங்களில் இன்னமும் கோவிலில் நுழையத் தடை, தேர் வடம் பிடித்து இழுப்பதற்குத் தடை போன்ற விஷயங்கள் தொடரத்தான் செய்கிறது. இரட்டை டம்ளர் முறையும் சில இடங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தேர்தலில் நிற்பதற்கான சமூகத்தடையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சாதிய ஒதுக்கீட்டின் எச்சங்கள் தொடர்ந்தாலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.
தலித் அமைப்புகள் தவிர முற்போக்கு இயக்கங்களும் சமூக மாற்றத்திற்காக தொடர்ந்து போராடி வருகின்றன. இவர்களின் பங்களிப்பு எப்படியிருக்கிறது?
வேறு இயக்கங்கள் சாதி ஒழிப்புக்காக போராடுவது என்பது நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஜனநாயகம் வந்தபிறகு வாக்கு சேகரிப்பதற்காக தலித்துக்களை கறிவேப்பிலையை போல் பயன்படுத்துவது எல்லா அரசியல் கட்சிகளிடமும் இருக்கிறது.
அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி எம்.ஜி.ஆர். தொடங்கி இன்று வரை தலித்துக்களிடம் தான் இருக்கிறது. தலித்துக்களுக்காக பாடுபடுவதாக ஒரு மாயத்தோற்றத்தை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். தி.மு.க. மற்றும் அதைச் சார்ந்த திராவிட இயக்கங்களை பார்த்தால் தமிழ், தமிழர் போன்ற விஷயங்களில் தான் அவர்கள் அதிகம் ஆர்வம் செலுத்துகிறார்கள். காங்கிரஸ் இயக்கத்துக்கு தீண்டாமை எதிர்ப்பு என்கிற முகம் இருக்கிறது. ஆனால் ஒழிக்க வேண்டியது தீண்டாமையையா, சாதியையா என்று கேட்டால் சாதியக் கொடுமையைத்தான். சாதிய ஒடுக்குமுறையின் வெளிப்பாடு தான் தீண்டாமைக் கொடுமை.
பொதுவுடைமை இயக்கங்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே தலித்துக்களுக்காக வேலை செய்திருக்கிறார்கள். ஆனாலும் சாதியை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் அவர்களுக்கு சமீபத்தில் தான் வந்திருக்கிறது. அவர்களிடம் வர்க்கப்பார்வை தான் இருக்கிறது. சாதியையும் வர்க்கமாகத் தான் அவர்கள் நீண்டகாலமாக கருதி வந்தார்கள். இந்தியாவில் வர்க்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதை சமீபத்தில் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒப்பீட்டளவில் பார்த்தால் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பொதுவுடைமைக் கட்சிகள் தான் அதிகம் பாடுபடுகிறார்கள். தஞ்சைப் பகுதியில் இருந்த சாணிப்பால், சவுக்கடி போன்ற சாதீயக் கொடுமைகளை கம்யூனிஸ்டுகள் தான் எதிர்த்தார்கள். உழைக்கும் வர்க்கம் என்ற அடிப்படையில் தான் அவர்கள் ஆதரித்தார்கள். உழைக்கும் மக்கள் பெரும்பாலும் தலித்துக்களாகத் தானே இருக்கிறார்கள். பொதுவுடைமை இயக்கங்களைப் போலவே வேறு சில இயக்கங்களும் தலித்களுக்காக உண்மையான அக்கறையுடன் போராடத்தான் செய்கின்றன. இதிலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தலித்துகளுக்காக போராடக்கூடிய இயக்கங்களை வழிநடத்துபவர்கள் பெரும்பாலும் ஆதிக்கசாதியினராக இருப்பது தான். தலித்துக்கள் அங்கும் தொண்டர்களாகவும், அடிநிலை ஊழியர்களாகவும் தான் இருக்கின்றனர்.
தலித் இலக்கியங்களில் பள்ளர், பறையர், அருந்ததியர் போன்ற சில பிரிவு மக்களின் வாழ்க்கை மட்டும்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அல்லாத மற்ற உட்சாதி மக்களின் வாழ்க்கை முறை பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
தலித் படைப்பாளிகள் எல்லாப் படைப்பாளிகளைப் போலவும் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை பதிவு செய்கிறார்கள். மற்ற உட்பிரிவுகளில் இருந்து படைப்பாளிகள் வெளிவரும்போது தான் படைப்புகளும் வெளிவரும். உட்பிரிவுகள் சார்ந்த கவனம் தேவையா என்றால் தேவைதான். எழுதுகின்ற தலித் படைப்பாளிகளே அதைச் செய்யலாம் தான். ஆனால் அந்த உட்பிரிவுகளில் இருந்து வருகின்ற படைப்பாளிகள் தங்களுடைய சொந்த அனுபவங்களை ஆக்ரோஷமாக பதிவு செய்யும்போதுதான் அது கவனம் பெறும். அந்த நிலை விரைவில் வந்துவிடும்.
அப்படி ஒரு நிலை வந்தால் தான் இன்னும் புதிய விஷயங்கள் தெரிய வரும். மகாராஷ்டிராவை எடுத்துக் கொண்டால் நீங்கள் குறிப்பிட்டபடி உட்சாதிப் பிரிவில் இருந்து நிறைய சுயசரிதைகள் வெளிவந்துள்ளன. அதைப் படிக்கும்போது பல புதிய விஷயங்கள் நமக்குத் தெரிய வருகின்றன. தமிழ்நாட்டில் சுயசரிதைகளும் இல்லை. அரசியல் ரீதியான கவனமும் அந்த மக்களின் மேல் இல்லை. அரசியல் ரீதியான கவனம் கிடைக்கும்போது தான் அவர்கள் விழிப்படைந்து எழுத வருவார்கள். தலித் சாதிகளிலேயே 76 பிரிவுகள் இருக்கின்றன. இந்த விஷயமே இங்கு பலருக்குத் தெரியாது.
தலித் இலக்கியத்தின் ஆரம்பம் மராட்டியத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு தான் தமிழகத்தில் தலித் இலக்கியம் ஆரம்பமானது. நம்முடைய தலித் இலக்கியம் முழுக்க தமிழ் சமூகப் பின்னணியோடு தான் இயங்குகிறதா அல்லது மராட்டிய இலக்கியத்தின் பாதிப்பு இங்கும் இருக்கிறதா?
நிச்சயமாக இல்லை. இங்கிருந்து வெளிவரக்கூடிய இலக்கியங்கள் தங்களுடைய சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த அசலான தலித் இலக்கியங்கள் தான். உத்வேகம், கோபம், இப்படியும் சொல்ல முடியும் என்கிற பார்வை போன்ற விஷயங்களைத் தான் பிறமொழிகளில் இருந்து பெற முடியும். இன்னொரு மொழியின் மாதிரியை எடுத்துக் கொண்டு படைப்புலகில் இயங்க முடியாது. அது சொந்த அனுபவத்தில் இருந்து வெளிவர வேண்டும்.
சிவகாமியின் ‘பழையன கழிதலும்’, பூமணியின் ‘பிறகு’ போன்ற எழுத்துக்கள் தலித் இலக்கியம் என்ற சொற்பிரயோகம் தமிழுக்கு பரவலாக அறிமுகமாமும் முன்பே வந்தவை தான்.
தலித் எழுத்துக்களில் தீண்டாமைக்கு எதிரான குரல்கள் ஒலித்தாலும், நுட்பமான சாதியப் பார்வை, சாதி மறுப்பு, இந்துமத எதிர்ப்பு போன்ற விஷயங்கள் அதிகம் தென்படுவதில்லை. இதற்கு என்ன காரணம்?
இதுபோன்ற விஷயங்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. மராட்டியத்தை எடுத்துக்கொண்டால் அங்கு படைப்பாளிகள் அம்பேத்கரிய பார்வையோடும் ஒருவித கறார்த் தன்மையோடும் இயங்குகிறார்கள். பார்ப்பனீய எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, பௌத்த சமயச்சார்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுபவை தான் தலித் இலக்கியங்கள். இதற்கு மாறாக கலையை அடிப்படையாகக் கொண்டு, வெகுஜனப் பார்வையோடு தலித் படைப்பாளியால் எழுதப்பட்டாலும் அதை தலித் இலக்கியமாகக் கருத முடியாது என்ற அடிப்படையில் மராட்டியத்தில் இயங்கி வருகிறார்கள்.
இந்தக் கறார்த்தன்மை தமிழில் இல்லை. இங்கு தலித்துகள் எழுதுவது தலித் இலக்கியம். பௌத்தம் சார்ந்தோ, மதமாற்றத்தில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்தோ, வேறு சில நுட்பமான சிக்கல்கள் குறித்தோ இங்கே தலித் இலக்கியம் எழுதப்படவில்லை. தலித்துகள் சந்திக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசும் அளவுக்கு தலித் இலக்கியம் இன்னமும் வளரவில்லை.
இதற்கு காரணம் தலித் படைப்பாளிகளுக்கு இருக்கக் கூடிய தெளிவின்மை. தலித்தாக பிறந்ததாலேயே ஒருவர் தலித் எழுத்தாளர் ஆகிவிட முடியாது. குறைந்தபட்சம் சமூகம் குறித்தான ஒரு பார்வை, தெளிவு, சாதி எதை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது, சாதி ஒழிப்பு என்றால் என்ன, பௌத்தம் தொடர்பான விஷயங்கள், பொருளாதாரம் அரசியல் சார்ந்த தலித்துக்கள் எப்படி இருக்கிறார்கள் போன்ற விஷயங்களை தலித் படைப்பாளிகள் முதலில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் சரியான தலித் இலக்கியம் இங்கு வளர முடியும்.
தலித் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் இடைநிலை சாதியினர் பற்றிய பதிவுகள் தலித் படைப்புகளில் காணக் கிடைக்கின்றன. அதே நேரத்தில் அதே இடைநிலை சாதிகளில் இருந்து தலித் மக்களுக்கு ஆதரவாகப் போராடுபவர்களைப் (திராவிட மற்றும் பொதுவுடமை இயக்கத்தினர்) பற்றிய எந்த பதிவும் இருப்பதில்லையே, ஏன்?
தலித்களின் பல்வேறு பிரச்சனைகள் சார்ந்த பரிணாமங்கள் எப்படி தலித் படைப்புகளில் இல்லையோ அப்படித்தான் அரசியல் சார்ந்து இவர்களின் பிரச்சனைகளுக்காக இயங்கிய நபர்களின் பதிவுகளும் இல்லை. வெண்மணி பற்றி கூட தலித் எழுத்தாளர்கள் யாரும் பதிவு செய்யவில்லை. முற்போக்கு இயக்கத்தில் இருந்து வந்த இடதுசாரித் தோழர்கள் தான் அதைப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்திரா பார்த்தசாரதி, சோலை சுந்தரபெருமாள் ஆகியோரின் நாவல்களைக் குறிப்பிடலாம். ஞானக்கூத்தனும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இதைத் தவிர்த்து வேறு பதிவுகள் இல்லை. பரவலாக தலித் அரசியல் சார்ந்த எழுத்துக்கள் அதிகமாகும்போது தான் இது சாத்தியமாகும்.
தலித் அல்லாத எழுத்தாளர்கள் தலித் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எழுதும்போது, அந்த படைப்புகளை நீங்கள் எப்படி வகைப்படுத்துகிறீர்கள்?
Azhakiya Periyavan
தலித் சார்பு எழுத்துக்கள் அல்லது தலித் ஆதரவு எழுத்துக்கள் என்று அவற்றை நாம் வகைப்படுத்தலாம். தலித் இலக்கியம் என்பது தலித்துகளின் சொந்த அனுபவங்களில் இருந்து எழக்கூடிய விஷயம். அதில் தான் உண்மைத் தன்மை, தலித் எழுத்துக்கே உரிய அழகியல், பூரணத்துவம் போன்றவை நிரம்பியிருக்கும். தலித் அல்லாதவர்கள் எழுதும்போது அதில் தலித்களுக்கான ஆதரவுக் குரல் ஓங்கி ஒலிக்கத்தான் செய்கிறது. அதை தலித் சார்பு அல்லது ஆதரவு இலக்கியம் என்று அழைப்பதில் எந்தத் தடையும் இல்லை.
ஆதியில் வளமுடன் இருந்ததாகச் சொல்லப்படும் தலித் சமூகம் வீழ்ச்சியடைந்ததற்கு பார்ப்பன ஆதிக்கம் மட்டும்தான் காரணமா? இல்லை வேறு ஏதாவது காரணம் இருப்பதாக நினைக்கிறீர்களா?
தலித்துக்கள் நிலவுடைமையாளர்களாக இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. அதற்காக அவர்கள் நிலமற்றவர்களாகவும் இல்லை. ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் முதல் நூறு ஏக்கர் வரை வைத்திருந்தவர்களும் உண்டு. அந்தப் பகுதியில் தலித்துகளுக்கான வாய்ப்பு வசதிகள், அவர்களின் கை மேலோங்கியிருக்கிறதா, அரசியல் பொருளாதார ரீதியாக அவர்கள் வலுவானவர்களாக இருக்கிறார்களா, எதிர்க்கிற சமூகம் அவர்களை விட பலவீனமாக இருக்கிறதா இப்படி எதார்த்த ரீதியில் சில கூறுகளின் அடிப்படையில் தான் இந்த விஷயங்கள் இருந்திருக்கிறது. இந்தியா முழுக்கவோ, தமிழகம் முழுக்கவோ பெரும்பாலும் பெரு நில உடைமையாளர்களாக தலித்துக்கள் இருந்ததில்லை.
நிலம் வைத்திருந்தவர்களும் ஆற்றுப் புறம்போக்கு, பயிர்செய்ய முடியாத வானம்பார்த்த பூமி போன்றவற்றிற்குத் தான் உடைமையாளர்களாக இருந்துள்ளனர். நல்ல பாசனவசதி கொண்ட வளம் கொழிக்கும் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக தலித்துக்கள் இல்லை. அப்படி இருந்த நிலங்களையும் இஸ்லாமிய, நாயக்க மன்னர்களின் படையெடுப்புகளின் போது தலித்துக்கள் இழந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து தங்கள் சமூக மக்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ளனர்.
நான் வசிக்கும் வட ஆற்காடு மாவட்டத்தில் நிலமில்லாத நாயுடுகளையும், ரெட்டிகளையும் பார்ப்பது அரிது. எங்கள் பகுதி தெலுங்கு மன்னர்களின் ஆட்சிக்கு கீழிருந்த பகுதி. வேலூர்க் கோட்டையைக் கட்டியதும் பொம்மநாயக்கன், திம்மநாயக்கன் என்கிற இரண்டு நாயக்க மன்னர்கள் தான். இந்த மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்தவர்கள் சுற்றியுள்ள நிலங்களை தங்கள் சமூகத்திற்கு சொந்தமாக்கி கொண்டுள்ளனர்.
இதேபோல் எங்கள் பகுதி நவாப்பின் ஆட்சியின் கீழும் இருந்துள்ளது. இப்போதும் அங்குள்ள ஒரு மலை நவாப்பின் கீழ் வேலை செய்த ஒரு இஸ்லாமியருக்கு சொந்தமாக உள்ளது. ஒரு தனி நபருக்கு ஒரு மலையே சொந்தம். அந்த மலை, மலையைச் சுற்றியுள்ள பகுதிகளை அந்த தனிநபரின் குடும்பம் தான் அனுபவித்து வருகிறது. ஆக நிலம் என்பது ஆதிக்க வர்க்கத்தின் ஒரு உடைமையாக எப்போதுமே இருந்திருக்கிறது.
அதன்பிறகு வெள்ளையர்கள் ஆட்சி வந்தது. அதன்பிறகு நாம் ஆட்சி செய்யத் தொடங்கிய பின்பு நிலம் அரசுக்கு சொந்தமானது என்ற சட்டம் வந்தது. அதன்பிறகும் நிலம் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் தான் இருந்தது. பயிர் செய்யப்படாமல், பாத்தியதை இல்லாமல் இருந்த நிலங்கள் புறம்போக்காக அறிவிக்கப்பட்டது. அந்த நிலங்களும் தலித்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை.
நீங்கள் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர். எழுத்து எப்படி ஒரு வலிமையான ஆயுதமோ அதைப் போன்றது தான் வகுப்பறையும். ஓர் ஆசிரியராக அதை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள்?
எனக்கு மிகப் பிடித்தமான பணி ஆசிரியர் பணி. பி.எட். முடித்து பதின்மூன்று ஆண்டுகள் ஆகியும் வேறு எந்தப் பணிகளுக்கும் செல்லாமல் ஆசிரியப் பணி கிடைத்து விடும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் மாலை நேரப் பயிற்சியாளராக, ஆங்கிலப் பள்ளிகளில் ஆசிரியராக வேலை செய்து வருகிறேன். என்னுடைய வகுப்பறைகளை பாடம் நடத்துவதற்காக மட்டும் நான் பயன்படுத்தியதே கிடையாது. ஏனெனில் இங்கிருக்கிற பாடத்திட்டமுறை மாணவர்களை மனப்பாடம் செய்யும் கருவிகளாக, குமாஸ்தாக்களாக மட்டுமே உருவாக்குகிறது. மாணவர்களை சுயமாக சிந்திக்க வைப்பது, சமூகம் சார்ந்த விஷயங்களில் அவர்களை ஆர்வம் கொள்ள வைப்பது போன்றவற்றிற்கு வகுப்பறைகளில் இடம் இல்லை. ஒரு திறமையான ஆசிரியரால் அதை உருவாக்க முடியும்.
என்னுடைய வகுப்பறைகளில் பெண்ணியம், தலித்தியம், ஏகாதிபத்தியம் தொடர்பாக பேசுகிறேன். அதற்காக எதையும் தனியாக திணிப்பது இல்லை. பாடத்திட்டம் மூலமாகவே சமூகம் சார்ந்த கல்வியையும் கற்றுக் கொடுக்கிறேன். சமூக மாற்றத்திற்காக பாடுபட்ட அறிஞர்களின் பிறந்தநாளை மாணவர்களுடன் சேர்ந்து வகுப்பறைகளிலேயே கொண்டாடுகிறோம். எழுத்தாளராக இருப்பதால் பள்ளியில் எனக்கு மரியாதை அதிகம் கிடைக்கிறது. பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில் என்னைப் பேச அழைக்கும்போது நான் பெரும்பாலும் சமூகம் சார்ந்த விஷயங்களில் தான் அதிக ஆர்வம் காட்டுவேன்.
அதைத் தவிர மாணவர்களை நான் அடிப்பதில்லை. இதனால் அவர்களுக்கு என்னை ஆசிரியராக நெருங்குவதில் சிக்கல் எதுவும் இல்லை. வறுமை, உறவுகள் இல்லாத நிலை போன்ற பல பிரச்சனைகளுக்கு இடையே தான் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வருகிறார்கள். அவர்களை திட்டுவது, அடிப்பது என்பது மன்னிக்க முடியாத செயல். சரியாக படிப்பு வராத மாணவர்களைப் பார்த்து, ‘நீ தெருப்பொறுக்கத் தான் லாயக்கு, மாடு மேய்க்கத் தான் லாயக்கு’ போன்ற வசைச் சொற்களையும் ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த மாணவர்கள் அதுபோன்ற தொழில்களைச் செய்யும் வீடுகளில் இருந்து தான் படிக்க வருகிறார்கள். மறுபடியும் அங்கேயே போகச் சொல்லி சுட்டிக்காட்டுவது ஒரு ஆசிரியரின் வேலை அல்ல. அதனால் தான் என்னுடைய கருத்துக்களை சொல்லக்கூடிய ஒரு களமாக வகுப்பறைகளை மாற்றிக் கொண்டு விட்டேன். என்னுடைய படைப்பு சார்ந்த முகம் அதற்கு பெருவாரியாக உதவி செய்கிறது.
உங்களை, உங்கள் படைப்புகளை எப்படி வரையறுக்க விரும்புகிறீர்கள்?
மனித உணர்வுகளை, அவலங்களை மிகவும் வெளிப்படையாக பதிவு செய்யும் படைப்புகளாகத் தான் என்னுடைய படைப்புகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மனிதனின் துன்பங்களுக்கு அவலங்களுக்கு அடிப்படையாக இங்குள்ள சமூகக் காரணிகள் இருக்கின்றன. என் படைப்புகளின் வாயிலாக ஒரு வாசகனால் அதைக் கட்டாயமாக உணர்ந்து கொள்ள முடியும். மனித வாழ்வின் அவலங்களை படைப்பின் மூலமாக வெளிப்படுத்துவதைத் தான் என்னுடைய இயங்குசக்தியாகவும் நான் கருதுகிறேன்.
கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், சிறந்த மேடைப் பேச்சாளர் என பல பரிமாணங்கள் உடையவர் நீங்கள். வேறு எந்த மாதிரியான தளங்களில் உங்களை விரிவுபடுத்தப் போகிறீர்கள்?
திரைப்படம், தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடகம் சார்ந்து என்னுடைய அடுத்த நகர்வு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தலித்துகளின் இயங்குவெளி இங்கு கவனமாக வேலியிடப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி தனக்குக் கிடைக்கக்கூடிய விஷயங்கள் மூலமாக கருத்தியலை நிலைநாட்டக்கூடிய ஒன்றாக தனது இயங்குவெளியை பயன்படுத்த வேண்டியது ஓர் அடிப்படையான விஷயம். அந்த அடிப்படையில் காட்சி ஊடகம் தான் என்னுடைய அடுத்தக்கட்ட நகர்வாக இருக்கும்.
என்னுடைய சிறுகதை, நாவல் தளத்திலேயே நான் தொடாத பகுதிகள் நிறைய இருக்கிறது. நான்கைந்து நாவல்களுக்கான விஷயங்கள் என்னுள் இருக்கிறது. தன்வரலாறை பதிவுசெய்ய வேண்டும், என்னுடைய மூதாதையர்களின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். இப்படி எழுத்து சார்ந்த வேலைகளும் நிறைய இருந்துகொண்டு தான் இருக்கிறது.
தலித் சினிமா என்கிற வெற்றிடத்தை நிரப்ப முடியுமா என்றும் யோசித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
வாசகர் கருத்துக்கள்
Jayakannan
2007-08-17 02:54:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மிக அருமையான நேர்காணல். தெளிந்த கருத்துக்கள். இதுபோன்று நிறைய நேர்காணல்கள் வெளிவர வேண்டும்.

p.thanigachalam
2007-08-19 08:13:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

very good interview,many thanks to keetru team, convey my regards to azhakiya periyavan, i am waiting for his next project(dalit cinema),
thanks
thanigachalam

Amutharasan
2007-08-29 08:56:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Thanks to Azhakiya Periyavan & Keetru to bring this wonderful interview.

a.selvam
2007-09-07 07:09:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

azhuthamana santhippu. keeteru-kku nandri.

Jayaseelan
2007-09-23 04:07:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Swarasiyamaana matrum Nutpamaana uraiyaadal. Vaazhthukkal...

Nandri....

(Azhagiya Periyavan... ungaludaiya "Vetkam Ketta Naadu" Arumai, Saattai adi)

 

Pin It