தோழர் ஞானி பாடிய பாடலில் இருந்து... விழா வேகம் எடுத்தது. ஆகவே அவ்வரியில் இருந்தே ஆரம்பிக்கிறேன். 
 
"மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்
மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்
மலர் சாய்ந்து போனால் சரமாகலாம் - இந்த
மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்......"
 
எத்தனை அற்புதமான வாழ்வியல் வரிகள்.
 
பாடல் வழியே அவரின் தோழருக்கு அவர் செய்த பாராட்டு மனதை நெகிழ்த்தியது. மனதுக்குள் மௌனம் சூழ்ந்தது. கணீர் குரலில் அவர் பாடினார். உள்ளே கண்ணீர் சலசலப்பு நமக்கு. இந்த பாடலுக்கும் இந்த நிகழ்வுக்கும் தொடர்பில்லை என்று சொல்லி தான் பாடினார். தோழர் அடிக்கடி விரும்பி பாட சொல்லி கேட்கும் பாடல் இது என்ற தகவல் அவரின் ரசனையை நமக்கு காட்டியது. மெய்ம்மறந்து ரசித்த தோழர் வில்வம் அவர்களை விழி திறந்து நாம் ரசித்தோம்.
 
"என் சிந்தனையும் செயலும் பொதுவுக்கானது" என்ற சொற்றொடரில் சிவப்பாய் உதிரும் "தோழர் வில்வம்" அப்படித்தான் வாழ்கிறார்.  
ambedkar award to vilvamதனது இளமை காலத்திலேயே பொதுவுக்கு வந்து விட்ட தோழரின் பணிகள் மகத்தானவை. தொடர்ந்து இயங்குவது என்பது எப்போதும் இயலாத காரியம். ஆனால் அவர் இயங்கி கொண்டே இருக்கிறார். எப்போதும் எது குறித்தாவது ஒரு சிந்தனை ஒரு செயல் ஒரு கருத்து என்று அது ஒரு தொடர் ஓட்டம். நடந்தே ஓடும் பக்குவம் இத்தனை கடந்தால் தான் கிடைக்கும்.
 
சோர்வுக்கு ஓய்வு தந்து விட்டு சுக துக்கம் தாண்டி பொதுவின் தேவைக்கு தன்னை அர்பணித்துக் கொண்டவர். தனது மேதமைகளையோ... அறிவு கூர்மைகளையோ ஒருபோதும் நம்மிடம் திணிக்க மாட்டார். சிறுபிள்ளை போல பார்த்ததும் சிரிப்பு தான். கிண்டல் கேலி என்று தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டு எங்களை உயர்த்துவார்.
 
எனது எழுத்து செயல்பாட்டை தொடர்ந்து ஊக்குவிப்பவர். நானாக வாய்ப்புக்கு செல்வது கூடாது என்பது அல்ல. கூச்சம். ஆனால் தானாக வாய்ப்பை அவ்வப்போது தந்து கொண்டே இருப்பார். அப்படி கடந்த வருடங்களில்.. அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் வாயிலாக கிடைத்த வாய்ப்புகள் எம்மை மேலும் மேலும் செம்மைப் படுத்தின என்றால் வெம்மை சூழ் வெற்றிடத்திலும் வில்வம் விருட்சம் என்பது தகும்.
 
19 வயதிலேயே களப்பணிக்கு வந்து விட்ட தோழர் வில்வம்... இந்த 30 வருடங்களில் செய்த பொது காரியங்கள் ஏராளம். கல்லூரி படிப்புக்கு போக முடியாத வறுமை. இருந்தும் உலக இலக்கியங்கள் நோக்கி தன்னை நகர்த்தினார். பொது காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொடர்ந்து இயங்கினார். தொடர் இயக்கம் தான் எடுத்துக் கொண்ட கொள்கையின் நீட்சி என்று என்னிடம் அடிக்கடி கூறுவார். 
 
"யூத்ஸ் யூனிட்" என்ற அமைப்பை அந்த வயதிலேயே நண்பர்களோடு சேர்ந்து தொடங்கி அதன் மூலமாக பேருந்து நிழற்குடையை நிறுவ போராடி இருக்கிறார்.  
 
" உதவியது பொதுமக்கள்... உருவாக்கியது யூத்ஸ் யூனிட்" எனும் முழக்கத்தோடு நிழற்குடையை நிறுவினார் என்றால் வில்வத்தின் விதை அங்கு போடப்பட்டது தான். தொடர்ந்து "பாரதி மன்றம்"... சேர்ந்து படித்தால்.. விவாதித்தல்... கருத்து பரிமாற்றம் என எப்போதும் அறிவை பட்டை தீட்டிக் கொண்டே அதன் மூலம் இந்த சமூகத்துக்கு வெளிச்சம் பாய்ச்சி கொண்டே இருக்கிறவர். அவருக்கு இந்த விருது சாலப் பொருத்தம்.
 
தோழர் அஸ்ரப் அலியின் வரவேற்புரையில் நிகழ்வு தொடங்கியது.  
 
தோழர்கள் அன்பர்கள் நண்பர்கள் என்று அரங்கை நிறைத்த ஆதுரம் அழகியல் சூடியது. நல் அந்திப்பொழுதில்... நானுமற்று...தானுமற்று ஒரு யாரோவாக அமர்ந்திருந்தார் தோழர் வில்வம். உடல்நிலை சற்று சரிந்திருக்கிறது தான். ஆனால் உள்ளத்தின் நிலையில் உறுதி இளகவில்லை.
 
எப்போதும் சமூக சிந்தனை.. முப்போதும் மக்கள் பணி... சிந்தனையாலும்..செயலாலும் நம்மை சார்ந்த சமூகத்துக்கு நம்மை கொண்டே நிழல் தருவதற்கு மேம்பட்ட மனநிலை அவசியம். அறிவு நிலை ஊற்றெடுத்துக் கொண்டே இருத்தல் தேவை. வீடு மனைவி மக்கள் என்று கூடடைந்து விடாத திறந்த வெளி திக்கில் எட்டு பதினாறாய் தன்னையே பிரித்து சிறகாக்க வேண்டும். அப்படித்தான் இத்தனை காலமும் இருந்திருக்கிறார். அப்படித்தான் இந்த வாழ்வை உணர்ந்திருக்கிறார். அதற்கு தான் இந்த விழா. கால தாமதம் என்றாலும்.. கண்கள் நிறைந்தது. அவரோடு அறிமுகமான நாட்களை நினைத்துக் கொள்கிறேன். ஊக்குவித்தலின் சுடர் அவர். சிரித்துக் கொண்டே சிந்தனையை தூவி விடும் சித்தறிந்தவர்.
 
தோழர் வில்வம் அவர்களுடனான அறிமுகத்தை... தோழர் அஸ்ரப் அலி நினைவு கூர்ந்தார். எத்தனை ரம்மியமான காலத்தின் பின்னோக்கு. எந்த சூழலையும் எதிர் கொண்டு அந்தந்த நேரத்தை மிக அறிவாக நிர்வகிக்க கூடியவர் என்றார்.  உண்மை தான். இல்லை என்றால் கொரோனா கால கட்டத்தை கூட ஆன்லைன் மீட்டிங் மூலமாக ஒவ்வொரு வாரத்தையும் உயிர்ப்புள்ளதாக்கி இந்த மானுடம் பயனுற உழைக்க முடியுமா.
 
ஆம்... அவர் சோர்ந்தோ... எதிர்மறை எண்ணம் சூழ்ந்தோ... முடியாது... நடக்காது போன்ற வார்த்தைகளின் வழியோ அவரை நாம் காணவே முடியாது. கண்டிருக்கவே முடியாது. சிரித்துக் கொண்டே நோக்கத்தின்பால் நகரும் அறிவுசார் யுக்தி கொண்ட புத்திமான். தோல் பையில் புத்தகம்... ஒரு நாடோடி உடல்மொழி என்று அவரின் தீவிரம் சமூக விடுதலைக்கானது. சமத்துவ நீதிக்கானது.
 
தோழர் புருஷோத்தமன் தலைமையுரை ஆற்றினார். நிறைய பகிர்ந்து கொண்டார். பால்ய வரைவுகள் உணர்ச்சி பொங்க தீட்டப்பட்டன.   
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவரும்.... திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் கே.சுப்பராயன்.... ஆதிக்க சக்திகளுக்கு எதிராக உணர்வுள்ள உள்ளங்கள் கூட வேண்டும். அதற்கான வட்டத்தில் நடு புள்ளியாக இருக்கும் தோழர் வில்வம் போன்றவர்களை நாம் பாராட்ட வேண்டும். அங்கீகரிக்க வேண்டும். அணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். 
 
அம்பேத்கர் விருதை தோழர் வில்வம் அவர்களுக்கு அளித்து விழாவை சிறப்பித்தார். சரியான விருது சரியான ஆளுமைக்கு சென்றிருக்கிறது. யாம் உளம் கனிந்தோம். நினைவு நிறைந்தோம். அரங்கு அழகு சூடிய தருணம் அது.
 
தோழர் ச. பாலமுருகன் அவர்கள் பேச்சு... அரசியல் தாண்டியும் உணர்வு பூர்வமாக இருந்தது. நம்மோடு இறுதியாக வருவது நம் நினைவுகள் மட்டும் தான் என்று உளம் பொங்கி உணர்வு ததும்ப அவர் பேசியது என்னவோ செய்தது. எங்கோ சட்டென நிறுத்தி... சுய நினைப்புக்கு இட்டு சென்றது. போராட்டம்... புரட்சி... களப்பணி... மக்கள் பணி எல்லாம் தாண்டி ஒரு தனிமனிதனின் உள்ள உணர்வுகள் குறித்த சிந்தனையை பேசுவதாக இருந்தது. 
 
மனதுக்குள் ஆயிரம் மலர்கள். இருந்தும் தனியாக தான் ஒவ்வொன்றும் மலர்ந்திருக்கிறது. 
 
தோழர் வி பி குணசேகரன் அவர்கள் சிவப்பு சட்டையில் ஒரு சித்திரம் போல மேடையில் இருந்தார். பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றும் வாழ்நாள் முழக்கம். அவர் வருகை விழாவுக்கு பலம். மேடைக்கு அழகு. பேச்சுக்கு வலிமை.
 
தோழர் ப பா ரமணி உள்ளிட்ட தோழர்கள் நேரம் கருதி அனைவருமே சுருக்கமாய் உணர்வுப்பூர்வமாகப் பேசினார்கள். 
 
ஆவணப்படம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. தோழர் வில்வம் அவர்களின் நண்பர்கள் தோழர்கள்.. என நிறைய குரல்கள். எல்லாமே உணர்ச்சி பொங்க உண்மைக்கு மகுடம் சூட்டின. நினைவலைகள் போல நின்று பேசும் வாழ்நாள் சாதனை ஏது. அப்படி எப்படி வாழ்ந்தோம் என்பதற்கு நம்மை சார்ந்தோரின் வாக்குமூலம் நிம்மதிக்கு சாட்சி. மனம் கனிந்த சொற்களின் வழியே ஒவ்வொருவருமே அவருடனான அன்பின் உழைப்பின் நேசத்தின் நேர்மையின் பொருள்களை எடுத்துரைத்தார்கள். நாம் நேரம் நிறுத்தி கண்டோம். ஆவணப்படம் எடுத்த தோழர் செல்வின் குழுவினருக்கு பாராட்டுக்கள்.
 
வயதாவது என்பது நிதானம். அதன் வழியே கூட வந்த இளைப்பாறல்கள்... நினைவுகளை பகிர்ந்து கொள்வது வாழ்நாள் புன்னகை.
 
நமக்கு தோழர். இளைய பாரதிக்கு அப்பா. நிகழ்வு முழுக்க இளைய பாரதியின் உள்ள தகிப்பை உணர்ந்தோம். அப்பாவை கவனித்துக் கொண்டே இருந்த பாங்கு நெக்குருகச் செய்து விட்டது. உடல் முடியாத போது உள்ளத்தின் பலமாக வந்து நிற்பது பிள்ளைகள் தானே. அப்படி இளைய பாரதி பெரிய பாரதியாக உயர்ந்து நின்ற இடத்தை நடுக்கத்தோடு உணர்ந்தேன்.
 
இந்த நேரத்தில் திருமதி வில்வம் அவர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு மரம் வளர வேண்டும் என்றால் இப்படி ஒரு நீரூற்றி... உடன் வேண்டும். கை கூப்பி வணங்குகிறோம். 
 
இவ்விழாவை இணைந்து நடத்திய கோவை சங்கமம் - குத்தூசி குருசாமி படிப்பகம் அமைப்புகளுக்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள்.
 
அவர் உடல்நிலை சரியாகி மீண்டும் களத்தில் இறங்க இயற்கை ஆசீர்வதிக்கட்டும். அம்பேத்கர் மகத்தான மனிதனிடம் தான் சேர்ந்திருக்கிறார்.
 
(15.04.2023 - சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோவை தடாகம் சாலை- V R K - அரங்கத்தில் நடந்தது.)
 
- கவிஜி
Pin It