நீண்ட நெடிய காலத்திற்கு முன்பிருந்தே 'தொகுப்புக்கலை' எனும் 'தனிக்கலை' தமிழ் இலக்கிய நீரோட்டத்தில் கலந்து இடைவிடாமல் தொடர்ந்து சுரந்து வந்து  கொண்டிருக்கிறது. மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியமே ஒரு தொகுப்பு நூல்தான்.  "என்மனார் புலவர்", “என்மனார் புலவர்" என்று சொல்லிச் சொல்லி, தன் காலத்திற்கு முன்பிருந்த நூல்களிலிருந்து தேடித் திரட்டித் தந்திருக்கும் தனியொரு நூலே தொல்காப்பியம் எனப் பேசுவார் தொல்காப்பியர். அவர்,  நூல் முறையைத் தொகுத்தல், வகுத்தல், விரித்தல், என்று பாகுபடுத்திக் காட்டுவார்.

            தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து

           அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே(தொல்-1597)

நானூறு பாக்களைக் கொண்ட அகநானூறு, உருத்திரசன்மனார் என்பவராலும், ஐங்குறுநூறு, கூடலூர் கிழார் என்பவராலும், கலித்தொகை, நல்லந்துவனார் என்பவராலும், குறுந்தொகை, பூரிக்கோ என்பவராலும், நாலடியார் பதுமனார் என்பவராலும் தொகுக்கப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பிகளால்,  பன்னிரு திருமுறையும்,  நாதமுனிகளால், நாலாயிர திவ்யப் பிரபந்தமும், சேக்கிழாரால், அறுபத்து மூன்று  நாயன்மார்கள் வரலாறும் தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் இப்படி, பலப்பல. இப்படிப் பாரம்பர்யமாகத் தொடர்ந்து நகர்ந்து வரும் இத் தொகுப்புக்கலைப் பயணம் இக்கால கட்டத்திலும் தன் தடத்தைப் பதித்துத்  தன்னை இன்னார்  என இனம் காட்டிக் கொண்டிருக்கிறது.

s seenivasan book delhiசான்றாகச் சொல்ல வேண்டுமானால் கல்வியாளர் மற்றும் கலைக்களஞ்சியத் தொகுப்பாளர் திரு. சிங்காரவேலு முதலியார் அவர்கள் 1910-இல் 1050 பக்கங்கள் கொண்ட "அபிதான சிந்தாமணி" என்னும் நூலை அரும்பாடுபட்டுத் தொகுத்துப் பதிப்பித்தார்.1945 - களில் அல்லயன்ஸ் பதிப்பகம் கதைக்கோவை என்ற பெயரில் நான்கு பகுதிகள் கொண்டதொரு தொகுப்புப் பணியை மேற்கொண்டது.

(உ.வே.சா, பெ.நா.அப்புசுவாமி, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், வையாபுரிப்பிள்ளை, வெள்ளே கால் சுப்பிரமணிய முதலியார், மு வரதராசனார் போன்றோர் கதைகளும் இதில் இடம் பெற்றுள்ளன என்பது கூடுதல் செய்தி)

தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் , சாகித்திய அகாதமி, அன்னம் பதிப்பகம் , வானதி பதிப்பகம் , கலைஞன் பதிப்பகம், கவிதா பதிப்பகம், காவ்யா பதிப்பகம், வர்த்தமானன் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் இத் தொகுப்புப் பணியைதத் தொடர்ந்து செய்து வருகின்றன. தனிநபராக, இத்தொகுப்புப் பணியை சா. கந்தசாமி என்பவர் திறம்படக் கையாண்டுள்ளார். அம்முறையைத் தழுவியதுதான் இத்தொகுப்பு நூல்.

"தலைநகர் தில்லி: தமிழும் தமிழரும்" என்ற இந்தத் தொகுப்பு நூலின் மூலம் நவீன இலக்கியத்தில் மட்டுமின்றி, சங்க இலக்கியத்திலும் ஆழங்காற் பட்ட   பேராசிரியர் ச. சீனிவாசன் அவர்கள் வாழையடி வாழையென வரும் இந்தத் தொகுப்புகலை மரபின் வழி வந்த தனித்ததொரு தொகுப்புக்கலைச் சித்தராகத் தொகுப்புக் கலையில், பெரும் பாய்ச்சல் நிகழ்த்திக் கொண்டிருப்பவராக அறியப்படுகிறார். விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை. அதைப்போல் இந்தத் தொகுப்பாசிரியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக பயின்ற பொழுது,  சக ஆய்வு மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து 'பரல்கள் : கொள்கைகள் - ஆய்வுக்கட்டுரைகள் (தொகுதி-5) எனும் நூலை தமிழ் ஆய்வாளர் மன்றம் சார்பாக வெளியிட்டுள்ளார். அன்று 1991-இல் விதைத்த அந்த விதை மெல்ல மெல்ல வேர்பிடித்துச் செழித்து வளர்ந்து அதன் விளைச்சலாக  இன்று , பல்வேறு தொகுப்பு நூல்களைத் தந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், தில்லியைப் பின்புலமாகக் கொண்ட சிறுகதைகளைத் தொகுத்துத் தில்லித் தமிழ்ச் சிறுகதைகள்  என்ற தலைப்பில் 2014-இல் நூல் வெளியிட்ட அனுபவம் மிக்கவர்.

கிணற்றின் ஆழத்தையும் கயிற்றின் நீளத்தையும் கணித்தறிந்து  செயல்படுவது போல, இந்தத் தொகுப்புப் பணியாகிய பெரும் சுமையை, தன் உள்ளம், உடல், பற்றிய  ஆற்றல்களின் அளவறிந்து சிந்தித்து, இவை இரண்டையும் இணைத்து நேர்பட எண்ணித் தன்னம்பிக்கையுடன்  செயல்பட்ட நிலையில் இந்த நூல் உருப் பெற்றுள்ளது  எனலாம். திரு. ச. சீனிவாசனின் தொகுப்புக்கலை விளைச்சல்களுள், இந்நூல்  மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்து, மின்னிச் சுடர்விட்டு மேலோங்கித் திகழ்கிறது. இனி நூலுக்குள் செல்லலாம்.

நூலின் உள்ளடக்கமான கட்டுரைகளைப் பற்றி அறிவதற்கு முன் அதன் முகப்புச் செய்திகளான அணிந்துரை, வாழ்த்துரை, பதிப்புரை  மற்றும் இன்னபிற தகவல்கள் பற்றி அறிந்து கொள்வது நலம் பயப்பதோடு தொகுப்புக்கலையின் முழுமைத் தன்மையை விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும். 

தலைநகர் தில்லி : உருவாக்கம், தமிழர் இடப்பெயர்வு – டில்லியில் தமிழ் தமிழர் – தலைநகரில் தமிழ்க் கல்வி – தமிழர் கலை பண்பாட்டு அடையாளங்கள் – தலைநகரில் தமிழ்ப் படைப்பிலக்கியம் – ஊடகங்களில் தமிழ் தமிழர் – அனுபவங்கள் மனப்பதிவுகள் –  நேர்காணல் ஆகிய எட்டுப் பெருந்தலைப்புகளை மையமாகக் கொண்டு பல்வேறு எழுத்தாளர்களின் இருபத்தி எட்டு (28) கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.  மூத்த தில்லிவாசியும் தில்லிப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான திரு. தி. கு. வெங்கடசுப்ரமணியன் அவர்கள் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார். அணிந்துரையில் ‘21-ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட நல்ல முயற்சி இத் தொகுப்பு நூல்’ (XI) என்று சான்றளித்துள்ளார். தமிழக முன்னாள் அமைச்சர் ஒருவரும், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இந்நாள் தலைவரும் முன்னாள் துணைத்தலைவரும் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளனர். தமிழ் – தமிழர் குறித்த இத்தொகுப்பு நூலுக்கு இவை  சாலப்பொருத்தமாக அமைந்துள்ளன. இத்தொகுப்பு நூல் பயணம் மற்றும் சாரம்சத்தைத் தமிழரல்லாதாரும் அறிந்துகொள்ள ஏதுவாக ‘Before Entering into the Book’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நீண்ட ஒரு முன்னுரை தந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். தொகுப்பாசிரியரின் இந்த ஆரோக்கியமான முயற்சி வெகுவாகப் பாராட்டத்தக்கது.     

வரலாற்றுப் பாதையில் தில்லி தடங்களும் தடயங்களும்எனும் திட்ப நுட்பம் சான்ற தலைப்புடன் தொடங்குகிறது இத்தொகுப்பு. தொகுப்பாசிரியராகிய திரு. ச. சீனிவாசன் அவர்களால் எழுதி இணைக்கப்பட்ட சொற்சித்திரம் இது. நூல் தலைப்பை நியாயப்படுத்தும் வகையில், முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்த் திகழும் தலைநகர் தில்லி பற்றிய நீண்ட நெடிய வரலாற்றுச் செய்திகளை யெல்லாம், அதன் வேரும் வித்தும் தோன்றிய இடத்தை கண்டு தொடங்கி- காற்றும் கடவுளும் புகமுடியாத   மூலை முடுக்குகளுக்குள் எல்லாம் சென்று துழாவித் தேடித் துருவி, அதன் விரிவையெல்லாம் தொகுத்துத் திரட்டித் தந்த     தேனடை தான் இந்தத்  தொடக்கக் கட்டுரை. கட்டிக் கரும்பாய்க் கனிரசமாய்ச் சொக்கவைக்கும் சுவையூறும் சொல்லில் நடமிடுகிறது  இக்கட்டுரை. கற்கண்டின் எந்தப்பகுதி இனிக்கும் என்று கேட்டால் என்ன சொல்வது?அனைத்துப் பகுதியும் தானே! அக்கற் கண்டிலிருந்து கடுகளவு பிட்டு, சுவைத்துப் பார்க்கலாம்.

"தில்லி, நிறைய மாறுதல்களைச் சந்தித்துள்ளது. குன்றுகள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளாக்கப்பட்டுள்ளன. நரிகள் ஊளையிட்டுத் திரிந்த காடு கொன்று நாடாக்கி நிறுவிய ராமகிருஷ்ணாபுரம் எனப்படும் ஆர். கே. புரம் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடியிருப்புப் பகுதியாக விளங்குகிறது. பூங்காக்கள் கடைவீதிகளாக மாறியுள்ளன. திருடர்கள் தங்கள் திருட்டுச் சொத்தைப் பங்கு போட்டுக் கொண்டிருந்த இடங்கள் இப்போது விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடங்களாக மாறிவிட்டன. வழிப்பறிக் கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த இடங்கள் இன்று உயர் வருவாய்ப் பிரிவினர் வாழும் குடியிருப்புகளாக உருமாறி யுள்ளன" (பக். 5) 

இவ்வாறு இனிய எளிய சொற்களின் படை வீச்சால் விளக்கியிருக்கும் பான்மை நெஞ்சைத் தொட்டு  நினைவைத் தொட்டு  அந்த நினைவுக்குள் தங்கித் தடம் பதித்து நிற்பதாகும். 

தில்லிக்கு இடம் பெயர்ந்த தமிழர்கள்' எனும் இரண்டாவது கட்டுரை, திருமதி மோ. யுவராணி அவர்களின் படைப்பாகி மிளிர்கிறது. 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு' என்றபடி, வந்தாரை வாழவைக்கும் தில்லியை நன்றிப்பெருக்கோடு நினைவுகூறும் நல்லதொரு சிந்தனை பெற்றுப் பொலிகிறது இப்பதிவு.  'தாய்ப்பால் இன்றித் தவித்த போது புட்டிப்பால் தந்த புனிதத் தாய்' (20) என்றும் ’ஆறுதல் தேடி வந்த குழந்தையை அரவணைத்து ஆளாக்கிய தில்லி எனும் தாயை மறப்பாரோ' (பக். 27) என்றெல்லாம் கூறி, நன்றிக் கசிவூறச் சொன்ன நல்லதொரு கட்டுரை இது. உயிர்ப்பான தமிழ் நடையில், தில்லிவாழ் தமிழ் மக்களின் உழைப்பையும் உன்னதக் கல்வி நிலையையும், இறை வழிபாட்டோடு பட்ட ஆன்மீக அதிர்வலைகளையும், இன்ன  பிற சமுதாயப் பண்பாடுகளையும்  இணைத்து,  நீளாது குறுகாது நிகரமைந்த அளவினதாய், கட்டுரைக்கே உரிய கட்டுக்கோப்புடன் உருவாகி வந்த உன்னதக் கட்டுரை. சிந்தையில் நின்று தனித்தினிக்கும் தனியொரு பதிவு இது.

திரு ச. சீனிவாசன் அவர்களால் எழுதப்பட்ட 'தில்லித் தமிழ்ச் சமுதாயம்: இடப்பெயர்வு வரலாறும் வாழ்வும்' எனும் மூன்றாம் கட்டுரை எதைப்பற்றிப் பேசுகிறது? ஆசிரியர் வாயாலேயே அதைக் கேட்போம். 

'தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் அரசியல் அதிகாரமும் மிக்க தில்லி உருவான வரலாறு, அங்கு தமிழர்களின் இடப்பெயர்வு உட்பட பலதரப்பட்ட மக்களின் குடியேற்றம் முதலானவை குறித்த சில அடிப்படைத் தகவல்களைப் பதிவு செய்வதாக இக்கட்டுரை அமைகிறது.' (பக். 30)

மேலே கண்ட இது, பிள்ளையார்சுழிதான். உள்ளே சென்றால் பல சுவையான செய்திகளையும், பரவலாக அறியப்படாத செய்திகளையும், ஓரிடத்தில் கண்டு, பயன் கொண்டு இன்புறலாம். பரவலாக அறியப்படாத செய்திகள், நூலில் உள்ளபடி:

‘இந்தியப் பிரிவினையின் போது மூன்றரை இலட்சம் முஸ்லிம்கள் டில்லியில் இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த அதேவேளை மேற்கு பஞ்சாப், சிந்து மாகாணங்களிலிருந்து இந்துக்கள், சீக்கியர் உட்பட ஐந்து லட்சம் பேர் தில்லிக்கு குடிபெயர்ந்தனர்.’(பக். 31)

‘பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் சைவ நெறியாளராக குமரகுருபரர் டில்லி பாதுஷாவும் அவுரங்கசீப்பின் மூத்த சகோதரருமான தாரா ஷிகோ என்பவரிடம் தமது கல்வி அறிவினாலும் தவப் பண்பினாலும்   இந்துஸ்தானியில் பேசி அவரது உள்ளத்தைக் கவர்ந்துள்ளார். தமிழர்கள் வடநாட்டோடு கொண்ட முதல் தொடர்பு, இடப்பெயர்வு குமரகுருபரரிலிருந்து தொடங்குகிறது எனலாம் ‘ (பக். 40).

‘தமிழகத்தைச் சேர்ந்த திருவள்ளுவர், பாரதியார், காமராஜர், ராஜாஜி, முரசொலி மாறன், ஆகியோருக்கு தில்லியில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.’(46)

‘தில்லியில் உள்ள பழம் பெருமை வாய்ந்த கல்லூரியான புனித ஸ்டீபன் கல்லூரியில் 1915-ஆம் ஆண்டு ஜனவரியில் காந்தியடிகள் தன் மனைவி கஸ்தூரிபா காந்தியுடன் சில நாட்கள் தங்கி இருந்தார் (பக். 34).

‘காற்று மாசு நிறைந்த நகரம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரம், சுற்றுச்சூழல் சீர்கேடு நகரம், போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம், அரசியல் அதிகாரம் மிக்க நகரம், கலவரங்கள் மிக்க நகரம், பணப்புழக்கம் அதிகம் உள்ள நகரம், வணிக நகரம், குடியேறி வாழத் தகுதியான நகரம் - தகுதியற்ற நகரம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருகின்ற நகரம், குழந்தைகளுக்கு நல்ல கல்வியை நல்குகின்ற நகரம், சர்வதேச நகரம், சுற்றுலா நகரம், எனத் தில்லிக்குப் பல முகங்கள் உள்ளன’ (பக். 32) முதலான சுவையான செய்திகள் இக்கட்டுரை நெடுக விரவிக் கிடக்கின்றன.

'கடலில் சென்று கலக்காத நதி யமுனை என்று சொல்வார்கள். டில்லியில் வாழ்ந்தவர்களில் இந்த யமுனை நதித் தண்ணீர் குடித்துத் தாகம் மட்டுமே தீர்த்தவர்களும்  உண்டு. அதில் படகு விட்டவர்களும் உண்டு. இந்த யமுனை நீரோட்டத்தின் ஏற்ற இறக்கத்தோடு ஒத்திசைந்து நீந்திக் கரை சேர்ந்தவர்களும் உண்டு. யமுனையின் ஆழம் தெரியாமல் காலை விட்டு மூழ்கிப் போனவர்கள் பல பேர். தமிழர்களின் தில்லி வாழ்க்கையும் ஒரு வகையில் அப்படித்தான்.' (பக். 47) 

இப்படி, தில்லிப் பெருநகர வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்ட திசை மாற்றத்தின் அடையாளங்கள் எல்லாம்  பொன்னும் மணியும் போல் இக்கட்டுரை முழுவதும்   நிறைந்து  கிடக்கின்றன. 

திருமதி ரமாமணி சுந்தர் அவர்களால் எழுதப்பட்ட நான்காவதாக அமைந்த 'தலைமுறைகள் கண்ட தில்லி தமிழர்கள்' எனும் கட்டுரை, தில்லி வாழ் தமிழ் மக்களை, முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை என விலா வாரியாகப் பகுத்துக் காலவெள்ளத்தில்  அவர்களின் நடை, உடை, பாவனை மற்றும் வாழ்வியல் , காதல் திருமணங்கள் போன்ற கலாச்சார மாற்றங்களை எதார்த்த நிகழ்வுப் பாங்குடன் விமர்சனப் பார்வையையும் கலந்து கொடுக்கிறது. 

'ஜாதகம் மேட்ச் ஆகிறதோ இல்லையோ, அப்போதுதான் தம்பதிகள் இடையே கெமிஸ்ட்ரி மேட்ச் ஆகும் என்பது இவர்கள் வாதம்' (62) என இவ்வாறு முத்தாய்ப்பு வைத்து முடித்து வைத்திருக்கும் இந்த வாசகம், மாறிவரும் இக்கால இளைஞர்களின் எண்ண ஓட்டத்தை விண்டு சொல்லி, நம் நெஞ்சுக்குள் நின்று சிந்தனை அலைகளைப் படர விடுகிறது. 

தாயின் மணிக்கொடித் தமிழர்கள் எனும் ஐந்தாம் கட்டுரைக்குச் சொந்தக்காரர் திருமதி. சத்யா அசோகன் ஆவார்கள். தில்லியில், மேல்தட்டு வர்க்கத்தில் அமர்ந்து பதவி வகித்த மேட்டுக்குடித் தமிழர்களையெல்லாம் விடாது பிடித்துப்  பட்டியல் போட்டுக் காட்டி 'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு' என்றெல்லாம் தோள் தட்டிப் பெருமிதம் கொள்ள வைக்கும் கட்டுரை இது. நாமும்  நமது நெஞ்சை நிமிர்த்திப் பெருமிதம் கொள்ளலாம். எனினும் தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (UGC) போன்ற அனைத்திந்திய அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில், அந்நிறுவனங்கள் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை, எந்தத் தாயின் மணிக்கொடித் தமிழனும் இடம்பெறவில்லை என்பதையும், நெஞ்சுக்குள் இருந்து, குரல் ஒன்று மெல்லக் கூவி அழைத்துக் காதோரம் நின்று  சொல்வதையும் கேட்க முடிகிறது .

இவ்வாறு மேல்தட்டுப் பதவியைப் பெற்றுப் பெருமிதம் கொண்டோர் எண்ணிக்கை,  தில்லி வாழ் தமிழ் மக்கள் தொகையில் கடுகளவு கூடத் தேறாது. ஆனால் சேலம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வேலை தேடி, பிழைப்பிற்கு வந்தவர்களில், பெண்கள் வீட்டு வேலை செய்து வயிற்றைக் கழுவுபவர்களாக, ஆண்கள் கூலிகளாக, கார் துடைப்பவர்களாக, ஆடையின்றி வாடையில் மெலிந்து, கையது கொண்டு மெய்யது பொத்திக் காலம் தள்ளும் நடைமேடை  வாசிகளாக; விளிம்பு நிலை மக்களாக ; இவ்வாறு  கணிசமாக உள்ள இந்தத் தாயின் மணிக்கொடித் தமிழர்களை எண்ணி இதயம் கசிந்து, இக்கட்டுரையில்  எங்கேனும் ஏதும் சொல்லவில்லை என்பது நினைவுக்குள் வந்து நெருடுகிறது. 

இராஜாஜியையும், வெங்கட் ராமனையும், சேஷனையும், இன்னபிற மேற்படி யார்களையும், உள்ளம் பூரிக்க; உடல் பூரிக்க ; சொல்லும் வாயெல்லாம் சேர்ந்து பூரித்து மணக்க ; இக்கட்டுரையில்  வானளாவப் புகழ்ந்து பேசும் இந்த எழுத்தாளர் , இந்த நாடே துன்பத்தில் தத்தளித்துத் தடுமாறிக் கொண்டிருந்த மிக இக்கட்டான தருணத்தில், தில்லியில் தலைமைப் பீடத்தில்  அமர்ந்து, இந்த இந்தியத் துணைக் கண்டத்திற்கு இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்து, அமைதிபட ஆட்சிமாற்றம் ஏற்படுத்தித் தந்த, அந்த 'அரசியல் ஞானி' காமராஜரை, மிக விழிப்புடன் இருந்து, இக்கட்டுரையில் எங்கோ ஓர் மூலையில் கூட  இடம் பெறாமல் பார்த்துக் கொண்ட தலையைத் தடவி மூளையை உரியும்  சாதுர்யத்தை என்னவென்று சொல்வது?. 

ஆறாவதாக, "தில்லியில் தமிழ்- தமிழர்" என்னும் தலைப்பில் அமைந்த, திரு. புதேரி தானப்பன் அவர்களின் கட்டுரை நாற்பது பக்க அளவில் படர்ந்து, செறிவும் சுவையும் மிக்க இன்றியமையாச் செய்திகளுடன் நடை பயில்கிறது. இக்கட்டுரை ஆசிரியர் தனக்கெனத் தோன்றிய தனியொரு அனுபவ முத்திரையின் சிந்தனை வயப்பட்டு வேறுபட்ட கோணத்தில் நின்று தில்லி வாழ் தமிழர்களை, பல்வேறு பிரிவுகளாகப்  பிரித்து அதுதொடர்பான நடப்பியல் நிலவரத்தை நெஞ்சு கொள்ளச் சொல்லிச் செல்வதை அறிந்து மகிழலாம். 

'குளிக்காமல் வரும் குழந்தைகள், அழுக்கான ஆடைகளுடன் வரும் குழந்தைகள், பக்கத்தில் வந்தாலே துர்நாற்றம் வீசும் குழந்தைகள், படிப்பைப் பற்றியோ தமது எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படாத பெற்றோர்கள், காலைக் கடனை வீட்டில் கழிக்காமல் வகுப்பறையில் காலோடு கழித்துவிடும் போக்கு, கெட்ட கெட்ட வார்த்தைகளைப் பேசும் மாணவர்கள், மது குடித்துவிட்டு வரும் மாணவர்கள், பள்ளியிலேயே மது குடிக்கும் மாணவர்கள், அடுத்த மாணவருடன் கட்டிப்புரண்டு சண்டை போடக்கூடிய மாணவர்கள், ஒழுங்காகப் பள்ளிக்கு வராமலும் ஒழுங்காகப் படிக்காமலும் வந்து ஆசிரியர்களிடம் வசை மொழிகளை வாங்கிக் கொள்ளும் மாணவர்கள் போன்ற இயல்புகளைக் கொண்டவர்களாகவே மாணவர்கள் இருக்கிறார்கள்' (பக். 114). 

பள்ளிக்குச் செல்லும் தில்லி வாழ் தமிழ்க் குழந்தைகளின் அவலத்தை எல்லாம் எண்ணி நெஞ்சு பொறுக்காது வருந்தி மொழிந்த இக் காணொளிக் காட்சி நம் நெஞ்சத்து உணர்வுகளை யெல்லாம் சங்கடத்தில் ஆழ்த்தி சிந்தையை நெருட வைக்கிறது.  ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால், ஆசிரியர், தன் நெஞ்சு நிறையப் புகுந்து கிடந்த, 'தில்லியில் தமிழ் - தமிழர்' பற்றிய செய்திகளையெல்லாம் அடங்கப்பிடித்து, தன் சீரிய சிந்தனையை வாள்போல் கூர்மையாக்கி, புலவர்களையும் பொதுமக்களையும் நேர்பட எண்ணி எழுதிய எழுத்தோவியம் இது. வாசிக்கும் வாசகர்களை ஈர்த்து, தன் கட்டுக்குள் கொண்டு வந்து வைக்கும்  கவின்மிகு கட்டுரை.

ஏழாவதாக அமைந்த 'தில்லியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட தமிழர்கள்' எனும் மொழிபெயர்ப்புக் கட்டுரை , அந்தக் கட்டுரை ஆசிரியர் காலத்துத் (எண்பதுகள்) தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை, நெருங்கி நின்று பார்த்துப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைகிறது.  அவர்களின் தொடக்ககால வாழ்க்கை, உறவுமுறை ஒழுகலாறுகள், திருமண ஏற்பாடுகள், சமயநெறி முறை போன்றவற்றோடு தொடர்புபட்ட, மிகச் சரியான வரலாற்றுப் பார்வையாக வெளிப்பட்டு வந்து நிற்கிறது எனலாம் . ஆகச் சிறந்த கட்டுரையை வழங்கிய ஆனந்த் இன்பநாதனும் , அதனைத் தமிழில் மொழியாக்கம் செய்த திரு. டேவிட்சனும் பாராட்டுக்குரியவர்கள்.   

பகுதி-3-இல் தலைநகரில் தமிழ்க் கல்வி எனும் தலைப்பின் கீழ், உட் தலைப்புகளாக அமைந்த  8,9,10,11,12 – ஆம் எண்களில் உள்ள கட்டுரைகள் 73 பக்கங்களை எடுத்துக் கொண்டு விசாலப் பார்வையால் நம்மை அள்ளி விழுங்குகிறது . இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளைப் படைத்தவர்களுள் பெரும்பாலோர் கல்வியாளர்களாக உள்ளனர்.  அதனாலோ என்னவோ கல்வி பற்றிய அனைத்துச் செய்திகளையும், அவரவர்களின் தகவிற்கும்  தலைப்பிற்கும் ஏற்ப,  ஆதியிலிருந்து தொடங்கி, அந்தம் வரை, அந்தாதியாகத் தொடர்புபடுத்தி, எதையும் விட்டு விடாது இணைத்துச் சொல்லியுள்ளனர்.

'தலைநகரில் தமிழ்க் கல்வி' எனும் இந்த ஒரு பகுதியே, வாமன அவதாரம் எடுத்து, தில்லி வாழ் தமிழர்களின் கல்விநிலை பற்றிய கலைக்களஞ்சியமாகி நின்று கவனத்தை ஈர்க்கிறது. இப்பகுதியின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் உள்ள நலந் தீங்குகளை எல்லாம், நிரல்பட எடுத்துச் சொல்வதானால் இந்தச் சொற்கட்டு நெகிழ்ந்து நீளும்;    விரிந்து வளரும். விரிவஞ்சி விலக நேர்கிறது.   

பதிமூன்றாம் எண்ணுள்ள கட்டுரை தில்லித் தமிழர்களின் அடையாளமாகத் திகழும் தமிழ்சங்கம் பற்றியதாகும். 'வரலாறு படைக்கும் தமிழ்ச் சங்கம்' எனும் தலைப்பில் திருமதி. ரமாமணி சுந்தர் அவர்கள் எழுதிய எழுத்தோவியம் இது. தில்லித் தமிழ்ச்சங்கம், தலைநகர் தில்லியில், வேர்   பதித்த இடத்திலிருந்து தொட்டு தொடங்கி, அது ஓங்கிப்பெருகி உயர்ந்து, அடர்ந்து விரிந்து விழுது விட்டுக் கிளை பரப்பி  ஆலமரமாய் வளர்ந்து நிற்கும்  இந்தக் காலகட்டம் வரை உள்ள அதன் பிரம்மாண்ட வளர்ச்சியைப் படிப்படியாய், மனங்கொள்ளச் சொல்கிறது. அதன் வளர்ச்சிக் கட்டங்களை தனித்தனிக் கால அடைவுகளாகப்  பகுத்து, அதையொட்டிச் சொல்லியுள்ள செய்திகள் நெஞ்சைப் பிணிப்பதாகும். அதன் ஒவ்வொரு நகர்வையும் அந்தந்த நிகழ்வுகளுடன் பொருத்திக் காட்டி, அதனூடு தமிழ்விழா, கம்பர் விழா, பாரதியார் நூற்றாண்டு விழா, தமிழ்ப் புலவர் குழுவின் தனித்த விழா, அருணகிரிநாதரின் 600-ஆவது பிறந்தநாள் விழா என  இவ்வாறு இன்னும் பலப்பல. தில்லித் தமிழ்ச் சங்க வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்க பல நிகழ்வுகள் இக்கட்டுரையில் ஏராளம் உள்ளன. அமுதத் தமிழ் நடையில் அற்புதமாகச் சொல்லிய வரலாற்றுச் செய்திகளையெல்லாம் கட்டுரையில் கண்டு படித்தால் தான் மனம் நிறைவு பெறும்.

பதினான்காம் எண்ணுள்ள 'தலைநகர் தில்லியில் தமிழ்க் கோவில்கள்' எனும் கட்டுரை இராஜி ரமணி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. சைவத் திருத்தலங்களையும் பிற சிறு தெய்வ வழிபாட்டுக்  கோயில்களையும், விடாது எடுத்துச் சொல்லி இன்புறுத்துகிறது இக்கட்டுரை. கோயில்கள், கால் கொள்ளக் காரணமாக அமைந்தவர்களையும்,   கோயில் உருவான காலத்தையும், அந்தந்தப்பகுதி வாழ் தமிழ் மக்கள் ஒன்றுபட்டுத் திருவிழா எடுத்துக் கொண்டாடி மகிழ்வததையும், இன்ன பிறவற்றையும்  ஆன்மீக மணம் கமழக் கமழ விருந்து படைக்கிறது. தமிழ் மக்களின் சமய உணர்வுகள் சுவைபட சொல்லப்பட்டிருக்கின்றன. 

தில்லியில் வைணவத் திருத்தலங்கள் என்னும் பதினைந்தாம் எண்ணுள்ள கட்டுரை       நா.காளிதாசம்மாள் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. நினைவுக்கெட்டா நெடுங்காலத்திலிருந்து தொடங்கி , தில்லியின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் சொல்லி, அதில் கோயில்களின் பங்களிப்பையும் பேசித் தொடங்குகிறது இக்கட்டுரை. கோயில் வழிபாட்டின் மேன்மை, ஸ்ரீவைஷ்ணவம், வடகலை – தென்கலை - அவைசார்ந்த மடங்கள் , நரசிங்கரின் திருத்தலம் போன்றவற்றைப் பட்டுக்கத்தரித்தது போல் பாங்காகச் சொல்லிச் செல்கிறது. தில்லியைச் சுற்றியுள்ள வைணவக் கோயில்களை எல்லாம் நேரில் சென்று கண்டு – இன்புற்று அவற்றின் நுட்பங்களையெல்லாம் தன் கூரிய பார்வையால் ஊடுருவிக் கண்டு சொல்லிய கவினுறு கட்டுரை இது.

மேலும் இத்திருத்தலங்களின் தகவை எல்லாம் நிரல்பட  எடுத்தோதி, திருமாலின் சீர் சொல்லி நம் நெஞ்சுக்குள் ஆன்மீக உணர்வுகளை அள்ளிக்கொண்டு வந்து நிரப்புகிறது. திருமால் பெருமையைக் கேளாத செவிகள் - காணாத கண்கள் – பேசாத நாவு ஆகியவை செவியும் அல்ல , கண்ணும் அல்ல, நாவும் அல்ல என்பது இளங்கோவடிகளின் அழுத்தமான கோட்பாடு. இத்தகைய திருமாலின் சீரை எல்லாம், வாழும் சாட்சியாய் நின்று பார்க்கவும், கேட்கவும், வழுத்தவும் வாய்ப்பளிக்கும் கட்டுரை இது. வைணவ ஆர்வலர்களுக்கு இது ஓர் ஆன்மீகத் தடாகம்.  

'தில்லித் தமிழ்ச் சங்கம்: கலை- இலக்கிய- பண்பாட்டுப் பணிகள்' எனும் பதினாறாம் எண்ணுள்ள கட்டுரை திருமதி சு. சுசா அவர்களால் மிக விரிவாகப் பேசப்பட்டுள்ளது. முத்தமிழை முரசறைந்து முழக்கும் தில்லித் தமிழ்ச்சங்க வெளியீடான 'சுடர்' எனும் மாத இதழின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய செய்திகளை விரிவாக எடுத்து

விளக்குகிறது இக்கட்டுரை. சங்க ஆண்டு மலர், கவிமணி மலர், பாரதிதாசன் மலர், கல்கி மலர் , பேரறிஞர் அண்ணா மலர், வெள்ளிவிழா மலர், இந்திய இலக்கிய மலர், சமுதாய மறுமலர்ச்சி மலர், பொன்விழா மலர், என, சுடர் எனும் மலரில்  சுடர் விட்டு ஒளிர்ந்த மலர்கள் ஏராளம். 

1952-இல் ஏற்றிவைத்த இந்த, 'சுடர்' எனும் தீபம், வள்ளற்பெருமான் வடலூரில் - மக்களின் பசிப்பிணிபோக்க, தன் திருக்கரங்களால் ஏற்றித் தொடங்கி வைத்த அந்த அடுப்பின் தீ, இன்னமும்   அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பது போல, இந்தச் சுடர் (மாத இதழ்) எனும் தீபம் இன்னும் தொடர்ந்து மின்னிச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் பெருமிதத்துடன் பேசுகிறது இக்கட்டுரை. இடையிடையே, இது தொடர்பான தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நல்ல நல்ல நிகழ்வுகளையும்,  சுவையூறும் செய்திகளையும், எழிலூற இனிப்பூற  இன் தமிழின் சுவை யூறச்  சொல்லி இன்பத்தில் ஆழ்த்துகிறது .

'தலைநகரில் தடம்பதித்த தமிழ் எழுத்தாளர்கள்' என்னும் பதினேழாம் எண்ணுள்ள கட்டுரை, திரு பொன் ராஜா அவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்து மணம் பரப்புகிறது. தில்லி வாழ் தமிழ் எழுத்தாளர்களை, பல்கலைக்கழகங்களிலிருந்து பரிணமித்ததவர்கள் , தில்லி தமிழ் கல்விக் கழக பின்னணி கொண்டவர்கள், தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இருந்து வெளிப்பட்டு வந்தவர்கள், ஊடகங்களின் வழி அறியப்பட்டோர் எனப் பகுத்து, அவர்களின் தனித்த அடையாளங்களை இனங்கண்டு சித்தரித்துச் சொல்வதைப் பார்க்க முடிகிறது. 'தடம் பதித்தோர்' எனும்' உட்தலைப்பில் பல்வேறுபட்ட படைப்பாளர்களை எல்லாம் அவர்கள் இன்னின்னார்; மற்றும் அவர்களைப்பற்றிய குறுகத் தரித்த தனித்த செய்திகளுடன், அவர்களின் படைப்புகள் இவை இவை என வரிசைப்படுத்தி, சற்று விரிவான வீச்சுடன் வாசகர் நெஞ்சங்களுக்கு இதம் தரும் வகையில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. சொல்லில் சுவையும் சொல்லிய முறையில் இதமும் பெற்றுத் திகழ்கிறது இக்கட்டுரை.

தில்லித் தமிழ்ச் சூழலில் தமிழ் நாடகங்கள்' எனும் தலைப்பில் அமைந்த பதினெட்டாம் எண்ணுள்ள இக்கட்டுரை பேராசிரியர் செ. ரவீந்திரன் அவர்களால் எழுதப்பட்டதாகும். அவரது எழுத்தின் போக்கைப் பார்க்கலாம்.

"-----இந்த நிலையில் தில்லியில் காண்பதெல்லாம் தமிழகத்தில் கலை இலக்கியம் என்னும் பெயரால் நடைபெறும் கேலிக் கூத்துக்களின் பிரதிபலிப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை." (பக். 318), "தமிழகத்தில் வீதி நாடகங்கள் என்னும் பெயரில் நடைபெறும் அபத்தங்களை கண்டுவந்த எனக்கு" (பக்.321), "ஆனால் தில்லியில் இக்காலகட்டத்தே தமிழர்களிடையே நாடகம், இவற்றின் மீதான ஈடுபாடு தமிழகத்தின் சபா நாடகங்களை, மூன்றாந்தர, நான்காந்தரத் தமிழ் சினிமாக்களைக் கண்டு களிப்பதாகவே இருந்தன." (பக். 319).

இவற்றையெல்லாம், மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்  எதார்த்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதுபோலத் தோன்றலாம். எனினும் இக் கட்டுரை  ஆசிரியர் உள்ளத்தில் கனன்று கிடக்கும் அகத்துறு செயல்களை அணுகிப் பார்த்தால்   அவ்வாறு  எடுத்துக்கொள்ள இயலாது என்பது தெரியவரும்.  

மேற்கண்ட இந்தச் சொல்லாடலும், அதை வெளிப்படுத்திய மேட்டிமைத்தனமான தோரணையும், ஏதோ தன்னை விட்டால் உலகில் வேறு யாருமே இல்லை என்னும் போக்கைத்தான் காட்டுகின்றது. தன்னைத்தவிர அல்லது தங்களைத் தவிர, வேறு பலரின் நாடகக் கலைச் செயல்பாடுகள் அனைத்தும் குப்பை கூளங்கள்; அபத்தங்கள் தன்னுடைய அல்லது தங்களுடைய கலைச் செயல்பாடுகளே ஒப்புயர்வற்ற உலகத்தரம் வாய்ந்தவை; என்பது போல எண்ணித் தனக்குத்தானே ஒரு அகந்தையும் ஆணவமும் கொண்ட ஈகோ (Ego) கிரீடத்தைச் சூட்டிக்கொண்டு பேசிய பேச்சாகவே இது உள்ளது என்பதை அறியலாம். சிறந்த பதவியோ பொறுப்போ சீரல்லவர்களிடம் பொருந்துமாயின் உடனே அவர் மிகுந்த செருக்குடையராய் மீறிக் களிப்பர்  எனும் திருக்குறள் (977) பொதிவு  இங்கு நினைவிற்கு வருகிறது. சரி; இது இருக்க, அடுத்ததாக உள்ள ஒரு அற்புத வாசகத்தைப் பார்க்கலாம்.

"சனிக்கிழமைகளில் வெங்கட்சாமிநாதன், பாரதி மணி, கலா, சாரு நிவேதிதா என நண்பர்கள் "கைகளில், மதுக் கிண்ணங்களோடு" என்வீட்டில் தில்லித் தமிழ்ப் பண்பாட்டு வறுமைச் சூழலில் தங்கள் கனவுகளை இலக்கியத் தேடல்களைப் பகிர்ந்து கொண்டார்கள்." (பக். 320) 

இங்கு நம் கவன ஈர்ப்புக்குரிய சொற்கள் 'கைகளில் மதுக்கிண்ணங்களோடு' என்பவையாகும். கொஞ்சமும் கூச்சநாச்சம் இன்றி பொதுவெளியில் பகிரப்படும் இந்தச் சொற்களை,  இங்கு   'ஒரு கோப்பையில் என் குடியிருப்பு' என்பதான டாஸ்மார்க் சரக்கு என்னும் நேர் பொருளில் பயன்படுத்தியிருந்தால், சீரல்ல  சொல்லும் இக்கட்டுரையாளரைப்    போன்ற சீரற்ற ஒருவரை  வேறெங்கும் காண முடியாது என்பதாகத்தான் அறிய நேரிடும்.  

(அவர்களது மதுக் கிண்ணத்தின் வீரிய வீச்சு இன்னும் சற்றுக் கடுகளவு கூடியிருந்தால், ‘சுண்டி இழுக்குதடி டாஸ்மாக் சரக்கு; அது, சுற்றி மயக்குதென்று ஆடடி பள்ளு’, என்று அனைவரும் கூடி பள்ளுப்பாடி, ஆடி மகிழ்ந்து, தில்லித் தமிழ்ப் பண்பாட்டு வறுமைச் சூழலை அப்படியே புரட்டிப் போட்டு, தாமிரபர்ணி ஆற்று நீர்பெற்றுயர்ந்த நெல் விளைச்சல் போல் வளப்படுத்தி இருப்பார்கள்!) 

மற்றபடி நாடக அரங்கின் ஒளியமைப்பு நுட்பங்கள் பற்றி   அங்கிங்கெனாதபடி எங்கும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் தங்களுடைய  நாடகங்கள் பற்றிச் சொக்கிச் சுகங்கண்டு சொல்லி மகிழ்ந்த  செய்திகளும் நிறைய உண்டு. இவரது நாடகத்துறை ஞானத்தந்தை திரு. கி. பென்னேஸ்வரன் அவர்களிடம், 'ரவீந்திரன் போன்றவர்கள் இங்கு  சரியான அளவில் கொண்டாடப்படவில்லை' (பக்:445) என்னும் சான்றிதழ் பெற்றுப் பெருமை பெற்றவர்தான் இக்கட்டுரை ஆசிரியர் என்பதையும் நினைவிற் கொள்க. 

தமிழர் இடப்பெயர்வு அடையாள பதிவுகள்: தில்லிச் சிறுகதைகள் வழிக் கட்டமைத்தல் எனும் பத்தொன்பதாம் கட்டுரை, திரு. ச. சீனிவாசன் அவர்களால் படைக்கப்பட்டது. இடப்பெயர்வு தொடர்பான தகவல்கள் ஏற்கனவே பலராலும் அங்கங்குக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபற்றி இக்கட்டுரை ஆசிரியரும் தன் வழியில் தன் பாணியில் சொல்லியுள்ளார்.

தில்லிக்கு முதலில் இடம் பெயர்ந்து வந்தவர் யார்; பின்னர் இடம்பெயர்ந்து வந்தவர் யார் என்பதைக் குறிப்பிட்டு விட்டு, ‘படித்த மேல்தட்டுத் தமிழ் மக்கள் தில்லியில் குடியேறிய சூழல் வேறு; ஏழைகள் இடம்பெயர்ந்த உண்மை வரலாறு வேறு’ (பக். 343) என அழுத்தம் கொடுத்து, மெய்ப்பொருளை விண்டு சொல்லிய இந்த இடம் அனைவர் நெஞ்சிலும் பதிய வேண்டிய ஒன்று. தில்லிச் சிறுகதைகளில் தமிழர் இடப்பெயர்வு அடையாளப் பதிவுகள் -எனும் பிரிவில் பதிமூன்று கதை ஆசிரியர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து, அந்தந்த ஆசிரியரின் கதைகளின் மையக்கருவைக் கையிலெடுத்து அதையொட்டிய அனுபவப் பிழிவுகளை வாசகர்களுக்கு அருந்தக் தருகிறார் ஆசிரியர். 

பக்கம் 340-இல்அமைந்துள்ள 'தமிழர் இடப்பெயர்வு சில அடிப்படைகள்' எனும்  இந்தப் பகுதிக்கு அடுத்தபடியாக, ‘தமிழ்ச் சூழலில் சிறுகதை வடிவம் : வட்டாரச் சிறுகதைகள்’ எனும் பகுதியைத் (பக். 343-348) தவிர்த்து நேரடியாக, 'தமிழில் இடம்சார்ந்த எழுத்துகள்-எழுத்தாளர்கள் - பதிவுகள்’ எனும் பகுதிக்கு வந்து சொல்லாடலைத் தொடர்ந்திருக்கலாம்.  கட்டுரைத் தலைப்பின்படி பார்த்தால் ஒட்டுமொத்தச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய வரலாறு பேசும் களமன்று , இது. 

(ஏற்கனவே பலராலும் பலகாலும், இந்த நூலைத் தவிர, வேறு பல இடங்களிலும் சொல்லப்பட்ட, வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதை, வவேசு - வின் குளத்தங்கரை அரசமரம், பாரதியின் ஆறில் ஒரு பங்கு, சிறுகதை வடிவத்தைக் கண்டெடுத்து நிலைபேறு கொள்ளச் செய்த புதுமைப்பித்தன், போன்ற தகவல்களை இன்னும் எத்தனை இடங்களில் எத்தனை தடவை சலிக்காமல் திரும்பத் திரும்பப் பன்னிப் பன்னிப் பேசுவது?. சரி; இது இருக்கட்டும்.)

சற்று ஊன்றிப் பார்த்தால் கட்டுரையின் தலைப்பை விட்டு விலகி வந்து, எல்லாச் செய்திகளையும் வாசகர்களுக்குச்  சொல்லிவிடவேண்டும் என்ற ஆர்வத்  தூண்டுதலினால் இயல்பான போக்கில் அமையாமல், சற்று   வலிந்து புகுத்திச் சொல்வதாகத் தான் படுகிறது . 

தில்லியில் தமிழ் நாடகங்கள்: படைப்பு - நடிப்பு – பங்கேற்பு என்ற தலைப்பிலமைந்த இருபதாவது கட்டுரை திரு. ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதியது. இக்கட்டுரையாளர் ஒரு கலைஞனாக , படைப்பாளியாக தமிழ் நாடகத்துறைக்கு ஆற்றியுள்ள  பங்கைப் பதிவு செய்கிறது இச்சிறிய கட்டுரை. ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதற்கேற்ப ஆனந்தம் கிருஷ்ண மூர்த்தியின் கட்டுரை அளவில் சிறியதாக இருந்தாலும் சீரிய நாடக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் கட்டுரையாக அமைந்திருப்பதில் ஆனந்தம் கொள்ளலாம்.  

 இருபத்தி ஒன்று முதல் இருபத்தி இரண்டு வரை அமைந்த கட்டுரைகள், கரையளந்து காணாத் தில்லித் தலைநகரின் இன்ப துன்ப உணர்வுகளின் நிகழ்வுகளையெல்லாம், அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப,  ஒய்யாரத்துடனும், உள்ளம் கசிந்த உருக்கத்துடனும், ஊடகங்கள் மூலம் உலகுக்குச் சொன்ன பான்மை நெஞ்சில் நின்று அசைபோட வைக்கிறது.

'அனுபவங்கள் - மனப்பதிவுகள்' எனும் தலைப்பில் அமைந்த இருபத்து மூன்று மற்றும் இருபத்து நான்காம் கட்டுரைகள் ஞானம் கனிந்த நலங்கொண்டு அந்தந்த வாழ்நிலைப் பகுதியின் அனுபவப் பாங்கோடு நாடகக்கலையின் நுட்பமான அனுபவங்களையும் இணைத்து, ஒரு கதைசொல்லி போலச் சொல்லிச் செல்கிறது. எனினும் அவற்றுள் சில தற்பெருமை பேசுவதையும், மேல்மட்டத் தொடர்பின் மேனாமினுக்கித் தனத்தை போகிற போக்கில் சொல்லிச் சுகங்காண்பதையும் சந்திக்க நேரிடுகிறது    

மேலும் வேறு  சில இடங்களிலுள்ள  கட்டுரைப் பகுதிகள் ,  சத்தும் சாரமும் இன்றி- மரபணுவின் வழிவந்த பூணூல் கலாச்சாரத்தின் நெடிகொண்டு நெட்டித் தள்ளி வெளிவந்த அதை, மாற்றுக் குறைந்த சந்தைக் கடைச் சரக்காகவே பார்க்க நேரிடுகிறது. இதுதவிர , சற்று நெருங்கி நின்று இக்கட்டுரையைக் கண்ணூன்றிக் கவனிக்கும் பொழுது,  நூலின் பல்வேறு இடங்களில், மினுமினுக்கும் தங்கமுலாம் பூச்சுக்குள் மறைந்து  கொண்டு, கொள்ளக் குறையாக் கள்ளச் சிரிப்பை அள்ளி வழங்கும் அவர்களின் அந்தரங்க மேஜிக் வித்தையையும்  காண முடிகிறது.

எனினும் இத்தகையவற்றை, முற்றாகத் தவிர்த்து இத்தொகுப்பு நூலை நிறைவு செய்ய இயலாத தொகுப்பாசிரியரின் தர்மசங்கடமான நிலையையும் நினைக்க வேண்டியுள்ளது.

இருபத்து ஐந்தாம் எண்ணுள்ள கட்டுரை ஷாஜகான் அவர்களின் புத்தகத் திருவிழா பற்றிய படைப்பாக அமைகிறது. செய்யும் தொழிலே தெய்வம் என மதித்து செயல்படும் இவரது வாசிப்பு அனுபவம் நம்மை ஈர்த்து நிற்கிறது.

"அடுத்த தலைமுறையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. அப்போதும் புத்தகக் கண்காட்சிகள் இருக்கலாம். ஆனால் அங்கே அறிவுக்குத் தீனி போடும்  நூல்களைவிட, பாடம், படிப்பு, மேல்படிப்பு நூல்களை வாங்கத் தான் அதிகம் பேரைப் பார்க்க முடியும். நிச்சயம் இலக்கிய நூல்களைத் தேடுபவர்ளை அல்ல. அத்தகைய ஒரு காலத்தை பார்ப்பதற்கு முன் இங்கிருந்து விடை பெற்றுக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறத." (பக். 463). சமுதாயத்தில், இன்றைய இளைஞர்களின்  போக்கை எண்ணி  ஏங்கி வருந்தி, இதயம் புண்பட்டுப்போன நிலையில் வெளிவந்துள்ள இவரது இந்தச் சொல்லாடல் , நம் இரத்த நாளத்திற்குள் சென்று தைக்கிறது . 

இருபத்து ஆறாம் எண்ணில் அமைந்துள்ள தில்லி வாழ் 'தமிழர்களும் தமிழ்ச்சங்க நூலகமும்' என்னும் கட்டுரை, திருமதி. ஷமீமுன்னிசா அவர்களால் எழுதப்பட்டுள்ளது. கருத்து கருவூலத்தை நாடி, நூலகம் நோக்கி  வருவோரைக் கனிவாய்  வரவேற்று, விரும்பும் நூலை வேண்டும் வகையில் தந்திடும் நல்ல நூலகராகத் திகழ்பவர்கள்.  ஈடுபாட்டுடன் கூடிய அவரது நூலகத்துறை அனுபவம் எழுத்தில்  இறங்கி நம் அனைவரையும் நூலக உணர்வு பெற்றுத் திகழ ஆற்றுப் படுத்துகிறது. சிந்திக்கும் சிந்தனைத் திறத்தில் எல்லாம், நூலக உணர்வு அவரது உள்ளத்தில் மேலோங்கி நிற்பதை- கீழ்க்கண்ட அவரது வாசகங்கள் மெய்ப்பிக்கும்.

"தில்லித் தமிழ்ச் சங்க நூலகம் தில்லியில் பல கிளைகள் பரப்பிடவேண்டும். புதிய நூல்கள் சேர்க்கப்படவேண்டும். நூலகத்தில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு ஆய்வு நூலகமாக மாறவேண்டும். புத்தகங்களைப் புரட்டிப் போட புத்தம் புது வாசகர்கள் புறப்பட்டு வரவேண்டும். வாசிப்பை நேசிக்கும் மனிதம் வளர வேண்டும்" ( பக். 472).

எழுத்தை நம்பி வாழ்ந்த ஏ.ஆர். ராஜாமணி மற்றும் மூத்த தில்லிவாசி புலவர் விஸ்வநாதன் ஆகியோரின் நேர்காணல் முறையே இருபத்து ஏழு, இருபத்து எட்டாம் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன. நேர்காணல்கள் நூலை நிறைவு செய்துள்ளது மட்டுமன்றி வாசகர்களுக்கு  மன நிறைவையும் தந்துள்ளது எனலாம். தொகுப்புக்கலைச் சித்திரத்தில் ‘நேர்காணல்கள்’ என்னும் பகுதியையும் இணைத்து தொகுப்புக்கலைக்குப் புதிய இலக்கணம் கண்டுள்ள தொகுப்பாசிரியர் ‘தொகுப்பின் அரசியல்’ (Politics of Compilation) அறிந்தவர் என்றே சொல்லத் தோன்றுகிறது.   

கற்றவர்களைக் கைவசம் வைத்துக் கொண்டு, அவர்களது அன்பையும் ஆதரவையும் அடித்தளமாகக் கொண்டு, இத்தொகுப்பு நூல் எனும் மாபெரும் மாளிகையை எழுப்பி இருக்கிறார் இந்நூலின் தொகுப்பாசிரியர்.

பல்வேறு பூக்களைச் சுமந்திருக்கும் கூடை, பல்வேறு நறுமணங்களைப்  பரவவிட்டு மகிழ்விப்பது போல, இத்தொகுப்பு நூலும், படித்து மகிழக்கூடிய பல்வேறு செய்திகளைப் பூச்சரமாய் அள்ளித்தரும் ஒரு பூக்கூடையாய் அமைந்துள்ளது. இந்நூலிலுள்ள கட்டுரைகள்  பல்வேறு எழுத்தாளர்களால் பல்வேறு காலகட்டங்களில், எழுதப்பட்டதாகும். தில்லி பற்றிய தங்கள் தங்கள் தனித்த  அனுபவங்களையும் செய்திகளையும் தங்களுக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும் அவரவர் எழுத்துக்களில் தில்லி பற்றிய பொதுச் செய்திகள் அவரவர்க்கு ஒரு முறை எனும் கணக்கில் அமையும். கணக்கிட்டுக் கணிப்போம். ஒரு இருபது ஆசிரியர்கள் எழுதி இருந்தால் டில்லி பற்றிய அந்தச் செய்திகள் இந்த நூலில் இருபது இடங்களில் இடம் பெற்றிருக்கும். ஆனால் வாசிக்கும் வாசகருக்கோ அது இருபது முறை. இந்நூலில், பல்வேறு இடங்களில்,  சொன்ன செய்திகளைத் திரும்பத் திரும்பப் பார்த்துப் படித்துச் சலிப்பில் துவண்டு போய்த் தொங்கிச் சுருண்டு போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறது  என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. எனினும் தொகுப்பு நூலில் இதைத் தவிர்க்க இயலாது என்பதையும் நினைக்க வேண்டியுள்ளது. 

சரி இவையெல்லாம் இருக்கட்டும் இனி நிறைவை நோக்கி நகர்வோம்.

ஆர்வம் என்பததோர் கோயில் அமைத்து, அதில் 'தொகுப்புக்கலைப் படைப்பு' எனும் தெய்வத்தை நாட்டி, மாளாக் காதல்கொண்டு, பூவிட்டுப்  போற்றி செய்யும் பெற்றித்தான படைப்புத்தான் இந்த மகத்தான  படைப்பு . 

- மு.பழநிச்சாமிநாகமலை , மதுரை -19

Pin It