சரியான காலத்தில் நடக்கும் பொருத்தமற்ற திருமணம் அல்லது காலம் கடந்த நிலையில் தோன்றும் ஆத்மார்த்தமான காதல் என்பதாக வாழ்க்கை நகர்கிறது என்று பலரும் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். சிலருக்கு வாழ்கின்ற வாழ்க்கையில் குறை வந்துவிடக்கூடாது என்பது வேண்டுதலாக இருந்தால் வேறு சிலருக்கு வாழ்க்கை இப்படியே முடிந்து விடக்கூடாது என்ற போராட்டம் இருக்கிறது.

alangudi vellaichamy bookதவறிய அழைப்பு, தவறவிட்ட விமானம், தவறுதலான கடிதம், தப்பான பார்வை, தட்டிப் போன வாய்ப்பு என்று தொடங்கித் தவறிப்போன வாழ்க்கையில் முடிந்திருக்கிறது ‘அப்பத்தாவின் கருக்கருவா’ என்ற ஆலங்குடி வெள்ளைச்சாமியின் கவிதைத் தொகுப்பு. கவிஞர் பொதுவுடைமைப் பட்டறைகளில் பட்டைத் தீட்டப்பட்ட காரணத்தினால் கவிதைகள் மனிதநேயத்தோடு பூத்திருக்கின்றன. பொதுவுடைமைச் சிந்தனையில் அழகியல் பேசும் கவிதைகளாக வலம் வருகின்றன.

நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அசலான கிராம வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. தமிழ் வாழ்க்கை என்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்பவர்கள் இந்தக் கவிதைத் தொகுப்பைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். “புயலில் வீழ்ந்தும் தன் வேர்களை இழக்காத சில மரங்களைப் போல் இவரின் மனம் இயற்கை வாழ்வில் இசைந்து கிடக்கிறது” என்று கவிஞர் அமீர் அப்பாஸ் கூறுவது முற்றிலும் பொருத்தமான உண்மை.

தேய்ந்து வளரும் நிலவுக்கும், வாசம் வீசும் மலருக்கும், பொறுமை காக்கும் மண்ணுக்கும், காற்றில் அசையும் கொடிகளுக்கும் பெண்களை ஒப்பிட்டுப் பேசுவது இனி தொடரவேண்டிய அவசியமில்லை. சாலைகளில் ஓட்டும் ஆட்டோ முதல் விண்ணில் ஏவப்படும் விண்கலன்வரை எல்லாவற்றிலும் தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் பெண்மை என்பது வீரத்தின் அடையாளமும்தான் என்று அழுத்தமாகப் பேசுகிறது கவிதை. பூந்தோட்டத்தில் பூக்களை மட்டும் பறிப்பவள் அல்லள்; போர்க்களத்தில் வாள் சுழற்றத் தெரிந்தவளும் பெண்.

வடநாட்டுக்காரனாக இருந்தாலும் பரவாயில்லை, அவனுக்குக் கீழ் வேலை செய்தாலும் அரசாங்க வேலை பார்க்க வேண்டும் என்ற தவறான ஆசையினால் தன் சொந்த ஊரை விட்டுக் கிளம்பும் ஒரு தம்பதியினரை வழிமறிக்கும் தமிழர்க்கூட்டம் “சொந்த மண்ணை விட்டுப் போக வேண்டாம்” என்று தடுத்துப் பார்க்கிறது. கேட்க மறுக்கும் கணவனின் விருப்பத்திற்கு மரியாதை கொடுத்து அவனோடு பயணிக்கும் அந்த மனைவி சுப்பம்மா நியாயத்தை எடுத்துக் கூறிய தமிழர்களிடம் தற்காப்புக்காக ஒரு கத்தியைக் கேட்டுப் பெறுகிறாள்.

“ ‘தந்தோம் எம் தங்கச்சி வெல்க! வெல்க!

தமிழச்சி உன் கத்தி வெல்க!’ ”

என்று வாழ்த்திக் கொடுப்பதாக, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதுவார். அதனாலேயே அந்த இலக்கியம் ‘தமிழச்சியின் கத்தி’ என்ற தலைப்பு தாங்கி வெளிவந்ததாகவும் கொள்ள இடமுண்டு. அது போன்ற ஓர் உணர்வை இந்தத் தொகுப்பின் தலைப்பு தருகிறது.

அப்பத்தாவுக்கு அவளின் கருக்கருவா மூன்றாவது கையாகவும், சொத்தாகவும், சிலநேரங்களில் குழந்தைப் பிறப்பின் போது தொப்புள் கொடியை அறுத்துவிடும் அறிவியல் சாதனமாகவும் பயன்பட்டிருக்கிறது. அவளுடைய அஞ்சாத உள்ளத்திற்கும் கருக்கருவாதான் காரணமாம்.

“கருக்கருவா கையிலிருந்தால்

கிழவி அஞ்சாளுக்குச் சமம்

அப்பா சொல்வதுண்டு”

என்று கவிதையை வடித்திருப்பார் கவிஞர்.

பழங்காலச் செய்யுள்களில் காணப்படும் உள்ளுறை உவமம் என்ற உவமையின் அழகைத் தற்காலக் கவிதைகள் குறியீடுகளாக வெளிப்படுத்துகின்றன. கவிதையில் வெளிப்படையாகச் சொல்லாமல் மறைமுகமாக உணர்த்தும் ஆற்றல் குறியீட்டிற்கு உண்டு. இப்படிப் பல குறியீட்டுச் சொற்களைக் கவிஞர் கையாண்டிருக்கிறார். நாய்ப் பிழைப்பான அரசியல் மீதும், புரையோடிய புண்ணாகிப் போன சாதியத்தின் மீதும், கடவுளின் பெயரால் நடக்கும் வன்முறைகளின் மீதும், இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கடவுள் நம்பிக்கையின் மீதும் நியாயமான வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்.

நாட்டுப்புறப் பாடல்களில் மட்டும் தலைகாட்டும் சோறு உண்ணப் பயன்படும் கும்பா நவீனக் காலங்களில் வழக்கொழிந்து போனது. வறுமையின் காரணமாக அந்தக் கும்பாவையும் விற்றுப் பசியாறும் நிலைமையில்தான் பல குடும்பங்கள் என்ற உண்மை உறைய வைக்கிறது.

மண்ணையும், தாவரங்களையும், பறவைகளையும், விலங்குகளையும் உயிராகவும், உறவாகவும் பார்த்த சமூகத்தின் எச்சமாக ‘வேப்பமரத்து மாரியப்பன்’ கவிதை தொடர்கிறது. புடவை கிழிந்தால் மகளுக்குத் தாவணியாகிவிடும். வேட்டி கிழிந்தாலோ இட்லி துணியாக உருமாறிக் கொள்ளும். இப்படிப்பட்ட நிலத்தில், ஒன்றைப் பயன்படுத்தியதும் அதன் பயன்பாடு முடிந்தவுடன் தூக்கி எறிவதும் எத்தனை பெரிய வேதனை! தூக்கி எறியும் கலாச்சாரத்தால் எத்தனை நபர்களின் வாழ்வாதாரம் இல்லாமல் போனது என்பது தனிக்கதை.

இரட்டை தோசை, கொழுக்கட்டை, குழிப்பணியாரம், அதிரசம், ஐஸ், தயிர், உப்பு ஆகியவற்றை ஒவ்வொரு வீடு வீடாகக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தவர்கள் இன்று என்ன ஆனார்கள் என்ற வலுவான கேள்வி ஒரு புறம்; மாட்டுவண்டி, வேட்டி, விளக்குகள் என்று இவையெல்லாம் மாறிப்போனாலும் இன்னும் மாறாமல் இருக்கும் சேரிகள் - காலனி என்ற பெயரில் நிலைத்து நிற்கும் அவலம் மற்றொரு புறம். இவற்றைத் தோலுரித்துக் காட்டுகிறது நூல்.

கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார்? திண்டாடித் தவிப்பவர்கள் யார்? மற்ற உயிர்களுக்கு ஆறறிவு இல்லையா? என்பன போன்ற கேள்விகள் இத்தொகுப்பை வாசிக்கும் போது நம்மைத் தொற்றிக் கொள்கின்றன. இந்த உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் ஒரு தத்துவம் உண்டு. படிப்பு, பதவி, பட்டம், செல்வாக்கு, ஏழை, பணக்காரன், ஆண், பெண் என்ற எந்த வித்தியாசமும் பார்க்காமல் எல்லோரிடமும் தன் ஆளுமையைச் செலுத்துகிறது. ஆனால் பாவம் வறுமையில் இருப்பவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். அதைத்தான் ‘பசி’ என்ற இரண்டு எழுத்துக்களால் குறிப்பிடுகிறோம்.

காவியைக் கட்டிக் கொண்டு, காவடியைச் சுமந்தபடி ஒருவன் எல்லாத் திசைகளிலும் சுற்றி அலைகிறான். பெரும்பாலும் பக்தர்கள் இறைவனுக்காகக் காவடி எடுப்பது வழக்கம். எனவே அவனைப் பார்ப்பவர்கள் கைகூப்பி வணங்குகிறார்கள். இவனோ அடுத்த வேளை உணவுக்காகக் காவடி எடுப்பதாகக் கவிதை முடியும். இதே தொகுபின் இன்னொரு கவிதை சட்டென விழா மண்டபத்திற்குள் நுழைகிறது ‘நிறைசூலி’ என்ற தலைப்பில். நன்கு விளைந்த நிலத்தில் அறுவடையின் போது குவிந்து கிடக்கும் பறவைகளைப் போல விழாவிற்கு வந்திருப்பவர்களைக் குறிப்பிடுகிறார் கவிஞர்.

பிரம்மாண்டமான விருந்து உபசரிப்பு அங்கே நடந்து கொண்டிருக்கிறது. நேரம் கடந்த நிலையில் எல்லோரும் உணவு உண்ட பின்னும் ஒருத்தி மட்டும் கருப்பை நிறைந்தும் வயிறு நிறையாமல் இருப்பதாகச் சொல்லி நம்மை அழ வைக்கிறார் கவிஞர். உயிருக்குள் ஓர் உயிரைத் தாங்கும் பெண்ணுக்கு எத்தனை மரியாதைகளும், கௌரவங்களும் நடைமுறை வாழ்க்கையில் கிடைக்கும். ஆனால் வறுமைப்பட்ட கர்ப்பிணி ஒருத்திக்கு, மண்டபத்தில் எச்சில் இலையை அப்புறப்படுத்தி முடித்த பிறகும் கொடும்பசிக்கான உணவு கிடைக்கவில்லை என்ற இடத்தில் வாழ்க்கை தன் வன்மத்தைக் காட்டிக் கொக்கரிப்பதாகவே படுகிறது.

தண்ணீரை நிலத்தில் தேடக்கூடாது, வானத்திலிருந்து வரவழைக்க வேண்டும் என்பார் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். நீர் வளத்தைப் பூமியிலிருந்து உறிஞ்சினால் ஆபத்துதான் என்ற எச்சரிக்கை மணி பலரின் காதுகளில் விழவே இல்லை. விவசாயப் பணிக்காக மண்ணில் கிணறு தோண்டிப் பின் ஆழப்படுத்தியும் தாகம் தணிப்பதற்கான தண்ணீர் கிடைக்காமல் காலத்தைக் கடத்தியது முதல் தலைமுறை. அடுத்து வந்த இரண்டாம் தலைமுறையோ கிணற்றுக்குள் ஆழ்துளைக் கிணறு அமைத்து நீரை உறிஞ்சியது.

மூன்றாம் தலைமுறை, வயலுக்குத் தண்ணீரை மட்டும் பாய்ச்ச வில்லையாம், தன் இரத்தத்தையும் சேர்த்துப் பாய்ச்சுகிறதாம். இதே நிலைமை நீடித்தால்,

“அச்சமாக இருக்கிறது

அடுத்தடுத்தும் தலைமுறைகள் இருக்கிறதே”

என்று முடிகிறது கவிதை. மனிதனின் பேராசைக்கு இயற்கைப் பலியாகிவிடும் என்ற பதற்றம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

அடுத்த வேளை உணவு இல்லையென்றாலும் சமாளித்து விடலாம்; இருப்பதற்கான நிலையான இடம் இல்லாமல் போனாலும் பாதை ஓரங்களில் ஒண்டிக் கொள்ளலாம். ஆனால் “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்க ஆளில்லாமல் இருக்கும் வெறுமை நிலைக்கு எதைச் சொல்லி ஈடு செய்ய முடியும்? “நான் அநாதையாகிப் போனேன்” என்பது தானே ஒப்பாரிப் பாடல்களின் அடிநாதம். இந்த நிலை நம் எதிரிக்குக்கூட வரக் கூடாது என்று சிந்திப்பவன்தான் படைப்பாளி. ஆனால் நாடகத் துறையில் கொடி கட்டிப் பறந்த ராஜ நடிகர் கால வெள்ளத்தில் கரைந்து போனார் என்று கவிதை புனைந்திருக்கிறார் ஆசிரியர்.

ராஜ நடிகர் தன் செல்வாக்கு இழந்து வாழ்வாதாரத்திற்காக இரவுக் காவலன் வேலை பார்க்கிறார். கையில் பிரம்பு பிடித்தபடி காவல் காக்கும் போது நாடகத்தில் தான் பாடி நடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார். இப்படி எதிர்மறையில் சொல்லியாவது அவருக்கான அங்கீகாரத்தைக் கொடுக்க முயல்கிறார்.

“இப்போது

அவரைப் போலவே

கேட்பாரற்று அலைகிறது

அவரின் சங்கீதம்”

என்ற வரிகளில் எவ்வளவு வேதனை வெளிப்படுகிறது!

காதலிக்காத கவிஞன் உண்டா? அல்லது காதல் இல்லாத கவிதைகள் உண்டா? – இவை இரண்டும் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. மாலை மயங்கும் நேரத்தில், இரவு தொடங்கும்போதே அந்த நினைவுகள் அவனைத் தொற்றிக் கொள்கின்றன. போர்வைக்குள் நுழைந்து வெளிஇரைச்சல்களிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்கிறான். காதுகளில் ரீங்கார மிட்டபடி “எல்லாப் பாதுகாப்புகளையும் மீறி நாட்டில் அத்துமீறி நுழைந்து நாசவேலை பார்க்கும் ஒரு தீவிரவாதியைப் போல நுழைகிறாயே” என்று தொடரும் கவிதையின் முடிவில் வெளியாகும் உண்மையில் இருக்கிறது கவிதையின் அழகு!

“தவிக்கிறேன்

துடிக்கிறேன்

விட்டுவிடு

கொசுவே”

என்று எத்தனை சிறிய கொசு அவ்வளவு பெரிய மனிதனை என்னபாடு படுத்துகிறது என்று சொல்கிறது. காதல் கவிதையைப் போன்று தொடங்கிய கவிதையில் நகைச்சுவை உச்சம் பெறுகிறது.

ஒருவர் தான் வாழ்ந்த காலத்திற்குப் பிறகு இந்தச் சமுதாயத்திற்கு விட்டுச் செல்கின்ற விஷயங்கள் மூன்று என்று வரிசைப்படுத்துகிறார் கவிஞர் சுரதா. இல்லற வாழ்வின் பயனாக நமக்குப் பின் நம் மக்கள் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள். தான் வாழ்ந்த வீட்டை மரணத்தின் போது மனிதன் தன்னுடன் எடுத்துச் செல்ல முடிவதில்லை.

இதற்கெல்லாம் சிகரமான ஒன்று ஒருவருடைய படைப்புகளான புத்தகங்கள். காலத்தைத் தாண்டி வாழ விரும்பும் இக்கவிஞரும் தன் முதல் தொகுப்பைக் கொடுத்து விட்டார். இதன்மூலம் மரத்துப் போன மனிதநேயத்தைத் தட்டி எழுப்பி, தவறிப் போன இயற்கை வாழ்க்கைக்குத் திரும்பச் சொல்லி, மரபான வாழ்க்கைக்கு இட்டுச் செல்கிறார். அதே நேரத்தில் முறையான அரசியல் ஆட்சி அமைய வேண்டிய தன் விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நூல்: அப்பத்தாவின் கருக்கருவா
ஆசிரியர்: ஆலங்குடி வெள்ளைச்சாமி
விலை: ரூ.100 மட்டும்
வெளியீடு: அனிச்சம் பதிப்பகம், சென்னை

- முனைவர் சி.ஆர். மஞ்சுளா, தமிழ்ப் பேராசிரியர், சென்னை சமூகப்பணி கல்லூரி, எழும்பூர், சென்னை

Pin It