சுரண்டலுக்கு உள்ளாகும் அனைத்தையும் பெண்ணாகப் பார்க்கும் பார்வை தன்மை தொடர்கதையாகி விட்டது. அல்லது சுரண்டப்படும் விஷயத்திற்கு எல்லாம் பெண்கள் பெயரைச் சூட்டுவது இயல்பாகிவிட்டது. ஆறுகளுக்குப் பெண் பெயரிட்டு அழைத்தோம், ஆற்றில் மனிதர்கள் மூழ்கி நீராடிய காலம் போய் ஆறுகளே மண்ணுக்குள் மூழ்கிவிட்டன. நாட்டைத் தாயாகப் பாவித்தோம், உடல் முழுக்க தோட்டாக்களின் தாக்குதல்களைப் பரிசளித்து விட்டோம். பூமிக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இல்லை என்று கற்பித்தோம், ஒன்றுவிடாமல் எல்லா வளங்களும் சூறையாடப்பட்டுவிட்டன. இந்தக் கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதற்காக வெளிவந்திருக்கிறது ‘தாய் நிலம்’ என்ற ராசி அழகப்பனின் கவிதைத் தொகுப்பு.

rasi alagappan bookஅம்மா ஒரு கு.ழந்தையைப் பத்து மாதம் மட்டுமே வயிற்றில் சுமக்கிறாள். ஆனால் வாழ இடம் கொடுக்கும் இந்த மண்ணோ வாழ்நாளெல்லாம் தாங்கி நிற்கிறது. எனவே ‘தாய் நிலம்’ என்று சொல்வது கவிதை நூலுக்குச் சரியான தலைப்பாக அமைகிறது. ஆனால் அறிவுக்குத் தலைமைத் தாங்கும் ஆறாவது அறிவு கொண்ட மனிதன் பக்குவமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலத்தின் இயல்பை அழிக்க ஒரே மூச்சாகச் செயல்பட்டு வருவது வருத்தப்பட வேண்டிய உண்மை. எனவே கவிஞர் பூவுலகின் நண்பனாக இந்தப் பூமியைப் போற்றிப் பாதுகாக்கும் மனிதர்களுக்காகவும், கூடு தேடி பறந்து கொண்டிருக்கும் பறவைகளுக்காகவும் தொகுப்பைப் படையலாக்கி இருக்கிறார்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதைக் கவிதைகளில் பதிவு செய்யும் போது இழந்து விட்ட இனிமைகளை எண்ணி மனம் ஏங்குகிறது. பள்ளிப் பருவத்திலும், கல்லூரி நாள்களிலும் நம்மோடு பயணித்த மகிழ்ச்சியை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறோம். விடியற் காலையில் ஏர் உழத் தயாராகிவிடும் ஏர்க் கலப்பையை இன்று கண்காட்சிகளில் காணமுடிகிறது.

பல புலவர்களின் சிந்தனை வாசலைத் திறந்து விட்ட நீர் இறைக்கும் போது பாடும் ஏற்றப்பாட்டு வானொலிப் பெட்டியில் பல்வேறு இசைகளோடு இணைந்து விட்டது. பயிர்கள் செழித்து வளர்ந்த வயல்வெளிகளில் அடுக்கு மாடிகள் குடியேறிவிட்டன. மீதியிருக்கும் நிலங்களில் மின் கோபுரங்களும், காற்றாலைகளும் ஆக்கிரமித்துக் கொண்டன. மாடுகளின் நிலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.

மண்ணில் குடைந்து போடப்படும் ஆழ்துளை தண்ணீர் இறைக்கும் மின் சாதனங்களை வயிற்றில் கருவறை அகற்றும் முயற்சியாகப் பார்க்கிறது கவிதை. மண்ணின் உயிரான ஈரத்தன்மையை முற்றிலும் நீக்கும் வகையில் அமைவதால் அதைக் கருவகற்றும் செயலோடு ஒப்பிடுகிறார் ஆசிரியர். எல்லாவற்றையும் பணமாக மாற்ற முயற்சிக்கும் மனிதனைப் பார்த்து மண்ணில் நல்லபடி வாழ்வதற்குப் பதிலாக மண்ணோடு மண்ணாக மக்கிப் போக ஆர்வம் காட்டும் அறியாமை மனிதனே!

“மண் –

மரித்து ஆள்வதற்கல்ல…

புரிந்து வாழ்வதற்கு!”

என்று எச்சரிக்கிறது.

இயற்கையை ரசிக்கச் செல்லும் மனிதன் சமீபகாலமாகத் தன் கண்களால் ரசிப்பதை விட தன் தொழில்நுட்பக் கருவியின் மூலம் படம்பிடிப்பதையே கடமையாகக் கொண்டிருக்கிறான். நேரில் பார்த்து அந்த நினைவுகளை மூளையில் தேக்கி வைத்து அணுவணுவாகச் சுவைக்கும் தன்மையிலிருந்து தான் பதிவு செய்தவற்றைப் பிறருக்கு அனுப்புவதையே தன் கடமையாகக் கருதுகிறான்.

“இயற்கையை ஓவியமாக்கி

மகிழ்வதைவிட

வரப்புகளில்

தலைசாய்த்து

இமைப்பதே வரம்…!”

என்ற வரிகள் எது வரம்? என்ற வினாவுக்கு விடை தேடும் கவிதையாகவும் அமைகிறது.

கவிஞர் எந்த ஆய்வுக் கூடத்தில் போய் ஆராய்ச்சி செய்தாரோ தெரியவில்லை. ஆனால் பூமியையும் தண்ணீரையும் பற்றிய முடிவுகளைப் பதிவு செய்கிறார். தண்ணீரின் தடித்த தன்மை நிலம் என்றும் நிலத்தின் இளகிய நிலை தண்ணீர் என்றும் தன் ஆய்வு முடிவுகளை விளக்குகிறார்.

காணும் பொருள்களில் எல்லாம் தான் காதலிப்பவரைக் கண்டு களிக்கும் காதலர்கள் போல் பூமியை – தாயாக, தந்தையாக, தோழனாக, தோழியாக, மனைவியாக என்று எல்லாமாகக் காண்கிறார் கவிஞர். வரப்புகளின் மீது கவனம் செலுத்தும் மனிதர்கள் என்றாவது அன்பையும், அறத்தையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பொதுநல குணம் தலையெடுக்கும்போது பேரின்பம் விளையும். மண்ணோடு பேசுவதற்கு அறிவியல் கருவிகள் பயன்படாது. வெற்றுக் கால்களுடன் நடந்தால் மண்ணோடு பேசிவிடலாம் என்ற ரகசியத்தைச் சொல்கிறது தொகுப்பு.

தனக்கென ஒரு சொந்த இடம் இல்லாததால் உயிரற்ற சடலத்தைப் புதைப்பதற்குப் பதிலாக எரிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அதனால் சாவதற்குள் ஒரு சொந்த வீடு கிடைத்துவிட வேண்டும் என்று பாட்டாளிகள் சார்பில் கோரிக்கை வைக்கின்றன கவிதைகள். எல்லைகள் ஆளும் அரசனுக்கு ஏக்கர் கணக்கில் அரண்மனை இருக்க, எல்லைகளைக் கடந்து தன் படைப்புகளால் ஆட்சி செய்யும் கவிராஜன் பாரதிக்குக் காணிநிலம் கிடைக்க வேண்டும் என்ற கருத்திலும் தன் வீட்டைத் தானே கட்டிக் கொள்ளும் உயரப் பறக்கும் பறவைகள் மனிதர்களுக்கு வீடு கட்டத் தெரியாதா என்று கேட்பதாக அமையும் இடத்திலும் கவிஞன் தலை நிமிர்ந்து நிற்கிறான்.

சந்து பொந்துகளிலும், சாலையோரங்களிலும் வாழ்வைக் கடத்தும் மனிதர்களுக்கு வீடு கட்டிக் கொள்ளத் தெரியாதா என்று கேட்பதில் இருந்து இந்தியத் திருநாட்டில் எல்லோரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற சமூகநீதி விருப்பமாக இருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற ஆதங்கம் வெளிப்படுகிறது.

இயற்கைப் படைப்பு எல்லாமாக இருந்து உயிர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. காற்றின் மூச்சுக்காற்றில் தலையாட்டும் முட்புதர்களும், நிழல் நீர் சுரக்கும் வேப்பமரங்களும், குருவிகளுக்கு இடம் தந்து மகிழும் மரங்களும், மணல்தேசமும், குளிர்தேசமும், பசுமைவெளிகளும் ஒன்றோடொன்று ஒத்து வாழ்வது மகிழ்ச்சி தருகிறது. ஒரு காலத்தில் தண்ணீரில் முகம் பார்த்து மனிதர்கள் தனக்கான ஒப்பனையைச் செய்து கொண்டனர். கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்ட பின் அந்த வழக்கம் மாறிப்போனது. பல விலங்குகளுக்குத் தன் பிம்பத்தைப் பார்க்கும் போது பயம் தொற்றிக் கொள்கிறது. ஆனால் உயர்ந்து நிற்கும் வானம் காலை கண் விழித்தவுடன் தன் முகம் பார்க்கும் கண்ணாடியாக நிலத்தைக் கருதுகிறது என்பது அழகான கற்பனை.

கொட்டிக் கிடந்த நிலங்களைக் கட்டடங்களாக மாற்றிவிட்ட மனிதனிடம் சிறிது நிலம் கேட்டு விண்ணப்பம் செய்கிறது கவிதை. மழைக்காலத்தில் ஓடைக்கான இடத்தில் தண்ணீர் பாயும் சாத்தியம் உண்டு. அதற்காக அந்த இடத்தைக் காலியாக்கித் தருமாறு வேண்டுகிறது.

கவிஞர் கற்பனையில் நிலவு பேசும், ஆர்ப்பரிக்கும் கடல் பேசும்,பார்க்கும் புலன் பழுதுபட்டோருக்குப் பார்வை உண்டு, நியாயங்கள் நிலைநாட்டப்படும். அந்த வரிசையில் இங்கே நிலம் பேசுகிறது. நிலத்தின் ஈரத்தை மாற்றி மண்ணை விற்று நாசத்திற்கு எடுத்து சென்ற மனிதனைக் கவிதைகள் நன்றாக விமர்சிக்கின்றன.

“பூமியின்

உயிர் எழுத்து

நீர்…

மெய்யெழுத்து

மரங்கள்…

உயிர்மெய் எழுத்து

காடுகள்…

ஆயுதம்தான் –

மனிதன்…!”

என்ற விமர்சனத்தால் மனித மனம் தன்னலம் மறந்து பொதுநலம் நாட வேண்டும் என்ற சிந்தனை சொல்லப்படுகிறது.

சிந்தனைக்கு இடம் கொடுக்கும் அதே தொகுப்பில் கண்களுக்கும் இன்பம் கிடைக்கிறது. ஓவியங்களுடன் கூடிய கவிதைகள் வாசகர் உள்ளத்தில் இன்னும் கூடுதலாகக் கொண்டு சேர்க்கிறது. முன் அட்டை முதல் உள்ளிருக்கும் கவிதைகள் வரை எல்லாவற்றையும் ஓவியத்துடன் இணைத்துப் பதிப்பித்த கவிஞர் பின் அட்டையில் இடம் பெற்ற தன் ஒளிப்படத்தையும் ஓவியமாகத் தீட்டியிருக்கலாம்.

முனைவர் சி.ஆர். மஞ்சுளா

Pin It