நாடு முழுவதும் இந்துத்துவப் பாசிசம் தலைவிரித்தாடும் இன்றைய சூழ்நிலையில் இப்படி ஒரு நூல் வெளிவந்திருப்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. இதுவரை இந்திய சமூகம் அறிந்திராத ஒரு இருண்ட பிரதேசத்திற்குள் இந்நூல் நம்மை அழைத்துச் செல்கின்றது. மனித சதைகளை தின்று ரத்தம் குடித்து உயிர்வாழும் கொடிய மிருகங்கள் நிறைந்த அந்த தேசம் நம்மை நடுநடுங்க வைக்கின்றது. எவ்வளவு மோசமான கொலைவெறி பிடித்த, குற்றவுணர்வற்ற மிருகங்களுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்று உணரும்போது உடல் முழுவதும் அருவருப்பு மேலிடுகின்றது. இப்படியான ஒரு நூலை சாத்தியப்படுத்துவதற்கு அசாத்திய உழைப்பும் அதைவிட மிகுந்த மனதைரியமும் தேவை.

ethir book on hindutwaநாடு முழுவதும் பசுவின் பெயராலும், ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லியும் சாமானிய மக்கள் அடித்துக் கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கும் சமயத்தில் கூட சில புல்லுறுவிகள் ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம் என கூசாமல் சொல்வதை நம்மால் பார்க்க முடிகின்றது. பார்ப்பனப் பாசிசத்தைப் பற்றிய எந்தவித புரிதலும் அற்ற சாமானிய உழைக்கும் மக்களை இந்து என்ற போர்வையில் தன் பக்கம் இழுத்து, அவர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடியாள் படையாக மாற்றி சாதிக் கலவரத்திலும், மதக் கலவரத்திலும் ஈடுபட வைக்கும் அதன் கபடத்தனத்தை புரிந்து கொள்ளாமல் நம்மால் ஒருபோதும் அவற்றை எதிர்கொள்ள முடியாது.

பல பேர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்று தெரியாமலேயே அதன் துணை அமைப்புகளில் தங்களை இணைத்துக் கொண்டு இந்துத்துவ பார்ப்பன பாசிசத்திற்கு இரையாகி விடுகின்றனர். நாடு முழுவதும் முப்பதுக்கும் மேற்பட்ட துணை அமைப்புகளை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டுக் கொண்டு இருந்தாலும் அனைத்து அமைப்புகளின் ஒரே நோக்கம் என்பது பார்ப்பன பாசிசத்தை நிலைநாட்டுவது மட்டுமே. தொழிலாளர்களுக்கென பாரத மஜ்தூர் சங்கத்தையும், மாணவர்களுக்கு அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தையும், கலாச்சார காவலர் வேடம் போட விசுவ இந்து பரிக்ஷத், இளைஞர்களை கவர பஜ்ரங்தள் என பல்வேறு பெயர்களில் இவை செயல்பட்டு வருகின்றன. இதைத் தவிர பொதுச்சமூகத்தில் பல கேடுகெட்ட செயல்களில் ஈடுபடவும் பின்பு மாட்டிக்கொண்டால் அதிலிருந்து தப்பிக்கவும் பல உதிரி அமைப்புகளையும் உருவாக்கி வைத்திருக்கின்றன.

அப்படியான முக்கிய உதிரி அமைப்புகளான சனாதன் சன்ஸ்த்தா, இந்துயுவ வாகினி, பஜ்ரங்தள், ஸ்ரீராம் சேனா, இந்து ஐக்கியவேதி, அபினவ் பாரத், இராஷ்ட்ரிய சீக் சங்கத் மற்றும் இந்துமயமாக்கப்பட்ட இராணுவத்தை உற்பத்தி செய்யும் போன்சாலா இராணுவப்பள்ளி என அனைத்தின் வரலாறுகளையும் ஆதியோடு அந்தமாக இந்நூல் விவரிக்கின்றது. நாம் அறியாத, அறிந்து கொள்ள முடியாத பல அறிய தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலை எழுதியவர் திரேந்திர கே.ஜா ஆவார். இவர் ஏற்கெனவே 'அயோத்தி: இருண்ட இரவுகள்' என்ற முக்கியமான நூலையும் எழுதியுள்ளர்.

பகுத்தறிவாளர்களை சுட்டுக் கொன்ற சனாதன் சன்ஸ்த்தாவுக்கு எதிராக 2008இல் கோவா மக்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள். கோவாவில் சனாதன் சன்ஸ்த்தா ஆசிரமம் உள்ள பகுதியில் உள்ள வயல்வெளிகளில் இருந்து துற்நாற்றம் வந்ததுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் துர்நாற்றத்தின் மூலத்தை தேடியபோது இந்தக் கலாச்சார காவலளர்களால் வயல்வெளியில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் வீசப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர். அதே போல தபோல்கர், பன்சாரே, கல்புர்கி போன்றவர்களின் கொலைகளில் சனாதன் சன்ஸ்த்தாகவுக்க்கு உள்ள முக்கிய தொடர்புகளை, நாம் அறியாத பக்கங்களை இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

இந்துயுவ வாகினி என்பது இன்றைய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நடத்தும் குண்டர் படையாகும். 2002இல் தொடங்கப்பட்ட இது தொடங்கப்பட்ட ஒரு வருடத்துக்குள்ளாக முஸ்லிம்களுக்கு எதிராக ஆறு பெரிய கலவரங்களை செய்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் முதன்மையான நோக்கம் சிறுபான்மையினரை இந்துக்களுக்கு எதிராக சித்தரிப்பது, லவ் ஜிகாத பீதியூட்டுவது, இந்துகளிடம் சென்று முஸ்லிம்கள் புலால் உண்ணுவதால் அவர்கள் வன்முறையாளர்கள், இந்து மத நம்பிக்கைகளையும், தேசிய சின்னங்களையும் வேண்டுமென்றே அவமதிக்கின்றார்கள் என்று தொடர்ச்சியாக பரப்புரை செய்வதாகும். இன்று உ.பியில் ஆதித்யநாத் வெற்றி பெறுவதற்கான அடிப்படையை ஏற்படுத்தில் இந்துயுவ வாகினிக்கு முக்கிய பங்குள்ளது. இப்படி இந்துகளிடம் முஸ்லிம்களுக்கு எதிராக பொய்யான பரப்புரை செய்யும் இந்து யுவவாகினியில் முக்கிய பொறுப்புகள் அனைத்திலும் தாகூர் சாதியை சேர்ந்தவர்களே ஆக்கிரமித்து இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் ஆதித்யநாத்தும் தாகூராக இருப்பதே.

பஜ்ரங்தளம் என்பது தெற்கு கர்நாடகவில் செயல்பட்டுவரும் பலமான கூலிப்படை சேவை அமைப்பு ஆகும். இந்த அமைப்பை உருவாக்கியது வி.ஹெச்.பி ஆகும். அத்வானியின் ரதயாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், கந்தமால் கலவரம் போன்றவற்றில் இந்த அமைப்பை சேர்ந்த குண்டர்கள் பெரிய அளவில் பங்கெடுத்துக் கொண்டனர். ஒரிசாவில் தொழுநோயாளிகளின் நலனுக்காக உழைத்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரகாம் ஸ்டெயினையும் அவரது குழந்தைகளையும் உயிரோடு எரித்துக் கொன்றதும், உத்திரப் பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று வதந்தியைப் பரப்பி முகம்மது அக்லக்கை கொன்றதும் இந்த கொலைகார அமைப்புதான்.

ஸ்ரீராம் சேனா, முத்தலிக் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு ஆகும். இவர் முதலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர். ஆனால் அங்கிருந்த பார்ப்பனர்களால் புறக்கணிக்கப்பட்டதால் தனியாக பிரிந்துவந்து இந்த அமைப்பை உருவாக்கினார். இதுவும் கர்நாடகவை மையப்படுத்தி செயல்படும் குண்டர் படையாகும். இரவு விடுதிகளில் தாக்குதல் தொடுப்பது, காதலர் தினத்தை எதிர்ப்பது, லவ் ஜிகாத் பீதி ஏற்படுத்துவது, காசு வாங்கிக் கொண்டு போலியான கலவரங்களை செய்வது போன்றவைதான் இதன் முக்கிய வேலையாகும்.

இந்து ஐக்கிய வேதி என்பது கேரளாவை மையமாகக் கொண்டு செயல்படும் இந்துத்துவ பாசிச அமைப்பாகும். கே.பி.சசிகலா என்பவர் அதன் தலைவராகவும், பொதுச் செயலாளராக கும்மனம் இராஜசேகரனும் உள்ளனர். இதன் செயல்பாடுகள் அனைத்தும் கொச்சியில் இருக்கும் சங் பரிவாரத்தின் தலைமைச் செயலகத்தில்தான் தீர்மானிக்கப்படுகிறது. 1992 ஜூலை மாதம் பூந்துரையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டர்கள். அந்த கலவரத்துக்கு பின்பே ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் இந்து ஐக்கிய வேதி அமைப்பு ஏற்படுத்தப்படுகின்றது. 2003 ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்டத்தின் கடலோர கிராமமான மரத்தில் நடந்த கலவரத்தில் 9 பேர் கொல்லப்பட்டார்கள். இந்தக் கலவரத்துக்கு மூளையாக செயல்பட்டது இந்து ஐக்கிய வேதி அமைப்பே ஆகும். இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கை என்பது கேரளக் கோயில்களில் இருந்து தேவஸ்தானம் போர்டு வெளியேற வேண்டும் என்பதே.

அபினவ் பாரத் என்பது இந்து அமைப்புகளிலேயே மிகத் தீவிரமாக செயல்படும் கொலைகார குண்டர் படையாகும். சம்ஜெளதா விரைவு வண்டி குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு, ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்க்கா குண்டு வெடிப்பு, மலேகானில் நடந்த இரு குண்டு வெடிப்புகள் என ஐந்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி 119 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்த பிரக்யா சிங் தாகூர், அசீமானந்தா, கர்னல் புரோகித் போன்ற கொலை வெறி பிடித்த மிருகங்கள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான். இந்த அமைப்புக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களின் ஆதரவு உள்ளது. இவர்களின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பல இந்து முதலாளிகள் நிதி ஆதாரமாக உள்ளனர்.

இராஷ்டிரிய சீக் சங்கத் என்பது சீக்கியர்கள் தனி மதம் கிடையாது, அவர்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவே என பிரச்சாரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரிவு ஆகும். ஆனால் சீக்கிய மதத்தின் பண்பாட்டுக்கும், இந்து பண்பாட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகும். இதை மறுத்து சீக்கிய மதத்தில் உள்ள தங்களின் கைக்கூலிகள் மூலம் கலவரங்களைத் தூண்டிவிட்டு பிரித்தாளும் சூழ்ச்சியை இந்த அமைப்பு மிகத் திறம்பட செய்து வருகின்றது.

அடுத்ததாக இந்நூல் ஆராய்ந்துள்ள மிக முக்கியமான பகுதி போன்சாலா இராணுவப் பள்ளியை பற்றியதாகும். ஆங்கிலேயருக்கு சேவை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளி நாசிக் மற்றும் நாக்பூரில் செயல்பட்டு வருகின்றது. இந்துப் பயங்கரவாதிகளால் பல இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் பங்கேற்றவர்களில் பலர் இந்தப் பள்ளியில் பயிற்சி எடுத்தவர்கள் ஆவார்கள். மர்மம் நிறைந்ததாக இருந்த இந்தப் பள்ளியின் செயல்பாடுகளை இந்நூல் பகிரங்கப்படுத்தி இருக்கின்றது.

பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக செயல்படும் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய முக்கிய ஆவணம் இந்நூல்.

எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642002.
தொலை பேசி:04259-226012,9942511302
https://www.commonfolks.in
விலை ரூ.220

- செ.கார்கி

Pin It