இனி வரக்கூடிய தலைமுறை இப்படி ஒரு மனிதன் எலும்போடும் சதையோடும் இந்த மண்ணில் வாழ்ந்தான் என்று சொன்னால் நம்பவே நம்பாது. அப்படி நம்ப முடியாத வாழ்வை வாழ்ந்தவர் காந்தி. இது காந்திக்கு வந்த இரங்கல் செய்தி. அதே போல் காந்தி இறந்த பொழுது, ஒரு நல்ல இந்து செத்துவிட்டான் என்றார் முகமது அலி ஜின்னா. காந்தி மொத்தம் 18 முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.  சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றாய்வாளர், காந்தியர் திரு.தரம்பால் அவர்கள், காந்தியை அறிதல் எனும் புத்தகத்தில் காந்தி பற்றி இதுவரை தெரியாத புதிய பார்வைகளை முன்வைக்கிறார்.

gandhi bookஅகிம்சையை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்வதற்கு முன்னால் வன்முறையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டிய தேவை இருக்கிறது. பசுவதை தடுப்பு இயக்கம் முஸ்லீம்களுக்கு எதிரானது என்பதைவிட பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்ப்பதையே குறிக்கோளாக இருக்கிறது என்று பிரிட்டிஷ் அரசி விக்டோரியா கூறியதாகவும், உண்மையில் இஸ்லாமியர்களின் பிரதான உணவாக பசு ஒருபோதும் இருந்ததில்லை, தங்களை தற்காத்துக் கொள்ள ஆங்கிலேய அரசாங்கம் ஏற்படுத்திய கற்பிதம் தான் அந்தப் பார்வை என வாதிடுகிறார் தரம்பால்.

காந்தி, மனிதன் செய்யக்கூடாத ஏழு பாவங்களை முன்வைக்கிறார்,  1.கொள்கை இல்லாத அரசியல்  2.உழைப்பு இல்லாத செல்வம் 3.நன்னெறி இல்லாத வியாபாரம்  4.குணமற்ற கல்வி 5.மனிதத்தன்மையற்ற விஞ்ஞாணம்  6.மனசாட்சியற்ற இன்பம் 7.தியாகம் இல்லா வழிபாடு. எந்த நாடு அதனுடைய மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்து அவற்றையே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களாக திரும்ப இறக்குமதி செய்கிறதோ, எந்த நாடு பருத்தியை விளைவித்த போதிலும் அதனுடைய துணித் தேவைகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை வெளிநாடுகளுக்கு கொடுக்கவேண்டி இருக்கிறதோ,எந்த நாடு திருமணங்களில் செலவு செய்வது ஆடம்பரம் என்று கருதாமல் இருக்கிறதோ அந்த நாடு ஏழை நாடக இல்லாமல் எப்படி இருக்கும்? என்ற காந்தியின் பார்வைகளை முன்வைக்கிறார்.

மதம், அரசியலிலிருந்து வேறுபட்டது, விலகியது என்று கூறுகிறவர்கள் மதத்தை பற்றி ஒன்றும் அறியாதவர்களே. இந்தியாவில் சாதியமைப்பு முறை ஆழமாக வேர்விட்டிருப்பதால் அதனை வேரோடு பிடுங்குவதை காட்டிலும் அதனை முன்னேற்ற முயற்சிப்பதே நல்ல யோசனையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். 

ஒரு சகோதரன் அவருடைய சகோதரியை திருமணம் செய்துகொள்வது எப்படி முறையற்றது என்று கருதப்படுகிறதோ அதேபோல ஒரு நபர் அவருடைய அல்லது அவளுடைய சாதி என்று அழைக்கப்படக்கூடிய குழுவிற்கு வெளியே உள்ள நபரை திருமணம் செய்து கொள்வதை முறையற்றது என்று நான் கருதுவேன். தீண்டாமை என்பது கடவுளுக்கும் மனித தன்மைக்கும் எதிரான குற்றம். நான் சாதியை தூய்மைபடுத்துவேன், தீண்டாமையை ஒழிப்பேன் என்ற காந்தியின் சாதி மதம் குறித்த பார்வையும் குறிப்பிடுகிறார்.

காந்தி தமது காங்கிரஸ் உறுப்பினர் பதவியை 1930-லேயே ராஜினாமா செய்து இருக்கிறார். காந்தியின் கொள்கைகளுக்கு அவரது காலத்திலேயே காங்கிரஸுக்குள் கடும் எதிர்ப்பு இருந்திருக்கிறது. அவரது பிரம்மச்சரியம், தொழில்நுட்பம் பற்றிய அவரது கருத்துக்களை எல்லாம் பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். டெக்னாலஜி பற்றி காந்திக்கும் நேருவுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகள் தரம்பாலின் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.

பிரம்மச்சரியம் மேற்கொள்கிறேன் என்ற பெயரில் காந்தியும், உறவில் அவருடைய பேத்தியுமான மனு காந்தியுடன் நிர்வாணமாக உறங்குவதும், அப்படி உறங்கும்போது காந்தியை தன்னுடைய அம்மாவாக உணர்ந்தேன் என்று மனு கூறியதாகவும் இதை பலர் எதிர்த்ததாகவும் கருத்து வேறுபாடுகளால் சிலர் ராஜினாமா செய்ததாகவும் குறிப்பிடுகிறார். 

காந்தி பற்றிய அத்தனை குறிப்புகளையும், பிரிட்டிஷ் ஆட்சி விவரங்களையும் லண்டனில் உள்ள ஆவணக்காப்பகத்தில் இருந்து பள்ளி ஆசிரியரான தன்னுடைய மனைவியின் உதவியுடன் சேகரித்து இருக்கிறார். மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே-வை தேசபக்தர் என்றார் பாஜக-வின் எம்.பி. சாக்க்ஷி மகராஜ். நல்ல வேலை இதை கேட்பதற்கு தரம்பால் இப்பொழுது உயிருடன் இல்லை.

தரம்பாலின் பார்பையில் காந்தி ஒரு யுகபுருஷர். காந்தி ஒரு புதிய கிறிஸ்து, காந்தியை பற்றி நினைக்கும் பொழுது நான் ஏசு கிறிஸ்துவை பற்றி நினைக்கிறன் என்கிறார் J.H ஹாம்ஸ். காந்தியை முழுவதுமாக ஏற்பதும் சாத்தியமில்லை, நிராகரிப்பதும் சாத்தியமில்லை. எப்படிப் பார்த்தாலும் காந்தி சிக்கலான மனிதர்தான். புரிந்துகொள்ள முடியாத மகாத்மாதான். படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகம் : காந்தியை அறிதல் 

ஆசிரியர் : தரம்பால் 

தமிழில் : ஜனகப்ரியா

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் 

விலை : ரூ.120

- தங்க.சத்தியமூர்த்தி

Pin It