மருதியும் சிவம்மாளும் விதைக்கூடைகளுடன் ஏரின் வருகைக்காக பாறைப்பதியில் காத்திருந்தனர்.

lakshmanan sappe kokalu"நல்லா வெளைஞ்சா நாலு மூட்டைக் கெடைக்கும்"

"பன்றி வந்து தின்றால் ஒரு மூட்டைக் குறையும்”

“அப்படிஎன்றால் மான் வந்து தின்றால் இரண்டு மூட்டைக் கெடைக்கும்”

ஏர் வந்துவிட்டது....

"மான், யானை, பன்றி, பறவை இவைகள் உண்டதுபோக எமக்கும் கொஞ்சம் குடு கடவுளே.........”

என்று குனிந்து நிலத்திலிருந்து ஒரு விரல் மண்ணெடுத்து நெற்றியில் வைத்து மீதியை வனத்தை நோக்கித் தூவி வணங்கிவிட்டு விதை போடத் தொடங்கினாள் மருதி.

இருளர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும்”சப்பே கொகாலு” நூலை எளிமையாகக் கதை சொல்லும் கட்டுரை வழி அறிமுகம் செய்ய விழைகிறேன்.ஏனெனில் இந்தப்புத்தகம் ஒரு இனத்தின் சிதைக்கப்பட்ட ஆன்மாவினைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளது. ஆய்வு நோக்கில் கூறு போட்டு அறிமுகம் செய்வதைவிட கதைக்கூறு வடிவத்தில் தரும்போது அந்த ஆன்மாவினை ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள் மட்டுமன்றி எளியவர்களும் புரிந்துகொண்டு இந்தப் புத்தகத்தை வாசிக்கவும் பழங்குடியினரை அறிந்துகொள்ளவும் செய்வார்கள் என்று திடமாக நம்புகிறேன்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் இருளர்களின் பாடல்கள் மூலமாக அவர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் காட்சிப்படுத்துகின்ற நூல் "சப்பே கொகாலு". ஒடியன் கவிதைத் தொகுப்பை எழுதிய லட்சுமணனின் அடுத்த படைப்பு. அவர் இருளர்களுடன் இருளனாக வாழ்ந்து கள ஆய்வு மேற்கொண்டு அவர்களின் பாடல்களைத் தொகுத்திருக்கிறார். ஒவ்வொரு பாடல்களுக்குக் கீழும் அந்தப் பாடல் சார்ந்த இருளர் வாழ்வியலை புனைகதை வடிவில் தருகிறார். பாடல் இருளர்களின் மொழியில் அதாவது இருளர் சொற்கள் தமிழ் வரிவடித்தில் அமைந்திருக்கிறது. பாடலுக்குக்கீழ் இருக்கும் புனைவுச்சித்திரம் தமிழிலேயே அமைந்துள்ளது. புனைகதை அல்லது இருளர் வாழ்வின் நிகழ்வுச்சித்திரங்கள் என்னும் புதுமையான இலக்கியவகைமையாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.பழங்குடியின மக்களின் வாழ்க்கையை கதையும் பாடலும் கலந்து சொல்வதற்கு இவ்வடிவமே மிகச்சிறந்ததாக இருக்குமென்று தோன்றுகிறது. நமது சங்க இலக்கியப்பாடல்களுக்கும் இதுபோன்றப் புனைகதைகளை எழுதலாம் . அது இலக்கியம் சாராத பிறரும் சங்ககால வாழ்க்கையை அறிந்துகொள்ள வழிவகுக்கும். அவரின் முதல் நூலான ஓடியனும் இருளர் வாழ்வியலை ஆதிக்கச் சாதியினர் சிதைத்த விதத்தினை கவிதைகள் மூலம் சொல்கிறது.

“சப்பே கொகாலு” – கொகாலு என்பது மரத்தினால் செய்யப்படும் பழங்குடியினரின் ஊதுகுழல்.நாகலிங்கம், கிளியமரம், புழுதமரம் என்று சில மரங்களால் கொகாலு செய்யப்படுகிறது.புல்லாங்குழல் போல் இல்லாமல் நாதஸ்வரத்தின் சிறிய வடிவம்போல் இருக்கும்.இதற்கு ஒத்திசைவாக “பொரே” எனப்படும் பறை போன்ற இசைக்கருவியும் தவில் போன்ற ஆனால் கைகளால் ஒருபுறம் மட்டும் அடிக்கக்கூடிய கருவியும் இணைந்து வாசிக்கப்படும். இருளர்களின் பிறப்பு முதல் இறப்புவரையான அனைத்துச்சடங்குகளிலும் இந்த இசைக்கருவிகள் இடம்பெறும்.வட்டமாக நின்று ஆடும் அனைத்துப் பழங்குடியினரின் இயல்பைப் போலவே இவர்களும் ஆடுகிறார்கள்.

"ஜான் தேங்கே பர் ஜமீன் நஹீன் தேங்கே” உயிரைக்கொடுத்தாலும் கொடுப்போமே தவிர நிலத்தைத் தரமாட்டோம் என்று போராடும் இந்திய வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடி மக்களின் நிலை இருளர்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது.கொங்குமண்டலம் முழுக்க வனங்களாக இருந்த காலத்தில் அந்த வனத்தின் ஆன்மாவாக வாழ்ந்தவர்கள் இருளர்கள். வனம்சார்ந்த விவசாயம், வேட்டை, கிழங்குகள் என்றும் முன்னோர்களையே தெய்வமாகக் கொண்டும் வாழ்ந்தவர்களை மூவேந்தர்களும் கொங்கர்களும் நிலத்தைப் பிடுங்கி இருளர்களின் மூதாதையர்களை வைதீகத்தின் பெருந்தெய்வங்களாக்கி அவர்களை சமவெளியைவிட்டுத் துரத்தியடித்த சோக வரலாறு சப்பே கொகாலுவை உயிர்ப்புள்ள புத்தகமாக்கியுள்ளது. ஒவ்வொரு பாடலும் இழந்துவிட்ட பண்பாட்டின் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது.

இருளர் பிறப்புத் தொன்மம்

பெருமழைப்பொழிந்து ஜீவராசிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒருகாலத்தில் “பெசாதுகள்” எனப்படும் இருளர்களின் மூதாதையர்கள் மல்லனும் மல்லியுமாக பூமிக்கு வருகிறார்கள். மழை நிலத்தை மூழ்கடித்துவிட்டிருந்தது. கிழவிமலையில் குகையொன்றில் யாரோ இருப்பது கண்டு மல்லனும் மல்லியும் அழைக்கிறார்கள்.

“ஆருவே கூரேக்குள்ள .....மல்லனும் மல்லியும் வந்துருக்கேமு”

“................................. ......................................................... ............”

“லேக்கொமல்லே ...வர்கா வேண்டியதுதானே”

“கடவுளே நே வர்காக்கில்லே ....அம்மணமா கெடாக்கோ”

அம்மணமாக வீட்டிற்குள் இருக்கும் தந்தைக்கும் மகளுக்கும் தங்கள் உடல் தோலைக்கிழித்து ஆடையாக்கிக் கொடுத்து அவர்களை இளமையானவர்களாக்கி இனி நீங்கள் அப்பனும் மகளும் அல்ல கணவனும் மனைவியும் என்று சொல்லி மறைந்தனர். அவர்களின் மூலமாக உருவானதுதான் இருள இனம் என்னும் இருளர் பிறப்புத்தொன்மத்தை “அட்டப்பாடிக்கல்வெட்டு” பாடலுக்கானப் புனைவில் மிக எளிமையாகச் சொல்கிறார் லட்சுமணன். நிலத்தில் விதைக்க குருநகனும் துவைக்க தேவநாகனும் காட்டிற்குள் சென்று பொருள் சேகரிக்க சம்பரும் என்று பன்னிரண்டு குலங்கள் உருவாகின.ஒரே குலத்திற்குள் திருமணம் செய்துகொள்வதில்லை. “பதி” என்று அழைக்கப்படும் இருளர் கிராமங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய சமவெளிப்பகுதிகள் முழுக்கப் பரவினர். வனத்தை இருளர்களும் இருளர்களை வனமும் பார்த்துக்கொண்டது.

கூஞ்சூர்பதி, பேரையன்பதி, அவினன்பதி ஒவ்வொரு பதிக்கும் மூப்பன் மூப்பத்தி தலைமை வகித்தனர்.தவிரவும் வண்டாரி, குருதலை என்று பொறுப்பாளர்களும் இருப்பார்கள்.லட்சுமணனனின் புனைவுச்சித்திரங்களின் வழியாக எந்தவொரு அரசு அல்லது அரசு என்பதையே அறிந்திராத ஒரு பழங்குடியினம் தன்னைத்தானே தகவமைத்து நாம் வெட்கித்தலைகுனியும்படி உன்னத வாழ்க்கை வாழ்ந்து வருவதை அறிந்து கொள்ள முடிகிறது.

இருளர் - வன உறவின் உன்னதம்:

இருளர்கள் வனத்தின் விதைக்க முடிகின்ற நிலத்தைப் பக்குவப்படுத்தி தானியங்களை விளைவித்து விவசாயம் செய்யும் இயல்பு கொண்டவர்கள்.ஒருமுறை விளைச்சல் எடுத்த இடத்தை எரித்துச் சாம்பலாக்கிவிட்டு வேறு ஒரு இடத்தைத் தேர்வு செய்வர்.இதன்மூலம் வனத்தின் தன்மை மாறாமல் இருக்கும்.இம்முறை அனைத்துப்பழங்குடி மக்களின் விவசாய முறை போலவேதான் இருக்கிறது. விலங்குகளுக்கும் இருளர்களுக்கும் இருக்கும் உறவு மனிதநேயம் மிக்கதாகும். இருளர்களின் ஈரம் கசியும் மனதை "மருதி "என்னும் இருளர்பெண் விதைக்கும்போது அறிந்துகொள்ளமுடிறது. கட்டுரையின் துவக்கத்தில் இடம்பெற்ற லட்சுமணனின் உரையாடலுக்கானப் பாடல் பின்வருமாறு.,

"தில்லேலே தில்லே லேலே
தில்லேலே லேலே தில்லே லே
.............................. .......................... ..............
கெழக்கத்தே மே வந்தா மல்லிகே
வெதை வித்துப் போடுகோமே மல்லிகே
பெக்குதானே மொளத்தாக்கி மல்லிகே
கேளேனே டுக்கோனு மல்லிகே...........”

“மான், யானை, பன்றி போன்ற விலங்குகள் தின்றது போக மீதமிருந்தால் எமக்கும் கொஞ்சம் விளைச்சலைக் கொடு கடவுளே என்கிறாள்.....”

விலங்குகளை அழிக்க மின்சார வேலிகளைப்பயன்படுத்தும் இன்றைய சூழலில் வனத்தில் விளையும் பொருட்களில் விலங்குகளுக்கும் உரிமை உண்டு என்கிற இருளர்களின் மனம் முப்போகமும் விளைச்சலித் தருகிற மண் போன்றது என்றால் அது மிகையில்லை.

விலங்குகளை வேட்டையாடும் பழக்கம் இருளர்களுக்கு உண்டு என்றாலும் அதில் அவர்கள் கடைப்பிடிக்கும் அறம் நம்மிடம் இருந்தால் உலகம் துயரின்றி வாழும்.இருளர்களின் அறத்தை உணர்த்த ஒரு வேட்டைப்புனவை லட்சுமணன் தருகிறார். அனால் அது வெறும் புனைவல்ல இருளர்களிடம் கண்டதையே லட்சுமணன் சித்திரமாக்கியுள்ளார்.லட்சுமணனின் நிகழ்வைக்கூறும் மொழிநடை அலாதியானது. “மூப்பன்சாய்க்கரி” என்னும் பாடல் வேட்டையாடிய விலங்கை பிறருக்கும் பகிர்ந்தளிக்கும் நியாயத்தைக் கூறுகிறது.

“காலேகாலேகும்ப காலேகாலேகும்ப
காலேகாலேகும்ப காலேகாலேகும்ப
மூப்பனுக்கு ஒரு மூணு கும்ப
................................ .................................... ...........”

இந்தப் பாடலுக்கு வேட்டைக்குச் செல்லும் நிகழ்வைக் கூறுவதன் மூலமாக இருளர்களின் வேட்டை தருமத்தைப் பதிவு செய்கிறார் லட்சுமணன்.

சம்பர்க்காட்டிற்கு கோயன் சடையன் தலைமையில் இரு குழுக்களா கப்பிரிந்து வேட்டைக்குச் செல்கிறார்கள். கோயன் கூட்டம் ஒரு பாதையில் செல்கிறது.மாலைமங்கி இருட்டும் நேரத்தில் முன்னேறும்போது சரேலென விலங்கு ஒன்று குறுக்காகச்சென்று ஒரு புதருக்குள் விழுகிறது.தமக்கான இரை கிடைத்துவிட்டதென்று எண்ணி சடையன் புதர் மண்டிய பெரிய குழியை நெருங்குகுறான் உள்ளேயிருந்து கரட் கரட்டென்ற சத்தம் கேட்கிறது அது அடிபட்டிருப்பதை உணர அந்த சத்தம் அவனுக்கு போதுமானதாக இருக்கிறது . அத்ற்குள் இன்னொரு பகுதியான நூரே கொரையிலிருந்து இரை கிடைத்துவிட்டதற்கான சங்கேத ஒலியை கோடன் எழுப்பிவிட்டான். சடையன் கூட்டம் புதரை விட்டுவிட்டு கோடன் கூட்டம் ஒலி எழுப்பிய நூரே கொரைக்கு ஓடுகிறது.

அங்கே புள்ளி மான் பிணமாகிக்கிடக்கிறது அதை பங்குபோடும் போது சடையன் கூட்டளிகளுக்கும் பங்கு வருகிறது ஆனால் அந்தப்பங்கை அப்படியே ஒன்றாக்கிக்கொட்டி திருப்பி கோடனிடமே கொடுத்துவிட்டு சிரிக்கிறான் சடையன் அவனது சிரிப்புக்கு அர்த்தம் தெரியாமல் குழம்பி நின்ற கோடனுக்கு கடமான் புதரில் விழுந்த ரகசியத்தை சொல்கிறான் அந்த கடமானுக்கு நீ பங்குக்கு வரக்கூடாது என்று கண்ணை சிமிட்டிக்கொண்டு சிரிக்கிறான். பிறகு இரண்டு கூட்டமும் ஒன்றாகி புதர் மண்டிய குழியை நோக்கி செல்கிறது. பல்வேறு முயற்சிக்கு பிறகு சடையன் புதருக்குள் இறங்குகிறான்.அங்கே கடமான் குத்தீட்டி பட்டு விலாவில் குருதி வழிய கிடக்கிறது.பெரிய இரை என்று சடையன் உள்ளிருந்து சப்தம் கொடுக்கிறான்.அவன் குரல் கொடுக்கவும் புதரின் மூலையிலிருந்து அப்பொழுதுதான் பிறந்த மான்கன்று தள்ளாடி வருகிறது. அடிப்பட்டிருக்கும் மானின் கன்றுதான் அது.இப்பொழுதுதான் ஈனியிருக்க வேண்டும் என்று அறிந்து கயிறுகொண்டு இரண்டையும் மேலே தூக்குகிறார்கள். வட்டமாக அமர்ந்து அடிப்பட்ட மானின் காயத்திற்கு மருந்திடுகிறார்கள். தண்ணீர் தருகிறார்கள்.காயத்தை மூலிகை வைத்து கட்டிவிடுகிறார்கள்.மான் கன்றினை அதன்வாய் பிடித்து தாய்மடி காட்டி பாலூட்டச்செய்கிரார்கள்.

“நீ போய் நல்லா பொழத்தா போதும் ...”

என்று சொல்லி வாழ்த்தி தாயையும் கன்றினையும் வழி அனுப்புகிறார்கள் இருளர்கள்.

இங்கே கடைசியில் ஒரே வரியில் லட்சுமணன் ஒரு பெரும் மனப்போக்கை சொல்லிவிட்டு அநாவிசயமாகப்போய்விடுகிறார் அந்த வரி ‘’அன்று இரவு சடையன் வீட்டில் மட்டும் கறி வெந்து கமகமத்தது’’

கோடன் கூட்டம் அடித்த புள்ளி மானின் கறிமுழுவதையும் கடமானையும் குட்டியயையும் காப்பாற்றிவிட்டு வெறும்கையோடு வீட்டுக்கு சென்ற சடையனுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் பரிசாக கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறான் என்று உணரும் நிமிடம் கண்களில் நீரைத் தருவித்து விடுகிறது.

விலங்குகள் இறக்கும்போது இருளர்கள் அடையும் துயரம் அளவில்லாதது. தூமன் சம்பர்க்காட்டில் தான் விரித்து வைத்திருக்கும் வலையைப் பார்க்கச் செல்கிறான்.நல்ல இருட்டு.வலையில் எதுவும் அகப்படவில்லை.வலையை எடுத்தவன் கீழ்த்திசைப்பார்க்கிறான்.யாரோ நான்கைந்துபேர் கையில் குழலுடன் (துப்பாக்கி) மேலேறி வருகிறார்கள். தூமனுக்கு நெஞ்சம் கலங்கியது.தூரத்தில் ஒண்டியின் பிளிறல் கேட்கிறது.இருளர்கள் யானையை ராஜா என்பார்கள்.ராஜா மள்ளன வெச்ச திக்கில் கெடக்கான்.ஐயோ இந்தக் கீழூர்க்காரர்கள் ஒன்டிக்காகத்தான் வருகிறார்கள் போல என்றவனுக்கு மனம் நிலை கொள்ளவில்லை. சரேலென மரத்தின் மீதேறினான்.அவர்கள் இவனைக் கடந்து சென்றக் கொஞ்ச நேரத்தில் குழலின் வெடிக்கும் சப்தம் காடெங்கும் அதிர்கிறது.

ஒண்டியின் பிளிறல் காற்றின் கதறலாகி அடங்குகிறது.

தூமன் "தொரே கொலவாண்டா ...கொலவாண்டா தொரே ...கொலவாண்டா ...” என்று கதறி மூர்ச்சையாகிறான்.

சிறிது நேரத்தில் அவர்கள் செல்ல, இலைகளில் இருந்து விழுந்த நீர்த்துளி பட்டு எழுந்த தூமன் ஒண்டியை நோக்கி ஓடுகிறான். ராஜாவின் காதோரத்திலும் இடுப்பிலும் குண்டு துளைத்து சலனமற்று கிடந்தது அது.

தூமன் மதி கெட்டவனாகி மண்ணை வாரி கீழ்த்திசை நோக்கி இரைத்தான்.

“இனி னித்து பெத்து பிதிரு ஒந்து பொழைக்காக்கில்ல வென்னட்டேயா போவே "கிழக்கு திசைப்பார்த்து உனது வம்சம் இனி தழைக்காது என்று சாபமிட்டான். யானையைப்பார்த்து

"ஐயோ கடாவுளே நேமேல்லா இருக்கும்போதே நிமாக்கு இச்சா நெலமே வந்துச்சே ...”என்று கதறியவன் அன்றிலிருந்து பைத்தியமாகிப்போனான்.

காட்டில் ஒரு விலங்கின் மரணம் ஒரு இருளனை மனம் பிறழச் செய்கிறது என்றால் அவர்களின் வன உயிர்களின் மீதான அன்பை என்னவென்று சொல்ல.!

படைகொண்டு வரும் அரசன் அவினன் என்னும் மூப்பனைப் படைக்கு ஒரு யானையைப் பிடித்துத் தரச் சொல்கிறான். வேறு வழி இன்றி யானைக்கானக் குழியை வெட்டி யானையை விழவைக்கிரார்கள் சிக்கிய யானை கர்ப்பமாய் இருப்பது அறிந்து அரசன் வருவதற்கு முன்பாக குழியைச் சமன்படுத்தி யானையைத் தப்பிக்க வைக்கிறார்கள்.அரசனுக்கு பயந்துவிட்டு அவினன் தன் குடிகளோடு பதியைக் காலிசெய்து இன்னும் மேற்கு நோக்கி மறைகிறான்.

இவ்வாறு இருளர்களின் வனத்தின் மீதான காதல் மிக உயர்ந்தது. ஆனால் இன்று பழங்குடியினரைக் காடுகளில் இருந்து வெளியேற்றுவதன் மூலமாக எவ்வாறு வனத்தைப் பாதுகாக்க முடியும்? அவர்களை வெளியேற்றிவிட்டால் பகல் திருடர்களுக்கு இன்னும் வசதியாகிப்போகும். சப்பே கொகாலு மூலமாக வனத்தின் பாதுகாவலர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.இந்நூல் மக்கள் மட்டுமல்லாது அதிகாரிகளும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஆவணமாகும்.

சங்க அகத்துறைகள்:

லட்சுமணன் பல பாடல்களுக்கானத் தலைப்புகளை பரிபாடல், அலரணங்கன், மடலேறு பிறர்குறிப்பேற்றம் என்பன போன்ற சங்க அகத்துறைகளின் பெயர்களையே வைத்திருக்கிறார்.அதற்கு இருளர்களின் வாழ்க்கைமுறை சங்க அக வாழ்வியலோடு ஒத்திருப்பதே காரணம். இருளரின் பிறப்புத்தொன்மம் காரமடை திருமால் வரலாறாக மாற்றப்பட்டது.பரிபாடல் வைணவம் சார்ந்தது.எனவே இருளர் பிறப்புத்தொன்மம் பற்றிய பாடலுக்கு பரிபாட்டு என்று பெயர் வைத்திருக்கிறார். அதோடு மட்டுமன்றி சங்க வாழ்வியலுடன் ஒப்புநோக்கத்தக்க வகையில் இருளர் வாழ்வியல் அமைந்துள்ளது.மேலும் அவர்கள் தமக்கான இணையைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு முழு உரிமை உண்டு.இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, அலர்தூற்றுதல் பொறு பல அகத்துறைகள் இருளர் வாழ்விலும் இருப்பதனைக் காணமுடிகிறது.

மடலேறுதல் என்பது தலைவியிடம் காதலைத் தெரிவித்த பிறகும் எந்த எதிர்வினையும் வராதச் சூழலில் பனை மடலினால் செய்த குதிரையின் மீதுத் தலைவன் ஏறி அமர்ந்து ஊராருக்குத் தன காதலை தெரியப்படுத்தி அவளோடு இணைவதற்கு முற்படுவான்.சில வேளைகளில் தலைவன் தலைவியின் வீட்டிற்குச் சென்று அவள் பெற்றோருக்குச் சில பணிவிடைகள் செய்து கொடுத்து அவர்கள் மனதில் இடம் பிடித்து தலைவியை மனம் முடிக்க முயல்வான்.இம்முறை சங்க இலக்கியப் பாடல்களில் காணலாகும் தமிழர் அகவாழ்வியல். தே முறை இருளர் வாழ்வியலிலும் உள்ளது.மடலேறு என்கிறத் தலைப்பிலமைந்தப் பாடலில் லட்சுமணன் இருளத் தலைவன் தலைவியின் பெற்றோருக்குப் பணிவிடைகள் செய்து அவளைத் திருமணம் முடிக்க முயலுவதை புனைவாக்கியுள்ளார்.

“சோதோ தோதோ ஆமிதே
சோதோ தோதோ லாமிதே
கங்காலு நெடிக்கே லாமிதே
மாடோட்டி போனோ லாமிதே..”

தலைவன் தலைவி என்பது போல இருளர்கள் வீணி வீணன் என்பார்கள்.கோஞ்சன் சீங்கியை விரும்புகிறான்.கங்காலு நெடிக்கு மாடு மேய்க்க அழைக்கிறான் வருகிறேன் என்றவள் வரவில்லை.பந்தி குய்யி தக்கிற்கு அழைக்கிறான் அங்கும் வரவில்லை.பல நாள் போக்குக் காடும் வீணியின் மனதை வீணனால் அறிந்து கொள்ள முடியவில்லை. பொறுமை இழந்த வீணென் அவள் இல்ல்லத்திற்கு சென்று வீணியின் தந்தைக்குப் பணிவிடைகள் செய்து அவர்கள் மனதில் இடம் பிடிக்கிறான்.வீணன் வீணியின் இல்லத்திற்குள் நுழைய முயலும் இடம் வாசிக்கும்போதே மனதில் மெல்லிய உணர்வைத் தோற்றுவிக்கும். இதுபோல தலைவியின் வீட்டிற்குச் சென்று அவள் தகப்பனுக்கு உதவிகள் செய்தால் தலைவியை நமக்கு மணம் முடித்து வைப்பார்களோ என்று என்னும் சங்ககாலத் தலைவனை நாம் அகநாநூற்றுப்பாடலில் காணமுடிகிறது.

"நலம்சால் விழுப்பொருள் கலம்நிறை கொடுப்பினும்
பெறல்அருங்குரையள் ஆயின் அறம் தெரிந்து
நாம் உறை தேயம் மரூஉப்பெயர்ந்து அவனோடு
இருநீர்ச்சேர்ப்பின் உப்புடன் உழந்தும்
பெருநீர்க்குட்டம் புனையோடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்
தருகுவன் கொல்லோ தானே – விரிதிரைக்
கண்திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்த்
தேனிமிர் அகன்கரைப் பகுக்கும்
கானல்அம் பெருந்துறைப் பரதவன் எமக்கே "
- அம்மூவனார் (அகம்-நெய்தல்)

இந்தப்பாடலில் தலைவன் தலைவியின் தந்தையோடு உப்பங்கழியில் பாடுபட்டு கடலில் மீன்பிடிக்கச்சென்று வேலைகள் செய்தால் தலைவியை நமக்குத் தருவானோ என்னவோ என்று தன் நெஞ்சிற்குச் சொல்கிறான்.

“தாட்டிக்குருவி” என்னும் பாடலில் வனத்திற்குள் கள்ளிமரத்தருகே வீணனும் வீணியும் கூடியதை அறிந்த வீணயின் தாய் நாளியில்( நதி) சென்று நீராடிவரச் சொல்கிறாள்.அவர்களுக்கு எந்த எதிர்ப்புமில்லை.மேலும் “அலரணங்கன்” பாடலில் செல்லன் பதியை விட்டுக் காணாமல் போகிறான்உடனே எந்தப் பத்தியில் எந்த வீணி காணாமல் போயிருக்கிறாள் என்றுப் பார்க்கிறார்கள்.விரும்பும் இணை காடுகளுக்குள் சென்று சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு வந்தால் அவர்களை எந்த எதிர்ப்பும் இன்றி இணைத்து வைப்பார்கள்இந்த முறைக்குப் “பொண்டு சேருகது முறை” என்று பெயர். இவையாவும் சங்கத்தமிழர் வாழ்வில் காணப்படும் இயற்கைப் புணர்ச்சி மூலம் இணையும் முறையே ஆகும்.இவர்கள் உடன் அழைத்துச் செல்லும்போது எதிர்ப்புகள் இல்லாமல் ஏற்பதால் சங்க இலக்கியத்தில் இருப்பது போல் தேடிச்செல்லும் வழக்கம் இல்லை. பகற்குறி, இரவுக்குறி போன்றனவும் இருளர் காதலில் உண்டு.

வெள்ளையர் எதிர்ப்பு:

வெள்ளையர்கள் வருகைக்குப்பிறகு இருளர்களின் வாழ்வு சுதந்திரமற்றதாகியது.அவர்கள் கொண்டு வந்த வனச்சட்டங்கள் இருளர்களை வனத்திற்குள் அனுமதிக்கவில்லை.இம்மக்கள் வெள்ளையர்களை எதிர்த்தும் இருக்கிறார்கள்.”தொப்பிதுரை”, ”குதிரைத்துரை” என்கின்ற வெள்ளைத்துரைகளை விரட்டியடிக்கப் பல முயற்சிகளை மேற் கொள்கிறார்கள்.

வனச்சட்டம் இருளர்களை மரம்வெட்ட அனுமதிக்கவில்லை.”கொலவண்டன்” எனும் பாடலில் வரும் நஞ்சனும், ஒந்தையும் வெள்ளையனை எதித்துப் பேசுகிறார்கள்.அவர்கள் மரம் வெட்டியதால் துறை தேடுகிறான்.தூக்கில் போட்டுவிடுவான் துரையின் கைகளில் சிக்க வேண்டாம் என்று கூறுபவர்களிடத்தில்.,

“எம்து காட்டுக்கு வந்து எம்து மராத்தே வெட்ட வாண்டா சொல்றதுக்கு அவே யாரு ..”

"எம்து பாட்டே பூட்டேம் பாக்காதா தூக்கா ?”

என்கிறார்கள் . மேலும் தொப்பி துறையை கோத்தகிரிக்குப் பல்லக்கில் தூக்கிச்செல்லும் பொழுது “ஒலையன்” துரையின் துப்பாக்கியாலேயே சுட்டுக்கொல்கிறான்.

“வெள்ளேக்கரேந் தோட்டத்திலே தின திந்தின
வெள்ளே சோள வேட்டையிலே தின திந்தின...”

கதிர் அருத்துக்கொண்டு இருக்கும்போது குதிரைத்துரை வந்து மிரட்டிவிட்டுச் செல்கிறான்.பதி மக்கள் அஞ்சி ஒளிந்துகொள்கிறார்கள்.அப்பொழுது மூப்பன் சொல்கிறான் .,

“வெளையும் காடு, வெண்ணாட்டக்காடு, சோலேக்காடு, மூணும் நமக்குதான் சொந்தமுந்து வாழுகேமு, இப்பவந்த அவானுக்கு என்னாத்துக்கு பயக்கோனு.நம்தாளுக கூரேக்கு ஒந்து கர்னாட் கொழல சொருகி வத்திருக்கேமு, பெசாத கும்பிட்டு கொழலோட நின்னா துரையாவது கரையாவது எல்லாரு ஓட்டோ புடிக்கோந்து..”

என்று. வெள்ளை எதிர்ப்பு இருளர்களிடம் இருந்தமை புலனாகிறது.

பெசாதுகள் வைதீகமயம்:

“பெசாது” என்றால் மூதாதைத் தெய்வம் என்று பொருள்.இருளர்கள் தங்கள் மூதாதையர்களைத்தான் தெய்வமாக எண்ணி வணங்கி வந்துள்ளனர். அவை கொங்கர்களால் அழிக்கப்பட்டு வைதீகமயமாக்கப்பட்டுள்ளன.இன்று கோவைக்குள்ளும் வெளியிலும் இருக்கும் மிகப்பெரிய வைதீகக் கோயில்கள் யாவும் இருளர்களின் பெசாதுகள்தான்.அவற்றை லட்சுமணன் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் வாசிப்போருக்கு எளிமையாகப் புரியும் வகையில்தான் எழுதியுள்ளார். “பேரையன் கல்வெட்டு” எனும் பாடல் பேரமூப்பனின் பதி பேரூர் ஆனதைக் கூறுகிறது. மழை பொழிந்து நின்ற ஒருநாளில் பேரமூப்பனின் பட்டியின் ஓரத்தில் இருக்கும் புற்றில் குருதி படிந்திருக்கிறது.புற்றைத் தோண்டிப்பார்க்கும்போது மூதாதையின் ஈட்டியும் அம்பும் இருப்பதைக்காண்கிறான். இச்செய்தி வேடுவர்கள் மூலம் அரசனை எட்ட அவன் பட்டியைக லிங்கம் வைத்து கோவிலாக்குகிறான். பட்டீசுவரர் தோன்றினார்.தேர், முக்கால பூஜை, அர்ச்சனை யாவும் வந்தன. பேரமூப்பன் தன் பதியினருடன் வனத்திற்குள் மாயமானான்.

காரையனும் மெருகனும் வேட்டைக்குக் கிளம்புகிறார்கள். வேட்டைக்குச் செல்லும்போது தங்கள் பெசாதான கரட்டிக்காளியை வணங்கிவிட்டுத்தான் வனத்திற்குள் செல்வார்கள். அன்றும் கரட்டிகாளி குகைக்குச்செல்லும்போது அன்னியர் சிலர் கைகளில் ஆயுதங்களுடன் நின்றுகொண்டு காளியைப் பெயர்த்துக்கொண்டு இருந்தனர். மெருகன் கூட்டம் பயத்தில் மறைந்து நிற்க அவர்கள் காளியைப் பெயர்த்து மேட்டில் நட்டு வைத்து வாழைப்பழம் தேங்காயுடன் பூசை செய்துவிட்டு சென்றேவிட்ட்னர். பதி மக்கள் கரட்டிகாளியை வணங்குவதை நிறுத்திக்கொண்டனர்.இருளர்களின் கரட்டிக்காளி பெசாது வெள்ளியங்கிரி ஆண்டவராகிப்போனது.

இருளர் பிறப்புத் தொன்மத்தைக் கூறும்“பரிபாட்டு”பாடல் காரமடை வைணவத்தலம் உருவாக்கம் பற்றியது.இருளர் பெசாது வைணவ மயமான வரலாற்றைக் கூறுவதால் அப்பாடலுக்கு பரிபாடலின் பெயரை வைத்திருக்கிறார் லட்சுமணன்.காரையனும் மருகனும் அண்ணன் தம்பிகள்.இருவருக்கும் எப்பொழுதும் சண்டைதான்.ஒருநாள் சண்டை முற்றி கோவித்துக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புகிறார்கள்.காரையன் கரிமடைக்குச் செல்கிறான்.கரிமடையின் பசுமாடு பால் சுரப்பதே இல்லை .இருளர்களிடம் பசுமாட்டிடம் பழக்கம் இல்லை.பாலை முழுக்க கன்றிற்குக் கொடுக்கும் வழக்கம் கொண்டவர்கள்.ஆனால் காரையனின் (கரிமடையின்)பசு பால் தருவதே இல்லை.மடிவீங்கி இறந்துவிடுமே என்று பயந்த காரையன் பசு என்ன செய்கிறது என்று பார்க்கிறான் அது காட்டில் ஓரிடத்தில் புற்றில் தானாகப் பால் கறந்தது. காரையன் மாட்டை விரட்டிய போது “எனக்குப் பசிக்கிறது” என்கிற அசரீரி கேட்டது. இச்செய்தி கொங்கர் மத்தியில் பரவுகிறது.கரிமடை காரமடையாகினான்.காரமடை கொங்கர்களால் கடவுளாக்கப்பட்டது.கடவுள் உலா வரும்போது குஞ்சூர்பதியில் “துளசிலாம்பா” வயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.வயதுக்குவரும் நிலையி இருக்கும் அவளின் அழகில் மயங்கிய கடவுள் அள்ளிக்கொண்டு போனார்.அவள் வலியைப் பொருட்படுத்தாமல் தூக்கிச்செல்லும்போது கடவுளின் நெற்றி நடுவில் துளசிலாம்பாவின் குருதி வழிகிறது.துளசிலாம்பாவை அழைத்துவந்ததை அறிந்த கடவுளின் மனைவி நாச்சியார் கோவித்துக்கொண்டு பெட்டதாமலைக்குச் செல்கிறாள். இந்த நிகழ்வு இருளர்களிடத்தில் மிகப்பெரிய பண்பாட்டுக் கலப்பு ஏற்பட காரணமானது. “அதுக்கு முன்னாலே இந்தக் கடவுளை எல்லாம் நம்தாளுக சீந்தியதே இல்லே.அவர் துளசிலாம்பாவை கல்யாணம் செய்த பிந்துக்குதா அவருக்குந்து ஒரு கிராக்கியே வந்ததுலா..’ வைத்தியக் கிழவன் பூரடன் சிலாகித்தான்.

“பின்னே ராமத்துக்கு நடுவே செகாப்பு எச்சாதிருந்து வந்தது..”

இருளர்கள் காரமடைக்குச் செல்ல ஆரம்பித்தனர்.

கோவன்பூர்வப்பட்டயத்தில் இருளர்களின் “கோணையக்க” தற்போதைய கோணியம்மனாக மாற்றப்பட்ட கதையை விளக்குகிறார் லட்சுமணன். கோவமூப்பனிடம் கோணையக்க விற்கு பலி தருவதாகக் கூறி அருள் வந்து ஆடிய கோவமூப்பனின் கோவத்தைத் தணித்துவிட்டு காட்டை அழித்து விளைநிலங்ககளாக்குகிரார்கள். கோணையக்க கோணியம்மன் ஆக்கப்பட்டு கோணியம்மனின் மக்கள் மலைகளுக்குள் துரத்தப்பட்டனர்.இப்பொழுது அந்த அம்மனுக்கு வைதீக பூசைகள் கிடைக்கின்றன ஆனால் சொந்த மக்கள் மட்டும் இல்லை என்பதை லட்சுமணன் தன் ஓடியன் கவிதைத் தொகுப்பில்.,


“இப்போ
எத்து பேரு கோணியம்மே
நெய் வெளாக்கூ
நேராத்துக்கு பூசே
தன்காத்துலே பாவாடே
ஜம்முனூ தேரூ
பக்தி
ஏழு சில்லு நாளியா வழிகூ
பாசோ
ஒரு சொட்டு கூடா இல்லே
ஏங்கிருக்காங்களோ
பிதிருகா
பூமி தட்டி போவியா
சுள்ளாம்பூக்கே...... “

என்று கோணியம்மன் தன பூர்வீக மக்களைத் தேடிவரச் சொல்லி சுள்ளாம்பூக்குப்ப பறவையிடம் ஏக்கத்தோடு கேட்பதாக எழுதியுள்ளார்.

இருளர்களின் பெசாதுகள்தான் கோவை மக்கள் ஒவ்வொரு அம்மாவாசையின்போதும் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளிலும் வணங்கும் தெய்வம் என்பதை நினைவில் இருத்த வேண்டும்.வைதீகம் நாட்டுப்புற வழக்காறுகளில் இருந்தும் பழங்குடி மக்களின் தொன்மங்களில் இருந்தும்தான் தனக்கானக் கதையினைக் கட்டமைத்திருக்கிறது.

நில அபகரிப்பும் அழிப்பும் :

ஒரு குறிப்பிட்ட இன மக்களின் நிலம் அபகரிக்கப்படுவதன்மூலம் அந்த இனத்தின் பண்பாட்டுக்கூறுகள் முழுதையும் அழித்துவிட முடியும்.நிலம் சார்ந்துதான் அதன் பண்பாடு மற்றும் கலாச்சாரக்கூறுகள் இயங்கும்.இருளர் நிலங்கள் ஆதிக்கச் சாதியினரால் அரசுகளால் அழிக்கப்பட்டன.

“அட்டப்பாடிக்கல்வெட்டு” பாடலில் பஞ்சம் பிழைக்க வந்த கொங்கனும் மலையாள ஜார்ஜும் எவ்வாறு இருளர் நிலத்தைப் பிடுங்கினார்கள் என்பதற்கான சித்திரத்தை லட்சுமணன் வழங்கியுள்ளார்.

“கோவன்பூர்வபட்டயம்” என்னும் பாடல் வனமும் இருளரும் அழிந்த கதையை இவ்வாறு பேசுகிறது..

“லாலாலிலிலோ லாலாலிலி லோ
லாலாலோ லால்லேலோ ....
கோவமூப்ப நடுலையா தில்லேலேலோ
கொள்ளு வெளஞ்ச காடு தில்லேலேலோ
கொள்ளு வெளஞ்ச கடுலய்யா தில்லேலேலோ
ரயிலு வண்டி பறக்குதுங்கோ தில்லேலேலோ
ராகி வெளஞ்ச காடுலையா தில்லேலேலோ
ரயிலு வண்டி பறக்குதுங்கோ தில்லேலேலோ.....
கணுவா நாடுலையா தில்லேலேலோ
கடுகு வெளஞ்ச காடு தில்லேலேலோ
கடுகு வெளஞ்ச காடுலையா தில்லேலேலோ
காரு பஸ்சு போகுதய்யா தில்லேலேலோ ...”

மாங்கரை நாடு, தடாகம் நாடு, கலுவீர நாடு, துடியனூறு நாடு என்று இன்றைய கோவையின் பகுதிகளில் இருளர்கள் விளைவித்த பொருட்களும் அங்கெல்லாம் நடந்துவிட்ட இன்றைய மாற்றங்களையும் இந்தப்பாடல் விளக்குகிறது.எதனால் யாரால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன எனும் வினாவிற்ககான விடையில் தற்பொழுது உலகமயமாக்கலின் மாயப்பிடியில் வளர்ந்துவரும் கோவையில் வாழும் மக்கள் தலைகுனி யத்தான் வேண்டும். கொங்குப்பகுதிக்கு வந்த ஆதிக்கச் சாதியினரும் கேரளாவின் மன்னார்காடு பகுதியிலிருந்து புகலிடம் தேடிவந்த மலையாளிகளும் குறுநில, வெள்ளையர் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளும்தான் இருளர்களின் அழிவிற்கானக் காரணம் என்பதை லட்சுமணன் வரலாற்றுப்புரிதலுடன் கூறிச்செல்கிறார். சோழனின் அரசவைப்புலவன் கோசர்களை இணைத்தும் கோவை கெஜெட் சோழன்பூர்வப்பட்டயமாகவும் கோவையின் வரலாற்றை சொல்கிறது ஆனால் கோவை இருளர்களின் பூர்வீக பூமி.அதனை லட்சுமணன் “கோவன்பூர்வப்பட்டயமாக” இருளர்களைப் பதிவு செய்கிறார்.

சோழப்படைகள் “சூரன்” என்னும் இருளர் தலைவன் ஆண்ட சூலூரை கைப்பற்றிவிட்டு மேற்குநோக்கி முன்னேறுகிறது.மேற்கில் “கோவமூப்பன்”ஆண்டுவருகிறான். அவனிடம் இந்தக் காட்டை அழித்துவிட்டு விளைநிலங்கள் செய்யப்போவதாக சோழன் கூறுகிறான்.கோவமூப்பன் இந்த வனம் தனக்கு மட்டும் சொந்தமன்று விலங்குகளுக்கும் பெசாதுகளுக்கும் சொந்தமானது என்றுகூறி மறுக்கிறான் .படைகள் காட்டை மூர்க்கத்தனமாக அழித்து முன்னேறுகின்றன.கோவமூப்பன் பெசாது ஏறப்பெற்று வானத்திற்கும் மண்ணிற்குமாகக் குதிக்கிறான்.துர்க்கையின் கோவத்தைத் தணிக்க பலி கொடுப்பதாகவும் கோவில்கட்டுவதாகவும் சோழன் கூறி வனத்தைத் தனதாக்குகிறான். கோவமூப்பன் தன் குடிகளைக் கூட்டிக்கொண்டு இன்னும் மேற்கு நோக்கி மறைகிறான்.

விவசாய நிலங்கள் அபகரிப்பு

இருளர்கள் தங்கள் நிலத்தை பீடிக்கும் இட்லிக்கும் புகையிலைக்குமே இழந்திருக்கின்றனர் என்பதை லட்சுமணனின் நிகழ்வுச்சித்திரங்கள் சிறு கதைகளைப்போல சோகம் ததும்ப புனைகின்றன.கொண்கன் தூரன் மனைவியின் கையில் குழந்தையுடன் தொடிசிப்பதிக்கு வந்து பசிக்கு உணவு கேட்கிறான்.கருணை மனம் மிக்க இருளர்கள் பசியாற்றி இனி தங்கள் நிலத்தில் விதைத்துப் பிழைத்துக்கொள்ளும்படி இடம் தருகிறார்கள். மன்னார்க்காட்டிலிருந்து ஜார்ஜும் வருகிறான்.அவனுக்கும் இடம் தருகிறார்கள். அவர்கள் இருவரும் படிப்படியாக பதி மக்களின் நிலங்களை பீடியையும் வெற்றிலையும் கொடுத்துப் பிடுங்குகிறார்கள்.தூரன் இருளன் சின்னானுக்கு உரங்கள் தந்துவிட்டு விளைச்சல் நன்கு வந்தபிறகு அத்தனை மூட்டைகளையும் அள்ளிக்கொண்டு செல்வதும் அதை ஏக்கத்துடன் சின்னானின் குழந்தைகள் பார்க்கின்ற இடமும் கண்களில் நீரை வரவழைப்பதுடன் ஆதிக்கச் சாதியினர் மீதான கோவத்தையும் வரவழைக்கிறது.

“லாலே லலே லாலே லலல லலலலிலே
லாலே லலே லாலே லலல லலலலிலே
............................
காடுவெட்டி வள்ளி கல்பொறுக்கி
வள்ளி கல்பொறுக்கி
மூங்கில் வெட்டி வள்ளி முள் பொறுக்கி
கிழக்கே மேக்கே சாலோட்டி வள்ளி சாலோட்டி
தக்கே வடாக்கே வுழுதேரக்கி வள்ளி உழுதேராக்கி ..”

“வள்ளிக்கிழங்கு” பாடலில் கொங்கர்களைப்பார்த்து இருளர்கள் ஏரோட்டி விவசாயம் செய்யத்தொடங்குகிரார்கள்.காட்டில் திரிந்தவர்கள் விவசாயம் செய்யத்துவங்குகிறார்கள்.அப்பொழுது நன்ஜிக்கிழவி

“அவே வந்து மண்ணே புடிங்கீட்டு நம்மே தொரத்தாக்கு போறே இதுலே சடங்கு வேற ....”என்கிறாள்

வள்ளி கீழூர்க்காரன் ஏர் உழுவதைப் பார்த்துவிட்டுத் தோழியிடம் சொல்கிறாள் அவன் ஓட்டும் ஏர் நம் வனத்தின் மரத்திலிருந்த மரத்தினால் செய்யப்பட்டது.அவன் உழும் நிலம் நம்முடையது.உழைப்பும் நமதுதான். விளைச்சலை முழுக்க கொண்கன் எடுத்துச் செல்கிறான்.நாமும் ஏன் ஏரோட்டி விவசாயம் செய்யக்கூடாது என்று எண்ணி அவ்வாறே செய்கிறாள். நல்ல விளைச்சல் கிடைக்கிறது. பதி மகிழ்ச்சிக்கொள்ளும்போது வள்ளி மண்ணிற்குள் கிழங்காய் சமைந்தாள் என்று முடிக்கிறார் லட்சுமணன். இருளர்களின் விவசாயம் பிடிக்காத கொங்கர்களால் வள்ளி கொலைசெய்யப்படுகிறாள்.

“கூலிக்கடவு” பாடலில் சின்னானை ஏமாற்றும் தூரன், ”ரோசாப்பூ சேலேக்காரி” பாடலில் திம்மைய்யன் மன்னானிடம் நிலத்தைப் பிடுங்குதல், வனத்துறையினருக்கு லஞ்சம் கொடுத்து ஈட்டி மரங்களைக் கடத்தும் சுப்பன், “பிருக்கியானில்” சோளக்கடனுக்காக ஊஞ்சனின் உயிரை எடுக்கும் அம்மாவாசை, என்று கொங்கர்கள் இருளர்களின் நிலங்களை கூறு போட்டு அநாதைகளாக்கிய வரலாறு லட்சுமணனால் ஆவணம் செய்யப்பட்டிருக்கிறது.

நிலங்களை மட்டுமல்லாது இருளப்பெண்களை வேட்டையாடி இருக்கிறார்கள். பேரூர் கோயிலுக்கு தேர் பார்க்க வரும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வது “தாட்டிக்குருவி”பாடலில் பெண்களுக் காகவே வரும் குண்டரி, மல்லிகாவிற்காக அலையும் கீழூர் மணியன் என்று கொங்கர்கள் பதிகள் முழுக்க இருளப் பெண்களுக்காகக் காமத்துடன் சுற்றி வேட்டையாடியிருக்கிறார்கள்.

இந்தியாவில் பழங்குடிகள்:

பழங்குடியினர் சார்ந்தச் சரியான புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது.

பொருளாதார சீர்த்திருத்தம், தாராளமயமாக்கல் கொள்கைகளால் இந்தியா முழுக்கவும் பழங்குடிகள் நிலங்களை இழந்து தவிப்பது நாம் அறிந்ததே.ஒரு காலத்தில் சமவெளியில் இருந்த ஆதிவாசிகளை மலைகளுக்கு விரட்டினோம் இன்று மலைகளில் இருக்கும் ஆதிவாசிகளைச் சமவெளிக்கு விரட்டிக்கோடு இருக்கிறோம்.அவர்களை அலைக்கழித்துச் சிதைத்து வனங்களற்றப் பளபளப்பான நாட்டினை உருவாக்குவதுதான் நமது கொள்கைகளா? பழங்குடியினருக்குக் காலம் காலமாகப் வன்முறையையும் புறக்கணிப்பையும் தவிர வேறெதையும் அரசுகள் தரவில்லை.சுரண்டப்படும் இனமாகவே இருந்து வருகிறது.ஆதிக்கத்தால் உரிமையோடு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுபவர்களாக பழங்குடியினப் பெண்கள் வதைபட்டிருக்கிறார்கள்.

பழங்குடியினருக்கு மலை தெய்வம் .வாழ்வாதாரம்.நம் போன்றோருக்கு மலையும் வனமும் வெறும் பிக்னிக் ஸ்பாட்.

அரசியல் அமைப்பின் ஐந்தாவது அட்டவணை,

“பழங்குடியின மக்களைப் பாதுகாத்தலையும் அவர்களுடைய நிலப்பகுதியில் இருந்து அவர்களைப் பிரிக்காமல் இருத்தலையும்பற்றி பேசுகிறது.”பழங்குடியின மக்களை மைய நீரோட்டத்தில் இணைக்கிறோம் என்கிற பெயரில் அவர்களை அழிக்க முயல்கிறோம்.பழங்குடியின மக்கள் அருங்காட்சியக கலாச்சாரத்தில் வாழ்வதை விரும்பவில்லை என்கிறார் ஒருவர். நமக்குத்தான் நமது இனம் பற்றிய அக்கறையும் பொறுப்பும் இல்லை.வெட்கம்கெட்டுக் கிடக்கிறோம்.பழங்குடிகளுக்கு அப்படி இல்லை.அதனால்தான் அன்று முதல் இன்று வரை நம்மிடம் நெருங்காது காடுகளுக்குள் மறைந்து வாழ்வதை விரும்புகிறார்கள். இருளர்களும் அவ்வாறே கொங்கர்களுடன் வாழ விருப்பமின்றி மேற்கே மேற்கே என்று வனங்களுக்குள் ஒளிந்திருக்கிறார்கள் என்பது சப்பே கொகாலுவை வாசிக்கின்ற பொழுதுத் தெளிவாகும்.

ஆய்விற்கானத் தளம்:

இந்நூல் பழங்குடியினர் வாழ்வியலைத் தருவதோடு மட்டுமின்றி கொங்குமண்டலத்தின் பூர்வீக வரலாற்றையும் தருகிறது. இருளர்கள் பாறைகளில் வரைந்திருக்கிற ஓவியங்கள் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது.இன்று உதகையின் மேற்கிலும் கூடலூர் பகுதிகளிலும் இருக்கும் பாறைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் இருள ர்களுடையதாக இருக்கலாம்.ஆய்வாளர்கள் அதை ஆதி மனிதனின் ஓவியங்கள் என்றுகூறி காலத்திற்காக தங்களுக்குள் பெசாது பிடித்து அலையலாம்.மேலும் கொங்கு நாட்டில் சமண வைணவ சைவ ஆய்வுகளுக்கும் இந்நூல் ஆதாரமாக அமைந்துள்ளது. தோழர் ராஜா ராமசாமி இந்நூல் குறித்த அருமையான ஆய்வுக்கட்டுரையை எழுதி உள்ளார்.கீற்று இணைய தளத்தில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை இந்த ஆய்வுத்தளங்களை விரிவாய் ஆராய்கிறது.மேலும் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு சங்க இலக்கிய அகத்துறை ஒப்பிடுதலுக்கு இந்நூல் பயன்படும்.இனவரைவியல் ஆய்வு நூல் என்றே இதனைக் கூற முடியும்.

தமிழ்த்துறையில் நாட்டுப்புறவியல் சார்ந்து ஆய்வு மேற்கொள்பவர்கள் கைகளில் இந்த நூல் செல்வது சற்று ஆபத்தானதுதான்.ஏனெனில் இருளர் வாழ்வியல் குறித்து ஆராய்கிறேன் என்று கூறிக்கொண்டு எந்த விதமான கள ஆய்விலும் ஈடுபடாமல் கொங்கர்கள் கரட்டிகாளி சிலையைப் பெயர்த்து வைதீக சைவமாக்கியதைப்போல லட்சுமணனின் சப்பே கொகாலுவை அவர்கள் உரையில் ஒரு சில அடிக்குறிப்புகளுடன் எழுதி முனைவர் பட்டம் பெற்றுக்கொண்டு போயே விடுவார்கள்.

லட்சுமணன் என்றொரு இருளன்:

லட்சுமணன் சப்பே கொகாலுவிற்காக இருளர் பதிகளில் மேற்கொண்ட கள ஆய்வு இந்தக் காலத்தில் சாத்தியமற்றது.அவர் இந்த நூல் குறித்துக் கூறும்போது

“சப்பே கொகாலுவை இலக்கியத்திற்காகவோ ஆய்வுலகிற்காகவோ தனக்காகவோ படைக்கவில்லை இருளர்களுக்காக அவர்களின் சந்ததியினர் எதிர்காலத்தில் தங்கள் இனத்தின் மேன்மையை மொழியின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும், அவர்களுள்ளாக ஒரு வாசிப்பு இயக்கத்தை கட்டுவதன் மூலம் தங்களது வரலாறு என்னவென்று தேடத்தொடங்க ஒரு புள்ளியாக இது இருக்கவேண்டும் என்பதற்காகவே எழுதினேன்” என்கிறார்!! தமிழர்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு இனமும் உலகமயமாக்கத்தால் ஆடம்பரத்தால் அதிகாரத்தால் தன் அடையாளத்தை இழந்து வருகிறது. பழங்குடியின பண்பாடும் ஒருகாலத்தில் சீரழிந்துவிடும் நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்தினை லட்சுமணன் நன்கு உணர்ந்திருக்கிறார்.தான் சாராத ஒரு இனத்தின் வாழ்வின் அழகியல் லட்சுமணனுக்கு மிகப்பிடித்திருக்கிறது. அதன் ஆன்மாவினை அந்த இனத்தின் அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுசெல்வேன் என்னும் லட்சுமணனின் உழைப்பு வீண்போகவில்லை.”சப்பே கொகாலு” மனித இனத்தின் ஆதிக்குணங்களை ரத்தமும் சதையுமாக உணர்த்துகின்ற ஆன்மா!

பரட்டைத்தலையும் கருத்த முகமும் சிவந்த விழிகளும் ...ஒரு காளியின் உருவம் போலவே சப்பே இருந்தது புதிதாகக் குடியேறிய அத்தனை பேருக்கும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.மிக அரிதாகவே கொகாலுவை எடுக்கும் அவள் அதில் புல்லைச்செருகி ஊதத்தொடங்கினால் சோலையைக்கடந்து வரும் யானைகள் கொங்கர்களின் பயிர்களை அழிக்கும். இன்னொரு புல்லைச் செருகி உதட்டில் வைத்தால் ஏரிகள் உடைந்து வண்டல் மண்டி கொங்கர்களின் வயல்களில் காடுகள் வளரும்.அன்று ஏதாவது ஒரு ஆணின் சாவு குடியேறிகளின் ஊரில் இருக்கும்.

ஆனால் இவை எதுவும் அவள் அறிந்து நடந்ததில்லை..

அப்படி உடைவதும் சரி செய்வதுமாக இருந்த ஒரு ஏரி கொங்கர்களை சலிப்புறுத்தி எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது.பலி கொடுக்காமல் அணை நிற்காது என்றனர்.

கொங்கர்கள் திட்டமிட்டார்கள்....

சாமியாடி, வானுக்கும் மண்ணுக்கும் குதித்து குறி சொன்னான் .வாய் பேசாத ஒரு இளம்பெண் பலி கொடுக்கப்பட வேண்டும் என்றான்.

மூப்பனின் குடும்பம் அவர்கள் வசமானது

இருட்டு பொங்கி வழிந்து கொண்டிருந்தது.பெசாது கூரைக்குள் போன மூப்பன் முன்னோர்களை வணங்கி விம்மி வெடித்தான்.தூங்கிக்கிடந்த மகளை எழுப்பினான்.அவள் கைகளில் இறுகப்பற்றி இருந்த கொகாளைப் பிடுங்கி கூரையில் செருகிவிட்டு ஏரிக்கரைக்கு அழைத்துப்போனான்.எல்லா சடங்குகளும் முடிந்தது.ஊராரின் குலவை காற்றைக் கிழித்தது..நடப்பது என்னவென்று அறிவதற்குமுன் சப்பே பலிகொடுக்கப்பட்டாள்.

இன்னொரு உறுப்புபோல எப்பொழுதும் அவளுடன் இருக்கும் அவளுக்குப்பிடித்த கொகாலு இப்போது அனாதையாகக் கேட்பாரற்றுக் கூரையில் கிடந்தது. அந்தக்குழல் தான் இப்போது இருளர்களுக்கு தேவையாக இருக்கிறது அதை சப்பே கொகாலுவில் அவர்கள் தேடிக்கண்டடைய முடியும் என ஆழமாக நம்புகிறேன்.

Pin It