‘வேட்கையின் நிறம்’ கவிதைத் தொகுப்பை எழுதியவர் உமா சக்தி. உமா பார்வதி என்ற இயற்பெயர் கொண்ட இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இத்தொகுப்பில் அவள், அவன், அவர்கள், மற்றவை என்னும் நான்கு தலைப்புகளில் 59 கவிதைகள் உள்ளன.
பல கவிஞர்களுக்கு வாய்க்காத நல்ல சொல்லாட்சி! ஒவ்வொரு சொல்லும் முக்கியமானதாக உள்ளது. சில கவிதைகளில் சொற்கள் வண்ணத்துப் பூச்சி போல் பறந்து மகிழ்விக்கின்றன. மயிலிறகால் வருடும் இதம் தெரிகிறது. சுமாரான சில கவிதைகளும் உள்ளன.
‘உன் இருத்தல்’ – சிறந்த கவிதை!
கிறங்கடிக்கும் குரலால் போதையூட்டும் சிரிப்பால்
மோகங்கள் வளர்த்துக் களைகிறாய் என்னை
என்று தொடங்கும் கவிதை மிக அழாக முடிகிறது.
முண்டும் மழைநீர் பட்ட விதையென
தவிக்கும் என்னிடத்தில்
உன் நேற்றைய விரல்கள் தளிர்களாகின்றன
கண்மூடிய நான்
பழைய உன்னுடன்
கருணை காட்டத் துவங்கிவிட்டேன்
நீ கதவைத் தட்டுகிறாயோ இப்போது
துணையின் வருகையை எதிர்பார்க்கும் பெண்ணின் எதிர்பார்ப்பு மிக அழகாகப் பதிவாகியுள்ளது. ‘நேற்றைய விரல்கள்’ என்பது புதுமையான வெளிப்பாடு ! எளிமையான சொற்களால் நல்ல கட்டமைப்புடன் கவிதை முடிகிறது.
“நீர்” – சிறிய ஆனால் கச்சிதமான கவிதை. கர்ப்ப காலத்தில் குழந்தையின் நிலை பேசப்படுகிறது.
திரவத்தினுள் மிதந்து கொண்டிருந்த
நீர்மையுடனான உறவு ஆதியானது
இக்கவிதையில் உரிய இடங்களில் பத்தி பிரிக்கப்படாததால் பொருள் பேதம் கொள்ள வழி இருக்கிறது.
நிறைந்த எனதாசைக் குளத்தில்
கல்லெறிந்தபின் நிசப்தமாகும்
என் யாவும்
என்பதில் நல்ல முத்தாய்ப்பும் பிடிமானம் இல்லாததால் இழைவிட்ட ஒரு கொடியின் தவிப்பும் தெரிகின்றன.
‘எல்லாக் கோப்பையிலும்’ – காதல் உறவைத் தேர்ந்த சொற்களால் சொல்கிறது.
எல்லாக் கோப்பையிலும்
நுரைத்தது அன்பின் மது….
அதனூடே உன் முகம்…….
என்ற படிமத்துடன் கவிதையில் அடுத்த 12 வரிகளும் மிக முக்கியமானவை.
உன் அருகாமையின் சுகவதத்தால்
மேனியெங்கும் வெப்பக்காற்று
என்பது உக்கிரம் தருகிறது.
நானில்லாத நானினும்
நீயிருக்கும் நொடி வேண்டும்
என்ற வரிகள் கொண்டு வந்து குவிக்கும் பொருட் செறிவு அருமை! கூடலின் இயல்பு நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இசை கசிகின்ற நடனத்தில்
தேகங்களின் உரையாடல்
உடனே வேண்டும்
என்பதில் மொழிநயம் பளிச்சிடுகிறது.
எதுவும் வேண்டாமெனச் சொல்லுகையில்
இக்கணத்தின் அமைதி போதும்
என்று கவிதை முடிகிறது. இவ்வரிகள் பூரணத்துவத்தை முன் வைத்து மனச்சாந்தியளித்துக் கவிதையை வெற்றி பெறச் செய்துள்ளன.
‘புதிய முகம்’ – கவிதையில் …
உறக்கமற்ற இரவில்
முடிவற்ற பொழுதுகளாய்
ததும்பிக் கிடந்தேன்
இவ்வெளிப்பாட்டில் ‘ததும்பிக் கிடந்தேன்’ என்பர் அசாதரண பதப்பிரயோகம் !
நீ போன்ற தலையணைக்குள்
துவண்டு மலர்ந்தேன்
என்பதில் உவமைவழி, கவித்துவம் மிக எளிதில் வசப்படுகிறது. மொழியாளுமை உயர்கிறது.
‘மாய மான்கள்’ – வித்தியாசமானது. சீதை வேண்டும், பிடித்துத்தா’ என மான் கேட்கிறது. ஓடிய மானின் பின் போன ராமன் இன்னும் திரும்பவில்லை என்னும் சிந்தனை சிலரது மென்னுணர்வுகளை உரசும்!
‘சக்தி வேலும் சாவிகளும்’ - இதில் சாவிகளைத் தூர எறியும் குழந்தைமை பேசப்படுகிறது. கூந்தலைப் பற்றி அழுத்தமாகச் சொல்கிறது 'கரு மேகக் கூந்தலின் கதை'
அலையலையாய் நீண்டு
பிருஷ்டம் தாண்டி
யௌவன கர்வத்தில்
கருமுகிலாய்
ஆலங்கனத்தில் கரிய நிற
அரவங்களாய் சுருண்டிருந்தன
என்பதில் காட்சிப் படுத்துதல் நன்றாக உள்ளது. அனாவசியச் சொற்கள் இல்லை.
அவன் விரல்களுக்குள்
மெல்லிய புதர்க்காடாய்
என் உயிர்க் கொடிகளாய்
இரவாய் ஆண் நுகர்வின் வாசனையாய்
கலவியின் அர்த்தம் தரும் நீள் வரிகளாய்
மோகவாக்கியங்களின் நீட்சியாய்
என்ற அடுக்குதலில் வாழ்வின் அர்த்தம் விளங்குகிறது. சொற்கள் அக்டோபஸ் கரங்களாய் மாறி வாசகனைச் சிறைப்பிடிக்கின்றன. கவியாளுமையும் மொழி வளமும் சங்கமிக்கும் அழகில் வாழ்க்கையின் பார்வை தீட்சண்யம் கொள்கிறது.
‘மின்னுவைக் காணவில்லை’ – வளர்ப்புப் பூனை காணாமல் போனதைப் பற்றிப் பேசுகிறது.
எல்லா இடங்களிலும் தேடிக்களைத்து
காற்றிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
மின்னுவின் மென்பாதங்களின் சுவட்டைக்
கண்டறிந்து சொல்லும் படி
என்ற வரிகளில் உயிர்நேசம் காற்றுவிடு தூதாகச் சொல்லப்பட்டுள்ளது.
ஊர் வம்பு சேகரிக்கும் குணம் கொண்ட பெண் ஒருத்தியைப் பற்றி பேசுகிறது. ரகசியங்களின் கதை! இதில் காணப்படும் ஒரு படிமம்.
அனைவரின் ரகசியங்களும்
இருண்ட நிலத்துள்
அடங்க மறுக்கும்
துயருடன் அவளைச்
சுற்றிப் புகைய ஆரம்பித்தன
இக்கவிதையில் பல தகவல்கள் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன.
‘முதல் திறப்பு’ – ஒரு பாலியல் கவிதை குறியீடு, நுட்பம், புதிய சிந்தனை ஆகியவற்றால் கவிதை நடத்தப்படுகிறது. ‘விரல்களை வண்ணத்துப் பூச்சிகளாக்கிளான்’ என்ற வெளிப்பாடு மிகவும் புதுமையாக இருக்கிறது. கருத்தாழம் முன் நிற்க, அழுத்தமான பதிவாக கவிதை அமைந்துள்ளது. சொற்கள் தெறித்து விழுகின்றன.
நிறைவாக உமா ஷக்தி கவிதைகள் படித்து ரசிக்கத்தக்கன. பாராட்டுகள்! இத்தொகுதி ‘உயிர்மை’ வெளியீடாகும்.
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் (