படைப்பின் உச்சம் கவிதை. எழுதுவது ஒரு கலை. எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எழுதுபவர்களின் எண்ணிக்கைக் குறைவு எனினும் வகைகள் பல உண்டு. சிலர் இயல்பாய் எழுதுவர். சிலர் இயற்கையாய் எழுதுவர். சிலர் வலிந்து எழுதுவர். சிலர் வலியுடன் எழுதுவர். இயல்யாய் எழுதுபவர்களில் எடுத்துக் காட்டுக்குரியவர் கவிஞ‌ர் க.ஆனந்த். 'ஒவ்வொரு மழையிலும்' தொடங்கிய அவர் கவிப் பயணம் 'கனவுகள் பூட்டிய தேர்'இலும் தொடர்ந்துள்ளது.

நகர இயலாமல்
தவிக்கிறது
திசைக் கொன்றாய்
திமிறும்
கனவுகள் பூட்டிய
தேர்

மனித மனம் கனவுகளால் சஞ்சரிப்பது. கனவு காணாத மனிதனைக் காண்பதரிது. கனவுகள் பலவாறாய் காணும்போது மனம் அலையும். ஒரு முகப்படாது. திசைக் கொன்றாய்த் திமிறும்போது தேரை நகர்த்துவது இயலாததாகும். திசைக் கொன்றாய்த் திமிறியபோதும் கவிதைகள் பூட்டிய தொகுப்பை எளிதாகவே நகர்த்தியுள்ளார். தேர் என்பதை வாழ்க்கையின் குறியீடாகக் காணமுடிகிறது. தேரை செலுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மனிதர்க்கு உள்ளது.

உறவுகளை விட மேம்பட்டது நட்பு என்பர். நட்பின் சிறப்பை இலக்கியங்களும் பல்வேறு விதமாய்ப் பேசியுள்ளன. ஆனால் நட்பு என்பது எவ்வளவு அன்னியமாகி விட்டது, எவ்வளவு பொய்யாகி விட்டது என 'உடைந்த கண்ணாடிகள்' பிரதிபலித்துள்ளன. நலம் விசாரிப்புடன் நட்பு நிற்கிறது என்கிறார். நட்பு போலியாகி விட்டதை, பொய்யாகி விட்டதை உணர்த்தியுள்ளார். பாசத்தை விட பாசாங்கே முன்னிற்கிறது என்கிறார். இதற்கு முரணாக வெளிப்பட்டுள்ளது 'நட்பெனப்படுவது'. ஒவ்வொரு வரியிலும் நட்பைப் பற்றி விளக்கியுள்ளார். முதலாவதில் நட்பு இல்லை. கவிதை உண்டு இரண்டாவதில் நட்பு உண்டு. கவித்துவம் இல்லை. ஆனால் குழந்தைகளிடம் நட்பு உண்மையாக உள்ளது என 'எனக்குப் பிடித்த நண்பன்' மூல‌ம் விளக்கியுள்ளார்.

'பொம்மைகள்' மீது குழந்தைகளுக்கு எப்போதுமே பிரியம் அதிகம். பொம்மைகளுடன் பேசுவதும் விளையாடுவதும் குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. பொம்மைகளையும் குழந்தைகளையும் பிரிக்கவும் முடியாது. பொம்மைகள் குறித்த கவிதை பொம்மைக்கும் குழந்தைக்கும் உள்ள உறவை, தொடர்பைப் பேசுகிறது. மேலும் பலவற்றையும் எழுதியுள்ளார். வறுமையினால் அவதியுறும் ஒரு சிறுமியைக் காட்டியுள்ளார். சிறுமியாய் இருந்தும் பொம்மையுடன் விளையாட முடியாமல் அதை விற்பனை செய்வது என்பது கொடுமை.

பேசாத பொம்மைகளுடன் தான்
அதிகம் பேசுகின்றன குழந்தைகள்
என்பவை பேசப்பட வேண்டிய வரிகள். குழந்தைகளின் இயல்பைக் குறிக்கிறது. 'பொம்மைக் கடை'க் கவிதையில் அப்பாவின் மனதை 'விற்பனை' செய்துள்ளார். குழந்தைகள் அறிவாளிகள் என்கிறார். நேர்காணல் கவிதையும் குழந்தையின் அறிவையே போற்றுகிறது. பள்ளியில் 'நேர்காணல்' குழந்தைகளிடம் நடத்துபவர்கள் மீதான விமரிசனமாகவும் உள்ளது. 'சில அடிகளும் சில வலிகளும்' கவிதையிலும் குழந்தையை வைத்தே எழுதப்பட்டுள்ளது. குழந்தையிடம் வன்முறை நிகழ்த்தக் கூடாது என்கிறார்.

கண்ணாடிகள் உண்மையானவை. தேர்மையானவை. கண்ணாடி முன் நிற்கும் மனிதர்களே பொய்யானவர்கள். போலியானவர்கள். 'கண்ணாடி'யில் கவிஞ‌ரின் மனம் பிரதிபலித்துள்ளது.

தானுடைந்தாலும்
விடுவதில்லை
தன்
பிம்பங்கள் உடைய என 'கண்ணாடி'யின் பெருமையைக் காட்டியுள்ளார். கண்ணாடி உடைந்தால் அபச குணம் எனபர். ஆனால் கண்ணாடியை உடைப்பது மக்களே என குற்றம் சாட்டியுள்ளார். கண்ணாடியைக் கௌரவப்படுத்தியுள்ளார்.

மனிதனை மனிதன் நம்பாததன் விளைவே பூட்டு உருவாக்கப்பட்டது. வீடுகள் பூட்டப்படுவதற்கு முதல் காரணம் சந்தேகமே. கவிஞ‌ருக்குள் எழுந்த சந்தேகத்தின் விளைவாகவே எழுதப்பட்டுள்ளது 'பூட்டு' கவிதை.

ஒவ்வொரு பூட்டிலும்
தொங்கிக் கொண்டிருக்கிறது
சந்தேகம்

மனிதனை மனிதன் நம்பும் போதே, மனிதனை மனிதன் சந்தேகம் கொள்ளாத போதே 'பூட்டு' இல்லாது போகும். பூட்டப்பட்டதா என்னும் சந்தேகம் திருட்டை விடக் கொடியது.

படைப்பதனால் பெயர் இறைவன் என்பர். இங்கு படைப்பவன் கவிஞ‌ன் ஆவான். படைப்பைக் 'கடவுளின் தொழில்' என்று ஒப்பிட்டு படைப்பாளியை உயர்த்தியுள்ளார். போற்றியுள்ளார். ஒரு படைப்பாளியாக பெருமைப்பட்டுள்ளார். கடவுளின் தொழில் படைத்தல் மட்டுமல்ல அழித்தலும் ஆகும். படைப்பாளியோ படைத்தல் மட்டுமே செய்கிறான். கடவுளை விடவும் உயர்ந்தவன் படைப்பாளியே.

'தாத்தா' தலைப்பில் ஒரு கவிதை. தாத்தாவின் சொத்துக்கள், வாரிசுக்கு வருகிறதோ இல்லையோ குணம் வாரிசுக்கும் தொடரும் என்கிறார். சொத்து நிலைக்காது என்றும் உணர்த்துகிறது. சொத்துத் தொடர்பான மற்றொரு கவிதை 'பரம்பரை ஒவ்வொருவருக்கும் அப்பா பெயர் தெரியும். அடுத்ததாக தாத்தா பெயர் தெரியும். தாத்தாவின் அப்பா பெயர் தெரிவது அரிது. இதுவே வழக்கு. ஆனால் சொத்துக்காக ஒரு வழக்கு தொடர்ந்த பிறகு மூல‌ப்பத்திரங்களைத் தேடித்தேடி பரம்பரையையே தெரிந்து கொள்கின்றனர். காரணம் 'சொத்தே'. வழக்குக்கு மாறாக இக்கவிதையை எழுத கவிஞ‌ர் எடுத்துக் கொண்ட மொழி வழக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடும்பம் என்பது ஒரு காலத்தில் கட்டுப்பாடற்று இருந்தது. பின்னர் கட்டுபாடு என்னும் பெயரில் 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்றது. பொருளாதார நெருக்கடியால் 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்றானது. ஒரு குழந்தையே போதும் அல்லது தற்போதைக்கு வேண்டாம் என தள்ளிப் போடப்படுகிறது. இதனால் ஏராள சிசுக்கள் சிதைக்கப்படுகின்றன. சிதைவு கவிதையில் இப்பிரச்சனையை எழுதியுள்ளார். மருத்துவ வளர்ச்சியால் கருச்சிதைவு வலிக்காமல் செய்யப்படுகிறது. ஆனால்
வலிக்காமலா
இருந்திருக்கும்
சிதைந்தகருவிற்கு....?
என வினா எழுப்பியுள்ளார். சந்தேகத்தை எழுப்பியுள்ளார். சிசுவின் சார்பாக பேசியுள்ளார். இங்கு பெண் சிசு, ஆண் சிசு என பிரித்து பேசவில்லை. பொதுவாகவே சிசுவிற்காக வருந்தியுள்ளார்.

'நாட்டுக் கோழிகள்' ஒரு நல்ல கவிதை. கவிதைச் சுவைஞ‌ர்களுக்கு ஒரு நல்ல விருந்து. குறியீடாக அமைந்துள்ளது. மண்ணின் மைந்தர்கள் அன்னியமாக்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்டுள்ளளார். உரிமைக் கோரியதால் உடைமை இழந்து நிற்பதைக் கூறியுள்ளார்.

விரட்டப்படுவதும்
துரத்தப் படுவதும்
விதியாகிப் போனது            என்று வருந்துகிறார்.

பெண்ணியம் பேசியுள்ள ஒரு கவிதை 'பேருந்துப் பெண்கள்'. பேருந்தில் பெண்கள் எவ்வாறெல்லாம் இடிபடுகிறார்கள், இம்சிக்கப்படுகிறார்கள் என துல்லியமாய் விவரித்துள்ளார். பெண்களின் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆண்களை கடுமையாக விமரிசித்துள்ளார். ஆனால்

அத்தனை அவஸ்தைகளும் கொடுமைகளும்
குழந்தை தரும்
ஒரு
முத்தத்தின் ஈரத்தில் கழுவப்படுகின்றன,
காணமால் போகின்றன, கரைந்து விடுகின்றன என்கிறார். குழந்தைக்காகவே அனைத்தையும் ஒரு பெண் பொறுத்துக் கொள்கிறார். பெண்னை ஒரு பத்தாம் பசலியாகவே படைத்துள்ளார். 'பிரிவு'ம் ஒரு சான்று. தாத்தா எது சொன்னாலும் எதிர்த்துப் பேசாத பாட்டி தன் மரணத்தில் தாத்தாவை அழ வைப்பது மனதைத் தொட்டது.தாத்தா இறுதியில் வருந்தினாலும் இறுதி வரை ஓர் ஆணாதிக்கவாதியாகவே இருந்துள்ளதை வெளிப்படுத்துகிறது கவிதை.

இந்தியா ஒரு சுதந்திர நாடு. போராடியே வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற்றோம். ஆனால் இன்று சுதந்திரம் என்பதற்கு பொருள் மாறியுள்ளது அல்லது மாற்றப்பட்டுவிட்டது. சுதந்திரத்திற்கும் ஓர் எல்லையுண்டு. கை வீச சுதந்திரம் உண்டு. வீசிய கை பிறர் மேல் படக்கூடாது. இன்று சுதந்திரம் என்பதோ மிகவும் பாதுகாப்பாக இருப்பது என்றாகி விட்டது. 'கூண்டு' கவிதை. கூண்டிலிருப்பதே பாதுகாப்பு என்பதுடன் அதுவே சுதந்திரமும் என்கிறார்.

இத்துடன் நிறைவடைகின்றன
இரவு ஒரு மணி செய்திகள்          என
நிறைவடையும் 'செய்திகளை வாசிப்பது' கவிதை வாசக மனத்தில் தொடங்கி விடுகிறது. நாட்டில் நிகழ்பவைகளை எதிர்மறையாய் வாசித்துள்ளார். அவலங்களை அடுக்கியுள்ளார். அவலம் தலைப்பில் ஆறு சிறு கவிதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளில் எழுதப்பட்டுள்ளது.

திருப்பிக் கொ்டுத்தாலும்
தீரப் போவதில்லை இழப்பின் வலி            என்பது
எடுத்துக் காட்டுக்குரியது. இழப்பின் வலியை ஈடு செய்ய முடியாது என்று வலியுறுத்துகிறார்.

கவிஞ‌ர் க.ஆனந்தின் கவி புனையும் ஆற்றல் வரவேற்பிற்குரிய‌தாகவே உள்ளது. கவிதைகளில் காணப்படுபவை எல்லோருக்குமான அனுபவம் எனினும் கவிதையாக்குவதிலே கவிஞ‌ர் தனித்து விளங்குகிறார். கவிதைகளின் வடிவமைப்பு குறிப்பிடத்தக்கது எனினும் வெளிப்பாட்டில் கவிஞ‌ர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கவிதைகள் புறம் பேசியவை எனினும் கவிஞரின் அகம் காட்டியுள்ளன. அவர் அகத்தில் ஒரு கவிஞ‌ன் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை தொகுப்பிலுள்ள கவிதைகள் உணர்த்துகின்றன. இயல்பான மொழியால் இதயங்களை மெல்ல உரச முயன்றுள்ளார். கவிஞ‌ரைப் பாராட்டுவதை விட எழுத்துக்களுடனான தனிமையை சாத்தியப்படுத்திய அவர் மனைவியைப் பாராட்ட வேண்டும். இல்லையெனில் கவிதை உலகிற்கு ஒரு கவிஞ‌ர் கிடைத்திருக்க மாட்டார். 'கனவுகள் பூட்டிய‌ தேர்' கவிதைகள் பூட்டிய தேராக பயணிக்கின்றன. தொடர வாழ்த்துக்கள். தொகுப்பில் தனித்துக் காணப் படும் வரிகள்

எதிரணியில் இருந்தாலும்
எதிரியல்ல
நண்பன்            
என்பதாகும். தொகுப்பை மூடிய பின்னும் மறையாமலே இருக்கிறது.
     
வெளியீடு
நிவேதிதா புத்தகப் பூங்கா
14-260 இராண்டாம் தளம் பீட்டர்ஸ் சாலை இராயப் பேட்டை சென்னை 600014.
விலை ரூ.35.00

Pin It