கீற்றில் தேட...

எழுத்து மக்களைப் பற்றி பேசினாலும், மக்களுக்கானது எனினும் எழுத்தை ஒரு வேள்வியாக ஒரு தவமாகக் கொண்டு எழுத்தாளர்கள் இயங்கினாலும் முழு நேர எழுத்தாளர்கள் என்பவர்கள் குறைவே. முழு நேர எழுத்தாளர்களில் முக்கியமானவர் எஸ்.ராமகிருஷ்ணன். சிறுகதை, நாவல், கட்டுரை, திரைப்படம், சிறுவர் நூல்கள், நாடகம், மொழிபெயர்ப்பு, என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவரின் கட்டுரை தொகுப்பு 'காற்றில் யாரோ நடக்கிறார்கள்'. 

'இலக்கியம்' என்பது முதல் பகுதி. வங்காளத்தில் 1980ம் ஆண்டு வெளியான நாவலையே முதலில் பேசியுள்ளார். 'சிப்பியின் வயிற்றில் முத்து' என்னும் தலைப்பில் எஸ். கிருஷ்ணமூர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வங்கத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழர்களை, தமிழ்நாட்டை, தமிழ் சூழலை மையப்படுத்தி எழுதியுள்ளதை பெருமையுடன் குறிப்பிடுகிறார். வங்காளத்தினர் தமிழ் மக்களைக் குறித்து வாசிப்பதைக் கண்டு பெருமைக்கிறார், வாசிக்கவும் பரிந்துரைக்கிறார். பி.எச். டேனியலால் எழுதப்பட்ட 'எரியும் பனிக்காடு' என்னும் நாவல் மீதும் விமர்சனத்தை வைத்துள்ளார். நாவலையும் விவரித்து சிபாரிசும் செய்துள்ளார். சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே விலங்கு மனிதன் என்பதையே நாவல் சாரமாகக் கொண்டுள்ளது என்கிறார். சம்பத்தின் 'இடைவெளி' நாவலையும் விவரித்துள்ளார். சாவைப் பற்றியதானாலும் வாழ்வை முன்வைக்கிறது என்கிறார். தஸ்தாவெஸ்கி படைப்புகளுடன் ஒப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

'எழுத்தின் அடையாளம்' மூல‌ம் கி,ராஜநாராயணன், அழகிரிசாமி என்னும் இரண்டு எழுத்தாளர்களை பெருமைப்படுத்தியுள்ளார். 'சாலையோரம் உள்ள உணவகங்கள் கூட எளிதாக அடையாளப்பட்டு விடுகின்றன, ஆனால் இரண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களைக் கொண்ட கிராமம் அடையாளமற்றே உள்ளது' என்பது எழுத்தாளர்க‌ளின் மீது கொண்டுள்ள மதிப்பைக் காட்டுகிறது. 'மறந்து போன மௌனி'யையும் நினைவு கூர்ந்துள்ளார். 'இருபது கதைகளுக்குள்ளாகவே எழுதியிருக்கிறார்' என்கிறார். ஆனால் எழுதிய கதைகள் 24 என்கிறார் இரோசேந்திர சோழன். (ஆதாரம் கணையாழி பிப்ரவரி 2002). சிறுகதை எழுத விரும்புகிறவர்கள் மௌனியின் கதைகளை வாசிக்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார். 'நகுலன் இல்லாத பொழுது' தனக்குள் எழுந்த எண்ணங்களையும் பதிவித்துள்ளார். 'நகுலன் என்றவுடனே நினைவிற்கு வருவது நாய்களும் பூனைகளும் தான்' என்றவர் 'சுசிலா'வை விட்டு விட்டார். 

மறைந்த ரஷ்ய எழுத்தாளர் சிங்கிஸ் ஜத்மதேவ் குறித்தும் ஒரு கட்டுரை உண்டு. அவர் படைப்புகளை சிறிதளவு அலசியுள்ளார். 

'இதிகாசங்களை வாசிப்பது எப்படி?' என்பது சுவையான கட்டுரை. வாசிப்பதற்கு பத்து அடிப்படை விசயங்களைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் இதிகாசத்துடன் உலக இதிகாசங்களான இலியட், ஒடிஸியையும் அறியச் செய்துள்ளார். இதிகாசங்கள் பொதுக்குணங்கள் நிரம்பியவை என்பது கவனிப்பிற்குரியது. 

'நினைவில் வந்த கவிதை'யில் ஈழக்கவிஞ‌ர் சி.சிவசேகரம் அவர்களின் கவிதை ஒன்றை எடுத்துக்காட்டி ஈழப்பிரச்சனையைச் சொல்லாமல் ஆப்பிரிக்க மக்களின் நிலையைக் கூறியுள்ளார். 

இரண்டாம் அத்தியாயம் 'கலை'. இப்பகுதியில் இசை, ஓவியம், கோவில், புகைப்படம், சிற்பம், காமிக்ஸ் ஆகியன குறித்து எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் அவரின் அறிவு புலப்பட்டுள்ளது; ஈடுபாடு வெளிப்பட்டுள்ளது. தமிழ் இசைக் கருவிகளை பயன்படுத்தாமல் காட்சிப்பொருளாக மாற்றி இருப்பது கண்டு கவலைப்பட்டுள்ளார். பாடப்புத்தகங்களுக்கு வெளியேயுள்ள வரலாற்றை அறியவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். டி.ஹெச்.லாரன்ஸின் ஓவியங்கள், பிரசஸானின் புகைப்படங்களை எழுத்தின் வழி உணரச் செய்துள்ளார். தேவாலயங்களிலும் சிற்பங்களும் ஓவியங்களும் உள்ளன என்று தெரிவித்து கண்டு களிக்கவும் கோரியுள்ளார். காமிக்ஸ் குழந்தைகளுக்கானது என்று விட்டுவிடாமல் இலக்கியத் தரம் குறையாமல் குழந்தைத்த்தனத்துடன் எழுதியுள்ளது சிறப்பு, கன்னித்தீவைத் தொடர்ச்சியாக வாசித்தவர்கள் உள்ளனரா என எழுப்பிய வினாவில் ஒரு நியாயமுள்ளது. 

'திரைப்படம்' என்னும் அத்தியாயத்தில் பல படங்களை, சில ஆளுமைகளைக் காட்டியுள்ளார். 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்னும் திரைப்படத்தை எழுதத் தொடங்கியவர் சந்திரபாபுவின் வாழ்க்கையைக் கூறி ஒரு சோகத்தை உண்டாக்கியுள்ளார். அவள் ஒரு தொடர்கதை, கல்லூரி, வெயில் என்னும் திரைப்படங்கள் எஸ்.ராமகிருஷ்ணனுக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை வாசகர்களுடன் இனிமையாக பகிர்ந்துள்ளார். இந்தி மற்றும் வெளிநாட்டுப் படங்களைப் பற்றிய விவரிப்பும் இடம் பெற்றுள்ளது. ஜோதா அக்பர் படத்தில் சரித்திரமும் இல்லை, சினிமாவும் இல்லை என தாக்குதலும் உண்டு. ஷோலே திரைப்படத்தை 'அசல்' அல்ல என சான்றுகளுடன் விளக்கியிருப்பது சுட்டத்தக்கது. 'திரையில் ஓடிய ரயில்'களைத் திரட்டி ஒரு கட்டுரையைத் தந்துள்ளது சிறப்பு. ரயில் இடம்பெற்ற படங்களைத் தவறாமல் குறிப்பிட்டுள்ளார். 'ஜெயகாந்தனின் திரைப்படங்கள்' கட்டுரையில் ஜெயகாந்தனின் திறமைகைள எடுத்துக் கூறி அவர் படங்கள் குறித்த விமர்சனங்கள், விவாதங்கள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் படங்களின் பிரதியோ நகல் பிரதியோ இருந்தால் தெரியப்படுத்தவும் என்று ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். 

அனுபவம் எல்லாருக்கும் வாய்க்கும். சிலரே அனுபவிக்கின்றனர்; அனுபவத்தை எழுத்தாக்குகின்றனர். இலக்கியத்தைத் தாண்டியது எனினும் இலக்கியமாக உள்ளது 'அனுபவம்' என்னும் பகுதி. ஆண்டு விழா என்னும் பெயரில் பள்ளியில் நடக்கும் கேலிக்கூத்தை விமர்சிக்கிறது 'சிற்றுரையும் பேருரையும்' கட்டுரை. பள்ளி என்றால் ஏன் பிள்ளைகள் விலகியோடுகிறார்கள் என்றும் விவரிக்கிறது. 'பள்ளித் தமிழ்' கட்டுரையில்' பெற்றோரையும் பொறுப்பாக்குகிறார். 'சொல்லும் பொருளும்' கட்டுரையில் மொழியைப் பற்றி பிரமிக்கிறார். மொழியை அழிக்கும் முயற்சியில் கல்விமுறை உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். 

எண்கள் இல்லாத மொழியென பிரளூh என்னும் மொழியை அறியச் செய்கிறார். அமேசான் காடுகளுக்குள் வாழும் பிரளூh என்னும் ஆதிவாசிகள் பேசுவதாகும். இந்தியாவில் பேச்சு மொழியாக இல்லாது போன மொழிகளையும் பட்டியலிட்டுள்ளார். மழை நாள்களில் பயனுள்ளதாக்க வேண்டும் என்று தன்னை முன்னிறுத்தி ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். கட்டுரைத் தலைப்பு 'எனது மழை நாட்கள்'. 

'பேச்சின் வாலைப் படித்தபடி'யில் தேவதச்சனுடனான உரையாடலே தன்னை உருவாக்கிற்று என்கிறார். காலமாற்றத்தால் நாகரிக வளர்ச்சியால் பழைய பொருள்கள் பயன்பாடற்றுப் போயின, காட்சிப் பொருளாகவும் இடம் பெற்றும் உள்ளன, காணாமலும் போயுள்ளன. வழக்கொழிந்து போனவைகளை வரிசைப்படுத்தி 'போய் வாருங்கள் பொருட்களே' என்று வருத்தமுடன் வழியனுப்பி வைக்கிறார். தற்போதுள்ளவையும் 'ஒரு நாள் கடந்து போகும்' என்று சபிக்கிறார். பட்டியலில் விளையாட்டும் அடங்கியுள்ளது. 

இறுதி அத்தியாயம் 'பொது'. பொதுவானது எனினும் சுவையாக சிறப்பாக உள்ளது. 'எழுதாத கடிதம்' குறித்து எழுதியுள்ளார். கடிதம் எழுதும் வழக்கம் கை விட்டு போனதற்காக கவலைப்பட்டுள்ளார். தானும் விதிவிலக்கல்ல என கவலைப்பட்டுள்ளார்; நேர்மையுடன் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கு அலைபேசியும் ஒரு காரணம் என்கிறார். 

'காந்தியின் கடிகாரம்' ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது. கடிகாரம் தொடர்பான பல தகவல்களை அறிய வாய்ப்பாக உள்ளது. காந்தியின் இறுதி நிமிடங்களைக் காட்சியாக்கியுள்ளார். காந்தி சுடப்பட்டு மண்ணில் உடல் சாயும்போது 'ஹே ராம்' என்றதாக ஒரு புறமும் 'ஐயோ' என்றாக ஒரு பிரிவும் கூறி வருகிறது. எஸ்.ராமகிருஷ்ணனோ 'அவர‌து உதடு முணுமுணுக்கிறது' என்கிறார். இரண்டையுமே குறிப்பிடாமல் பொதுவாகவே விட்டு விடுகிறார். 'வாழ்விலே ஒரு முறை'யில் மனிதர்களை அடையாளப்படுத்துகிறார். புத்தகங்களை மனிதர்களே கற்றுத் தருகின்றனர் என்கிறார். 

எஸ்.ராமகிருஷ்ண‌னின் உலகம் மிகப் பரந்தது. நூல்களை வாசிப்பதும் படங்களைப் பார்ப்பதும் மனிதர்களை சந்திப்பதும் அனுபவங்களைப் பெறுவதும் அவருக்கு சாத்தியப் பட்டதுபோல் எழுதுவதும் அவருக்கு அழகாய், அருமையாய் வாய்த்துள்ளது. எது ஒன்றையும் கவனமாக உள்வாங்கி அவருக்குள் எழுந்த உணர்வுகளை கட்டுரையாக வாசகர்களுடன் பகிர்ந்துள்ளார். ஒரே எழுத்தாளர் எல்லாவற்றையும் வாசிப்பதும் பார்ப்பதும் இயலாதது. 

'காற்றில் யாரோ நடக்கிறார்கள்' மூல‌ம் வியக்கச் செய்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். ஓர் இலக்கியவாதி என்பதையும் தாண்டி ஒரு மனித விசுவாசியாக சமூக‌ம் மீது கரிசனம் கொண்டவராகவும் தன்னை நிலை நிறுத்தியுள்ளார். ஒவ்வொன்றை குறித்துமான தன் நேர்மையான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். விமர்சனத்தையும் குற்றச்சாட்டையும் துணிவாக வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நாவல் அல்லது சிறுகதை வாசிக்கும் போதே மனம் கனக்கும். இக் கட்டுரைத் தொகுப்பும் மனதை கனக்கச் செய்கிறது; நிறைவு கொள்ளச் செய்கிறது. 

 வெளியீடு:  உயிர்மை பதிப்பகம் 11-29 சுப்பிரமணியம் தெரு அபிராமபுரம் சென்னை 600018

 விலை ரூ.170

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)