அவள் நார்ப்பெட்டியைத் தேடினாள். அதில் இருந்த ரேஷன் அரிசியை எடுத்துச் சொளவில் தட்டினாள். கல், கெடும்பு, தூசியைப் பிரித்து எடுத்தாள். தூசு நீக்கிய அரிசியைக் கீழே சிந்தாமல் நார்ப்பெட்டிக்குள் தட்டினாள். வேகமாக வெளியே சென்று வீட்டு முற்றத்தில் நின்ற சீத்தாப்பழ மரத்தில் இருந்த காய்களைப் பறித்து நார்ப்பெட்டிக்குள் வைத்தாள். பரணியை எட்டிப் பார்த்தாள். கையில் கிடைத்த கருப்பட்டியை எடுத்துக்கொண்டாள். துண்டைச் சுருட்டி எடுத்துத் தலையில் வைத்தாள். வீட்டின் முற்றத்தில் வாசலாக இருந்த பனைமட்டைப் படலையை நாரைக் கொண்டு கட்டிவிட்டு, நடக்க ஆரம்பித்தாள் கிழவி.
எட்டு முழ நீல நிறப் புடவை அணிந்திருந்தாள். காலில் இரப்பர் செருப்பு இல்லை. எச்சில மரத்தின் (அல்லது எச்சல மரத்தின்) பட்டையில் செய்த மரச்செருப்பைக் கால்களில் மாட்டியிருந்தாள். வேகமாக நடந்தாள். பேரனைப் பார்க்க வேண்டும். காரங்காடு தாண்டியதும் குடமுருட்டி ஆறு குறுக்கே வந்தது. வேறு வழிப்பாதை இல்லை. மெதுவாக ஆற்றுக்குள் இறங்கினாள். ஆழம் அவ்வளவாக இல்லை. தண்ணீரின் வேகமும் அதிகமில்லை. கவனமாக ஆற்றைக் கடந்து கொண்டிருந்தாள் கிழவி. நார்ப்பெட்டியைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டாள். சின்னச் சின்னச் சிலேபி மீன்கள் கிழவியின் கால்களில் மோதிச் சென்றன. கவனமாக அடி எடுத்து வைத்தாள். பேரனின் நினைவுகள் ஆற்று நீரைப் போல அசைந்தோடின. நடு ஆற்றைக் கடந்து கொண்டிருந்தாள் கிழவி. பனை ஓலையில் பெட்டி முடைந்து, அதை விற்ற காச்சைச் சுருக்குப்பையில் பத்திரமாக வைத்திருந்தாள். இடுப்பில் இருக்கும் சுருக்குப்பையை அவ்வப்போது தொட்டுப் பார்த்துக் கொண்டாள் கிழவி.
குடமுருட்டி ஆற்றில் எப்போதாவது வெள்ளம் வரும். வெள்ளம் வந்தாலும் நீரைச் சேமிக்கக் குளம் ஏதுமில்லை. எங்கும் விவசாயம் நடக்கவில்லை. பனைமரமும், உடைமரமும் நிறைந்த ஊர் அது. வெள்ளம் வந்தால் நேராக அருகிலிருக்கும் கடலில் கலந்துவிடும். கிழவிக்கும் கொஞ்சம் முள்காடு இருப்பதால், பனைமட்டையையும் சீமை உடைமரத்தையும் விறகுக்குப் பயன்படுத்தி வந்தாள். பனைமரங்களைப் பாட்டத்திற்கு விட்டதால் கொஞ்சம் கருப்பட்டியும் கிடைத்து வந்தது.
மெல்ல மெல்ல ஆற்றைக் கடந்தாள் கிழவி. கால் ஆற்று நீரில் நனைந்து பதமாகப் பஞ்சு போல் மாறியது. நடையின் வேகத்தைக் கூட்டினாள். மகளின் வீட்டின் அருகே நடந்து வரும்போது பேரனின் சத்தம் கேட்டது. எந்தத் தகவலும் இல்லாமலே ஆச்சி எப்படியும் வருவாள் என்று தெரிந்தது போல ஓடிவந்தான் பேரன். ஒரு கையால் பேரனைப் பிடித்துக்கொண்டாள் அவள். தலையில் இருந்த நார்ப்பெட்டியை இறக்கி வைத்தாள். ஆச்சியின் எட்டு முழச் சேலைக்குள் சுருண்டுகொண்டான் பேரன். பேரனுடன் அன்று முழு நாளும் கழிந்தது. இரவில் ஆச்சியின் கதையைக் கேட்டு நன்றாகத் தூங்கினான் பேரன். மண்ணெண்ணெய் விளக்கை அணைத்தாள் (குளிர வைத்தாள்) அவள்.
காலை விடிந்தது. தன் மகளிடம் கஞ்சியும், துவையலும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஊருக்குக் கிளம்ப வெற்று நார்ப்பெட்டியை எடுத்துக் கொண்டாள் அவள். அவளின் பேரன் ஓலை வேய்ந்த வீட்டுக்குள் சாணி பூசிய தரையில் பனை ஓலைப்பாயில் தூங்கிக் கொண்டிருந்தான்.
- சு.பாலகணேஷ்