அந்த மாலை நடராஜன் வீட்டுக்குள் நுழைந்தபோது, இருபத்தேழு ஆண்டுகளாக மூடியிருந்த ஒரு கதவு மீண்டும் திறக்கப்போகிறது என்று அவனுக்குத் தெரியவில்லை.

சாவியை மேசைமேல் வைத்தான். காலணிகளைக் கழற்றி ஓரமாக வைத்தான். சட்டையின் முதல் பொத்தானைக் கழற்றியபோது அலைபேசி ஒலித்தது. அறியாத எண்.

“ஹலோ?”

mother 340மறுமுனையில் சில விநாடிகள் அமைதி.

“நான்... அறந்தாங்கியிலிருந்து பேசுறேன்.”

வயதான பெண்ணின் குரல்.

“யாருங்க?”

மீண்டும் அமைதி.

பிறகு, இருபத்தேழு ஆண்டுகளாக நேரில் கேளாத ஒரு சொல் அவன் காதுக்குள் விழுந்தது.

“நான் உன் அம்மா பேசுறேன் பா...”

நடராஜனின் விரல்கள் சட்டைப் பொத்தானிலேயே நின்றுவிட்டன.

அம்மா.

அந்தச் சொல்லை அவன் அறியாதவன் இல்லை. பள்ளி விண்ணப்பங்களில் இருந்தது. கல்லூரிப் படிவங்களில் இருந்தது. அரசு ஆவணங்களில் இருந்தது. ஆனால் அவனுடைய வாழ்க்கையில் மட்டும் அந்தச் சொல்லுக்கு ஒரு முகம் இருந்ததில்லை.

“என்னம்மா?” என்று அவன் அறியாமலேயே கேட்டுவிட்டான்.

மறுமுனையில் அழுகை.

கணவனை இழந்துவிட்டதாகவும், இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும், இப்போது தனியாக இருப்பதாகவும் அவள் சொன்னாள். உடல்நிலை சரியில்லை என்றும், சர்க்கரை நோய் இருப்பதாகவும் கூறினாள்.

கடைசியில் அவளுடைய குரல் ஒரு குழந்தையைப் போலத் தளர்ந்தது.

“நான் உன் கூட வந்துட்டா... என்னை வச்சுக்குவியா பா?”

நடராஜனால் பதில் சொல்ல முடியவில்லை. அழைப்பைத் துண்டித்தான்.

அவனுக்கு அவன் அம்மாவின் முகம் நினைவில் இல்லை.

அவனுக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே அவள் அவன் அப்பாவை விட்டுப் பிரிந்துவிட்டாள்.

திருச்சியில் படித்துக்கொண்டிருந்தபோது காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் அவனுடைய பெற்றோர். அந்தக் காதல் எப்போது கசப்பானது, யார் யாரை விட்டுச் சென்றார்கள், அந்த வீட்டை உடைத்த காரணம் என்ன? எதுவும் அவனுக்குத் தெரியாது.

அவனுடைய அப்பா ஒருபோதும் சொல்லவில்லை. அவன் கேட்கவும் இல்லை. அவனுக்குத் தெரிந்தது ஒன்றே. அம்மா போய்விட்டாள். அப்பா மட்டும் இருந்தார்.

அந்த “மட்டும்” என்பதற்குள் அப்பா தன் முழு வாழ்க்கையையும் வைத்திருந்தார்.

பள்ளிக்குக் கொண்டுவந்து விடுவார், அழைப்பார். சாப்பாடு ஊட்டினார். தலை வாரினார். காய்ச்சல் வந்த இரவுகளில் தூங்காமல் அருகில் உட்கார்ந்தார். அவன் அழும்போது காரணம் கேட்பதற்குள் கண்ணீரைத் துடைத்தார்.

ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன், “நான் இருக்கேன்டா,” என்பார்.

அந்தச் சொற்களுக்குள் நடராஜனின் குழந்தைப் பருவம் பாதுகாப்பாக இருந்தது.

பதினைந்து வயதில் அந்தப் பாதுகாப்பு ஒரே நாளில் சிதறியது.

ஒரு விபத்து. ஒரு மருத்துவமனை. சில உறவினர்களின் அழுகை. கடைசியில் அப்பா இல்லை.

அந்தச் செய்தி அறந்தாங்கிக்கும் சென்றது. அவனைப் பெற்ற தாயிடம் சொந்தக்காரர் ஒருவர் அழைத்துச் சொன்னார். அவளுக்குத் தெரிந்தது; ஆனால் அவள் வரவில்லை.

அந்த நாளின் எல்லாக் காட்சிகளும் நடராஜனின் நினைவில் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் காலத்தால் அழியாமல் நின்றது. அப்பாவின் இறுதிச்சடங்கில் அவள் இல்லை. அவன் தலையை மொட்டையடித்தபோதும் இல்லை. அப்பாவின் புகைப்படத்துக்கு முன் தனியாக நின்றபோதும் இல்லை. அந்த நாளில் அவன் தந்தையை மட்டும் இழக்கவில்லை; அவளைப் பற்றியிருந்த கடைசி எதிர்பார்ப்பையும் இழந்தான்.

அந்த வெற்றிடத்தில் சித்தப்பாவும், சின்னம்மாவும் அவனைத் தங்களுடைய வீட்டுக்குள் அழைத்துக்கொண்டார்கள்.

“இனிமேல் நீ எங்கள் பிள்ளை” என்று அவர்கள் சொல்லவில்லை. அந்த உறவுக்கு வார்த்தைகள் தேவைப்படவில்லை.

முதல் சில நாட்கள் அவள் சின்னம்மாதான். அவன், அவளுடைய அண்ணன் மகன்.

ஆனால் வாழ்க்கை மெதுவாக உறவுகளின் பெயர்களை மாற்றத் தொடங்கியது.

அப்பா இல்லாத முதல் வாரத்தில் நடராஜன் சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தான். சின்னம்மா அவனருகில் உட்கார்ந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சோறு ஊட்டினாள். அவன் பள்ளிக்குச் செல்லும் ஆடைகளைத் துவைத்து, இஸ்திரி செய்து வைத்தாள். இரவில் போர்வை விலகினால் வந்து போர்த்திவிட்டுச் சென்றாள். காய்ச்சல் வந்த நாளில் அவன் நெற்றியில் கை வைத்தாள்.

ஒரு அதிகாலை, காய்ச்சலில் மயங்கிக்கிடந்த நடராஜன் கண்களைத் திறக்காமலேயே, “அப்பா...” என்று அழைத்தான்.

அவள் நீண்ட நேரம் அவன் அருகில் உட்கார்ந்திருந்தாள். அப்பா திரும்பி வரமாட்டார் என்பதை அந்தக் குழந்தைக்குச் சொல்ல வேண்டியிருந்தது. அவள் மெதுவாக அவன் தலைமுடியை வருடியபடி சொன்னாள்:

“இனிமேல் நான்தான் உனக்கு அம்மா.”

அது ஆறுதல் வார்த்தையா, வாக்குறுதியா, அல்லது அவள் தன் வாழ்க்கைக்கு எடுத்துக்கொண்ட புதிய பொறுப்பா அவளுக்கே தெரியாது. சில நாட்களுக்குப் பிறகு சமையலறையிலிருந்து அவள் அழைத்தபோது, “அம்மா...” என்று நடராஜன் பதில் சொன்னான்.

அவளுடைய கையில் இருந்த கரண்டி கீழே விழுந்தது. அவள் திரும்பிப் பார்க்கவில்லை. கண்களில் மட்டும் சந்தோஷம். அந்த நாளுக்குப் பிறகு அவள் சின்னம்மா இல்லை.

அம்மா.

அந்தப் பெயரை யாரும் அவனுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. அவள் செய்த ஒவ்வொரு சிறிய அக்கறையும் அந்தப் பெயரை அவனுக்குள் எழுதிக்கொண்டே இருந்தது.

சித்தப்பாவும் அவனைத் தன் மூத்த மகனாகவே வளர்த்தார். அவனுடைய தம்பி அவனை அண்ணன் என்று அழைத்தான்.

அந்த வீட்டில் “அண்ணன் மகன்” என்ற வார்த்தைக்கே இடமில்லை. பள்ளிக் கட்டணம், புத்தகங்கள், கல்லூரிச் செலவு என எதிலும் அவனுக்குத் தனிக் கணக்கு வைக்கப்படவில்லை.

அவன் வேலைக்குச் சேர்ந்த நாளில் முதல் சம்பளத்துடன் வீட்டின் வாசலில் நின்றான். கையில் இருந்த பணத்தைச் சித்தப்பாவிடம் நீட்டினான். அவர் வாங்க மறுத்தார்.

“இது உன் சம்பளம். நீயே வைத்துக்கோ.”

நடராஜன் சிரித்தான்.

“நான் சம்பாதிச்சது எனக்கு மட்டும் இல்லப்பா.”

சித்தப்பாவின் பார்வை ஒரு கணம் தடுமாறியது. அந்த வார்த்தை அவருக்குள் எங்கோ ஆழமாகச் சென்று தொட்டது. சில நொடிகள் பேசாமல் நின்றவர், கண்களில் தேங்கியதை மறைக்கும்படி பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்.

நடராஜனும் எதுவும் பார்க்காதவனாக நின்றான்.

சில அன்புகள் கண்ணீரை வெளியில் விடுவதில்லை. பார்வையை மட்டும் வேறு பக்கம் திருப்பிக்கொள்கின்றன.

அந்த வீட்டில் நடராஜன் ஒருபோதும் வளர்க்கப்பட்டவன் இல்லை. அந்த வீட்டின் வாழ்க்கையோடு சேர்ந்து வளர்ந்தவன்.

இப்போது, இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு, அவனைப் பெற்ற தாய் ஒரு அலைபேசி அழைப்பின் வழியாக மீண்டும் அவன் வாழ்க்கையின் வாசலில் வந்து நின்றிருந்தாள்.

அந்த இரவு நடராஜனால் தூங்க முடியவில்லை. அவள் மீது கோபம் கொள்ள அவனுக்குக் காரணங்கள் இருந்தன. ஆனால் அவளை முழுமையாக வெறுக்க முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை. அவள் விட்டுச் சென்ற காயங்களுக்குள் இன்னும் ஒரு சிறுவன் இருந்தான். அந்தச் சிறுவன் மட்டும் இன்னும் ஒரு கேள்விக்காகக் காத்திருந்தான் — “அம்மா ஏன் வரவில்லை?”

அடுத்த நாள் அவன் சித்தப்பா வீட்டுக்குச் சென்றான். எல்லாவற்றையும் சொன்னான்.

சித்தப்பா நீண்ட நேரம் அமைதியாக இருந்தார்.

“போய்ப் பார்த்துட்டு வா,” என்றார்.

நடராஜன் அவரைப் பார்த்தான். தன் வாழ்நாள் முழுவதும் அப்பா என்று அழைத்த மனிதர், தன்னை விட்டுச் சென்ற பெண்ணிடம் போகச் சொல்கிறார்.

சித்தப்பா அவன் தோளில் கை வைத்தார்.

“அவங்களுக்காகப் போகாதடா. உனக்காகப் போ.”

அந்த வார்த்தை அவனுக்குள் நீண்ட நேரம் ஒலித்தது.

சின்னம்மா அருகில் நின்றுகொண்டிருந்தாள். அவள் எதையும் கேட்கவில்லை. அவனுடைய தலையில் மட்டும் கை வைத்தாள்.

“போ... ஆனா திரும்பி வந்துடு.”

அந்த நான்கு சொற்களில், அவள் அவனுக்குக் கொடுத்த வாழ்க்கை முழுவதும் இருந்தது.

அறந்தாங்கிக்குச் செல்லும் பேருந்தில் நடராஜன் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தான். வயல்கள் பின்னோக்கி ஓடின. அவனுடைய வாழ்க்கையும் அப்படியே பின்னோக்கி ஓடியது.

ஒன்றரை வயது — ஒரு பிரிவு.

பதினைந்து வயது — ஒரு மரணம்.

ஒரு சின்னம்மா — ஒரு அம்மா.

ஒரு சித்தப்பா — ஒரு அப்பா.

அறந்தாங்கியை அடைவதற்கு முன் அவன் அந்த எண்ணை அழைத்தான்.

“நான் வர்றேன்,” என்றான்.

அதற்கு அப்பால் அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. வாசலில் ஒரு வயதான பெண் நின்றுகொண்டிருந்தாள்.

நடராஜன் அவளைப் பார்த்தான். அவள் அவனைப் பார்த்தாள். இருபத்தேழு ஆண்டுகள் இருவருக்கும் நடுவில் நின்றுகொண்டிருந்தன.

அவள் மெதுவாக வந்து அவன் முகதைத் தொட்டாள். விரல்கள் நடுங்கின. அவனுடைய முகத்தில் அவள் இழந்துபோன குழந்தையைத் தேடினாள். அவன் அவளுடைய முகத்தில் தன் பிறப்பின் முகத்தைத் தேடினான்.

“உன் குழந்தை முகம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு,” என்றாள்.

அந்த ஒரு வாக்கியம் அவன் நெஞ்சுக்குள் புதைந்திருந்த ஏதோ ஒன்றை அசைத்தது. அவனுக்கு அந்த முகம் நினைவில் இல்லை. அவளுக்கு மட்டும் இருந்தது.

அவள் அவனை அணைத்துக்கொண்டாள். அந்த அணைப்பில் இவனுக்கு மன்னிப்பும் இல்லை; குற்றச்சாட்டும் இல்லை. இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த ஒரு தாயும், அவளை முதன்முறையாகத் தொட்டுப் பார்க்கும் ஒரு மகனும் மட்டுமே இருந்தார்கள்.

திரும்பிச் செல்லும் முன் அவளுக்குத் தேவையான மருந்துகளோடு சில பழங்களையும் வாங்கி வைத்தான்.

“மருந்தை நேரத்துக்குச் சாப்பிடுங்க... பழமும் சாப்பிடுங்க.”

அவள் தலையசைத்தாள்.

அவள் வாசல் வரை வந்து நின்றாள். நடராஜன் சில அடிகள் சென்றபின் திரும்பிப் பார்த்தான். அவள் இன்னும் அங்கேயே நின்றுகொண்டிருந்தாள். இருவரும் கையை உயர்த்தினர்.

அலைபேசி ஒலித்தது. திரையில் ஒரு பெயர் — அம்மா, அறந்தாங்கி.

அவன் சில விநாடிகள் அந்தப் பெயரைப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு அழைப்பை எடுத்தான்.

“சாப்பிட்டியா பா?”

அவனுடைய கண்கள் கலங்கின. இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு அவன் கேட்டிருக்க வேண்டிய ஒரு சாதாரணமான கேள்வி.

“இல்லம்மா.”

“சாப்பிடாம ஏன் போற?”

அவன் மெதுவாகச் சிரித்தான்.

“வீட்டுக்குப் போறேன்.”

அந்த ஒரு சொல்லில் அவனுடைய இருபத்தேழு ஆண்டுகளும் வந்து நின்றன.

அவன் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான். அவனுக்குப் பின்னால் ஒரு வயதான பெண் நின்றுகொண்டிருந்தாள். அவனுக்கு முன்னால் ஒரு வீடு காத்திருந்தது.

அவன் மனதில் மட்டும் இரண்டு குரல்கள். ஒன்று அவனைப் பெற்றது; இன்னொன்று அவனை வளர்த்தது. நடராஜன் எந்தக் குரலையும் மௌனப்படுத்தவில்லை.

சில உறவுகளைத் தேர்ந்தெடுக்க முடியாது. சில உறவுகளை மறக்கவும் முடியாது.

அவன் நடந்துகொண்டே இருந்தான்.

அவனுடைய அலைபேசியில் — அம்மா.

அவனுடைய நினைவில் — அப்பா.

அவன் திரும்பிச் செல்லும் வீட்டில் — அப்பாவும் அம்மாவும்.

அந்த நிமிடத்தில் நடராஜனுக்குப் புரிந்தது: பெற்றவள் என்பது ஒரு உறவு; வளர்த்தவள் என்பது ஒரு வாழ்க்கை. ஒன்றை அழித்துவிட்டு இன்னொன்றை உண்மையாக்க வேண்டிய அவசியமில்லை.

அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதைத் துடைக்கவில்லை. ஏனென்றால் அந்தக் கண்ணீரில் இருபத்தேழு ஆண்டுகளாக அழைக்கப்படாமல் கிடந்த ஒரு பெயரும், இருபத்தேழு ஆண்டுகளாக அழைக்கப்பட்டுக்கொண்டிருந்த இன்னொரு பெயரும் ஒன்றாகக் கலந்திருந்தன.

அம்மா.

- மா.அன்பரசு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.