“டேய்! இங்க வந்து சாப்பாடு எடுத்துட்டு போ!”, அவனது அம்மா சமையலறையிலிருந்து அழைத்தாள். முகில் தனது அறையில், தரையில் போடப்பட்டிருந்த மெத்தையின்மீதமர்ந்து தீவிரமாக புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால், சில நிமிடங்கள் காத்திருந்த அவனது அம்மா, “டேய், கூப்பிடறது காதுல விழலயா?”, என்று மீண்டும் கத்தினாள். புத்தகத்திலிருந்து தலையைத் தூக்கியவன், தனக்கு அருகிலிருந்த கைப்பேசியை இயக்கினான். நேரம் 9:30 மணியாகிவிட்டதைப் பார்த்துச் சலித்தவாறே எழுந்தான். புத்தகத்தை மூடாமல் திறந்த நிலையிலேயே திருப்பி வைத்துவிட்டு சமையலறையை நோக்கி நடந்தான். சமையலறையில் அவனது அம்மா தோசை சுட்டுக் கொண்டிருந்தாள். உள்ளே சென்றவன், ஒரு தட்டை எடுத்து 3 தோசைகளை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டான். “சாம்பார் அங்க இருக்கு பாரு”, என அவன் அம்மா காட்டிய திசையிலிருந்த பாத்திரத்திலிருந்து கொஞ்சம் சாம்பாரை ஊற்றிக் கொண்டவன், அருகிலிருந்த அலமாரியைத் திறந்து கொஞ்சம் இட்லிப் பொடியை சாம்பாரின் மீது தூவினான். அதன் மேல் எண்ணெய் ஊற்றிவிட்டு, மீண்டும் தனது அறைக்கு நடந்தான்.

தட்டை தரையில் வைத்துவிட்டு அதன் அருகில் அமர்ந்தவன், புத்தகத்தை மீண்டும் எடுத்தான். ஒரு கையில் புத்தகத்தை வாசித்துக் கொண்டே, தோசையை உண்ணத் துவங்கினான்.                       

அவன் வாசித்துக் கொண்டிருந்த புத்தகம் லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘அன்னா கரேனினா’. முதலில் அவ்வளவாக ஒன்றாத அவனுக்கு, போகப் போக மிகவும் பிடித்துவிட்டது. குறிப்பாக ஆங்கில நாவல்களை வாசிக்கும் போது, முதல் 10 பக்கங்கள் புரியாததுபோலத் தான் தெரியும். ஆனால், அதைத் தாண்டிய பிறகு, கதைக்குள் நாம் ஈர்க்கப்பட்டுவிடுவோம் என்று அவன் தந்தை கூறியிருக்கிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான். கதையின் மையப் பாத்திரமான அன்னாவை ரசிக்கத் துவங்கியிருந்தான். அன்னா, சீமான் வ்ரான்ஸ்கியை சந்தித்த பொழுதுகளிலும், அவளது காதல் மலர்ந்த பொழுதுகளிலும், அவள் வ்ரான்ஸ்கியுடன் மகிழ்வாய் இருந்த தருணங்களிலும் இவனும் மகிழ்ந்திருந்தான். அவள் உளச்சிக்கல்களுக்குள் செல்லும் தருணங்களிலும், துன்பம் கொண்ட தருணங்களிலும், இவனும் கலங்கிப் போயிருந்தான். எப்படியோ நாவலின் கடைசி பகுதியை எட்டியிருந்தான். இன்னும் கொஞ்சப் பக்கங்கள்தான், அன்னா தனது மனச்சிக்கல்கள் தீர்ந்த, உயர்குடி சமூகத்தினரின் வசை பாடல்களையும், அவர்கள் வகுத்த முட்டாள்தனமான வரம்புகளையும் மீறி, சீமான் வ்ரான்ஸ்கியுடன் மகிழ்வாக வாழ்ந்தாள் என்று இருக்கும் இறுதிப் பக்கத்தைப் படித்து முடித்தால்தான் நிம்மதி என்று நினைத்துக் கொண்டே மீண்டும் வாசிக்கத் துவங்கினான்.

மணி பன்னிரண்டைத் தாண்டி இருந்தது. முகில் புத்தகத்தை மெத்தையின் ஓரத்தில் வைத்துவிட்டு படுத்திருந்தான். அவன் கண்கள் சோகத்தைக் காட்டின. அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, அன்னா தற்கொலை செய்து கொண்டிருந்தாள். அவனால் அதை நம்ப முடியவில்லை. டால்ஸ்டாய் கதையை இவ்வாறு முடிப்பார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அதற்கு மேலும் சில பக்கங்கள் இருந்தாலும், அதனைப் படிக்க மனமில்லாமல் ஓரமாக வைத்தான். கற்பனைப் பாத்திரம்தான் என்றாலும், கதையில் வரும் சீமான் வ்ரான்ஸ்கியுடன் சேர்ந்து அவனும் அன்னாவை காதலிக்கத் தொடங்கியிருந்தான். அதனால் அவளது இழப்பு அவனுக்குப் பெருந்துயரைத் தந்தது. சிறிது நேரம் சுவற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், சட்டென எழுந்தான். தனது பேண்ட் பாக்கெட்டில் பர்ஸுக்கு இடையில் மறைத்து வைத்திருந்த ஒற்றை சிகரெட்டை எடுத்துக் கொண்டு, சட்டை ஒன்றை அணிந்து கொண்டான். சிகரட்டை பத்திரமாக பாக்கெட்டில் வைத்தவன், தனது அலுவலக லேப்டாப் பையிலிருந்து ஒளித்து வைத்திருந்த தீப்பெட்டி ஒன்றையும் எடுத்து சட்டைபையில் வைத்துக் கொண்டு, கையில் அலைபேசியுடன் அறையைவிட்டு வெளியே வந்தான்.

வரவேற்பரையைக் கடந்து வாசற்கதவை அடைந்தவனை, “எங்கடா போற?”, அவனது தாயின் குரல் நிறுத்தியது. தூக்க கலக்கத்தில் அவனது தாய் வரவேற்பரையின் சோபாவிலேயே உறங்கிவிட்டிருந்தாள். “தூக்கம் வரலமா, அதான் சும்மா மாடிக்குப் போறன்”, என்றவாறு கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றான். “உங்கப்பா இப்ப வந்திருவாரு, சீக்கிரம் போய்ட்டுவந்துட்டு தூங்கு”, எச்சரித்தவள் மீண்டும் உறங்கச் சென்றாள். அவனது அம்மாவுக்கு இவன் புகை பிடிப்பது தெரியும், இருந்தாலும் தெரியாததைப் போலவே காட்டிக் கொள்வாள். இவனும் அவ்வாறே இருந்து பழகிவிட்டான். வீட்டின் வெளியே சென்றவன், வீட்டின் பக்கவாட்டில் இருந்த படியில் ஏறினான். அவர்களது வீடு தரைதளம் மட்டுமே கொண்ட குடியிருப்பு. மேலும், நகருக்கு சற்று வெளியே இருப்பதால், சுற்றியும் வீடுகள் கூட குறைவுதான். மொட்டை மாடிக்குச் சென்றவன், அவனது தந்தை வரும்வழியைப் பார்த்தவாறு ஒரு கல்லின்மீது அமர்ந்தான். சிகரட்டை எடுத்து பற்றவைத்துவிட்டு மெதுவாக இழுத்தான். அவன் மனம் மீண்டும் அன்னாவின் இறப்பை நோக்கிச் சென்றது. சமீபத்தில் அவன் படித்திருந்த கதைகளில் தன்னை மிகவும் ஈர்த்த அன்னாவின் அகால மரணத்தை அவனது மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.

சிகரெட்டைப் புகைத்தவாறே, மற்றொரு கையில் தனது கைபேசியை எடுத்து, அந்தக் கதை குறித்தும், அதைச் சுற்றி நடந்த சுவாரஸ்யமான துணுக்குகள் பற்றியும் பார்க்கத் துவங்கினான். அவ்வப்போது, அலைபேசியிலிருந்து நிமிர்ந்து பார்த்து, தனது தந்தை வரவில்லை என்பதையும் உறுதிபடுத்திக் கொண்டான். அது ஒரு இருசியப் புதினம் என்பது அவன் ஏற்கெனவே அறிந்து கொண்டதுதான் என்றாலும், அது நாடகங்களாவும், படமாகவும் எடுக்கப்பட்டிருந்ததை அறிந்தான். தன் மனதில் வரைந்து வைத்திருந்த அன்னாவை திரையில் காண எண்ணி, அத்திரைப்படத்தின் ட்ரெய்லர் காட்சியைத் திறந்தான். ஆனால், அடுத்த கணமே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு ட்ரெய்லரை மூடிவிட்டான். அவனது மனத்தில் அவன் வரைந்து வைத்துள்ள அன்னா நிச்சயம், இந்தப் படங்களில் நடிக்கும் பெண்களைவிட அழகாக இருப்பாள். அவள் அவனது கற்பனைக்குள்ளேயே இருக்கட்டும். இவற்றைப் பார்த்து அவளைக் கலங்கப்படுத்திவிடக்கூடாது என்று முடிவு செய்தவனாய் அலைபேசியை மீண்டும் பேண்ட் பைக்குள் வைத்தான்.

சிகரட்டை முடித்தவன், அவனது வீட்டு மதிலுக்கு வெளியே அதனை எறிந்துவிட்டு, மீண்டும் கீழே இறங்கினான். தூரத்தில் வாகனம் வரும் சத்தம் கேட்டது. அவனது தந்தை தான் வியாபாரம் முடிந்து திரும்பிக் கொண்டிருக்க வேண்டும். வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவன், “அம்மா அப்பா வராங்கன்னு நெனக்கிறன்”, என்று கூறியவாறே, தனது அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டான். விளக்கை அணைத்தவன், மெத்தையின் மீது படுத்துக் கொண்டான். மிதமான வேகத்தில் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்தவாறே, மீண்டும் அன்னாவிடம் வந்து சேர்ந்தான். ”நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால், நிச்சயம் அன்னாவை இறக்க விட்டிருக்க மாட்டேன்”, மனதுக்குள் உறுதி செய்தவாறே உறங்கச் சென்றான். அவனது கண்களின் ஓரத்தில் துளிர்த்திருந்த கண்ணீர் காயத் துவங்கியிருந்தது.

முகில் ஒரு இரயில் நிலையத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்தான். சுற்றிலும் ஐரோப்பியர்கள் அரக்கபரக்க நடந்து கொண்டிருந்தனர். இவன் கையில் ஒரு ஃபைல் கோப்புடன் கோட் சூட் மாட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தான். கடுங்குளிர், அவனது உடைகளைத் தாண்டி, தசைகளைத் தாண்டி எலும்பு வரை பரவியது. அந்த இரயில் நிலையத்தையோ அங்கு பரபரப்பாகத் திரிந்த மனிதர்களையோ அவன் அதற்குமுன் கண்டதில்லை. இரயில் நிலைய வாயிலில் ” Zheleznodorozhnaya” என்று ஆங்கிலத்திலும், புரியாத மொழி ஒன்றிலும் எழுதபட்டிருந்தது. சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டுப் பலகைகளிலும் பெரும்பாலும் அந்தப் புரியாத மொழியே இடம்பெற்றிருந்தது. தனது கால்சட்டை பாக்கெட்டில் கையைவிட்டு தனது அலைபேசியை எடுத்தவன், நேரத்தையும், தேதியையும் பார்த்தான். ஆனால், அது அவனுக்கு சரியாகத் தெரியவில்லை. அலைபேசியில் உள்ள வரைபட செயலியைத் திறந்தவன், தான் இருக்கும் இடம் எங்கிருக்கிறது என்பதை அறிய முயன்றான். அவன் இரசியாவில் இருப்பதாகக் காட்டியது. குழம்பிப் போனவன் அலைபேசியை மீண்டும் பாக்கெட்டில் வைத்துவிட்டு தன் முன்னே கம்பீரமாக நின்றிருந்த இரயில் நிலையத்திற்குள் நுழைந்தான். பழமையான அந்த இரயில் நிலையத்திற்குள் நுழைந்தவன் சுற்றும் முற்றும் தன் பார்வையை செலுத்தினான். மக்கள் இரயில் நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சென்ற வண்ணம் இருந்தனர். அவர்களிடைய மெல்ல நகர்ந்தவன் வலதுபுறமாகத் திரும்பி நடக்கத் துவங்கினான். எங்கு செல்கிறோம், ஏன் இங்கு வந்தோம் என்பது போன்ற குழப்பங்களுடன் நடந்தவன், நடைபாலத்தின் மீது ஏறினான். அப்பாலத்தின் மத்தியில் நின்றுகொண்டு, இரயில் நிலையத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றிலும் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். இரயில்கள் அங்கு வந்துகொண்டும் சென்றுகொண்டும் இருந்தன. எவ்வளவு நேரம் அங்கு இருந்தான் எனத் தெரியவில்லை. பொழுது சாய்ந்து இருட்டத் துவங்கி இருந்தது. ஏதோ ஒருவித பாரமான உணர்வுடன் அந்த நடைபாலத்தின்மீது நின்றுகொண்டிருந்தான். நேரம் செல்லச் செல்ல மக்கள் கூட்டம் குறையத் துவங்கியது. அவ்வளவு நேரம் அவன் அந்தப் பாலத்தின் மீது நின்றிருந்தபோதும், யாரும் அவனைக் கண்டுகொள்ளவில்லை. நடுநிசி நேரத்தில், கருப்பு உடை அணிந்த பெண் ஒருத்தி நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தாள். கையில் சிகப்புப் பையுடன் அவள் நடப்பதைப் பார்த்தவன், அவளுக்காகவே காத்திருந்ததைப் போல அவள் இருந்த நடைமேடையை நோக்கி ஓடத் துவங்கினான். வேகவேகமாக படிகளில் இறங்கியவன், அவளை நோக்கிச் சென்றான். அவள் அவன் வருவதை கவனித்ததாகத் தெரியவில்லை. அவள் பார்வை இரயிலின் அடிப்பாகத்தை நோக்கியே நிலைகொண்டிருந்தது. இரயிலின் அடியில் எதையோ தொலைத்ததைப் போல, அங்கேயே பார்த்துக் கொண்டு நின்றாள்.

முகில் அவளருகில் நெருங்குவதற்குள், இரயிலை நோக்கிப் பாயத் தயாரானாள் அந்தப் பெண். முதல்முறை அவள் பாய முயல, அவள் தோளில் மாட்டியிருந்த சிவப்புப் பை அவளைத் தடுத்தது. ஒரு நொடி நிலை தடுமாறியவள். சுதாரித்துக் கொண்டு, தனது பையை கீழே வைத்துவிட்டு, மீண்டும் தயாரானாள். இரண்டாம் முறை அவள் பாய முயல, அவள் கையை சரியான நேரத்தில் பிடித்துத் தடுத்தான் முகில். அதே நேரத்தில் அவன் நின்றிருந்த இரயில் நிலையம் சட்டெனப் பழமையான இரயில் நிலையமாக மாறியிருந்தது. அவன் கண்முன் அவ்வளவு நேரம் நின்றிருந்த மின்சார இரயில் மறைந்து, நீராவி இயந்திரதிரத்தால் இயங்கும் இரயில் தோன்றியது. அவள் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தாள்.

முகில் கற்பனை செய்தது போலவே அன்னா பேரழகியாக இருந்தாள். அவர்கள் முன்பாக நின்றிருந்த நீராவி இரயில் மெல்ல நகர்ந்தது. அந்த இரயில் அவர்களைக் கடக்கும் வரையில் முகில் அன்னாவின் கைகளை விடவில்லை. பின்னர் அவளை விடுவித்தவனை வெறுப்புடன் பார்த்த அன்னா, ருசிய மொழியில் ஏதோ சொன்னாள். தனக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்று பதிலளித்தான் முகில். “யார் நீ? எவ்வளாவு தைரியம் இருந்தால் என்னைத் தொடுவாய்? ஏன் என்னைத் தடுதாய்?”, என்று அடுக்கடுக்காக கேட்டுக் கொண்டே சென்றாள் அன்னா. ”நீங்கள் அன்னா கரீனினா தானே, எனக்கு உங்களைப் பற்றி எல்லாம் தெரியும். நீங்கள் தற்கொலை செய்து கொள்வதை என்னால் அனுமதிக்க முடியாது”, என்று அழுத்தமாகக் கூறினான் முகில்.

“நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றது உண்மைதான். ஆனால் என் பெயர் அன்னா கரீனினா கிடையாது. நான் சோஃபியா. நீ என்னை வேறு யாரோ ஒருவருடன் குழப்பிக் கொண்டுள்ளாய்”, என்றாள்.

“சோஃபியாவா, நீங்கள் அன்னா கரீனினா அல்லவா?”, நம்பமுடியாமல் வினவினான் முகில். “இல்லை”, என்று கூறியவள், அவனை விட்டு விலகிச் சென்று நடைமேடையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தாள். சிறிது நேரம் தரையையே வெறித்துப் பார்த்தவள், அழத் துவங்கினாள். என்ன செய்வதென்று தெரியாமல் தேம்பத் தேம்ப முழித்துக் கொண்டிருந்த முகில், “அழாதீங்க”, என்று மட்டும் கூறிவிட்டு அருகில் நின்றான். சிறிது நேரம் அவனை சட்டை செய்யாமல் அழுது கொண்டிருந்தவள், சற்று நேரம் கழித்து தனது அழுகையை நிறுத்திவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஆமாம், முதலில் நீ யார். உன்னைப் பார்த்தால் இரசியாவைச் சேர்ந்தவனைப் போல் தெரியவில்லையே. எந்த நாட்டைச் சேர்ந்தவன் நீ? உனக்கு இங்கு என்ன வேலை?”, என்று வினவினாள்.

”நான் இந்தியாவைச் சேர்ந்தவன். எப்படி இங்கு வந்தேன் என்று தெரியவில்லை. நேற்று லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனினா புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரமான அன்னா உங்களைப் போலவே இரயிலில் பாய்ந்து இறந்துவிட்டாள். நான் வருத்தத்துடன் உறங்கச் சென்றேன். கண்விழித்துப் பார்த்தால், இங்கே இருக்கிறேன்.”, என்று தனக்குத் தெரிந்தது அனைத்தையும் கூறினான்.

“நீ என்ன பிதற்றுகிறாய் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், அதைப் பற்றி கவலைப்பட எனக்குத் தெம்பும் இல்லை. உன்னைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோவம் தான் தலைக்கேறுகிறது”, என்று சீறினாள் சோஃபியா. “கோவப்படாதீர்கள்! நான் உங்களை அன்னா என்று நினைத்துத் தான் காப்பாற்ற வந்தேன். இருந்தபோதிலும் நீங்கள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் தவறான முடிவு.”, அதை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் என்று மன்றாடினான். “உங்களுக்கு என்ன சிக்கல் இருந்தாலும் அதைப் பற்றி என்னிடம் உரையாடுங்கள். என்னால் அதனைத் தீர்த்து வைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், குறைந்தபட்சம் தோள் கொடுக்கவாவது முடியும். ஒரு நண்பனாக நினைத்து என்னிடம் உங்கள் சிக்கல்களைப் பகிருங்கள். உங்கள் தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்”, என்று தொடர்ந்தான்.

மீண்டும் அழ ஆரம்பித்த சோஃபியா சற்று நேரம் கழித்து அவனுடன் உரையாட ஆரம்பித்தாள். கடைசியில் இருவரும் ஒன்றாக அந்த நடைமேடையிலிருந்து நடந்து செல்லத் துவங்கினார்கள்.

கண்விழித்த முகிலுக்கு வியர்த்துப் போயிருந்தது. கை கால்கள் மட்டும் சில்லென்று இருந்தன. அதிர்ந்து போன அவன், தனது அலைபேசியை எடுத்துப் பார்த்தான். நேரமும் தேதியும் தெளிவாகத் தெரிந்தது. “கனவு போல”, என்று சலித்துக் கொண்டவன் எழுந்து சென்று அலுவலகத்திற்குக் கிளம்பினான். காலை உணவு உண்ணும் வேளையில், தனது அலைபேசிக்குள் மூழ்கியவன் அன்னா கரீனினா நாவலை எழுதுவது குறித்து லியோ டால்ஸ்டாய் கூறியவற்றையும் அதனைச் சுற்றி நடந்தவற்றையும் தேடினான். மேலும் தேடத் துவங்கினான். டால்ஸ்டாய் இந்த நாவலை எழுதுவதற்கான தூண்டுதலாக பல்வேறு நிகழ்வுகளும் மனிதர்களும் இருந்ததாகப் படித்தான். டால்ஸ்டாயின் நண்பரது காதலி இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், அதுபோல இன்னும் பல காரணங்கள் அவரை இந்த நாவல் எழுத உந்தித் தள்ளியதாகவும் படித்தான். அந்தப் பெண்ணின் பெயர் இவன் கனவில் கண்ட சோஃபியாவாக இருக்குமோ என்று ஒரு மெல்லிய சந்தேகம் உண்டாக அந்தப் பெண்ணின் பெயரைத் தேடினான். அந்தப் பெண்ணின் பெயரும் அன்னா என்பதாகத் துவங்கியதைப் பார்த்தும், “கனவுல கண்டது எப்படி நெசமா இருக்கும்”, என்று தன்னைத் தானே நொந்து கொண்டவன் அலுவலகப் பையை எடுத்துக் கொண்டு வேலைக்குக் கிளம்பினான்.

- நிலா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.