நீலாம்பிகை கன்னிப் பெண்ணாக இருந்தும் மீன் விற்பதற்குச் சங்கானைக்குப் போனதில் அவளது குறிச்சியே அதிர்ந்து போய் இருந்தது. அவள் அதைப் பற்றிக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அண்ணனின் கடும் எதிர்ப்பைக்கூட அசட்டை செய்யவில்லை. தம்பிராசா என்ன நினைப்பான் என்கின்ற ஒரு எண்ணம் எழுந்தாலும், அதையும் புறங்கையால் தள்ளிவிடுவது போலத் தள்ளி விட்டாள். சங்கானைக்குப் போய் வந்தபின் செக்கல் பொழுதில் கரைக் கிணற்றிற்குக் குளிக்கச் சென்ற நீலாம்பிகைக்கு அதிர்ச்சியாக இருந்தது. அள்ளிய வாளி நீரில் கல்லெண்ணை நாறியது. மேலும் முகர்ந்தபோது அது நிச்சயமாகிற்று. அதற்குள் யார் கல்லெண்ணெய் ஊற்றினார்கள் என்பதையோ, எதற்காக ஊற்றினார்கள் என்பதையோ அவள் அறிய மாட்டாள். நடு ஊராரின் கிணற்றில் குளிக்க விடாததிற்கு கிழக்குத்திக்கார் இரகசியமாக இரவோடு இரவாக கல்லெண்ணை ஊற்றியது அவளுக்குத் தெரியும். அதற்குப் பழிவாங்கலாக இது இருக்கலாம் என்பது விளங்கியது. என்ன செய்ய முடியும் என்று யோசித்தவண்ணம் வீட்டிற்குத் திரும்ப எண்ணிய போது தம்பிராசா வந்தான். அவன் தன்னைப் பார்ப்பதற்கு அலைவது பற்றி நீலாம்பிகை முதலில் கேள்விப்பட்டிருந்தாள். பின்பு ஒரு நாள் கள்ளுச்சீவும் இரட்டைப் பனையடியில் வைத்து 'நான் உன்னை விரும்பிறன் நீலா' என்றான். அவள் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. இப்போது அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு வெட்கமாக இருந்தது. அவள் ஒரு முறை பார்த்துவிட்டு வாளியைத் தூக்கினாள்.

'என்ன குளிக்கேல்லையே?' என்று தம்பிராசா கேட்க அவள் நிலைமையை விளங்கப்படுத்தினாள். தம்பிராசா இருட்டி இருப்பதாலும், நடுத்திக்குக்காரின் கிணற்றில் ஆட்கள் இல்லாததாலும் அதில் குளித்துவிட்டுச் செல்லலாம் என்றான். அதைக் கேட்டு முதலில் நீலாம்பிகை நடுங்கினாலும், தம்பிராசா தன்னைக் கொலைநடுங்கி என்று நினைத்து விடுவானோ என்பதாக எண்ணியவள், சரி என்று கூற, இருவருமாக நடுத்திக்காரிக் கிணற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது திடீரென உழவு இயந்திரம் இவர்களை நோக்கி வர, பனைக் காட்டை நோக்கி ஓடிய இருவரும், அங்கே ஒளித்திருக்கும் போதுதான் அவர்கள் காதல், முத்தம் வரை சென்றது.

ஒஸ்லோ என்றாலும் எங்கள் கலாச்சாரம் காப்பதாக, பார்த்துப் பார்த்து ஒழுங்கு செய்யப்பட்ட கலியாண வீடு அது. இது சொர்க்கத்தில் அல்ல, ஒஸ்லோவில் நிச்சயிக்கப்பட்ட திருமணம். பாடசாலை மண்டபம் ஒன்றில் நடைபெற்றாலும், அரச வைபவம் போல் அலங்கரிக்கப்பட்ட உள் மண்டப அழகு வேலைப்பாடுகள். வண்ண வண்ண ஆடல்களும், வடிவு சேர்க்கும் உருவங்களும், கண்ணைப் பறிக்கும் மணமேடையும், உயர்ந்து நின்ற மணமக்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாகைகளும், வானவில்லைப் பூமியில் நிறுவிய ஊதுபைகளுமாக மண்டபம் அமர்க்களப்பட்டது.

சொந்த ஊர்ச்சனம், தெரிந்தவர்கள் என்று இரு நூறு விருந்தினர்கள் வந்திருப்பார்கள். ஐயர் புகையடிக்கும் தனது அலுவலில் மும்முரமாக, மேளமும், நாதஸ்வரமும் ஆரம்ப சுருதி பிடிப்பில் போட்டியாக. எங்கும் சிறுவர்களின் கீச்சுக் குரல், பெரியவர்களின் நகைப்பு, பேச்சு, என்பதாக வண்டுகளின் ரீங்காரமாய், களிப்பைப் பேசுவதாய், மண்டபம் உயிர் பெற்றிருந்தது.

திருச்செல்வன் ஊரில் 'எதுவும் கிடையாது அவனுக்கு' என்று சொல்வார்களே, அந்த ரகத்தைச் சார்ந்தவன். இங்கே அதற்குத் தடை ஏது என்கிற சுதந்திரம் வேறு.

அவனது திருநிறைச் செல்வன் சுகந்தனுக்கும், அளவெட்டியைச் சார்ந்த சிவபாலனின் ஏக புத்திரி சுகுனாவுக்கும், அன்றைய நாள் பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டதால் இந்தக் கலியாணத் திருவிழா. விடுவானா திருச்செல்வன்? தனக்குத் தெரிந்த ஊர்க்காரர் எல்லோரையும் அழைத்ததோடு, பல தனது வெளியூர் நண்பர்களையும் அழைத்திருந்தான்.

நீளமாகப் பன்னிரண்டு நபர்கள் உட்காரும்படி நாற்காலிகள் போடப்பட்ட மேசைகள், அலங்காரத்தோடு குளிர்பானங்கள் தாங்கி, சேவைக்குத் தயாராகக் காத்து இருந்தன. அதில் சில மேசைகளில் அவன் ஊர்க்காரர்கள் ஆட்சி செய்தார்கள். அப்படி ஆட்சிக்கு உட்பட்ட மேசை ஒன்றில் தர்மசீலன், அவன் மனைவி சாந்ததேவி, ரவி, கவி என்கிற அவன் பிள்ளைகள், தவலிங்கம் அவன் மனைவியான ராணி, சிவறூபன், அவன் பாரியார் நந்தினி, கமலன் அவன் துணைவி சியாமளா, தம்பிராசா, அவன் இல்லத்தாள் நீலாம்பிகை என்பவர்கள் அமர்ந்து இருந்தார்கள்.

'மனிதப் புறத்தோற்றம் ஐரோப்பா வந்த பின்பு அடையாளம் தெரியாது மாறிப்போனது, அல்லது ஒரு சமத்துவத்தை எட்டியது என்பதான ஒரு மாயை. இருந்தும் மர்மமான மனதுகள்? அதனுள் புதைந்துள்ள அகத் தோற்றங்கள்? அவை சாகாவரம் பெற்ற அசுரர்கள் போலப் பலரின் மனதின் ஆழத்தில் ஒளிந்து இருக்கிறது, இருந்தும் அது வெளியே தெரியாதபடி தடித்த முகமூடிகள் பலரைக் காப்பாற்றுகின்றன' எனத் தவலிங்கம் எண்ணிக் கொண்டான். அவன் மனது பாரதி போல சமூக அநியாயங்கள் கண்டு குமுறும். இருந்தும் போராடுவது பாதிக்கப்பட்டவனாய் இருக்க வேண்டும் என்று அவன் வலுவாக நம்புபவன். அப்போது அங்கே வந்த திருச்செல்வன், மேசையில் வைக்கப்பட்ட குளிர்பானத்தைப் பார்த்துவிட்டு, 'என்ன பாத்துக் கொண்டு இருக்கிறியள்? எடுத்து வாய நனையுங்க.... கெதியா பங்ஷன் ஆரம்பிச்சிடும். பிறகு பலகாரமும் ரீயும் வரும். எல்லாம் ஓ.கே தானே?' என்று தனது விருந்தினரை உபசரிப்பதாகக் கேட்டான்.

அதைக்கேட்ட தர்மசீலன் 'இதெல்லாம் நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேணுமே. உங்களுக்கு ஏதும் உதவி தேவை எண்டாச் சொல்லுங்க' என்றான் ஊர்க்காரன் என்கின்ற உரிமையில்.

'ஓ... நான் தேவை எண்டா வந்து கேட்கிறன்' என்றவன் ஏதோ அவசர அலுவலாகச் சென்று விட்டான்.

அப்போதே, குளிர்பானத்தையும், மேசையைச் சுற்றி இருந்தவர்களையும் பார்த்த சிவறூபன், தம்பிராசாவையும், நீலாம்பிகையையும் பார்த்தான். அவனுக்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற பரபரப்பு அவன் மூளையில் முளைவிட்டது.

சிவறூபன் ஒரு பொறியியலாளனாக வேலை செய்கிறான். ஒஸ்லோவில் மற்றவர்களோடு ஒப்பிடும்போது தான் கௌரவமான வேலை செய்வதான தடிப்பு. தனக்கு ஒரு தனி மதிப்பு இருக்க வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இங்கு அதைப் பெரிதாகக் காட்டிக் கொள்ள முடியாததில் ஒருவித பொறுமையற்ற அடக்கம். அவன் மனதில் புதைந்து கிடக்கும் மனிதாபிமானத்திற்கு விரோதமான இன்னும் சில எண்ணங்கள். அதைப் பற்றி இங்கே கதைத்தால் தனக்கே அவமானம் என்கின்ற உண்மை விளங்கியதால் என்ன செய்வது என்கின்ற திணிக்கப்பட்ட சகிப்பு.

சிறுவனாக இருக்கும்போது தம்பிராசா அப்பாவோடு சிவநாயகி அம்மா வீட்டிற்குச் சென்றிருந்தான். அவர் கணவர் தேவநேசன். யாழ்ப்பாணக் கச்சேரியில் வேலை செய்தார். வெள்ளிக்கிழமை என்றால் அவர் கொப்பிலேறி குரங்காகத் தாவிக்கொண்டு ஊருக்கு வருவார். அவர்களுக்கு ஊரில் அரைவாசி சொத்து உடைமையாக இருந்தது. அதனால் கூலிகள் யாவரும் அடிமைகள் என்கின்ற நினைப்பு. அதைப் பற்றி எல்லாம் தம்பிராசாவின் அப்பா கவலைப்படுவதில்லை. வேலை தந்து சம்பளமும் தரும் எசமானர்கள் கடவுளுக்குச் சமம் என்பது அவர் எண்ணம்.

அன்று தம்பிராசா அப்பாவோடு போனபோது சிவநாயகி அம்மாவின் கடைக்குட்டி ராகவன் நின்றான். அவனுக்கு ஆறுவயது இருக்கும். அவன் தம்பிராசாவின் அப்பாவைப் பார்த்து 'வாடா' என்பதோடு தொடர்ந்து சாதிப் பெயரையும் அப்பாவின் பெயரையும் சேர்த்துக் கூறினான். அப்பா கோவிப்பாரோ என்று தம்பிராசா நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தான். அவர் சிரித்துக்கொண்டு அவனுக்குப் பணிவு காட்டி 'அம்மா எங்க தம்பி?' என்று கேட்டபோது அவன் காதுகளை அவனாலேயே நம்பமுடியவில்லை.

தம்பிராசாவிற்கு அன்றிலிருந்தே ஒரு தாழ்வு மனப்பான்மை. அப்பாவுக்கே இப்படி என்றால் எனக்கு என்பதை அவனுக்கு எண்ணவே பிடிப்பதில்லை. அது சாதிகளாய், குறிச்சிகளாய், இன்னும் பலவாய், பலரோடு பழகும் துணிவைச் சிலவேளைத் தின்றுவிடுகின்றது. பிரச்சினையை எதிர்கொள்வதைவிடத் தப்பிப்பதில் ஒரு அலாதி நிம்மதி தம்பிராசாவிற்கு. இருந்தும் நோர்வேக்கு வந்த பின்பு எல்லோரும் மாறிவிட்டார்கள் என்கின்ற தப்புக்கணக்கில் ஒரு துணிவு வளர்ந்தது.

சிவறூபனுக்கு தம்பிராசா தம்பதிகளைப் பார்த்த ஞாபகம் வரவே இல்லை. அந்தப் புதியவர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற பரபரப்பு மேலும் மேலும் கொம்பாய் முளைத்து விடுமோ என்பதான அவதி. அவன் ஊரில் மற்றவரை அறிமுகம் செய்து கொள்வதற்கு, இல்லை அவர்கள் தகவல்களை ஞாபகக் களஞ்சியத்திலிருந்து எடுப்பதற்கு, பரம்பரைப் பெயர், இல்லை என்றால் குறிச்சி தெரிய வேண்டும். அதில் ஏதாவது ஒன்றைக் கூறினால் அத்தனை தகவலும் அகரவரிசையில் அவர்கள் ஞாபகத்தில் வந்துவிடும்.

சிவறூபன் தம்பிராசாவைப் பார்த்து, 'நீங்கள் ஊரில எந்த இடம், உங்கட அப்பாவிற்கு என்ன பெயர்?' என்று கேட்டான்.

தம்பிராசாவிற்கும், நீலாம்பிகைக்கும் அந்தக் கேள்வியை யாரும் கேட்டால், கட்டி இருப்பதை உருவுவது போன்ற அவமானமும், பதை பதைப்பும் ஏற்படும். ஏற்படத்தான் வேண்டுமா என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டது இல்லை.

'ஈழத்திலிருந்து இங்கே வந்த பின்பு பலரும் அதை மறந்ததாகக் காட்டிக் கொள்கிறார்கள். கலந்து ஊர்வலம் போகிறார்கள். சில இடங்களில் சமபந்தி போஷனம் சங்கோஜம் இல்லாமல் செய்கிறார்கள். அவர்கள் மனது, உள் வீட்டின் மனநிலை, வெளியில் தெரியாதவை. அவை விரிவான ஆராய்ச்சிக்குரியது' என்பதான எண்ணம் நீலாம்பிகையிடம் இருந்தது. ஆனால் முகத்துக்கு நேரே வித்தியாசம் காட்டாது பழகுவதில் தம்பிராசாவும் நீலாம்பிகையும் திருப்தி அடைந்தனர். 'அல்லது அவர்களால் கறுப்பு வெள்ளை பிரச்சனை இருக்கிறது என்பதைச் சொல்ல முடியாது. அதற்கு நியாயம் கேட்க முடியாது' என்பதும் அவர்களுக்குத் தெரியும். அந்தப் பாதுகாப்பிற்கு இன்று பங்கம் வந்ததாய் உடல் உதறிப் போட்டது. எழுந்து ஓடினாலும் அவமானம், இருந்து பதில் சொன்னாலும் அவமானம். வெளியேற இருந்த இரண்டு வாசலிலும் நெருப்பு பற்றினால் எங்கே ஓடுவது? என்கிற தத்தளிப்பு அவர்களிடம்.

தம்பிராசா பதில் சொல்லாது திருதிருவென முழித்தான். கார்மேகம் சூழ்ந்த வானமாய் அவன் முகம் இருண்டது. அதைப் பார்த்த தர்மசீலன் 'அவை எங்கடை ஊர்தான். உனக்குத் தெரியாதே?' என்று சமாதானம் சொல்ல முயன்றான். 'அதுதான் ஆர் எண்டு கேட்கிறன்' என்று தொடர்ந்தான் சிவறூபன். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த தவலிங்கம் 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்றான். 'சும்மா இருங்க அப்பா' என்றாள் ராணி அவசரமாக. சிவறூபன் அது தனக்கு என்று விளங்கிக் கொண்டான். தவலிங்கம் கூறியது அவனுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. அதை அவனுக்கு வேறு யாரிடமும் காட்ட முடியாது போக, அவன் பார்வை மீண்டும் தம்பிராசாவில் திரும்பியது. 'இவர் என்ன பெரிய மகாராசாவே, பெயரைச் சொன்னோண்ணை ஞாபகம் வாறத்துக்கு? எங்கடை ஊரில என்ன வழமை? பரம்பரைப் பெயரைச் சொல்ல வேணும், இல்லாட்டி எந்தக் குறிச்சி எண்டு சொல்ல வேணும். அதை விட்டிட்டு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது எண்டு ஒரு உருப்படி இல்லாத பழமொழி சொல்லுறியள். அந்தச் சுரைக்காய்க்குத்தான் லட்சம் லட்சமாய் சம்பளம் அள்ளித் தாராங்கள்' என்றான் சூடாக. தவலிங்கத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற வாய் நமைச்சல் . என்றாலும் ஏட்டுச் சுரைக்காய் பற்றி விளங்கிக் கொண்ட விதத்தை எண்ணி 'அவை அறிந்து பேசு' என்பதாக அமைதி காத்தான். தம்பிராசாவிற்கு எழுந்து போவதா, இருந்து அவமானப்படுவதா என்கின்ற சங்கடம். எழுந்து போவதே அவன் முதல் தெரிவாக இருந்தது. அவன் நீலாம்பிகையைப் பார்த்தான். அவள் அவன் கண்களைச் சங்கடமாகப் பார்த்தாள், சோகமான சிட்டுக்குருவி போல அவள் இமைகளைச் சோர்வாக வெட்டினாள்.

அவர்களின் சங்கடத்தைப் பார்த்த தர்மசீலன் புதையுண்டு கிடக்கும் தேரை இழுப்பது போல, 'திருச்செல்வன் பார்த்துப் பார்த்து ஹோல் அலங்காரம் எல்லாம் நல்லா செய்திருக்கிறான். நானும் உதவிக்கு வந்து இருக்கோணும். எனக்கு வேலையாப் போச்சுது' என்றான் கவலையும் காரணமுமாக.

'அது நிறைய ஆட்கள் உதவிக்கு வந்திச்சினம். இதில நான், தம்பிராசா, அதைவிட செல்வன், குமரேசன், குஞ்சன், மணி, தேவாரம், நகுலன், இன்னும் கன வெளியூர்க்காரர் எண்டு நல்ல பம்பலாப் போச்சுது' என்றான் தவலிங்கம் மேலும் தேரிழுக்க கை கொடுப்பது போல.

தம்பிராசா தான் தப்பி விட்டதாகத்தான் நினைத்தான். தம்பிராசா யார் என்பதுகூட சிவறூபனுக்கு அவ்வளவு முக்கியம் இல்லை. ஒரு பொறியியலாளனை மதிக்காமல், தான் யார் என்று சொல்லாது இழுத்தடிப்பது, அவனை அவமானப்படுத்தியதான எண்ணத்தைத் தந்தது. அவன் மீண்டும் தம்பிராசாவைப் பார்த்தான். தம்பிராசா அவன் பார்வை வேண்டாம் என்பதாகப் பக்கத்து மேசையைப் பார்த்தான். 'நீ எங்கே பார்த்தாலும் உன்னை நான் விடமாட்டேன்' என்பதாகச் சிவறூபன், 'சரி, நீங்கள் ஊரில எந்த இடம்?' என்றான் மீண்டும். அமைதி ஒப்பந்தம் எழுதிவிட்டு விமானத் தாக்குதல் நடத்தியதாக அதிர்ந்தான் தம்பிராசா. இந்த ஆக்கினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிய தவலிங்கம், 'அவர் எங்கடை குறிச்சிதான். கொழும்பில இருந்ததால உனக்குத் தெரியாது' என்றான். அவன் இத்தோடு ஓய்ந்து விடுவான் என்கின்ற ஒரு நப்பாசை. ஆனால் சிவறூபன் விடுவதாய் இல்லை. 'கொழும்பில இருந்தால் என்ன, ஆர்ற்ற பரம்பரை எண்டு சொன்னா எனக்குத் தெரியும்தானே' என்றான்.

கூடி இருந்த பலரும் ஆளை ஆள் பார்த்து விழித்தார்கள். அப்படி ஒரு பூட்டு அதில் இருப்பது அவர்களுக்குத்தான் தெரியும். குறிச்சிக்கோ, பெயருக்கோ குல விசாரணைக்கான அடையாள எண் போன்ற பெறுமானம் அவர்கள் ஊரில் உண்டு. தகவற் களஞ்சியத்தைவிடத் தனி மூளைகளில் அதைப் பற்றி அதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு இருக்கும். 'உன்னைப் பற்றி அறிந்துகொள்ள அதில் ஒன்றைத் தா' என்பது சிவறூபனின் தொடர் அடம். 'எம் அடையாளம் தெரிந்தால் உன் கண்ணில் பரிகாசம் தோன்றுமே' என்கிற அஞ்சல், அவதி, சங்கடம் தம்பிராசாவிடம்.

பசுவும் கொலை செய்யும். மனித பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதாகக் கோபமும், அரிகண்டமும் தம்பிராசா மனதில் கொழுந்து விடத் துவங்கியது.

நீலாம்பிகையின் அண்ணன் குட்டியன் கள்ளுச்சீவப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தான். அப்போதுதான் தம்பிராசா கடன் கொடுத்த பணத்தைக் கேட்டதால் கோபமுற்ற முருகதாஸ் இருவரது காதலையும் அவனிடம் ஒப்புவித்தான். கோபத்தால் மனது தணலாகக் கொதிக்க, தடநாரையும் குடுவையையும் தெருவில் போட்டுவிட்டு பளைக்கத்தியோடு, இருவரையும் தேடி அலைய, ஒளித்து ஓடி ஒருவாறு சிவநாயகி வீட்டிற்குச் சென்று சரணடைய, ராகவன் எதற்கும் பயப்படாது தனது மகிழுந்தில் ஏற்றிச் சென்று வவுனியாவிற்கு அனுப்பியதையும், அதனால் தமது உயிரும், காதலும் பிழைத்ததையும் தம்பிராசாவால் மறக்க முடிவதில்லை. இன்று வரையும் எது ராகவன் என்பது அவனுக்கு விளங்கவில்லை. சிறுவனா அல்லது வளர்ந்த மனிதனா? மனிதர்கள் யார் எப்போது எப்படி இருப்பார்கள் என்பதோ எந்த நேரம் அவர்கள் எந்த முகம் வெளிப்படும் என்பதோ யாருக்கும் தெரியாது. அவை விதிக்கு அப்பாற்பட்டவை.

'என்ன தம்பிராசா வாய்க்க கொழுக்கட்டையே வச்சிருக்கிறியள்? ஒரு மனிஷன் கேட்டா அதுக்குப் பதில் சொல்ல மாட்டியளே?' என்று மீண்டும் பொல்லுப் போட்டான் சிவறூபன்.

தம்பிராசாவால் அதன் பின்பும் பொறுமையோடு மௌனம் காக்க முடியவில்லை. இதற்குப் பதிலளிக்க எதற்குத் தான் தயங்க வேண்டும் என்று எண்ணினான். இது, தன் குறையோ, குற்றமோ இல்லை என்று முடிவு செய்தவன் 'நான் கிழக்கு திக்கு' என்றான். அதைக் கேட்ட சிவறூபன் எள்ளலாக நகைத்த வண்ணம், 'அதே உந்த மசி மசிஞ்ச நீ' என்றான் ஒற்றையில். தம்பிராசா முறைத்துப் பார்த்த வண்ணம் மேசையிலிருந்து எழுந்தான். ஒலிபரப்பியில் 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்கின்ற பாரதியின் பாட்டு போய்க் கொண்டு இருந்தது.

'புரட்சி செய்யாவிட்டாலும் மனிதாபிமானத்தோடு இருக்கலாம்' என்று எண்ணிய தவலிங்கத்திற்கு சிவறூபன் மேல் கடுங்கோபம் வந்தது. அதற்கு என்ன செய்யலாம் என்று விளங்கவில்லை. ஆனால் தனது உரிமையை விட்டுக் கொடுத்து, தப்பிக்க முயன்ற தம்பிராசாவை உக்கிரமாகப் பார்த்து, 'எதுக்கு நீங்கள் இப்ப எழும்புகிறியள், அவருக்கு இதில இருக்கப் பிரச்சினை எண்டா அவர் எழும்பிப் போகட்டும், நீங்கள் ஏன் பயந்து ஓடவேணும்? அவனவன் பிரச்சினைக்கு அவனவன்தான் போராடோணும். மற்றவை போராட முடியாது' என்றான். தம்பிராசாவிற்கு தவலிங்கம் கூறியது சரியாகப் பட்டதோடு, தனது உரிமைக்கு தானே போராட வேண்டும் என்பதும் விளங்கியது. அவன் தனது இருப்பிடத்தில் மீண்டும் இருந்து கொண்டான்.

'நான் அவரை யார் எண்டு தானே கேட்டன். எழும்பி ஓடச் சொன்னனா?' என்று சிவறூபன் அவமானத்தோடு வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

'கேட்கக் கூடாததை கேட்காமல் இருப்பதும் அறம். அறிஞ்சு கொள்ளும்' என்றான் தவலிங்கம்.

மணமகள் மேடைக்கு வந்ததால் எல்லோரது கவனமும் அங்கே திரும்பியது.

- இ.தியாகலிங்கம், நோர்வே

Pin It