dog சாலையில் ஆட்களின் நடமாட்டம் நின்று போயிருந்தது. அவன் மட்டும் தனியாக நடந்துகொண்டிருந்தான். பத்துப்பதினோரு மணிக்கு வீடுதிரும்புவது என்பது அவனுக்கு இப்போது சகஜமாகிவிட்டது. அவனுடைய குடியிருப்பு நகரத்திலிருந்து விலகியிருந்தது. இரண்டு கிலோமீட்டருக்கும் மேலே இருக்கும். இடையில் தெருவிளக்குகள் இல்லாததால் அது முற்றாகத் துண்டிக்கப்பட்ட பிரதேசம் போன்று தோற்றம் தந்தது.

இன்று வானத்தில் நிலவு இல்லை. நட்சத்திரங்கள் மட்டும் மினுமினுத்துக்கொண்டிருந்தன. இதுபோன்று எப்போதாவதுதான் வானம் அவனுக்குப் பார்க்கக்கிடைக்கிறது. அப்படியே கிடைத்தாலும் அது பிரக்ஞைக்குள் வந்து படர்வது அரிதாகிவிட்டது. அவன் அம்மாவைப் பற்றிய நினைவுகூட அப்படித்தான். இரண்டு மூன்று நாட்கள்கூட அவளைப் பற்றிய யோசனைகள் இல்லாமல் இருக்க நேரிடுகிறது. வேறு ஏதேதோ வேலைகள், உறவுகள். இவ்வளவு இருந்தும் சமீப காலங்களில் ஜனசஞ்சாரத்திலிருந்து விலகி விலகி எங்கோ தனியாகப் பிரயாணப் பட்டுக்கொண்டிருப்பதான ஒரு உணர்வு ஏற்படுகிறது. இது தன்னை எங்கே கொண்டு சேர்க்குமோ என்று அச்சப்பட்டான்.

அவனுடைய சினேகிதி சொல்கிறாள்,

“உங்களைத் திரும்பவும் சந்திக்காமலேயே போய்விட்டால் என்ன ஆவேன்? பயமாக இருக்கிறது... எதையும் நம்பமுடியவில்லை.’’

அவனுக்கும்தான், அவள் கிடைப்பாள் என்பதை, இப்போது கிடைத்திருப்பதை. காலம் எப்போது வேண்டுமானாலும் அற்புதங்களைப் பிடுங்கிக்கொண்டு போய்விடலாம். இதுதான் எல்லோரையும் கலங்கச்செய்கிறது போலும்.

அவளைப் பற்றிய எண்ணங்களுடன் துக்கமும் ஏன் உடன் சேர்ந்து வர வேண்டும்? பிரகாசிக்கும் கண்களுடன் தோன்றிய அவள் முகம் படர்ந்த நினைவுகள், நீரைப் போல அலைவுற்றபடி வருகையில் அவனுக்கு முன்னே நாய்க்குட்டி ஒன்று போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். எதிர்பாராமல் அது எங்கோ ஓரமாக இருந்து சாலைக்கு வந்ததில் ஒரு கணம் அவன் உடல் திடுக்கிட்டு அடங்கியது. சாதாரண நாய்க்குட்டிதான். கறுத்¢த நிறம். வேறு அடர்ந்த நிறமாகக்கூட இருக்கலாம். இந்த தாட்சண்யமற்ற இருளில் எதைத்தான் சரியாகப் பார்க்க முடிகிறது?

எந்தத் துணையுமில்லாமால் இந்த நேரத்தில் எங்கே போய்க்கொண்டிருக்கிறது நாய்க்குட்டி? பகல் பொழுதென்றால் யாரும் இதைக் கவனிக்கப்போவதில்லை; எதிர்ப்படும் எவ்வளவோ நாய்களைப்போல என இருந்திருப்பான். ஆனால் இதுவோ அவனுக்காகவே காத்திருந்து, வம்புக்கு வந்ததுபோல வந்திருக்கிறது.

அவன் கேட்டான்,

“நாய்க்குட்டியே, நீ யாருக்காகக் காத்திருந்தாய், எனக்காகவா?’’

அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல், அது சாலையே தானென்று போய்க்கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் வெறுமனே நடப்பது? ஏதாவது பேச வேண்டியதுதானே? அவனிடம் பேச அதற்கு விருப்பமில்லை போலத் தெரிந்தது. ஆமாம், மனிதர்களிடம் பேச அதற்கு என்ன இருக்கிறது?

அவன் கேட்டான்,

“நாய்க்குட்டியே! உன் புகலிடம் எங்கே இருக்கிறது? அங்குதான் பிரயாணமா, வேறு எங்காவதா?”

அது அவனுடைய கேள்விகளைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அச்சமூட்டும் இந்த இரவில் சாலையில் தனியாக... அவனுக்கு தாஸ்தாவஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ கதாநாயகன் ஞாபகத்தில் வந்தான். ஒரு வேளை இந்த நாய்க்குட்டியும் காதலைத் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறதோ என்னவோ. திரும்பவும் பேச்சுக் கொடுத்துப்பார்த்தான்.

“உணவை முடித்துக்கொண்டாயா? எங்கே உறங்கப்போகிறாய்?’’

ஒரு பதிலும் இல்லை. அவனது துணையை நிராகரிக்கத்தான் இந்த மௌனம் காட்டுகிறதாக இருக்கும். இல்லை மனிதர்களைப்போல அசட்டுத்தனமாக ஏதாவது வைராக்கியமா, பேசுவதில்லை என்று? அவன் கேட்டான்,

“நீ எங்கிருந்து வருகிறாய்? உனது பூர்வீகம் எது? அந்நிய தேசமா? கடல்கடந்து வருகிறாயா? ஒரு வேளை வேற்றுக்கிரக வாசியா நீ?’’

அவன் மகன் பிறந்ததும் இப்படித்தான் நினைக்கத் தோன்றியது, வேற்றுக்கிரக வாசிபோல; ஒரு பயணியாக அவன் இந்த பூமிக்கு வந்திருக்கிறவன்போல. சாலையில் நாய்க்குட்டியைக் காணவில்லை. எங்கே போய்விட்டது? கூப்பிட்டுப் பார்க்கலாமா என்று நினைத்தான். என்னவென்று கூப்பிடுவது? பெயர் தெரியவில்லை. இது பெயர் இடப்படாத நாய்க்குட்டியாக இருக்கலாம். சுதந்திரவான்களுக்குப் பெயர் தேவையில்லை. மனிதர்களுக்குத்தான் பெயர் அவசியம்; அடிமை கொள்வதற்கும் அடிமையாவதற்கும். அது கெடாவா பெட்டையா என்றுகூடத் தெரியவில்லை. பெட்டை என்றால் சிரமம்தான். கறுப்பாகவேறு தெரிகிறது. மனித ஆதரவின்றி தெருவிலேயே வாழ்ந்து தெருவிலேயே மடிய வேண்டியதுதான். இதற்காக ஒன்றும் அது வருந்தப்போவதில்லை. வெட்டவெளிதான் இவைகளுக்கு வாழ்விடம். மனிதர்களுக்குதான் பாதுகாப்பான கூடு தேவை. அலங்காரமான கூடாக இருந்தால் இன்னும் அவனுக்கு சந்தோசம்.

திரும்பவும் அது சாலையில் தோன்றியது. இருளானது, தாய் தன் குட்டியோடு விளையாடுவது போல இந்த நாய்க்குட்டியோடு விளையாடுவதாக அவனுக்குத் தோன்றியது; கவ்வியிழுப்பதும் தப்பவிடுவதுமாக. அவன் சொன்னான்,

“வந்துவிட்டாயா ரொம்ப மகிழ்ச்சி. எங்கே போயிருந்தாய்? திரும்பவும் வரமாட்டாயோ என்று நினைத்தேன்.’’

இப்போதும் கூட அது அவனைப் பொருட்படுத்தவில்லை. மனிதனின் ஆதரவை ஏன் இப்படி நிராகரிக்க வேண்டும்? ஏன் வினோதமாக நடந்துகொள்கிறது? ஒரு வேளை பிசாசோ! பிசாசுகள்தான் நாயுருவில் தோன்றுமென்று சொல்வார்கள். பகலில் இவ்வழியாக நடந்துபோன ஒரு நாய்க்குட்டியின் நிழல்தான் இப்படிப் பின்தங்கிவிட்டதாகவும் அவனுக்குத் தோன்றியது. இந்தநிழல் தனிமைப் பட்டதாக, துக்கம் நிறைந்ததாக இருக்கிறது.

“ஆமாம், எல்லோரும் என்னைக் கடந்து சடுதியாகப் போய்க்கொண்டிருக்கையில் நான் மட்டும் பின்தங்கிப் போனேன்’’ என்றாள் ஒரு நாள் அவன் சினேகிதி. “எனக்காக நீங்கள் தாமதம் காட்டுவது ஆறுதலாக இருக்கிறது. யாராவது உங்களைச் சங்கடப்படுத்தி உடன் கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சமும் தோன்றுகிறது. என்னை விட்டு அவர்களுடன் செல்லும் நீங்கள் திரும்பிப் பார்க்கும் வேளை என் தனிமை மேலும் வலிமிக்கதாகும் இல்லையா?’’

தனிமை!

“நாய்க்குட்டியே! இந்த வலியும், துன்பமும் எங்களுக்கு மட்டும்தானா? இது உன்னைத் துன்புறுத்தவில்லையா?’’

“இந்தத் தோட்டத்தில் தனியே கிடந்து ஏன் கஷ்டப்பட வேண்டும். என்னுடனேயே நகரத்திற்கு வந்துவிடுங்கள்’’ என்று சொன்னபோது அவன் அம்மா சொன்னாள், “எனக்கு இது ஒன்றும் புதுசில்லையே, நான் இங்கேயே இருந்து விடுகிறேன், எனக்குப் பழகிப்போய்விட்டது.’’

ஆமாம், இந்த நாய்குட்டிகூட தனிமைக்குப் பழகி விட்டிருக்கலாம் இந்த நகரத்திற்கு; நான் பழகிக்கொண்டது போல. எத்தனை விதமான யோசனைகளில் கிடந்து அல்லாடுகிறேன்! ஆனால் இதுவோ கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டிருக்கிறது. வைராக்கியம் மிக்கதான மௌனம். யாருக்குத் தெரிகிறது, இந்த மௌனமே இதன் கண்டுகொள்ளும் முறையாகக்கூட இருக்கலாம்.
அவன் கேட்டான்,

“உன்னுடைய தாய் எங்கே இருக்கிறாள்? உன்னைத் தனியாக்கிவிட்டு எங்கே போயிருக்கிறாள்? என்னைப்போல நீதான் அவளை விட்டு வந்திருக்கிறாயா?’’

“இந்நேரத்தில் தோட்டத்தில் உள்ள எங்களது வீட்டில் திண்ணையில் வானத்தைப் பார்த்தபடி அவள் படுத்திருப்பாள்; உறங்கிப்போயிருக்கலாம்; சுவரில் சாய்ந்து உட்கார்ந்து, இருளில் அசையும் தென்னை மரங்களை வெறித்தபடி இருக்கலாம். அழுதுகொண்டிருக்கக்கூடும். எத்தனையோ இரவுகளில் தனிமையில் அவள் அழுவதைப் பார்த்திருக்கிறேன். எதற்காக அழுகிறாள்? யாருக்குத் தெரியும், எவ்வளவோ காரணங்கள். தனது வாழ்நாளில் இழந்தவற்றையும், அடைந்தவற்றையும் அவள் மனம் கணக்கிட்டுக்கொண்டே இருக்கும் போல.’’

“நீ எப்போதாவது அழுதிருக்கிறாயா? சென்டிமென்ட் டெல்லாம் உண்டா உனக்கு? ஓரு வேளை போஸ்ட் மார்டனிஸ்டா நீ?’’

அவன் தலைக்கு மேலே காற்றை உலுக்கியபடி ஒரு வௌவால் விருட்டென்று பறந்து மறைந்தது. அண்ணாந்து பார்த்துத் துழாவினான். எதுவும் தென்படவில்லை. வான்வெளி இன்னும் வசீகரமாகத் தெரிந்தது.

“என்னுடைய கேள்விகளும் பதில்களும் உனக்குப் புரிகிறதா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கோ உன்னுடன் பேசிக்கொண்டு வருவது ஆறுதலாக இருக்கிறது. நான் சொல்லுவதையெல்லாம் கேட்டுவிட்டுப் புத்திபுகட்டமாட்டாய் என்ற தைரியமாகக்கூட இருக்கலாம்.’’

குடியிருப்பின் விளக்குகள் சமீபித்துக் கொண்டிருந்தன. நாய்க்குட்டியைத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான். ஏர் போல அது அவன் மனதை உழுதுகொண்டே முன்செல்கிறது.
அவன் சொன்னான்,

“நமக்கு மேலே கவிழ்ந்திருக்கும் இந்த வானம், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருள், இந்தச் சாலை, எதேச்சையான இந்தக் கணம், நாம் இருவரும் ஏதோ ஒரு நிச்சயமற்ற புள்ளியில் சந்தித்துக்கொள்கிறோம்; அதே நேரத்தில் விலகியும் இருக்கிறோம். ஏதோ ஒரு உணர்வு நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது; ஒரு வேளை என் குற்ற உணர்வாக இருக்குமா அது, இல்லை மானுடத்தின் ஒட்டு மொத்தமான சீரழிவா?’’

நாய்க்குட்டியைக் காணவில்லை.

‘திரும்பவும் எங்கே போய் ஒளிந்துகொண்டுவிட்டது? ஏன் இப்படி என்னிடம் கண்ணாமூச்சி விளையாடுகிறது? ஒரு வேளை தோன்றி மறைவதுதான் அதன் குணாதிசயமோ; இருளுக்கும் ஒளிக்கும், நினைவுக்கும் மறதிக்கும், வார்த்தைக்கும் மௌனத்திற்கும் இடையே?’

மறைந்து போன நாய்க்குட்டி இக்கணத்தில் எங்கே இருக்கும் என்று அவனால் யூகிக்கவும் முடியவில்லை. வீடு வந்துவிட்டது. ஏதோ ஒரு அசாதாரண கணம் முடிவுக்கு வந்து விட்டதுபோல ஒரு பிரமை. ஒரு பிரகாசம் அணைந்து விட்டது போன்ற இருளின் அழுத்தம். திரும்பவும் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. கதவைத் தட்டி அவன் மனைவியைக் கூப்பிட்டான். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்க வேண்டும். நீண்ட அழைப்புக்குப் பின் கதவைத் திறந்தாள். அவன் வீட்டுக்குள் வந்ததும் தூக்க கலக்கத்திலேயே அவள் தெருவை எட்டிப்பார்த்து எதையோ தேடினாள்.

இந்த இருளில் எதைத் தேடுகிறாள்? கேட்டான், “என்னது?’’

“பொழுதெல்லாம் ஒரு நாய்க்குட்டி இங்கே சுத்திக்கிட்டிருந்தது, எங்க போச்சின்னு தெரியல, பாவம்’’ என்றாள் அவள்.

அவன் வியப்புடன் கேட்டான், “நாய்க்குட்டியா?’’

“ஆமாம் ஒரு கறுப்பு நாய்க்குட்டி’’ என்றாள் அவள்.

ஜீ.முருகன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It