deer அவன் எங்கோ வெறித்தபடி நின்றிருந்தபோது ஒரு நாய் ஒரு மானைத் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்தான். அந்த இடம் மேடும் பள்ளமும் ஓடையும் பின்னிய சமவெளியாக அவனுக்குத் தெரிந்தது. ஓடையை ஒட்டி இரு கரைகளிலும் வளர்ந்து அடர்ந்து கிடந்த மரங்களும் புதர்களும் வேலிபோல அச்சமவெளியைப் பிரித்துச் சென்றன. ஓடை அநேகமாகக் கடலில் சென்று சேரும் போல் தோன்றியது. ஆமாம். அதோ தெரிகிறதே மேடு, அதன் சரிவில் வெகு தொலைவில் ஒரு பிரம்மாண்டமான கடல் இருக்கிறது.

மேட்டில் ஏராளமான ஆட்கள் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவனுக்குச் சமீபத்தில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் உல்லாசமாகத் திரிகிறார்கள். இந்த இடம் திறந்தவெளி மிருகக்காட்சி சாலையே தவிர வேறில்லை. இதைக் காணத்தான் அவனும் வந்திருக்கிறான்.

சில மிருகங்களைக் கூண்டுகளில் அடைத்து வைத்துவிட்டுச் சில மிருகங்களை வெளியே உலாவ விட்டிருக்கிறார்கள். கூண்டுக்கருகில் அதிக நெரிசல் காணப்படுகிறது. அந்த மிருகங்களைக் காண முட்டி மோதுகிறார்கள். ஆபத்தான காட்டு மிருகங்கள் அவை. காட்டுமிருகங்கள்தான் என்றாலும் எப்போதாவது காட்டைப் பார்த்திருக்கின்றனவா - தெரியவில்லை. ஒரு வேளை அவற்றின் தாய் மிருகங்களோ, மூதாதையர்களோ காட்டில் வசித்திருக்கலாம்.

இதோ இந்த மான் போன்ற சாதுவான பிராணிகள் திறந்தவெளியில் திரிகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித்தான் நாய் மானைத் துரத்திக்கொண்டு வந்திருக்கிறது. சுற்றி வளைத்து விட்டது. மானின் முகத்தருகே உறுமி, தனது விரோதத்தைத் திறந்த பற்களின் மூலம் உணர்த்துகிறது. மானோ அச்சமுற்று திகைத்து நிற்கிறது. அது ஓடையை ஒட்டிய சரிவு. இரண்டு பக்கமும் வேலி போட்டதுபோல் புதர். ஒரு பக்கம் நாய், இன்னொரு பக்கம் இவன். இப்படித்தான் அந்த மான் இவனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவன் மகிழ்ச்சியுற்றான். எதிர்பாராமல் ஒரு அற்புத அன்பளிப்பு அவனுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த நாய்க்கு மான் தேவைப்படவில்லை. விரட்டிக்கொண்டு வந்தது அவ்வளவுதான்; ஏதோ ஒரு தினவு, நாயாக பிறந்துவிட்டதன் குணசேஷ்டை.

மான் நல்ல வளர்ச்சியுடன் இருந்தது. கொம்புகள்கூட நேர்த்தியாக இருந்தன. கொம்புகளுடன் உள்ள மான்களைக் காணும்போது, பொருத்தமில்லாத எதையோ தலையில் சுமந்தபடி திரிகிறதே எனத் தோன்றும் அவனுக்கு.

மான் கறி சாப்பிட்டு அவனுக்கு வெகு நாட்களாகி விட்டது. எப்போது கடைசியாகச் சாப்பிட்டோம் என்பதுகூட மறந்து போய் விட்டது. இப்போதெல்லாம் மான்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதில்லை. வேட்டைக்காரர்களுக்குப் புலப்படாமல் காட்டில் வெகு தொலைவுக்குப் போய்விட்டன அவை. அவனுக்கு அருகில் ஆட்கள் யாரும் தென்படவில்லை. எல்லோரும் தொலைவில் இருக்கிறார்கள். பக்கத்தில் போனதும் நாயும் பின்வாங்கிவிட்டது. இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுபோல மான் அவனிடத்தில் பணிந்து நின்றதைக் கண்டான். தன்னைச் சீண்டும் உல்லாசிகளுடனும், நாயுடனும் போராடிக் களைத்ததுபோலக் காணப்பட்டது.

அவன் மானின் அருகே போய் முதுகின் மேல் தட்டி உரிமையுடன் அதட்டினான். அது அவனுடன் ஓடையை நோக்கிச் சென்றது. இருவரும் பள்ளத்தில் இறங்கினார்கள். ஓடையில் நீர்வரத்து நின்று, வெறும் மணல் பாட்டை மட்டும் ரகசியமாகப் புதருக்குள் நீண்டு படுத்திருக்கிறது. இந்த ஓடை அதோ தெரிகிறதே காடு, அதற்குள்ளிருந்துதான் வெளிப்பட்டு இச்சமவெளிக்கு வருகிறது. காடுகளிலிருந்து ஒவ்வொன்றாக வெளியேறிக் கொண்டிருக்க இந்த ஓடை மட்டும் தனது வேர்களைக் காட்டுக்குள் எப்போதும் புதைத்தே வைத்திருக்கிறது.

அகலமான இலைகள் கொண்ட சில செடிகளை வெட்டி மணலின் மேல் பரப்பி மானை அதன் மேல் நிற்க வைத்தான். அதிசயிக்கத்தக்க ஒரு பணிதலுடன் அது நின்றது. துக்கத்தில் உறைந்திருந்தது அதன் கண்கள். அதன் குரல்வளையை அறுத்தபோதும், மினுமினுப்பான அதன் வயிற்றைப் பிளந்தபோதும் அது திமிறவில்லை, எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை.

கத்தியால் மானைச் சிறிய துண்டுகளாக்கினான். சிறிது நேரத்திற்கு முன் துள்ளி விளையாடிக்கொண்டிருந்த மான் இப்போது வெறும் மாமிசப்பிண்டங்களாகப் பகுக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டபோது மனம் சற்று வருந்தத்தான் செய்தது. ரத்தம் தோய்ந்த இலைகள் அங்கே கலைந்து கிடந்தன. புதர்களுக்கு மேலே காகங்கள் கூச்சலுடன் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. பக்கத்தில் துண்டை விரித்து அதன் மேல் பசும் இலைகளை அடுக்கினான். அப்போது புதருக்குள் தலையை விட்டுப் பார்த்துக்கொண்டிருந்த நாய் அவனைத் திடுக்கிட வைத்தது. மானை முதலில் துரத்திக்கொண்டு வந்த நாய்தான் அது. மாமிசத்தின் மீதான விருப்பமும், இயலாமையும் அதன் பார்வையில் தெரிந்தது. குடலை எடுத்து நாய் இருந்த திசையில் வீசி எறிந்தான். அவசரத்தில் ஒன்றுக்கும் உதவாதபடித் தோலைச் சிதைத்து விட்டிருந்தது கத்தி. மிச்சமிருந்தது கொம்பு ஒன்றுதான். இது போன்ற மான் கொம்புகளைத் தனது வீட்டில் நிறைய பார்த்திருக்கிறான். அவனுடைய அப்பா கொண்டுவந்து வைத்திருந்தார். அந்தக் கொம்புகளுக்கு மான் தலை செய்யச்சொல்லி குயவனுக்குச் சொல்லியிருந்தார். அவனோ செய்து கொடுக்காமல் கடைசிவரை ஏதேதோ சாக்கு சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தவன் ஒரு நாள் செத்தே போனான். ஒரு வேளை மான்தலை செய்ய அவனுக்குத் தெரியவில்லையோ என்னவோ. இறுதிவரை தங்களுக்கு ஒரு தலை கிடைக்காத அந்த மான் கொம்புகள் நீண்ட நாட்கள் பரணிலேயே கிடந்து காணாமல் போயின.

கொம்பைக் கொண்டுபோனால் நிச்சயம் அது நம்மைக் காட்டிக்கொடுத்துவிடும் என்று யோசித்தவன் அதைப் புதருக்குள் வீசியெறிந்தான். மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஓடையை விட்டு மேலே வந்தான். செருப்புக்குள் ஒட்டியிருந்த மாமிசத்துண்டு கால்களில் நசுங்கிப் பிசுபிசுத்தது. சங்கடத்துடன் செருப்பைக் கழட்டித் துடைத்து மாட்டிக்கொண்டான். ஒருவரும் அவனைக் கவனிக்கவில்லை, சந்தேகம் கொள்ளவில்லை.

வயல் வரப்பு வழியே அவன் வந்து கொண்டிருந்தான். மூட்டை அதிகம் கனத்தது. தோள்பட்டையெல்லாம் வலி. இரண்டு பக்கங்களிலும் மாற்றி மாற்றிச் சுமந்து வந்தான். மூட்டையில் ஆங்காங்கே ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. வீட்டிற்குக் கொண்டு போய்விட்டால் பிரச்சினை இல்லை. இன்னும் அவனுடைய வீடு வெகு தொலைவில் இருக்கிறது. அங்குபோய் சேர்வதற்குள் துண்டு முழுவதும் நனைந்துவிடும்.

ஏதோ ஒரு உணர்வில் பின்னால் திரும்பிப்பார்த்தான். தொலைவில் கூட்டமாக ஆட்கள் தென்பட்டார்கள். அவர்கள் இவன் வந்த பாதையில்தான் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள், ஆமாம், அவர்களுக்குத் தெரிந்துவிட்டிருக்கிறது. எதுவோ காட்டிக்கொடுத்திருக்கிறது. பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்குச் சமீபத்தில் இருந்தது சின்னத்தம்பி கவுண்டனுடைய வீடுதான். அங்குதான் போக வேண்டும். எப்போதும் இதுபோல் குற்றம் புரிந்ததில்லை. அவனுக்கு இதெல்லாம் பழக்கமில்லை. ஏதோ ஒரு உந்துதலில், ஆர்வத்தில் செய்துவிட்டான்.

வீட்டுக்கு முன்னால் இருந்த களத்தில் ஆட்கள் யாரும் தென்படவில்லை. தொலைவில் எங்கோ வேலை செய்து கொண்டிருப்பார்கள்; இல்லையெனில் அருகிலிருக்கும் காட்டுக்குப் போயிருக்க வேண்டும். வரப்பிலிருந்து களத்தில் இறங்கித் துரிதமாக நடந்து வீட்டுக்குள் புகுந்தான். கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. இரண்டு திண்ணைகளும் மூங்கில் தட்டியால் மறைக்கப்பட்டிருந்தன. வலது பக்கத் திண்ணையில் உரலும், உரலுக்குப் பின்னால் கூடைகளும், மண்வெட்டிகளும் கிடந்தன. திண்ணையின் மேல் ஏறி ஒரு கூடையை எடுத்து அதற்குக் கீழே மூட்டையை வைத்துக் கவிழ்த்து மூடினான். அதன் மேல் மண்வெட்டி ஒன்றை வைத்தான். கீழே இறங்கி வந்து வெளியே எட்டிப்பார்த்தான். ஆட்கள் இன்னும் வந்துகொண்டே இருந்தார்கள். ஆனால் அவன் இங்கே ஒளிந்துகொண்டதை யாரும் பார்த்திருக்க முடியாது. அவர்கள் யாராக இருக்குமென்று அவனால் சரியாக யூகிக்க முடியவில்லை. மிருகக்காட்சிசாலை பாதுகாவலர்களா? வனத்துறையினரா? வரிசையான அந்தக் கூட்டத்தைப் பார்த்தால் அது மலைவாசிகள் போலவும் இருந்தது. நிச்சயம் இவனைத் தேடித்தான் அவர்கள் வருகிறார்கள். இந்த மானுக்கு உரியவர்களாக இருக்கலாம். மான் யாருக்குச் சொந்தமானதாக இருக்கும்? மான் கறியில் அவர்களுக்குப் பங்கு தர வேண்டியிருக்குமோ, என்று சந்தேகம் எழுந்தது.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனான். வீட்டில் ஒருவரும் இல்லை. கதவை லேசாக மூடிவிட்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான். கையில் ரத்தம் பிசுபிசுத்தது. அவனுடைய வேட்டி சட்டையிலும்கூட சில இடங்களில் ரத்தம் படிந்திருந்தது. இன்னும் நன்றாக மூடித் தாழ் போட்டான். திரும்பவும் உட்கார்ந்தான். ஆட்கள் பேசும் சத்தம் தொலைவில் கேட்டது. அது இன்னும் நெருங்கி வந்துகொண்டிருந்தது. தன்னைப் பிடிக்கமுடியாது என்று தெரிந்தும்கூட பயம் அவனை விட்டு அகலவில்லை. அவர்களிடம் அகப்பட்டுக்கொண்டிருந்தால் எவ்வளவு அவமானம்? சின்னத்தம்பி கவுண்டனோ அவன் வீட்டில் வேறு யாராவது இப்போது வந்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை. கவுண்டன் மட்டும் யோக்கியனில்லை. திருடிவிட்டு எத்தனையோமுறை பஞ்சாயத்தில் கைகட்டி நின்றிருக்கிறான். இவர்களுடைய தோப்பிலேயே ஒருமுறை தேங்காய் திருடிவிட்டு அகப்பட்டுக் கொண்டவன்தான். அவனைப் பிடித்துவந்து மரத்தில் கட்டித் தென்னம்பட்டையால் விளாசினார் இவனுடைய மாமா. அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் குறைக்கச் சொல்லி அவன் ஊராரின் காலில் விழுந்து கெஞ்சியது இவனுக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

வீட்டுக்குள் ஏதோ நாற்றம்? என்ன நாற்றம் என்பது புரியவில்லை. சுற்றிலும் பார்த்தான். மேலே கூரையில் தையல் இலைகளைக் கோர்த்துத் தொங்கவிட்டிருந்தனர். இன்னொரு இடத்தில் மாட்டின் கழுத்துமணிகள், நெற்றிக் கயிறுகள், அதற்குப் பக்கத்தில் கருத்த நிறத்திலான மாமிசத்துண்டுகள் ஒரு நூலில் கோர்க்கப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தன. உப்புக்கண்டத் தோரணம். என்ன கறி என்று தெரியவில்லை. மான் கறியாகக்கூட இருக்கலாம், சின்னதம்பி கவுண்டனும் வேட்டைக்காரன்தான். தின்றது போக மீதியை இங்கே தோரணமாகத் தொங்கவிட்டு வைத்திருக்கிறான் போல. கூரைக்குக் கீழே பரண் ஒன்று இருந்தது. பெரிய பரண். அதில் ஏழெட்டு வாக்கூடைகள் ஒன்றாக கட்டிப் போடப்பட்டிருந்தன. இன்னும் என்னென்னவோ சாமான்கள். எல்லாம் திருட்டுப் பொருட்களாகத்தான் இருக்க வேண்டும். உள்ளே தேடினால் இவர்களுடைய பொருட்கள்கூடக் கிடைக்கலாம். பரணில் அவைகளுக்கு மத்தியில் நிறைய மான் கொம்புகள் தென்பட்டன.

இப்போது ஆட்களின் சத்தம் கேட்கவில்லை. அவர்கள் இந்த இடத்தைக் கடந்து போய்விட்டிருந்தார்கள். இதற்கு மேல் ஒன்றும் பயமில்லை. தப்பித்துவிட்டோம் என்பது உறுதியாகிவிட்டது அவனுக்கு.

மறுநாளாகத்தான் இருக்க வேண்டும், அவன் தன்னுடைய வயலில் நின்றிருந்தபோது தொலைவில் சின்னதம்பி கவுண்டன் தெரிந்தான். வரப்பில் இவனைப் பார்த்துத்தான் வந்து கொண்டிருந்தான். எதற்காக இங்கே வருகிறான் என்பது தெரியவில்லை; பயம் அடிவயிற்றில் இறங்கியது.

கவுண்டன் எப்போதும் போல உற்சாகத்துடன் காணப்பட்டான். குற்றத்தின் நிழல் இன்னும் மறையவில்லை; பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அருகே நெருங்கி வருகிறான். அவன் முகத்தில் தெரிந்த சிரிப்பு, தேகத்தின் ஒவ்வொரு அணுவிலும் அவமானத்தின் ஊசியைப் பாய்ச்சுகிறது.

அருகில் வந்ததும் கேட்டான், “சுப்பிரமணி, நாளைக்கு நடுகுப்பம் காட்டுக்கு வேட்டைக்கு போறோம் வர்றியா? அங்கே மானுங்க தென்படுதாம்.’’

“இல்லை, நான் வரலை’’ என்றான் இவன்.

“ஏன் உனக்கு மான் கறி ஒத்துக்காதோ?“

“வேலையிருக்கு.’’

“வேலையா? பொண்டாட்டிதான் ஊரிலே இல்லையே, இராத்திரியில போயி என்ன வேல பாக்க போற. ஆத்துத் தெரு ஆட்களெல்லாம் வர்றேன்னு சொல்லியிருக்காங்க’’

“பருத்திக்கு தண்ணி மாறணும், பத்து நிமிசத்தில வடிஞ்சு போகுது, நிறுத்தி நிறுத்தி விடணும். சப்ளை வேற சரியா வரலை...’’

“சரி உனக்கு இஷ்டமில்லை. நேத்துகூட எங்க ஊட்ல மான் கறி’’ இரண்டு கையையும் சேர்த்துச் சொன்னான். “இவ்வளவு மான் கறி, யாரோ ஒரு புண்ணியவான் துண்டுல கட்டி கொண்டுவந்து போட்டுவிட்டு போயிருந்தான்.’’

திரும்பிப் போகையில்தான் அவனுடைய கால்களைக் கவனித்தான். இவனுடைய செருப்பை அவன் போட்டிருந்தான். அவசரத்தில் செருப்பை அவன் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது இப்போதுதான் ஞாபகத்தில் வந்தது.

ஜீ.முருகன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It