அவருக்கு பயங்கரமாக கோபம் வரும். நாம் விழுந்து விழுந்து சிரித்து தொலைப்போம். பிறகு கூட சேர்ந்து அவரும் சிரித்து வெடிப்பார். இந்த முற்போக்கு முழங்கால் வலி தான்... இன்றைய பேசுபொருளான நமது 34ம் புளிகேசி.

அவர் யாரென்று அவ்வப்போது அவரே சொல்வார். அல்லது சொப்பு வைத்து விளையாடும் சிறுமிகளிடம் கேட்டுப் பாருங்கள் என்று குட்டிக் கண்களை உருட்டுவார். நாம் சிரிக்காமல் கேட்க வேண்டும். அல்லது சீரியஸாக கேட்பது போல நடிக்க வேண்டும். அவர் ஒரு அதிசய அனுமானி. இருந்த இடத்தில் இருந்தே யார் யார் எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர். ஆனால் டீ கூட யாராவது ஆத்தி கொடுத்தால் தான் உறிஞ்சு உறிஞ்சு குடிப்பார். மேகிக்கு சின்ன புள்ளைகளிடம் மல்லுக்கு நிற்கும் மறப்போர் மகராசி அல்லது மகராஜா. ரெண்டுக்கும் பொருந்துவார்.

ஆய்ந்து அறியும் துளி அறிவும் இல்லாத ஆனால் ஆகாயம் காலடியில் என்று பேசும் அபூர்வ அக்கப்போர். வீட்டுக்கு அடங்காத வியாக்யானம் வெளியே செல்லுபடியாகாது. சொல்லும் படி சொல்ல ஆள் இல்லாததால் அவர் ஒரு மொண்ணை அரிவாளாக இருக்கிறார். அரிவாள் கூட ஒரு எதுகை மோனைக்கு தான். இது எருமை கனவில் யானை ஓட்டும் பவுசு. சிறுபிள்ளை வெள்ளாமை மட்டுமல்ல... கிறுக்கு பிள்ளை வெள்ளாமையும் வீடு வந்து சேராது... உதாரணம்...இந்த ராசாகண்ணு பாணபத்திர முனியாண்டியாள் தான்.

கீழே இருப்பவர்களை அதாவது இளைத்தவர்களை அடி மிதித்து விடுவேன் என்று உதார் விடுவார். அவர் சொல்வது தான். உறுதியான செய்திகள் இல்லை. பொதுவாகவே மாற்றி மாற்றி பேசும் மடை திறந்த மறதி கொத்து அவர். பொய்யை பொய் என்று தெரியாமல் பேசலாம் என்று உண்மையாக கத்துபவர். சொகுசு பேர்வழி. ஆனால் சுள்ளென்று வெடிக்கும் பொட்டு பட்டாசு. மலை மேல் ஏற்றுவதாக சில கிழங்கள் விதைத்த கிழங்கு இப்போது அவரின் குரலாக ஒலிக்கிறது. சகிக்கவில்லை.

அவருக்கு நேரம் காலம் கிடையாது. நாள் கிழமை வெறுப்பார். தூங்கி எழுவதும் எழுந்து தூங்குவதும் அவர் உடன்போக்கு. யாரையும் நம்ப மாட்டார். உன்னிடம் மட்டும் தான் இந்த ரகசியம் என்று ஊருக்கே சொல்லி விடுவார். மினுக்கிக் கொண்டே வாழ்ந்து விடலாம் என்பது அவர் வாக்கு. சோத்துக்கு பிச்சை எடுக்க வேண்டும் என்பது அவருக்கு சோக்கு.

விமர்சனம் யார் வைத்தாலும் மூஞ்சை தூக்கிக் கொண்டு ஒரு முட்டாளாகி விடுவார். அப்படியே நவீன கண்ணாயிரகி ஆகி அறம் பேசுவார். அவன் கிடக்கறான்... அவனுக்கு என்ன தெரியும் என்று ஒருமையில் யாரை பற்றி பேசுகிறாரே அவரிடம் தான் முன்பொரு முறை தஞ்சம் அடைந்திருப்பார். நன்றி உணர்வு சிறிதுமற்ற ஜிலேபி சிந்தனையார். எது அன்பு எது வம்பு என்று தெரியாத உரை வேக்காடு. யாரைப் பற்றியும் புறம் பேசாமல் இருக்க முடியாது. பிறகு அவரிடமே சென்று... கூட நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வினோத வெட்டி முறிப்பாளர்.

வார கணக்கில் குளிக்க மாட்டார். கேட்டால் ஆர்ட்டிஸ்ட் மைண்ட் என்று பிதற்றுவார். வெளியே போகும் போது றென்றரை இஞ்சுக்கு பெயிண்ட் அடித்துக் கொள்வார். நான் ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆயிரம் கால பபூன் சிந்தாமணி என்று சொல்லி கன்னம் கிழிய சிரிப்பார். ஆனால் ராத்திரியில் முகநூலில் மேய்ந்து திரிவது ஹி ஹி அவரது சிரம ரகசியம். மானம் கீனம் ரோஷம் பாசம் எந்த புண்ணாக்கும் இல்லாத புத்திமான். இன்றைய நாளை நமக்கு இப்படி தந்து விட்டு துறவு பூண்டு செல்லும் செல்லேலூயா...தீர்க்கதரிசி.

பாவம் அவர் தூங்கும் போது ஆழ்மனதில் யாரோ சொல்லியிருக்கிறார்கள்.. நீ தான் இலக்கிய பாதுகாவல் என்று. மல்லாக்க விழுந்த கரப்பானாக கிறுகிறுக்கிறது அவர் வாழ்வு.

இத்தனை நேரம் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து மைக்கில் கத்தி விட்டேன். அய்யயோ மன்மத நஞ்சு பக்கம் வருகிறது. நான் மருவை ஒட்டிக் கொண்டு மாறு வேஷம் பூண்டு விட்டேன்.

நீங்க யுத்த ஸ்வாமிகள் தான.. நான் மூணே முக்கால் முக ராசி 34ம் புளிகேசி என்று அறிமுகம் செய்து கொண்டார். வேலை செய்யாத மருவை தடவியபடியே அசடு வழிய செய்வதறியாது பார்த்தேன்.

"மறந்துடீங்களா ஸ்வாமி... நாம டெல்லி கவிதை அரங்குல... மீட் பண்ணிருக்கோம்" என்றாரே....

நான் கண்கள் தெறித்து விழுவது போல பார்த்தேன். கூட இருந்த அமராம்பி அடிகள்....சிரித்துக் கொண்டே சொன்னார்.

"இலக்கியத்துல இதெல்லாம் சாதாரணமப்பா..." 

- யுத்தன்

Pin It