சுப்பிரமணியனும் என்னுடைய நண்பன்தான். பழனிக்குப் பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம். கோழிக்கோட்டிற்கு வந்து பிழைத்துக் கொண்டிருந்தான். செருப்புத் தைக்கும் தொழில்தான். ஏழை என்பதை சொல்ல வேண்டியதில்லை.

அவனை நான் பார்த்தது ஐந்தாறு மாதங்களுக்கு முன்புதான். ஒரு கண்பார்வைதான் அவனுக்கு. பிறவியிலிருந்தே மற்றொரு கண்ணுக்கு பார்வை இல்லையாம். எண்ணெய் பார்க்காத செம்பட்டைத் தலைமுடியும், எப்போதும் அணிந்திருக்கும் நைந்து கிழிந்த லுங்கியும், பொத்தல் சட்டையும் அலங்காரங்கள்.

சுத்தம் சுகாதாரத்தைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத ஆள் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து போகும். ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு ஞாயிற்றுக்கிழமை வருவான். செருப்பு ரிப்பேர் செய்ய வேண்டியிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என்னோடு கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போவான்.

பாலக்காட்டு கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது தெரிந்துவைத்திருந்த தமிழ் அறிவை உபயோகித்துப் பார்க்க எனக்குக்கிடைத்த சந்தர்ப்பங்கள் அவை. அவனுடைய குரல் கேட்டால் போதும். ஒரு கிளாஸ் காப்பியோடு எங்கள் வேலைக்காரி அடுப்படியிலிருந்து வந்துவிடுவாள். சுப்பிரமணியனுக்கு காப்பி கொடுப்பதற்காகவென்றே ஒரு கண்ணாடி தம்ளரை தனியாக வைத்திருக்கிறார்களென்றும், அதை வேறுயாரும் உபயோகிப்பதில்லையென்றும் எனக்கு நேற்றுதான் தெரியவந்தது. இன்று நான் அந்த கிளாஸில் தான் காப்பி குடித்தேன்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் காலை நேரத்தில் சுப்பிரமணியன் என்னுடைய வீட்டுக்கு வந்தான். சொந்த ஊருக்குப் போவதாகச் சொன்னான். மகன் தமிழ்ச்செல்வனுக்காக பாளையத்தில் வாங்கிய அல்வாப் பொட்டலம் கைப்பையில் இருந்தது. போகிறவழியில் பழனியில்தான் மனைவிக்கு சேலை வாங்கவேண்டுமாம். பழனியில் சேலை வாங்குவதற்கு பதினைந்து ரூபாய் போதுமாம். ஊரிலிருந்து திரும்பி வரும்போது எனக்கென்று ஏதாவது கொண்டுவர வேண்டுமாம். எனக்கு என்ன வேண்டுமென்று தெரிந்து கொண்டு போவதற்காக வந்திருப்பதாக சொன்னான்.

என்னால் உடனடியாக பதில் ஏதும் சொல்லமுடியவில்லை. ஒன்றும் வேண்டாமென்று பலமுறை கூறியும் சுப்பிரமணியன் என்னை விடுவதாக இல்லை.

"பழனி வழியாகத்தானே போகிறாய்? போகும்போது எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டால் அதுவே போதும்." நான் தட்டிக்கழிக்க முயன்றேன்.

இதைக் கேட்டதும் அவனுக்கு நான் ஒரு பழனி பக்தன் என்று தோன்றியிருக்க வேண்டும். "அப்படியென்றால் பஞ்சாமிர்தம் கொண்டு வரட்டுமா?" என்று பிடித்துக் கொண்டான். கடைசியில் பழனியிலிருந்து எனக்காக கொஞ்சம் விபூதி கொண்டு வருவது என்று எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது. சுப்பிரமணியன் மகிழ்ச்சியோடு அங்கிருந்து போனதும், "எப்போதிருந்து இந்த பக்தி முளைத்தது?" என்ற என் மனைவியின் குரல் உள்ளிருந்து கேட்டது.

அதேநாள் மாலையில் என்னுடைய நண்பன் ஜோசப், மனைவி மேரியோடு அவனுடைய புதிய ஃபியட் காரில் என்னைப் பார்க்க வந்தான். என்னுடைய மனைவி வாசல்வரை ஓடிப்போய் அவர்களை வரவேற்றாள்.

"அதிக நேரம் உட்கார முடியாது. நாளைக்கு நாங்கள் டெல்லிக்கு போகிறோம். இன்னும் 'பாக்கிங்'கூட ஆகவில்லை." வீட்டுக்குள் நுழையும் போதே மேரி புலம்பிக் கொண்டு வந்தாள். இவ்வளவு அவசரமாக வந்திருப்பதால் ஏதாவது முக்கிய காரியம் இருக்கும் என்று நான் நினைத்தேன். விசாரித்ததில் அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

"ஆகா, இந்த சேலை எவ்வளவு அழகாக இருக்கிறது! டெல்லியில் இதைப்போல் நிறைய வாங்கலாம் இல்லையா?" என்னுடைய மனைவி அவளுக்குப் பிடித்த விஷயத்தைப் பேசிக் கொண்டிருந்தாள். அதைக்கேட்ட உடனேயே மேரியின் முகம் மலர்ந்தது.

"இதொன்றும் அவ்வளவு விலையில்லை! டூ ஹண்ட்ரட் அண்ட் ஸம்திங்........அவ்வளவுதானே?" மேரி ஜோசப்பைக் கேட்டாள்.

"ம்ஹூம்........அது இருநூற்று நாற்ப்பத்தேழு ரூபாய்!" ஜோசப் எப்போதும் இப்படித்தான். இத்தனை பைசா என்றுகூட கணக்குப்பார்ப்பான்.

"இவளுடைய ஷாப்பிங்குக்காகத்தான் டெல்லிக்குப் போகிறோம். இங்கேதான் நல்ல 'திங்ஸ்' எல்லாம் கிடைக்க மாட்டேனென்கிறதே?"

'திங்ஸ்' வாங்குவதற்காக டெல்லிக்குப் போகும் அவர்களைப் பார்த்து மலைத்து நின்ற என்னைப் பார்த்து திடுக்கிடவைக்கும் கேள்வியை ஜோசப் கேட்டான்.

"மிஸ்டர் ராமகிருஷ்ணன்! நீங்களும் எங்களோடு வருகிறீர்களா? ஜாலியாகப் போய்விட்டு வரலாம்......என்ன மேரி?....இவர்களும் வந்தால் நல்லா இருக்கும் இல்லையா?"

"ஆமாம் ப்ளீஸ் சீதா! நீங்களும் எங்களோடு வாருங்கள்," மேரி என் மனைவியின் பக்கம் திரும்பி சொன்னாள்.

நான் நினைத்துக் கொண்டேன். 'இவர்கள் டெல்லிக்குப் புறப்பட இன்னும் இருபத்து நான்கு மணிநேரம்கூட இல்லை......இப்போது வந்து கூறுகிறார்கள். நேற்றும் அதற்கு முன் தினமுமெல்லாம் சந்தித்திருக்கிறோம். இன்றைக்கு இந்த நிமிஷம் வரை இப்படியொரு பேச்சு இல்லை. திடீரென்று புறப்பட எங்களால் முடியாது என்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும். எல்லாம் தெரிந்த இவர்கள், நாங்கள் இல்லாமல் தனியாகப் போகமுடியாது என்பதுபோல் பேசுகிறார்கள்! '

ஏதோவொரு சமாதானம் சொல்ல நான் திணறிக் கொண்டிருந்தபோது என்மனைவி குறுக்கிட்டாள்."ஓ, மேரி.....நாங்களும் உங்களோடு வரலாம்தான். ஆனால் எங்களுடைய நாயை எங்கே விட்டுவிட்டு வருவது என்பதுதான் ப்ராப்ளம்!"

எங்களுடைய நாயை அடுத்த வீட்டில் விட்டுவிட்டு வாரக்கணக்கில் வெளியூர் போயிருக்கிறோம். இருந்தாலும் சீதா இப்படிக்கூறிய சமாதானம் எனக்கு சரி என்று தோன்றியது.

ஜோசப்- மேரி தம்பதியின் முகத்தில் வருத்ததின் நிழலாடியது. நாங்கள் இல்லாமல் டெல்லிக்குப் போகவேண்டியிருப்பதை நினைத்து அவர்களுக்கு துக்கமான துக்கம்போலும். அவர்கள் புறப்படுவதற்காக எழுந்தபோது என்மனைவிக்கு 'பளிச்'சென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

"இதோ பார் மேரி! அங்கே 'நூதன் ஸ்டவ்' கிடைக்கும். டெல்லி ஸ்டவ் வாங்கவேண்டும் என்று எனக்கு ரொம்பநாளாக ஆசை. உங்களுக்கு ஒன்றும் சிரமமில்லையென்றால்....."

"சே....சே...! அதில் என்ன சிரமம்? ஒன்று போதுமா? போதாதென்றால் இரண்டாக வாங்கி வருகிறேன். இப்போதெல்லாம் 'காஸ்' தீர்ந்து போனால் மீண்டும் கிடைப்பதற்கு எத்தனை நாட்களாகின்றன!.......இரண்டே கொண்டுவந்து விடுகிறோம். நினைவுபடுத்தியதும் நல்லதாய்ப்போயிற்று. எங்களுக்கும் ஒன்று வாங்கவேண்டும்....." இப்படி ஜோசப் உறுதியாகச் சொன்னதால் என் மனைவி உள்ளே போய் நூறு ரூபாயோடு திரும்பி வந்தாள்.

"என்ன சீதா இது?.....இது எங்களையெல்லாம் 'இன்சல்ட்' செய்வது போல..." என்றெல்லாம் மேரி சொன்னாலும் பணத்தை வாங்கி கைப்பையில் வைத்துக்கொள்ள தவறவில்லை.

அவர்களை வழியனுப்பிவிட்டு வரும்போது இனம்புரியாத வேதனை. முகத்திலுள்ள தசைகளெல்லாம் வலித்துக் கொண்டிருந்தன. ஒரு வேளை ஒருமணிநேரத்திற்கும் அதிகமாக முகத்தில் சிரிப்பை வலிந்து வரவழைத்துக் கொண்டிருந்ததால் கூட இருக்கலாம்.

"அப்பாடா! இந்தமுறை 'காஸ்' தீர்ந்துபோனால் கவலைப்பட வேண்டாம். இரண்டு நூதன்ஸ்டவ் மட்டும் இருந்துவிட்டால் போதும்!" என்று சொல்லிக்கொண்டே மனைவி உள்ளே போய்விட்டாள்.

இரண்டு வாரங்கள் கழிந்திருக்கும். ஒருநாள் அதிகாலையில் சுப்பிரமணியன் வந்தான். பழைய லுங்கியும் சட்டையும்தான். பிரயாணத்தினால் இன்னும் கொஞ்சம் கசங்கியிருந்தன. கையில் சிறிய மூட்டை. நான் இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டேன்.

ஐந்தாறு எலுமிச்சம் பழங்களும், இரண்டு பாக்கெட் விபூதியும், அரைலிட்டர் அளவிற்கு நிலக்கடலையும். இவைதாம் என் நண்பனுடைய அன்பளிப்புகள். ஒரு ரூபாய்க்குக் குறைவான வருமானத்தோடு சில நாட்களையும், முழுப்பட்டினியாகச் சிலநாட்களையும் கழிக்கும் சுப்பிரமணியனுடைய அன்பளிப்பு. பழனியிலும் வீட்டிலும் நடந்த விஷேசங்களையெல்லாம் என்னிடம் சொன்னான். நான் எவ்வளவோ முயன்றும் கொடுக்க முயன்ற பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டான். தான் கொண்டுவந்த கடலையைக்கொண்டு எப்படிக்கறி செய்யலாம் என்று என்னுடைய மனைவிக்கு சொல்லிக் கொடுத்துவிட்டுத்தான் புறப்பட்டுப் போனான்.

அன்று சாயுங்காலம் நாங்கள் ஜோசப்-மேரி வீட்டிற்கு போனோம். அவர்கள் திரும்பிவந்து ஒரு வாரமாகிவிட்டது என்று கேள்விப்பட்டிருந்தோம். காத்திருந்து, காத்திருந்து என் மனைவி பொறுமை இழந்து விட்டிருந்தாள். 'காஸ்' தீர்ந்துபோகும் நிலையிலிருந்ததால் 'சரி அங்கேதான் போய்வருவோமே' என்று போயிருந்தோம்.

டெல்லியில் எல்லா 'திங்ஸ்'களைப்பற்றியும் அவைகளின் விலைகளைப்பற்றியும் வாய்சலிக்காமல் சொன்னார்கள். ஸ்டவ்வைப்பற்றி ஒன்றும் வாய் திறக்கவில்லை. டெல்லியில் வாங்கிய 'டங் கிளீனரை' பார்ப்பதற்காகவோ என்னவோ சீதாவும் மேரியும் உள்ளே போயிருந்தார்கள். அந்த நேரம் பார்த்து நான் 'ஸ்டவ்' விஷயத்தை எடுத்தேன். முதலில் ஜோசப் 'என்ன...ஏது' என்று புரியாமல் விழித்தான்.

"ஸ்டவ்வா?....எந்த ஸ்டவ்?....ஓ நூதன் ஸ்டவ்வா? வெரி ஸாரி! நாங்கள் அதை மறந்தே போய்விட்டோம். சே! கொஞ்சம்கூட ஞாபகம் இல்லாமல் போய்விட்டது. பரவாயில்லை. பக்கத்தில் மிட்டாய்த் தெருவில்தான் நல்ல ஸ்டவ் கிடைக்குமே! அப்பாடா! ஒரு வார அலைச்சல்! ஐயாயிரம் ரூபாய் காலி!"

ஜோசப் மீண்டும் விலைவாசியைப்பற்றி அலச ஆரம்பித்துவிட்டான்.

உள்ளேயிருந்து வந்த என் மனைவியின் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. "பாருங்க....டெல்லியில் எல்லா இடத்திலும் கேட்டிருக்கிறார்கள். நூதன் ஸ்டவ் 'அவுட் ஆஃப் ஸ்டாக்'காம். நமக்காகத்தேடி அலைந்ததில் ஒருநாள் முழுவதும் வீணாகப் போய்விட்டதாக மேரி சொல்லுகிறாள். நமக்காக அவர்களுக்கு ரொம்ப கஷ்டம்! " சீதா வருத்தத்தோடு சொன்னாள்.

நான் ஜோசப் முகத்தைப் பார்த்தேன். அது நன்றாக இல்லை.

"ம்.....பெரிய நூதன்! சரிதான் போ!...இங்கே 'ஜனதா ஸ்டவ்' இருக்கவே இருக்கிறது! 'ஈக்வலி குட்' அதை வாங்கினால் போதும், போ!"

பிறகு ஜோசப் என்னை ஏறிட்டுப்பார்க்கவில்லை.

வீட்டுக்குத்திரும்பி நடந்துகொண்டிருந்தபோது சீதா சொன்னாள். "எப்படிப் புளுகுறாங்க!......பார்த்தீங்களா? அவங்க கொண்டு வந்திருக்கிற புது நூதன் ஸ்டவ் அடுப்படியில் இருப்பதை நானே பார்த்தேன். அப்படியிருந்தும் ஸ்டவ் கிடைக்கவில்லையென்று எதற்காக இப்படி நேருக்குநேர் பொய் சொல்ல வேண்டும்?"

"அந்தப்பணத்தை மேரி திருப்பிக்கொடுத்துவிட்டாளா?" நான் கேட்டேன்.

"சே!....அதை எப்படிக் கேட்பது? அவர்களாகத் தரும்போது தரட்டும். வேகமாக நடங்கள். சுப்பிரமணியன் சொன்னமாதிரி கடலைக்கறி சமைத்துப் பார்க்கவேண்டும்." மனைவி நடையை எட்டிப்போட்டாள்.

கதவைத்திறந்ததும் வேலைக்காரி "காஸ் தீர்ந்து போச்சு," என்றாள்.

எத்தனையோ வருஷங்களுக்குப்பிறகு நான் அன்றுதான் நெற்றிநிறைய விபூதி இட்டுக்கொண்டேன். நிச்சயமாக அது கடவுள்மீது எனக்குள்ள பக்தியினால் அல்ல! இரண்டு கிளாஸ் எலுமிச்சம்பழ ஜூஸ் குடித்தேன். அதுவும் நிச்சயமாக தாகம் தணிப்பதற்காக அல்ல!

அவன் அல்லவா உண்மையில் மனிதன்!

- மு.குருமூர்த்தி
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It