ஓர் இரவு
************
"என்னங்க.... எந்திருங்க.... ஏங்க... ஏங்க... ஐயோ எந்திரிங்களே..."

அவள் ரகசியமாய் எழுப்பிக் கொண்டே இருக்க... அவன் மெல்ல புரண்டு படுத்த போது அதிகாலை நான்கரை இருக்கலாம் நேரம்.

ஊருக்குள் உலவும் அதிகாலை குளுமை அந்த அறையில் இன்னும் கூடுதல் ஊசியைக் குத்தியது.

"ஐயோ... வெளிய என்ன நடக்குதுன்னு பாருங்க... நேத்தும் இப்பிடித்தான்... முந்தா நேத்தும் இப்பிடித்தான்.. உயிரை கைல புடிச்சிட்டுருக்கேன்... நைட்டு சொன்னேன்.. நம்பளல.. இப்ப வந்து கண்ணால பாருங்க..." அசதியில் கிடந்தவனை உலுக்கி எழுப்பி மூச்சிரைத்தாள்.

திடும்மென வந்த நினைவில் வேகமாய் எழுந்தமர்ந்தவன்... கண்களில் சட்டென இரு புள்ளி வெளிச்சம். வேகமாய் எழுந்து நின்றவன் மெல்லமாக கதவு பக்கம் வந்து நின்று சத்தம் வராமல் கதவை திறந்தான். சாம்பல் பூத்த விடியல் வீதியில் வலை வீசிக் கொண்டிருந்தது.

எங்க என்பது போல... அருகே அரவமில்லாமல் நிற்கும் அவளைப் பார்த்தான்.

அவள் உடலில் குளிர்ச்சி கூடி நடுங்க ஆரம்பித்திருந்தது. நா மேலெழ முடியாமல் கடினப்பட்டு வார்த்தைகளை கூட்டி வாய் வறண்டு.. 'அங்க... அங்க பாருங்க...!' என கண்களால் வழி காட்டினாள்.

கூர்ந்து பார்த்த போது... தம்பி கைகளை பின்னால் கட்டிக்கொண்டு அப்படியும் இப்படியுமாக நடந்து கொண்டிருந்தான். இப்போது பார்வையில் பதற்றம் இல்லை. முன்பு தடுமாறிய மூச்சு இப்போது சீராக இருந்தது.

அவனை பார்த்தபடியே "ஏய்... தூக்கம் வராம நடந்துகிட்டுருக்கான்... இதுல என்ன..." என்று முனகியபடியே மெல்லமாக திரும்பி தோளுக்கு பின்னால் நிற்கும் அவளை பார்க்க.....

"ஐயோ மாமா... அவன் எவ்ளோ உயரமா இருக்கான் பாருங்க...!" என்று கண்களை சிமிட்டாமல் இப்படியும் அப்படியும் உருள விட்டு தம்பி நடப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இப்போது தான் கவனித்தான் அவன். கவனம் மூளைக்குள்ளேயே இதயத்தை துடிக்க வைக்க... மூச்சில் உஷ்ணம் கூடியது.

"ஆமா... என்ன இத்தனை உயரமா இருக்கான்.. எப்பிடி...?!!!" - பேச்சில் பயம் கூடி இருந்தது.

"நான் தான் சொல்றேன்ல.... இந்த வாரமே இப்படித்தான் விடிகாலைல நடந்துக்கிட்டே இருக்கான். ஆளே வேற மாதிரி இருக்கான்.. இவ்ளோ உயரமா உங்க தம்பி...."

நெற்றியில் உள்ளங்கை கொண்டு தேய்த்தபடியே யோசித்தவளுக்கு... தலைக்குள் எதுவோ உருண்டது. அவனுக்கும் யோசனை தான். என்ன நடக்குது... எப்பிடி இது.

அதே நேரம் நடந்து கொண்டிருந்தவனுக்கு..... இவர்கள் பின்னால் கதவையொட்டி நிற்கும் அனுமானம் கிடைத்து விட... சட்டென நின்றான். பன்னிரெண்டு மணியை அசைத்துக் கொண்டிருந்த பெண்டுலம் நின்றது போல இருந்தது. அனல் கொப்பளிக்கும் சூடு அங்கே அந்த குளிர்ச்சியையும் மீறிக் கொண்டு எழுந்தது. எதிரே இருக்கும் கைவிடப்பட்ட மச்சு வீட்டிலிருந்து... எலிகளின் காச் மூச் சத்தம். பெரும் பன்றி ஒன்று பாழடைந்த ஊர் கிணற்றுக்குள் இருந்து கத்திக் கொண்டே துள்ளி விழுவது போன்ற சளார் சத்தம்.

தெளிவாக கேட்டது. சுழலும் பூமி நிற்பது போன்ற கிறுகிறுப்பு அங்கே சுழன்றது.

சட்டென திரும்பினான். தூக்கி வாரி போட்ட பாவனையோடு பார்த்தவனுக்கு பேச்சு வரவில்லை. அவனையொட்டி சுவரோரம் ஒளிந்து கொண்டு நின்றவள் எச்சில் விழுங்கினாள். கழுத்தை விழுங்கியது போன்ற பதற்றம்.

" என்னண்ணா...ரெண்டு பேரும் தூங்கல..... ஏன் இங்க நிக்கறீங்க" என்ற தம்பி.... அண்ணனையே உற்று பார்த்தான். கண்கள் பெரிதாக இருந்தன. மூக்கு கூட இன்னும் கொஞ்சம் நீண்டிருந்தது. நெற்றி மேலேறி... கன்ன சதையில் பரு முளைத்த சதை கால் கிலோ கூடி இருந்தது.

ஏதோ புரிந்து விட்ட பயம் தான். ஆனாலும். தம்பி தானே என்ற தைரியம். "டேய்... அத நான் கேக்கணும்.. எதுக்கு இந்த நேரத்துல இப்பிடி உலாத்திக்கிட்டுருக்க.... ஏதும் பிரச்சனையா...?" உள்ளே எதுவோ தடுமாறினாலும்...வெளியே தைரியத்தை வர வைத்துக் கொண்டு வேக வேகமாய் கேட்டு விட்ட அவனுக்கு... கணக்கெல்லாம் இவன் என்ன இத்தனை உயரமா இருக்கான்... என்பது தான். ஏன் மூஞ்சி கூட இப்பிடி இருக்கும் என்பதும் தான்.

சட்டென திணறிய தம்பி.. "அது வந்து... நடக்கணும்.. அதான்.. நீங்க போய் தூங்குங்க.. நான் நடக்கணும்.....நான் நடக்கணும்...நான் நடக்கணும்....." என்று மீண்டும் கிழக்கும் மேற்குமாக நடக்க ஆரம்பித்தான். நடை கூட கூட உயரம் கூடிக் கொண்டே போக..... உயரம் கூடிக் கொண்டே போக போக.... நடையில் வேகமும் கூடிக்கொண்டே போனது. எட்டடி உயரம் தாண்டி பத்தடி தாண்டி.... பதிமூன்றடி இருக்கலாம். அந்த தெருவையே பெயர்ப்பது போல இருந்த அவன் காலடி சத்தங்கள்... கணீர் கணீர் என்றிருந்தன. அவன் பாதங்களை கண்ட கண்களில் அதிர்வேட்டுகள் அடுத்த நொடி. அவன் பாதங்களில் விரல்கள் இல்லை என்பதை பார்க்க முடிந்த போது உடனே மண்டைக்குள் மணி அடித்து விட்டது.

"இது வேற என்னவோ.... தம்பி இல்ல.....!!!"

சாம்பல் நிறம் இன்னும் இறுகி.. காற்றினில் எதுவோ பொடியாய் நொறுங்கி விழுந்து கொண்டிருக்க.....ஓர் ஓவியத்தில் வழிந்து நெளியும் தீ பிடித்த மெழுகுகள் போல அந்த காட்சி... கிழிந்து கொண்டிருந்தது. உடலில் உயரம் பிடித்தது போல நடுங்கியவன்... வேகமாய்... படுவேகமாய் பதறியபடியே திரும்பினான். வேகமாய் அவன் தலை மட்டும்தான் திரும்பியது. பின்னால் நின்றிருந்த மனைவி பாம்பின் பாதி உடம்பில் நெளிந்து கொண்டிருந்தாள்.

தவளை சத்தம் பாழ் கிணற்றுக்குள் இருந்து கூட்டமாய் மேலே தவ்விக் கொண்டிருந்தது. சாம்பல் நிறம் அழுகிய முட்டைகளை தன் மேலே கொட்டிக் கொண்டிருப்பது போன்ற ஒரு குலுக்கு ஓவியம் அங்கும் இங்கும் சரிவது போல தெரிய... தம்பி நடந்து நடந்து வேகமாய் சென்று முட்டிக் கொண்ட இடத்தில் அவனை விடவும் உயரமாய் ஒரு பாறாங்கல் சரிந்து நின்று கொண்டிருந்தது. அவன் நீண்ட கழுத்து மெல்ல மேலே அண்ணாந்து பார்க்க ஆரம்பித்தது.

இன்னொரு இரவு இது
*****************************
விதிகளற்றவனுக்கு இரவு.... கண்களுக்குள் துவங்குகிறது.

அந்த வகுப்பறையின் பின்புற வாசலில் வேர் விட்டு இறுக பற்றியிருக்கும் பாறையின் வனப்பு... முதலில் மிரட்சியை தந்தது. சொரசொரவென கரும்பாறையில் ப்ரவுன் பூத்த மொறுமொறுப்பு பதட்டத்தை கூட தந்தது. கல்லாகுழியில் நிற்கும் மலை எப்படி இங்கே வந்தது. சந்தேகம் கூட சிரிப்பையே தந்தது. முதிர் கிழவனின் முதுகு போல. பார்த்ததும் பயந்து போனான் பையன்.

பள்ளிக்கூடத்துல எட்டாம் வகுப்புக்கு பின்னால.... உள்ளருந்தே எப்டி இத்தன பெரிய மலை வந்துச்சு. இந்த மலை தூரத்துல காட்டுக்குள்ளதான இருக்கும். இங்க எப்பிடி.

யோசனையை கடித்துக் கொண்டே நின்றான்.

ஆனாலும்.. அவன் பள்ளி முடிந்து முன் வாசல் வழியாக வெளியேறுவதற்கு பதிலாக பின் வாசல் வழியாக வந்து மலை ஏறுதலை மாலை நேர விளையாட்டாக வைத்துக் கொண்டான். பிறகு விஷயம் தெரிந்து நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர.. அந்த மலை முழுக்க வெள்ளை சட்டை அணிந்த வேர்கள் சுடர் விட்டு எரிவது போல ஊருக்குள் பேச்சு படர்ந்தது. இப்படி பள்ளிக்கூடத்துல மலையை வளர்ப்பதை அனுமதிக்க கூடாது என்று ஊரே திரண்டு வந்த நாளில்... மலை வழியே ஏறி அத்தனை சுடர்களும் தப்பித்து செல்ல முயன்று கொண்டிருந்தன. மலைக்குள் இருக்கும் சமவெளி பாறையில் மேடை கட்டிய நாடகத்தில் நடிக்க ஆள் எடுத்துக் கொண்டிருப்பதாக ஒரு காட்சி நகர... வேகமாய் மூச்சிரைக்க... பையன் பைக்கட்டோடு ஓடினான். அவனுக்கு மலையில் இருந்து இறங்க தெரியவில்லை. பாட்டி தேடும். வீட்டுக்கு போக வேண்டும் என்பது உள்ளே உதிர்த்து விட்ட பதற்றம்.

எப்போதோ இறந்து போனவர்கள் எல்லாம் அடுத்த காட்சியில் வேஷம் களைத்துக் கொண்டிருப்பதை கண்ட பையனுக்கு இப்போது பயங்கரமாக பசி எடுத்தது. ஏழு மணி இருள் பூசிய மலையில் இருக்கும் ஒற்றையடியெல்லாம் இறங்கி ஏறி.... ஏறி இறங்கி வானத்தில் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. எட்டி பார்த்தால்... தன் எட்டாம் வகுப்பு கட்டடம் தெரிகிறது. எட்டிக்குதிக்க தோன்றினாலும் பயமாக இருக்கிறது. இத்தனை தூரம் ஏறி வந்திருக்க வேண்டாம் என அழுகை இன்னும் இன்னும் கூடியது.

கண்கள் சிமிட்டிய போது அடுத்த இரவு வந்து விட்டிருந்தது.

அடுத்த இரவு
******************
நங்கு நங்கென சத்தம். சேற்றில் பூட்ஸ் கால்கள் பதிவது போல. தலை தூக்கி பார்த்த போது தலையில் நடந்து கொண்டிருந்தவன் தலை... கல்லிலும் தரையிலும் டம் டம்மென பட்டு உடைந்து நைந்து ரத்தம் சகதியாய் கொப்பளிக்க ஆனாலும் அவன் ஒற்றைக்காலில் குதித்து குதித்து நடப்பவனாக தலையில் நடந்து கொண்டிருந்தான்.

யார் இவன்... எதற்கு இது. ஏதும் வேண்டுதலா.. தலை தூக்கி பார்ப்பதாக நம்பியவன் கால்களின் வழியே கண்கள் பிதுங்கி கொண்டிருக்க... ஒளிந்திருக்கும் பதுங்கு குழியில் தலைகீழாய் தான் நின்று கொண்டிருக்கிறான் பார்த்துக் கொண்டிருந்தவன். அவன் தலையை சுற்றி தலை கீழ் தவளைகள் எட்டு நம நமத்துக் கொண்டிருந்தன. கத்தியே காட்டி குடுத்து விடாதீர்கள்.. தவளைகளே என்று கால் வழியே குனிந்து பேசிய போது தலை வானத்தில் முட்டிக் கொண்டது. துழாவிய கையில் மேகம் பஞ்சு மிட்டாய் போல கிடைத்து விட... கொத்தள்ளி வீசி எறிந்த போது... பெரும் மழை நெருப்பு துண்டுகளாக வீதியில் துள்ளின. பெருமை பிடிபடாத சுவற்றில் ஓடி வந்து முட்டி நின்ற தலை அற்ற ஒருத்தி பெரும் முலைகள் கொண்டு சுவற்றில் ஓட்டைகள் போட துவங்கினாள்.

இந்த இரவு
**************
அழுது அரட்டும் சத்தம் என் காதுகளின் ஓரம் வேகமாய் படு வேகமாய் இந்த இரவை நினைவு படுத்தியது.

கிணறு இருந்தது தெரியாமல் வேகமாய் வந்து மோதி இருக்கிறேன். ஒரு கணம் நினைவு... நெற்றியில் ஓடியது.

நடுரோட்டில் எப்படி கிணறு இருக்கிறது. எப்படி கவனிக்க முடியாமல் போனேன். மயங்கி கிடக்கையில் மனதுக்குள் எழுந்த காட்சிகளோ இத்தனை நேரம் தொடர்பற்று ஓடியவை...பேயாக மிரட்டியவை..... இல்லையே அப்படியே கண் முன்னால் நடந்து கொண்டிருப்பது போல தெரிகிறதே. நேரத்தை நிறுத்த முயற்சி செய்தது மனம். பெருமூச்சும் சிறு முனங்களும்... என்னை சுற்றிலும். இருளும் ஒளியுமற்ற சாம்பல் பூத்த வெளி. அசையா மரங்களும்... அருகே வானமும் என்று பார்க்க பார்க்க என்னை முட்டுவது போல வந்து வந்து பின்னால் நகரும் கேமரா கோணம் போல காண்பதெல்லாம்.

கழுத்துக்கு மேலே நான் வேறு யாரோவாக இருக்கிறேனோ என்று கூட ஒரு பயம். இருத்தல் குறித்த தவிப்பு. இப்போதே என் முகம் பார்க்க வேண்டும் என்று விழுந்து கிடந்த பைக்கை துழாவினேன். சில்லு சில்லாகி சிதறி கிடந்த பைக் கண்ணாடிகளில் என் இருள் தான் தெரிந்தது. நான் அல்ல. எழுந்து நடக்க ஆரம்பித்தேன். எழுந்த எதுவோ நடக்கிறது என்று தான் தோன்றியது.

இது தான் அந்த ஊரோ... ஒரு கணம் கண்ணில் மனம் விரிந்தது.

ஊருக்குள் நுழைகையிலேயே இரு சாலைகள் பிரிந்தன.

" ஜாக்கிரதை.... கனவு தேசம்...." என்ற பெயர் பலகையையும் பார்த்து விட்டு ஏன் இந்த சாலைக்குள் நுழைந்தேன். புரிபடவில்லை. இந்த ஊர் பற்றி படித்திருக்கிறேன். பெர்முடா ட்ரையேங்கல் மாதிரி இது ஒரு கனவு ஊர். இங்கே ஊர் இல்லை. கனவு தான். கனவு தான் ஊராக இருப்பதாக ஒரு தேற்றம் உலாவிக் கொண்டிருக்கிறது. உள் நுழைந்தோர் திரும்பியதாக சாட்சி இல்லை. அது எப்படி கனவு ஊர் இருக்க முடியும். கண்களால் பார்க்க முடிந்த மரம் செடி கட்டடங்கள் இருக்கும் ஊர் எப்படி கனவுக்குள் இருக்க முடியும். தலை சுற்றியது. கால்களில் வழியே பார்ப்பது போன்ற பிரமையை விரட்ட முடியவில்லை. மற்றும் அது அப்படி இருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

இந்த இரவிலும்... இன்னொரு இரவு நெஞ்சை தட்டிக் கொண்டு எழும்புவது போல மூச்சு வாங்கிக் கொண்டு நின்ற எனக்கு கண்கள் திறக்க சிரமாக இருந்தது. இரவு பூட்டிய ராத்திரி வரைபடம் போல... மெல்ல அதை கலைத்துக் கொண்டு நடந்தேன்.

தொடுவானத்தில் நடப்பது போல இருக்கிறது. கால்கள் காற்றில் பதிகிறது போன்ற நினைப்பை அகல முடியவில்லை. என்ன நடக்கிறது இங்கே. சிதிலமடைந்த கட்டடங்களும்... பாதம் காணா பாதைகள் தன்னை தானே புரண்டு மூடிக்கொண்ட தெருக்களும்....கை விடப்பட்ட ஊர் என்பதை காட்டிக் கொடுக்கிறது. அதற்காக யாருமற்ற ஊர் ஒரு கனவுக்குள் இருக்கிறது என்று எப்படி நம்புவது. அப்படியே இருந்தாலும் இது யார் கனவு.

பறந்து நிறைந்த வானத்தில் பூமி தலைகீழாக தொங்குவது தெரிகிறது என்றால்... இது என் கனவா. இல்லை எந்த கனவுக்குள்ளாவது நான் இருக்கிறேனா..!

இரவின் நிழல்
*******************
சிதிலமடைந்த கட்டடங்களின் வழியே தெருவை பிடித்து பிடித்து நடக்கிறேன். நடப்பதில் இருக்கும் சிக்கல் நகருவதிலும் இருக்கிறது. எது முன் எது பின் என்று புரிபடவில்லை. தூரத்துக்கும் அருகாமைக்கும் இடையே தன்னை தானே சுழலும் செங்குத்து பூமியோ நான். அமர்க்களம் மனதில் அரூபம் வளர்க்கிறது.. என்னை போலவே... எதிரே... நான் வந்து கொண்டிருக்கும் திசையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நானும் இதே போல் உடல் மொழியில் இதே போன்ற சிந்தனையை தான் கிளறிக் கொண்டிருக்கிறேன். என்னை போல இருந்த நான் தான் இனி நானோ.

தூங்கிய கண்களை வேகமாய் விழித்த போது கிடைத்த காட்சி தான் இது. என்ன நடந்து கொண்டிருக்கிறது. ஏன் இங்கே திரும்பும் பக்கமெல்லாம் கனவாக கிடைக்கிறது. இதில் எதில் நான் நிஜமாக இருக்கிறேன்... புரியவில்லை.

மீண்டும் கிணறொட்டிய சுழற்சி. சிரிக்க பயந்த அழுகை... அழவும் மறந்த கதையொன்றில் ஊருக்கு மத்தியில் நிலவு கிழிந்து தொங்குகிறது.

கிணற்று சுவற்றில் நின்று ஊரை சுற்றி பார்க்கிறேன். சாம்பல் பூத்த சாயந்திர ஓவியம் போல சரிந்து கிடக்கும் ஊரில் ம்ம்ம்ம்ம் என இரவு நேர துர் ஓலம் தவிர வேறொரு சத்தம் இல்லை. ஒளிக்கு துழாவும் றெக்கைகள் உண்டு போல. வெளி நெளிந்து வளைந்து எழுந்து மிதந்து கொண்டிருக்கும் சிதிலமடைந்த குறுக்கு வீதிகளின் வழியே ஒரு திகைத்த உடல் கிடப்பதை உணர்ந்து ஓடினேன். மீண்டும் எதிர்புறம் ஓடிக் கொண்டிருந்த நான்... எதிர்புறம் ஓடுவது போன்று தோன்றுகையில் தான் தோன்றியது.. அய்யயோ கிணற்று சுவற்றில் சாய்ந்தவன் கண்கள் சரிந்திருக்கிறேன்.

விழிக்கையில் எல்லாம் கண்கள் மூடும் காட்சிக்கு பேர் என்னவோ.

கிழவனிலும் கிழவன் அவன்.

யாருமே இல்லாத இந்த ஊரில் ஒரு கிழவன் பாதி பிணமென கிடப்பது ஆச்சரியமாக இருந்தாலும்... ஒரு கேள்வி கேட்கவாவது முடியுமே என்ற நம்பிக்கை. அருகினில் நிற்கையிலும் தூரத்தில் நகர்வது போன்று தான் பிரமை. அல்லது அந்த ஃபிரேம்.

அழைத்தேன். என் காதுக்குள் நானே அழைப்பது போல... கியா முய சத்தம். நான் அய்யா என்றழைத்தது... சற்று நேரத்துக்கு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கையில்... காதுகளை பொத்தாமல் இருக்க முடியவில்லை. பேய் படத்துக்குள் மாட்டிக் கொண்டது போல... மயான நிசப்தத்தை மனதின் ஓலம் கலைக்க தொடங்கி இருந்தது.

அந்த கிழவனின் கண்களில் மொழி அங்கே நெளிய தொடங்கி இருந்தது.

"நிமித்த காரங்கள் நிறைந்த ஊராக ஒரு காலத்தில் இருந்திருக்கிறது.

"பொதுவா கனவுங்கறது... காட்சி பிழை தான். மேல் மனசுல மோதுற எல்லாமே சிந்தனை வடிவத்துக்கு போனாலும் செயல் வடிவத்துக்கு போறது இல்ல. அது கொஞ்சம் கொஞ்சமா வடிகட்டப்பட்டு கீழ் மனசுல பதிஞ்சு அங்கயும் சில பல வேலைகளை பார்த்துட்டு ஆழ் மனசுக்குள்ள போய் தங்கிடும். அது ஒரு சிறைச்சாலை மாதிரி. அந்த மூளையோட ரகசிய பெட்டகம் மாதிரி. அது தூங்கும் போது மூச்சு முட்டி வெளியேறி ஒரு ஆசுவாசத்தை தேடி கனவுங்கிற பேர்ல பிச்சுக்கிட்டு வெளியேறிடும். கனவு இல்லன்னா அந்த சிந்தனையெல்லாம் உள்ளயே தங்கி அந்த மனுஷன கிறுக்கனாக்கிடும். ஒவ்வாததை வாந்தி எடுக்கற மாதிரி தான். கனவுங்கறதும்... சிந்தனையின் வாந்தி. அது சில நேரத்துல நல்லதாவும் இருக்கும். சில நேரத்துல கெட்டதாவும் இருக்கும். சாப்பிட்டதெல்லாம் வயித்துக்குள்ளயே இருந்தா என்னாகும். அப்பிடித்தான்... சிந்திக்கறதெல்லாம் மண்டைக்குள்ளயே இருந்தா மண்டை வெடிச்சிடும். ஆக... கனவுங்கறது ஒரு வடிகால். ஆனா அதுலயும் பின்னால நடக்க போறது கூட கனவு மூலமா சில நேரத்துல முன்னாலயே தெரிஞ்சிடும்.. இங்க இருந்தவங்க எல்லாருக்கும் இது தான் பலமாவும் இருந்துச்சு.. ஒரு கட்டத்துல அதுவே வியாதியாவும் மாறிடுச்சு...பின்னால் நடக்க போற விஷயங்களை தங்கள் கனவுகள் மூலமாக தெரிஞ்சிக்கிட்டு அதை முன்கூட்டியே சொல்லி நல்லதுன்னா காத்துக்கவும்.. கெட்டதுன்னா அதுலருந்து தப்பிச்சுக்கவும் காரணமா இருந்த நிமித்த காரங்கள் நிறைய பேர் வாழ்ந்த ஊர் இது. அந்த கனவுகள் மூலமாக நல்லதும் நடந்துருக்கு. கெட்டதும் நடந்துருக்கு. நிஜம் என்னன்னா நல்லதோ கெட்டதோ நடக்க போறது முன்னமே தெரிஞ்சிருக்கு. அப்புறம் ஒரு கட்டத்துல... கனவு கனவுன்னு அது பின்னாலயே போனதுல தூக்கம் வராம.. பைத்தியம் புடிச்சு சில பேர் செத்துட்டாங்க...நிறைய பேர் ஊரை விட்டே போய்ட்டாங்க. எல்லாரும் போனதுக்கப்புறம் அவுங்க கண்ட கனவு மட்டும் இந்த ஊரை விட்டு போகல... அது வீதிக்கு வீதி... வீடு வீட்டுக்கு.. சந்து பொந்துல... கட்டட கசிவுல.. மர பொந்துலன்னு எல்லா பக்கமும் பதுங்கி இருக்குன்னு ஒரு நம்பிக்கை. மாயங்கள் மறையாதுன்னும் தான் நம்பிக்கை. நான் கூட யாரோ ஒருத்தரோட கனவுக்குள்ள தான் மாட்டிகிட்டு இருக்கேன்னும் தான் நம்பிட்டு இருக்கேன்.... "

அந்த கிழவன் பேச பேச... வானத்தில் ஒரு வௌவாலாய் பறந்து கொண்டிருப்பது போல உணர்ந்தேன். சூனிய கதிர்களின் ஓலம் எப் பக்கமிருந்தும் எங்களை சூழ்ந்து கொண்டே இருந்தது. வானவில் எதிரே இருந்த மரத்தில் இருந்து தான் பூத்துக் கொண்டிருப்பது போல தெரிந்தது. சாய்ந்த மரங்கள்.. தலை கீழ் செடிகள்... மிதக்கும் கல் என்று பார்க்கும் இடங்களில் எல்லாம் மாயம். இப்படி எல்லாம் நிஜம் தன்னை வடிவமைத்துக் கொள்ளுமா என்ற மாயம் என்னை சூழ்ந்து அலசிக் கொண்டிருந்தது. ஒரு கட்டு கதையை கேட்பது போல தான் இருந்தது. ஆனாலும் ஏழு மலை தாண்டி தூரத்தில் வந்து கொண்டிருக்கும் குதிரை குளம்பின் ரீங்காரம்... காதருகே வந்து போன சிவப்பு வண்டின் முதுகில் அதிர்ந்தது.

இன்னொன்று... மெல்ல மெல்ல தவழ்ந்து கொண்டிருந்த நேரம்.... ரொம்ப நேரமாகவே பத்து நிமிடமாகவே இருக்கிறது.

எப்போது கண்கள் மூடியது என்று தெரியவில்லை. கண்கள் திறக்கையில்... ஒரு சிதிலமடைந்த வீட்டு திண்ணையில் மரத்தோடு மரமாக புதரில் இருந்து எழும்பிய எலும்பும் சதையுமாக சுருங்கிய நடுக்கத்தோடு அமர்ந்திருந்தேன். இப்போது நானே அந்த கிழவன். ஆனால் முன்னிலும் முதிர் கிழவன். தலைக்குள் யாரோ கத்துவது போல. அந்த ஊரே ஒருமுறை உருண்டு நிமிர்ந்து நின்று மூச்சு வாங்குவது போல. எதிரே தெரியும் தொடுவானத்தில் கருப்பு வானவில் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. தவளைகளின் ஓலம். பாம்புகளின் கிசுகிசுப்பு. பறவை கூட்டத்தின் நெஞ்சிலடித்துக் கொள்ளும் ஒப்பாரி என்று திடும்மென காதுக்குள் பெரும் இரைச்சல்.

எல்லாம் தாண்டி தூரத்தில் கேட்கும் அதே சத்தம். தினம் தினம்.... கேட்கும் அதே சத்தம். பேருந்து ஊர் எல்லை தொட்டு கடந்து போகும் சத்தம்.

*

பேருந்து கிளம்பி விட்டது. பாட்டு கேட்டுக்கொண்டே இருந்தவன் ஜன்னலில் தலை சாய்த்து சும்மா சரிந்திருந்தேன். எப்போது கண்களை மூடினேன் என்று தெரியவில்லை.

பேருந்து கனவு தேச எல்லையை நெருங்க ஆரம்பித்திருந்தது. பக்கவாட்டில் சாலையொட்டி மேலேறிய மலையில் இருந்து ஒரு பாறை உருண்டு வந்து கொண்டிருக்கிறது.

படக்கென எழுந்தமர்ந்தேன்.

"ஏங்க... எந்திரிங்க... அயோ...எந்திரிங்களேன்" பதற்றத்தோடு ரீமா என்னை எழுப்பியிருக்கிறாள்.

பஸ்.... பாறை... பாம்பு... பேய்...தம்பி... தலை கீழ் நடை ...கிணறு... விழுந்து சிதறியிருந்த பைக்... மரமாகி இருந்த தாடி வெச்ச கிழவன்... கனவு சூழ்ந்த ஊர்... என கனவுகளின் அழுத்தம் நெற்றியை அழுந்த... வீங்கிய கண்களோடு என்ன என்பது போல பார்த்தேன். கண்களின் திறப்பு கனவுக்குள் போல தான் உணர்தல்.

டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் செய்தியை பதற்றத்தோடு காட்டினாள். உள்ளே ஏதேதோ அதிர்வு. கூர்ந்து டிவியை பார்த்தேன். கனவுக்குள் கிடக்கும் புத்தியை அடக்குவது சிரமமாக இருந்தது.

"இன்று அதிகாலை கூடலூரில் இருந்து குண்டல்பேட் சென்ற பேருந்து மீது மலையிலிருந்து உருண்டு வந்த பாறை விழுந்து..விபத்துக்குள்ளானது... இதில்...." செய்தி வழக்கம் போல அரிதாரம் பூசிக் கொண்டிருந்தது. நான் அவளை இன்னும் சற்று கூடிய பதற்றத்தோடு பார்த்தேன்.

அவள் பதற்றத்திற்கு காரணம்... அவளின் சொந்த ஊர் குண்டல்பேட். என் பதற்றத்திற்கு காரணம் நிமித்தகார இனத்தின் கடைசி ஆள்.... நான்.

- கவிஜி

Pin It