மிகவும் சுருக்கமாக அந்த சவதகனம் முடிந்தது.

Sad Man கூடவே இருந்து உதவி செய்த அலுவலக நண்பர்களுக்கு நன்றி கூறினான் அவன்.

அகால நேரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் அவனை நாம் அப்பா என்றே அழைக்கலாம்.

அந்த நகரத்தில் அவனை நன்றாக அறிந்த அவனுடைய மூன்று பிள்ளைகளும் அவனை அப்பா என்று அழைப்பதால் நாமும் அவனை அப்பா என்றே அழைப்பதுதான் சரி.

சுற்றிலும் அறிமுகமில்லாத பயணிகள்.

அன்று நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் அவனுடைய மனம் அசை போட்டது.

காலையில் எழுந்ததே அவளுடைய குரலைக்கேட்டுத்தான்.

''இப்படி இழுத்துப்போர்த்தி தூங்கினா எப்படிடா உன்னி.......இன்னைக்கு திங்கட்கிழமை தெரியுமில்லே?''

அவள் மூத்த மகனை எழுப்பிக் கொண்டிருந்தாள்.

அதற்கப்புறம் உலர்த்திய வெள்ளைப்புடவையில் அடுப்படியில் புகுந்துகொண்டாள்.

ஒரு பெரிய கோப்பையில் அவனுக்கு காப்பி கொண்டுவந்து தந்தாள்.

அப்புறம்......அப்புறம்....என்ன நடந்தது....?

மறக்கவேமுடியாத எதையாவது சொன்னாளா....?

எவ்வளவோ முயற்சி செய்தும் அதற்கப்புறம் அவள் சொன்னது எதுவும் நினைவுக்கு வரவில்லை.

''இப்படி இழுத்திப்போர்த்தி தூங்கினா எப்படிடா உன்னி....இன்னைக்கு திங்கட்கிழமை தெரியுமில்லே....?''

இந்த ஒரு வாக்கியம் மட்டும் மீண்டும் மீண்டும் நினைவில் மோதிக்கொண்டிருந்தது.

ஏதோ ஒரு தெய்வத்தின் பெயரை உச்சரிப்பதுபோல அந்த வாக்கியத்தையே அவன் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக்கொண்டான்.

அதை மறந்துபோனால் தனக்கு ஏற்பட்ட துயரம் தாங்கமுடியாமல் போய்விடும் என்று அவனுக்குத் தோன்றியது.

ஆபீசுக்குப் போகும்போது குழந்தைகளும் அவனுடன்தான் வந்தார்கள்.

அவர்களுடைய மத்தியான சாப்பாட்டை சிறிய அலுமினிய பாத்திரங்களில் அடைத்து எடுத்துவந்தாள். அவளுடைய வலதுகையில் கொஞ்சம் மஞ்சள்பொடி அப்பியிருந்தது.

ஆபீசில் இருக்கும்போது அவளைப்பற்றிய நினைவு வருவதில்லை.

ஒன்றிரண்டு வருடங்கள் நீண்டுபோன காதலுக்குப்பிறகு அவர்களுடைய திருமணம் நடந்தது. அதுவும் பெரியவர்களின் சம்மதமில்லாமல். பின்னால் அதைப்பற்றி வருத்தப்படவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை.

பணப்பற்றாக்குறை.......குழந்தைகளுடைய ஆரோக்கியக்குறைவு.... என்று சில சங்கடங்களால் அவர்கள் தளர்ந்து கொண்டிருந்தார்கள். அவளுக்கு உடுத்துவதில் இருந்த கவனம் குறைந்தது. அவன் மனம்விட்டுச் சிரிப்பதை மறந்தே போனான்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அவர்களுக்கிடைய காதல் இருந்தது. அவர்களுடைய மூன்று குழந்தைகளுக்கும் அப்பா அம்மா என்றால் உயிர்.

எல்லாம் ஆண்பிள்ளைகள்.
உன்னி......பத்துவயது...
பாலன்.....ஏழுவயது...
ராஜன்.....ஐந்துவயது...

முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்து கொண்டிருக்கும் மூன்று பிள்ளைகள். சொல்லிக் கொள்கிறார் போன்ற அழகோ புத்திசாதுர்யமோ இல்லாத பிள்ளைகள். இதெல்லாம் இருந்தாலும் அப்பா அம்மாவின் பேச்சு மட்டும் இப்படி இருக்கும்.

''உன்னிக்கு எஞ்சீனியரிங்கில் ரொம்பவும் ஆர்வம். எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருக்கிறான்.''

''பாலனை எப்படியாவது டாக்டராக்கணும்.......... அவனுடைய நெற்றியைப் பார்த்தீர்களா? பெரிய நெற்றி அறிவுக்கு அடையாளம்.''

''இருட்டைப்பார்த்தால்கூட ராஜனுக்கு பயமேயில்லை. கெட்டிக்காரன். பட்டாளத்தின் சேரவேண்டியவன்.''

அந்தப் பட்டணத்தில் நடுத்தரக் குடும்பங்கள் வாழ்ந்த ஒரு தெருவில்தான் அவனுடைய குடியிருப்பு. முதல்மாடியில் மூன்று அறைகளுள்ள ஒரு பிளாட். ஓர் அறையின் முன்புறம் இரண்டுபேர் நெருக்கிக்கொண்டு நிற்கும் அளவிலான ஒரு வராந்தா. அம்மா தண்ணீர் ஊற்றி வளர்த்த ஒரு பன்னீர்ச்செடி தொட்டியில் இருக்கிறது. இதுவரை பூ வைக்கவில்லை.

அடுப்படி சுவரில் ஆணி அடித்த கொக்கிகளில் பித்தளைக் கரண்டிகளும் சாரணிகளும் தொங்கிக் கொண்டிருக்கும். அம்மா உட்காருவதற்காக ஸ்டவ்விற்குப் பக்கத்தில் ஒரு தேய்ந்த பலகை இருக்கும். அதில் அவள் உட்கார்ந்து சப்பாத்தி தேய்க்கும் நேரமும் அப்பா ஆபீசிலிருந்து வீட்டிற்கு வரும் நேரமும் ஒன்றாக இருக்கும்.

பஸ் நின்றபோது அவன் இறங்கினான். கால்மூட்டுகளில் ஒரு வலி தெரிந்தது. வாதமாயிருக்குமோ? அவன் படுக்கையில் விழுந்துவிட்டால் இனிமேல் குழந்தைகளை யார் கவனிப்பார்கள்? கண்களில் திடீரென கண்ணீர் பெருகியது.ஒரு நைந்துபோன கைக்குட்டையால் கண்களை துடைத்துக்கொண்டான். வேகமாக வீட்டை நோக்கி நடந்தான்.

குழந்தைகள் தூங்கிப்போயிருப்பார்களோ.....?

ஏதாவது சாப்பிட்டிருப்பார்களா....?

அல்லது அழுது அழுது தூங்கிப்போயிருப்பார்களோ....?

அழவேண்டும் என்பதுகூட அவர்களுக்குத்தெரியவில்லை.

அவளை அவன் டாக்ஸியில் ஏற்றியபோது உன்னி அழாமல் பார்த்துக்கொண்டு நின்றானே..... சிறியவன் மாத்திரம் அழுதான். அவனும் டாக்ஸிதயில் ஏறிக்கொள்ளவேண்டும் என்பதற்கான அழுகை அது. மரணத்தின் பொருள் அவர்களுக்குத் தெரிந்திருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை. அவனுக்காவது அது தெரிந்திருக்குமா?

இல்லை.

எப்போதும் வீட்டிலேயே இருந்த அவள் திடீரென்று ஒரு சாயுங்காலம் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் துடைப்பத்திற்கு பக்கத்தில் விழுந்து உயிரைவிடுவாள் என்று அவனாவது நினைத்திருந்தானா?

ஆபீசிலிருந்து வந்தபோது அடுப்படி ஜன்னல் வழியாக பார்த்தான். அவள் தெரிந்தாள். வீட்டின் முன்புறம் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கும் சத்தம் உயர்ந்து கொண்டிருந்தது. உன்னியின் குரல் உச்சத்தில் கேட்டது.

''•பர்ஸ்ட் க்ளாஸ் ஷாட்......''

சாவியை எடுத்து வீட்டின் முன்புறத்து வாசலைத் திறந்தபோதுதான் அவள் விழுந்து கிடந்ததைப் பார்த்தான். வாய் கொஞ்சமாக திறந்தும், சரிந்தும் கிடந்தாள்.

தலைகுப்புற விழுந்திருப்பாள் என்று அவன் நினைத்தான்.

ஆஸ்பத்திரியில் டாக்டர் சொன்னது......''மாரடைப்பு.....இறந்துபோய் ஒண்ணரை மணி நேரமாயிருக்கும்.....''

ஏதேதோ சிந்தனைகள். அவள்மீது காரணமில்லாத ஒரு கோபம் அவனுக்கு. இப்படி எதுவுமே சொல்லாமல் எல்லாச் சுமைகளையும் அவன்மேல் சுமத்திவிட்டு அவள் எப்படிப் போகலாம்? இனிமேல் குழந்தைகளை குளிப்பாட்டுவது யார்? அவர்களுக்கு சாப்பாடு தயார்செய்து கொடுக்கப்போவது யார்? அவர்களுக்கு உடம்பு முடியாதபோது பராமரிக்கப்போவது யார்?

''என்னுடைய மனைவி இறந்து போய்விட்டாள்....''

அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

''என்னுடைய மனைவி இன்று திடீரென்று மாரடைப்பால் இறந்துபோன காரணத்தால் இரண்டு நாட்களுக்கு எனக்கு லீவு வேண்டும்.....''

மனைவிக்கு உடம்பு சரியில்லை என்றல்ல......மனைவி இறந்து போய்விட்டாள் என்ற லீவு லெட்டர் இதுவரை யாருமே எழுதாத ஒன்றாக இருக்கும்.......

அதிகாரி அவருடைய அறைக்கு என்னை வரச்சொல்லி துக்கம் விசாரிப்பார்.

''கேள்விப்பட்டேன்....ஏன்....என்னாச்சு?''அதிகாரி கேட்பார்.

ஹ¤ம்........அவரும் அவருடைய விசாரிப்பும்.........அவருக்கெல்லாம் அவளைத் தெரியாது........

அவளுடைய நுனி சுருண்ட தலைமுடியும், வறண்டுபோன புன்சிரிப்பும், அதிராத நடையும் அவருக்குத் தெரியாது......அதெல்லாம் அவனுடைய நஷ்டங்கள்.....

வாசற்கதவைத் திறந்தவுடன் படுக்கையறையில் இருந்து சிறியவன் ஓடிவந்தான்.

''அம்மா வரலையா?''

இவ்வளவு சீக்கிரம் அவன் மறந்துபோயிருப்பானோ? டாக்ஸியில் ஏற்றிவைத்த அந்த உடல் தானாக திரும்பிவரும் என்று நினைத்திருப்பானோ?

அவன் மகனுடைய கையைப்பிடித்துக்கொண்டு அடுப்படிக்கு நடந்தான்.

''உன்னீ....'' அவன் கூப்பிட்டான்.

''என்னப்பா...?'' உன்னி கட்டிலில் இருந்து இறங்கிவந்தான்.

''பாலன் தூங்கிட்டான்......''

''......ம்ம்......நீங்கள் ஏதாவது சாப்பிட்டீங்களா....?''

''இல்லை.....''

அவன் அடுப்படி மேடைமேல் மூடிவைத்திருந்த பாத்திரங்களின் தட்டுகளை எடுத்துவிட்டுப் பார்த்தான். அவள் தயார் செய்துவைத்திருந்த சாப்பாடு.......சப்பாத்தி........சோறு.....உருளைக்கிழங்கு பொரியல்......ஊறுகாய்.....தயிர்.

ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் குழந்தைகளுக்காக அவ்வப்போது செய்துகொடுக்கும் நெய் பாயசமும் இருந்தது.

சாவு தீண்டிய சாப்பாடு. வேண்டாம்......இதெல்லாம் சாப்பிடக்கூடாது..........

''நான் கொஞ்சம் உப்புமா செய்து தருகிறேன். இதெல்லாம் ரொம்பவும் ஆறிப்போய்விட்டது.....''அவன் சொன்னான்.

''அப்பா...''

உன்னியின் குரல்.

''.....ம்ம்....''

''அம்மா எப்போ வருவாங்க....? அம்மாவுக்கு இன்னும் நல்லாப்போகலியா....?''

இன்னும் ஒருநாள் போகட்டும்.....அவன் நினைத்தான்.

இந்த ராத்திரி நேரத்தில் குழந்தையை ஏன் அழவைக்கவேண்டும்.....?

''அம்மா வருவார்கள்.....''அவன் சொன்னான்.

அவன் கிண்ணங்களைக் கழுவி தரையில் வைத்தான். இரண்டு கிண்ணங்கள்.

''பாலனை எழுப்பவேண்டாம்......தூங்கட்டும்....'' என்றான்.

''நெய்பாயசம்......ம்பா....''

ராஜன் ஆட்காட்டிவிரலை அதற்குள் அமிழ்த்தி அப்பாவைப் பார்த்துச் சொன்னான். அவள் எப்போதும் உட்கார்ந்துகொள்ளும் பலகைமேல் அவன் உட்கார்ந்து கொண்டான்.

''நீ ஊத்திக்கொடுப்பா.....உன்னி.........அப்பாவுக்கு முடியல்லே......தலை வலிக்குது...''

அவர்கள் சாப்பிடட்டும்....

அவளுடைய கைப்பட்ட சமையல் இனிமேல் அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லையல்லவா.........?

குழந்தைகள் பாயசம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்தவாறு அவன் அசையாமல் உட்கார்ந்திருந்தான். கொஞ்சநேரத்திற்குப் பிறகு அவன் கேட்டான்.

''சோறு வேண்டுமோ உன்னி....''

''வேண்டாம்.....பாயசம் போதும்......நல்லா இருக்கு.....''

ராஜன் சிரித்துக்கொண்டான்.''ஆமாம்பா......அம்மா நெய்பாயசம் செய்திருக்காங்க....''

குழந்தைகள் பார்வையில் அவனுடைய கண்ணீர் பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவன் எழுந்து குளியலறைக்குள் சென்றான்.

- மு.குருமூர்த்தி
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It