பூஜா மண்டல் மீது கோழிப் பீ நாற்றம் வீசியது. முத்துப்பாண்டி அதை பொருட்படுத்தாமல் பூஜாவை கட்டி அணைத்தான். வெறும் சிமெண்ட்டு கற்களால் கட்டப்பட்ட ஒரு பத்துக்குப் பத்து அறை. அறைக்குள்ளேயே சமையல் அடுப்பு. பகலின் வெப்பம் கூடி மேலிருந்து அறைக்குள் வந்திறங்கும் வெக்கை. அடுப்பின் வெக்கை. மூடப்பட்ட சிறிய சன்னல். சுழலும் மின் விசிறி அறையின் வெக்கையை அறைக்குள்ளேயே பத்திரப் படுத்தி காற்றை சுழல விட்டு வெக்கையை அதிகப் படுத்தியது. அறையில் இருந்த உடல்கள் வெக்கை தாளாமல் வியர்த்து பிசுபிசுத்தன. பிசுபிசுத்த உடல்களில் இருந்து வியர்வை வாடை வீசியது. செல்லையா தேவர் மகன் முத்துப்பாண்டிக்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. தன் வீட்டில் கொல்கத்தாவைச் சேர்ந்த பூஜா மண்டலை, அதுவும் கணவர் இறந்து போய் விதவையாக இருக்கும் பூஜாவை அவன் திருமணம் செய்வதற்கு ஏற்றுக் கொள்வார்களா என்று முத்துப் பாண்டிக்கு பெரும் குழப்பமும் பயமும் இருந்தது. இருந்தாலும் பூஜாவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு பெற்றோரை பார்க்கச் செல்வதால் அவன் மீது இருக்கும் பிரியத்தால் பெற்றோரை சமாதானப் படுத்தி பூஜாவை கரம் பிடிக்க முடியும் என்றே நம்பினான். அந்த நம்பிக்கையில் கோழிப் பீ நாற்றத்தையும் வியர்வை வாடையையும் சகித்துக் கொண்டு பூஜாவை கட்டி அணைத்து ஒரு முத்தம் கொடுத்தான்.

அந்த நேரம் முத்துப் பாண்டியின் தொலைபேசி ஒலித்தது. இரவு 11.30 மணிக்கு யார் தன்னை கூப்பிடுவது என்று எரிச்சலுடன் மொபைலைப் பார்த்தான். முட்டை வண்டி டிரைவர் பிரபு. முட்டைகளை கொண்டு போகத்தான் பிரபு வந்திருக்கிறான். அது பிரபுவின் வேலை. எட்டு மணிக்கு வந்திருக்க வேண்டியவன், 11.30 மணிக்கு வந்திருக்கிறான். எத்தனை மணிக்கு வந்தாலும், முட்டைகளை எண்ணி எடுத்துக் கொடுக்க வேண்டியது முத்துப் பாண்டியின் வேலைதான். " அண்டா காடி ஆகயா ... மே ஜாதா " என்று பூஜாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் முத்துப்பாண்டி.

பூஜா மண்டலும் முத்துப்பாண்டியும் சிவக்குமாரின் கோழிப் பண்ணையில் வேலை பார்ப்பவர்கள். கோழிப் பண்ணை என்றால் ஏதோ ப்ராய்லர் கோழிப் பண்ணையோ முட்டைக் கோழிப் பண்ணையோ அல்ல. அது ஒரு தாய்க்கோழிப் பண்ணை. ப்ராய்லர் கோழிப் பண்ணை என்றால் பிறந்த கோழிக் குஞ்சுகளை வளர்த்து கோழிக்கறிக்கு விற்று விடுவது. வெறும் தீவனமும் தண்ணீரும் கொடுத்து வளர்த்து. நாற்பத்தைந்து நாட்களில் இரண்டரை கிலோ எடை வந்தவுடன் கோழிகளை விற்று விடலாம். முட்டைக் கோழிப் பண்ணை என்றால் கோழிக் குஞ்சுகளை சுமார் பதினெட்டு வாரம் வளர்த்து அதன் பிறகு சுமார் எழுபது வாரங்களுக்கு அந்த கோழிகள் இடும் முட்டைகளையும் விற்று, முட்டையிடும் சக்தியை கோழிகள் இழந்த பிறகு அந்த கோழிகளையும் கறிக்கு விற்று விடுவது. தாய்க் கோழிப் பண்ணை என்றால் பிறந்த கோழிக் குஞ்சுகளை வளர்த்து அந்த தாய்க் கோழிகள் இடும் முட்டைகளை குஞ்சு பொரிக்க வைத்து அந்த கோழிக்குஞ்சுகளை விற்பது. ப்ராய்லர் கோழிப் பண்ணையை விட முட்டைக் கோழிப் பண்ணையில் வேலை அதிகம் ; முட்டை கோழிப் பண்ணையை விட தாய்க் கோழிப் பண்ணையில் வேலை அதிகம்.

பூஜா மண்டலும் ஆஷிஷ் மண்டலும் சவுரவ் என்ற காண்ட்ராக்டர் மூலம்தான் கோவையில் உள்ள சிவக்குமாரின் கோழிப் பண்ணைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வேலைக்கு வந்தனர். ஆஷிஷ் மண்டல் ஐந்து வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு வந்து விட்டான். நாமக்கல்லில் உள்ள ஒரு முட்டைக் கோழிப் பண்ணையில் தான் முதலில் வேலை. திருமணத்திற்காக ஒரு மாதம் விடுமுறை எடுத்து கொல்கத்தாவில் உள்ள தன் சொந்த கிராமத்திற்கு சென்று பூஜாவுடன் திருமணம் முடித்து திரும்புவதற்கு முன்பு அந்த நாமக்கல் கோழிப் பண்ணையில் ஆஷிஷ் மண்டலுக்கு பதில் வேறு ஒரு வேலையாளை அனுப்பி விட்டதாகவும் அங்கு செல்ல வேண்டாம் என்றும் ஆஷிஷின் பழைய கான்டராக்டர் தீபக் யாதவ் சொல்லி விட்டான். சிறுவயதிலேயே தாயை இழந்த பூஜாவின் அப்பாவும் ஆஷிஷின் பெற்றோரும் கொரோனா காலத்திலேயே திருமணம் நடத்திவிட்டால் செலவு குறையும் என்று அவசரமாக திருமணத்தை நடத்தினர். ஆஷிஷ், நீண்ட திருமண விடுப்புக்குப் பிறகு, சவுரவின் தொடர்பு கிடைத்து இந்த கோழிப்பண்ணைக்கு பூஜாவையும் அழைத்துக் கொண்டு வந்தான்.

பூஜாவும் ஆஷிஷும் இந்த பண்ணையில் சேரும் நாளில் சவுரவ் இவர்களுடன் வந்து சிவக்குமாரிடம் இருவரையும் அறிமுகம் செய்து வேலைக்கு சேர்த்துவிட்டு தன்னுடைய கமிஷன் பற்றியும் பேசிவிட்டுப் போனான். தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வட இந்தியத் தொழிலாளர்களை ஆள் பிடித்துத் தருவது சவுரவ் போன்ற ஏஜெண்ட்களுக்கு ஒரு தனி தொழில். இன்ன தொழில்தான் என்றில்லாமல் எல்லா தொழிலுக்குமான வட இந்திய வேலையாட்களை இந்த ஏஜெண்ட்களுக்குத் தெரியும். அலுமினிய உறுக்கு தொழில், நூற்பாலை, கோழிப் பண்ணை, ரெடிமேட் ஆடை தைக்கும் ஆலை , துணிகளுக்கு சாயம் போடும் ஆலை, சிஎன்சி மெஷின் மூலம் நட்டு மற்றும் போல்ட் தயாரிக்கும் தொழில், என எல்லா தொழிலுக்கும் தேவையான வட இந்திய வேலையாட்களை கூட்டி வருவதுதான் இந்த ஏஜென்ட்களின் வேலை. வேலையாட்களுடைய ரயில் டிக்கெட் மற்றும் இதர போக்குவரத்து செலவு ஏஜெண்ட்டுகளுடையது ; வேலையாட்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அதற்கான மருத்துவச் செலவு ஏஜெண்ட்டுகளுடையது ; நோயுற்ற வேலையாட்களை மருத்துவரிடம் கூட்டிச் செல்வது ஏஜெண்ட்களுடைய வேலை; இந்த வேலையாட்கள் வேலை செய்யும் ஒவ்வொரு நாளும் ஏஜெண்ட்களுக்கு கமிஷன் ரூ. 25 வரை. சிவக்குமாரின் கோழிப் பண்ணையில் 6 வட இந்திய தொழிலாளர்கள்; முத்துப் பாண்டியையும் சேர்த்து ஏழு தமிழ்நாட்டு ஆட்கள். அதில் இரண்டு பேர் தோட்ட வேலைக்கு; பண்ணை வேலைக்கு யாராவது விடுமுறை என்றால் தோட்ட வேலையை நிறுத்திவிட்டு பண்ணை வேலைக்கு தோட்ட ஆட்கள் வந்து விடுவார்கள். 'ஆம்பளையாளுக்கு' தினக்கூலி ரூ.800 'பொம்பளையாளுக்கு' ரூ.650. ஒரு நபர் ஒரு நாள் வேலை பார்த்தால் ஏஜென்ட் கமிஷன் ஒரு ஆளுக்கு ஒரு நாளுக்கு ரூ.25. சவுரவுக்கு மட்டும் மொத்தம் 104 வேலையாட்கள் கோவையில் திருப்பூரில் உள்ள வெவ்வேறு தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார்கள். அவன் மாத வருமானம் மட்டும் 104*25*26 = 67600 ரூ. மற்ற தொழிற்சாலைகளில் ஞாயிறு விடுமுறை. கோழிப்பண்ணையில் மட்டும் ஞாயிறு விடுமுறை இல்லை. கோழிகள் ஞாயிற்றுக் கிழமையும் முட்டை போடும்; ஞாயிற்றுக்கிழமையும் தீவனம் சாப்பிடும். சவுரவ் உட்கார்ந்த இடத்தில் மாதம் இவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கான தலைவலியும் உண்டு. 104 வேலையாட்களில் யார் வேலையை விட்டு நின்றாலும் அவசர நிலைகளில் அவர்களுக்கான மாற்று ஆள் ஏற்பாடு செய்வது, மாதம் ஒரு முறை அந்த தொழிற்சாலைகளுக்கு சென்று கணக்கு சரி பார்ப்பது என்று சவுரவிற்கும் வேலை சரியாக இருக்கும்.

பூஜா கோழிப்பண்ணையை பார்ப்பது இதுதான் முதன்முறை. இரும்புக் கதவின் வழியே நுழையும்போதே 'பக் பக் பக் பக்' என்று கோழி சத்தமும் கொஞ்சம் அடி எடுத்து வைத்தால் கோழி, கோழித்தீவனம், கோழிப்பீ என்று எல்லாம் கலந்த ஒரு வாடை. சுமார் இரண்டு ஏக்கர் நிலம் ; சுற்றி கம்பி வேலி ; முன்பக்கம் மட்டும் காம்பவுண்டு சுவர், அதில் வண்டிகள் வந்து போகும் அளவிற்கு பெரிய இரும்புக் கதவு. வேலியை ஒட்டி நீண்ட இடைவெளி விட்டு சில தென்னை மரங்கள். ஆங்காங்கே சில வேப்ப மரங்கள்; நடுவில் நீண்ட செவ்வக வடிவில் கட்டப்பட்ட ஒரு சிறிய ஷெட், மற்றும் மூன்று பெரிய ஷெட்டுகள்; பிறந்த கோழிக் குஞ்சுகள் வைக்க சிறிய ஷெட் , ஏழு வாரத்திலிருந்து பதினேழு வாரக் குஞ்சுகள் வைக்க ஒன்று, பதினெட்டாவது வாரத்திலிருந்து, அதாவது கோழிகள் முட்டை போடத் தொடங்கும் வாரத்திலிருந்து சுமார் எழுபது வாரம் வரை கோழிகள் வைக்க மீதி இரண்டு ஷெட்கள்; ஷெட்டுகளுக்கு அப்பால் வேலையாட்கள் தங்கிக் கொள்ள பத்துக்குப் பத்து அறைகள். திருமணமாகாத ஆண் அல்லது பெண் என்றால் இருவருக்கு ஒரு அறை; திருமணமான கணவன் மனைவி என்றாலும் ஒரு அறைதான். குழந்தை இருந்தால் இரண்டு அறைகளுக்கு நடுவே உள்ள சுவற்றில் ஒரு வாசல் அளவு சுவரை மட்டும் இடித்து கதவில்லாமல் இரண்டு அறை ஒதுக்கப் படும். சூப்பர்வைசர் முத்துப் பாண்டிக்கு மட்டும் தனி அறை. பொதுவாக இரண்டு கழிவறைகள்; இரண்டு குளியலறைகள்; வேலையாட்கள் வளர்த்துக் கொள்ளும் வாழைமரங்கள் கொஞ்சம், இரண்டு முருங்கை மரங்கள் , துளசி செடி, கற்பூரவள்ளி, கொஞ்சம் கீரை வகைகள், ஒரு செம்பருத்தி செடி. பொது குளியலறையில் இருந்து வெளியேறும் தண்ணீரிலேயே இந்த செடிகள் மரங்கள் வளர்ந்து விடும். அவ்வப்போது கொஞ்சம் பாத்தி மட்டும் கட்டிவிட வேண்டும்.

இன்னும் கொஞ்ச காலத்திற்கு இந்த வாடையும் நிலமும் எட்டாயிரம் கோழிகளும்தான் தன் உலகமாக இருக்கப் போகிறது என்று பூஜாவுக்கு வந்த நாளே புரிந்து விட்டது. பூஜா வரும்போது அந்தக் கோழிகள் இருபதாவது வாரத்தில் முட்டையிடத் தொடங்கியிருந்தன. ஆயிரம் கோழிகளுக்கு ஒரு ஆள் ; ஒரு ஷெட்டில் நாலாயிரம் கோழிகள் ; ஒரு ஷெட்டுக்கு ஒரு மேனேஜர் ; மொத்த பண்ணைக்கும் ஒரு மேற்பார்வையாளர். இரண்டு நாளைக்கு ஒரு முறையோ மூன்று நாளைக்கு ஒரு முறையோ சிவக்குமார் பண்ணைக்கு வருவார். சேர்ந்த சில நாட்களில் பூஜாவுக்கு அவளின் ஒரு நாள் வேலை என்னென்ன என்று புரிந்து விட்டது. கோழிகளுக்கு தினமும் காலை ஒரு முறை தீனி வைக்க வேண்டும். ஒரு கோழிக் கூண்டில் இரண்டு கோழிகள் இருக்கும். கூண்டிற்குள் முட்டையிட்டால் அந்த முட்டை சரிந்து வந்து ஒரு நீண்ட அரை வட்ட வடிவில் இருக்கும் தகடில் வந்து விழும். பூஜாவுக்கு ஒதுக்கப் பட்ட ஆயிரம் கோழிகள் ஒரு நாளைக்கு சுமார் எண்ணூறு முட்டைகள் போடும். அந்த முட்டைகளை கால அட்டவணை படி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பொறுக்கிக் கொண்டே இருக்க வேண்டும் ; குறைந்தது எட்டு முறையாவது அந்த முட்டைகளை பொறுக்க வேண்டும். கோழியின் ரத்த வாடையோடும் கறையோடும் இருக்கும் முட்டைகளை ஒரு துணியால் துடைத்து, முட்டைகளை குழிகள் நிறைந்த அட்டையில் வைக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எடுக்கவில்லை என்றால் அடுத்த கோழி போடும் முட்டை சரிந்து வந்து ஏற்கனவே இருக்கும் முட்டையில் இடித்து இரண்டு முட்டைகளிலும் விரிசல் விழுந்து விடும். அப்படி விரிசல் விழுந்த முட்டைகள் குஞ்சு பொரிக்காது. இது முதலாளிக்கு பெரும் நஷ்டம். அதனால் முட்டையில் விரிசல் விடாமல் பார்த்துக் கொள்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். முட்டைகளை பொறுக்கும் போது, துடைத்து வைக்கும் போது, பிறகு குளிரூட்டப்பட்ட அறைக்கு கொண்டு செல்லும் போது, அங்கிருந்து வண்டியில் குஞ்சு பொரிப்பகத்துக்கு கொண்டு செல்லும்போது, என எல்லா நிலையிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு வேலையாளுக்கு ஒதுக்கப் பட்ட ஆயிரம் கோழிகளுக்கு நூறு சேவல்கள் தனியாக ஒதுக்கப் பட்டிருக்கும். சேவலுக்கு வேறு வகை தீவனம் வைக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை அந்த சேவலில் இருந்து விந்தணுவை எடுத்து கோழிகளின் கருப்பையில் செலுத்த வேண்டும். இந்த வேலைதான் பூஜாவுக்கு சுத்தமாக பிடிக்காது . வேலைக்கு சேர்ந்த புதிதில் இதை எப்படி செய்ய வேண்டும் என்று முத்துப்பாண்டிதான் பூஜாவுக்கும் ஆஷிஷிற்கும் கற்றுக் கொடுத்தான். ஒருவர் சேவலின் கால்களையும் றெக்கைகளையும் அழுத்தி பிடித்துக் கொண்டே அதன் ஆசன வாயையும் றெக்கையையும் தடவிக் கொடுக்க வேண்டும். இரண்டு மூன்று முறை அப்படி தடவினால் அதன் ஆசனவாயில் இருந்து வெள்ளையாக கொஞ்சம் விந்தணு சொட்டும். அதனை மற்றோருவர் ஒரு சிறு பிளாஸ்டிக் குப்பியில் சிந்தாமல் சிதறாமல் பிடிக்க வேண்டும். இரண்டு பேர் இருந்தால்தான் இந்த வேலையை செய்ய முடியும். முதலில் பத்து சேவலில் இருந்து விந்தணுவை அந்த பிளாஸ்டிக் குப்பியில் நிரப்பிய பின் ஒரு சிறிய மருத்துவ சிறஞ்சு போன்ற பீச்சாங்குழல் கருவியைக் கொண்டு, அந்த விந்தணுவை உறிஞ்சி கோழியின் ஆசனவாயில் செலுத்த வேண்டும். பத்து சேவல்களின் விந்தணுவை நூறு கோழிகளுக்கு செலுத்தலாம். ஒரே சேவலில் இருந்து அடுத்தடுத்த நாள் விந்தணுவை எடுக்கக் கூடாது. எனவே அந்த நூறு சேவல்களை மூன்றாக பிரித்து, அந்த ஆயிரம் கோழிகளையும் மூன்றாக பிரித்து சரியான இடைவெளிகளில் அந்த சேவல்களின் விந்தணுவை எடுத்து கோழிகளுக்கு செலுத்த வேண்டும். அவரவருக்கு ஒதுக்கப் பட்ட ஆயிரம் கோழிகளையும் சேவல்களையும் மூன்றாக பிரித்து வைத்துக் கொண்டு, மற்ற வேலைகளை தனியாக செய்து விட்டு தினமும் மதியம் இரண்டு மணிக்கு மேல் இரண்டு வேலையாட்கள் சேர்ந்து நான்கு மணி வரை செயற்கைக் கருவூட்டல் வேலையை செய்ய வேண்டும். அதுதான் அதற்கான உகந்த நேரம். கோழிகளுக்கு சேர்க்கையின் போதும் நல்ல வெளிச்சம் வேண்டும். முட்டையிடும் போதும் நல்ல வெளிச்சம் வேண்டும். அதனால்தான் கோழிகள் பெரும்பாலும் இரவில் முட்டையிடுவதில்லை. கோழிகள் இரவில் முட்டையிடுவதில்லை என்பது பூஜாவுக்கு பெரும் நிம்மதியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இரவுகளில் முட்டையிட்டால் அதையும் வேலையாட்கள் பொறுக்க வேண்டியிருந்திருக்கும். பூஜாவின் ஆயிரம் கோழிகளுக்கும் ஆஷிஷின் ஆயிரம் கோழிகளுக்கும் அவர்கள் இருவருமே சேர்ந்து இந்த வேலையை செய்யத் தொடங்கினார்கள். கல்யாணம் ஆன புதிதில் கணவனும் மனைவியுமாக சேவலைத் தடவி அதன் விந்தை கோழியில் செலுத்துவது அவர்களுக்கு ஒரு கலவையான அனுபவமாக இருந்தது. சில நேரம் இருவரும் வெட்கப் பட்டு சிரிப்பார்கள்; மெல்லிய குரலில் கிசுகிசுத்து அவர்களே சிரித்துக் கொள்வார்கள். சில நாட்கள் பழகிய பிறகு அந்த வேலையை ஒரு இயந்திர கதியில் செய்தார்கள். ஒல்லியான தேகம் கொண்ட பூஜா செக்கச் செவேரென இடுப்பும் நீளமான கழுத்தும் தெரிய சேலை கட்டி, கையில் வெள்ளை நிற சங்கு வளையலோடு, சிவப்பு நிற கம்மலுடன் , அவள் வெட்கப் பட்டு சிரிப்பதை முத்துப் பாண்டி கவனித்துக் கொண்டுதானிருந்தான்.

இப்படி முட்டைகளைப் பொறுக்குவது, அவற்றை துடைப்பது, கோழிக்குத் தீவனம் வைப்பது, சேவல்களைத் தடவி செயற்கைக் கருவூட்டல் செய்வது என்று நாளெல்லாம் நின்று நடந்து குனிந்து வேலை . காலையும் இரவும் தன் அறையில் ஏதேனும் சமைக்க வேண்டும். பெரும்பாலும் பூஜா மற்றும் ஆஷிஷின் உணவு சப்பாத்தியும் உருளைக் கிழங்கும் , தயிர் சோறும் பச்சை மிளகாயும், சிலநேரம் வெங்காயம் என்று இருக்கும். அவளைத் தவிர அந்தப் பண்ணையில் வட இந்திய பெண்கள் யாரும் இல்லை. மற்ற வடஇந்தியர்கள் எல்லாம் ஆண்கள்தாம். பக்கத்து அறையில் இருக்கும் மணிகண்டன் எப்போதாவது மீந்து போன இட்லி மாவு அல்லது தோசை மாவு தந்தால் அன்று அதையே உணவாக்கிக் கொள்வாள். மதிய உணவிற்குப் பிறகு கொஞ்ச நேரம் அந்த செடிகளையும் மரங்களையும் பார்ப்பாள். ஆஷிஷ் வாங்கி வந்து அவர்கள் நட்டு வைத்த ரோஜா எப்பொழுது மொட்டு விடும் , செம்பருத்தி பூக்குமா, முருங்கை காய்க்குமா, கீரையை கமலாவோ மரகதமணியோ பறித்து விடுவதற்குள் தான் பறித்து விடலாமா என்று நினைப்பாள். எப்போதாவது அரிதாய் தென்னை மரத்திலிருந்து விழும் தேங்காய் பூஜாவிற்கு கிடைக்கும். அதை சிலநேரம் பச்சையாக தின்பாள்; சில நேரம் தேங்காய் சட்னி செய்வாள். வாழைமரம் குலை தள்ளினால், ஆளுக்கு ஒரு சீப்பு வாழை என்று முத்துப்பாண்டியே பிரித்துத் தந்து விடுவான். பூஜாவிற்கு கோவை வந்த பிறகு தேங்காய் சட்னியும், அவளே பறித்து சமைக்கும் முருங்கைக்காய் சாம்பாரும் பிடித்துப் போனது. நல்ல முருங்கைக்காயை பார்த்து விட்டால், அதை உடனே பறித்து , சப்பாத்திக்குக் கூட முருங்கைசாம்பார் வைத்து விடுவாள். சப்பாத்திக்கு முருங்கை சாம்பாரா என்று அதைக் கேட்கும் மற்ற வடஇந்தியர்களும் தமிழ்நாட்டவரும் சிரிப்பார்கள். "சாம்பார் நல்லருக்கு" என்று பூஜா பேசும் தமிழ் தமிழ்நாடு வேலையாட்களை சிரிக்க வைக்கும். வடஇந்தியர்களுக்குத் தெரியும் தமிழை விட முத்துப் பாண்டிக்கு ஹிந்தி கொஞ்சம் கூடுதலாகவே தெரியும்.

கிடைக்கும் சம்பளத்தை பூஜாவும் ஆஷிஷும் பெற்றோர்களுக்கு அனுப்பிக் கொண்டு கோழிப் பண்ணையில் வாழ்வைக் கழித்தனர். பூஜாவிற்குக் கோழியின் வாடை பழக்கப் பட்டு போய் விட்டது. அனால் வேலைப் பளு உடலுக்கு எப்போதும் அசதியைக் கொடுத்தது. அவள் மீதும் ஆஷிஷ் மீதும் எப்போதும் கொஞ்சம் கோழி வாடை மீதமிருக்கும். ஆஷிஷ் இரவில் தன்னை நெருங்கும் போதெல்லாம் சேவலைத் தடவிக் கொடுப்பதும் கோழிக்குக் கருவூட்டலும்தான் அவள் நினைவிற்கு வரும். தானும் ஆஷிஷும் கிட்டத்தட்ட அந்த கோழிகள் போலத்தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றும். கோழிகளுக்கு கூடு. அவர்களுக்கு அந்த அறை. கோழிகளுக்கு அந்த ஷெட்டைப் போல தங்களுக்கு அந்த இரண்டு ஏக்கர் நிலம். அவ்வளவுதான் வித்தியாசம் என்று தோன்றும். அந்த கோழிகளை அவளுக்குப் பிடிக்கும். ஆனால் சில நேரங்களில் அந்தக் கோழிகளைப் பார்த்தாலே எரிச்சலாக இருக்கும். சில நேரங்களில் கோழிகள் மீது பாவமாக இருக்கும். சில கோழிகள் முட்டையிடும் போது , அந்த முட்டை ஓடு உடைந்து, கண்கள் பிதுங்கி முட்டை வெளிவாராமலேயே கூண்டிலேயே செத்துக் கிடப்பதை பார்த்திருக்கிறாள். கருவுற்றால் தானும் அவ்வாறே பிரசவத்தின் போது இறந்து விடுவோமோ என்றும் பயந்திருக்கிறாள்.

ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஆறாயிரத்து ஐநூறு முட்டைகள் விழுந்து கொண்டே இருக்கும். அதில் பெரும்பாலான முட்டைகள் கோழிக்குஞ்சுகளாய் பொறித்து விடும். அந்த ஊரைச் சுற்றி உணவகத்திலோ வீட்டிலோ யாரோ தட்டில் சாப்பிடும் கோழிக்கறிக்குப் பின்னால் தன்னுடைய உழைப்பு இருக்கிறது என்று சில சமயம் பெருமை கொள்வாள். தான் நினைப்பதை எல்லாம் ஆஷிஷிடம் சொல்ல வேண்டும் என்றுதான் நினைப்பாள். ஆனால் அதற்கான நேரம் இருக்காது. எப்போதாவது நேரம் இருந்தால் அந்நேரத்தில் அவள் மறந்து விடுவாள்.

கொரோனா முதல் அலையில் தப்பித்த ஆஷிஷின் குடும்பம் இரண்டாவது அலையில் சிக்கியது. ஆஷிஷ் தன் பெற்றோருக்கு கொரோனா தாக்கியதால் சட்டென கொல்கத்தா கிளம்பினான். பெற்றோரை அரசு நடத்தும் சிறப்பு மருத்துவமனையில் சேர்த்தான். ஆஷிஷிற்கும் கொரோனா நோய் தாக்கியது. தனக்கு சர்க்கரையோ இரத்த அழுத்தமோ இல்லையென்பதால் வீட்டிலேயே இருந்து யாரோ சொன்ன மாத்திரைகளை எடுத்துக் கொண்டான். பூஜா தொலைபேசியில் மருத்துவமனைக்கு போகச்சொல்லியும் ஆஷிஷ் கேட்கவில்லை. ஒரு வாரத்தில் ஆஷிஷின் அப்பா இறப்பு செய்தி வந்தது. பூஜா அங்கு வர வேண்டாமென ஆஷிஷ் கறாராகச் சொல்லிவிட்டான். பண்ணையிலேயே பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டான். அடுத்த மூன்று நாட்களில் ஆஷிஷும் இறந்து விட்டான்.

பூஜாவின் அப்பா தொலைபேசியில் செய்தி சொன்னபோது, அவள் முட்டைகளை ஒரு தட்டில் பொறுக்கிக் கொண்டிருந்தாள். ஒரு கையில் மொபைலை எடுத்துப் பேச, செய்தி கேட்டவுடன் அந்த முட்டைத் தட்டை அப்படியே கீழே போட்டு ஓ வென்று அழத் தொடங்கினாள். பூஜாவின் அலறல் சத்தம் அந்த பண்ணை முழுக்க கேட்டது. மணிகண்டன், கமலா, மரகதமணி, ரூபேஷ் யாதவ், ராகுல், அமித்குமார், சுனில் என அனைவரும் அவளைச் சூழ்ந்து கொண்டனர். முத்துப்பாண்டியும் அருகில் வந்து விட்டான். கமலாவும் மரகதமணியும்தான் அவளை கைத்தாங்கலாக அவள் அறைக்கு அழைத்துச் சென்றனர். முத்துப்பாண்டி உடையாத முட்டை எதுவும் கீழே இருக்கிறதா என்று பார்த்தான்.

பூஜாவிற்கு இந்த உலகமே இருட்டாகத் தெரிந்தது. கொத்துக் கொத்தாக மடியும் மக்களை அரசே அடக்கம் செய்து விட்டதால் ஆஷிஷின் முகத்தை கூட பூஜா கடைசியாகப் பார்க்க வில்லை. பாஷை தெரியாத ஊர். கையில் சொற்ப பணம். வயதான அப்பா. இறந்த கணவன். அவள் அறையில் படுத்து அழத் தொடங்கியவன் இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை. கமலாவும் மரகதமணியும்தான் மாற்றி மாற்றி அவளை ஆசுவாசப் படுத்தி உணவு கொடுத்தனர். ஆஷிஷ் போக மற்றோரு வேலையாள் வரவில்லை. ஆஷிஷும் பூஜாவும் வேலைக்கு இல்லை. முத்துப்பாண்டி பூஜாவின் கோழிகளை மட்டும் மற்ற வேலையாட்களுக்கு பிரித்துக் கொடுத்தான். பூஜாவின் கோழிகளை தானும் பார்த்துக் கொண்டான். கமலாவும் மரகதமணியும் பண்ணை வேலையில் உள்ள போது முத்துப் பாண்டி பூஜாவைப் பார்த்து ஆறுதல் சொல்லப் போனான். முத்துப்பாண்டிக்குத் தெரிந்த ஹிந்தியில் ஆறுதல் சொன்னான். தெரியாத வார்த்தைகளுக்கு செய்கை காட்டினான். கடவுள் அவளுக்கு நல்ல வழி காட்டுவார் என்று மேலே கை காட்டி ஆறுதல் சொன்னான். அழுது அழுது இருமிக் கொண்டிருந்த பூஜாவின் தலையைப் பிடித்து வாயில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினான். பூஜாவும் அப்படியே முத்துப்பாண்டியின் மடியில் படுத்து மீண்டும் அழத் தொடங்கினாள். முத்துப்பாண்டியின் மடியில் முதன்முதலில் ஒரு பெண் படுத்து அழுகிறாள். அவன் கண்ணிலும் கொஞ்சம் கண்ணீர். தயங்கி தயங்கி அவள் தலையை கோதி விட்டான்.

பூஜா ஒரு வாரமாகியும் பண்ணை வேலைக்கு வரவில்லை. அவள் அறையிலேயே கிடந்தாள். கமலாவும் மரகதமணியும் அவள் அறைக்குப் போவதை குறைத்து விட்டனர். பிறகு தவிர்த்துவிட்டனர். முத்துப்பாண்டிதான் அவள் அறையில் இருந்தான். முத்துப்பாண்டி பூஜாவின் அறையில் இரவெல்லாம் தங்குவதை மணிகண்டன் பார்த்து விட்டதால் அது எல்லா வேலையாட்களிடம் பேசுபொருளானது. முத்துப்பாண்டி பூஜாவின் ஐநூறு கோழிகளை பார்த்துக் கொண்டு மீதி ஐநூறு கோழிகளை மட்டும் பிரித்துக் கொடுத்தான். முத்துப் பாண்டி வேலை பார்க்க சிவக்குமாரின் இருக்கைக்கு சற்று தூரத்தில் ஒரு மேசை மற்றும் நாற்காலி இருக்கும். அந்த மேசையில்தான் எல்லா கணக்கும் இருக்கும். தினமும் எத்தனை முட்டை வந்தது, எவ்வளவு கிலோ தீவனம் வாங்கியது, எவ்வளவு தீவனம் வாங்க வேண்டும், எப்பொழுது வாங்க வேண்டும், கோழிகளுக்கு எப்போது ஊசி போட வேண்டும், என்ன மருந்து தர வேண்டும், எப்போது மருத்துவர் வருவார், அடுத்து குஞ்சுகள் எப்போது வாங்க வேண்டும், என்ற கால அட்டவணை மற்றும் பதிவேடு அங்குதான் இருக்கும். சிவக்குமார் இருக்கை அங்கு இருப்பதால் அந்த அறையில் குளிரூட்டி சாதனம் இருந்தது. ஒரு வாரமாக தன் அறையிலேயே கிடந்த பூஜாவை தன் இருக்கைக்கு வரும்படி அழைத்துச் சென்றான். சிவக்குமாரின் இருக்கைக்கு பின் ஒரு பெரிய சாய்பாபா படம். படத்தை சுற்றி பெரிய மாலை. சில்லென்று குளிரூட்டப்பட்ட அறை.

"இத்னா படா ரூம் ஆப் கே லியே !" என்று ஆச்சர்யத்துடன் முத்துப்பாண்டியை பார்த்து கேட்டாள் பூஜா. " ஓனர் கா ரூம் " என்றான். அது வேலையாட்கள் தங்கும் அறையை விட பெரிய அறையாக இருக்கிறதே என்று பூஜா ஆச்சரியப் பட்டாள். மீண்டும் தன் அறைக்கு போகும்போது அந்த ரோஜாச் செடி மொட்டு விட்டிருப்பதை முத்துபாண்டிதான் அவளுக்கு காட்டினான்.

பண்ணையில் உள்ள வேலையாட்களுக்கு தினசரி வேலை மட்டும்தான் தெரியும். முத்துப் பாண்டிக்குத்தான் தொழில் நுணுக்கங்கள் தெரியும். தினமும் வரும் முட்டைகளை கணக்கெடுத்து பதிவேட்டில் எழுதி வருவான். முட்டையின் எண்ணிக்கையோ அல்லது முட்டையின் அளவோ குறைந்தால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டியது அவன் பொறுப்பு. தாய்க் கோழி முட்டை என்பது வெளுத்த பழுப்பு நிறத்தில் சாப்பிடும் முட்டை அளவை விட பெரிதாக இருக்கும். அந்த அளவு குறைந்தால் கோழிக்கு தீவனம் போதவில்லை என்று முத்துப் பாண்டிக்குத்தான் தெரியும். வெயில் காலத்தில் கோழிகள் குறைந்த அளவில்தான் தீவனம் உண்ணும். குளிர் காலத்தில் தீவன அளவு கொஞ்சம் அதிகரிக்கும். அதற்கேற்றவாறு தீவனம் கொடுக்க வேண்டும். மழை மற்றும் குளிர் காலத்தில் பகல் வெளிச்சம் குறைந்து விரைவில் இருள் சூழ்ந்து விடும். ஷெட்டுக்குள் அந்த இருளை அகற்ற மாலை நான்கு மணிக்கு மேல் நல்ல வெளிச்சம் தருகிற மாதிரி பல்புகள் போட்டு வைக்க வேண்டும். வெளிச்சம் இல்லாத பட்சத்தில் கோழிகள் முட்டையிடாமல் வெளிச்சத்திற்காக காத்திருந்து முட்டையிடும். இதனால் முட்டை எண்ணிக்கை குறைந்து விடும்.

சிவக்குமார் இந்த இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கு முன்பு வேறு ஓர் இடம் வாங்குவதாக இருந்தது. அந்த இடம் கிழக்கு மேற்கு திசையில் நீளம் குறைவாகவும் தெற்கு வடக்கு திசையில் அதிக நீளத்தோடும் இருந்தது. கிரையத்திற்கு முன்பு எதேச்சையாக அந்த இடத்தை பார்க்க போன முத்துப் பாண்டி, " அண்ணே .. இந்த இடம் சரிப்பட்டு வராதுண்ணே. தெக்க வடக்கா இருக்கு. நாம கிழக்கு மேற்கா தான ஷெட்டு கட்டணும்" என்றான். அப்போதுதான் சிவகுமாருக்கும் புரிந்தது. தெற்கு வடக்காக ஷெட்டை கட்டினால், காலையும் மாலையும் சூரிய ஒளி கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் நேராக கோழிகளின் மீது படும். வெளிச்சம் வேண்டுமே தவிர கோழிகள் அவ்வளவு சூடு தாங்காது. செவ்வக வடிவில் கிழக்கு மேற்காக கட்டினால் இரண்டு பக்கமும் சூரிய ஒளியை மறைத்து விடலாம். எனவே கோழி ஷெட்டுகள் பெரும்பாலும் கிழக்கு மேற்காகத்தான் கட்டுவார்கள். இது சிவக்குமாருக்கும் தெரியும். இருந்தாலும் நிலம் வாங்குவதில் கவனம் இருந்ததால், அவருக்கு இந்த பிரச்சினை மனதில் தோன்றவில்லை. நல்ல வேளையாக கிரயத்திற்கு முன்பு பார்த்தான். பிறகு சிவக்குமார் அந்த நிலத்தை வாங்காமல் இந்த இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கினார். இப்படி தொழில் நுணுக்கம் தெரிந்த முத்துப்பாண்டிதான் சிவகுமாருக்கு பெரிய மன பலம்.

பூஜா முத்துப்பாண்டியின் நெருக்கம் சிவகுமார் காது வரைக்கும் சென்றது. "இன்னாப்பா.. பூஜா ரூம்லயே தங்குறியாம் .. நீதான் அவளை பாத்துக்குறியாம்.. சேதி வருது.. பிரச்சினை வராம பாத்துக்க.. அவளை பாத்துட்டு தொழில வுட்றாத" என்று சிவக்குமார் முத்துப் பாண்டிக்கு பட்டும் படாமலும் பேசினார். " சரிண்ணே .. பாத்துக்கறேன்." என்று அமைதியாக முடித்துக் கொண்டான் முத்துப்பாண்டி. சிவகுமார் தொழிலுக்கு முத்துப் பாண்டிதான் எல்லாம். கிட்டத்திட்ட பதினைந்து வருடங்களாக, கூடவே இருக்கிறான். இந்த தாய்க் கோழிப் பண்ணை தொடங்கி ஐந்து வருடங்கள்தாம் ஆகிறது. அதற்கு முன் சிவக்குமார் முட்டைக் கோழிப் பண்ணைதான் நடத்தி வந்தார். முத்துப்பாண்டி இருக்கும் தைரியத்தில்தான் சிவகுமார் தொழிலில் அதிகம் கவனம் செலுத்தத் தேவையில்லாமலிருக்கிறது. பதினைந்து வருடங்களுக்கு முன் முத்துப்பாண்டி சிவக்குமாரிடம் வேலைக்கு சேர்ந்தது முட்டைக் கோழிப் பண்ணையில்தான்.

செல்லையா தேவருக்கு வேண்டப்பட்ட ஒரு முக்கிய பிரமுகர் சிவக்குமாருக்குத் தெரிந்த வேறு ஒரு நண்பர் மூலம் பேசி சங்கரன்கோவிலில் இருந்த முத்துப் பாண்டியை சிவக்குமாரை பார்க்கச் சொல்லி கோவைக்கு அனுப்பி வைத்தார்கள். என்ன வேலை என்ன சம்பளம் என்று எதுவும் தெரியாது. வேலையை விட முத்துப்பாண்டியின் உயிரை காக்கவே எதுவும் தெரியாமல் அவசர அவசரமாக சங்கரன் கோவிலில் இருந்து கோவைக்கு அனுப்பப் பட்டான். இரண்டு நாட்களுக்கு முன்பு வரை சங்கரன்கோவிலில் இருந்த முத்துப்பாண்டிக்கு அடுத்த பதினைந்து வருடங்கள் கோவையில் இருப்பான் என்று சற்றும் நினைக்கவில்லை. அந்த இரண்டு நாள்களில்தாம் எல்லாம் நடந்து விட்டது.

கலப்பாக்குளம்தான் முத்துப் பாண்டிக்கு சொந்த ஊர். சங்கரன்கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர். அடுத்த நாள் தொடங்கவிருக்கும் கோமதியம்மன் கோயில் திருவிழாவுக்காக சங்கரன் கோயிலைச் சுற்றி உள்ள எல்லா ஊர்களும் களை கட்டியிருந்தது. நகர பேருந்துகள் எல்லாம் எப்போதும் கூட்டமாய் காணப் பட்டன. பதினோரு நாள்கள் நடக்கப் போகும் கோமதியம்மன் திருவிழாவில் முதல் நாள் எப்போதும் தேவர் மண்டகப் படி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தின் மண்டகப் படி. இரண்டாம் நாள் கோனார் ; மூன்றாம் நாள் பிள்ளைமார் ; நான்காம் நாள் முதலியார் ; ஐந்தாம் நாள் வண்ணார் ; ஆறாம் நாள் சங்குத் தேவர் ; ஏழாம் நாள் மூப்பனாரு ; எட்டாம் நாள் அம்பட்டையரு ; ஒன்பதாம் நாள் தெலுங்குச் செட்டியார் ; பத்தாம் நாள் வாணிபச் செட்டியார் ; பதினோராம் நாள் ஆடித் தபசு, பொது திருவிழா.

திருவிழாக்கோலம் பூண்டிருந்த சூழலில் திருவேங்கடத்திலிருந்து பெருங்கோட்டூர் கலப்பாக்குளம் வழியாக சங்கரன்கோவில் போகும் பேருந்தில் இளவயது முத்துப்பாண்டி தன் சகாக்களுடன் கலப்பாகுளம் பேருந்து நிறுத்தத்தில் ஏறினான். அதே நிறுத்தத்தில் கட்டை மீசையுடன் நிறைய பெரியவர்களும் ஏறினார்கள். பேருந்தில் நல்ல கூட்டம். கலப்பாகுளத்தில் ஏறிய யாருக்கும் உட்கார இடம் கிடைக்கவில்லை. பெருங்கோட்டூரில் ஏறிய கல்லூரி மாணவர்கள் பெரியவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். தன் மறவர் மீசையை தடவிய படி ராமலிங்கத் தேவர் மூன்று இளைஞர்களைப் பார்த்து " ஏய் எந்திரிடா.." என்றார். "எதுக்கு ? " என்று பதில் வந்தது. " ஏய் எந்திர்ராங்கேன். எதுக்கு னு கேப்பியா .. எந்திர்ரா " என்றார். அந்த மூன்று பேர் இருக்கையில் மூவரும் எழ வில்லை. " ஏலேய் .. மறவமாரு நிக்க, குடும்ப மாருக்கு சீட்டு கேக்குதோ .. உங்கள எல்லாம் வெக்க வேண்டிய எடத்துல வெக்கணும் ... எந்திர்ரா " என்று பசுபதி பளார் என்று இரண்டு கல்லூரி மாணவர்களை அடித்து விட்டார். அவர்கள் பசுபதியை திருப்பி அடித்தனர். இளைஞன் கையில் அணிந்திருந்த இரும்பு வளையத்தால் ராமலிங்கத் தேவருக்கு மூக்கில் ஒரு குத்து விழுந்தது. பசுபதி முத்துப்பாண்டிக்கு மாமன் முறை. மாமன் அடி வாங்கியதை பார்த்த முத்துப் பாண்டி அவன் பங்குக்கு அடித்தவன் மண்டையை பிடித்து பேருந்து ஜன்னலோடு மிதித்தான். முத்துப் பாண்டியின் சகாக்களின் ஒருவன் இன்னொருவனின் சட்டையை பிடித்து கிழித்தான். பெருங்கூட்டூர் பெரியவர் ஒருவர் முத்துப்பாண்டியின் சகாவின் தலை மயிரைப் பிடித்து முகத்தில் குத்திக் கொண்டிருந்தார். "ஏய் ஏய்.. சும்மா இரப்பா .. " என்று குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கையில் கைகலப்பு பெரும் கலவரமாகியது. பேருந்து நிறுத்தப்பட்டது. கலப்பாகுளத்து மறவ மாருக்கும் பெருங்கோட்டூர் குடும்பமாருக்கும் பெரும் கலவரம் வெடித்தது. ராமலிங்கத் தேவரும் பசுபதியும் அங்கிருந்து விரைந்து புறப்பட்டனர். முத்துப்பாண்டிக்கு கோவம் குறையவில்லை. பெருங்கோட்டூரில் ஏறிய பள்ளி மாணவர்களை கூட அடிக்க ஆரம்பித்தான். ரோட்டில் கிடந்த ஒரு மரக் கட்டையை எடுத்து பெருங்கூட்டூர் பெரியவரை அடித்ததில் அவருக்கு மண்டை உடைந்தது.

அன்றைய மாலை மலரில் அதுதான் தலைப்பு செய்தி. இரண்டு சாதிக்கு இடையில் கலவரம் என்று மாவட்டம் முழுக்க பேச்சு. அன்று இரவு அரிவாளால் வெட்டி கொல்லப் பட்ட அடையாளம் தெரியாத ஒரு பிணம் கலப்பாகுளம் ரயில்வே தடத்தில் கிடைத்தது. ரயில்வே தடங்களிலும் பாலத்துக்கு அடியிலும் அவ்வப்போது பிணங்கள் கிடைப்பது அந்த ஊருக்கு ஒன்றும் புதிதல்ல. பிணத்தை பார்த்ததும் மக்கள் அது மறவர் என்று சொல்லிவிட்டனர். நிறைய வெட்டு பட்டு இறந்து கிடந்தால் அது மறவர் பிணம். ஓர் ஆள் வெட்டப்பட்டு இறந்த பிறகும் மீண்டும் மீண்டும் வெறி கொண்டு அரிவாளால் வெட்டப் படுவார். வெட்டியது ஒரு வெறி கொண்ட பாதிக்கப்பட்ட ஆளாக இருக்கும். ஆனால் மற்ற பிணங்களில் இரண்டு அல்லது மூன்று வெட்டுத்தான் இருக்கும். இறந்தபிறகு வெட்ட மாட்டார்கள். இது ஊருக்குத் தெரியும். வெட்டப் பட்டது பசுபதியின் பிணம் என்று ஊருக்குத் தெரிந்து விட்டது. முடிந்த கலவரம் மறுபடியும் ஆரம்பமானது. பெருங்கோட்டூர் கலப்பாக்குளம் சங்கரன் கோவில் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. மறுநாள் காலை பெருங்கோட்டூர் மாரியம்மன் கோவிலுக்கு பின்புறம் பேருந்து சீட்டில் அமர்ந்து வந்த இளைஞனின் பிணம் கிடைத்தது. முதலில் கலப்பாகுளத்தில் ஒரு கொலை. பிறகு பெருங்கோட்டூரில் ஒரு கொலை. அடுத்த இலக்கு கலப்பாக்குளம் தான். அது முத்துப்பாண்டியாக இருக்கலாம். அல்லது அவனது சகாவாக இருக்கலாம். அல்லது ராமலிங்கத் தேவராக இருக்கலாம். அதனால்தான் முத்துப்பாண்டியை உடனடியாக வேறு ஊருக்கு அனுப்பி வைத்தார் செல்லையா தேவர். "இந்த பிரச்சினை முடியரவர இங்க வராத... நாலு காசு சம்பாதிச்சுட்டு அப்புறம் வா .. " என்று அன்று அனுப்பி வைக்கப் பட்டவன்தான் முத்துப் பாண்டி.

பழசை எல்லாம் மறந்து பதினைந்து வருடத்தில் முத்துப்பாண்டி இப்பொழுது ஒரு தொழில் காரனாக மாறி விட்டான். இவன் சம்பளத்தில் அவ்வப்போது வீட்டிற்குப் பணம் அனுப்பி வந்தான். இவனைப் பார்க்க வேண்டுமென்றால் செல்லையா தேவரே தன் மனைவியுடன் கோவைக்கு வந்து பார்த்து விட்டு செல்வார். பூஜாவுடனான இந்தத் திடீர் பரிவு அவன் வாழ்க்கையை கொஞ்சம் புதுப்பித்திருக்கிறது. ஆஷிஷ் இறந்து இரண்டு வாரத்தில் பூஜா பண்ணை வேலைக்கு வந்து விட்டாள். அவள் ஆற்றாமையில் இருந்து தேறியதில் முத்துப்பாண்டிக்கு பெரும் பங்கு உண்டு. கோழிகள் அறுபதாவது வாரத்தில் இருந்தன. இன்னும் பத்து அல்லது பதினைந்து வாரங்களில் அந்த கோழிகள் முட்டையிடும் சக்தியை இழந்து விடும். அவைகளை கறிக்கு விற்க வேண்டும். பூஜாவின் கோழிகளுக்கு செயற்கை கருவூட்டல் செய்வதற்கு முத்துப்பாண்டி பூஜாவுடன் சேர்ந்து கொண்டான். பூஜாவின் அறையில் அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் சமைக்கத் தொடங்கினர். முருங்கைக்காய் சாம்பாருடன் முத்துப் பாண்டியும் சப்பாத்தி சாப்பிட்டான். இப்படி பெயரில்லாத உறவாக இவர்களின் உறவு தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு குளிர்ந்த இரவில் "மே தும்சே ஷாதி கர்னா ... தும்சே ஓகே ? " என்று பூஜாவிடம் கேட்டான் . பூஜா கண்ணீருடன் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள். அவனும் அவளைக் கட்டி அணைத்தான். மடியில் படுத்து அழுது கொண்டிருந்த பூஜா முத்துப் பாண்டியின் பக்கத்திலேயே படுக்கத் தொடங்கினாள்.

மறுநாள் புதிதாக எட்டாயிரம் கோழிக் குஞ்சுகள் வந்திறங்கின. நேற்று பிறந்த கோழிக் குஞ்சுகள். குட்டி குட்டியாய் அவ்வளவு அழகாக இருந்தன. பூஜா பிறந்த கோழிக் குஞ்சுகளை மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டு வந்தாள். நேற்று முத்துப்பாண்டியின் நம்பிக்கையளிக்கும் வார்த்தை; இன்று புதிய கோழிக் குஞ்சுகள். பூஜா கொஞ்சம் உற்சாகமாக காணப் பட்டாள். இந்த கோழிக் குஞ்சுகள் ஆறு வாரங்களை எட்டும் போது, அந்த இரண்டு ஷெட்டில் உள்ள பெரிய கோழிகளை விற்கப் பட்டிருக்கும். அந்த இரண்டு ஷெட்டுக்கு கீழே கோழிப் பீ குன்று போல குவிந்திருந்தது. எப்படியும் மூன்று அல்லது நான்கு டிராக்டர் லோடு வரும். ஒரு லோடு கோழிப்பீ மூவாயிரம் ரூபாய். விவசாய நிலத்திற்கு சிறந்த உரம். இன்னும் இரண்டு மூன்று வாரத்தில் அந்த கோழிப்பீயை லோடு ஏற்றி அனுப்பி விடவேண்டும் என்று முத்துப் பாண்டி திட்டமிட்டிருந்தான்.

ஒரு பத்து லட்சம் ரூபாய் இருந்தால் தானும் ஒரு முட்டைக் கோழிப் பண்ணை தொடங்கலாம். எப்படியாவது யாரிடமாவது கடன் வாங்கி ஒரு முட்டைக் கோழிப் பண்ணையை தொடங்கிவிடவேண்டும் என்றும் அதை தாங்கள் இருவருமே பார்த்துக் கொள்ளலாம் என்றும் பூஜாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வப்போது பூஜா கொஞ்சம் தமிழ் கற்றாள். இவர்கள் திருமணம் பற்றி எல்லா வேலையாட்களும் பேசாத தொடங்கினர். ரோஜா மொட்டு மலர்ந்து அழகிய ரோஜாப்பூவாக பூத்திருந்தது.

நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. முத்துப் பாண்டி தன் பெற்றோரிடம் சொல்லி திருமணத்தை கோவையிலேயே செய்து கொண்டு இங்கேயே இருந்துவிடலாம் என்று ஒரு முடிவாக இருந்தான். முட்டையிடும் கோழிகளை விற்றுவிட்டால், ஆறு வாரக் கோழிக்குஞ்சுகளை அடுத்த ஷெட்டுக்கு மாற்றி விட்டால் ஒரு பண்ணிரண்டு வாரத்திற்கு வேலை கொஞ்சம் குறைவு. முட்டை போடும் கோழிகள் இருக்காது. இருக்கிற கோழிக்கு வெறும் தீவனம் மற்றும் ஊசி போட்டால் போதும். பன்னிரண்டு வாரத்திற்கு கோழிக் குஞ்சுகள் முட்டை போடாது. அந்த நாட்களில் வேலையாட்கள் ஊருக்குச் செல்வது வழக்கம். முத்துப் பாண்டியும் பதினைந்து வருடம் கழித்து ஊருக்குச் சென்று வரவேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். ஊருக்குப் போனால் இரண்டு மாதங்கள் கழித்துதான் வர முடியும் என்று பூஜாவிடமும் சொல்லி இருந்தான்.

இன்று காலை கோழிப்பீ லோடு எடுக்க வண்டி வந்திருந்தது. எல்லா வேலையாட்களும் ஒரு மண்வெட்டி கொண்டு கோழிப்பீயை அள்ளி அள்ளி டிராக்டரில் ரொப்பிக் கொண்டிருந்தனர். நான்கு லோடு கோழிப்பீ இருந்தது. அதனால்தான் பூஜாவின் மேல் கோழிப்பீ நாற்றம் வீசியது. என்ன சோப்பு போட்டு குளித்தாலும் அந்த நாற்றம் போக இரண்டு நாட்களாவது ஆகும். " அண்டா காடி ஆகயா ... மே ஜாதா " என்று சொல்லிவிட்டு வந்த முத்துப் பாண்டி பிரபுவிடம் குளிரூட்டப் பட்ட அறையிலிருந்த முட்டைகளை எடுத்து கொடுத்தான். எத்தனை முட்டை என்று கணக்கு எழுதிக் கொண்டான். திரும்பி அறைக்கு வரும் போது பூஜா தூங்கிக் கொண்டிருந்தாள்.

அடுத்த வாரம் கோழிகள் விற்பனைக்குப் போய் விடும். கோழிகள் விற்றால் அந்தக் காசில் சிவக்குமார் வேலையாட்களுக்குக் கொஞ்சம் போனஸ் கொடுப்பது வழக்கம். தான் ஊருக்குப் போவதாலும் கல்யாண செலவு இருப்பதாலும் இந்த முறை கொஞ்சம் அதிக போனஸ் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தான் முத்துப்பாண்டி. கல்யாணச் செலவைக் குறைத்து விரைவில் கோழிப்பண்ணை ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான்.

கோழிகள் விற்கப் பட்டன. ஏழு வார கோழிக் குஞ்சுகள் அடுத்த ஷெட்டுக்கு மாற்றப் பட்டன. ஒரு கூண்டில் மூன்று குஞ்சுகள் வீதம் அடுத்த ஷெட்டும் எட்டாயிரம் கோழிக் குஞ்சுகளால் நிரப்பப் பட்டன. ரூபேஷ் யாதவ், ராகுல், அமித்குமார், சுனில், என வட இந்தியர்கள் விடுமுறையில் புறப்பட்டனர். மணிகண்டனும் தேனிக்குப் புறப்பட்டான். நாற்பது வயதான கமலா தனக்கு யாருமில்லை என வேலையில் தொடர்ந்தாள். பூஜாவைக் கட்டி அணைத்து முத்தமிட்டுவிட்டு முத்துப் பாண்டியும் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டான். கண்ணீருடன் பூஜா வழியனுப்பி வைத்தாள். சிவக்குமார் முத்துப்பாண்டிக்குக் கொடுத்த இருபத்தைந்தாயிரம் ரூபாயில் ஒரு ஐந்தாயிரம் ரூபாயை பூஜாவிடம் கொடுத்துவிட்டுப் போனான்.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தன் ஊருக்குப் போகும் உற்சாகத்தில் இருந்தான் முத்துப் பாண்டி. கலப்பாக்குளம் பேருந்து நிலையம் முற்றிலும் மாறி இருந்தது. கலப்பாகுளத்து ஆட்கள் கூட மறவர் மீசை இல்லாமல் கட்டை மீசையுடன் இருந்தனர். வயதானவர்கள் மட்டும் மறவர் மீசை வைத்திருந்தார்கள். பேருந்து நிறுத்தத்திற்கு பக்கத்திலேயே ஒரு சர்வதேச தனியார் பள்ளி ஒன்று கட்டப் பட்டிருந்தது. செல்லையா தேவரும் அவன் அம்மாவும் அவனை கட்டி அணைத்து வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

முத்துப் பாண்டி இல்லாத அந்த கோழிப் பண்ணை பூஜாவுக்கு என்னவோ போல் இருந்தது. கமலாதான் பேச்சுத் துணைக்கு இருந்தாள். கொஞ்ச நேரம் கோழிகளுக்கு தீவனம் போட்டாள் . முத்துப் பாண்டியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதுவரை நேரில், பாதி வார்த்தை பாதி செய்கையில் பேசியவர்களுக்கு தொலைபேசியில் சரளமாக கோர்வையாக பேச்சு வரவில்லை. அவனுக்கு ஹிந்தியில் சொற்பமான சொற்களும் வாக்கியங்களும் மட்டுமே தெரியும். அவளுக்குத் தெரிந்த தமிழும் அப்படித்தான். என்ன பேசுவதென்று தெரியாமல் இருவரும் தொலைபேசி உரையாடலை தவிர்த்தனர். நேரில் வா பேசிக் கொள்ளலாம் என்று பூஜா சொல்லி விட்டாள்.

பண்ணிரண்டு வாரங்கள் போனதே தெரிய வில்லை. ரூபேஷ் யாதவ், ராகுல், அமித்குமார், சுனில் அனைவரும் இரண்டு நாட்களில் வந்து விடுவார்கள். மணிகண்டன் வந்து விட்டான். மரகத மணியும் நாளை வந்து விடுவாள். அவன் எப்போது வருவான் என்று கேட்க முத்துப் பாண்டியின் தொலைபேசிக்கு அழைத்தால், அது அணைத்து வைக்கப் பட்டிருந்தது. சிவக்குமாரிடம் முத்துப் பாண்டி பற்றி கேட்டதற்கு அவருக்கும் முத்துப் பாண்டி பற்றி எந்த தகவலும் இல்லை என தெரிவித்து விட்டார். அவன் வருவான் என்று ஒரு பக்கம் நம்பிக்கை இருந்தாலும் அவளுக்கு அழுகை வந்தது.

அத்தனை வேலையாட்கள் விடுமுறையில் போய் குளியலறையில் இருந்து வெளியேறும் தண்ணீர் குறைந்ததனால், செடிகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. கடைசியில் இருந்த அந்த ரோஜாசெடியில் மலர்ந்திருந்த ரோஜாக்கள் எல்லாம் கருகி, செடியின் இலைகளும் வெயிலில் சுருண்டு போய் இருந்தன.

- ஞானபாரதி

(நன்றி: 'சிறுகதை' காலாண்டிதழ், ஆகஸ்ட் - அக்டோபர் 2022)

Pin It