எனக்கு கொடுத்த அசைன்மென்ட்... பின்னால் அலைந்து ஓரளவுக்கு கண்டு பிடித்து விட்டேன்.

யார் இந்த M.D மார்த்தாண்டி.? My Dear மார்த்தாண்டி தான் காலப்போக்கில் அவராகவே மாற்றிக் கொண்டு M.D மார்த்தாண்டி ஆகி விட்டார். பொதுவாகவே எந்த இலக்கிய நிகழ்வுக்கும் பார்வையாளராகவே சென்றாலும் மேடையில் ஒரு மூலையில் சேர் கேட்கும் அஷ்டாவதானி. மூன்று இஞ்ச்க்கு ஒப்பனை குறைந்து விட்டால் அன்று அவரின் அத்தனை களேபரங்களும் ரத்து செய்யப்படும். நான் யாரு... இவுங்கல்லாம் ஏன் இப்டி இருக்காங்க என்று பிரியாணி அதிகமாக உண்ட நாளில் போனிட்டு தாளிப்பார். எப்போதும் அவர்கள் சரி இல்லை. இவர்கள் நல்லவர்கள் இல்லை. கூட்டம் சேர்ந்து கொண்டு தன்னை ஒளித்துக்கட்ட திட்டம் தீட்டுவதாவே நம்பி மைண்ட் வாய்ஸ் என நினைத்து வெளிய நம்மிடமும் பேசி விடுவார். அவராகவே நான் ஏன் இப்படி இருக்கேன் என்று கேட்டு விட்டு பிறகு அமைதியாக கழன்று கொள்வார். வாய்ப்பு கிடைக்கையில் எல்லாம் எவர் ஒருவரையும் ஏமாற்ற தயக்கம் காட்டவே மாட்டார். புறங்கூறுதலில் Phd என்பது நம்பகத் தகுந்த வட்டம் கொடுத்த கூடுதல் செய்தி.

நான் ராவா இருக்கேன் என்று பின் குறிப்பும் இடுவார். அது என்ன ரா என்று இப்போது வரை யாமறியோம். என்ன மாதிரி டிசைன் இது என்று நண்பர்களோடு சரக்கு சகிதம் பேசிக்கொண்டிருக்க... இங்கு நாம் சரக்கு போட்டால் அது எப்படியோ M.D மார்த்தாண்டிக்கு அங்கு மண்டை வேர்த்து விடும். கூப்பிட்டு விடுவார். தானாக அவராகவே வந்து கோட்டரில்... ச்சீ ஆப்பில் அமர்ந்து கொள்வார். நாமும் ஹக்சியில் சத்தம் வராமல் சிரித்துக் கொண்டு லவுட் ஸ்பீக்கரில் போட்டு விட.... அந்த பக்கம் பேச்சு.... பேச்சென்ன பேச்சு... அது அரைச்ச மாவில் அப்பளம் சுடும் கதை. இந்த பக்கம் நண்பர்கள் சிரித்து கதறி விடுவார்கள். இது காமெடி பீஸா தலை... என்று தலை தலையாய் அடித்து கொள்வார்கள். இப்படி சம்பவங்கள் நிறைய உண்டு.

உங்ககிட்ட மட்டும் தான் சொல்றேன் என்று ஊரெல்லாம் சொல்லி விட்டு... கர்வத்தோடு வடிவேலு நடை நடக்கும் M.D மார்த்தாண்டியை காலம் கோவை சரளாவாக்கி விட்டது. எப்போதும் பிரபஞ்சத்தில் கோலமிடும் M.D மார்த்தாண்டியை இந்த உலகத்தில் யாரும் புரிந்து கொள்ளவே இல்லை என்பது M.D மார்த்தாண்டியின் அசைக்க முடியாத நம்பிக்கை. M.D மார்த்தாண்டி இப்படி இருக்க என்ன தான் காரணம் என்று தோண்டித் துருவினேன். ஒரு 30 வருடங்களுக்கு முன்... .சந்திரமுகி காலத்துல... ஒரு கிழட்டு க்ரூப் M.D மார்த்தாண்டியை தலையில் தூக்கி வெச்சு... நீ தான் இந்த இலக்கிய உலக திறக்க வந்த சாமின்னு இருக்கற பூவையெல்லாம் சரம் சரமாய் கோர்த்து சுத்து சுத்துன்னு சுத்தி விட்டுட்டானுங்க. பாவம் இப்ப வரை அந்த சந்திரமுகியே நான் தான்ன்னு அது கதறிக்கிட்டு இருக்கு. சரி இப்படிப்பட்ட M.D மார்த்தாண்டி.. தினமும் காலைலேயே கிளம்பி பெருமாளைப் பாக்க... முருகனைப் பாக்க... அய்யப்பனை பாக்க என்று கிளம்பி விடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த... அங்க என்ன கூத்து நடக்குதுன்னு கவனிக்க... ஒரு நாள் பின் தொடர்ந்தேன்.

கோயில் கோயிலா ஏறி இறங்கிக் கொண்டிருந்த M.D மார்த்தாண்டிக்கு... கடவுள் கூட தனக்காகவே காத்திருப்பதாக தான் எண்ணம். பயங்கரமாக கண்கள் அசைந்து சிவாஜி புருவத்தில்... கடவுளை சித்திரவதை செய்து விட்டு பக்கவாட்டு பக்கம் வந்து சுடிதாரை மடித்துக் காட்டினார். துப்பட்டாவை தலையில் இறுக்கி கட்டிக் கொண்டு திடும்மென ஓடி வரிசையில் முந்தி தள்ளி... ஒரு நர்த்தனம் நிகழ்த்த... என்னடா நடக்குது என்று நடுங்கி கொண்டு கவனித்தேன். சற்று நேரத்தில் கூட்டத்துள் இருந்து புளி சோற்றோடு வெளியே வந்தார். கண்களில் ஈயாட பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கோயிலில் லெமன் சோறு. ஒரு கோயிலில் பொங்கல்... ஒரு கோயிலில் சுண்டல். நிழலைப் போல பின் தொடர்வதை இலக்கிய புத்தி கண்டு கொண்டு என்ன இந்த பக்கம் என்று வழக்கம் போல சீக்கு சிரிப்பை சிரிக்கையில்... பாவமாக இருந்தாலும்... இல்ல... அய்யப்பனை பாக்கலாமேன்னு வந்து.... இழுத்தேன்.

உங்களுக்கு இந்த சிவகாமி ராமையாவை தெரியுமா... என்னமோ அவுங்க தான் இலக்கியத்துக்கே ராணி மாதிரி நடந்துக்குறாங்க... எனக்கு இதெல்லாம் பிடிக்கவே இல்லை... நான் ஒரு பொயட் இங்க இருக்கேன்... என்ன யாருக்கும் தெரியல.. இனி இந்த கூட்டங்களுக்கெல்லாம் போறதா இல்ல... ரெண்டு பப்ஸ் எடுத்ததுக்கு முறைக்காரானுங்க... என்ற M.D மார்த்தாண்டி அனிச்சையாய் கையிலிருந்த புளி சோற்றை நீட்டினார். சிரிப்பு சிரிப்பாக வந்தாலும்... புளி சோற்றின் நெடி ஆல்ரெடி வாய்க்குள் உமிழ்நீரை சுரக்கச் செய்து விட்டிருந்தது. அப்பாடா என்று டபக்கென்று நானும் அனிச்சையாக எடுப்பது போல ஒரு பிடி எடுத்து வாய்க்குள் போட.. ருசி எல்லாவற்றையும் தூக்கிப் போட்டது. வந்த காரியம் ... எங்கள் சேனலுக்கான செய்தி சேகரிப்பைக் கூட மறந்து விட்டு இன்னொரு கவளத்தை எடுக்க ஆரம்பித்தேன். புளி சோற்றின் வீரியமா தெரியவில்லை. இன்னும் அதிக குரூரமாக திருநெல்வேலி திவ்யாவின் மூக்கு கோணையாக இருப்பதாக பொங்கத் தொடங்கி இருந்தார் M.D மார்த்தாண்டி. அவருக்கு தேவை எல்லாம் மறுபேச்சு பேசாமல்... கேட்க அல்லது கேட்பது போலவாவது கம்மென்று இருக்க இரு காது. ஒரு காது கூட போதும்.

திடும்மென இடுங்கிய கண்களை உருட்டி கழுத்தை கவிழ்த்துக் கொண்டு வேகமாய் சாப்பிட ஆரம்பித்தார். நாள்பட்ட இலக்கியம் பசி ஆற ஆரம்பித்திருந்தது.

- கவிஜி

Pin It