ஆடித் திருவிழா கரகம் கழித்து எட்டாம் நாள். எட்டாம்பெருநாள்! ஊர் வழக்கப்படி காப்பு களையும் வரை சைவம் காத்து, அசைவம் தழுவும் நாள். முந்தைய நாள் மஞ்சளாடி களைத்திருந்த பொழுதுகளுக்கான படையல் திருநாள்.

“மச்சான் இந்த வாட்டி எத்தன?”

அமைதி கலைத்த சின்ன மாமாவின் கேள்விகளின் அர்த்தத்தை அருண் உணர்ந்திருக்கவில்லை.

“இல்ல மச்சான் பெரியவரு இந்த வாட்டி வாரெனு வரல... வந்திருந்தா வெட்டி இருக்கலாம் தா. ஆனா வரலயே என்ன பண்ண. ஒன்னு வெட்டலாம் மத்தது வீட்டுல சாப்ட கடைல சொல்லி வச்சி இருக்கேன்”

“நாட்டுக் கோழி தான?”

“ஆமா மச்சான் கெடாவாட்டம் கோழி. முத்தி நிக்கி”

நேந்து விட்ட சேவலைப் பற்றி தான் கதை போகிறது எனத் தெளிய கண நேரமாகவில்லை அருணுக்கு. எல்லா வருடமும் கோழிப்பலி தடால் புடாலாய் நடக்கும். இருந்தும் இந்த வருடம் பெரிய மாமா குடும்பம் வராததால் ஐந்து கோழிகளின் இடம் இம்முறை ஒரு கோழியினால் நிரப்பப்படுவது புதுமையாய் இருந்தது.

“யே மதினி அவுக வரக் காணோ?”

“மாமனார் மையத்துக்கு வந்து மொகத்த சுழிச்சிட்டுப் போனாக. யேண்டு தேர்ல. அப்பரோ விஜாரிச்சு பாத்தா... அவுக கொடி சீலையப் போட்டு மூடிப் புட்டாவுகளாம். அத இவரு கேட்டுக்கலயாம்.”

“அடியாத்தி! மைய வீட்ட கவனிப்பாகளா, கொடி சீலையப் பாப்பாகளா”

“அதான் மதினி இவுக திருவிழாக்கு வரச் சொல்லி போன் எடுத்தாக. ஆனா அவுக வர மாட்டோம்னு சொல்லிட்டாக”

பெரியவர் வருகை தராததில் இருந்த புதிரை ஒட்டுக்கேட்டு விடுவித்துக் கொண்டான் அருண்.

அத்தையும் அம்மாவும் மாவிளக்கு பிடித்தவாறு வழக்களந்து கொண்டிருக்கையில்; அவ்வழியே குறுக்கிட்ட சின்னவன், பொட்டுக்கடலை ரெண்டெடுத்து வாயிலிட்டது தான் தாமதம். சாமிக்குப் படைக்குமுன்னே தொறைக்கு ருசி பாக்கணுமோ சின்னவனை வையத் தொடங்கி சிரித்தவாறே பரிபாஷைகளில் பயணித்துக் கொண்டிருந்தனர். தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தான். உள்ளே துடித்துக்கொண்டிருந்தான்

“பெரியவர எங்க காணோம். மாமா மவ மதி வரலனு நொந்து போய் இருக்காகளோ”

சின்ன மாமியின் வாயடைக்க சபையேறிய அருண்.

“யேன் ஒங்க பொண்ணுங்களும் நல்லா தானே இருக்கு! சின்ன மாமா பொண்ணு குடுக்க மாட்டாகளோ?” அமைதியான மறுமொழி.

“பாத்திங்களா மதினி. ஒங்க பெரிய மருமகன் பேச்ச”

மாவிளக்கு பிசைந்த கையில் மணிக்கூட்டு மாவொட்டிய கையில் செல்லமாகத் தட்டினாள் அம்மா. அவர் வெள்ளிக் காப்பின் ஒரு சில செதுக்கல்கள் அவன் தலையில் செல்லமாகப் பதிந்து கொண்டது.

அங்கொரு புறம் குடிமகன்களின் அரங்கம். தினசரி குடி இல்லாடிலும் கூடும் போதெல்லாம் குடி குலசாமி ஆகிடும். சித்தப்பா தான் ஒழுங்கு படுத்தும் இயக்குனர். சின்ன மாமா தயாரிப்பாளர், கூடவே மாமித்தம்பி, சித்தப்பாவின் நண்பர்கள் என்று புதுப் படம் அரங்கேறும். மது புட்டி உடைப்பில் பழங்கால சுக நினைவுகள் நொதித்தெழும். வீடே முழுமதியாய் தேஜஸ் கோடி மிளிரும். அப்பாவும் பெரியவரும் விதி விலக்கானவரகள். மது மேசையின் பொறித்த மீனோடு நிறுத்திக் கொள்வர். வெளிநாட்டு கல்வியோடு வெள்ளைக்கார பாணங்களும் சித்தப்பாவும், சின்ன மாமாவும் கற்றிருந்தனர். பெரியவர்களும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அப்பா மதுவின் தீங்குகளை அருணுக்கு அடிக்கடி தலைக்கேற்றுவார்.

குடிக்குப்ப் பின்னான வெறி கொள்ளும் பழங்கதைகள் கேட்கவே அந்த மேசையை அருண் அலங்கரிப்பான். இம்முறை ஈடுபாடு காட்டவில்லை.

“என்னப்பா மாவளக்கு புடிச்சிட்டிங்களா? கோயில் போக லேட் ஆகுது”

“முடிஞ்சிருச்சிங்க... நீங்க கத்தி சூடம் எல்லாம் எடுத்து வைங்க நாங்க பொடவ எல்லாம் மாத்திட்டு வரோம்”

அம்மாவின் பேச்சுக்குப் பின் முற்றத்தை உலவு பார்க்க அப்பா பயணமாகினார். சேலைப் பதுமைகளாய் அம்மா, மாமி, சித்திக்களின் வருகையில் அசடு வழிந்து நின்ற குடி மகன்கள் கேளிக்கை பேச்சுக்களுடன் வீடு நீங்கினர்.

அருண் தான் பாவப்பட்டவனாகினான். அவன் வளர்த்த முரட்டு சேவல். முதல் கூவலில் அவன் படுக்கை களைந்ததிலிருந்து சூரியன் தூரத்து மலைகளில் ஒளிந்து கொள்ளும் வரை இவனோடு உறவாடும் ஒரு சீவன். வா என்றால் வரும், தலைமேல் நடனம் கொள்ளும், இவன் நகசந்துகளை துப்புறப்படுத்தும், அவ்வப்போது சோளமணியென்று சுண்டு விரலையும் கொத்தும். பரஸ்பர லிபிகள் அவர்களுக்குள் இருந்தது. நேந்து விட்ட பொருளென்றாலும் பொருமித்த அன்பு அந்த சேவலின் மேல்.

கலங்கிய மனதோடு சேவலைத் தூக்கினான். மூக்கைக் கொத்தியது அந்த சொண்டில் அளவுகடந்த அன்பு மணத்தது. அள்ளிக் கொஞ்சி முகத்தோடு உரசினான். கண்களை மெல்ல மூடி கழுத்தில் கொத்தியது. அவனுக்கு அது ஆயிரம் அழகிகளின் முத்தத்தை மிஞ்சியது. மேலும் இறுக்கிக் கொண்டான்.

வெட்டவேண்டாமென்ற இவன் வாதங்கள் அப்பாவின் நீதிமன்றத்தில் எடுபடவில்லை. இவனுக்காக வாதாடிய அம்மாவும் தகுதியற்ற வழக்கறிஞராக்கப்பட்டார். இறுதியில் சேவலுக்கு மரண தண்டனை!

கூடு நீக்கும் போது சுற்றி எவரும் இல்லையெனில் சுதந்திரமாகப் பறவென்று விடுவித்திருப்பான். ஆனால் விலங்கிடப்பட்டிருந்தான். மதி அல்ல சோகக் காரணம் இந்த சேவல். அன்புக்குரிய சேவல்.

“என் அன்பனே. நெஞ்சம் வென்றவனே! யாரையும் நம்பாதே. என்னையும்! நான் அரக்கன் தவிடிட்ட கையால் உன்னைத் தாரை வார்க்கும் அரக்கன். கத்தி வைத்து காவல் காப்பதாய் எல்லையில் இருக்கும் மீசைக்காரன் பேரரக்கன். என் செல்லத்தையே காவு கேட்கிறான். பாவி நல்லாய் இரான்.” நெஞ்சுக்குள் முணுமுணுத்து கொண்டையில் முத்தமொன்றை பதிவு செய்தான். தமிழ் நாட்டில் தமிழ் அகதிகளின் அழுகை அந்த முத்தம்.

“கொக்” என்ற அதன் அனுதாபக் கொக்கரிப்பு ஆழ்மனதில் ஆணி அடித்தது. அதன் கணம் கறிக்கடையின் தராசைக் காட்டியது. சேவலை சித்தாப்பாவிடம் கொடுத்து கொள்ளைக்கு சென்று விட்டான். அவன் கைகளில் சேவலின் சூடும் துடைத்த கண்ணீரும் இருந்தது.

மாடசாமி கோயில் மயானமாகத் தெரிந்தது. மாடசாமி வெட்டியானாக இருந்தான். அவன் அரிவாள் வெட்டியால் கைக் கம்பாய் இருந்தது. மாடனை முறைத்துப் பார்த்தான்.

“அருண் இங்க வாடா”

அம்மாவின் அழைப்பிதழை காற்றிலே கிழித்தெறிந்தான். பலி கூடத்தின் ஏதோ ஒரு மூலையில் மைய வீட்டு வானொலியாய் ஒதுங்கி இருந்தான். கோயில் சூழப்பட்டிருந்த காடு இடுகாடாய் இருந்தது. தூரத்து மைனாக்கள் கோட்டான்கள் ஆயின.

“நல்ல நேரம் முடியப் போகுது சாமி. மாடனுக்கு காவலக் குடுத்து வுற்றுங்க”

அப்பா குற்ற உணர்வின்றி சொன்னார்.

“ஆமா மச்சான். அக்கா அங்க தக்காளி வெட்டி வச்சி ரொம்ப நேரமாகுது”

பூசாரி முதல் கொண்டு சிரித்தனர். மையவீட்டில் சிரிப்பவர்களை முதல் முறையாகப் பார்த்தான். முதல் வருடம் ஐந்து கோழிகள் வெட்டப்பட்ட போது இவனும் சிரிக்கத் தான் செய்தான். இம்முறை கதை தடம் புரண்டிருந்தது. கேலிப் பேச்சுக்கள் சங்கு சத்தமாகவே இருந்தன.

“அருண் இங்க வா. சாமியக் கும்பிடு” அப்பாவின் அழைப்பிதழ் கிழிக்கப்படவில்லை. புறச் சிரிப்போடு பலி பீடத்திற்குச் சென்றான்.

மஞ்சள் அதன் கொண்டை மேல் தெளிக்கப்பட்டது.

“தலைய ஆட்டிராத தங்கம். அருவா காத்திருக்கு” இம்முறை இருவருக்குமான லிபிகள் உயிரற்று இருந்தன. அதன் தலை எல்லா திசைகளிலும் அருணைத் தேடியது. சித்தப்பா தோள் பக்கத்தில் ஒளிந்து கொண்டான். அதன் தேடல் உத்தரவாய் அமைய,

“மாடன் உத்தரவு தந்துட்டான்”

பூசாரியின் அந்த வார்த்தைகள், ‘கடைசியா ஒரு வாட்டி மொகத்த பாத்துக்கங்க’ தாத்தாவின் சாவுக்கு வெட்டியான் சொன்னதாய் இருந்தது. கண்ணீர் வரவில்லை. மாறாக அன்பின் கொக்கரிப்பு. தலை துண்டிக்கப்பட்ட காதலியின் அழுகை. அருவாளும் இரத்தமும் இரண்டறக் கலந்து தெறித்த போது சிறுதுளி இரத்தம் எங்கிருந்தோ வந்து அவன் முகத்தில் விழுந்தது. ரத்தக் கதகதப்பு இவனுக்குள் பிரளயங்கள் உசுப்பிற்று. அந்த சிறு துளி அமிலமாய் அவனைச் சிதைத்திற்று.

அந்த இடம் விட்டு எங்கோ நடந்தான். ராமனின் அயோத்தி நீங்கல்.

- ஹஜன்

Pin It