இதெல்லாம் நடக்குமான்னு கேக்கலாம். ஆனா ஒருமுறை நடந்தா நல்லா இருக்கும்னு தோனிருக்கும்.

சிக்கல் நிறைந்த ஒவ்வொரு நாளும் எனக்கு இப்படித்தான் விடிகிறது. மிகு புனைவு என்று கூட சொல்லலாம். மண்டை குழம்பிய கூறுகெட்ட கதைக்களம் என்று கூட சொல்லலாம். ஆனால் கதாபாத்திரத்துக்கு அப்படி இல்லை. அது நிகழும் சம்பவம். உலகமென்னும் நாடக மேடையில்... நாமெல்லாரும் கதாபாத்திரங்கள் தானே. ஒவ்வொரு நித்திரையிலும்... நான் என்னைத்தான் கனவு காண்கிறேன். ஆசை முகம் மறந்து போச்சே.....யாரிடம் சொல்வேன் நானே.

என் சட்டை பத்தவில்லை. தாத்தாவின் சட்டையை போட்ட போது.... ஓரளவுக்கு அடங்கிக் கொண்டது உடல். பேண்ட்டும் கூட அவருடையது தான். பெல்ட் போட்டு.. கவர் செய்து கொண்டேன். கூந்தலைத்தான் எப்படி பின்னுவது என்று தெரியவில்லை. ஒரு தனித்த அறையில்....தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் எனக்குத்தான் இப்படி ஒரு சாபம்... அல்லது இப்படி ஒரு வாய்ப்பு. வெளியே சென்றால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால்... என்ன செய்வது.. பசிக்கிறது. அரிசி வாங்கித்தான் ஆக வேண்டும். காய்கறி வாங்க கடைவீதிக்கு போகத்தான் வேண்டும். ஆண்றாயிடில் ஆர்டர் போட்டு அடிவயிற்றை நிரப்பும் அளவுக்கு வசதி இல்லை. கூந்தலை ஒரு வழியாக கொண்டியிட்டு தலையில் அடைத்தேன். முகத்தை பவுடர் அப்பி வழித்துப் பார்த்தபோது...... எனக்கே பயமா இருந்தது. நொடிகளின் விரல்கள் கூட....... கண்ணாடியில் இருந்து தலையை துண்டித்துக் கொண்டேன். மற்றபடி..சதை ஊறிய உடம்பு... பார்க்க எனக்கே ஒரு மாதிரிதான் இருந்தது.

இந்த நாள் எப்போது முடியும் என்று இப்போதே யோசிக்கத் தோன்றியது.

தலையைக் குனிந்து கொண்டே வேகமாய் சென்று விட வேண்டும். முடிவோடு தான்.. வாசலில் இறங்கினேன். வீதி பளிச்சென உள் வாங்கிக் கிடந்தது. காற்றில்லா தேசத்தில் தான் இருக்கிறோமா.....ஒருவேளை. கொரோனா முகமூடியை உலகமே போட்டுக் கொண்டது தான் போல. மூச்சுக்கு கூட காற்றில்லை. ஏற்கனவே வேர்த்து ஊத்திக் கொண்டிருக்கும் நடு முதுகின் வழவழப்பு நசநசத்தது. இடுப்பில்...... வட்டத்தில் ஆடை இறுக்கத்தின் சுருக்கத்தில் அரிப்பு கூட இருந்தது. வேஷத்திலும் பொருந்தா வேஷம்.....பெண் வேஷம்.

கட்டைப் பையை கக்கத்தில் வைத்துக் கொண்டே குறுகுறுவென நடையைக் கூட்டினேன். எதிர் வீ ட்டு சடையன்... ஒருமுறை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான். சடையன் மறந்து விட்டான் போல. குடத்தோடு அடி பம்புக்கு வரும் போதெல்லாம் வந்து வந்து பேசுவான். மூன்றே மாசத்தில் இப்படி மறந்து விட்டான். நடையைக் கூட்டினேன். இடை ஆடுவதைத் தான் தவிர்க்கவே முடியவில்லை.

நாலாவது வீட்டு.... நாகம்மாள்.... வெளியே எதற்கு வந்தாள் என்று தெரியவில்லை. வந்தவள்... "ராணிக்கா... எங்க வேகமா கிளம்பி...... !!!!!?" அத்தோடு வார்த்தையை படக்கென்று முழுங்கி கண்கள் உருள பார்த்தாள். வெட்டி வெட்டி இழுக்காதது தான் பாக்கி. மூச்சு வாங்க...... உடல் பின் வாங்க....பேயைப் பார்த்தது போல... ஐ...... யோ.. என கத்த கத்தவே மயங்கி சரிந்தாள்.

"அயோ.....இந்த சனியன் கண்ணுலயா விழணும்....." முணங்கிக் கொண்டே.. பேண்ட்டை ஒரு பக்கமாக தூக்கி பிடித்தபடியே வேகமாய் சிலுக்கு நடையில்...... நடையை எட்டிப் போட்டேன். வீதி திரும்பும் முன் முதுகு திரும்பி நிற்கும் பெரிய வீட்டு தாத்தா...." ராணி... " என்று குரலெடுத்து...... " என்ன ராணியா... ?" குரல் ஒடுங்கி... தன்னைத் தானே சுவற்றில் தூக்கி வீசியதாக நினைத்து.....முகம் நடுங்க கத்தினார். வாரத்தை வரவில்லை. நான் நின்று பார்த்து முகம் விரிந்த சிரிப்பை காட்டி... படக்கென்று வெட்கம் தாண்டி ஓடுவது போல நடக்க ஆரம்பித்தேன்.

'எதுக்குடா... என்னைய பாக்கறீங்க... எனக்கு பசிக்குதுடா... ' முணங்கிக் கொண்டே.. அரிசி பருப்பு தேங்காய் தக்காளி கொத்தமல்லி கருவேப்பிலைன்னு எல்லாம் வாங்க வாங்கவே.....கடைக்கார அண்ணாச்சி...... கிட்டத்தில் ஏதேச்சையாக என் முகத்தை பார்க்க ஆரம்பித்து பிறகு குறுகுறுவென பார்த்து... சடுதியில் ஆஆவென.... வாய் பிளந்து அப்படியே பின்னால் அரிசி மூட்டை மீது சரிந்து விழுந்தான். விட்டா போதும்டா என்பது போல வீதி திரும்பினேன்.

வீதியில் ஆங்காங்கே கூட்டம்... கூடி விட்டது.

கூட்டத்துக்குள் போனால்... எதற்கும் உத்திரவாதம் இல்லை. ஒதுங்கி ஊர் நுழைவாயிலில் இருக்கும் வயதான புளிய மரத்தின் பின்னால் நின்று எட்டி பார்த்தேன்.

"என்னப்பா சொல்றீங்க.. ராணியா... மூணு மாசம் முன்னால செத்தவளா. அது.....அது எப்பிடி..... இப்டி பட்ட பகல்ல... காத்து கறுப்புன்னாகூட சாமத்துல இருட்டுல வரலாம்... இதென்ன கூத்தா இருக்கு.. கருப்பன் இருக்கற ஊர்ல....." மீசை முறுக்கிய பெருசுகள்....மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்க... ஆர்வ கண்கள் அலைந்தன... பேய் பார்க்க.

ராணியின் மகள்.. கால் நீட்டி அமர்ந்து ஒப்பரி வைத்துக் கொண்டிருந்தாள்.

"அம்மா... ஒரு வாட்டி கண்ணு முன்னால வாம்மா... ஊரு கண்ணுக்கே தெரியற....உன் புள்ள கண்ணுக்கு தெரிய மாட்டியா.... தப்புதான்,..... உன்ன சந்தேகப்பட்டு.....அவதூரா பேசினது தப்பு தான்.. செத்தும் என் மேல கோபம் தணியலயா....." -நெஞ்சு நெஞ்சாய் அடித்துக் கொண்டு அழுதாள்.

பூசாரி.. பாஸ்டர்...... பாய்.....நம்பூதிரி....... எல்லாரும் ரெடி..... வேற வேலையே இல்லாமல் தான் இருப்பார்கள் போல. நிமிடத்தில் வந்து நீட்டி முழங்க காத்திருக்கிறார்கள். கையில் டப்பா பாட்டில் சட்டி எல்லாம் விதவிதமாக மிரட்டின.

"இம்மாம் பெருசு இருக்கேன்... என்னை எப்படி இதுக்குள்ள அடைப்பானுங்க..... லாஜிக்கில்லாத லாரன்ஸ்பசங்க...." கூடையில் இருந்து கேரட் எடுத்து கடித்துக் கொண்டேன். பசி போட்டு தாக்குது.. இன்னைக்கு இப்டி தான் இந்த வாழ்க்கை இருக்கணும்னா அத யார் மாத்த முடியும்....

என் வாழ்க்கையில ஒரு Flash Back எல்லாம் இல்ல. ஒவ்வொரு நாளும் Flash Back தான்.

நேற்றைய Flash Back....இதோ....

தலையில்.... சுளீர் என மின்விசிறி காற்று படபடக்க திடுக்கிட்டு எழுந்தேன். நான் எழுந்ததுமே என் முகத்தில் விழிப்பதுதான் கால கடமை. எழுந்ததும் இலகுவாக என்னை பார்க்கும்படி கண்ணாடியை கட்டிலுக்கு முன்னாடியே வைத்திருப்பேன். ஒரு பெண்ணை வைத்துக் கொள்ள வக்கற்றவனுக்கு கண்ணாடியை வைத்துக் கொள்வது சுலபம்தான்.

அட கருமமே... என்று என்னை பார்த்து நானே நொந்து கொண்டேன். மண்டை முழுக்க வழுக்கை. பின்னால் பிடரி மயிர் மட்டும். ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி இருக்கும். அதை வழித்து.......முன் நெற்றிக்கு கொண்டு வந்து சட்டியை கவிழ்த்து வைப்பது போல வைப்பது.... பார்ப்போருக்கு எத்தனை அராஜகம் தெரியுமா. ஆனாலும் அதை செய்யத்தான் வேண்டி இருக்கிறது. வேஷம் அப்படி. அப்படி கீழே குனிந்து குனிந்து தலையைத் தூக்கி தூக்கி கண்றாவி மேனரிசமும் செய்ய வேண்டி இருக்கிறது. நாய் ஆவென பார்க்குமாம். கேட்டால் சிரித்தேன் என்று சொல்லுமாம். அப்படி ஒரு தோற்றம். நெற்றி முழுக்க பட்டை அடித்து... கன்னத்தில் வரக் வரக்கென்று சொரிந்து எடுத்த மொறுமொறுப்பு ஷேவிங் வேறு. கருக் கருக்கென்று கிளம்பினேன்.

கதவை ஒருக்களித்துக் கொண்டே வாசல் தாண்டி கண்களை இரு பக்கமும் அலைய விட்டேன். யாரும் இல்லை. பட்டென்று கதவை பூட்டி விட்டு வாசலில் குதித்து.... எதிர் வீட்டில் இருந்து வெளியேறுவது போல வெளியேறி நடக்க ஆரம்பித்தேன்.

தினமும் பகலுக்கு ஒரு பாவப்பட்ட மனிதன் வீதியில் அலைவான் தானே. அவன் தான்.....7 வது வீட்டு சரத்பாபு.

பார்த்திடக்கூடாது.... பார்த்திடக் கூடாது.... நான் என்ன உத்தம பத்தனனா...... நினைச்சதெல்லெம் நடக்கறதுக்கு...... அவன் பார்த்துட்டான்.

"என்ன வாத்தியாரே... கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் போனீங்க... இப்ப திரும்பவும்.....போறீங்க... " என்றான்.

நின்று அவனை பார்க்கவெல்லாம் முடியாது. வேகத்தைக் கூட்டிக் கொண்டே... ' முதல் தடவ சரியா போகல... அதான் இப்போ சரியா போறேன்" - அவன் யோசிப்பதற்குள் நடந்து கடந்து விட்டேன். எனக்கு இந்த வாத்தியார் நடை வேறு சுத்தமாக பிடிக்காது. கருமம்....ஆனா அப்படித்தான் நடக்க வேண்டி இருக்கிறது. அதனால் கொஞ்சம் எனக்கு தகுந்தாற் போல நடையை மாற்றி.. டிமிக் டிமிக் என நடந்தேன்.

போலீஸ்காரர் வீட்டம்மா கண்றாவியாக பார்த்தது. "வாத்தியார்... டிக்கில ஏதும் கொப்பளமா....! "என்றது.

"எஸ்.. போலீஸ்காரர் வீட்டம்மா... டூ கொப்புளம்ஸ்... " என்று சொல்லி வேகமாய் டிமிக் டிமிக்கை கூட்டினேன். வீதிப்பயலுகளை சமாளிக்கறதே பெரும்பாடு.

"வாத்தியார்.. என்ன அய்யப்பனை பாக்காம போறீரு...."

"அதான் காலையிலேயே பார்த்தாச்சே... " சமாளித்தேன்.

குருக்கள்... குறுகுறுவென பார்த்து விட்டு.. "பத்து மணிக்கு காபி சாப்ட்டா ஒரு மணிக்கு சாதம் சாப்பிடறது இல்லையா... அந்த மாதிரிதான்........வாங்கோ பகவானை சேவிங்கோ....எல்லாம் ஜீசஸ் பார்த்துப்பான்... " என்றார்.

சரக்கடிச்சாலாம் இந்தளவுக்கு உளர முடியாது.... குருக்கள் கஞ்சா தான் அடிச்சிருக்காரு....." - முன் கையை மடக்கி உள்ளே பொதுவாக பார்த்து ஒரு கும்புடு போட்டேன்.

"அய்யப்பா... தயவு செஞ்சு இந்த வீணா போனா குருக்களா மட்டும் நான் மாறிட கூடாது....." பட்ரிக்குலராக வேண்டிக் கொண்டேன்.

பொதுவாக நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உருவம் மாறினாலும்... அந்த உருவத்துக்காரர்களுக்கு கெட்ட பேர் உண்டு பண்ணியது இல்லை. முடிந்தளவு நல்லது தான் செய்திருக்கிறேன். மனதளவில் நான் தான்.. யாரென்ற பெருங்குழப்பம் ஒவ்வொரு விடியலிலும் வந்து தொலைக்கும். பிறகு நாள் முழுக்க இன்னொரு உருவத்தில் என்னைத் தேடி அலையும் சாபம் பொல்லாதது.

இந்தா இந்த... பேங்க் ஆபீசர்.. பிரியதர்சினிக்கு வீதிக்குள் அலட்டல் பேர்வழி என்று பேர். யாரையும் மதிக்க மாட்டாள். ஒரு முறை போட்ட சட்டையை இன்னொரு முறை போட மாட்டாள் என்றெல்லாம் வதந்தி இருந்தது. ப்ரியதர்சினியாக மாறிய அன்று எல்லாவற்றையும் மாற்றி காட்டினேன். கடைசி வீட்டு காலாவதியிடம் நானாகவே சென்று "இன்னைக்கு எனக்கு பிறந்த நாள் இல்ல... வயசுக்கு வந்த நாள் இல்ல.....கல்யாண நாள் இல்லை. ஆனாலும் கேக் கொடுக்க தோணுச்சு" என்று பாலக்காடு தமிழில்... அசால்ட்டு செய்து கேக்கை நீட்டினேன். ஐஸ் கேக் காலாவதியை கூல் செய்து... என்னை ஹக் செய்ய வைத்தது. நல்ல பேர் சம்பாதித்த சம்பவம் அது.

மேனாமினுக்கி என்று பெயரெடுத்த.......மொட்டைமாடியில் காய்கறி வளர்க்கும் சங்கமித்ராவாக மாறிய போது மேல் வீட்டு மிருணாளினி பாட்டிக்கு ஸ்கூட்டி ஓட்ட கற்றுக் கொடுத்தேன். ஜெயரூபாவிடம் மனம் விட்டு சொன்னேன். ஒரு நாள் போடும் ஜட்டியை அடுத்த நாள் போடுவது இல்லை... என்பதில் உண்மை இல்லை. ஆனால் பூ போட்ட ஜட்டியைத் தவிர வேறு ஜட்டி போடுவதில்லை என்பது உண்மை என்று கண்ணீர் மல்க பேசினேன். வாரி அணைத்துக் கொண்டு...." அடி செல்லமே.... சங்கமித்ரா.... உன்னையா... இந்த வீதி கரிச்சி கொட்டுது. நீ மகாலட்சுமி மாதிரி நல்லா வாழ்வ... காய்கறி செய்வ....பூப்போட்ட ஜட்டிக்கு பிராண்ட் ஆவ. கொரோனா அண்டாத குமரியாகவே இருப்ப. இது என் தமிழ் மீது ஆணை...... என் மொழி மீது ஆணை...... என் இனம் மீது ஆணை" என்று சுவற்றில் முட்டி மண்டையை உடைத்துக் கொண்ட ஜெயரூபா... தங்கம்னா தங்கம். சொக்கத் தங்கம்.

ராசியப்பன் எஞ்சினியர் -ஆக உருவம் கொண்ட அன்று தான்....பக்கத்து வீட்டு மாயலோட்சிணி பெரியம்மாவுக்கு இதய அட்டாக் வந்தது. தாவி அள்ளி சுமோவில் தூக்கி போட்டு சென்று காப்பாற்றினேன். ஊரே வாழ்த்தியது. பாராட்டியது. மெச்சியது. ஒருத்தன் மட்டும்....'ராசியப்பன் சார்.. ஊருக்கு போயி ரெண்டு நாள் ஆச்சு..' என்று நகம் கடித்து முனங்கினான். மண்டையில் பின்னிருந்து கட்டையில் கரிசனம் காட்டி ஆப் செய்தேன்.

பின் வீட்டு முரளியாக விழித்த அன்று அவனுக்கு பதிலாக அவன் அப்பாவிடம் சென்று அம்மாவும் நானுமா உங்கள வீட்டை விட்டு தொரத்தினது... தப்பு தான்.... கொஞ்ச நாள் தனியா இருங்க.. அப்புறம் சேர்த்துக்கறோம். இந்த தனிமைல நீங்க குடிகாரனா இருக்கறது எவ்ளோ பெரிய தப்புனு உங்களுக்கு புரியும்.." என்று வேதாந்தம் பேசி அவன் அப்பாவை யோசிக்க வைத்தேன்.

பிரியனாக மாறிய அன்று பிரியனை காசுக்காக காதல் என்று ஏமாற்றும் ரீட்டா குடும்பத்துள் சென்று ரகளை செய்து... இனி பிரியனை வீட்டுக்குள் விடாதபடி செய்து விட்டு வந்தேன். மண்டை குழம்பி சுற்றிய பிரியனை பார்க்க பாவமாக இருந்தாலும்.... பாழும் கிணற்றில் இருந்து காப்பாற்றிய திருப்தி இருந்தது.

இப்படி.. இந்த 6 மாதத்தில்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேஷம்தான் எனக்கு. யாராக படுப்பேன் என்று தான் தெரியும். யாராக எழுவேன் என்று தெரியாது. எல்லாருமே என் வீதி மக்களின் உருவம்தான். இது சாபமா வரமா என்று தெரியவில்லை. அப்படித்தான் இன்று காலை மூன்று மாதங்களுக்கு முன் செத்து போன ராணியாக உருமாறி இருந்தேன்.

இந்த ஆறு மாதத்தில் ஒவ்வொரு நாளும் முள் மீது நடப்பது போலத்தான்.

ஒருமுறை... மாடிவீட்டு சுந்தரமாக மாறிய அன்று யாருமில்லாத மதிய வீதியில் அவருக்கு காக்கா வலிப்பு வந்து கீழே விழ...... அவரை அவரே காப்பாற்றும் காட்சியை அரங்கேற்ற வேண்டியதாகி விட்டது. அவருக்கு காக்கா வலிப்பை விட.. தன்னை போன்றே இருக்கும் உருவத்தை பார்த்து தான் இன்னும் பயம் அதிகமானது. காப்பாற்றி விட்டு ஓடி வருவதற்குள் டேக் வாங்கி விட்டது.

தேவகி பாப்பாவாக மாறிய அன்று முழுக்க....பேச்சு வார்த்தையற்ற தாத்தா பாட்டி வீட்டு வாசலில்.....பயந்து பயந்து நின்றேன். எட்டிப் பார்த்த பாட்டி ஓடி வந்து வாரிக் கொண்டது. "அம்மாதான் போக சொல்லுச்சு... அப்பாவுக்கு தெரியாமன்னு சொல்லி அன்று மதியம் வரை அங்கு டேரா போட்டு நெய் சோறெல்லாம் சாப்பிட்டு... திரும்புகையில் கண்கள் கலங்கி வந்தேன். உறவுகளின் தீர்க்கம் ஒளிந்து கிடந்தாலும் ஒளியூட்டுபவை என்று புரிந்த போது நிஜமாகவே அழுதேன். அன்பின் கசிதல் எந்த முகத்திலும் கண்ணீர் மாலை சூடும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இன்று செத்தவளாகி தான் பெரும்பாடு.

உயிரோடு இருப்பவன் செத்தாவே.. சும்மா நறுநறுக்கும் ஊர் வாய். செத்தவன் உயிரோடு வந்தா எப்படி அரைக்கும். ரசித்து காத்திருந்தது. நான் அலுங்காமல் பின் சுவரேறி ராணி வீட்டுக்குள் நுழைந்து........" ஆனது ஆச்சு.. இங்கயும் சரி செய்வதை முடிந்தளவு செய்வோம்" என்று காஞ்சனா பேய் உட்கார்ந்திருப்பது போல நடுவீட்டில் அமர்ந்திருந்தேன்.

உள்ளே வந்த மகள்... மருமகன்.. கணவன்.... பெரியம்மா என்று எல்லாருக்கும் வாயடைத்து விட்டது. சுவரோரம் திகிலடித்து நின்றார்கள்...

"என்ன வேணும்... யார் நீ... ?" என்று வாசலில் ஒளிந்து கொண்டு ஊர் பெருசு அதட்டியது.

"நீ மூடிட்டு போ... உன்கிட்ட பேச வரல" என...... ஈ ஈ....ஈ...... " என்று ஒரு கத்து கத்தி முறைத்து பார்த்தேன். ஊரே காலி. சும்மா கிலியடிச்சி பறந்திருந்தது. குடும்பத்தார் மட்டும் சுவரோரம் நடுங்கி உறைந்து நின்று என்ன செய்வதென்று தெரியாமல் திகிலடித்து பார்த்துக் கொண்டியிருந்தார்கள். ராணியாய் அமர்ந்திருக்கும் எனக்கு ராணியின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சரி சமாளிப்போம் என்பது போல... தலையை தரையில் குத்தி குத்தி அழுதேன். நான் அழுவதை பார்த்து எல்லாரும் அழ ஆரம்பித்தார்கள். சரி ஒர்க் அவுட் ஆகுது... என்று "ம்ம்ம்ம்ம்" என்று 'உள்ளத்தை அள்ளித்தா' கவுண்டமணி பாடி லேங்குவேஜில் இன்னும் அழுத்தி அழுதேன். மகள் கையெடுத்துக் கும்பிட்டு தெரியாம பண்ணிட்டோம்மா... எதோ கோவத்துல...... மன்னிச்சுடு.... தப்பு தான்.. நாங்க எல்லாரும் சேர்த்து உன்ன தூக்குல தொங்க விட்டது தப்புதான்மா..... நீ இந்த வயசுக்கப்பறம் மஞ்சள் விக்க வந்தவன் கூட கனெக்சன் ஆனது எங்களுக்கு பிடிக்கல... அதான்... "

"அடிபாவிங்களா... கட்டி தொங்க விட்ருக்காளுங்க... அயோ....!" அப்போது தான் கவனித்தேன்.. என்னதான் பேய் பிசாது என்றாலும் கியூரியாசிட்டி உள்ள நாலு பேர் ஒளிஞ்சு பாப்பான்தான....வாசல் பக்கம் ஜன்னல் பக்கம் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் இருக்கும் ஆன்றாயிட் அரக்கன் வேலையை காட்டிக் கொண்டிருந்தான். அடுத்த பத்து நிமிடத்தில் போலீஸ் வரும் சைரன் சத்தம்.

சரி பாசம் காட்டி பத்த வெச்சாச்சு... பத்து நிமிசமாக என்ன செய்வதென யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்த நான்.....படக்கென்று ஈ ஈ ஈ...... என கத்திக் கொண்டே பின் வாசல் வழியாக தெறித்து ஓடினேன். அவர்களுக்கு பறந்தது போல இருந்திருக்கும். அவரவர் பேய் அவரவர் கற்பனை.

அப்படி ஓடி இப்படி ஓடி... எங்கெல்லாம் ஓடி..... வீடு வந்து நுழைகையில் இரவாகி இருந்தது.

இந்த பூமி ஏன் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த சூரியன் ஏன் எரிந்து கொண்டே இருக்கிறது. இந்த உடல் ஏன் உணர்ந்து கொண்டே இருக்கிறது... என்னெல்லாமோ உள்ளே ஓட.... அசந்து கட்டிலில் சரிந்தேன். இப்படி தினம் ஒரு முகம். தினம் ஒரு உடல். விடியலில் எந்த முகம் வாய்க்கும் என்று யோசிக்கவே யோசிக்கவே தூங்கி போனேன்... அல்லது ஒய்ந்து போனேன்.

இந்த நாள் இனிய நாள் போல... எழுந்தமர்ந்த போது என்னால் நம்பவே முடியவில்லை.

ஆறு மாதத்துக்கு பின் என் சொந்த முகம். என் சொந்த உடல். நிலை கொள்ளவில்லை. இன்று என்ன செய்வது என்றே தெரியவில்லை. உள்ளம் கொப்பளிக்கும் சந்தோஷத்தில்... என்னை பார்த்துக் கொண்டே இருந்தேன். வீட்டுக்குள் அங்கும் இங்கும் நடமாடினேன். பேசிப் பார்த்தேன். சிரித்துப் பார்த்தேன். நடந்து பார்த்தேன். ஓடி பார்த்தேன். கண்ணாடி முன்னால் நானாக நின்ற தருணங்கள் தகிட தகிட தகிட. வேக வேகமாய் குளித்து கிளம்பி... ரெடியானேன். இன்று தைரியமாக ஊர் சுற்ற வேண்டும். நண்பர்களை பார்க்க வேண்டும். வயிறார பூர்ணா ஹோட்டலில் உண்ண வேண்டும். மதியம் சினிமா. மாலை பீர். கதவை பூட்டி விட்டு வாசலில் குதூகலத்தோடு இறங்கினேன்.

திறந்து கிடந்த வீதியில்....திடுக் திடுக் என்று ஒளிந்து ஒளிந்து என் வீட்டில் இருந்து கிளம்புவது போல யாரோ ஒருவன் போய்க் கொண்டிருந்தான். படக்கென வாசல் அருகே இருக்கும் பூ மரத்தின் பின்னால் ஒளிந்து இன்னும் கூர்ந்து கவனித்தேன்.

பின்னால் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வீதிக்குள் நடக்க ஆரம்பித்தவனுக்கு அப்படியே என் முகம் என் உடல் என் நடை.

- கவிஜி

("உருமாற்றம்" தலைப்புக்கும்....மூலக்கதைக்கும்....அண்ணன் "காஃப்கா"வுக்கு நன்றி)

Pin It