அற்புதங்கள் நிகழ்த்தி தன்னை காப்பாற்றும்படி கண்ணீர் வழிய ஜெபித்துக் கொண்டிருந்த ஊழியக்காரரையும் அவருடன் வந்த அந்த மூன்று பெண்களையும், தன் மனைவி சிலுவைராணியையும் பவுல்ராஜ் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். இந்த பிரார்த்தனைகள் எதுவும் செய்துவிடப் போவதில்லை, எதையும் மாற்றிவிடப் போவதில்லை என்பதை அவர் அறிந்திருந்த போதும் சிலுவைராணிக்காக அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தார். இனி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வர மாட்டேன் என மறுத்துவிட்ட அவரைக் காப்பாற்ற அவள் எடுத்திருக்கும் இறுதி முயற்சி இது.

மனைவி, மகள், மகன் என்ற அளவான குடும்பம், கிட்டத்தட்ட நூறு ஏக்கர் நிலம், பெரிய வீடு, ஊரின் பெரிய தலைக்கட்டு என்ற மரியாதை, அழைத்தால் ஓடி வந்து உதவ ஆட்கள், மகளை வேலூர் அருகே நல்ல வசதியான வீட்டில் கட்டிக் கொடுத்த நிம்மதி என்றிருந்தவரை மகனைப் பற்றிய கவலையே இந்த வியாதிக்குள் தள்ளியதாக இப்பொழுதும் அவரது ஊரான கரியான்குளத்தில் சிலர் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். “சிங்கம் மாதிரி திரிஞ்ச மனுசனை இப்படி சீக்குல தள்ளிட்டான் பாவிப்பய” என்று சில நாட்களுக்கு முன் பார்க்க வந்திருந்த பவுல்ராஜின் நெருங்கிய நண்பனான சபரி கூட கவலைப்பட்டுக் கொண்டு தான் போனார்.

மகள் பிறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பல வேண்டுதல்களால் பிறந்தவன் என்பதாலே சகல சலுகைகளுடன் வளர்ந்தான். பன்னிரண்டாவது தேற மாட்டான் என்ற அனைவரின் நம்பிக்கையையும் பொய்யாக்கி ஜஸ்ட் பார்டரில் பாஸானவனை வாலஜா அருகிருந்த கல்லூரி ஒன்றில் சேர்த்துவிட்டார். ஒரு ஆண்டு ஒழுங்காகச் சென்றவன் போக்கு திடீரென மாறியது. எல்லாவற்றையும் கேள்வி கேட்கத் தொடங்கினான். திடீரென ஒரு நாள் ஆதார் கார்டை எரித்ததற்காக அவனை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள் என்ற செய்தியறிந்து, பதறியடித்து ஓடியவர், யார் யார் காலிலோ விழுந்து அவனை மீட்டுக் கொண்டு வந்தார். போலீஸார் வெளுத்ததில் குண்டி பழுத்து குப்புற படுத்துக் கிடந்தவனுக்கு ஒத்தடம் குடுத்தபடி “என்னடா இப்படி செஞ்சுட்டே” என்று அழுத சிலுவைராணியிடம் “என் அடையாளம்... என் உரிமை...” என்று முஷ்ட்டி மடக்கி முழங்கியவனை அதன் பின் அவர் கல்லூரிக்கு அனுப்பவில்லை, அவனும் கேட்கவில்லை.

கல்லூரிக்குச் செல்லாமல் புத்தகங்களாக வாங்கி வாங்கி அவன் படிப்பதைப் பார்த்து மகிழ்ந்தவரின் சந்தோசம் நீண்ட நாள் நீடிக்கவில்லை, திடீரென ஒரு நாள் இயற்கை விவசாயம் செய்யப் போகிறேன் என்று இவரது செம்மண் நிலத்தில் பாதியை எடுத்துக் கொண்டான். “உரம் போட்டு பழகுன நிலம்டா நீ சாணி போட்டு விவசாயம் பண்ண முடியாது” என்று அவர் சொன்னதைக் கேட்காதவன், தான் சொன்னதில் பிடிவாதமாக நின்று, இயற்கை உரமே இந்தியாவின் உரமென்று சொல்லி தினமும் தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்து வந்து நிலத்தில் காலைக் கடன் இருக்கச் செய்தான். “மாடு சாணி போட்டாலே மண்ணு மாற பத்து வருசமாகும், இதுல மனுசன் சாணி போட்டு என்னைக்காக... என் தோட்டத்தை பீக்காடு ஆக்கிட்டான்” என்று புலம்பியபடி திரிந்த பவுல்ராஜின் முன்பு திடீரென ஒரு நாள் வந்து நின்றவன் “ஆர்கானிக் பால் பண்ணை வைக்கப் போகிறேன், அறுபது மாடுகள் வாங்க வேண்டும், அறுபது மாடு சாணிய அள்ளிப் போட்டா பத்து ஏக்கர் மண்ணு ஆறே மாசத்துல பொன்னாயிடும்னு இயற்கை விஞ்ஞானி அப்பா அம்பளத்தார் சொல்லியிருக்கார், அதனால ஆறு லட்சம் தாங்க நான் மாடு வாங்கனும்” என்றவனை வெட்ட பவுல்ராஜ் அரிவாள் தேடிய இடவெளியில் சிலுவைராணி தன் கழுத்திலிருந்து கழட்டிக் கொடுத்த பத்து பவுன் நகையை வைத்து ஆறு மாடுகள் வாங்கி பண்ணை வைத்தான். அன்று முதல் நண்பர்களோடு சேர்ந்து மாடுகளையும் தன் நிலத்தில் சாணமிட வைத்தான்.

இதையெல்லாம்விட உட்சபட்சமாய் பவுல்ராஜை அதிர்ச்சியாக்கியது, வேண்டிப் பிறந்த மகன் என்பதால் இவன் பிறந்ததும் கிடா வெட்டி பெரிதாய் விழா வைத்து ஞானஸ்நானம் செய்து ஆசையாய் ப்ரின்சஸ் தேவகுமாரன் என்று வைத்த பெயரை ஒரு நாள் பைந்தமிழ்குமரன் என்று மாற்றிக் கொண்டவன், உகாண்டாவில் இறந்த தலைவர் ஒருவருக்கு முஷ்டி மடக்கி வீரவணக்கம் செய்து ஊரெல்லாம் ஒட்டிய போஸ்ட்டரைப் பார்த்து மயங்கி விழுந்தார். அதுவரை கிறிஸ்துமஸ்த்திற்கும் ஈஸ்ட்டருக்கும் சர்ச்சிற்கு சென்று கொண்டிருந்தவர் அதன்பின் வாரந்தவறாமல் சர்ச்க்கு சென்று அவனுக்காய் ஜெபித்தார்.

அப்படி ஜெபித்துக் கொண்டிருந்தவரிடம் சபரி வந்து “மாப்ளே நம்ம பையன் போக்கு ஒன்னும் சரியாயிருக்குற மாதிரி தெரியலையே!” என்றவனிடம், என்னவென்று பவுல்ராஜ் விசாரித்த போது “கோசலைப் பொண்ணு பின்னாடி இவன் சுத்திகிட்டு இருக்கான்... என்னான்னு கேட்டு கண்டிச்சு வையி” என்றுவிட்டு போய்விட்டான். கோசலைப் பொண்ணு என்றதும் பவுல்ராஜ் சற்று அதிர்ந்துதான் போனார். கோசலை பவுல்ராஜ் வீட்டிற்கு துணி வெளுக்கும் பெண். முதலில் இது வெறும் வயசுக் கோளாறு தானாய் சரியாகி விடுவான் என்றுதான் நினைத்தார். அவருக்கே கோசலையின் மகளைப் பார்த்த சில சமயங்களில் சபலம் தட்டியிருக்கிறது. தனக்கே அப்படி தோன்றிய போது இளவட்டம் அவனுக்கும் தோன்றியதில் ஆச்சர்யமில்லை. ரெண்டு மூனு வாட்டி படுத்து எழுந்திருச்சிட்டான்னா சரியாயிடும் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவரின் முன் வந்து தான் கோசலை மகள் சுந்தரியைக் காதலிப்பதாகவும் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அவன் சொன்னதைக் கேட்டதும், அத்தனை நாள் வைத்திருந்த ஆத்திரங்களையும் காட்டி, சிலுவைராணி அவர் காலில் விழுந்து கெஞ்சியும் கேட்காமல் அவனை அடித்து உதைத்தார். ஆனால் அவன் கைகளை கட்டிக் கொண்டு அத்தனை அடிகளையும் அமைதியாய் வாங்கிக் கொண்டவன் “நீங்க பண்ணி வைக்கலைன்னா… நான் பண்ணிப்பேன்” என்றவனை சமாதானப்படுத்த சிலுவைராணி எவ்வளோ முயன்றும் தனது தீர்மானத்தில் உறுதியாய் இருந்தவன் முடிவெடுக்க இரண்டு வாரங்கள் காலக்கெடு கொடுத்து விட்டு வெளியேறினான்.

அந்த ஞாயிறு சர்ச்சுக்கு சென்றவர் தன் மகனின் மனதை மாற்றச் சொல்லி பலமுறை மன்றாடிவிட்டு வீடு திரும்பியவரிடம், இரண்டு வார கெடுவைப் பற்றிக் கவலை கொள்ளாமல் சுந்தரியை திடீரென்று திருமணம் செய்து கொண்டு அவள் வீட்டிற்குச் சென்றுவிட்டான் என்பதை சிலுவைராணி சொன்னதும் அதிர்ச்சியாகி இரண்டாம் முறை மயங்கி விழுந்தவரை பரிசோதித்த மருத்துவர் அவரது இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டன என்றார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது ஆயுள் முழுவதும் டயாலஸிஸ் என்று மருத்துவர்கள் சொன்னதும் கொடுக்கத் தயாரான சிலுவைராணியின் சிறுநீரகமும், மகளின் சிறுநீரகமும் அவருக்குப் பொருந்தாத போது, பொருந்தி தரத் தயாராக இருந்த பைந்தமிழ்குமரன் என்ற ப்ரின்ஸ் தேவகுமாரனின் சிறுநீரகத்தை ஏற்க அவர் மறுத்துவிட்டார். அவனால் தான் பிழைக்க வேண்டாம் என்றவர், அதையும் மீறி தனக்கு அறுவை சிகிச்சை செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்னதால், வேறுவழியில்லாமல் டயாலஸிஸ் என்று முடிவாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. மகனின் திருமணத்தால் நேர்ந்த அவமானத்தாலும், மருத்துவ வசதிகளுக்காகவும் வேலூர் இடம் பெயர்வது என முடிவு செய்து மகள் பார்த்துக் கொடுத்த விட்டில் வாடகைக்கு வேலூரில் குடியேறினார்கள். தனக்கு அவரது சொத்துக்கள் எதுவும் வேண்டாம் என்று அவன் திருப்பிக் கொடுத்த நிலத்தைதான் தனது மருத்துவ செலவுகளுக்கென்று முதலில் விற்றார்.

இந்த மூன்றாண்டுகள் நீட்டிக்கப்பட்ட அவரின் ஆயுளால் அவரின் சொத்துக்களில் பாதிக்கு மேல் கரைத்திருந்தது. இந்த மூன்று ஆண்டுகளில் மாதந் தவறாமல் பார்க்க வரும் பைந்தமிழ்குமரனை அவர் பார்க்க அனுமதித்ததே இல்லை. ஏற்கனவே இயற்கை விவசாயம் செய்து கொண்டிருந்த மீனாட்சிபுரத்து பாலகுருவின் நிலத்தை அவர் மரணத்திற்குப் பிறகு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த குடும்பத்தார்களிடமிருந்து குத்தகைக்கு எடுத்தவன் அதில் விவசாயம் செய்யத் தொடங்கியிருந்தான். அவ்வப்போது தன் நிலத்தில் விளைந்தது என்று கொண்டு வந்து தருவான். பால் பண்ணை மூலம் கிடைத்த வருமானத்தில் சிலுவைராணியின் நகையைத் திருப்பி கொடுக்க வந்தவனை பார்த்த சிலுவைராணிக்கு அவன் இன்னும் கஷ்ட்டப்பட்டுக் கொண்டு இருப்பதாகவே தோன்றி ”நீயே வச்சிக்கோடா அது உனக்கு நான் கொடுத்ததுதான்”என்றவளிடம் “நானும் அதைத்தான் சொல்றேன்! என்னதுன்னு நினைச்சி நீ வாங்கிக்கோ! மகனா அவருக்கோ உனக்கோ ஒன்னும் நான் செய்யலைல்ல! இதை வச்சிக்கோ” என்றுவிட்டு சென்றான். பவுல்ராஜைப் போலவே மகளும் அவனைப் பார்ப்பதில்லை, அவன் கொண்டு வந்து தரும் எதையும் எடுத்துக் கொள்வதுமில்லை.

தனது வேண்டுதல்கள் எதையும் கேட்காத கடவுளை ஏன் கும்பிட வேண்டுமென்று முடிவு செய்திருந்த பவுல்ராஜ் சர்ச் செல்வதையும் ஜெபிப்பதையும் அடியோடு நிறுத்தி விட்டார். அதனால் ஞாயிற்று கிழமைகளில் சிலுவைராணி மட்டும் மகளோடு சேர்ந்து சர்ச்சிற்கு போய் வந்து கொண்டிருந்தாள். அப்படி ஒரு ஞாயிறு சர்ச் சென்று திரும்பி டீ போட்டுக் குடித்துக் கொண்டிருந்த வேளையில், அவர் உறங்குவதாக நினைத்த மகள் சிலுவைராணியிடம் “ஏம்மா! இருக்குறதையெல்லாம் வித்து இப்படி ஹாஸ்பிடல்க்குன்னு செலவு பண்ணிட்டா நீ என்னம்மா செய்வே? உனக்குன்னு எதையும் யோசிக்க மாட்டியா நீ?” என்றவளுக்கு “அவரு சம்பாதிச்சது அவருக்கு பிரயோஜனப்படாம எனக்கெதுக்கு?” என்று சிலுவைராணி சொன்ன பதிலை உள்ளிருந்து கேட்ட பவுல்ராஜிக்கு அழுகை வந்தது. அதே நேரம் மகள் கேட்டதிலும் நியாயம் இருப்பதாகவே அவருக்குப் பட்டது!

நோயின் பிடியில் மாட்டிய இந்த மூன்று ஆண்டுகளில் தான் அவர் அவளின் அருமையை அறிந்திருந்தார். இவளுக்குத் தெரியாமல் அல்லது தெரிந்தால் தான் என்ன செய்துவிட முடியும் என்ற அகந்தையில் தான் எத்தனை காரியங்கள் செய்திருக்கிறோம், ஆனால் அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் தன்னை ஒரு குழந்தை போல கவனித்துக் கொள்ளும் அவளுக்கு என்ன தந்துவிட்டு போகப் போகிறோம், தனக்குப் பின்னால் அவள் என்ன செய்வாள்? என்று நினைத்தவர், மகள் சொன்னது போல மீதம் இருப்பதாவது அவளுக்கானதாய் இருக்கட்டும், தான் சீக்கிரம் இறந்தால் மகளிடமோ அல்லது மகனிடமோ அவள் போய் நிம்மதியாய் இருக்கக்கூடும் என்று முடிவு செய்தவர், வாரமிருமுறை செய்ய வேண்டிய டயாலஸிஸின் அடுத்தமுறை வந்த போது வர மாட்டேன் என்று மறுத்து விட்டார். அவள் எவ்வளவோ கெஞ்சியும் அழுதும் அவர் மறுத்துவிட்டார்

“ஒவ்வொரு வாட்டியும் டயாலிஸ் பண்ணும் போது என் உடம்பு எவ்வளவு வலிக்குது தெரியுமா? உன் சந்தோசத்துக்காக என்னை ஏன் கஷ்டப்படுத்துறே?” என்று அவர் கேட்டதும் அவள் அதிர்ந்துதான் போனாள். அவருக்குத் தெரியும் அந்த வார்த்தைகள் அவளைக் காயப்படுத்தி இருக்குமென்று. ஆனாலும் வேறு வழியில்லாததால் அவர் அதைச் சொன்னார். “நான் உங்களை கஷ்டப் படுத்திட்டேனா? நான் உங்களை கஷ்டப் படுத்திட்டேனா?” என்று கேட்டும், அவர் உடல் மேலும் மேலும் மோசமாவதைக் கண்டும் தினம் அழுதாள். சில இரவுகளில் அவள் கண்ணீருடன் பிரார்த்தித்துக் கொண்டிருப்பது அவர் காதில் விழுந்து அவரை மேலும் குற்ற உணர்ச்சிகளுக்குள்ளும் தள்ளிக் கொண்டிருந்தது.

சில வாரங்களுக்கு முன்பு பார்க்க வந்த தன் தங்கை சத்திய ரூபியிடம் இவர் டயாலிஸ் வர மறுப்பதைச் சொல்லி “என்னை கடவுள் தான் கை விட்டுட்டானா? இப்ப இவரும் என்னை அனாதையாக்க முடிவு செஞ்சுட்டார்” என சொல்லி அழ, அவள் “அப்படியெல்லாம் சொல்லாதே... நீ நல்லா கடவுளிடம் கேளு அவர் காப்பாத்துவார்” என்றதும், “எங்கே...” என சலித்த சிலுவைராணி “வாரா வாரம் தவராம சர்ச்சுக்கு போயி வேண்டுறேன், ராத்திரியெல்லா அழுது அழுதுதான் வேண்டுறேன், ஆனாலும் கடவுள் காதுல என் ஜெபம் மட்டும் விழ மாட்டேங்குதே” என்று அழுதவளிடம் தான் சென்று கொண்டிருக்கும் சபையைப் பற்றியும் தனக்கு தெரிந்த ஒருவர் அந்த சபையாரின் ஜெபத்தால் குணமானதையும் சொல்லி “அவங்களை வந்து ப்ரேயர் பண்ணச் சொல்லுறேன்! மாமா சரியாகலைன்னா என்னை கேளு...” என்று அவள் சொன்னதை அறைக்குள்ளிருந்து கேட்ட பவுல்ராஜ் சத்தமாய் “அதெல்லாம் வேண்டாம்... எந்தக் கடவுளும் என்னைக் காப்பாத்த வேண்டாம்” என்றவரின் முன் நின்று அவரை முறைத்த ரூபி “ஒன்னு டாக்டர்களை நம்புங்க! இல்லை கர்த்தரை நம்புங்க! ரெண்டுமில்லாம இப்படி பிடிவாதம் பிடிச்சா எப்படி?” என்று கோபமாய் கேட்டவளிடம், “நான் இருந்து என்ன பண்ண போறேன்?” என்று அவர் சொன்ன போது அவரை அறியாமல் கண்ணீர் வழிந்தது.

வேகமாய் அவரின் கண்ணீரைத் துடைத்த சத்ய ரூபி “என்ன மாமா இப்படி பேசுறீங்க? இந்தா இவளுக்காகவாவது நீங்க இருக்க வேணாமா? நீங்க இல்லாம அவ என்ன செய்வா சொல்லுங்க?” என்று அவள் கேட்டதும் அருகிருந்த சிலுவைராணி ”ஓ”வென்று அழுததைப் பார்த்தவர், பிரார்த்தனைக்கு சம்மதித்தார்.

அன்று தொடங்கியது இன்றுவரை மூன்று மாதங்களாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பிரார்த்தனை நாட்களில் ஓரிரு நாட்கள் உடல் நன்றாக இருப்பது போல இருப்பதும் பின் சில நாட்கள் மோசமடைவதும் என்று பவுல்ராஜ்ஜின் உடல் தொடர்ந்து நிலையற்று இருந்தது. ஒரு வாரம், இரண்டு வாரம், மூன்று வாரம் என்று நாட்கள் கடந்த போதும் நம்பிக்கை இழக்காத சிலுவைராணி அவர்களோடு சேர்ந்து ஜெபித்துக் கொண்டே இருந்தாள். நேற்று ஜெபத்திற்கிடையே “தன் பாவங்களை அறிக்கை விடாதவன் பரலோகத்திற்கும் தன் பாவங்களைக் கொண்டு செல்கிறான். அப்படி அறிக்கை விடாதவனின் பாவங்கள் அவனை மட்டுமல்லாது அவன் குடும்பத்தாரையும் வதைக்கின்றது” என்று ஊழியக்காரன் சொன்ன வார்த்தைகள் அவரை நடுக்கமுறச் செய்தது.

அந்த வார்த்தைகள் அன்றிரவு முழுவதும் அவரை உறங்க விடவில்லை. தனது நோய், தன் மகனின் மனமாற்றம், மகளின் வெறுப்பு என அத்தனைக்கும் தனது பாவங்களே காரணம் என்பதை உணர்ந்தவர், தன் பாவங்களால் தான் மட்டும் துயரடைவதோடு, சிலுவைராணியும் சேர்ந்து துயரடைகிறாளே என்று நினைத்த போது அவருக்கு கட்டுபடுத்த முடியாத அழுகை வந்தது. அவள் தன்னால் இதுவரை பட்ட துயரங்கள் போதும், இந்தத் துயரங்களிலிருந்து அவளை விடுவித்துவிட வேண்டுமென்று தீர்மானித்தவர், மறுநாள் பாவ அறிக்கை விடுவது என முடிவு செய்தார்.

மறுநாள் மாலை எப்பொழுதும் போல ஐந்து மணிக்கு வந்து, அற்புதங்கள் நிகழ்த்தி பவுல்ராஜைக் காப்பாற்றும்படி கண்ணீர் வழிய ஜெபித்துக் கொண்டிருக்கும் ஊழியக்காரரையும் அவருடன் வந்த அந்த மூன்று பெண்களையும், தன் மனைவி சிலுவைராணியையும் அவர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். பிரார்த்தனை முடியும் வரை அவர் அமைதியாகவே இருந்தார். பிரார்த்தனை முடித்து காணிக்கை பணத்தை பெற்றுக் கொண்டு கிளம்பிய ஊழியக்காரரை “ப்ரதர்” என அழைத்தார். “சொல்லுங்க ப்ரதர்” என்றவரிடம் பவுல்ராஜ் “நான் பாவ அறிக்கை விடனும்” என்றதும், இப்பவா என்பது போல தனது கை கடிகாரத்தைப் பார்த்த ஊழியக்காரர் “பாவ அறிக்கைய நீங்க தேவனோட இடத்துக்கு வந்துதான் கொடுக்கனும்” என்றார்.

 “எனக்கும் அதான் ப்ரதர் ஆசை! ஆனா என் நிலையை பார்க்குறீங்கல்ல” என்று ஊழியக்காரரை பார்க்க, யோசித்த ஊழியக்காரர், தன்னுடன் வந்த பெண்களை அடுத்தடுத்த வீடுகளுக்கு பிரார்த்தனைக்கு அனுப்பிவிட்டு பவுல்ராஜின் அருகில் அமர்ந்தார். அருகே நின்று கொண்டிருந்த சிலுவைராணியைப் பார்த்து “அம்மா நீங்க வெளிய இருங்க” என்றதும், பவுல்ராஜ் “இல்லை அவளும் இருக்கட்டும்” என்றார். உண்மையில் அவர் தன் பாவங்களை கடவுளோடு சேர்த்து அவளிடமும் சொல்லி மன்னிப்பு கேட்க விரும்பினார், அதனால் “அவளும் கேட்கட்டும்” என்றார். வேறு வழியில்லாத ஊழியக்காரர் “ஒரு சேர் எடுத்து போட்டு இப்படி உட்காருங்கம்மா” என்று தனக்குப் பின்னால் இருந்த இடத்தைக் காட்டினார். சிலுவைராணி ஒன்றும் புரியாமலும், இப்பொழுது ஏன் இவர் இதைச் செய்கிறார் என்று தெரியாமலும் ஒரு நாற்காலியை எடுத்துக் கொண்டு வந்து ஊழியக்காரரின் பின்னால் போட்டு அமர்ந்தாள்.

பவுல்ராஜ் பாவ அறிக்கையை “நான் நிறைய பாவம் பண்ணிருக்கேன் ப்ரதர்” என்று ஆரம்பித்தவர் சிறு வயதில் அப்பாவின் பணத்தைத் திருடியது, அவருக்குத் தெரியாமல் குடித்தது, சிலரின் நிலத்தை அபகரித்தது, தன் வீட்டிற்குப் பின்னால் இருந்த எளிய குடும்பத்தை துரத்தி அந்த இடத்திலும் தனது வீட்டை விரிவாக்கிக் கட்டியது, பணத்தை அதிக வட்டிக்கு கொடுத்து சம்பாதித்தது, கடனைத் திருப்பி தர முடியாதவர்களின் சொத்துக்களை அபகரித்தது என சொல்லிக் கொண்டு வந்தவர் திடீரென நிறுத்தி, சிலுவைராணியைப் பார்த்தார். அவள் கண்களை மூடி ஜெபித்தபடி அமர்ந்திருந்தாள். சின்ன தயக்கத்துடன் “முன்னாடி சொன்ன பாவத்தையெல்லாம் ஒரு கட்டத்துல போதும்னு நினைச்சி நிப்பாட்டிட்டேன் ப்ரதர். ஆனா ஒரே ஒரு பாவத்தை மட்டும் என்னால கடைசி வரைக்கும் நிப்பாட்டவே முடியலை... தெம்பு இருந்த மட்டும் அந்த பாவத்தை நான் செஞ்சிகிட்டேதான் இருந்தேன்” என்று நிறுத்தி மீண்டும் சிலுவைராணியைப் பார்த்தார். அவளிடமிருந்து ஜெபத்தைத் தவிர எந்த சலனமும் இல்லை...திரும்பி ஊழியக்காரனைப் பார்த்தவர் “விபச்சாரம் பண்ணாதிருப்பாயாக, உன் மனைவியைத் தவிர்த்து வேறு பெண்களோடு உறவு கொள்ளாதிருப்பாயாகன்னு பைபிள் சொல்லுது ஆனா அதை நான் ஒரு போதும் கேட்டதில்லை” என்று திருமணத்திற்கு முன் பெண்களுடன் தனக்கு இருந்த உறவுகளை சொல்லத் தொடங்கி, மெல்ல திருமணத்திற்குப் பிறகும் தனக்கு இருந்த உறவுகளை வரிசையாக சொல்லி வந்தவர், கடைசியாக அந்த லிஸ்ட்டில் சத்யரூபியின் பெயரையும், அவளுடன் இருந்த தருணங்களையும் சொன்னபோது ஜெபித்துக் கொண்டிருக்கும் சிலுவைராணியின் கண்களிலிருந்து கண்ணீர் வருவதைக் கவனித்து நிறுத்தினார். அவருக்குத் தெரியும் அது அவளுக்கு எவ்வளவு வலியைத் தருமென்று, அவர் செய்த துரோகங்களிலேயே அதுதான் மிகப் பெரிய துரோகம். அதற்கு மேல் பேச முடியாமல் அமைதியானார்.

சிலுவைராணியிடமிருந்து வெளிப்பட்ட மெல்லிய முணுமுணுப்பான ஜெபம் மட்டும் அந்த அறையில் கேட்டுக் கொண்டிருந்தது. “அவ்வளவுதானா” என்று கேட்ட ஊழியக்காரன் பவுல்ராஜ்ஜின் பாவங்களை மன்னிக்கும்படி பிரார்த்திக்கத் தொடங்கினான். அந்த பிரார்த்தனை முடியும் வரையும் பவுல்ராஜ் சிலுவைராணியையே பார்த்துக் கொண்டே இருந்தார். கண்களை மூடி ஜெபித்துக் கொண்டிருந்தவள் ஊழியக்காரன் பிரார்த்தனை முடித்து “ஆமேன்” என்றதும் தான் “ஆமேன்” என்றபடி கண் விழித்தாள். கண் விழித்தவள் பவுல்ராஜ் பக்கம் திரும்பவேவில்லை. பெரும் சங்கடத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பவுல்ராஜிடம் ஊழியக்காரன் “கவலைப் படாதீங்க கர்த்தர் உங்கள் அறிக்கையை கேட்டார்... உங்கள் பாவங்கள் அனைத்தும் கர்த்தரின் நாமத்தாலும், பரிசுத்த ரத்தத்தாலும் கழுவப்பட்டது. பரிசுத்த தேவன் கொடுத்த இந்த புதிய வாழ்க்கையில் இனி மேலும் பாவமேதும் செய்யாதிருப்பேன்னு கர்த்தருடைய நாமத்தினிமித்தம் சத்தியம் எடுத்து உங்க வாழ்க்கையை நடத்திக்கோங்க” என்றுவிட்டு இரண்டாம் காணிக்கை காசை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

பவுல்ராஜுக்கு பெரும் பாரம் இறங்கியது போல இருந்தது. அதே நேரம் கடவுள் மன்னித்தாலும் சிலுவைராணி தன்னை மன்னிப்பாளா என்று தோன்றியது. ஊழியக்காரரை வழியனுப்பிவிட்டு வந்த சிலுவைராணி அறை வாசலில் நின்றபடியே “பசிக்குதா ஓட்ஸ் காய்ச்சட்டுமா” என்று கேட்டாள். பவுல்ராஜ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவளின் முகத்தில் அவளின் எண்ண ஓட்டத்தை அறிய முயன்று பார்த்துக் கொண்டே இருந்தவர் “கொஞ்ச நேரமாகட்டும்... ராணி வா... உன்கிட்ட பேசனும்” என்றார். அவள் வராமல் அறை வாசலில் நின்றபடியே “மணி எட்டாகுது, பசிக்கலையா... சாப்பிடுங்க” என்றவள், உடனே அங்கிருந்து நகர்ந்தாள். பவுல்ராஜுக்கு தான் பாவ அறிக்கை விட்டிருக்கக் கூடாதோ என்று தோன்றியது. தான் உண்டாக்கியிருக்கும் இந்த மன வலியும் காயமும் அவளுக்கு மறைய நாட்களாகும். அவளும் தன்னை வெறுத்துவிட்டால் என்ன செய்வது என்று தோன்றிய பயத்தை இந்த அறிக்கையால் அவள் இனி தன் பாவங்களினால் உண்டாகும் துயரங்களிலிருந்து விடுபடுவாள் என்று நினைத்து தன்னை சமாதானப்படுத்திக் கொள்ளவும் முயன்றார்.

கிண்ணத்தில் ஓட்ஸுடன் உள்ளே வந்தவள், கிண்ணத்தை அருகிருந்த டேபிளில் வைத்துவிட்டு, அவரை மெல்லத் தூக்கி நிமிர்த்தி உட்கார வைத்து அவருக்கு முதுகிற்குப் பின்னால் தலையணைகளை சாய ஏதுவாக வைத்த்உவிட்டு எதிரே அமர்ந்தவள், அவர் முகத்தைப் பார்க்காமல் கிண்ணத்தை எடுத்து கிளறத் தொடங்கினாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவர் “ராணி” என்றழைத்தார். அவள் மெல்ல நிமிர்ந்து அவரைப் பார்த்ததும் “கடவுள் மன்னிக்கிறது இருக்கட்டும்! நீ என்னை மன்னிப்பியா?” என்று கேட்டார். அவள் அதற்குப் பதில் சொல்லாமல் எழுந்து போய் ஃபேனை வேகப்படுத்திவிட்டு வந்து அமர்ந்து ஓட்ஸை ஸ்பூனால் வேகமாய் கலக்கினாள். கிண்ணத்தின் ஓரங்களில் மோதும் ஸ்பூனின் சத்தமும் அவளின் அமைதியும் அவரை என்னமோ செய்தது.

அவர் மீண்டும் “ராணி” என்றழைக்க ”பேசாம சாப்பிடுங்க.. சாப்பிடும் போது பேசக்கூடாது” என்று ஸ்பூனால் அவருக்கு ஊட்டத் தொடங்கினாள். அவர் அவளைப் பார்த்தபடி குடித்தார். அவளுக்குள் என்ன ஓடுகிறது, தன்னை மன்னித்து விட்டாளா இல்லையா என்று தெரியாமல் தவித்தார். ஓட்ஸ் முழுவதும் ஊட்டி முடித்து, அவரை தண்ணீர் குடிக்க வைத்து, துண்டால் துடைத்துவிட்டு “கொஞ்ச நேரம் உட்காந்திருக்கீங்களா” என்று கேட்டாள். அவர் வேண்டாமென தலையசைக்க, மீண்டும் தலையணைகளை பழையபடி வைத்து, அவரைப் படுக்க வைத்துவிட்டு நகர்ந்தவளின் கையைப் பிடித்த பவுல்ராஜ் “என்னை மன்னிச்சிரு” என்றார். அவரை சில வினாடிகள் பார்த்தபடி நின்றவள் மெல்ல அவரின் கையை விலக்கிவிட்டு “எதையும் யோசிக்காம! பேசாம படுத்து தூங்குங்க” என்றுவிட்டு அறையின் வாசல் வரை சென்றவள் நின்று அவரை திரும்பிப் பார்த்தாள். திரும்பிப் பார்த்தவளின் கண்கள் கலங்கியிருந்தது. வேகமாய் திரும்பி வந்து அவரின் அருகில் அமர்ந்தவள் அவர் கையை இறுக்கப் பிடித்து “நான் செஞ்ச பாவங்களுக்கு தான் நீங்க இவ்வளவு கஷ்ட்டப் படுறீங்களோன்னு நினைச்சு, இத்தனை நாளா நான் தெனம் தெனம் ராத்திரியெல்லாம் தூங்காம கடவுள்கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டு இருந்தேன்” என்று சொல்லி “ஓ”வென அழத் தொடங்கியவளை பவுல்ராஜ் புரியாது பார்த்தார்.

அன்றிரவு பிரார்த்தனைகள் ஏதுமின்றி சிலுவைராணி சீக்கிரம் உறங்கிப் போனாள். காலையில் தாமதமாக விழித்தவளுக்கு மூன்று வருட தூக்கத்தையும் சேர்ந்து உறங்கியது போலிருந்தது. படுக்கையிலிருந்து எழ மனமில்லாமல் படுத்திருந்தவள் மணி பார்த்து பவுல்ராஜுக்கு பசிக்குமே என்று எழுந்து வந்து பார்த்த போது பவுல்ராஜ் இறந்திருந்தார். அவர் முகத்தில் அவரின் இறுதிப் புன்னகை உறைந்திருந்தது.

பவுல்ராஜின் இறுதிச் சடங்குகள் அவரின் சொந்த கிராமத்திலேயே நடந்தது. அவரின் ஊரார் மட்டுமல்லாது அவரை அறிந்திருந்த அத்தனை பேரும் வந்திருந்தனர். கூட்டத்தைப் பார்த்து “பெரிய சாவுதாம்பா” என்று சபரி பெருமை பட்டுக்கொண்டான். “மாமா இப்படி உன்னை அநாதையா விட்டுட்டு போயிட்டாரேக்கா” என்று கட்டிக் கொண்டு அழுத சத்தியரூபியை தட்டிக் கொடுத்தபடி, “சண்டாளப்பாவி... சண்டாளப்பாவி... உன்னாலதானடா அப்பா செத்தாரு” என்று பவுல்ராஜின் மகள் திட்டியபோதும் அடித்தபோதும் அமைதியாய் வாங்கிக் கொண்டு தனது இறுதி கடமைகள் அத்தனையும் செய்து கொண்டிருந்த பைந்தமிழ்குமரனை சிலுவைராணி பார்த்துக் கொண்டிருந்தாள். பவுல்ராஜின் உடலை குளிப்பாட்டி புது ஆடைகள் அணிவித்து தலைப்பாகை கட்டி, வீட்டின் நடுவே போடப்பட்டிருந்த நாற்காலியில் கம்பீரமாய் அமர வைத்துவிட்டு சிலுவைராணியிடம் வந்தவன், “இன்னிக்கு காலை கரண்டு, போய் தோட்டத்துல தண்ணி கட்டிட்டு வந்துடுறேன்” என்றுவிட்டு சென்றான். பைந்தமிழ்குமரனின் நண்பர்கள் கைகளை கட்டிக் கொண்டு பவுல்ராஜ்க்கு புகழ் வணக்கம் வைத்து ஊரெல்லாம் போஸ்ட்டர் ஒட்டியிருந்தார்கள்.

மாலையில் பைந்தமிழ்குமரன் பிரமாண்டமாய் ஏற்பாடு செய்திருந்த அன்னப்பட்சி பல்லக்கில் சர்ச்சிலிருந்து வந்திருந்தவர்களின் பிரார்த்தனை பாடல்களோடு கல்லறைத் தோட்டத்தை நோக்கிய பவுல்ராஜின் இறுதிப் பயணம் தொடங்கியது. பிரார்த்தனையோடும், ஊராரின் கண்ணீரோடும் நல்லடக்கம் செய்யப்பட்ட பவுல்ராஜின் உடலோடு, அந்த இரவில் அவரிடம் சிலுவைராணி கொடுத்த பாவ அறிக்கையும் சேர்ந்து புதைந்தது.

- ஜே.ஜோசப் செல்வராஜ்

Pin It