01

சுகந்தனுக்கு அந்த சந்திப்பு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்ததுடன் வெகுநேரத்துக்கு நம்ப முடியாததாகவும் இருந்தது. அது கலிபோர்னியாவில் வசந்த காலத்தின் தொடக்கமாக இருந்தது. மெதுவாக வீசிக் கொண்டிருந்த காற்றில் முடிந்துபோன குளிர்காலத்தின் கடைசிக் குளிர் உடலை ஊடுருவிக் கொண்டிருந்தது. அந்த மகாநாட்டு வளாகத்தில் நின்றிருந்த மிக உயரமான மரங்களெல்லாம் இலைகளுக்குப் பதிலாக வெண்ணிறப் பூக்களாலும், இளம் ஊதா நிற மலர்களாலும் போர்வை போர்த்தபடி நின்றிருந்தன. மாநாட்டு மண்டபத்தை ஒட்டி அமைந்திருந்த மிக அழகான அந்த பயிரியல் ஆய்வுக்கூடம் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த மிகப் பசுமையான தோட்டங்களைக் கொண்டிருந்தது. அப்போதுதான் காலை வெயில் மெல்ல எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

சுகந்தனுக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு வந்த இந்த வெயில் காலையில் மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. அந்த மகிழ்ச்சியான பொழுது சுகந்தனுக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வானதியை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் சந்தித்த முன்பனிக் காலத்தை நினைவுபடுத்தியது.

முதன்முதலில் யாழ் வளாகத்தில் வானதியை சுகந்தன் சந்தித்தபோது அவள் வெண்ணிற கவுன் அணிந்திருந்தாள். அந்த கவுன் ஏறத்தாழ தரையைக் கூட்டிக் கொண்டிருந்தது. அந்த உடையில் சுகந்தனுக்கு அவள் தோற்றம் சிண்ட்ரெல்லாவை நினைவுபடுத்தியது. முதல் முதலாக அவர்கள் சந்தித்த அந்த சந்திப்பை இவர்களது சீனியர்கள்தான் ஒழுங்குபடுத்தியிருந்தனர். அப்போதெல்லாம் ராக்கிங் தொல்லைகள் பல்கலை வளாகங்களில் இப்போதையும் விட மிக அதிகம். அவளுக்கு நடந்த ராக்கிங்கை எல்லாம் இவன் தாங்கிக் கொண்டது, இருவரும் ஒரே உணவை பகிர்ந்து உண்டது, இவனுக்கு மிகவும் பிடித்த குண்டுத் தோசையை அவள் தினம்தோறும் வீட்டிலிருந்து கொண்டு வருவது, இருவரும் யாழ் பல்கலை வளாகத்தில் இருந்த கல்லிருக்கைகளில் விடுமுறை நாட்களில் கூடிக் களித்தது, வெள்ளிக்கிழமைகளில் இருவரும் கரம் கோர்த்து பரமேஸ்வரன் கோவிலுக்குப் போவது எல்லாம் இனிய நினைவுகளாக அவனுக்குள் எழுந்தன.

இருவரும் கட்டியிருந்த மனக்கோட்டைகள்தான் எத்தனை? அவள் தன் வாழ்நாள் முழுவதும் கரம் பிடித்து தன்னோடு இணையாக நடந்து வருவாள் என்றல்லவா நினைத்திருந்தான். அந்த இன்பம் இவ்வளவு விரைவாக முடிந்து விடும் என்று அவன் கனவில்கூட நினைத்ததில்லை. அவளின் நினைவு அவனது இவ்வளவு கால வாழ்வையும் தொலைத்து விட்டதே.

உண்மையில் யாழ் பல்கலைக்கழக வாழ்க்கை முடிந்ததும் இன்றுவரை அவன் மனம் முழுவதும் வானதிதான் ஆக்கிரமித்திருந்தாள். வானதி மட்டும்தான்.

பட்டப்படிப்பு முடிந்து எல்லோரும் பிரியும் மிக சோகமான தருணங்கள் அவை. இவன் மார்பில் அவள் முகம் சாய்த்து விம்மிய தருணங்களை மறக்கவே முடியாது.

"சுகந்தன் வீட்டுக்கு வந்து பேசுறீங்களா? அப்பா என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார்".

"இஞ்ச பார்! என்னோட வாழ்நாள் முழுவதும் துணையா வருவாய் என்றுதான் உன்னை காதலிச்சனான்; நாம இருவரும் திருமணம் முடித்து வெளிநாட்டுக்கு போய் மேல படிப்பம். கொஞ்சம் பொறு".

வானதியின் வெகுளித்தனம் அவனுக்கு மிகவும் பிடிக்கும். சிறிது நேரம் அவனது மார்பு முழுவதும் அவள் கண்ணீரால் நனைத்தது.

அந்தக் காலப்பகுதியில் எல்லா பெண்பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு அனுப்புவது வழக்கமான நடைமுறையாக இருந்தது. மூன்று, நான்கு பெண்பிள்ளைகளுடன் மூத்ததாக பிறந்த ஆண்பிள்ளைகள் மத்திய கிழக்கில் கடும் வெயிலில், பாலைவனங்களில் தங்கள் இளமையையும், கனவுகளையும் தொலைத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பெண்பிள்ளைகளுக்கும் சீதனம் கொடுத்து முடிந்தவுடன் ஆண் பிள்ளைக்கு நடுத்தர வயது தாண்டி விட்டிருக்கும். வெளிநாட்டு வாழ்க்கை அப்போது மெல்ல மெல்ல வசப்பட்டதும் வயதுக்கு வந்த எல்லாப் பெண்களும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு என்று புக்கிங் செய்யப்பட்டு அனுப்பப்பட தயாராக இருந்தார்கள். சீதனம் ஒரு சதமும் கொடுக்கத் தேவையில்லை.

சில வருடங்களுக்குப் பின் மக்களுக்கு குழந்தை பிறந்தால் அதைப் பராமரிக்கின்ற சாக்கில் தாயும் தகப்பனும் வெளிநாட்டுக்குச் சென்றுவிடலாம். மிஞ்சியிருக்கின்ற ஆண் சகோதரர்களையும் வெளியே எடுத்துவிடலாம் என்பதுதான் ஒரே ஒரு நீண்ட கால நோக்கம். இடைநடுவில் காதல் வசப்பட்ட பிள்ளைகள் குறிப்பாக பெண்பிள்ளைகள் தூரதிஷ்டசாலிகள். அவர்களுக்கு வெளிநாடு எனும் அக்கரை எப்போதும் வாய்க்கப் போவதில்லை.

வானதியின் தகப்பனுக்கு வானதி ஒரு தூரதிஷ்ட்டசாலியாக இருப்பதில் சற்றேனும் விருப்பம் இல்லை. வானதிதான் வீட்டிலே மூத்தவள். அவளுக்குப் பின்னால் மூன்று பெண்கள் குமருகளாகி நின்றார்கள். இவள் இப்பிடி பல்கலைக்கழகத்தில் காதலித்துவிட்டு வந்தால் பின்னுள்ள குமருகளை எப்படித்தான் அவர் கரை ஏற்றுவது? கொடிகாமத்தில் பெரிய நிலபுலன்கள் இருந்தாலும் எல்லாமே தென்னம்தோட்டங்கள். தேங்காயும் தென்னம்மட்டையும் விற்று வரும் வருமானம் எவ்வளவுக்கு காணும்?

வானதி சுகந்தனை காதலிக்கின்ற விஷயம் பல்கலைக்கழக இறுதியாண்டு பிரிவுபசாரம் முடிந்த கையோடு வீட்டில் தெரிந்ததும் தகப்பன் நிலைகுலைந்து போனார். வாழ்நாளில் ஒருமுறை கூட சந்தித்திராத மாப்பிளைக்கு கழுத்தை நீட்ட வேண்டியவள் இப்பிடி பல்கலையில் இடைநடுவில் காதல் வசப்பட்டால் என்ன செய்வது. தனது கனவுகள் எல்லாம் தகர்வதை அவரால் தாங்க முடியாதிருந்தது.

சுகந்தன் பயங்கரவாதி என்று பிடித்துக் கொடுக்கப்பட்டது, நீண்ட காலம் தடுப்பில் இருந்து வழக்கு தொடுத்து விடுதலையானது, வாழ்வை வெறுத்து தமிழ்நாட்டுக்கு படகில் பயணம் செய்து சென்னை வளசரவாக்கத்துக்கு வந்து சேர்ந்தது, அங்கே இரண்டு வருடங்கள் வெட்டியாக சுற்றி டாஸ்மார்க் பெஞ்சுகளைத் தேய்த்தது, பின்னர் விசா இல்லையென்று நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு கொழும்பில் கொட்டாஞ்சேனையில் ஒரு வருடம் சுற்றித் திரிந்தது, பின்னர் ஐநா அலுவலகத்தில் தன்னார்வப் பணியாளராக சேர்ந்தது, பின்னர் ஐநாவில் FAO அலுவலகத்தில் மேலதிகாரியானது என்று எவ்வளவோ சம்பவங்கள் அதன்பிறகு நடந்து விட்டன. எல்லாக் காலங்களிலும் அவனுக்கு இருந்த ஒரே எண்ணம் வானதி, வானதி, வானதி. இவர்களது காதல் அவள் வீட்டுக்குத் தெரிந்த பின்னர் அவளை சந்திக்கவே முடியவில்லையே!

ஏன் இப்பிடி செய்து விட்டாள்? அவள் இவன் கரம் பற்றிச் செய்த சத்தியங்கள் எல்லாம் வெறும் இளமையின் துடிப்புக்களா? அல்லது தனிமையின் தைரியத்தில் தன்னிலை மறந்து போனாளா? இடைக்கிடை அவளைப் பற்றி நண்பர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தான். கனடாவில் என்கிறார்கள், அமெரிக்காவில் என்கிறார்கள், யார் என்ன சொன்னால் என்ன வானதி எப்போதும் இவனின் மனதுக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறாள்.

இப்போதும் பஸ் கொழும்பில் இருந்து கொடிகாமம் வழியாக யாழ்ப்பாணம் செல்லும்போது இவன் மனம் இவனை அறியாமல் உணர்ச்சி வசப்பட்டு விடுகிறது. விடுமுறை நாட்களில் சும்மா இருக்கும்போதெல்லாம் இவன் உடனடியாக மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு கொடிகாமம் சென்று விடுகிறான். அவளது வீட்டை தொலைவில் இருந்து பார்த்து ரசிப்பதில்தான் எவ்வளவு சந்தோசம். இப்போது அங்கே எவரும் இல்லை. வீட்டைச் சுற்றி இவனது நினைவுகள் மட்டுமே இப்போது தங்கியிருக்கின்றன. அன்று பகல் முழுவதும் அவள் வீட்டுக்கு அருகில் உள்ள குளத்தடியில் இருக்கும் வேப்ப மரத்தின்கீழ் இருந்து வானதியின் வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பான். அந்தி சாயத் தொடங்கியதும் வீடு திரும்புவான். அவளைப் பிரிந்து பதினைந்து வருடங்கள் ஓடி விட்டாலும் வார விடுமுறை வந்தவுடன் அவளின் வீட்டுக்கு அருகில் உள்ள அந்தக் குளத்தடியில் இருப்பதே அவனுக்கு ஒரே மன நிம்மதி.

இவனுக்கு வந்த எந்த கலியாணப் பொருத்தங்களையும் இவன் கணக்கில் எடுக்கவில்லை. கொழுத்த சீதனத்துடன், கொழும்பு வீடு வளவுடன், அம்மாவின் கண்ணீர் மூலமாக என்று எவ்வளவு தந்திரங்கள். எதற்கும் இவன் அசைத்து கொடுக்கவில்லை. வானதியைக் காதலித்த அந்த மனதில் என்றைக்கும் வேறு ஒருத்திக்கும் இடமில்லை. மனம் ஒட்டாமல் திருமணம் செய்து என்ன பயன். அது வெறும் போலித்தனம் தானே. அதை விட வானதியை நினைத்துக் கொண்டு மீதமுள்ள காலத்தை ஓட்டிவிடலாம். அவளுக்கு இப்போது திருமணமாகி குழந்தைகள் இருக்கலாம். எப்பிடி இருந்தால் என்ன! இவனுக்கு காதல் என்பது வெறும் வியாபாரமோ, பண்ட மாற்றோ இல்லை. காதல் என்பது சிலருக்கு கணநேர விளையாட்டு; சிலருக்கோ பிரைம் டைம் பொழுதுபோக்கு; இவனுக்கோ அது மீதமுள்ள வாழ்நாளை அர்த்தமுள்ளதாக்கும் நினைவுகளின் ஒரு அங்கம்.

அவளைப் பிரிந்து தடுப்பிலிருந்து மீண்டு வந்ததும் தொடர்ச்சியான மதுபோதையில் மூழ்கிக் கிடந்தான். வாழ்வின் துயரங்கள் கண நேரமேனும் விலகாத இருண்ட நாட்கள் அவை. கொடிகாமத்து குளத்தடியில் புகைத்த சிகரெட்கள் இவன் உடலை மெல்ல மெல்ல எரித்துக் கொண்டிருந்தன. துயரத்தைத் தணிக்க மதுவை நாடி தன்னைத்தானே தண்டித்துக் கொண்ட நாட்கள் அவை. மதுமயக்கம் ஒரு நாள் கழித்து முடிந்துவிடும். மீண்டும் மனதில் மந்தாரமாக கவியும் இருள் மதுவை நாடிச் செல்ல வைக்கும்.

"நல்ல படித்த பெடியன். இப்பிடி உருக்குலைந்து நாசமாகப் போனான்" என்று பல்கலைக்கழகத்தின் அருகில் இருந்த "ஜொலி" பார் ஓனர் அண்ணரும் அடிக்கடி நொந்து கொண்டார்.

மனம் முழுவதும் வேதனைகள் நிரம்பி இருந்தாலும், அவளை நினைத்துக் கொண்டு வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. இவனது பகல்கள் ஆவியாகிக் கொண்டிருக்கின்றன. இரவுகள் கரைத்துக் கொண்டிருக்கின்றன. இவனது காதல் கடலுக்கடியில் பல்லாயிரம் ஆண்டு காலம் புதையுண்டு கிடக்கும் புராதன கோவிலாக உறங்கிக் கொண்டிருந்தது.

02

காலங்கள் தான் எவ்வளவு விரைவாக ஓடி விடுகின்றன. கலிபோர்னியாவில் இந்த ஆண்டு வசந்த காலத்தின் தொடக்கத்தில் FAO உணவு தன்னிறைவு அடைவதில் உயிரியல் தொழில்நுட்பத்தின் பங்கு பற்றிய சர்வதேச மாநாட்டை ஒழுங்கு செய்திருந்தது.

சுகந்தனுக்கு மாநாட்டில் மாலை நேர அமர்வினை ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கியிருந்தனர். காலை அமர்வில் யார் யார் பேசுகிறார்கள் என்பது பற்றி அவன் அக்கறைப்படவில்லை. முதலாவது உயிரியல் தொழில்நுட்பம் பற்றிய சிறப்பு உரை தொடங்கும் வரை சிரத்தையின்றி அமர்ந்திருந்தான். அமர்வுக்குத் தலைமை வகித்த நெடிய ஆபிரிக்க அமெரிக்க பெண்மணி அறிவித்தாள்.

"இந்த அமர்வின் முதலாவது உரையை நிகழ்த்தும் பேச்சாளர் கலாநிதி வானதி சிவகுமாரன்"

சுகந்தன் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ஒருவேளை அவள்தானோ? கணநேர சந்தேகம்தான். அவளேதான். சுகந்தனால் நம்பவே முடியவில்லை. அன்று தான் காதலித்த வெகுளி வானதி அல்ல இவள் என்பது தெளிவாகப் புரிந்தது. என்றாலும் மனதுக்குள் இவ்வளவு காலம் இருந்தது அவளல்லவா? அவளை கூர்ந்து கவனித்தான். அவளது முகம் தெளிவாக, முதிர்ச்சி கொண்டதாக இருந்தது. நீண்ட கூந்தல் வைத்து அதை முன்னும் பின்னும் சுழட்டி விட்டுக் கொண்டிருந்த வானதி அல்ல. ஒரு தொழில் முறை நிபுணராக, முடியைக் கத்தரித்து, அழகான ஸ்கர்ட் அண்ட் ப்ளவுஸ் அணிந்து, மேலாக ஒரு மெல்லிய கோட் ஒன்றும் அணிந்திருந்தாள். ஆனால் குறு குறு என்று பார்க்கும் அவள் கண்கள் இன்னும் மாறவேயில்லை. சுகந்தனின் முகத்தை வட்டமடித்துவிட்டு சடுதியாக கணப்பொழுதில் கீழே பார்க்கும் கண்கள்.

அன்று அவளது உரைதான் மிச்ச எல்லா உரைகளிலும் பார்க்க மிக மேலானதாக, சிறப்பான ஒன்றாக அமைந்தது. எவ்வளவு அழகாக அமெரிக்க ஆங்கிலத்தைப் பேசுகிறாள். இவனை அவள் கவனித்திருப்பாளா? தெரியாது? கவனித்தாலும் என்ன நினைப்பாள்? அவளது உரை முடிந்ததும் துக்கம் மேலிட முதல் அமர்விலிருந்து சுகந்தன் வெளியேறினான்.

அவர்களது சந்திப்பு அன்று மாலையே நடந்தது. இவனது உரை முடிவடைந்து தேநீர் சாலையை நோக்கி இவன் நடக்கும்போது பின்னாலிருந்து ஒரு குரல்;

"சுகு"

ஆமாம்! அவளே தான்! இவ்வளவு காலத்துக்குப் பின்னும் அவன் அந்த வளாகத்தில் ஒலித்த குரலை மறக்கவில்லை. அவனை நோக்கி நிமிர்ந்த நடையுடன் நிதானமாக நடந்து வந்தாள். அருகிலேயே அழகான பெண்குழந்தை, அவளைப் போலவே. ஐந்து வயதிருக்கலாம். இருவரும் சந்தித்துக் கொண்டபோது இவனுக்கு என்ன பேசுவது, எப்படித் தொடங்குவது என்று ஒன்றும் புரியவில்லை. எவ்வளவு விசித்திரமான மனம். பதினைந்து ஆண்டுகளாக மனதுக்குள் சேமித்த அவளது குரல். அதைக் கேட்க வேண்டும். அவனது மனதில் இருக்கும் அவளது குரல் மாறிவிட்டிருக்குமோ என்று சுகந்தனுக்கு அச்சமாக இருந்தது. அவனால் தொடர்ந்து ஏமாற்றங்களைத் தாங்க முடியாது.

"சுகு நல்லா இருக்கிறியா?" அவளது குரல் ஓரளவுக்கு உடைந்து விட்டிருந்தது. நல்லவேளை குரல் மாறவில்லை.

"என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்ல வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லை இல்லையா?" இவனது குரலில் ஒலித்தது ஆற்றாமையா, கோபமா அல்லது தூக்கமா என்று புரியாமல் அவள் குழம்பினாள்.

மூவரும் அருகிலுள்ள பூங்காவை நோக்கி நடந்தனர்.

"சுகு! நான் இதுவரை சூழ்நிலைக் கைதியாகவே இருந்திட்டன். இன்று வரை எனக்காக வாழ்ந்ததேயில்லை. எனது முடிவுகளை எனக்கு சுயமாக எடுக்க இதுவரை எனக்கு சுதந்திரம் இல்லை. சுகு நீ என்னை நினைவில் வைச்சிருக்கிறியா?"

அவளின் பேச்சு அவனை மிகவும் சங்கடப்படுத்தியது. வானதியை நினைக்காமல் ஒருகணம் கூட அவன் கழித்ததில்லை. ஆனால் அவன் இன்று வானதியிடம் தன்னிலை விளக்கம் கேட்கவில்லையே?

பேச்சை மாற்றினான்.

"மிஸ்டர் சிவகுமாரன் எப்பிடி இருக்கிறார்?"

அவளது முகம் மாறியது. " சுகு நான் நம்மைப் பற்றி மட்டுமே பேச வந்திருக்கிறன். இவ்வளவு காலத்தையும் நான் வீணடித்து விட்டன். இனிமேலும் வீண் கதைகளை என் பேச வேணும்?"

அவளது குழந்தை சுகந்தனின் கையைப் பிடித்து "அங்கிள்" என்று இழுத்தது. வானதி குழந்தையை இழுத்து அணைத்துக் கொண்டாள். அதன் தலையை மெதுவாக வருடிவிட்ட பின்னர் சொன்னாள்;

“Anu! call him Dada; not uncle”

பின்னர் நிமிர்ந்து சுகந்தனைப் பார்த்தாள். சுகந்தன் பேச்சற்று நின்றான். அன்றைக்குப் போலவே இப்போதும் இவனுக்கு அவள் பேச சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.

"சுகு நான் எடுக்காத முடிவுகளுக்கு நான் எப்பிடி பொறுப்பேற்க முடியும். இதுவரை அப்பாவுக்காகவும், அம்மாவுக்காகவும், குழந்தைக்காகவும் மட்டுமே நான் வாழ்ந்திருக்கிறன். எனக்காக ஒரு கணம் கூட வாழ்ந்ததில்லை. எனது மனதை ஒருவர் கூட இன்றுவரை புரிந்து கொள்ளவேயில்லை. திருமணம் ஒரு வழிப் பாதையில்லையே!" அழகான ஆங்கிலம் அவள் நாவில் பட்டு சற்று துயரம் தோய்த்து வெளிவந்தது.

"ஆனால் இப்போது எனக்காக வாழ வேண்டும் என்று தோன்றுது. என் மனசின் உண்மையான உணர்வுகளுடன் என்றுமே சம்பத்தப்படாத ஒருவனின் முன்னாள் மனைவி எண்ட பேரோட வாழ்ந்து பொழுதைப் போக்குவதைவிட உனது காதலியாகவே இருந்து விடுறன்". இந்த வார்த்தைகளை சொல்வதற்காகவே அவள் பதினைந்து வருடங்கள் ஒத்திகை பார்த்திருக்க வேண்டும். தனது வாழ்க்கையில் அவள் முதன்முதலில் எடுத்த தீர்க்கமான முடிவு அது. எந்த பிசிறும் இல்லாமல் தெளிவாக சுகந்தனின் கண்களைப் பார்த்து சொன்னாள்.

சுகந்தன் ஒரு கணம் விக்கித்து நின்றான். தன் மார்பில் முகம் புதைத்து என்னை கைவிட்டு விடாதீர்கள் என்று சத்தியம் வாங்கிக் கொண்ட வானதியா இவள்? எவ்வளவு தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேசுகிறாள். அவனுக்கு அவள் மீது திடீரென்று மரியாதை கலந்த பயம் ஒன்று உருவானது. அவளுக்கு முன்னால் தனது ஆளுமை சற்று ஒளியிழந்து போய்விட்டதுபோல ஒரு எண்ணம். காதல்தான் ஆண்களையும் பெண்களையும் எவ்வாறெல்லாம் மாற்றி விடுகிறது. இந்த நீண்ட கால இடைவெளியில் அவளில் ஏற்பட்ட தன்னம்பிக்கையையும் துணிவையும் அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவளை நேரில் பார்க்கும் துணிவு கூட இப்போது அவனுக்கு இல்லை.

அவளது காதல் மணலில் விழுந்த விதையாக இருந்திருக்கிறது. சுகந்தனைக் கண்டதும் விரைவாக அது உயிர்த்தெழுந்து விட்டது. வாழ்வில் நம்ப முடியாத விடயங்கள் எவ்வளவு சுலபமாக நாம் எதிர்பாராதபோது நடந்து விடுகின்றன. காலம் சிலவேளை முடிச்சுக்களை பிழையாகப் போட்டு விடுகிறது. ஆனாலும் அரிதிலும் அரிதாக பின்னர் அது சரியாக திருத்திக் கொண்டுவிட மீண்டுமொரு வாய்ப்பைத் தருகிறது. ஆனால் உலகத்தில் இரண்டாவது வாய்ப்பு என்பது ஒரே ஒரு தடவை மட்டும்தான் என்பதை சுகந்தன் நன்கறிவான்.

பூங்காவில் இருந்த மரங்களிலிருந்து ஊதாப் பூக்கள் மெதுவாக கீழே உதிர்ந்து கொண்டிருந்தன. வானதி அவளது சுகுவின் மார்பில் முகம் புதைத்து விம்மிக் கொண்டிருந்தாள். சுகந்தனின் கரங்களுக்குள் அடங்கியிருந்த வானதியின் முகத்தில் சுகந்தனின் கண்ணீர்த் துளிகள் பட்டுத் தெறித்தன. சுகந்தனுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் வானதியை முதன் முதலில் மார்போடு அணைத்துக் கொண்ட இருபது வருடங்களுக்கு முந்திய அந்த அழகான முன்பனிக் காலத்தின் காலைப் பொழுது நினைவுக்கு வந்தது. அன்று எவ்வளவு குதூகலத்துடன் ஓடிவந்து கட்டிக் கொண்டாள்.

அந்த முன்பனிக் காலத்துக்கு பின் நிகழ்ந்த எந்த சோகங்களும் இப்போது அவனுக்கு நினைவில் இல்லை. அவளுக்குத்தான். அந்தக் காலங்கள் அவர்களது நினைவில் இருந்து அந்தக் கணத்தில் மறைந்து போயின. அவற்றுக்கு அவர்கள் வாழ்வில் இனி இரண்டாவது வாய்ப்பு கிடையவே கிடையாது. சுகந்தனுக்கு மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் மனம் மிகவும் லேசாகியிருந்தது. இருள் கவியத் தொடங்க குளிர் மெல்ல உடலை ஊசியாக குத்தத் தொடங்கியிருந்தது. மாநாட்டு வளாகத்தைச் சுற்றிலும் வண்ண மின்விளக்குகள் ஒளிரத் தொடங்கி மரக்கிளைகளுக்கிடையே வர்ணஜாலம் காட்டத் தொடங்கியிருந்தது. சுகந்தன் தனது தடித்த குளிர் அங்கியைக் கழற்றி பரிவுடன் வானதியின் தோளில் போர்த்து விட்டான். இருவரும் கரம் கோர்த்தபடி தொலைவில் நிறுத்தியிருந்த காரை நோக்கி நடந்தனர். அவர்களுக்கு சற்று முன்னால் அவர்களின் குழந்தை வேகமாக காரை நோக்கி குதூகலத்துடன் ஓடியது.

அலைமகன்

Pin It